WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பால்கன்
Media lies and hypocrisy in wake of Milosevic's death
மிலோசெவிக்கின் மரணத்தையொட்டிய ஊடகங்களின் பொய்களும் பாசாங்கும்
By Bill Van Auken
13 March 2006
Use this version
to print |
Send this link by email |
Email the author |
Featured Articles
சனிக்கிழமையன்று ஹேக்கில் சிறையில் சம்பவித்த முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர்
சுலோபோடன் மிலோசெவிக்கின் மரணம் வரலாற்று திரித்தல்களையும் கடைந்தெடுத்த பொய்களையும் ஒரு பிரவாகம்போல்
கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அவை அந்நாட்டிற்கெதிராக நடந்த அமெரிக்க-நேட்டோ யுத்தத்தை நியாயப்படுத்த
ஏழு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட பிரசாரத்தையே இவை எதிரொலிக்கின்றன.
ஐ. நா. வின் போர் குற்றங்களுக்கான நடுவர்மன்ற அதிகாரிகள், மிலோசெவிக் கடுமையான
மாரடைப்பால் இறந்தார் என்று கூறினார்கள், ஆனால், அதேசமயம் இது இயற்கையான காரணங்களால் நிகழ்ந்ததா
என்பது நச்சூட்டாய்வு அறிக்கை வந்தபின்புதான் தெரியும் எனவும் அவர்கள் கோடிட்டுக்காட்டினார்கள்.
ஐ. நா. வின் போர்குற்றங்களுக்கான வழக்குரைஞர் கார்லா டெல் போன்டெ,
முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர், தான் குற்றவாளி என வரக்கூடிய தீர்ப்பையும், ஆயுள் தண்டனையையும் எதிர்கொள்வதை
தவிர்க்க வேண்டி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார். ஆயினும், மிலோசெவிக்கின் வழக்கறிஞர்,
தன் கட்சிக்காரர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்கி லாவ்ரோவ்விற்கு, தான் இறப்பதற்கு ஒரு நாள்
முன்பு உதவி வேண்டியும், சிறை அதிகாரிகள் அவர் வாயை அடைக்க தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துகளை அவருக்கு
கொடுத்து வருவதாகவும் ஒரு கடிதம் எழுதியிருந்ததாகவும் கூறினார்.
டச்சு அரசு தொலைக்காட்சி, கடந்த மாதம் மிலோசெவிக்கிடமிருந்து எடுக்கப்பட்ட
இரத்த மாதிரியில், முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் இரத்த அழுத்தத்திற்காகவும், இதய நோய்க்காகவும் எடுத்து
வந்த மருந்துகளை செயலிழக்கச் செய்யக்கூடிய, தொழுநோய்க்காக கொடுக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த மருந்தின்
சிறுதடங்கள் இருந்ததாக சொல்கிறது.
மிலோசெவிக்கின் இறப்பு கொலையில்லையென்று ஒதுக்கிவிட முடியாது. எது எப்படியிருப்பினும்
ஐ. நா. நடுவர் மன்றம், அதன் பின் நிற்கும் அமெரிக்கா ஆகிய இரண்டுந்தான் இவருடைய சாவிற்கு முழுப் பொறுப்பு.
மிலோசெவிக் தீவிரமான இதயப் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த
விஷயம். ஆனால், கடந்தமாதம், விசாரணையை திரும்ப ஆரம்பிப்பதற்கு முன்னால், ரஷ்யாவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள
அவர் அனுமதி கோரியபோது முதன்மை நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
நூரெம்பேர்க்கிற்கு பின்னர், மிக முக்கியமானது என்று மேற்கத்திய நாடுகளாலும்
ஊடகங்களாலும் உலகம் பூராகவும் பரப்பப்பட்ட இந்த விசாரணை, 1990களில் நடைபெற்ற உள்நாட்டுப்
போரின்போது நடத்தப்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு மிலோசெவிக்தான் பொறுப்பு என்பதற்கான எந்த நேரடி
சாட்சியத்தையும் காட்டமுடியாமல், ஒரு அரசியல் தர்மசங்கடமாக உருமாறிவிட்டது. பெப்ரவரி இறுதியில் மிலோசெவிக்,
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனிற்கு சான்றளிக்க அழைப்பு ஆணை அனுப்பும்படி கேட்டுக்கொண்டபின் இந்த
விசாரணையை ஏற்பாடு செய்தவர்களுக்கு இது இன்னும் மிகப் பெரிய பிரச்சினையாக உருமாறிவிடும் என்கிற அச்சம்
தோன்றியிருக்கிறது. மிலோசெவிக்கின் இந்த செயலின் நோக்கம், யூகோஸ்லேவியா மீது போர் தொடுத்தது,
அப்பாவி மக்களை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டது போன்ற மனித இனத்திற்கு
எதிரான குற்றங்களுக்கு வாஷிங்டன்தான் பொறுப்பு என்பதை வெளிக்காட்டவே என்பது புலனாகிறது.
மிலோசெவிக்கின் மரணத்தினால் ஏற்பட்ட ஊடகங்களின் கருத்து எதிரலையில் யூகோஸ்லாவியா
உடைவதற்கும் அதன்பின் நிகழ்ந்த படுகொலைகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இதர மேனாட்டு சக்திகள்
வகித்த பிரதான பங்கு பற்றி சாடையாகக்கூட எதுவும் தென்படவில்லை. அதற்குப் பதிலாக, எழுத்து மூலமாகவும்
வானொலி மூலமாகவும் வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்தும் மிலோசெவிக்கை பிற்கால ஹிட்லர் என இழிவுபடுத்துவதாகவும்,
அவருடைய குற்றங்களுக்கு ஏற்ற சரியான தண்டனை அவருக்குக் கிடைக்காது என ஒப்பாரி வைப்பதாகவுமே இருந்தன.
ஊடக வர்ணனைகளின் தனித்தன்மையை பிரதிபலிப்பதாக இருந்த
CNN இன் சர்வதேச
முதன்மை நிருபரான கிறிஸ்டியன் அமான்பூர் சனிக்கிழமையன்று அறிவித்தார்: "அதிகாரத்தின் சிகரத்தை எட்டிய
நொடியிலிருந்து, அங்கேயேதான் அவர் நிலைகொண்டிருந்தார், தவிர, அங்கிருந்துதான் பால்கனில் நடந்துகொண்டிருந்தவைகளையும்
அதாவது, இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு பின் ஐரோப்பாவும் அகில உலகமும் பார்த்த, ஐரோப்பாவில்
மனித இனத்திற்கு எதிராக நடைபெற்ற மிக மோசமான குற்றங்களையும் அவர் இயக்கிக் கொண்டிருந்தார். இவை
1990களின் பின் பாதியில் கிட்டத்தட்ட தங்குதடையின்றி நடைபெற்றன. அவரது எதிரிகளுக்கும் அவரால் பலியானவர்களுக்கும்
அவர் 'பால்கன்களின் கசாப்புக்காரன்' என அறியப்பட்டார்.
அமான்பூர் கூறியவை எல்லாமே, முன்னாள் அரசுத்துறை செய்தித் தொடர்பாளரும்
அவரது கணவருமான ஜேம்ஸ் ருபின்ஸ்ஸால், 1999ல் அமெரிக்காவின் யூகோஸ்லாவியாவிற்கு எதிரான சண்டைக்கு
அதனால் சாக்காக சொல்லப்பட்ட கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிரான "இன அழிப்பு" பற்றிய குற்றச்சாட்டுகள்
அளவுக்கு கேவலமாக மிகைப்படுத்தப்பட்டவையாகவும் ஊர்ஜிதம் செய்யப்படாதவையாகவும் இருந்தன.
இதேபோல், நியூயோர்க் டைம்ஸ்ஸின் முன்னாள் வெளிநாட்டுப்
பொறுப்பாசிரியர், ஞாயிறு செய்தித்தாளின் முதல்பக்கத்தில் மிலோசெவிக்கை, "அதிகாரம் என்கின்ற ஒரே
நோக்கிற்காக உண்மையை, மாற்றி அமைக்கக்கூடிய ஒரு பண்டமாகக் கையாளுபவர்" என்கிற மாதிரி
வருணித்திருந்தார். உதாரணமாக, இந்த யூகோஸ்லாவிய தலைவர் குரோஷியர்களை இரண்டாம் உலக மகா
யுத்தத்தின் எதேச்சாதிகாரர்கள் எனப் "புதிதாகக் கண்டுபிடித்ததாகச்" சொல்கிறார்.
இதன் அர்த்தம், பாசிச உஸ்தாஷே இயக்கத்தினால் 900,000 சேர்பியர்களும் யூதர்களும்
இரண்டாம் உலகப் போரில் பரந்த அளவில் கொல்லப்பட்ட சம்பவம் நடக்கவேயில்லையென்று சொல்லவா அல்லது,
அது மிகப்பழைய சரித்திரம் என்பதா, அல்லது உஸ்தாஷேயின் அரசியல் வாரிசுகளின் கொள்கைகளுக்கு, புத்துயிர் பெற்ற
குரோஷியர்களின் தேசியப் பிரிவினை கிளர்ச்சியில் எந்தப் பங்கும் இல்லை என்கின்ற அர்த்தமா? உண்மைக்காக தான்
பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் கோஹென் இதைச் சொல்ல விரும்பவில்லை.
1991ல் குரோஷியாவிலிருந்து 1999 கொசோவோ வரை, எப்பொழுதும்
சண்டைகளில் பலாத்காரத்தை உபயோகிக்கத் தயாராக இருக்கும் ஒரு மிகக்கொடிய ஆட்சியாளராக
மிலோசெவிக்கை அவர் வர்ணித்திருக்கிறார். அவர் மேலும் சொல்கிறார்: "தான் காப்பாற்றுவதாக
சொல்லிக்கொண்டிருக்கும் யூகோஸ்லாவியாவின் நுண்ணிய சமநிலையை மிலோசெவிக் அழித்தார்; பின்பு அதன்
கட்டுமீறிய அழிவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்."
யூகோஸ்லாவியா உடைந்து போவதற்குக் காரணமான அரசியல் நிகழ்வுகளுக்கு
மிலோசெவிக் பெரிய அளவில் பொறுப்பாளியாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மேற்கத்திய
ஊடகங்களுக்கு, அவரை பால்கனில் நடந்தவைகளையெல்லாம் இயக்கிய மிகச் சக்தி வாய்ந்த நபராகவோ அல்லது
யூகோஸ்லாவியாவின் நுண்ணிய சமநிலையை தனி நபராக அழித்தவராகவோ காட்டுவது என்பது, எந்த அளவிற்குப்
பொய்யோ அந்த அளவிற்கு, அவர்களது சுயலாபத்திற்கு தனிச் சிறப்புரிமை பெற்றதாக இருக்கிறது. "மோசமான
மிலோசெவிக்" என்று கூறுகிற சமீபத்திய யூகோஸ்லாவிய சரித்திரத்தில் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் சக்திகளின்
முக்கியமான பங்கை காணமுடியவில்லை. குறிப்பாக, அமெரிக்காவும் ஜேர்மனியும், அவைகளுடைய தலையீட்டினால்
விளையக்கூடிய மோசமான விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வேண்டுமென்றே நாட்டை பிளவுபடுத்தின.
முதன்மை பாதகனான, ஈராக்கின் சதாம் ஹுசைனை போல மிலோசெவிக்கும் ஒரு
காலத்தில் வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டார். 1980களில் பன்னாட்டு நாணயநிதியத்தால் பிறப்பிக்கப்பட்ட சந்தை
சீர்திருத்தங்களுக்கும், தேசிமயமாக்கப்பட்ட தொழில்களை தனியார்மயமாக்குவதற்கும் அவர் பரிந்து செயல்பட்டபோது,
அவரை வாஷிங்டன் ஆதரித்தது. யூகோஸ்லாவியாவில் உள்ள மற்ற குடியரசுகளில் உள்ள அவரது சகாக்களைப் போல்
- குரோஷியாவில் ப்ஃரான்ஜோ ருஜ்மன், பொஸ்னியாவில் அலிஜா இஜெட்பெகோவிக், சுலோவேனியாவில் மிலன்
குகன் - இவர்கள் போல், மிலோசெவிக்கும், இந்த கொள்கைகள் உருவாக்கிய வேலை இழப்பு, வாழ்க்கை தரத்தில்
சரிவு இவற்றினாலுண்டான பொதுமக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக இனக்குழு தேசியவாதத்தை
தூண்டிவிட்டார். ஆயினும், இந்த வழிமுறையை அவர் தோற்றுவிக்கவில்லை. இன்னும் சரியாகக் கூறவேண்டுமெனில்,
மற்றய ஸ்ராலினிச பிற்போக்குவாத அதிகாரத்துவங்களைப்போல, அது வெளிப்படுத்திய மையத்தனின்று விரியும் சமூக
சக்திகளுக்கேற்றாற்போல் அவர் தன்னை மாற்றிக் கொண்டார்.
1991ல் ஜேர்மனியின் மறுஐக்கியம், மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன்,
யூகோஸ்லாவியாவின் புவிசார் அரசியல் நிலைமை அடிப்படை மாற்றத்திற்குள்ளாகியது. மீண்டெழுந்த ஜேர்மானிய
ஏகாதிபத்தியம் பால்கன்களில் அதன் நலன்களை கண்டுகொண்டது - வரலாற்று ரீதியாக ஜேர்மானிய செல்வாக்கு
பெற்ற களம் -சுலோவேனியாவின் பிரிவினையை தூண்டியதால்- யூகோஸ்லாவியாவிலேயே வளம் மிக்க பகுதி
-அதன்பின் குரோஷியா சிறந்த முறையில் பயன்பட்டது.
ஆரம்பத்தில் ஜேர்மனியின் தலையீட்டையும், யூகோஸ்லாவியாவின் உடைவையும் எதிர்த்த
வாஷிங்டன், முதலாளித்துவ சுரண்டலுக்கு வழிவகுத்துக் கொடுக்கக்கூடிய முன்னாள் கிழக்கு ஐரோப்பிய கூட்டணி
நாடுகளின் மேல் தன் மேலாதிக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக அந்த காரியத்தை தானே செய்வதற்கு
முடிவு செய்தது. அது, பொஸ்னியாவின் சுதந்திரத்திற்கு முக்கியமான ஆதரவாளராக மாறியது, பின்னர், 1999ல்
அமெரிக்கா-நேடோ யுத்தத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அல்பானியாவின் தேசியவாதத்தையும் பிரிவினைவாத
கொசோவோ விடுதலைப் படையையும் ஆதரித்தது.
அரசியல், மற்றும் யூகோஸ்லாவியாவின் சரித்திரம் அறிந்த அனைவரும்,
யூகோஸ்லாவியாவின் உடைவு நிச்சயமாக உள் நாட்டுப் போரைத் தோற்றுவிக்கும் என்று எச்சரித்தார்கள்.
இனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய நாடுகளை தோற்றுவித்தது "இன அடிப்படையில் தூய்மையாக்குதல்'
என்கிற இணக்கமற்ற ஒரு வழக்கத்திற்கு அடி கோலியது.
யூகோஸ்லேவியாவின் கலைப்பிற்கு பின்னர், அதற்கு உறுதுணையாக நின்ற அமெரிக்கா
கூறுபடாத கூட்டரசை பாதுகாத்த சேர்பியாவை எதிரியாகப் பாவித்து குறி வைத்தது. சேர்பியர்களினால் 'இனத்
தூய்மையாக்குதல்' நடத்தப்பட்ட போதுதான் அமெரிக்கா அதை எதிர்த்தது. ஆனால், குரோஷியா, பொஸ்னியா
மற்றும் கொசோவோ அல்பானியர்கள் அதே நோக்கங்களுக்காக, அதே இரத்தக்களரி வழிமுறைகளை அநுசரித்தபோது
அவர்களை தீவிரமாக ஆதரித்தது.
மிலோசெவிக்கிற்கு பங்கு உள்ள எந்தக் குற்றத்தையும் மன்னிப்பதற்கு இவை எதுவுமே
காரணமாக முடியாது என்கின்றபோதும், அவர் மேல் வழக்குகளை முடுக்கி விட்டவர்களே பால்கனில் நடந்த
கொலைகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.
ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றம் வெற்றி பெற்றவர்களுக்கு
சாதகமான தீர்ப்பையே வழங்கும். மாஜி அதிபரை சரணடையச் செய்தால், அதற்குப் பரிசாக பெல்கிரேடில்
அமைந்த ஆட்சிக்கு பொருளாதார உதவி என்ற ஒரு நேர்மையற்ற பேரத்திற்காக மிலோசெவிக் சேர்பியாவிலிருந்து
கடத்தப்பட்டார்.
மிலோசெவிக்கின் மேல் எழுந்த குற்றச்சாட்டு உண்மையில் சட்டம்
சம்பந்தப்பட்டதைவிட, சேர்பியாவிற்கு எதிராக அமெரிக்கா-நேட்டோ குண்டு வீச்சிற்கான ராஜீயரீதியான
வேலைகள் நடுவில் வெளியிடப்பட்ட அரசியல் ஆவணமாகும். இந்த நடுவர் மன்றமே யூகோஸ்லாவியாவிற்கு எதிராக
போர் தொடுத்த, பொது மக்களை குறி பார்த்து குண்டுவீசி போர்க்குற்றங்களை புரிந்த அதே சக்திகளால்
மற்றும் அவற்றின் முதலீட்டால் நிறுவப்பட்டது.
இந்த விசாரணையை முன்னின்று ஏற்பாடு செய்தது அமெரிக்கா என்பது இந்தப் பயிற்சி
முழுவதுமே ஒரு ஏமாற்று வேலை என்பதைக் காட்டுகிறது. உலக அரங்கில் தன்னுடைய செயல்பாடுகள் விஷயத்தில்,
வாஷிங்டன் சர்வதேச சட்டங்களையோ அல்லது எந்த சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட அதிகாரத்தையோ
மதிப்பதில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அது புறக்கணித்ததோடல்லாமல், அமெரிக்க அதிகாரிகள்
மற்றும் வீரர்களை அவர்களுடைய மக்களுக்கு எதிரான போர்குற்றங்களுக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கும்
தளர்த்தீடுகளில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களை வலிந்த வகையில் கையொப்பமிடச்செய்தது.
மிலோசெவிக்கின் குற்ற விசாரணை உண்மையிலேயே மனித உரிமைகளையும் சர்வதேச
நீதி முறைகளையும் சார்ந்தது எனில் எழும் நியாயமான கேள்வி: ஜோர்ஜ் புஷ்ஷை ஏன் ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளிக்
கூண்டில் ஏற்றவில்லை?
புஷ், செனி, ரம்ஸ்பெல்ட் மற்றும் தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தை சேர்ந்த
மற்றவர்களும் இவற்றைவிடப் பெரிய போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு, எந்தத் தூண்டுதலுமில்லாத, சட்டத்திற்கு
புறம்பான ஒரு போரை ஈராக்கிற்கு எதிராக நடத்தியதன் மூலம் அப்பாவி மக்களின் உயிருக்கு சேதம் விளைவித்தனர்;
இது மிலோசெவிக் செய்ததைவிட பல மடங்கு அதிகம் என்பதில் கேள்விக்கிடமேயில்லை.
டைம்ஸ் இல் கோஹெனின் வர்ணனையில் கூறப்பட்ட மிலோசெவிக்கின் மேல் சுமத்தப்படக்கூடிய
மிகப் பெரியக் குற்றச்சாட்டு -தன்னுடைய அரசியல் ஆதாயங்களுக்காக போரைத் தேர்ந்தெடுத்தார் என்பதுதான்.
அப்படிப் பார்க்கும்போது, தற்போதைய அமெரிக்க அதிபரின் குற்றம் எவ்வளவு பெரியது? மிலோசெவிக், தன்னுடைய
இராணுவ நடவடிக்கைகளை, வெளியிலுள்ள வலிமை வாய்ந்த சக்திகளின் சதியால் விளைந்த தன்னுடைய சொந்த
நாட்டின் கலைப்புக்கெதிராக செய்யப்பட்டவை என விவாதிக்கலாம்.
புஷ்ஷின் பக்கமுள்ள நியாயம் என்ன? ஈராக் போருக்காக கொடுக்கப்பட்ட எல்லா
சாக்குகளுமே பொய் என வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன. உலகில் எல்லோரையும் விட மிகவும் சக்திவாய்ந்த
எதேச்சாதிகார நாட்டின் இராணுவப் படை, ஏற்கனவே போரினால் நாசம் செய்யப்பட்ட, ஒரு சிறிய நாட்டில்,
அதன் எண்ணெய் வளத்தின் மீதும், மூலோபாய பிராந்தியத்தின் மீதும் அமெரிக்க முதலாளித்துவம் தனது மேலாதிக்கத்தை
அதை நிறுவுதற்காக கட்டவிழ்த்து விடப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது கொள்ளையடிப்பதற்கென்றே
மேற்கொள்ளப்பட்ட குற்றகரமான யுத்தமாகும்.
மிலோசெவிக் குற்றவாளியாகவும், புஷ் குற்றம் சாட்டுபவர்களில் ஒருவராகவும்
இருந்தது, சர்வதேச நீதி அமைப்பை ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகவே அம்பலப்படுத்திக்
காட்டுகிறது.
See Also:
மிலோசிவிக்கின் வீழ்ச்சி எதனை முன்னறிவிக்கின்றது?
நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது
ஏன்? உலக அதிகாரம், எண்ணெய், தங்கம்
பாரிய மனிதப் படுகொலைகளின் பின்னர்:பால்கன் யுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்
Top of page |