World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Ilan Halimi tortured and murdered for money

பிரான்ஸ்: பணத்திற்காக இலான் ஹலிமி சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டார்

By Antoine Lerougetel
6 March 2006

Back to screen version

இலான் ஹலிமி கடத்தப்பட்டு, அவர் சித்திரவதைக்குட்பட்டு, மூன்று வாரங்கள் காவலுக்கு பின் மருத்துவ உதவி பெற வந்த நிலையில் மரணம் அடைந்தது ஆகிய விவரங்கள் பிரான்ஸ் முழுவதும் ஆழ்ந்த அதிர்ச்சியையும், கடும்வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளன. Sainte-Genevieve-des-bois என்னும் தெற்கு பாரிஸ் நிலையத்தின் அருகே கொலையுண்டு நிர்வாணமாக கிடந்த நிலையில் பெப்ருவரி 13 அன்று கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய உடலில், தொண்டைப்பகுதியில் இரண்டு கத்திக் குத்துக் காயங்களும், 80 சதவிகிதத்திற்கும் மேலான உடற்பகுதி எரிந்துபோன நிலையிலும், 23 வயது யூதர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்படுகையில் இறந்து போனார்.

பெப்ருவரி 26ம் தேதி, கிட்டத்தட்ட 80,000 மக்கள் பாரிஸ் தெருக்களில் அணிவகுப்பு நடத்தி இக்குற்றம் பற்றிய தங்கள் பெரும் பீதியைத் தெரிவித்ததுடன் தங்கள் செமிட்டிய-எதிர்ப்பு, இனவெறிக்கு எதிரான கருத்தையும் புலப்படுத்தினர். முஸ்லிம் அமைப்புக்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்து மத, இனக் குழுக்களின் சார்பாளர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரான்சின் மற்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இருந்தன.

ஜனவரி 22ம் தேதி இரவன்று அவரை கடத்திச் சென்றவர்கள் காத்துக்கிடந்த இடத்திற்கு இலான் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். பாரிசில் 11 வது வட்டாரத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அவரது கடையில் இவருடன் காதல் புரிவதாக நடித்திருந்த ஒரு ஈர்க்கக்கூடிய பெண் தூண்டில் இரையாக வைக்கப்பட்டார். அவ்வட்டாரத்தில் மற்றொரு தொலைபேசிக் கடையில் அவள் வேலை செய்திருந்தாள்.

கடத்தல் குழுவின் தலைர் என்று கூறப்படுபவர் தெற்கு பாரிஸ் புறநகர்ப் பகுதியான Bagneux ல் உள்ள யூசுப் போஃபனா (26) ஆவார்; இவர் தன்னை ஆங்கிலத்தில் "காட்டுமிராண்டிகளின் மூளை" (Brain of Barbarians) என்று அழைத்துக் கொள்ளுகிறார். பிரான்சிற்கு அழைத்துச் செல்லப்படும் வரையில் முன்னாள் பிரெஞ்சு காலனியான ஐவரி கோஸ்ட்டின் போலீசால், அவருடைய பெற்றோர்கள் பிறந்த இடத்தில், அவர் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

2004 ம் ஆண்டில் இருந்து, ஒருவேளை அதற்கும் முன்னராகக்கூட இருக்கலாம், 20 பேருக்கும் மேலான ஒரு குற்றக்குழு இளவயது விற்பனையாளர்களை கடத்தி அவர்களிடம் இருந்து அச்சுறுத்திப் பணம் பறிப்பதற்கு வன்முறையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது; இவற்றில் அக்குழு வெற்றியடையவில்லை. கடத்தப்பட்ட மக்கள் சிலர் தெற்கு பாரிஸ் புறநகரில் வசிப்பவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்; இவர்களுள் பிராங்கோ-ஜேர்மனிய Arte தொலைக்காட்சி நிலைய தலைவரான Jerome Clement -ம் அடங்குவார்.

இந்தக் கும்பல் ஏழு மருத்துவர்களை பணம் பறிப்பதற்கு இலக்கு கொண்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது; இலானுக்கு முன்னால் அவர்களுள் ஆறு பேரைக் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கும்பலினால் இலக்கு கொள்ளப்பட்டவர்களுள் கால் பகுதியினர் யூதர்கள் ஆவர். இக்கும்பல் ஒரு நேரத்தில் பாலஸ்தீனியர்கள் என்று மறைமுகமாக கூறியதாவும், மற்றொரு நேரத்தில் கோர்சிக்க பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்டதாகவும், வெட்டித்தனமான அடாவடிக் கும்பல்காரர்கள் என்று தெரிவித்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஒரு பிரெஞ்சு குடிமகனான ஃபோபனா, ஐவரி கோஸ்ட்டின் தலைநகரமான Abidjan -TM பெப்ருவரி 21 அன்று கைது செய்யப்பட்டார். ஃபோபனா ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும், இதுகாறும் பிரெஞ்சு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 21 பேர் ஃபோபனாவுடன் Plate Pierre ஊராட்சிப் பிரிவில் அவருடன் இணைந்து வளர்ந்தவர்களாகவும், பலவித இன, மத மாறுபட்ட பின்னணியை சேர்ந்தவர்களாவும் உள்ளனர். பாதிக்கப்படப்போகின்றவர்களை மயக்கி சிக்கவைக்கும் முயற்சியில் நான்கு பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதைத்தவிர 12 பையன்களும் மூன்று வாரங்கள் இலானை ஒரு அடுக்கு குடியிருப்பு நிலவறைப்பகுதியில் காப்பதிலும் ஈடுபட்டிருந்தனர், கட்டிடத்தின் காவலாளியால் அந்த நிலைவறைக்கான சாவிகள் அவர்களிடம் கொடுக்கப்படிருந்தன என்று கூறப்படுகிறது.

Plate-Pierre குடியிருப்பு பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதியாகும்; இங்கு Bagneux புறநகரில் தொழிலாள வர்க்கப் பிரிவினர் வசிக்கும் தனியார் அடுக்குவீடுகள் உள்ளன; மற்ற தொழிலாளர் புறநகர்ப்பகுதி இல்லங்களோடு ஒப்பிடும்போது இங்கு வேலையின்மை விகிதம் சற்றே குறைந்து 12.5 சதவீதமாக உள்ளது. தனியார் அடுக்கு வீடுகளில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறினாலும், நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகத்தான் தோற்றம் அளிக்கிறது. இலையுதிர் காலத்தில் நிகழ்ந்த கலவரங்களின்போது இங்கு அதிக கார்கள் எரிக்கப்படவில்லை.

ஆனால், அங்கு உள்ள சமூகப் பணியாளர்கள் 15-19 வயது இளைஞர் குழுக்களுடன் தொடர்பை இழந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்; அப்பிரிவில்தான் பெரும்பாலான சந்தேகத்திற்குட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உள்ளனர், என்ன நடக்கிறது என்று பெற்றோர்கள் அறியாமல் திகைக்கின்றனர்; இலானுக்கு நடந்தது பற்றி பீதியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ஃபோபனாவும் அவருடைய மூன்று அல்லது நான்கு உதவியாளர்களும் மிகக் கடினமான மையக் குழு போல் இருந்து மற்றவர்களை ஈர்த்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை; ஒரே ஒரு சந்தேகத்திற்குரியவர்தான் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்; அவருடைய பெயர் Christophe Martin-Valet (22): இவர் கும்பலின் காரோட்டி என்று கருதப்படுகிறார். பாதிக்கக்கூடியவர்களை தேடும் வகையில் இவர் பெண்களை பல மையங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இளம் பொன்னிற தோற்ற ஈரான் நாட்டு பின்னணியை கொண்ட பெண் ஒருத்தி ஜனவரி 16ம் தேதி தானே போலீசில் சரணடைந்தாள்; இலானை பொறியில் இவள்தான் சிக்க வைத்தாள் என்று ஊடகங்கள் பரந்த அளவில் கூறியுள்ளன. அவள் கொடுத்துள்ள தகவல், மற்றும் இலானுக்கு காவலாக இருந்த போர்த்துக்கீசிய பின்னணியில் உள்ள ஒரு பையன் நிலைமையினால் வெறுப்படைந்து போலீசுக்கு கொடுத்த தகவல் ஆகியவை போலீசாரை உடனடியாக 13 பேரை சந்தேகத்தின்கீழ் கைதுசெய்வதற்கு உதவியது.

இக்கும்பலுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் இடையே உறவுகள் ஏதும் இல்லை என்று போலீஸ் கூறிவிட்டது. பெப்ருவரி 16ம் தேதி, பாரிஸ் அரசாங்க வக்கீல் அலுவலகம் செய்தி ஊடகத்திடம் செமிடிய எதிர்ப்பு உந்துதலை ஒட்டிக் கடத்தல் நடந்துள்ளதாக தான் நம்பவில்லை என்று கூறிவிட்டது. கும்பலின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் யூதர்கள் அல்லர் என்றும், செமிட்டிய எதிர்ப்பு அவமரியாதைகளோ, தகவல்களோ இலானுடைய குடும்பத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும் அவ்வலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்விதமான செமிட்டிய எதிர்ப்பு உணர்வும் தன்னிடம் இல்லை என்று ஃபோபனா கூறியுள்ளதுடன் இலானைக் கடத்தியது முற்றிலும் "நிதிய இலக்குகளைத்தான்" கொண்டிருந்தன என்றும் கூறியுள்ளான். சந்தேகத்திற்குரியவர்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஒருவரின் வக்கீலான Teddy Cohen தன்னுடைய கட்சிக்காரர் செமிட்டிய எதிர்ப்பின் தாக்கத்தால் நடந்து கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார்.

இலானால் பொறுத்துக் கொள்ளப்பட்ட கொடூரத்தின் முழுமையான குற்றத் தன்மை மீதான ஆரம்ப வலியுறுத்தல் ஒரு வினாவை எழுப்பியுள்ளது: ஒரு பிரெஞ்சு சமூகம் எவ்வாறு இத்தகைய மிருகத்தனமான நடத்தையை தோற்றுவித்திருக்க முடிந்தது? பிரெஞ்சு சமூகத்தின், பெரும்பாலும் நகர மையங்களை சுற்றி ஒதுக்குப்புறமாக செறிவாய் அமைந்துள்ள இல்லங்களின் மிக வறிய பிரிவுகளை தாக்கி வீழ்த்தியுள்ள சமூக வீழ்ச்சியின் விளைவுதான் இது என்பதில் ஐயமில்லை.

போருக்குப் பின் ஏற்பட்டிருந்த பொருளாதார செழிப்பின் முடிவிற்குப் பின்னர் பல தசாப்தங்கள் புறக்கணிப்பு மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் மற்றும் பிரதமர் Pierre Maurois இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் 1982-83ல் சுமத்திய கெடுபிடிக் கொள்கைகள் திணிக்கப்பட்டமை தொடர்ந்திருந்த அரசாங்கங்களினாலும் பின்பற்றப்பட்டன, இவை மிக உயர்ந்த அளவில் நீண்ட காலம் நிலைத்த வேலையின்மைக்கு வழிவகுத்தன; அதுவும் குறிப்பாக இளைஞர்களிடையே ஏற்பட்டது; அது பெருந்திகைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

1981ல் இருந்து சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களின் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி, மற்றும் தொழிற்சங்கங்கள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) ஆகியவை ஒரு மாற்றீடு கொடுப்பதில் அடைந்த தோல்வி, சமூகத்தின் இந்த பிரிவுகளை நடைமுறையில் கைவிட்டுவிட்டன என்பதைத்தான் குறிப்பிடுகிறது. இந்த அமைப்புக்கள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொழிலாள வர்க்கம் வாழும் புறநகர்ப்பகுதிகளில் குடியேறிய இளைஞர்கள் ஏற்படுத்தியிருந்த கலகங்கள் போன்ற, எப்பொழுதும் வெடிக்க கூடிய சமூக வெடிப்புக்களை கட்டுப்படுத்தும், முற்றிலும் தற்காலிக நிவாரணங்கள் மற்றும் சமாதான காப்பவர்களை வழங்குபவர்களாகத்தான் செயல்பட்டன.

தொழிலாள வர்க்கம் மற்றும் குடியேறிய இளைஞர்களை விரோதித்துக் கொண்டது உள்ளூராட்சி மற்றும் தேசிய அரசாங்கங்களில் அடக்குமுறை கொள்கைகளினால் தீவிரமாயிற்று; அக்கொள்கைகள் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. இனவழியிலான பாரபட்சம் மற்றும் சிந்தனைப் போக்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதலை "பயங்கரவாதத்தின்மீதான தாக்குதல்" என்ற பெயரில் நடத்தியது ஆகியவையும் தம் பங்கைச் செய்துள்ளன.

பிரான்சில் இது பெண்கள் முஸ்லிம் தலைஅங்கியை பள்ளிகளில் அணிந்து கொள்ளுவதற்கு எதிரான வடிவமைப்பை பெற்றது; நாட்டின் உள்துறை மந்திரி நிகோலா சார்க்கோசி முஸ்லிம்-எதிர்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வை தூண்டிவிடுவதற்கு இதைப் பயன்படுத்தினார். பெரும் ஆயுதமேந்திய போலீஸ் காவலுடன் குடியிருப்புக்களுக்கு சென்றிருந்த அவர் அப்பகுதிகளை களைந்து, அங்கிருக்கும் மனித "இழிபொருட்களை" அகற்றவும், "ஆறாத காயங்கள்" அகற்றப்படுவதற்கும் பாடுபட இருப்பதாகக் கூறினார்.

அதே நேரத்தில், குடியேற்றத்தை தடடுக்கும் வகையில் தாக்குதல் முறையிலான சட்டமியற்றும் தன்மையும் பெருகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலை பல சமூகங்களிலும் ஒரு கும்பல் பண்பாடு முறை வளர்வதற்கு வழிவகுத்துவிட்டது; இவற்றில் வேலையற்ற, மிகக் குறைவூதிய இளைஞர்கள் தலைமறைவு பொருளாதாரத்தில் பங்கு கொண்டு சிறு குற்றங்களிலும் ஈடுபடும் நிலைவந்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் பிற்போக்குத் தனம் நிறைந்த வகுப்புவாத கோட்பாடுகளுக்கும் ஈர்க்கப்படுகின்றனர்; இதில் செமிடிய எதிர்ப்பும் அடங்கும். Sainte-Genevieve-des-Bois ல் உள்ள உயர்நிலைப்பள்ளி செமிடிய எதிர்ப்புச் சம்பவங்கள் பலவற்றை தகவலாக கொடுத்துள்ளது.

சமூக வெடிப்பின் தொற்றுநோய்போல் பரவும் தன்மை, யூதரல்லாத ஒரு 54 வயது மதிக்கத் தகுந்த மனிதர் ஒருவர் கிழக்கு பிரான்சில் கடத்தப்பட்டு, பெப்ருவரி 25ம் தேதியன்று ஒரு காட்டுப்பகுதியில் நிர்வாணமாக இறந்து கொண்டிருக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களினால் உறுதிபடுத்துப்பட்டுள்ளது. அவரை கடத்தியவர்கள் அவரை அவருடைய வங்கி அட்டையின் இரகசியக் குறிப்பைக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட ஆயிரம் சில்லரை யூரோக்களுடன் திருப்தியடையாமல், இக்கும்பல், பொறுப்பற்ற உள்ளூர் இளைஞர் குழு என அறியப்படுவது, இம்மனிதரை மிகக் கொடூரமான முறையில் இரண்டு நாட்கள் அடித்து இன்னும் பணத்திற்காக துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

கடந்த ஆண்டு இளைஞர் கலகத்திற்கு அரசாங்கம் கொடுத்த விடையிறுப்பு மிக அதிகமான முறையில் அரசாங்கத்தின் அடக்கு முறை அதிகாரங்களை பெருக்கியதுதான்; குறிப்பாக அவை குடியேறியவர்கள்மீது தாக்கப் பயன்படுத்தப்பட்டது; இதுதவிர சமவாய்ப்புச் சட்டம் என்று இப்பொழுது பாராளுமன்றத்தில் வரவிருக்கும் சட்டம் கட்டாயமாகக் கற்க வேண்டிய வயது வரம்பை 14ல் இருந்து தோல்வியுறும் மாணவர்களுக்குக் குறைத்து, பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோர்களை குற்றவாளியாக்கி, பொதுவாக தொழிலாள வர்க்கத்தின் மீதான பொதுத் தாக்குதலுக்கு தலைமைதாங்கும் தன்மையை கொண்டுள்ளது; இது தவிர முதல் வேலை ஒப்பந்தம் (First Job Contract CPE) எனப்படுவது வேலைகொடுக்கும் முதலாளிகள் இளைய தொழிலாளர்களை எந்தக் காரணமும் காட்டாமல் முதல் இரண்டு ஆண்டுகள் வேலைக் காலத்தில் பணிநீக்கலாம் என்று உரிமை கொடுத்துள்ளது. இப்பொழுது CPE க்கு எதிராக ஒரு பெரிய இயக்கம் வளர்ந்து வருகிறது.

சார்க்கோசி மற்றும் கோலிச தலைமையிலான அரசாங்கத்தின் சமூகக் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் போலவே, சீரழிந்த, மனிதப் பண்பாட்டிற்கு கீழே தள்ளப்படும் அடுக்குகளை கொண்டுள்ள மக்கட் தொகுப்பைத்தான் தோற்றுவித்துள்ளது என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அபு கிறைப்பிலும் குவாண்டநாமோ பேயிலும் நிகழ்த்தும் சிந்திரவதைகளும், கைதிகளை கடத்திச்சென்று கொலை செய்தல் அல்லது உலகம் முழுவதிலும் சிந்திரவதை செய்தல் என்பது, அதுவும் பிரான்ஸ், மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களுடன் உடந்தையுடன் செய்தல் என்பது, அல் கொய்தாவின் கொடூரச் செயல்கள் விளைவிப்பதுபோலவே காட்டுமிராண்டித்தனமான விளைவைத்தான் கொடுக்கும். மக்களுடைய நம்பிக்கையிழப்பு, மக்களின் பொழுதுபோக்கு ஊடகங்களில் காட்டப்படும் மனித இனத்தின்மீதான வெறுப்பு மற்றும் மிருகத்தன்மை ஆகியவையும் இதில் பங்கை கொண்டுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved