World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: riot police attack student protesters at the Sorbonne

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

By Antoine Lerougetel
14 March 2006

Back to screen version

சனிக்கிழமையன்று கோலிச அரசின், புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கான வேலை பாதுகாப்பை நீக்கும் மசோதாவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதற்காக, சோர்போனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மாணவர்களை பிரெஞ்சு கலவரத் தடுப்புப் போலீஸ் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றியது. பிரதமர் டொமினிக் டு வில்ப்பனின் உத்திரவின்படி, போலீசார் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடத்தை மூர்க்கமாக தாக்கி, கிட்டத்தட்ட 300 மாணவ கிளர்ச்சியாளர்களை வெளியேற்றினார்கள்.

கட்டிடத்தின் உள்ளே இருந்த நிழற்படக் குழுக்கள், கலவரப் போலீஸ், கதவுகள் வழியாக புகுந்து, குவிந்து கிடந்த நாற்காலிகளால் உருவாகியிருந்த தடை அரண்களை உடைத்து முன்னேறி, தடியடிப் பிரயோகம் செய்ததையும், கண்ணீர் புகை வீசியதையும் படம் பிடித்தன. பதினைந்து நிமிடங்களுக்குள் கட்டிடம் காலி செய்யப்பட்டது.

சோர்போன் ஆக்கிரமிப்பு, அரசாங்கத்தின் 'முதல் வேலை ஒப்பந்தம்' (CPE) க்கு எதிராக மாணவர்களால் நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தப் புதிய சட்டம், புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம் வயதினருக்கு இரண்டு வருட 'பரிசோதனை'க் காலத்தை திணிக்கும். இந்த காலகட்டத்தில், வேலைக்கமர்த்துபவர் தொழிலாளர்களை காரணம் எதுவும் கூறாமலே வேலையைவிட்டு நிறுத்தமுடியும். இந்த மசோதா, தேசிய சட்டமன்றத்தில் அவசரம் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய தினம், பிரான்ஸ் முழுவதிலுமாக கிட்டத்தட்ட பத்து லட்சம் இளைஞர்களும் வேலைபார்ப்போரும், CPE யினால் குறியிடப்பட்ட, அமைப்புக்குட்படுத்தப்பட்ட வேலை பாதுகாப்பின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதுமுதற்கொண்டு, மாணவர்களின் புறக்கணிப்பு பிரான்சில் உள்ள 88 பல்கலைக் கழகங்களில் 45ற்குப் பரவியது. பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஒரு புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். முடிவில்லாத புறக்கணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு பெற்ற பொதுக்கூட்டங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டன. துலூசில் ஒரு மைதானத்தில், நடந்தவைகளிலேயே மிகப்பெரிதான ஒரு கூட்டத்தில் 4,000 பேர் பங்கு கொண்டனர்.

பல்கலைக் கழக, மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் அமைப்புகள், இந்த வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழனன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். சனிக்கிழமையன்று, மாணவ அமைப்புகளுடன் இணைந்து அனைத்து வர்த்தக சங்க கூட்டமைப்புகளும் ஆதரிக்கும் எதிர்ப்பு நாள் அனுஷ்டிக்கப்படும்.

வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட சோர்போன் ஆக்கிரமிப்பு, 1968 மே-ஜூன் மாதங்களில் மாணவர்கள்-தொழிலாளர்களின் எழுச்சி நடந்த இந்த மையம் திரும்பவும் மிகப் பெரிய எதிர்ப்பு மையமாக ஆகுவிடுமோ என்கின்ற அரசாங்கத்தின் பயத்தை கோடிட்டுக் காட்டுகிறது. 1968ல், சோர்போனில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலைத் தொடர்ந்து, பத்துமில்லியன் தொழிலாளர்கள் மாணவர்களுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் பணியிடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அப்போதைய ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் நாட்டைவிட்டு தப்பி ஓட தூண்டுதலாக இருந்தார்கள்.

CPE க்கு எதிரான தற்போதைய போராட்டம் வில்ப்பனின் தற்போதைய மத்திய-வலதுசாரி அரசாங்கத்தினுடைய, மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கினுடைய தாக்குப்பிடிக்கும் பலத்தை கேள்விக்குறியாக்கும் அளவிற்கு வலுத்து வருகிறது. லிபரேஷன் வில்ப்பன் 'கழைக்கூத்தாடிகள் நடக்கும்' கயிற்றின்மேல் இருப்பதாகச் சொல்கிறது.

உள்நாட்டு அமைச்சரும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் இயக்கத்திற்கான கோலிச ஒன்றியத்தின் (Gaullist Union for People's Movement) நியமனத்தில் வில்ப்பனின் முக்கிய போட்டியாளருமான நிக்கோலா சார்க்கோசியுடன் நெருங்கிய உடனுழைப்பாளர், பட்ரிக் தேவேட்ஜியன், "அரசாங்கம் விவாதத்திற்கிடமின்றி கஷ்டத்தில் இருக்கிறது. நாம் ஒன்றுபடவேண்டும்," என்று ஊடகங்களிடம் சொன்னார்.

சோர்போன் ஆக்கிரமிப்பாளர்களை சிதறடிப்பதற்காக கலவரத் தடுப்பு போலீசை அனுப்புவதன் மூலம் கோலிச அரசு, வளர்ந்துவரும் 'இளைஞர்-வேலைபார்ப்போர்' இயக்கத்தைத் தோற்கடிக்க உறுதி பூண்டிருப்பதாக சமிக்ஞை அனுப்ப முயன்றிருக்கிறது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஞாயிறு இரவன்று, பிரதான நேரத்தில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நேர் காணலில் வில்ப்பன், மாணவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார், CPE ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தி, அதன் மூலம், முதல் இரண்டு வருடங்களில் தவறான வேலைநீக்கத்திற்கெதிராக உள்ள சட்டரீதியான அனைத்து பாதுகாப்பையும் இரத்து செய்யப்போகும் அரசாங்கத்தின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பேட்டி காண்பவரான Claire Chazal, இது ஒரு முதலாளி, கர்ப்பமாக இருக்கும் ஒர் தொழிலாளியை அவருக்கு சட்டத்திற்குட்பட்ட சம்பளம் உள்ள பிரசவகால விடுப்பையும் மறுக்கும் அதிகாரத்தை அளிக்குமா எனக் கேட்டதற்கு, வில்ப்பன், "CPE ஊழியர்கள், அநியாயமான வேலைநீக்கத்திற்கு எதிராக, சட்டவரம்பிற்குட்பட்டு அனைத்து வகையிலும் பாதுகாக்கப்படுவார்கள்," என்று வெளிப்படையாக பொய் பேசினார்.

'சமூகக் கூட்டாளி' களுடன், அதாவது, முதலாளிகள், சங்கங்கள், வேலைவாய்ப்பு அமைச்சர்களான Jean-Louis Borloo, Gérard Larcher இவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கப்போவதாக பிரதமர் அறிவித்தார். இளம் தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய முதல் இரண்டு வருடங்களில் வேலையில் உதவவும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மற்றொரு வேலை கிடைக்க உதவி செய்யவும் "பயற்சி ஆசிரியர்களை" ஏற்பாடு செய்வதைப் பற்றி இவர்கள் விவாதிப்பார்கள். இது, நிச்சயம் சங்கங்களுடன் சமாதானமாகப் போக, மாபெரும் எதிர்ப்பை அடக்கவும், கடைசியில் அதைச் சிதறடிக்கவும் அவர்களின் உதவியை பெற அரசியல் ரீதியான ஓர் சமாதானப் பேச்சு ஆகும்.

சோசலிசக் கட்சியின் "இடதுகளில்" பிரசித்திபெற்றவரான, Arnaud Montbourg, திட்டமிடப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகளின் பின்னால் இருக்கும் அரசியல் கணக்கீடுகளை ஒப்புக்கொண்டார். "அவருடைய எல்லைமீறல்களினால் சுவாலையை பற்றவைத்த பின்... சங்கங்களை, தீயணைப்பவர்கள்போல் செயல்பட்டு தன்னை காப்பாற்ற வில்ப்பன் அழைக்கிறார்," என்று கூறினார்.

பிரதான சங்கங்களின் கூட்டமைப்பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உடனடியாக ஒப்புக் கொண்டார்கள். முக்கியமான கல்விச் சங்கமான FSU வின் Gérard Aschiéri, வில்ப்பனின் உத்திரவாதங்களை "சூடான கற்று" என்று வர்ணித்தார். ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புள்ள தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பின் (General Confederation of Labour) Bernard Thibault போல் தானும் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்துக் கொள்ளப்போவதாக கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved