:
இலங்கை
Under the guise of peace, Sri Lankan government
accelerates drive to civil war
இலங்கை அரசாங்கம் சமாதானம் என்ற போர்வையில் உள்நாட்டு யுத்தத்திற்கான நகர்வை
துரிதப்படுத்துகிறது
By Wije Dias
22 June 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இலங்கை அரசாங்கம் ஒட்டு மொத்த உள்நாட்டு யுத்தத்தை நோக்கி இழுபட்டுச்
செல்லும் நிலைமையின் கீழ், அதனது சாமாதான செயலகத்தின் ஊடாக ஜூன் 18 அன்று முற்றிலும் சிடுமூஞ்சித்தனமான
ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச ஊடகங்களில் "சமாதானப் பேச்சுக்களுக்கான அழைப்பாக"
சித்தரிக்கப்பட்டிருந்தது. இதை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான யுத்தப் பிரகடனமாகவே மிகவும் பொருத்தமான
வகையில் விபரிக்க முடியும்.
சமாதானப் பேச்சுக்கள் கவிழ்ந்ததற்கு புலிகளின் "விட்டுக்கொடுக்காத" பண்பைக்
கண்டனம் செய்த இந்த அறிக்கை, "தமது அரசியல் இலக்குகளை அடைவதற்காக வன்முறைகளிலும் பயங்கரவாதத்திலும்"
தங்கியிருப்பதற்காக கண்டனம் செய்ததோடு, ஜூன் 15 கெப்பிட்டிக்கொல்லாவ நகரில் கண்ணி வெடித் தாக்குதலில்
64 சிங்கள கிராமத்தவர்கள் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு ஆதாரமும் காட்டாமல் புலிகள் மீது குற்றஞ்சாட்டியது.
கெப்பிட்டிக்கொல்லாவையில் நடந்த கொடூரம் புலிகளுக்கு எதிரான வசைமாரியின்
ஆரம்பப் புள்ளியாகும். அரசாங்கத்தின் சமாதான செயலகம், "அர்த்தமின்றி அல்லது காரணமின்றி அப்பாவி
பொதுமக்களை படுகொலை செய்யும் நிரந்தரமான கொலை இயந்திரம்... சமாதான முன்னெடுப்புகளில் இருந்து
வெளியேறுவதற்கு புலிகள் முடிவு செய்திருப்பதாகவே தோன்றுவதோடு சமாதான முன்னெடுப்பில் இருந்து வெளியேறுவதை
நியாயப்படுத்துவதற்கு இனவாத மோதலொன்றை உருவாக்குவதே அதன் மூலோபாயமாகவும் தோன்றுகிறது. இலங்கை
அரசாங்கம் அவ்வாறான ஒன்று நடப்பதற்கு இடமளிக்காது என்பதை புலிகள் தெரிந்துகொள்ள வேண்டும்," என அராசாங்கத்தின்
சமாதான செயலகம் தாக்குகின்றது.
புலிகள் "சமாதானப் பேச்சுக்களில்" மீண்டும் இணைய வேண்டும் எனவும் "சகல
தரப்பினரும் உள்ளடங்கிய சமாதான முன்னெடுப்புகளுக்கு தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்" எனவும் சமாதான
செயலகம் முடிவில் அழைப்பு விடுப்பதானது வெளி அலங்காரமேயன்றி வேறொன்றுமல்ல. ஒருவர் புலிகளை நிரந்தரமான,
பகுத்தறிவுக்கு மாறான ஒரு கொலை இயந்திரமாகக் கருதுவாரானால் புலிகளுடன் ஒருவர் பேச்சுவார்த்தை மேசையில்
அமரப்போவது ஏன்? புலிகள் இராணுவ ரீதியில் நசுக்கப்பட வேண்டும் என்பதே தர்க்க ரீதியான முடிவாக இருக்க
முடியும். கொழும்பு அரசாங்கம் வழுவின்றி தயார் செய்வதும் மற்றும் அதன் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை
முன்னணியும் (ஜே.வி.பி) ஜாதிக ஹெல உறுமயவும் பகிரங்கமாக வக்காலத்து வாங்குவதும் இதற்கேயாகும்.
"சகல தரப்பினரும் அடங்கிய சமாதான முன்னெடுப்பு" என பேச்சுக்கள்
பிரேரிக்கப்பட்ட வழிவகையும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தால் 2002ல்
ஆரம்பித்து வைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை கீழறுப்பதை இலக்காகக் கொண்டதாகும். புலிகள் எப்பொழுதும்
ஏனைய தரப்பினரை அல்லது குழுக்களை விலக்கி "தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்" நாமே என தாமே
கூறிக்கொண்டு வலியுறுத்தி வந்துள்ளது. பேச்சுவார்த்தை மேசையில் தனியான ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
உள்ளடக்கும் ஐ.தே.க. யின் முயற்சிகளைக்கூட அது எதிர்த்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிச்
செல்கின்ற நிலையில், சமாதானம் மற்றும் தன்னடக்கத்தின் பரிந்துரையாளராக அது காட்டிக்கொள்வதானது பல
காரணங்களுக்கும் சேவை செய்கின்றது. முதலில் பெரும் வல்லரசுகளை ஒரு பக்கம் வைத்துக்கொள்வதற்காக அது
வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஏற்கனவே 65,000 உயிர்களைப் பலிகொண்டுள்ள 20 ஆண்டுகால
உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்குவதை எதிர்க்கும் பரந்த பெரும்பான்மையான இலங்கை மக்களை
ஏமாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும்.
அதே சமயம், "பயங்கரவாதப்" புலிகளை ஆக்கிரமிப்பாளர்களாக கண்டனம் செய்வதன்
மூலம், சமாதான செயலகமானது உண்மையில் அது புலிகள் மீது குற்றஞ்சாட்டிய "இனவாத எதிர்த்தாக்குதலுக்கான"
அரசியல் காலநிலையை அறுவடை செய்வதோடு வேண்டுமென்றே இனவாத பதற்றத்தை எரியூட்டுகிறது. இது கடந்த
அரை நூற்றாண்டுகளாக இலங்கை அரசியல் ஸ்தாபனத்தின் அடையாளச் சின்னமான திட்டமிட்ட தமிழர் விரோத படுகொலைகளை
கட்டவிழ்த்து விடுவதற்கான நாகரீகமான சொற்பாங்காகும்.
உலக சோசலிச வலைத் தளம் புலிகளுக்கு ஒருபோதும் அரசியல் சலுகை
வழங்குவதில்லை. தனியான ஒரு தமிழீழ முதலாளித்துவ அரச அமைப்பை ஸ்தாபிக்கும் புலிகளின் வங்குரோத்தான
முன்னோக்கானது தீவின் தமிழ் சிறுமான்மையினரை மரணப் பொறிக்குள் தள்ளியுள்ளது. அப்பாவி சிங்களப்
பொதுமக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உட்பட அதனது பிற்போக்கு இனவாதமானது, உழைக்கும் மக்களுக்கு
இடையில் ஒரு ஆப்பை இறுக்கவும் மற்றும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட அரசியல்
எதிர்த் தாக்குதலை முன்னெடுக்கும் அரசியல் போராட்டத்தை தடுக்கவும் ஆட்சியில் இருக்கும் கொழும்பு
அரசாங்கங்களுக்கு நேரடியாக உதவுகிறது.
ஆனால், நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கச் செய்வதற்கான அரசியல் பொறுப்பு
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திலுமே தங்கியிருக்கின்றது. ஜே.வி.பி. மற்றும் ஜாதிக
ஹெல உறுமயவின் ஆதரவுடன் கடந்த நவம்பரில் அதிகாரத்திற்கு வந்தது முதல், புலிகள் மீதும் அவர்களது
ஆதரவாளர்கள் மீதும் ஆத்திரமூட்டல் தாக்குதல்களை அதிகரிக்கச் செய்ய இராஜபக்ஷ பச்சைக் கொடி
காட்டினார். இந்த இரகசிய யுத்தத்தில் பலவித புலி விரோத துணைப்படைகளுடனான தொடர்பை இராணுவம்
மறுத்த போதிலும், அண்மையில் கூட இந்த முரண்பாடுகளில் அதிகரித்துவரும் ஆதாரங்களை இலங்கை கண்காணிப்புக்
குழு மேற்கோள் காட்டியிருந்தது.
மீண்டும் மீண்டும் சமாதான முன்னெடுப்புகளை கண்டனம் செய்யும் இராஜபக்ஷவின்
பங்காளிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் புலிகளை கீழறுப்பதற்காக 2002ல்
கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டும் என ஆத்திரமூட்டும்
வகையில் கோரிக்கை விடுக்கின்றன. கடந்த பெப்பிரிவரியில் ஜெனீவாவில் நடந்த பேச்சுக்கள், அரசாங்கப்
பிரதிநிதிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை செய்ய வேண்டுகோள் விடுத்த வேளை முறிவின்
விளிம்புக்கே சென்றது. "சமாதான செயலகத்திற்கு" இனவாத பகைமைகளை கிளறிவிடுவதில் ஜே.வி.பி மற்றும்
ஜாதிக ஹெல உறுமயவின் பாத்திரத்தைப் பற்றி கூறுவதற்கு நிச்சயமாக ஒன்றும் இருந்திருக்கவில்லை. அல்லது கடந்த
நவம்பரில் இருந்து நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட வடக்கு கிழக்கில் நடந்துவரும் நிழல் மோதல்களில்
இராணுவத்தினதும் மற்றும் அதோடு இணைந்து செயலாற்றும் துணைப்படைகளினதும் பங்கு பற்றி அது விமர்சிக்கவும்
இல்லை.
கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளைப் பொறுத்தளவில் புலிகளே பொறுப்பாளிகள்
என நிச்சயிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. தமது அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக ஜே.வி.பி, ஜாதிக
ஹெல உறுமய அல்லது இராணுவத்தில் உள்ள சில பிரிவினராலும் கூட இந்த அவலத்தை ஏற்பாடு செய்திருக்கலாம்.
நிச்சயமாக இந்தப் படுகொலைகள் நடந்த உடனேயே, சிங்கள அதிதீவிரவாதிகளின் யுத்த ஆரவாரம்
காதடைக்குமளவில் இருந்ததோடு ஆயுதப் படைகள் புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியான விமான மற்றும்
ஆட்டிலறித் தாக்குதலையும் முன்னெடுக்க இந்த சம்பவத்தைப் பற்றிக்கொண்டன. கடந்த வாரங்கள் பூராவும்
ஏறத்தாழ அன்றாடம் தாக்குதல்கள் மற்றும் எதிர்த் தாக்குதல்களுடன் பகிரங்கமான யுத்த நடவடிக்கைகளை
நோக்கிய நகர்வு துரிதமடைந்தது.
"காரணங்களுக்கான மூலம்"
சமாதான செயலக அறிக்கையின் சிடுமூஞ்சித்தனமான நோக்கம் இந்தப் பந்தியில்
பிரகடனம் செய்யப்படுகின்றது: "அது (அரசாங்கம்) புலிகள் ஆயுதம் ஏந்தவும் பயங்கரவாதப் பாதையை
தேர்ந்தெடுக்கவும் பங்களிப்பு செய்திருக்கக் கூடிய இந்த முரண்பாடுகளுக்கான காரண மூலங்களைப் பற்றிப் பேச
புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்க்கிறது. முரண்பாடான விதத்தில், இந்த மோதல்களுக்கான
காரண மூலங்களைப் பற்றி பேசவும் மற்றும் பிழைகளைத் திருத்தவும் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் எந்தவொரு
பேச்சுவார்த்தையிலும் இருந்ததில்லை."
யுத்தத்திற்கு ஏதுவான வேர்கள், 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இலங்கை
அரசு புதைந்து போயுள்ள தமிழர் விரோத வேறுபாடுகளை தூண்டுவதிலேயே முளைவிட்டுள்ளன. கொழும்பு அரசாங்கங்கள்
தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமது சொந்த சமூக அடித்தளத்தை தூக்கி நிறுத்தவும் தமிழர் விரோத
இனவாதத்தை தூண்டிவிட்டு அதை சுரண்டிக்கொண்டுள்ளன. பெளத்தத்தை அரச மதமாக்கிய அரசியல் யாப்பு பிரிவுகளில்
மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள, தமிழர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிரான திட்டமிட்ட
பாரபட்சங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எண்ணமில்லை.
அரசாங்கத்தின் சமாதான செயலகம் காரண மூலங்களை கலந்துரையாடுவதைப் பற்றி
பேசும் அதே வேளை, அதனது பாதுகாப்புப் படைகள் தமிழர்கள் மீது திட்டமிட்ட அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள்
மற்றும் ஒடுக்குமுறைகளையும் திணித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களாக, இராணுவம் வீதித் தடைகளையும்
தனிநபர்களை எதேச்சதிகாரமான முறையில் சோதனை செய்வதையும் மற்றும் "சுற்றிவைளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள்"
என சொல்லப்படும் ஒட்டுமொத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளையும் மீண்டும் ஸ்தாபித்துக்கொண்டுள்ளது. அண்மையில்
தாம் தங்கியிருந்த தேவாலயத்தினுள் கிரனேட்டை வீசி ஒரு பெண்ணைப் படுகொலை செய்ததோடு மேலும் 40
பேரை காயப்படுத்தியதாக பேசாலை கிராம மக்கள் கடற்படையினர் மீது குற்றஞ் சாட்டினர். "நியாயமற்ற ஆக்கிரமிப்பாளர்களான
இலங்கை கடற்படையினர் அப்பாவிகளை படுகொலை செய்ததை" கண்டனம் செய்து ஆயர் ராயப்பு ஜோசப் வத்திகானுக்கு
கடிதமெழுதியுள்ளார்.
2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து நான்கு
வருடங்கள் பூராவும், ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கு பற்றிய
விவகாரத்தை செயற்படுத்தாமல், இந்த மோதல்களுக்கான "காரண மூலங்களை" அப்படியே விட்டுவிட்டனர். முதற்
சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலேயே புலிகள் தமது தனியான தமிழீழ அரசிற்கான கோரிக்கையை
உத்தியோகபூர்வமாக கைவிட்டதோடு, தீவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்புக் களமாக
"புலிப் பொருளாதாரத்திற்குள்" மாற்றியமைக்க உதவுவதில் தமது விருப்பத்தைப் பிரகடனம் செய்தனர். ஆனால்,
ஆரம்பத்தில் இருந்தே இராணுவத்தின் பகைமையையும் மற்றும் ஜே.வி.பி. யின் பேரினவாத எதிர்ப்பையும் அது
எதிர்கொண்டது. ஜே.வி.பி. யுத்த நிறுத்த உடன்படிக்கையை நாட்டைக் "காட்டிக்கொடுக்கும்" செயலாக
கருதுகிறது.
பேச்சுக்களை குழப்புவதற்காக இராணுவம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன்
சேர்ந்துகொண்டு அடுத்தடுத்து ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் உப
செயலாளராக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தயா சாந்தகிரியின் கீழ், கடற்படை ஆழ் கடலில் புலிகளின் பல
படகுகளை மூழ்கடித்ததன் மூலம் 2003 ஏப்பிரலில் நடந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகளை வெளியேறத்
தூண்டுவதில் அது பிரதான பாத்திரம் வகித்தது.
குறிப்பிடத்தக்க வகையில் 2003 அக்டோபரில் பேச்சுக்களை மீண்டும்
தொடங்குவதற்காக புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற பெயரில் ஒரு பிரேரணையை
முன்வைத்தனர். சில நாட்களுக்குள் ஜே.வி.பி. யின் கண்டனங்களும் இராணுவ உயர் மட்டத்தினரின் எதிர்ப்பும்
வழிந்தோடிய நிலமையின் மத்தியில், ஜனாதிபதி குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களின்
கட்டுப்பாட்டை எதேச்சதிகாரமான முறையில் அபகரித்துக்கொண்டார். அவர் சர்வதேச அழுத்தங்களினால் மட்டுமே
அவசரகால நிலைமையை பிரகடனம் செய்வதிலிருந்தும் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக்குவதில் இருந்தும்
பின்வாங்கினார்.
இறுதியாக குமாரதுங்க 2004 பெப்பிரவரியில் அரசாங்கத்தை பதவி விலக்கி புதிய
தேர்தலுக்கு வழிவகுத்ததோடு ஜே.வி.பி. யை உள்ளடக்கிய சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வர அடித்தளம்
அமைத்தார். ஜனாதிபதி குறிப்பாக 2004 டிசம்பரில் சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவை அடுத்து
சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்காக கணிசமான சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டார்.
ஆயினும் நிவாரணங்களை பகிர்ந்தளிப்பதற்காக புலிகளுடன் தற்காலிகமாக ஒரு கூட்டு கட்டமைப்பை
ஸ்தாபித்துக்கொள்ளும் முயற்சிகள் கூட ஜே.வி.பி. யுடன் முறிவை ஏற்படுத்தியதோடு அரசாங்கம் பாராளுமன்றத்தில்
சிறுபான்மையாக விடப்பட்டது. கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, புலிகளுக்கு
எதிராக காத்திரமான நிலைப்பாட்டை எடுக்கக் கூறும் ஜே.வி.பி. யின் கோரிக்கைக்கு உடன்பட்டு இராஜபக்ஷ
அதனுடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டார்.
இலங்கையிலான மோதல்கள் புதுப்பிக்கப்படுவதற்கான இன்னுமொரு காரணியும் பொறுப்பாக
உள்ளது. அது புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள தெளிவாய் உணரக்கூடிய மாற்றமாகும். 2002 யுத்த
நிறுத்தத்தையும் சமாதானப் பேச்சுக்களையும் அமெரிக்கா ஆதரித்தது இலங்கை மக்களின் அவலநிலை பற்றிய
எந்தவொரு அக்கறையினாலும் அல்ல. மாறாக, வாஷிங்டன் வளர்ச்சிகண்டு வரும் மூலோபாய மற்றும்
பொருளாதார நலன்களைக் கொண்டுள்ள தெற்காசியாவை, குறிப்பாக இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள
அச்சுறுத்தும் காரணியாக உள்ள இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கேயாகும். சமாதான முறை
தோல்வி கண்டால் இராணுவ நடவடிக்கைக்கு எப்பொழுதும் ஆதரவளிப்பதாக புலிகளை "பயங்கரவாத இயக்கமாக"
வகைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா இதனை தெளிவுபடுத்தியுள்ளது.
இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள்
புலிகளை அதிகம் பயமுறுத்துவதாகவே உள்ளன. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி லன்ஸ்டட்,
கொழும்பின் விதிகளுக்கு அமைய புலிகள் சமாதானப் பேச்சுக்களுக்கு இணங்காமல் யுத்தம் மீண்டும்
தொடங்குமானால், "மிகவும் வலுவான மற்றும் மிகவும் சக்திவாய்த்த இலங்கை இராணுவத்தை புலிகள் எதிர்கொள்ள
நேரிடும்" என கடந்த ஜனவரியில் எச்சரித்தார். இந்தக் குறிப்புக்கள் இலங்கை ஆயுதப் படைகளை
பலப்படுத்துவதற்கு உதவியாக, அதற்கு அமெரிக்க இராணுவ உதவி வழங்கப்படும் என்ற, மிகக் கடுமையான
அச்சுறுத்தலாகும்.
வாஷிங்டன் சர்வதேச ரீதியில் புலிகளை தனிமைப்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்குப்
பின்னால் இருந்துகொண்டுள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியமும் அண்மையில் புலிகளை "பயங்கரவாத
அமைப்பாக" தடை செய்ததன் மூலம் சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படும் சவப்பெட்டிக்கு இன்னுமொரு
ஆணி அடிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக்குழுவின் யுத்த நிறுத்த மேற்பார்வையாளர்களாக உள்ள ஐரோப்பிய ஒன்றிய
உறுப்பினர்களை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நோர்வே மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளின்
உறுப்பினர்கள் மூலம் பதிலீடு செய்ய வேண்டும் என புலிகளை வலியுறுத்துவது ஆச்சரியத்திற்குரியதல்ல. கெப்பிட்டிக்கொல்லாவ
கொலைகளை அடுத்து ஆதாரங்கள் குறைவாக இருந்த போதிலும் அமெரிக்கா உடனடியாக புலிகள் மீது குற்றஞ்சாட்டியது.
அமெரிக்காவின் நிலைப்பாடானது யுத்தத்தை நோக்கிய நகர்வை அதிகப்படுத்த இராஜபக்ஷ
அரசாங்கத்திற்கும் அவரது பேரினவாத பங்காளிகளுக்கும் உற்சாகமூட்டுவதை மட்டுமே செய்துள்ளது. நேற்று பாராளுமன்றத்தில்
ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜே.வி.பி. தலைவர்களில் ஒருவரான விமல் வீரவன்ச, புலிகளைக் கண்டனம் செய்ததோடு
புலிகளை தடைசெய்யுமாறும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரிக்குமாறும் மற்றும் "கிழக்கை புலிகளிடமிருந்து
மீட்பதற்காக" ஒரு உடனடி இராணுவ பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறும் அழைப்புவிடுத்தார். இராணுவத்தின் "மட்டுப்படுத்தப்பட்ட"
தாக்குதல்களை விமர்சிக்கும் ஜே.வி.பி, "பயங்கரவாதம் வரையறையற்றது" என பிரகடனம் செய்து புலிகளுக்கு
எதிராக "ஒட்டு மொத்த எதிர்த்தாக்குதலுக்கு" அழைப்பு விடுக்கின்றது.
கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் எஞ்சியுள்ள தட்டுக்களும் வேகமாக இதே வழியில்
வீழ்ந்துள்ளன. கடந்த காலத்தில் சமாதான முன்னெடுப்பின் பரிந்துரையாளராக இருந்த ஐ.தே.க, இந்த யுத்த
இசைவண்டிக்குள் பாய்ந்து ஏறிக்கொண்டுள்ளதோடு, யுத்த முயற்சிகளுக்கு ஆதரவு பேரிகை கொட்ட கிராமங்களுக்கு
தமது பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனுப்பிவைத்துள்ளது. முன்னர் சமாதான பேச்சுக்களுக்கு உந்துதல் அளித்த
டெயிலி மிரர் பத்திரிகை, ஜூன் 15 வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில், "தேசிய ஐக்கியத்திற்கு"
அழைப்பு விடுப்பதோடு "நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளி பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யக்கூடியவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு
உதவக் கூடிய வகையில்" அரசாங்கத்தை எந்தவகையிலும் விமர்சிப்பதை கைவிடுமாறு ஐ.தே.க. விற்கு
வேண்டுகோள் விடுத்தது.
ஆகவே, இந்த "சமாதான செயலகம்" விடுத்துள்ள அறிக்கையானது சாதாரணமாக
யுத்தத்திற்கான வெறிகொண்ட தயாரிப்பின் ஒரு பாகம் மட்டுமேயாகும்.
Top of page |