World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Ex-radical stands for Colombo mayor on ticket of Sri Lankan ruling coalition

முன்னாள் தீவிரவாதி இலங்கை ஆளும் கூட்டணியின் பட்டியலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றார்

By Nanda Wickremasinghe
29 March 2006

Back to screen version

இலங்கையில் அடுத்து வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் (ஜ.இ.மு) தலைவரும் நீண்டகால மத்தியதர வர்க்க தீவிரவாதியுமான வாசுதேவ நாணயக்கார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் கொழும்பு மேயர் பதவிக்காகப் போட்டியிடுவது பற்றி குறிப்பிடுவது பெருமதியானதாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே நாட்டில் அதிகாரத்தில் உள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், இதற்கு முன்னர் ஜ.இ.மு உடன் இணைந்திருந்த இன்னும் இரு கருவிகளான நவ சமசமாஜக் கட்சி (ந.ச.ச.க) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (ஐ.சோ.க) சுயாதீனமாக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆயினும் தன்னை "சோசலிசவாதி" என போலியாகக் கூறிக்கொள்ளும் நாணயக்கார, வெளிப்படையாகவே ஸ்ரீ.ல.சு.க வேட்பாளரான மஹிந்த இராஜபக்ஷவை ஆதரித்தார்.

நாணயக்கார, சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) இராஜபக்ஷவின் பிரச்சார மேடைகளில் தோன்றினார். ஜே.வி.பி நடைமுறையில் உள்ள யுத்தநிறுத்த உடன்படிக்கையை கீழறுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு தொகை இறுதி நிபந்தனைகளை விடுக்கவேண்டும் என இராஜபக்ஷவிடம் கோரிய அதே வேளை, ஜ.இ.மு தலைவரோ, "சமாதான மனிதன்" என்ற ஸ்ரீ.ல.சு.க வேட்பாளரின் பொருத்தமில்லாத கூற்றுக்களுக்கு அங்கீகாரம் வழங்கினார்.

இராஜபக்ஷ தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றதை அடுத்து, அவர் மஹிந்தவின் சிந்தனைகள் என்ற பெயரிலான தனது தேர்தல் விஞ்ஞாபனம் அமுல்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரத்துவவாதிகளின் குழுவொன்றை அமைத்து அதற்கு தலைவராக நாணயக்காரவை அமர்த்தினார். தேர்தல் காலத்தின் போது இராஜபக்ஷவின் வாக்குறுதிகளை பாடிவந்த நாணயக்காரவுக்கு நடைமுறைக்கு வராத வாக்குறுதிகளை மூடி மறைப்பதுடன் குழுவின் பணிகளை மேற்பார்வை செய்வது கடினமானதாக இருக்கவில்லை.

இதற்காக நாணக்காரவுக்கு கிடைத்துள்ள சன்மானம் கொழும்பு மேயர் பதவிக்காக சுதந்திர முன்னணியின் வேட்பாளராவதாகும். கொழும்பு மாநகர சபை தற்போது எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் (ஐ.தே.க) உள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பெரும் பகுதி அழுக்கடைந்த சேரிகளால் நிறைந்துபோயுள்ளது. இங்கு தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை அத்தியாவசியத் தேவைகள் மற்றும் ஏனைய சேவைகளுமின்றி பலர் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். முதலாளித்துவத்தையும் மற்றும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் வளர்ச்சி கண்டுவரும் ஆதாள பாதாளத்தையும் குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ளுமாறு சேரி வாசிகளுக்கு ஜ.இ.மு தலைவர் ஆலோசனை சொல்கின்றார்.

மத்திய கொழும்பில் உள்ள வக்ஸோல் வீதியில் மார்ச் 10 நடந்த ஒரு சிறிய கூட்டத்தில் உரையாற்றிய நாணயக்கார பிரகடனப்படுத்தியதாவது: "நாம் செல்வந்தர்கள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் வறியவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை சவால் செய்யவில்லை. அந்த வேறுபாடுகள் அவ்வாறே இருக்கட்டும். அந்த சேரிகளில் வாழ்பவர்களுக்கு வாழ்க்கையைத் தாங்கக் கூடிய வகையில் அவர்களது நிலைமைகள் முன்னேற்றப்பட வேண்டும் என மட்டுமே நாம் கோருகின்றோம்."

நாணயக்கார குறிப்பிடுவதன்படி, கொழும்பு மாநகர சபையில் உள்ள பிரச்சினைகள் இலாப அமைப்பில் அன்றி முன்னாள் ஐ.தே.க நிர்வாகிகளின் மோசடி மற்றும் தவறான முகாமைத்துவத்திலேயே வேரூன்றியுள்ளது. நகரில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வாக "பங்குபற்றல் ஜனநாயகம்" என்ற அவரது ஆலோசனைக்கு பரந்தளவு ஊடக பிரச்சாரம் கிடைத்திருந்தது.

கொழும்பில் "பங்குபற்றல் ஜனநாயகம்" புதியதல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக பல வருடங்களாக ஐ.தே.க வால் அது முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் சேவைகளை வெட்டிக் குறைத்தல் மற்றும் நகர நிர்வாகப் பகுதிகளை தனியார் இலாபத்திற்காகத் திறந்துவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் "பங்குபற்றுமாறு" தொழிலாளர்களும் குடியிருப்பாளர்களும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.

1999ல் வெளியான ஒரு ஐ.நா ஹபிடட் அறிக்கை, "கூட்டு மற்றும் பங்களிப்பு" என்ற ஒரு "புதிய தோற்றத்தை" வரைந்தது: "மருந்தகங்கள், போக்குவரத்து சுற்றுவட்டங்கள், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள், வீதி அடையாளங்களை பராமரிக்கவும் மற்றும் வறியவர்களுக்கு பொது செளகரியங்களை வழங்குதற்கும், மற்றும் விரயத்தை தடுத்தல், மேற்பார்வை மற்றும் பணத்திற்கான பெறுமதி போன்ற விதிகளில் விளைபயன்கள் மற்றும் செயற்திறனுக்கும் வழிவகுப்பதன் பேரில் சபையால் தேர்வுசெய்யப்பட்ட மாநகரசபை சேவைகளை தனியார்மயப்படுத்தல் ஆகியவற்றிலும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் தனியார் துறைக்கும் இடையிலான பங்களிப்பு"

குறிப்பிடத்தக்களவு வேலை இழப்புக்களுடன் சேவைகள் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு கையளிக்கப்படும். 2006 ஜனவரியில், தனியார்மயப்படுத்தப்பட்ட குப்பைக்கூளத்தை அழிக்கும் அமைப்பு சீரழிந்ததை அடுத்து நகரம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதோடு பொதுமக்களின் கண்டனத்தையும் தூண்டியது. நாணயக்கார மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சாதாரணமாக ஒரு புதிய சுழற்சியை கொடுக்கின்றார்.

மாநகரசபை சேவைகளை தனியார் வர்த்தகர்கள் எடுத்துக்கொண்ட நிலையில், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான தேசிய அரசாங்கங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை வெட்டிக் குறைத்தன. தற்போதைய சுதந்திர முன்னணி அரசாங்கத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, நாணயக்கார மேலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சமிக்ஞை காட்டியுள்ளார். அவர் லக்பிம பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், "மாநகர சபையானது சேவைகளை பேணுவதை விட அதனது ஸ்தாபனத்தை பேணுவதிலேயே அதிகம் செலவழித்துள்ளது," என்றார்.

சிங்களத் தீவிரவாதிகளுடன் ஒரு கூட்டு

நாணயக்கார மற்றும் அவரது ஜ.இ.மு. வின் ஆதரவுக்கு இராஜபக்ஷ அழைப்புவிடுப்பதானது அரசியல் நெருக்கடியின் ஒரு அறிகுறியாகும். இராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தேர்தல் தொகுதிகளை இனவாத பாதையில் துருவப்படுத்துவதற்காக ஜே.வி.பி. மற்றும் இன்னுமொரு சிங்களத் தீவிரவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவையும் பயன்படுத்தி வெற்றிபெற்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்தல், இராணுவத்தை பலப்படுத்தல் மற்றும் சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்கான நோர்வே அனுசரணையாளர்களை வெளியேற்றுவது போன்ற ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கைகள் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தையே சுட்டிக்காட்டுகின்றன.

அதே சமயம், 65,000 உயிர்களை ஏற்கனவே பலிகொண்டுள்ள 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம், பொதுமக்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே சிங்களப் பெரும்பான்மையினரின் பாதுகாவலனாக தன்னைக்காட்டிக்கொள்ளும் அதே வேளை, சமாதானத்தை விரும்புபவராகவும் வலியுறுத்திக்கொள்ள இராஜபக்ஷ தள்ளப்பட்டுள்ளார். இந்த மோசடிக்காக கொஞ்சம் நம்பகத் தன்மையைப் பெற்றுக்கொள்வதன் பேரில், பெரும் வல்லரசுகளின் அனுசரணையிலான சமாதான முன்னெடுப்புகளின் ஆதரிக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்ட நாணயக்கார மற்றும் அவரது ஐ.இ.மு. யின் பக்கம் திரும்பியுள்ளார்.

இந்த "சமாதான முன்னெடுப்பானது" இலங்கை மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்கும் அப்பால், உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகள் மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை திருப்திப்படுத்துவதற்கானது அல்ல. துணைக்கண்டத்தில் குறிப்பாக இந்தியாவில், வளர்ச்சிகண்டுவரும் தமது மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு இலங்கையிலான யுத்தம் குறுக்கே நின்று அச்சுறுத்துவதன் காரணமாக, அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் பேச்சுவார்த்தை மூலமான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக நெருக்குவாரம் கொடுத்து வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே, வன்முறைத் தாக்குதல்களில் இராணுவ சிப்பாய்கள், புலிகளின் அலுவலர்கள் மற்றும் போராளிகள் மற்றும் பொதுமக்களுமாக 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அழுத்தங்களின் கீழ், கொழும்பு அரசாங்கமும் புலிகளும் மூன்று வருடங்களின் பின்னர் முதற்தடவையாக கடந்த பெப்பிரவரியில் ஜெனீவாவில் சமாதானப் பேச்சுக்களை நடத்தின. யுத்தநிறுத்தத்தை பேணுவதைத் தவிர வெறொன்றிலும் இரு தரப்பும் உடன்பாடுகாணாத அதே வேளை, இராஜபக்ஷவின் பங்காளிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் பேச்சுவார்த்தையின் முடிவுகளை அரசியல்யாப்பிற்குப் புறம்பானது என்றும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயல் எனவும் கண்டனம் செய்தன.

இராஜபக்ஷ இந்த இனவாத தீவிரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த போதிலும், நாணயக்கார தொடர்ந்தும் ஜனாதிபதியைப் பற்றி மிகவும் புகழ்பாடும் வார்த்தைகளில் பேசுகிறார். மார்ச் 12 அன்று கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்தில், நாடு மீண்டும் யுத்தத்தை நோக்கிச் செல்கிறது என்ற கூற்றை நிராகரித்தார். "மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியில் இருப்பது விரைவில் யுத்தத்தையும் இனவாதப் படுகொலைகளையும் கொண்டுவரும் என சொல்பவர்களும் உள்ளனர். ஆனால் அவர்களது இழிந்த விருப்பங்கள் தோற்றுப்போய்க் கொண்டிருக்கின்றன. அவர்களது எதிர்பார்ப்புகள் மட்டந்தட்டப்பட்டுள்ளன," என அவர் பிரகடனம் செய்தார்.

"ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் உயர்ந்தளவில் செயற்படுகின்றார். ஆகவே, இந்த நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமத்துவத்துடன் வாழவும் அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் மஹிந்தவின் சிந்தனையின் மூலம் ஒரு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்த அவர் உள்ளூராட்சி சபையில் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்குமாறு கூடியிருந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இராஜபக்ஷவிற்கு வெட்கமின்றி வக்காலத்து வாங்குபவராக நாணயக்கார மாற்றம் பெற்றமையானது கடந்த காலத்தில் இருந்து விலகுவதல்ல. மாறாக அது அவரது நீண்டகால சந்தர்ப்பவாத அரசியலின் தர்க்கரீதியான வெளிப்பாடேயாகும். தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிராகரிப்பதே அவரது அழுகிப்போன சூழ்ச்சித் திட்டத்தின் மையமாக உள்ளது. அவர் மீண்டும் மீண்டும் தொழிலாளர் வர்க்கத்தை இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு கன்னைக்கு கீழ்ப்படுத்தவே முயற்சித்து வந்துள்ளார். இதற்கு முன்னர் அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற வாய்வீச்சுக்களின் மூலம் ஆளும் தட்டுடனான தமது சமரசத்தை மூடி மறைக்க முயற்சித்து வந்துள்ளார். இப்போது அதுவும் தூக்கியெறியப்பட்டுள்ளது.

1964ல் தனது ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளை முழுமையகக் கைவிட்டு ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க முதலாளித்துவ கூட்டரசாங்கத்துடன் சேர்ந்துகொண்ட லங்கா சமசமாஜக் கட்சியில் (ல.ச.ச.க) நாணயக்கார ஒரு இளைஞர் குழு தலைவராக தனது பணியை தொடங்கினார். இந்த முடிவை முழுமையாக ஆதரித்த நாணயக்காரவைப் பொறுத்தவரையில், அடிப்படையற்ற சூழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இரட்டைக் கொடுக்கல் வாங்கல்களையும் கொண்ட நீண்டகால வாழ்க்கைப் போக்கின் ஆரம்பமாகும். இது இலங்கையில் நாற்றமெடுத்த தீவிரவாத அரசியல் உலகிலும் கூட, சாத்தியமான வகையில் விஞ்ச இயலாதது போன்றதாகும்.

1970 முதல் 1975 வரை ல.ச.ச.க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நாணயக்காரவுக்கு, தீவின் தென்பகுதியில் ஜே.வி.பி தலைமையிலான சிங்கள இளைஞர்களின் எழுச்சியை இரத்தக்களரி இராணுவ நடவடிக்கையால் நசுக்கிய குற்றத்திலும் பங்குண்டு. 1972ல் பெளத்தத்தை அரச மதமாகவும் மற்றும் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கிய இனவாத அரசியல் அமைப்பை திணித்ததையும் அவர் ஆதரித்தார். இன்று நாணயக்கார அனைவரது சமத்துவம் பற்றி பேசும் அதே வேளை, கூட்டரசாங்கத்தால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கைகளை அவர் ஆதரித்தார். இந்த பாரபட்ச நடவடிக்கைகள் உள்நாட்டு யுத்தத்திற்கான அடித்தளத்தை இட்டதில் நேரடியாக பங்களிப்பு செய்துள்ளன.

நாணயக்கார ல.ச.ச.க வில் இருந்து பிரிந்தது கட்சி 1975ல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்தே அன்றி எந்தவொரு கொள்கை அடிப்படையிலும் அல்ல. ல.ச.ச.க தொழிலாளர்கள் மத்தியில், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பரந்தளவில் அதிருப்த்திக்குள்ளானதை அடுத்து, நாணயக்கார ஏனைய ல.ச.ச.க உறுப்பினர்களுடன் சேர்ந்து தமது அரசியல் குறிக்கோள்களுக்கான ஒரு வாகனமாக நவ சமசமாஜக் கட்சியை (ந.ச.ச.க) ஒரு புதிய "இடதுசாரிக்" கட்சியாக நிறுவ முன்வந்தார். 1978ல் நடந்த தேர்தலில் ஐ.தே.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், ஐ.தே.க ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் திறந்த பொருளாதார கொள்கைக்கு எதிராக 1980களின் பொது வேலை நிறுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த தொழிலாளர்களின் போராட்டத்தை கீழறுப்பதில் ந.ச.ச.க தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது.

1983ல் உள்நாட்டு யுத்தம் வெடித்ததில் இருந்து, இந்த மோதல்கள் தமது பொருளாதார நலன்களை மேலும் மேலும் கீழறுத்த அளவில், புலிகளுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை செய்துகொள்ள முயற்சித்த ஆளும் தட்டின் கோஷ்டிகளுக்கு ந.ச.ச.க. யும் மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற ஜ.இ.மு மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் "இடதுசாரி" பரிந்துரையாளர்களாக செயற்பட்டுள்ளன. எந்தவொரு தீர்க்கமான திருப்புமுனையிலும், பிரதான முதலாளித்துவக் கட்சிகள் இந்தக் கட்சிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை தடுப்பதற்காகவும் அவர்களை நாடிவந்துள்ளன.

1986ல் யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியத் துருப்புக்களை நிறுத்துவது சம்பந்தமான ஒரு சமாதான உடன்படிக்கைக்கு சட்டப்பூர்வ தகமையைப் பெற்றுக்கொள்வதற்காக கட்சிகளின் வட்ட மேசை மாநாட்டிற்கு ஜயவர்தன அழைப்புவிடுத்த போது ந.ச.ச.க. யும் அதில் பங்குபற்றியது. 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையானது இந்திய "அமைதிகாக்கும் படை" புலிகளை நிராயுதபாணிகளாக்க எடுத்த முயற்சியால் தூண்டிவிடப்பட்ட கசப்பான மோதல்களால் முற்றிலும் அழிவுகரமானது என்பது ஒப்புவிக்கப்பட்டது.

1994ல், ஸ்ரீ.ல.சு.க. யும் மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவும் ஒரு முன்னேற்றமான பதிலீட்டையும் மற்றும் யுத்தத்திற்கு முடிவுகாணும் வழியையும் வழங்குவர் என்ற மாயையை ந.ச.ச.க. பரப்பியது. தூரத்தில் இருந்து குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்குவதில் மனநிறைவடையாத நாணயக்கார, ஸ்ரீ.ல.ச.க. தலமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் பங்காளியாக இருந்த ல.ச.ச.க. யில் மீண்டும் சேர்ந்துகொண்டார். சரியான முறையில் அவருக்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் கொடுக்கப்பட்டதுடன் அவர் 2000 ஆண்டுவரை அதில் இருந்தார்.

குமாரதுங்கவின் சமாதான முயற்சிகள் துரிதமாக கவிழ்ந்து போனதோடு புதிய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1995 மே மாதம் யுத்தத்தை உக்கிரப்படுத்தியது. யுத்த வரவுசெலவுத் திட்டத்திற்கும் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பிரகனப்படுத்தியதற்கும் வாக்களிக்க நாணயக்கார தயக்கம் காட்டவில்லை. "யுத்த நிலைமை தோன்றுமானால், நாங்கள் அதற்கு எதிராகவும் தயாராகவும் வேண்டும்" என அவர் பேரினவாத வண்டியில் நின்றுகொண்டு விவாதித்தார்.

யுத்தம் இழுபட்டுச் சென்றதோடு வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றியும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் போன நிலையில் வெகுஜனங்கள் மத்தியில் அதிருப்தியும் பகைமையும் வளர்ச்சியடைந்தது. மீண்டும் தனது உபாயத்தை மாற்றிய நாணயக்கார, அரசாங்கத்தில் இருந்தும் ல.ச.ச.க. யில் இருந்தும் 1999 ஏப்பிரலில் வெளியேறியதோடு தன்னை சமாதானப் பேச்சாளராக வடிவம் மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது ஜ.இ.மு, சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகையாக குமாரதுங்கவின் "அதிகாரப் பரவலாக்கல் திட்டத்திற்கு" ஊக்கமளித்தது.

ஆனால், பொதுஜன முன்னணியின் திட்டம் தோல்வியடைந்து குமாரதுங்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்த போது, அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற நடைமுறைகளை எதிர்க்கும் சாக்கிப்போக்கில் தலைகீழாக மாறி ஐ.தே.க. யின் பாதையில் விழுந்தார். தேசியத் தொலைக்காட்சியில் பேசிய அவர், தனது புதிய சந்தர்ப்பவாத திருப்பத்தை நியாயப்படுத்தும் வகையில் பின்வருமாறு பிரகடனம் செய்தார்: "வரட்சிக் காலத்தில் அதே தண்ணீர் கிடங்கில் தண்ணீர் குடிக்கும் காட்டு மிருகங்களைப் போல், நாங்களும் கடந்கால மனக்சப்புக்கள் அனைத்தையும் மறந்து ஜனாதிபதியின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட ஐக்கியப்பட வேண்டும்."

பெரும் வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளின் அழுத்தத்தின் கீழ், தீவை வெளிநாட்டு முதலீடுகளுக்குத் திறந்துவிடுவதற்கான வழிமுறையாக ஐ.தே.க. "சமாதான முன்னெடுப்பின்" வீரமுதல்வனாக உருவாகியது. இப்போது யுத்தத்தை தொடங்கி அதை முன்னெடுத்ததற்கு நேரடி பொறுப்பாளியான வலதுசாரிக் கட்சியை சமாதானத்திற்கான வாகனமாக காட்டி அதற்கு ஆதரவளிப்பதில் ந.ச.ச.க. யுடன் நாணயக்காரவும் இணைந்துகொண்டார். 2004 ஜனவரியில், ஐ.தே.க. யின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிராக வேலை நிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகள் எழுச்சிபெற்ற நிலைமைகளின் மத்தியில், வளர்ச்சியடையும் இயக்கத்தை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்க ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ந.ச.ச.க மற்றும் ஜ.இ.மு தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்தனர்.

2004 ஏப்பிரலில் ஐ.தே.க. அதிகாரத்தை இழந்தபோது, குறிப்பாக கடந்த நவம்பர் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. யின் ஜனாதிபதி வேட்பாளராக இராஜபக்ஷ தோன்றியபோது நாணயக்கார தனது விசுவாசத்தை மீண்டும் ஸ்ரீ.ல.சு.க. க்கு மாற்றினார். கொழும்பு மேயர் பதவியை வெல்வதில் நாணயக்கார சமாளித்துக்கொண்டிருந்தால், இராஜபக்ஷ அரசாங்கம் சாதாரண உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை இட்டுநிரப்பும் என்ற பொய்யைப் பரப்புவதற்காக அவர் அந்தப் பதவியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்குள்ளும் இராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குள்ளும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை அடக்கவும் கீழறுக்கவும் அவர் எதிர்பார்த்திருப்பார். ஒரு வாரத்திற்கும் சற்று முன்னதாக, பல லட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிரான பகைமையை பிரதிபலிக்கும் வகையில் அவர்களது தொழிற்சங்கக் கமிட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்குகளை நிராகரிக்குமாறு உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தது. தொடர்ந்தும் வழங்கிப் பயனற்றுவிட்ட அதே வழியில் பிரதிபலித்த நாணயக்கார, ஐ.தே.க. யை விட சுதந்திர முன்னணி குறைந்த கெடுதி என கூறி சுதந்திர முன்னணியை ஆதரித்தார்.

நாடு உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருப்பதோடு வெளிநாட்டு மூலதனம் மேலும் பொருளாதார மறுசீரமைப்பைக் கோருகின்ற நிலையில் முதலாளித்துவ வர்க்கம் தனது பலவீனத்தைப் பற்றி உண்மையிலேயே கவனமாக இருக்கின்றது. ஜே.வி.பி உட்பட எல்லா பிரதான கட்சிகளும் அதிகளவில் அதிருப்திக்குள்ளாகியுள்ள நிலையில், நாணயக்கார மீண்டும் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளார். சுதந்திர முன்னணி பட்டியலில் அவரது பெயர் இருப்பதானது, கொழும்பிலும் மற்றும் தீவு பூராவும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெட்டகத்தில் உள்ளது என்ன என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டு வருவதற்குப் பதிலாக இராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு எதிராகவே செயற்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved