World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Bush travels to South Asia in pursuit of key strategic "partnership" with India

இந்தியாவுடனான முக்கிய மூலோபாய "பங்காண்மையை" தொடர புஷ் தெற்கு ஆசியாவிற்கு பயணம்

By Keith Jones
28 February 2006

Back to screen version

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இந்த வாரம் இந்தியாவுடன் மூலோபாய மற்றும் "உலகந்தழுவிய" பங்காண்மையை உறுதிசெய்துகொள்ளும் நோக்கத்துடன் தெற்கு ஆசியாவிற்கு பயணம் செய்கிறார். அவருடைய ஆலோசகர்களுடைய கருத்தின்படி இந்தப் பயணம் அவருடைய முழு ஜனாதிபதிக் காலத்திலும் எடுத்துள்ள நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது என்று கொள்ளப்படுகிறது.

வனப்புரைகள் ஒருபுறம் இருக்க, புஷ் நிர்வாகத்திற்கு ஒன்றொடொன்று தொடர்புடைய இரண்டு இலக்குகள் உள்ளன.

முதலில், கடல்கடந்த தகவல்தொழில்நுட்ப சார்புடைய துறைகளிலும் வர்த்தக செயற்பாட்டு துறைகளிலும் இருக்கும் குறைவூதிய உழைப்பை சுரண்டுபவராக, விரிவாக்கம் காண்பதிலும், இந்தியாவிற்கு போக்குவரத்து, ஆற்றல் கட்டுமான தேவைகளை அளித்து அதை இன்னும் கூடுதலான வகையில் உலகப் பொருளாதார முறையுடன் இறுக்கமாக பிணைக்கவைக்கும் நோக்கங் கொண்டு பொதுத்துறை-தனியார் பங்காண்மையில் பங்கு பெறுபவராக, இந்தியாவின் வளர்ச்சியுற்றுவரும் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் இயங்குமுறை ஆகியவற்றை தயாரித்து அளிப்பவராக -இந்தியாவின் விரைந்து பெருகிவரும் பொருளாதாரத்தில் அமெரிக்கா முக்கிய மற்றும் எப்பொழுதும் அதிகரிக்கும் பங்கை ஆற்றும் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

இந்தியாவின் சில்லறை வணிகப் பிரிவை ஓரளவு எடுத்துக் கொள்ளுவதிலும் புஷ் நிர்வாகம் குறிப்பாக கவனம் கொண்டுள்ளது; இதில் மில்லியனின் பதின்மடங்கு மக்கள் சிறிய, ஒழுங்குபடுத்தப்படாத வணிகத்தில் போதுமான, முழு அளவு வேலைகள் இல்லாத காரணத்தால் இடம் பெற்றுள்ளனர்; Wal Mart போன்ற நிறவனங்கள் 60 சதவீத இந்தியர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இந்தியாவின் விவசாய பிரிவில் இன்னும் கூடுதலான நலன்களை பெற முற்பட்டுள்ளது; Monsanto போன்ற விவசாய வணிக பெருநிறுவனங்களுக்காகவும் இதில் அக்கறை கொண்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வியத்தகு அளவில் "தடையற்ற சந்தையின்" வெற்றிக் கதையாக இருப்பதை புஷ் ஆர்வத்துடன் சுட்டிக்காட்ட உள்ளார்; 1991க்கு பின்னர் இந்தியாவின் தேசியரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் தகர்க்கப்பட்டதுடன் சமூக சமத்துவமின்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையின் விரைந்த வளர்ச்சியால் பின்தொடரப்பட்டு வருகின்றது. "ஜனநாயக இந்தியாவில்" நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் நாளொன்றுக்கு $1 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் உயிர்தப்பிப் பிழைப்பதற்கு போராடியாகவேண்டும்; கல்வியும், சுகாதார நலனும் நடைமுறையில் தனியார்மயமாக்கப்பட்டு, மிக வறியவர்களில் வறியவர்கள்தாம் சிதைவுற்றிருக்கும் பொதுக் கல்வி, சுகாதார முறைகளை பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது மற்றும் புஷ் பயணத்தின் இன்னும் முக்கியமானதுமான இலக்கு, கூடுதலான இராணுவ, சிவிலிய, அணுசக்தி மற்றும் புவிசார் அரசியல் ஒத்துழைப்பின்மூலம் இந்தியாவை வாஷிங்டனின் உலக மேலாதிக்க உந்துதலுக்கு பயன்படுத்துவது ஆகும். சுருங்கக்கூறின், அமெரிக்கா "ஒரு எழுச்சி பெறும் இந்தியாவை" சீனாவிற்கு ஒரு பொருளாதார, இராணுவ, புவிசார் அரசியல் எதிர் எடையாக மாற்ற விரும்புகிறது.

கடந்த மார்ச் மாதம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அமெரிக்கா இந்தியா ஓர் "உலக சக்தியாக" ஆவதற்கு உதவ விரும்புகிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர், வாஷிங்டனும், புது டெல்லியும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் அர்த்தம் மிக நவீன அமெரிக்க இராணுவத் தளவாடங்கள் விற்பனை உட்பட கூடுதலான இராணுவ ஒத்துழைப்புக்கு வகை செய்தல், ஐ.நா அனுமதி இன்றி கூட்டாக வெளிநாடுகளில் தலையீடு செய்தல் போன்றவற்றிற்கு வழி அமைத்தலாகும்.

இந்திய மேற்தட்டின் உலக வல்லரசாக வேண்டும் என்ற வேட்கையை பயன்படுத்தும் வகையிலும், அதன் சூறையாடும் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு ஜனநாயக போர்வை கொடுக்கும் வகையிலும், புஷ் நிர்வாகம் முன்மொழிந்து, இந்தியாவின் ஐக்கிய முன்னணிக் கூட்டணி (UPA) அரசாங்கமும் அமெரிக்க - இந்திய உலகந்தழுவிய ஜனநாயக முன்முயற்சி என்பதை தோற்றுவிப்பதை ஏற்றன; இதன்படி இந்தியாவும் அமெரிக்காவும் ஆசியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் "ஜனநாயகத்தை" வளர்க்க ஒன்றாக செயல்படும். (இத்தகைய ஒத்துழைப்பிற்கு முன்னோடியாகத்தான் ஆப்கானிஸ்தான் உள்ளது; 2001ல் அமெரிக்கா அங்கு நிகழ்த்திய படையெடுப்பிற்கு இந்தியா அரசாங்கம் ஒப்புதல் அளித்தது; அங்கு நிறுவப்பட்டுள்ள அமெரிக்க ஆதரவு ஆரசாங்கம் இந்தியாவில் இருந்து அப்பொழுது முதல் வலுவான அரசியல், நிதிய ஆதரவை பெற்று வந்துள்ளது.)

ஆனால் புஷ் நிர்வாகத்தின் இலக்கான அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்தையும் அபிலாஷைகளையும் அடைவதில் இந்தியாவை பயன்படுத்துதல் மிக முக்கியமான ஒப்பந்தம் முன்மொழியப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாகும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஜூலை மாதம் வாஷிங்டனுக்கு சென்றிருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தம், அங்கீகரிக்கப்பட்ட அணுஆயுத அரசுகள் குழுவில் இந்தியாவின் நுழைவை சக்திமிக்கவகையில் ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வாஷிங்டன் அணுக்கரு ஆற்றல் வழங்குபவர்களின் குழுவின் உறுப்புநாடுகளிடம், இந்தியா அணுவாயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டாலும் (அதுதான் ஐந்து ஐ.நா. பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பினர்களுக்கு அணு ஏகபோக உரிமை என்று கட்டுப்படுத்தியுள்ளது), இந்திய தன்னிறைவு பெற்ற அணுசக்தி நாடாக 1998ல் சர்வதேச தடைகளை மீறி வந்துள்ளது என்றாலும், இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்தை உலக அணுசக்தி கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும் என்றும் அதையொட்டி இந்தியா மிக நவீனமான சிவிலியன் அணுசக்தி தொழில்நுட்பம், அணுசக்தி எரிபொருள் ஆகியவற்றை பெறுவதற்கு வகை ஏற்படும் என்றும் வற்புறுத்தும்.

இந்தியா இத்தகைய சர்வதேச அங்கீகாரத்தை தான் ஒரு அணுசக்தி நாடு எனப் பெறுவதற்கு ஆர்வத்துடன் உள்ளது; ஏனெனில் அது ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அதற்கு ஒரு நிரந்தர இடம் தேவை என்ற கோரிக்கைக்கு இது உரிய பரிமாணத்தை கொடுக்கிறது; மேலும் ஒரு பெரிய உலக வல்லரசு என்ற அந்தஸ்தும் இந்தியாவிற்கு கிடைக்கும். வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை அதன் சிவிலிய அணுவாயுத சக்தி திறன் வளர்ச்சிக்காக இந்தியா பெற ஆர்வம் காட்டுகிறது; அப்பொழுது வெளி எண்ணெய், எரிவாயு இறக்குமதிகள் மீது கூடுதலான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டிய நிலை குறைவதுடன், இன்னும் கூடுதலான இருப்புக்கள் அதன் சொந்த அணுசக்தி திட்டத்திற்கும், இராணுவ ஆராய்ச்சி மற்றம் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படவும் முடியும்.

புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஜனாதிபதியின் இந்திய வருகையின் மைய ஈர்ப்பு அணுவாயுத ஒப்பந்தத்தின் இறுதி வடிவமைப்பில் கையெழுத்திடலாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தனர். ஆனால் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்டிருந்த இந்த ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்திடா ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. வெளியுறவுத்துறையின் இரண்டாம் முக்கிய நபராக இருக்கும் நிகோலா பேர்ன்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து தாயகத்திற்குத் திரும்பிச் சென்று உண்மையில் "பல கருத்து வேறுபாடுகள்" முக்கியமாக இன்னும் உள்ளன என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஸ்ரெபான் ஹாட்லி அணுசக்தி ஒப்பந்தம் இறுதி நிலையை அடைவதில் தோல்வியுற்றதின் முக்கியத்துவத்தை அடக்கி வாசிக்க முயற்சித்தார். "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இப்பொழுது மிகப்பரந்த, செறிந்த உறவுகள் உள்ளன. இரண்டு தலைவர்கள் [புஷ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்] இருவரும் நிறைய பேச உள்ளனர்; இந்த ஒப்பந்தம் அதில் இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி." என்று ஹாட்லி குறிப்பிட்டார்.

அமெரிக்கா இந்தியாவை மிரட்டலும் சூழ்ச்சியாய் கையாளலும்

ஒப்பந்தம் கையெழுத்திடா நிலைக்கு வந்துவிட்டது என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கா மிகவும் விரைவாகவும், இரக்கமற்ற தன்மையிலும் ஒப்பந்தத்தை பயன்படுத்தி இந்தியா தனக்கு தேவையானவற்றை பெறுவதை ஒரு தொழில்நுட்ப-இராணுவ அடிமைத்தனத்திற்கு ஒப்புக்கொள்ளும் வகையில் சுரண்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவுடன் ஆக்கிரோஷமான முறையில் இதற்கு தயார் செய்து கொள்ளுவதற்கு முன்னரே, வாஷிங்டன் ஒரு திட்டும் கணவன் போல் நடந்து கொண்டு, இந்தியாவை திட்டியும், மிரட்டியும் வரவிருக்கும் திருமண ஒப்பந்தத்தை மீண்டும் எழுத வலியுறுத்தியது.

அமெரிக்க அதிகாரிகளும் காங்கிரஸ் உறுப்பினர்களும் பலமுறையும் அணுசக்தி ஒப்பந்தத்தை பகிரங்கமாக குறிப்பிட்டு, ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்தியா, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்புநாடுகளுக்கு ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கூறினர். முக்கியமான சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) கூட்டம் கடந்த செப்டம்பரில் தொடங்குவதற்கு முன்பும், இந்த மாத தொடக்கத்திலும், அமெரிக்க அதிகாரிகள் இந்தியா தன்னுடைய நல்ல எண்ணத்தை, "ஒரு பொறுப்பான" அணுக்கரு ஆற்றல் கொண்ட அரசு என்பதை காட்டுவதற்கு வாஷிங்டனுடன் சேர்ந்துகொண்டு ஈரானை கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினர்.

UPA அரசாங்கம், அணுவாயுத ஒப்பந்தத்திற்கும் இந்தியாவின் ஈரானுடனான உறவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்தது கிடையாது என்று உறுதியுடன் கூறிவிட்டது; ஆனால் இக்கூற்றுக்கள் பல நேரமும் புஷ் நிர்வாக்தில் உள்ள, அதைச் சுற்றியுள்ள நபர்கள் வெளியிட்ட பகிரங்க அறிக்கைகள் மூலம் கீழறுக்கப்பபட்டுவிட்டன.

அவையின் சர்வதேச உறவுகள் குழுவின் முக்கிய ஜனநாயக கட்சி உறுப்பினரும் புஷ் நிர்வாகத்தின் நெருக்கமானவருமான Tom Lantos அறிவித்தார்: "சர்வதேச உறவுகளில் கொடுக்கலும் வாங்கலும் உண்டு; இந்தியாவிற்கு தேவையானவற்றை அளிப்பதற்கு நாம் உதவ முன்வந்துள்ளோம் என்றால், முக்கியமான இடங்களில் அமெரிக்க கொள்கைகள் பற்றி இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கண்டிப்பாக வலியுறுத்துவேன்; அதில் ஈரானில் அமெரிக்கக் கொள்கையும் அடங்கும்."

ஆனால் மிகவும் ஆணவம் கொண்டதும் பெரும் ஆத்திரமூட்டல் கொடுப்பதுமான அறிக்கை கடந்த மாதம் அதிகாரபூர்வ அமெரிக்க அரசாங்கத்தின் இந்திய பிரதிநிதியாக இருக்கும் தூதர் டேவிட் மல்போர்டினால் வெளியிடப்பட்டது; இந்தியா ஈரானுக்கு எதிராக வரவிருக்கும் IAEA கூட்டத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு வாக்களிக்காவிடில், அணுசக்தி ஒப்பந்தம் "மடிந்து விடும்" என்றார். ஒரு பலவீனமான இந்திய எதிர்ப்பை ஒட்டி புஷ் நிர்வாகம் மல்போர்டின் கருத்துக்களில் இருந்து தன்னை ஒதுக்கிவைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் அதே கருத்தை சில நாட்களுக்கு பின்னர் ஓர் அறிக்கையில் தெரிவிக்கும்போது, "சிவில் அணுசக்தி இந்தியாவிற்கு கிடைக்க வேண்டும் என்ற புதிய கட்டத்திற்கு நகர வேண்டும் என்றால், இந்தியா சில கடினமான விருப்பங்களுக்கு உட்படத்தான் வேண்டும்" என்று கூறினார்.

புது டெல்லியுடன் உறவுகளை மேலும் கசப்பாக்கிக் கொள்ளும் வகையிலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்திற்கு இந்தியர் எதிர்ப்பு கொடுப்பதை வளர்க்கும் வகையிலும், திட்டமிடப்பட்டுள்ள ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய்த்திட்டத்தை, பகிரங்கமாக ஒதுக்கப்படவேண்டும் என்று வாஷிங்டன் கூறிய செயல் குறிப்பிடத்தக்கது. குழாய்த்திட்டம் செயல்பட வேண்டும் என்பதில் புது டெல்லி பெரும் ஆர்வத்துடன் உள்ளது; ஆற்றல் அதற்கு இன்றியமையாதது என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல; குழாய்த்திட்டம் பாகிஸ்தானுடன் ஆரம்பிக்கப்பட்ட சமீபத்திய சமாதான செயற்பாடுகளுக்கும் பேருதவியாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாகும்.

அமெரிக்க அதிகாரிகள் இராஜதந்திர வழிமுறைகளில், அதாவது இந்தியாவும், சீனாவின் நாட்டுடமையான எண்ணெய் நிறுவனங்களும் சிரியாவில் ஆற்றல் நிறுவன சொத்து ஒன்றை கூட்டு முறையில் வாங்குதலுக்கு எதிராக, இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவிற்கு சென்றிருந்தனர். இது அமெரிக்கா இந்தியா எங்கிருந்து அதன் ஆற்றல் தேவையைப் பெறவேண்டும் என்று கட்டளையிடும் என்பதை தெரிவிக்கும் அடையாளமாக இருப்பதுடன், இந்திய சீன ஒத்துழைப்பை தகர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் காட்டியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவின் அரசியல் இராணுவ ஸ்தாபனத்தின் ஒரு கன்னை அணுக்கரு ஆற்றல் ஒப்பந்தத்தை, அது அமெரிக்கா நவீன இராணுவக் கருவி விற்பனையுடன் தொடர்புபடுத்த பயன்படும் என்ற கருத்தில் எதிர்த்தது; இந்தியா அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்றும் கூறப்பட்டது. இந்த விமர்சகர்கள், இந்தியாவின் மீது நீண்ட காலம் பொருளாதார தடைகளை சுமத்தியதன் மூலம் மற்றும் நவீன அமெரிக்க தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவிற்கு வராமல் தடைசெய்ததன் மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சித்த நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சமீப வாரங்களில் அவர்களுடன், இந்தியாவின் அணுக்கரு ஆற்றல் இராணுவத் திறனின் தன்னாட்சித் தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்கு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று வாதிடுகின்றவகையில் இந்தியாவின் இராணுவ-விஞ்ஞான நடைமுறையின் பெரும்பகுதியினர் மற்றும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான இந்துமேலாதிக்கவாத, மரபுவழி அமெரிக்க சார்புடைய பாரதீய ஜனதா கட்சியினரும் சேர்ந்துகொண்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைகளை அணுக்கரு ஆற்றல் உடன்பாடு என்னும் வகையில் அமெரிக்கா பயன்படுத்துவதாக விஞ்ஞான வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்; அதிலும் குறிப்பாக இந்தியாவின் அணுக்கரு ஆற்றல் துறையை சர்வதேச ஆய்விற்குட்பட்ட இராணுவமல்லாத திட்டம் என்றும், ஆய்விற்குட்படாத இராணுவத்திட்டம் என்றும் இரண்டாகப் பிரிப்பது என்பது இந்தியாவின் மீது கட்டுப்பாடு கொள்ளுவதற்கு உதவும் என்றும் இந்தியாவின் அணுசக்தி ஆயுதங்கள் வளர்ச்சித் திறனை பெரிதும் கட்டுப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் கருத்தின்படி, அமெரிக்கா இந்தியாவின் கூடுதலான அணுசக்தித்திறன் சர்வதேச ஆய்வுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் பொதுவாக சர்வதேச அளவில் ஏற்கப்பட்டுள்ள அணுசக்தி நாடுகள் இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய அணுசக்திக்குழுவின் தலைவரான அனில் காகோட்கர், மற்றும் அணுசக்தி துறையின் செயலரும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் "இலக்கு வரம்புகளை" அமெரிக்கா நகர்த்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்; இந்தியாவின் அணுசக்தித்திட்டம் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு உட்பட்டு சர்வதேச ஆய்விற்கு உடன்பட்டால் இந்தியாவின் வேக ஈனுலைகள் (fast-breeder) அணுக்கரு ஆற்றல் திட்டம் அமெரிக்காவிற்கு கீழ்ப்படியும் நிர்ப்பந்தம் UPA அரசாங்கத்தின் நடவடிக்கையால் வரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு கூறுகையில், "இது நம்மை தளைகளுக்குட்படுத்தும்" என்று காகோட்கர் தெரிவித்தார்.

UPI செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஒரு மூத்த இந்திய பாதுகாப்பு அதிகாரி கொடுத்த குறிப்பின்படி இந்த ஒப்பந்தம் "எப்படிப்பார்த்தாலும் இந்தியாவிற்கு தோல்விதான்" என்றுள்ளது. இந்தக் குறிப்பின்படி அணுசக்தி ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, "இந்தியாவின் உள்நாட்டில் உற்பத்தியான அணுக்கரு ஆற்றல் திட்டத்தை IAEA கட்டுப்பாட்டிற்குள் பூட்டிவைத்துவிடும்; குறைந்த அளவு எச்சரிக்கையாய் இருக்கும் திறன்களை அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகள் வீழ்ச்சி அடையும்; இந்தியா எப்பொழுதும் அணுக்கரு ஆற்றலுக்கு அமெரிக்காவை சார்ந்திருக்க வேண்டும்."

இந்திய அரசியல், இராணுவ/புவிசார் அரசியல் வட்டங்களில் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம் கோரிய இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளது கவனியாமற் போகவில்லை என்பதும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அமெரிக்கா, சீனாவைக் கட்டுப்படுத்தி, குறைக்கும் தன்மையில் அமெரிக்காவின் மூலோபாயத்தில் இருத்தப்பட்டுள்ள மற்றொரு ஆசிய மையமான ஜப்பானின் முயற்சிக்கு ஆதரவைக் கொடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்குக் கடுமையாகப் பாடுபடுகின்றனர்; அதற்காக ஒரு மந்திரியை (மணி சங்கர் அய்யர்) அவர்கள் பதவி இறக்கம் செய்தனர்; ஒரு காபினெட் மந்திரியை (நட்வர் சிங்கை) வெளியே அனுப்பினர்; அவர்கள் புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அதிகரிப்பது பற்றி சற்றே விமர்சித்திருந்தனர்.

ஆனால் திங்களன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்றில், மன்மோகன் சிங் அமெரிக்கக் கோரிக்கைகள் பற்றிய சில விமர்சனங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாகத் தோன்றுகிறது; இந்தியா அதன் வேக-ஈனுலைகள் திட்டத்தை சர்வதேச அணுப்பாதுகாப்பு நெறிகளுக்கு உட்படுத்துவதை ஏற்காது என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மூலோபாய அபிலாஷையான, இந்தியாவை சீனாவிற்கு எதிரான எதிர் எடையாக ஆக்க வேண்டும் என்பதை இந்திய மேற்தட்டு முழுமையாக அறிந்துள்ளது. பெரும்பாலும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்தியாவின் புவிசார் அரசியல் நிலைப்பாடு வாஷிங்டனின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து இருக்கவேண்டும் என்பதை தடுப்பதில் உறுதியாகத்தான் உள்ளது; ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வடக்கே உள்ள பெரும் அண்டை நாட்டுடன் ஆபத்தை அளிக்கக்கூடிய மோதலைத் தவிர்ப்பதையே விரும்புகின்றனர்; மேலும் உலக அரங்கில் தாங்கள் செய்யக்கூடியதை வாஷிங்டன் தடைக்கு உட்படுத்துவதற்கு இடம்கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.

புது டெல்லி வாஷிங்டனுடன் நெருக்கமான பிணைப்புக்களை விரும்பினாலும், தன்னுடைய நீண்ட கால மாஸ்கோவுடனான உறவுகளையும் புதுப்பிக்க, குறிப்பாக இராணுவ ஒத்துழைப்பை புதுப்பிக்கவும் விரும்புகிறது மற்றும் பெய்ஜிங்குடன் பெரிய அளவில் உறவுகளில் மாற்றத்தை காண விரும்புகிறது.

அமெரிக்காவுடனான வணிகம் 2000 க்கும் 2005க்கும் இடையே 63 சதவீதம் வளர்ச்சியுற்றாலும், இந்திய சீன வணிகமும் வெடிப்புத் தன்மை கொண்டு 500 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து, சீனாவை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் வணிக உறவு கொள்ளும் நாடு என்று ஆக்கியுள்ளது. எண்ணெய், எரிவாயு பற்றிய மோதலுக்கு வாய்ப்புவளம் உள்ளது என்பதை அறிந்து -- இருநாடுகளுமே கூடுதலான முறையில் ஆற்றல் இறக்குமதியை நம்பியுள்ளன -- பெய்ஜிங், புது டெல்லி இரண்டுமே தங்கள் போட்டிக்ளை குறைத்துக் கொள்ள கூட்டாக கண்டுபிடிப்பு முயற்சிகள் உள்பட, சிறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் நம்பிக்கை, இந்தியாவின் நிலைப்பாட்டை நேர்த்தி செய்ய தன்னால் இயலும் என்பதாகும்; அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றின்படி, உலக புவிசார் அரசியல் அமைப்பில் மிகப் பெரிய "ஊசலாடும் அரசாக" இந்தியா உள்ளது என்றும், இந்தியாவின் நலன்களை பெருக்குவதற்கு அது ஒரே காலத்தில் அமெரிக்கா சீனா மற்றும் பல பெரிய நாடுகளையும் அனுமதித்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.

அணுக்கரு ஆற்றல் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கையில், அதன் உலகந்தழுவிய புவிசார் அரசியல் மூலோபாயத்திற்கு ஏற்ப இந்தியாவின் ஆற்றலை பயன்படுத்துவதில் வாஷிங்டன் காட்டும் வலிந்தவகையிலான உந்துதல் ஏற்கனவே இத்தகைய போக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டியுள்ளதுடன், அனைத்து வல்லரசுகள் மற்றும் வல்லரசாக விழையும் நாடுகள் இவற்றுக்கிடையிலான உறவுகள் பெருகிய முறையில் பிளவும் வெடிப்புத் தன்மையும் கொண்டுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved