World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Hundreds of Iraqi academics and professionals assassinated by death squads ஈராக்கிய கல்வியாளர்களும் நிபுணர்களும் கொலையாளிகளால் நூற்றுக்கணக்கில் கொலை By Sandy English ஐரோப்பாவின் அமைதிக் குழுவான ஈராக் மீதான பிரஸ்ஸெல்ஸ் நடுவர் மன்றம் (BRussells [sic]), விசாரணையின்றி நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளை கண்காணிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேஷ அமைப்புக்கு சமர்ப்பித்த மனுவில், 2003ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த நாள் முதல் நூற்றுக்கணக்கான ஈராக்கிய கல்வியாளர்களும் நிபுணர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மனுவானது நோபெல் பரிசு பெற்ற ஹரோல்ட் பின்டர், ஜே. எம். கோட்ஜீ, ஜோஸ் ஸரமாகோ, டேரியோ ஃஓ இவர்களாலும், நோம் சோம்ஸ்கி, ஹோவார்ட் ஜின், கார்னெல் வெஸ்ட், டோன் பென் இவர்களாலும் கையொப்பமிடப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலிருந்து, ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைக்கட்சி உறுப்பினர் கரோலின் லுகாஸ் இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை; ஊகமதிப்பீடுகள் 300ல் ஆரம்பித்து 1000 த்தை தாண்டுகினறன. ஈராக்கிய நாவலாசிரியர் ஹெய்பா ஜங்கானா, பாக்தாத் பல்கலைக்கழகங்கள் மட்டுமே 80 பணியாளர்களை இழந்துவிட்டது என்று கார்டியன் பத்திரிகையில் சென்ற மாதம் எழுதியுள்ளார். இந்த எண்ணிக்கையில் கொலைமுயற்சியில் தப்பித்தவர்கள் அடங்கவில்லை. ஈராக்கின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு, இயற்பியல், இதழியல், அராபிய இலக்கியம், மற்றும் அறிவியல்களின் நிபுணர்களும் அடங்குவர். அதிக அளவில் மருத்துவர்களும் இலக்காக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இலக்கானவர்களில் ஷியாக்கள், சுன்னிகள், கிறிஸ்துவர்கள், குர்துகள், டர்கோமன்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பலவிதமான அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தனர். அவர்கள் வேலையில் அல்லது வீட்டில், அல்லது அவர்களது மோட்டார் வண்டியில் இருந்த சமயம் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்; அல்லது காணாமற்போய் விட்டனர். பாக்தாத் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த அப்துல் ரஜாக் அல்-நாஸ், ஜனவரி 28ம் தேதியன்று, இரண்டு வண்டிகள் அவரை வழிமறித்து தடுத்தபோது, துப்பாக்கி ஏந்தியவர்களல் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும், அவர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அல்-ஜசீரா, அல்-அராபிய தொலைக்காட்சிகளிலும் குரல் கொடுத்தவர் என்றும் ஜர்ங்கானா எழுதுகிறார். நன்கு அறியப்பட்ட கல்வியாளரான, டாக்டர் அப்துல்லாடீப் அல்-மயாஹ் 2004ல், ஈராக்கிய ஆளும் சபையை, அல்-ஜசீரா தொலைக்காட்சியில் விமரிசனம் செய்த 12 மணி நேரத்தில் கொல்லப்பட்டார். ஒரு வருடம் முன்பே இன்டிபென்டென்ட் இல் ராபர்ட் ஃபிஸ்க் வளர்ந்துவரும் போக்கை கவனித்து எழுதினார். "சென்ற மாதம் மோசூலில் உள்ள சட்டக்கல்லூயின் தலைவரை கொன்றமை மிகப் பயங்கரமானதாகும். அவர்கள் அவரைக் கொல்வதற்காக வந்தபோது, அவர் தன் கணவருடன் படுக்கையில் இருந்ததாக பாக்தாத்தில் உடன் வேலை செய்யும் ஒருவர் கூறினார். 'அவர்கள் இருவரையும், சிறிதும் சஞ்சலமில்லாமல் அவர்கள் படுக்கையிலேயே சுட்டுக் கொன்றார்கள். பின்னர், அவர்கள் இருவரது தலையையும் கத்தியினால் வெட்டிவிட்டார்கள்.' " பிரஸ்ஸெல்ஸ் நடுவர்மன்றத்தின் வலைத் தளமான www.brusselstribunal.org இந்த நிலைமை பற்றி ஈராக்கிலிருந்து வந்த எண்ணற்ற கடிதங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று, 2005ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி, பாக்தாத்தில் உள்ள 'நுண்கலைகளுக்கான ஸ்தாபன' த்தில் பேராசிரியராக இருந்த நவ்பால் அகமத் கொலைசெய்யப்பட்ட விதத்தை விவரிக்கிறது. "முகம் தெரியாத, ஆயுதம் தாங்கிய மனிதர்கள் நுண்கலை ஸ்தாபனத்தின் பேராசிரியர் ஒருவரை, திங்கட்கிழமையன்று காலை பாக்தாத்தில் உள்ள டீப்சி மாவட்டத்தில் கொலைசெய்திருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சக வட்டாரம், 'எட்டாம் தேதியன்று ஆயுதம் தாங்கிய மனிதர்கள், பேராசிரியர் நாபல் அகமது அவரது அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது அவரை நோக்கித் தொடர்ச்சியாகச் சுட்டார்கள்." மறைந்த டாக்டர் விஸ்ஸாம் அல்-ஹஷிம்யின் புதல்வியும், புவியியல் நிபுணரும், உலகளவில் புகழ்பெற்ற கார்பனேட் பற்றிய அறிவியல் நிபுணருமான, தாரா அல்-ஹஷிமி சொல்கிறார்: "எனது தகப்பனார், (டாக்டர் அல்-ஹஷீமி) இறந்துவிட்டார். 2005ம் வருடம் ஆகஸ்ட் 24ம் தேதி காலை அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார்; அவருடைய சமீபத்திய தாள்கள் திருடப்பட்டுவிட்டன. ஈட்டுத்தொகை கொடுக்கப்பட்டது. ஆனாலும், துரதிருஷ்டவசமாக, தலையில் இருமுறை சுடப்பட்டு இறந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய அடையாள அட்டை அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதால், பாக்தாத்தில் ஒரு மருத்துவமனையில் இருந்த அவருடைய உடலைக் கண்டுபிடிக்க எங்களுக்கு இரண்டு வாரங்கள் ஆயின." கொலையாளிகள், ஈராக்கில் வேலைபார்க்கும் உத்தியோகஸ்தர்களை வற்புறுத்தி, அதிக அளவில் நாட்டை விட்டு வெளியேறச் செய்தார்கள். கொலை மிரட்டல்கள், துப்பாக்கி குண்டு தாங்கிவரும் கடிதங்கள் இவை சகஜம். வாஷிங்டன் போஸ்ட், தற்பொழுது நாடுகடத்தப்பட்டவராக ஜோர்டனில் உள்ள அம்மானில் இருக்கும், முதன்மையான ஒரு ஈராக்கிய இருதய சிகிச்சை நிபுணரான டாக்டர் ஓமர் குபாஸி வழக்கு பற்றி ஜனவரியில் எழுதியது: "ஈராக்கில் தங்களது சொந்த ஊரில் வேலைபார்ப்பதை நிறுத்தாவிட்டால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று கிறுக்கலான கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதங்களை குபாஸியும் மற்றும் ஒன்பது மருத்துவர்களும் பெற்ற பின்னர், குபாஸி பாக்தாத்தை விட்டுப் போனார். இதற்கு முன்பே, அவரும் அவரது சக பணியாளர்களும் பயமுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள், ஆனால் கடைசியாக வந்தது, கெட்ட அறிகுறியை தாங்கிவந்த நிர்பந்தமாக இருந்தது." இந்தக் கொலைகள் எதிலும் இதுவரை ஒருவர் கூட குற்றம் சாட்டப்படவில்லை, கைது கூடச் செய்யப்படவில்லை. எந்தக் குழுவும் இதற்கு பொறுப்பேற்கவுமில்லை. 1970, 80 களில் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் வேலை பார்த்து வந்த ஈராக் விஞ்ஞானிகளை கொன்ற இஸ்ரேல் மொசாத், ஈராக்கிய கல்வியாளர்களை அடித்துத் துன்புறுத்திய அமெரிக்க இராணுவம், வடக்கிலுள்ள குர்திய பெஷ்மெர்கா உட்பட பலவித அமைப்புகள் ஈராக்கியர்களால் சந்தேகிக்கப்படுகின்றன. நிச்சயமாக பலவித குழுக்கள் செயல்பட்டு வருகின்றபோதும், சாட்சியங்கள், அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் கொலைக்கும்பல்களுக்கு இவற்றில் முக்கியமான பங்கு இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன - குறிப்பாக, உள்துறை அமைச்சகத்தில், பதர் பிரிகேட் போன்ற ஷியா வகுப்புவாதிகள் படைகளுடன் கூட்டு வைத்து. சமீபத்திய, சுன்னிகளுக்கு எதிரான படுகொலைகளுக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் அதே குழுக்கள், அவர்களது கறுப்பு நிற சீருடை காரணமாக, "கருப்பு காகங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முஸ்லிம் கல்விமான்களுக்கான ஈராக் சங்கத்தின் ஒரு பிரதிநிதியான முதஹானா ஹரெத் அல்-தரி, எகிப்தின் இந்த வார அல்-அஹ்ரம் மின் இதழில் "கறுப்பில் மனிதர்கள் என்றும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும் அவர்களை அடையாளம் காட்ட எவரும் துணிவதில்லை. சில அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களான இவை உள்துறை அமைச்சகத்தில் ஊடுருவி அதனுடன் நேரடியாகச் செயல்படுகின்றன," என்று கூறுகிறார். உடனடிக் காரணத்தை கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமல்ல. இந்த அறிவாளிகளில் முக்கால்வாசிப்பேர் அவரகளது நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பதை எதிர்த்தார்கள். ஹைபா ஜங்கானா எழுதுவது போல்: "அநேகம் பேர் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். ஈராக்கியர்களில் நிறைய பேர் நம்புவது போல், இந்தக் கொலைகள் அரசியல் பின்னணி கொண்டவை, நாட்டில் சமூகத்தின் ஆதரவை பெறுவதில் ஆக்கிரமிப்பாளர்களின் தோல்வியுடன் சம்பந்தப்பட்டது என்று நம்புகிறேன்." இது, பண்பாட்டை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும், இது வாஷிங்டனிலிருந்து உற்பத்தியாகி வருகிறது. ஈராக்கில் கொலைக்குழுக்களின் தோற்றம், 2004 ஜூன் மாதம் ஜோன் நெக்ரோபோன்ட் ஈராக்கிற்கு தூதுவராக நியமிக்கப்பட்ட பிறகு அதிகமாகிவிட்டது. 1980களில் மத்திய அமெரிக்காவில், கிளர்ச்சிக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்ட சமயம் நெக்ரோபோன்ட் ஹொன்டூராஸ்ஸுக்கு தூதுவராக இருந்தார். இவர், சால்வடோர் உரிமம் எனப்படும், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகளை செயல்படுத்துவதில் அனுபவம் மிக்கவர். அதேபோல், லத்தீன் அமெரிக்காவில் "கண்ணியமற்ற போர்"களில் அனுபவம் மிக்கவர்களான - 20 வருடங்களுக்கு முன்பு எல் சால்வடோரில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையின் உச்சகட்ட படுகொலைகளின்போது மேற்பார்வையாளராக இருந்த ஜேம்ஸ் ஸ்டீல், கொலம்பியா, பெரு போன்ற இடங்களில் கொரில்லாக்களுக்கு எதிராகவும் போதை மருந்துகளுக்கு எதிராகவும் நடைபெற்ற அமெரிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஸ்டீவ் காஸ்டீல்ஸ் - இருவரும் ஈராக்கின் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட அமர்த்தப்பட்டனர். ஆனால் இதன் குறிக்கோள், பொம்மை ஆட்சியை குறை கூறுபவர்களை அமைதிப்படுத்துவது மட்டுமல்ல. இந்த கொலைபாதக கொள்கை, எளிதாக நிர்வகிக்கக்கூடிய ஒரு மக்கள் கூட்டத்தை தோற்றுவிப்பதற்கான ஒரு முயற்சியுமாகும். ஈராக்கியர்களை உடலளவில் பலஹீனப்படுத்தக்கூடிய முயற்சியும் இதில் அடங்கும். ஒரு காலத்தில் மிகச் சிறந்த மருத்துவ வசதிகளுக்கு பெயர்பெற்று இருந்த, ஆனால் தற்பொழுது மின் தடைகள், தொற்றுநோய்கள் மற்றும் படுகாயங்கள் ஏற்படுத்தும் மனநோய்கள் ஆகியவற்றை எதிர்கொண்டிருக்கும் நாட்டில் மருத்துவர்களின் கொலைகள், மற்றும் வெளியேற்றம் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கலை-வரலாற்று ஆசிரியர்கள், புவியியல் நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவர்களின் கொலைகள் ஈராக்கின் அறிவியல் ஆரோக்கியத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதப்படவேண்டும். கல்வியாளர்களின் இழப்பு, உயர் கல்வியின் தரத்தை குறைப்பதாக உள்ளது என்று ஐ. நா.வின் IRINnews.org கூறுகிறது. பாக்தாத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மாணவர் அப்பாஸ் முகமது கூறுகிறார்: "மிகச்சிறந்த பேராசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் நாம் சிறந்த நிபுணர்களை இழந்துவிடுகிறோம். உண்மையான இழப்பாளர்கள் அடுத்த தலைமுறை மாணவர்கள் மட்டுமல்ல, ஈராக்கின் எதிர்காலமும்கூட." 1990 லிருந்து 2003க்குள், நுண்ணறிவுள்ளோரில் ஏறத்தாழ 30 சதவிகிதம் பொருளாதாரக் காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறியபோது நாட்டில் இவர்கள் விகிதம் ஏற்கனவே குறைந்துவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் ஈராக்கிய ஆதரவாளர்களுக்கும் ஈராக்கை மேலும் அடிமைப்படுத்தும் விதமாக, புஷ் ஆட்சியினால் தூண்டப்பட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்டு, அதனுடைய கைப்பாவைகளால் ஈராக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் தற்போதைய குறிக்கோளானது, ஈராக் மக்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை அழிப்பதேயாகும். ஐ. நா. வின் சர்வதேச தலைமை ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, "ஈராக்கிலுள்ள உயர் கல்வி ஸ்தாபனங்களில் 84 சதவிகிதம் எரிக்கப்பட்டுவிட்டன, கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன அல்லது, அழிக்கப்பட்டுவிட்டன. 2003 ஏப்ரல் மாதத்தில் ஈராக் அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டுகள், தொல்லியல் இடங்களில் நடந்த இடைஞ்சலில்லாத கொள்ளைகள், நூலகங்கள் எரிப்பு இவைகள் பண்பாடு, வரலாறு, விஞ்ஞானம் இவற்றில் ஈராக் பெறுகின்ற வழியை மிகவும் கஷ்டமானதாக ஆக்கிவிட்டது. படுகொலைகளும் ஈராக்கிய நிபுணர்களின் வெளியேற்றமும் இந்தச் செய்முறையின் மிகப்பெரிய குற்றங்களாகும். |