World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist answer to the danger of war in Sri Lanka

இலங்கையில் யுத்த அபாயத்திற்கு ஒரு சோசலிச பதில்

By Wije Dias, General Secretary of the Socialist Equality Party in Sri Lanka
11 March 2006

Back to screen version

இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் அனைத்து அரசியல் மற்றும் சமூகத் தீமைகளையும் தீர்ப்பதற்கு "ஒரு புதிய அணுகுமுறை" மேற்கொள்ளப்படும் என வாக்குறுதியளிப்பது வழக்கமானதாகும். மஹிந்த இராஜபக்ஷ நவம்பர் தேர்தலில் குறுகிய வெற்றி பெற்றபோது, தனது மாபெரும் திட்டமான மஹிந்த சிந்தனையை உடனடியாக அமுல்படுத்துவதாக அவர் வாக்குறுதியளித்தார். ஆயினும், நூறு நாட்களுக்கும் மேலான இராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்திற்கு தீவிரமாகத் திரும்பியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு எச்சரித்திருந்தது: "இராஜபக்ஷ அரச அதிகாரத்துவம், இராணுவம், பெளத்த பிக்குகள் மற்றும் வர்த்தக தட்டுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். இவர்களின் நலன்கள் சிங்கள மேலாதிக்கத்தை பேணுவதில் தங்கியுள்ளதோடு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அல்லது நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கோ எந்தவொரு சலுகையும் வழங்குவதை இவர்கள் எதிர்க்கின்றனர். இராஜபக்ஷ இராணுவத்தை பலப்படுத்தவும், தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யவும் மற்றும் சுனாமி நிவாரணத்தை கூட்டாக நிர்வகிப்பதன் பேரில் புலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட பொதுக் கட்டமைப்பை கைவிடவும் கோரிக்கை விடுக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்தக் கொள்கைகளின் தர்க்கம் யுத்தத்திற்கு வழியமைப்பதே."

தீவு பூராவும் உள்ள உழைக்கம் மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த மைய மற்றும் எரியும் பிரச்சினை பற்றிய எமது முன்னறிவிப்பு கடந்த மூன்றரை மாதங்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியால் முற்றிலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது இப்போது வெளிப்படையானதாகும். நாடு யுத்தத்தின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது. ஒரு உத்தியோகபூர்வ பிரகடனம் மட்டுமே தவறவிடப்பட்டுள்ளது.

இராஜபக்ஷ பதவியேற்ற பின் முதல் இரண்டு மாதங்களில், இருசாராரும் மேற்கொண்ட கடத்தல் மற்றும் கொலைகளின் விளைவாக ஒரு நாளுக்கு மூன்றுக்கும் அதிகமான அளவில் அதிர்ச்சியூட்டும் வகையில் 200 பேர் உயிரிழந்தனர். அரசாங்கமும் மற்றும் புலிகளும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் இரத்தக்களரி சம்பவங்கள் ஒப்பீட்டளவில் தணிந்து காணப்பட்டன. எவ்வாறெனினும், இரு சாராரும் 2002 யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்க விரும்புவதாக ஒரு கூட்டறிக்கையில் வெளிப்படையாக பிரகடனம் செய்திருந்த போதிலும், மீண்டும் பதட்ட நிலைமைகள் அதிகரிக்கின்றன.

ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் இராணுவ தளபதியுடன் சேர்ந்து யுத்த நிறுத்த உடன்படிக்கையை கண்டனம் செய்ததோடு, அதனை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் இலங்கை அரசின் இறைமையை காட்டிக்கொடுக்கும் செயல் எனவும் அவர்கள் வலியுறுத்தும் ஜெனீவாவிலான கூட்டறிக்கையின் சட்டபூர்வ தன்மையையும் கேள்விக்குள்ளாக்கினர். யுத்த பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கில் கொலை வெறியாட்டம் ஏற்கனவே மீண்டும் ஆரம்பமாகிவிட்டது.

இந்த புதிய அபிவிருத்தியானது நேர்வழியிலிருந்து விலகுதல் என்பதையும் விட கடந்த இரு தசாப்தக கால அரசியல் நெருக்கடியின் தொடர்ச்சியேயாகும். ஆளும் வர்க்கமானது சமாதானம், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்து மற்றும் பெளத்தர்கள் அடங்கிய பரந்த வெகுஜனங்களின் அபிலாஷைகளை திருப்திபடுத்தும் வகையில் யுத்தத்திற்கு முடிவுகட்ட அமைப்பு ரீதியாகவே இலாயக்கற்றுள்ளது என்பதை இப்போதும், மீண்டும் நிரூபித்துள்ளது.

ஏகாதிபத்திய "சமாதான முன்னெடுப்பு"

உடன்பிறப்புக்களையே கொலைசெய்யும் இந்த முடிவற்ற இரத்தக்களரிக்கு அவநம்பிக்கையுடன் முடிவுகட்ட விரும்பும் உழைக்கும் மக்களுக்கு முக்கியமான மற்றும் உள்ளார்ந்த விதத்தில் தொடர்புபட்ட இரு விடயங்கள் உள்ளன.

முதலாவதாக, யுத்தத்திற்கு தீர்வு காண்பதற்காக "சர்வதேச சமூகம்" என்றழைக்கப்படும் அல்லது சரியாக குறிப்பிட்டால் ஏகாதிபத்திய சக்திகளில் நம்பிக்கை கொள்வதானது பயனற்ற ஒன்றாகும். சோ.ச.க மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியது போல், சர்வதேச ரீதியில் ஊக்குவிக்கப்பட்ட "சமாதான முன்னெடுப்பு" என்பது தொழிலாள வர்க்கத்தை திசைமாறச் செய்யவும் மற்றும் அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கவும் அனைத்து முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ "சமாதான" முன்மொழிவாளர்களால் முன்தள்ளப்படும் ஒரு அழிவுகரமான மாயையாகும்.

1970 களின் கடைப்பகுதியில் பொருளாதார மறுசீரமைப்பை கோரியதன் மூலம் உள்நாட்டு யுத்தத்திற்கான நிலைமைகளை தோற்றுவித்தமைக்கு இதே பூகோள சக்திகளே அடிப்படையில் பொறுப்பாளிகளாவர். சுதந்திரத்திற்கு பிந்திய, தேசிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை முழுமையாக கலைக்க வழிவகுத்த இந்த மறுசீரமைப்புத் திட்டம் தவிர்க்க முடியாத விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது. கொழும்பு ஆளும் கும்பலானது முன்னைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழர் விரோத இனவாதத்திற்கு எண்ணெய் வார்ப்பதன் மூலமும் மற்றும் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் அடக்கவும் அரச இயந்திரத்தை பலப்படுத்துவதன் மூலமுமே பிரதிபலித்துள்ளது.

உண்மையில் "சர்வதேச சமூகம்" அக்கறை செலுத்தியது போலவே, 1983ல் வெடித்த உள்நாட்டு யுத்தமானது தீவை சுதந்திர சந்தை மறுசீரமைப்பின் முதலாவது பரிந்துரையாளராக்குவதில் அதனது குறிக்கோளை அடைந்தது. பத்தாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக பெரும் வல்லரசுகள் முற்றிலும் அமைதியாக இருந்தது ஏன் என்பதை அந்த அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

1990களின் கடைப்பகுதியில் "சமாதான முன்னெடுப்புகளை" நோக்கி நகர்ந்தமை, யுத்தத்தால் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ள உழைக்கும் மக்கள் பற்றிய எந்தவொரு அக்கறையினாலும் அல்ல. பூகோள உற்பத்தி பங்காளர்கள் மிகவும் ஆதிக்கம் வாய்ந்தவர்களாக உருவானதோடு, 1990களில் இந்தியா ஒரு மலிவு உழைப்பு களமாக ஒரு உயர்ந்த முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்ட அளவில், முதலீட்டாளர்கள் இலங்கை உள்நாட்டு யுத்தத்தை பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதியதோடு அதற்கு முடிவுகட்ட வேண்டுமெனவும் கண்டனர். கொழும்பு அரசாங்கமானது, விடுதலைப் புலிகளுடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் தீர்வை அடையவும் மற்றும் தீவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு ஸ்திரமான மலிவு உழைப்பு களமாக மாற்றவும், அதிகரித்துவரும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டது.

இலங்கை, காஷ்மீர் மற்றும் இந்தோனேஷிய அச்சே மாகாணத்திலும் சரி அல்லது மத்திய கிழக்கிலும் சரி ஏகாதிபத்தியத்தின் "சமாதான நடவடிக்கைகள்" என்பவை உண்மையான சமாதானம் பற்றியவை அல்ல. அது குறிக்கோளை அடைவதற்கான ஒரு சாதாரண முறையே --பெரும் வல்லரசுகள் தமது கொள்ளையடிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பயன்படுத்தும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகம், அமெரிக்காவாலும் மற்றும் அதன் பங்காளிகளாலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் முன்னெடுக்கப்படும் நவ காலனித்துவ ஆக்கிரமிப்புகளில் நிர்வாணமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமாதானத்தை அடையும் வழிமுறை யுத்தத்திற்கான வழிமுறையாக மிகத் துரிதமாக மாற்றமடையக் கூடும். ஜனவரியில் புலிகளை சமாதான மேசைக்கு தள்ளுவதற்கான வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லன்ஸ்டட் ஒரு மெய்சிலிர்க்கும் அச்சுறுத்தலை விடுத்தார். புலிகள் யுத்தத்திற்கான பாதையை தேர்ந்தெடுப்பார்களானால், அவர்கள் அமெரிக்காவால் ஆயுதம் வழங்கி பயிற்றப்பட்ட "ஒரு வல்லமைமிக்க இராணுவத்தை எதிர்கொள்வர் என அவர் பிரகடனம் செய்தார். இந்தச் சொற்கள், 2003ல் அமெரிக்கத் தலைமையில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பதற்கு முன் ஈராக் அரசாங்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அதே அளவு உக்கிரமானவையாக உள்ளன.

உழைக்கும் மக்களால் இலங்கை சமாதானத்தை இந்த கும்பல்களின் கையில் ஒப்படைக்க முடியாது. உண்மையான சமாதானமானது சமூக சமத்துவம் மற்றும் தீவு பூராவும் உள்ள அனைத்து சமூகத்தையும் சார்ந்த மக்களின் ஜனநாயக உரிமைக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் தவிர்க்கமுடியாதவாறு பிணைந்துள்ளது. உழைக்கும் மக்கள் இந்த அடிப்படை இலக்குகளை அடைவதற்கான போராட்டத்தில், வாஷிங்டன், டோக்கியோ மற்றும் ஐரோப்பிய தலைநகரங்ளில் உள்ள தற்போதைய சமாதான முன்னெடுப்புகளின் பரிந்துரையாளர்களே தமது பிரதான எதிரிகள் என்பதை வேகமாக அடையாளங் கண்டுகொள்வார்கள்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடுவதற்கு உலகில் உள்ள ஒரே முன்னேற்றமான சமூக சக்தியான அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்துடன் அணிதிரள வேண்டுமென சோ.ச.க உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. ஒரு சிறிய மற்றும் வரலாற்று ரீதியில் பிற்படுத்தப்பட்ட நாடாக இருந்தாலும், சமாதானம், ஜனநாயகம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்திற்காக இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் விடுக்கும் அழைப்பானது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் மற்றும் பூகோள முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையான பொருளாதார கொள்கைகளையும் வெறுக்கும் பூகோளம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களின் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கத்தை வழங்கும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்

தொழிலாளர்கள் அக்கறை செலுத்த வேண்டிய இரண்டாவது இன்றியமையாத பிரச்சினை, தமது வர்க்க ஒடுக்குமுறையாளர்களின் நலன்களை அன்றி தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை அடையக்கூடிய ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டமும் தலைமைத்துவமுமாகும்.

கொழும்பு அரசாங்கங்களின் பொதுத் தோற்றம் என்னவாக இருந்தாலும், யுத்தத்திற்கு வழிவகுத்த விவகாரங்கள் பற்றி ஒரு உண்மையான தீர்வின் அடிப்படையில் சமாதான உடன்படிக்கை ஒன்றை அடைவதற்கு அவற்றின் இயலாமையானது இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்து தட்டினராலும் கையாளப்பட்டுவந்த இனவாத அரசியலில் இருந்தே எழுகின்றது. மிக ஆரம்பத்தில் இருந்தே, தொழிலாளர் இயக்கங்களுக்கும் மற்றும் விவசாய ஜனங்களை அணிதிரட்டிக்கொள்ள அவற்றுக்குள்ள ஆற்றலையும் கண்டு பீதிகொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள் இனவாத துரும்புச் சீட்டை பயன்படுத்தி வந்துள்ளன.

"பிரித்து ஆளுதல்" என்ற பிரித்தானிய இராஜ்ஜியத்தின் கோட்பாட்டுச் சொல், 1947-48 ன் பின்னர் தெற்காசியாவில் உத்தியோகபூர்வமான சுதந்திரம் வழங்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு முதலாளித்துவக் கட்சிக்கும் ஒரு அடிப்படை வழித்துணையாக இருந்து வந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் துணைக்கண்டத்தை துண்டாடுவதை ஏற்றுக்கொண்டதோடு அதைத் தொடர்ந்து ஒரு இனவாத இரத்தக்களரி நடந்தது. இலங்கையில் இனவாத அடிப்படையில் பிரஜா உரிமை தீர்மானிக்கப்பட்டதுடன் 1948ல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் தமது அனத்து உரிமைகளையும் இழந்தார்கள்.

சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கிய சட்டம் மற்றும் பெளத்தத்தை அரச மதமாக பிரகடனம் செய்த 1972 அரசியலமைப்பின் மூலம் தீவில் தமிழர் விரோத பாரபட்சங்கள் திணிக்கப்பட்டன. தமிழர்கள் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைக் கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க் கட்சியாக இருக்கும் கட்சி -- ஐ.தே.க அல்லது ஸ்ரீ.ல.சு.க-- இனவாத எதிர்ப்புக்களை கிளப்பி வந்தன. தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடிய போது மூர்க்கமான அரச ஒடுக்குமுறைகளை அவர்கள் எதிர்கொண்டார்கள். 1983ல் இராணுவம் மற்றும் போலிஸின் ஆதரவுடன் அரச அணுசரணை பெற்ற இனவாதக் குண்டர்கள் வன்முறையில் குதித்து நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்றனர். அவர்களது வீடுகள் மற்றும் கடைகளை எரித்ததோடு சுமார் ஒரு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தனர். அந்தப் படுகொலைகளே உள்நாட்டு யுத்தத்தின் அறிகுறியாக விளங்கியது.

தொழிலாள வர்க்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறியவர்களை தம்பக்கம் வெற்றிகொள்வதற்காக சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் யுத்தத்திற்கும் மேலாக, இத்தகைய பேரழிவுகளை தவிர்த்திருக்க முடியும். இதற்குப் பிரதான தடையாக இருந்தது லங்கா சமசமாஜக் கட்சியாகும் (ல.ச.ச.க). 1940 மற்றும் 1950களில் சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளுக்காக ல.ச.ச.க போராடிய போதிலும், ஆளும் வர்க்கத்தின் இனவாத அரசியலுக்கு மேலும் மேலும் அடிபணிந்து போனது. 1964ல் ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்தில் இணைந்துகொண்டதன் மூலம் ல.ச.ச.க தொழிலாளர் வர்க்கத்தை பகிரங்கமாக காட்டிக்கொடுத்தது.

ல.ச.ச.க வில் இருந்து பிரிந்த போதிலும் அதன் தூரதிருஷ்டியில் இருந்து விலகாத நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி ஆகியவை அதே விதத்திலான அவப்பேறு பெற்ற வர்க்க ஒத்துழைப்பு அரசியலையே நடைமுறையில் கொண்டுள்ளன. சோசலிஸ்டுகளாக காட்டிக் கொண்டு, தீவிரவாத சொற்றொடர்களை உச்சரிக்கும் இத்தகைய மத்தியதர வர்க்க பாசாங்குக்காரர்கள், அரசியல் சுயாதீனத்தை பெறுவதற்காக தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அமைப்பு ரீதியாகவே எதிர்க்கின்றனர். ஒவ்வொரு தீர்க்கமான அரசியல் நெருக்கடியின் போதும், இந்த சந்தர்ப்பவாதிகள் ஆளும் தட்டுக்களுடன் கைகோர்த்துக் கொள்வதோடு அடக்குமுறை முதலாளித்துவ ஆட்சிக்கு உதவியும் வருகின்றனர்.

இந்தக் கட்சிகளின் தலைவர்கள், வடக்கில் தமிழ் போராட்டத்தை நசுக்குவதற்காக இந்திய "அமைதிப் படையை" இலங்கைக்குக் கொண்டுவந்த மற்றும் இலங்கை இராணுவத்தை தெற்கின் கிராமப்புறங்களில் பத்தாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை படுகொலை செய்வதற்கு அனுமதித்த 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையை ஆதரித்தனர். 1994 தேர்தலின் பின்னர், ஜனாதிபதி குமாரதுங்க தன்னை ஒரு "சமாதான பாதுகாவலராக" காட்டிக்கொண்ட போது இந்தக் கட்சிகள் அவரை ஆதரித்தன. பின்னர் குமாரதுங்க தனது திட்டங்களை துரிதமாக கைவிட்டதோடு "சமாதானத்திற்கான யுத்தம்" என்ற பெயரில் கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தார். 2002ல் இருந்து, ஐ.தே.க, ஜனாதிபதி குமாரதுங்க அல்லது இப்போது ஜனாதிபதி இராஜபக்ஷவின் தலைமையிலும் சரி, இந்தத் தலைவர்கள் ஏகாதிபத்திய "சமாதான முன்னெடுப்புகளின்" மிகவும் தீவிரமான ஆதரவாளர்களாக உள்ளனர்.

எவ்வாறிருப்பினும், இந்த "சமாதானக்" கட்சிகளால் விற்பனை செய்யப்படும் செப்பனிடப்படாத அரசியல் மாயையும், கடந்த 60 வருடகால இருப்புநிலை ஏடும் (balance sheet), குறிப்பாக கடந் நான்கு வருடகால தோல்வி கண்ட சமாதான பேச்சுவார்த்தைகள் என்பன, சமாதானத்தையோ அல்லது தமிழர் பிரச்சினைகளுக்கு ஜனநாயக தீர்வையோ இந்த முதலாளித்துவ ஆட்சி வரம்புக்குள் அடைய முடியாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. யுத்தத்தை நிறுத்துவதற்காக பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் வரையப்பட்ட பலவிதமான சமாதானத் திட்டங்கள் இனவாத பதட்ட நிலைமைகள் மற்றும் முரண்பாடுகளை மட்டுமே உக்கிரப்படுத்தியுள்ளது.

சரிந்து செல்லும் பொருளாதார நிலைமைகளுடன் கட்டுண்டுள்ள இந்த இனவாத புதைச்சேறு, மக்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட தட்டினரின் நம்பிக்கையீனம் மற்றும் அதிருப்தியை சுரண்டிக்கொள்ளும் தீவிர பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் களம் அமைத்துள்ளது. ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிகளுக்கு ஏதாவது தீர்வை வழங்குவதற்குப் பதிலாக, "கெளரவமான சமாதானத்திற்கான" அவர்களின் பிரச்சாரமானது, யதார்த்தத்தில் மீண்டும் யுத்தத்தைத் தொடரவும் மற்றும் புலிகளை நசுக்குவதற்குமான ஒரு அழைப்பேயாகும். இந்தக் கட்சிகள் தமிழர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கே ஆபத்தான அச்சுறுத்தலை விடுக்கின்றன.

சோசலிச மாற்றீடு

இந்தத் தீவை அச்சுறுத்தும் பேரழிவை அணுகவிடாது தடுக்க முடியும். யுத்தத்திற்கு முடிவு கட்டி, அனைத்து சமூகங்களுக்கும் தரமான சமூக நிலைமைகளை ஸ்தாபிக்க வேண்டுமெனில், சமூக சமத்துவமின்மை, இனவாதம் மற்றும் யுத்தத்திற்கும் பொறுப்பான இந்த இலாப அமைப்பை தூக்கிவீசுவது அவசியமானதாகும். இந்த குறிக்கோளை அடைவதற்கான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை சோ.ச.க அபிவிருத்தி செய்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து இலங்கை பாதுகாப்புப் படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு நாம் தொழிலாளர் வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம். திட்டமிட்டு தொந்தரவு செய்தல், எதேச்சதிகாரமான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளால் தமிழ் மக்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ள போதிலும், இந்தப் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு இராணுவத்தைப் போல் பத்தாயிரக்கணக்கான இராணுவமும் பொலிஸும் இயங்குகின்றன. இந்த ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட கோரிக்கை விடுப்பதானது, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான ஒரு அத்தியாவசியமான முன்நிபந்தனையும், சமாதானத்தை விரும்பும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரையும் ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த கடமையுமாகும்.

"துருப்புக்களை வெளியேற்றுவதானது, புலிப் பயங்கரவாதிகளின் வெற்றி, ஒரு தனியான ஈழம் மற்றும் ஒரு தேசத்தை துண்டாடுதலுடன் அர்த்தப்படுத்துகிறது," என சிங்களப் பேரினவாதிகள் கூச்சல் போடுவதோடு பயம் மற்றும் பீதியை தூண்டவும் முயற்சிக்கின்றனர். சோ.ச.க "நேர்மாறான விதத்தில்" இதற்கு பதிலளிக்கின்றது. "இரு சமூகத்தினதும் ஆளும் கும்பல்களுக்கு எதிரான சிங்களத் தமிழ் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரே அடிப்படை அதுவேயாகும். மனிதத்தன்மையில்லாத சக்திகளால் செயற்கையாக ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை முதலாளித்துவ அரசை நாம் ஆதரிப்பதில்லை. நாம் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா-- ஈழம் சோசலிசக் குடியரசிற்காகப் போராடுகின்றோம்."

தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அன்றி தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் புலிகள் இயக்கத்திற்கு வழிதிறக்கப்பட்டதற்குக் காரணம் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் இல்லாமையே ஆகும். வடக்குக் கிழக்கில் ஒரு தனியான முதலாளித்துவ அரசிற்கான புலிகளின் கோரிக்கை, தமிழ் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு ஆபத்தான அரசியல் பொறியாகும். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட தீவு பூராவும் ஒரு அரசியல் இயக்கம் தோன்றுவதை விட, புலிகளின் குண்டர் நடவடிக்கைகள் மற்றும் சுரண்டல்களுக்கு எதிரான தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தில் அவர்களது கை பலம்பெறப் போவதில்லை.

2004 சுனாமி பேரழிவை அடுத்து, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சாதாரண உழைக்கும் மக்கள் வேண்டுமென்றே தூண்டிவிடப்படுகின்ற கீழ்த்தரமான இனவாத அரசியலை ஒருபுறம் துடைத்துக் கட்டிவிட்டு ஒருவருக்கு ஒருவர் உதவுவதற்காக தன்னிச்சையாக முன்வந்தனர். ஜனாதிபதி குமாரதுங்க அவசரகால நிலையை அமுல்படுத்தி, அவரது அரசாங்கத்தின் அற்ப நிவராண முயற்சிகளுக்கு பொறுப்பாக இராணுவத்தை இருத்தியதற்கான பிரதான காரணம் இதுவேயாகும். உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட இயக்கத்தையிட்டு ஆளும் தட்டுக்கள் பீதிகொண்டுள்ளன. அனைவரினதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான தொழிலாளர் வர்க்கத்தின் பொதுப் போராட்டம் ஒன்றிற்கான சாத்தியம் இருந்து கொண்டுள்ளது என்பதை அந்த அனுபவங்கள் ஒரு முதிரா நிலையில் வெளிப்படுத்தியுள்ளன.

மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த அனைத்து ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை தீர்க்கவும் அனைத்து விதமான வேறுபாடுகளுக்கும் முடிவுகட்டவும் ஒரு புதிய அரசியலமைப்பு தேவை என சோ.ச.க வலியுறுத்துகிறது. ஆனால், அரசியலமைப்பை வரையும் பணி ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். 1972 மற்றும் 1978ல் அப்போதைய பாராளுமன்றத்தை தாங்களாகவே மோசடியான முறையில் அரசியலமைப்புச் சபையாக மாற்றியமைத்தது போலன்றி, அந்தக் குறிப்பிட்டத் தேவைக்காக உழைக்கும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தூய்மையான அரசியலமைப்புச் சபையால், புதிய அரசயலமைப்பு ஒன்று வரையப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

உண்மையான ஜனநாயகம் என்பது, எப்போதும் செல்வந்தர்களுக்கு சார்பாக இருக்கும் முதலாளித்துவ சட்ட அமைப்பின் உத்தியோகபூர்வ சமத்துவம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் மேலானதாகும். சமுதாயத்தின் பொருளாதார அடித்தளம் உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரின் நலன்களுக்கு சேவையாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே பெரும் நிதி, கைத்தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஜனநாயக ரீதியல் பொதுச் சொத்தாக்கப்படுவதோடு, ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களுக்காக அன்றி சமுதாயத்தின் பரந்த பெரும்பான்மையானவர்களின் தேவைகளை அடையும் விதத்தில் கட்டுப்படுத்தப்படுத்துவதற்காக ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை சோ.ச.க பரிந்துரைக்கின்றது.

சோசலிசத்தை தெற்காசியாவில் உள்ள ஒரு ஒற்றை, சிறிய தீவிலோ அல்லது எந்தவொரு பெரிய அல்லது சிறிய தனிமைப்படுத்தப்பட்ட அரசிலோ நிறைவேற்ற முடியாது. சோலிசத்திற்கான போராட்டம் சர்வதேச ரீதியானதாக இருப்பது அவசியமானதாகும். பூகோள முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரே பதிலீடு, சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் மறு ஒழுங்கு செய்வதற்கான அனைத்துலக ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலாகும். ஸ்ரீலங்கா--ஈழம் சோசலிசக் குடியரசிற்கான போராட்டமானது அனைத்துலகிலும் மற்றும் தெற்காசியாவிலும் ஐக்கிய சோசலிச குடியரசுகளை கட்டியெழுப்புவதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு இணைந்த பகுதி மட்டுமேயாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு) பகுதிகள் அனைத்தும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்திற்காகவே போராடுகின்றன.

1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும். அனைத்துலகக் குழுவானது, பாட்டாளி வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக இடைவிடாது பிரச்சாரம் செய்கின்றது. சமாதானத்தை விரும்பும், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டியெழுப்ப இணையுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved