: மத்திய
கிழக்கு
Israel conducts military offensive in the
West Bank and Gaza
மேற்கு கரையிலும் காசாவிலும் இராணுவ தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது
By Rick Kelly
2 March 2006
Back to screen version
கடந்த பதினைந்து நாட்களில் இஸ்ரேலிய இராணுவ படைகள் மேற்குக்கரை முழுவதிலும் அதிக
அளவில் தாக்குதல்களை நடத்தியது மற்றும் காசாவில் இலக்குகளை தொடர்ந்து தாக்கியது. இந்த இராணுவத்தாக்குதல்கள்
கடந்த வருடம் காசாவிருந்து இஸ்ரேல் அகற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களாகும் மற்றும் ஜனவரி
25ம் தேதி நடந்த பாலஸ்தீனிய சட்டசபை தேர்தலில் ஹமாஸின் வெற்றியைத் தொடர்ந்து பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான
ஒரு பொதுவான இஸ்ரேலிய தாக்குதலின் பகுதி வடிவமுமாகும். வாக்களிப்பிற்குப்பின் மொத்தம் 31 பாலஸ்தீனியர்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கு கரையிலுள்ள பலாடா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினால் மிகப்பெரிய தனித்த
தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டது. ''ஆபரேஷன் நொர்தேர்ன் லைட்ஸ்" பிப்ரவரி 19ம் தேதியன்று தொடக்கப்பட்டது.
பாலஸ்தீனிய அறிக்கையின்படி, கவச வாகனங்கள், புல்டோசர்கள், ஹெலிகாப்டர்களின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய
துருப்புக்கள் பலாடாவை ஆக்கிரமித்துக்கொண்டனர். இந்த முகாம் மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான
மிகப் பெரிய மையமாகும். இதில் பதிவு செய்துள்ள மக்கள் 21,000 ஆகும். இஸ்ரேலிய இராணுவம் நாப்லஸின் அண்டை
நகரத்திலிருந்து பலாடாவை துண்டித்ததுடன் வீடு வீடாகச்சென்று தேடப்பட்டுவரும் போராளிகளைத் தேடியது.
தற்பொழுது நடந்துவரும் நடவடிக்கையில் நான்கு குடிமக்கள் உட்பட குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள்
கொல்லப்பட்டிருக்கின்றனர். 50 பாலஸ்தீனியர்களுக்கும் மேலானோர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில்
பெரும்பாலனோர் குழந்தைகள் என்றும், அவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினர் மேல் கற்களை வீசியதால் சுடப்பட்டனர்
என்றும் உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 போராளிகளைக் கைது செய்திருப்பதாகவும், இவர்களில்
பெரும்பாலானோர் ஃபதாவுடன் இணைந்திருக்கும் அல் அக்ஸா மார்ட்டைர்ஸ் ப்ரிகேட்ஸ்ஸின் உறுப்பினர்கள் என்று
கூறப்படுபவர்கள் என்றும் இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
தாக்குதலின் முதல் நாளன்று அஹமத் அல்-ஷேக் யிஸ்ஸா மற்றும் முகம்மது அல்-நடோர்
என்ற இரண்டு 17 வயதானவர்கள், அவர்கள் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபொழுது இஸ்ரேல் இராணுவத்தால்
கழுத்தில் சுடப்பட்ட பின்னர் இறந்தனர். மனித உரிமைகளுக்கான பாலஸ்தீனிய மையம் இந்த இளைஞர்கள் ''எந்த ஒரு
தெளிவான காரணமும் இன்றிக்'' கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது..... கண்ணால் பார்த்த சாட்சிகளின்படி, இந்த
இரு குழந்தைகள் கொல்லப்பட்டபோது அந்தப் பகுதி முற்றிலுமாக அமைதியாக இருந்திருக்கின்றது."
படாலாவில் மேலும் 5 பாலஸ்தீனியர்கள் பெப்ரவரி 23ம் தேதியன்று
கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு உள்ளூர் வீட்டில் அவர்களை இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துப்பிடித்த பின்னர் மூன்று
அல் அக்ஸா மார்ட்டைர்ஸ் ப்ரிகேட்ஸ் போராளிகள் இறந்தனர். துப்பாக்கிகள் நிறைந்த இரண்டு
ஹெலிகாப்டர்களிலிருந்தும், தரையில் இருந்தும் இராணுவத்தினர் வீட்டை நோக்கிச் சுட்டனர் என்று சாட்சியங்கள்
குறிப்பிட்டன. அதே நாளில் இரண்டு பாலஸ்தீனிய குடிமக்கள் இஸ்ரேலிய சினிப்பர்களால் கொல்லப்பட்டனர். 22 வயதான
மொகம்மது ஸலே அபு ஸ்ரேஸ், அவரது வீட்டின் கூரையில் நின்றுகொண்டிருந்தபொழுது சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவ வாகனங்கள் மீது இளைஞர்கள் கற்களை வீசியபோது, இஸ்ரேலிய இராணுவத்தினர் கூட்டத்தை நோக்கிச்
சுட்டபோது 19 வயதான இப்ராஹிம் மொகம்மது அலி ச'ய்தி கொல்லப்பட்டார்.
காயமடைந்தவர்களை கவனிக்கும்பொழுது மூன்று மருத்துவ தொழிலாளர்கள் வெடித்துச்சிதறும்
குண்டுகளாலும் துப்பாக்கி ரவைகளாலும் காயமடைந்தனர். இஸ்ரேல் இாணுவத்தின் தலையீடு
காரணமாக, காயமடைந்த அதிகாரிகளை
வெளியேற்றுவதற்கு 30 நிமிடங்களுக்கும் மேல் ஆகியது. வெடித்துச்சிதறிய குண்டுகளினால் காயமடைந்து காலில்
இரத்தக்குழாய் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஆம்புலன்சிலிருந்து
இறக்கி ஒரு மணி நேரம் அவர்களுடைய சோதனைச்சாவடி ஒன்றில் வைத்திருந்தனர். சிப்பாய்கள்
மருத்துவ தொழிலாளியின் காயங்களைப் பார்த்து விட்டு, "நல்லது, அவன் இறந்து போகட்டும் அவன் இறந்தபின்புதான்
இங்கிருந்து நீங்கள் நகர வேண்டும்," என்று குறிப்பிட்டதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தெரிவிக்கிறார்.
இதர மருத்துவ தொழிலாளர்களும் கல் வீசும் இளைஞர்களுக்கும் இஸ்ரேலிய துருப்புக்களுக்கும்
இடையே ஒரு மனித கவசமாக செயல்பட நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய மருத்துவர்களுக்கான
மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை "மருத்துவ அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் நான்காவது ஜெனீவா
பேரவை விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவதனால் மிகவும் கண்டிக்கத்தக்கது, அது மருத்துவக்குழுக்களும்
தொழிலாளர்களும் நடுநிலையானவர்கள் என்று தெளிவாக வலியுறுத்துகிறது" என்று குறிப்பிடுகிறது.
கலாசார மையங்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் உட்பட பலாட்டா
அகதி முகாம் முழுவதிலுமுள்ள சிவிலியன் பகுதியில் இஸ்ரேலிய துருப்புக்கள் அடிக்கடி தற்காலிக அடிப்படையில் முகாம்களை
உருவாக்கி வருகிறார்கள். நாற்பத்துமூன்று வீடுகள் சேதப்படுத்தப்பட்டதுடன் ஒரு வீடு இஸ்ரேலிய புல்டோசர்களால்
அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைகளுக்கான அமைப்பு
(UNRWA)
இஸ்ரேலியர்களின் நடவடிக்கையால் தாங்கள் நடத்தும் இரு பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தங்களது வேலை
தடுக்கப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்தது.
இஸ்ரேலியப்படை கட்டடத்திலிருந்து வெளியேறமுடியாமல் ஊழியர்களையும்
நோயாளிகளையும் தடுத்ததாகவும் சுகாதார மையத்தை முற்றுகையிட்டதாகவும்
UNRWA அதிகாரிகள்
குறிப்பிட்டுள்ளனர்
இஸ்ரேலிய இராணுவம் மேற்குக்கரையிலுள்ள இதர நகரங்கள் மற்றும் அகதிகள் முகாம்கள்
மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜெனின், குவால்கில்யா, பெத்லஹேம், துல்க்கார்ம், ஹெப்ரான் மற்றும் ரமல்லாவில்
போராளிகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசாவில், இஸ்ரேலிய படைகள் பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களை தொடக்கியுள்ளனர்.
பெப்ரவரி 19 அன்று கான் யுனிஸ்ஸிலுள்ள தெற்கு அகதி முகாமில் தொடுத்த ஒரு துப்பாக்கித்தாக்குதலில் பாலஸ்தீனியன்
மக்கள் எதிர்ப்பு குழுவின் (Palestinian Popular
Resistance Committee) இரண்டு உறுப்பினர்கள்
கொல்லப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப்பின், வடக்கு காசாவில் பீரங்கி குண்டு ஒன்று ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை
தாக்கியதில் இரண்டு வயதுக் குழந்தையொன்று கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகியது. பெப்ரவரி 24ம் தேதியன்று
காசா-இஸ்ரேல் எல்லையில் வெடிகுண்டுகளை புதைத்துக்கொண்டிருந்தபொழுது மற்றொரு இரண்டு பாலஸ்தீனிய போராளிகள்
சுட்டுக்கொல்லப்பட்டதாகச் கூறப்படுகிறது. மூத்த ஹமாஸ் தலைவரின் மகனான அப்தெல் ஃபத்தா துக்கான்
போராளிகளில் ஒருவர் மற்றும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.
மேற்கு கரையிலும் காசாவிலும் நடந்த கொலைகள் ஆவேச கண்டனங்களைத் தூண்டிவிட்டன.
சென்ற வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்திய டசின் கணக்கானவர்கள் வானத்தை நோக்கி சுட்டது உட்பட ஆயிரக்கணக்கான
பாலஸ்தீனியர்கள் பலாடாவில் நான்கு பேர் கொல்லப்பட்டதற்கு நாப்லஸ் வழியாக அணிவகுத்து ஒரு சவ ஊர்வலத்தை நடத்தினர்.
அல் அக்ஸா மார்ட்டைர்ஸ் ப்ரிகேட் போராளிகள் "பழிக்குப் பழி" என்று ஒலிபெருக்கி மூலம் முழக்கமிட்டனர். ரபியா
அபு லியெல் என்கிற மார்ட்டைர்ஸ் ப்ரிகேட்ஸ் தலைவர் பழிக்குப்பழி என சபதமிட்டார். "அவர்கள் நமக்கு என்ன செய்தார்களோ
அதையே நாம் அவர்களுக்குச் செய்வோம்" என்று அறிவித்தார். "அவர்கள் நம் தலைவரை கொன்றார்கள் அதனால்
நாம் அவர்கள் தலைவர்களைக் கொல்வோம்."
ஹமாஸினால் தலைமை தாங்கப்பட்டு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் காசாவில் நடத்தப்பட்டன.
ஹமாஸ் தலைவரும் பிரதம மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான இஸ்மாயில் ஹனியே "நமது மக்களுக்கெதிரான
ஆக்கிரமிப்பு கட்டளையைக்" கண்டனம் செய்து இஸ்ரேலைக் கண்டிக்குமாறு சர்வதேச சமுதாயங்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளார். பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மத் அப்பாஸ் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் பெரும்பாலான பாலஸ்தீனிய
போராளிக்குழுக்கள் கடைபிடித்துவந்த ஒரு வருடமாக நீடித்துவந்த ''அமைதிக் காலத்தை'' அச்சுறுத்துவதாக உள்ளது
என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. "இன்று நாம்
நஹீப்லஸ்ஸை தாக்கியிருக்கிறோம் சென்ற வாரம், காசாவைத் தாக்கினோம், அதற்கு முன் ஜெனின். இதேபோன்று
ஒவ்வொரு இடத்திலும் செய்வோம் நம்மிடம் இருக்கும் எல்லா படைபலத்தை கொண்டும், சமரசத்திற்கிடமில்லாமல்,"
என்று தற்காலிக பிரதம மந்திரி எஹுட் ஓல்மெர்ட் பிப்ரவரி 24ம் தேதி அறிவித்ததாக
AFP குறிப்பிடுகிறது.
ஆளும் கதிமா கட்சியின் மூத்த தலைவரும், சின் பெட் உள்நாட்டு பாதுகாப்பு சேவையின்
தலைவருமான அவி டிச்டெர் ஹமாஸ் தலைவரைக் படுகொலைசெய்ஸ்தாக அச்சுறுத்தினார். "பிரதம மந்திரியாக அவர்
இருப்பதாலேயே எதிர்ப்பற்றத்தன்மை இஸ்மாயில் ஹனியெக்கு இருப்பதாக நான் கருதவில்லை" என்று அவர்
Yediot Aharonot
பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார். "அங்கு ஓரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றால், இஸ்ரேல் ஒரு படுகொலை
மூலம் பதிலடி கொடுக்க முடிவு செய்தால் ஹனியெ அதற்கு நியாயமான இலக்காக இருப்பார், ஏனென்றால், தலைவரின்
சம்மதமின்றி ஹமாஸ்களால் தாக்குதல் முன்னெடுக்க முடியாது..... ஹனியெ ஏதாவதொரு இராணுவ சோதனைச்சாவடிக்கு
திரும்பி வந்தால், அவர் கைது செய்யப்படுவார், விசாரணை செய்யப்படுவார் பயங்கரவாத தாக்குதல்களில்
ஈடுபட்டதற்காக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நம்புகிறேன்."
இஸ்ரேல் அரசாங்க அதிகாரிகள் இது போன்ற வெளிப்படையாக ஆத்திரமூட்டுகின்ற
பிரகடனங்களை செய்வதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது ஏனென்றால், அவர்களுக்கு புஷ் அரசாங்கத்தின் ஆதரவு
இருக்கிறது. இஸ்ரேலின் சமீபத்திய இராணுவ தாக்குதலின்போது வாஷிங்டன் மெளனமாக இருந்திருக்கிறது. அந்த அரசு
துறை அதிகாரிகள் வழக்கமாக விடுக்கும் "கட்டுப்பாடு வேண்டும்" என்கிற வேண்டுகோளைக்கூட இந்த முறை
விடுக்கவில்லை. புஷ் அரசாங்கத்தின் நிலை கடந்தகாலத்தில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசாங்கம்
எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவு அளித்து வந்த நிலையை ஒத்தே இருக்கிறது, அதுவும் ஹமாஸின் தேர்தல்
வெற்றிக்குப்பின். பாலஸ்தீனிய வரி மற்றும் சுங்க வருவாயில் அவற்றின் பறிமுதல் உட்பட வரப்போகிற
ஹமாஸ்-தலைமையிலான பாலஸ்தீனிய ஆணையத்திற்கு எதிராக இஸ்ரேலின் சமரசமில்லாத நிலைப்பாட்டிற்கு வாஷிங்டன்
ஒப்புதல் அளித்துள்ளது. |