World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைLocal election results in Sri Lanka reflect widespread fears of war இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் பரந்தளவிலான யுத்த பீதியை பிரதிபலிக்கின்றன By Sarath Kumara இலங்கையில் மே 20 நடந்த இறுதிச் சுற்று உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியான வெற்றியைப் பெறுவதற்கு பெரும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த போதிலும் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளன. தேர்தல் நடந்த 20 உள்ளூராட்சி சபைகளிலும், சுதந்திர முன்னணியால் ஐந்து சபைகளை மட்டுமே வெல்ல முடிந்ததோடு, எல்லாவற்றுக்கும் மேலாக, கெளரவத்தை வெளிப்படுத்தும் கொழும்பு மாநகர சபையை வெற்றிகொள்ளத் தவறியது. பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளுக்கு மார்ச் 30 தேர்தல்கள் நடந்தன. எவ்வாறெனினும், சட்ட ரீதியான தவறுகள் காரணமாக கொழும்பு உட்பட 18 பிரதேசங்களுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதோடு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு சபைகளுக்கான தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட்டன. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இரு சபைகளுக்கான தேர்தல்கள் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலில் தேர்தல் நடந்த 266 சபைகளில் 233 சபைகளை குறிப்பிடத்தக்க பெரும்பான்மையுடன் சுதந்திர முன்னணி வென்றது. இந்தத் தேர்தல்கள் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்பட்ட பெப்பிரவரி மாதத்தில் இடம்பெற்றதால், அது சமாதானத்தை முன்னெடுப்பதாகக் கூறும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கூற்றுக்கு கொஞ்சம் நம்பகத் தன்மையை கொடுத்தது. சபைகளை ஊக்குவிக்கும் அற்ப வாக்குறுதிகளை வழங்க சுதந்திர முன்னணிக்கு தனக்குள்ள அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டது. ஆயினும் அண்மையில் நடந்த தேர்தல்கள் நிழல் யுத்தத்தின் கீழேயே நடந்தன. எல்லா சாத்தியமான வழிகளிலும் அரசாங்க சார்பு துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகை வெளிப்படையான ஆத்திரமூட்டல்களால் பதட்டநிலைமைகளுக்கு எண்ணெய் வார்க்கப்பட்டதோடு வன்முறைகள் உக்கிரமடையவும் வழியமைத்தது. ஏப்பிரல் 7 அன்று புலிகளுக்கு சார்பான ஒரு முன்னணி அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் ஏப்பிரல் 25 நடந்த தற்கொலைத் தாக்குதலை அடுத்து பகிரங்கமான மோதல்கள் வெடித்ததோடு இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான திட்டங்கள் ஓரங்கட்டப்பட்டன. இந்தத் தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா சற்றே உயிர்தப்பினார். மே 20 நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் குறைந்த வாக்குப் பதிவுகளும் மற்றும் சுதந்திர முன்னணிக்கு எதிரான மாற்றமும் மீண்டும் யுத்தம் வெடிக்கவுள்ளது சம்பந்தமாகவும் அதே போல் துரிதமாக அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுபற்றியும் பரந்தளவில் பீதி ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. இது வெறுமனே சுதந்திர முன்னணி மீதான அதிருப்தி மட்டுமன்றி பிரதான எதிர்க் கட்சி மீதான அதிருப்தியுமாகும். சமாதானப் பேச்சுக்களின் வீரர்களாக ஆர்பரித்த ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க) அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டின் பாதையிலேயே விழுந்துள்ளது. வாக்களிப்பு வீதம் மிகப் பெரும்பாலான சபைகளில் 55 மற்றும் 62 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக இருந்தது. கொழும்பு மாநகர சபையில் இது மிகக் குறைந்த அளவான 54.29 சதவீதமாக இருந்தது. இது கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ரீதியில் சராசரியாக 75 வீதமாகவும் மற்றும் மார்ச் மாதம் நடந்த முதலாவது சுற்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் 65 சதவீதமாக இருந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மட்டுமே வாக்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்ததாக இருந்தது. ஆனால் அங்கு வாக்காளர்கள் பிரதானக் கட்சிகளுக்கு புறந்தள்ளி இனவாதக் கட்சிகளுக்கும் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்குமே வாக்களித்தனர். சமாதானப் பேச்சுக்களுக்கு மீண்டும் திரும்ப அழைப்புவிடுத்தும் மற்றும் 2004 டிசம்பர் சுனாமி பேரழிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா) கிழக்கில் உள்ள எட்டு உள்ளூராட்சி சபைகளில் ஆறு சபைகளைக் கைப்பற்றியது. இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நவீன்தன்வெளி சபையைக் கைப்பற்றியது. நாட்டின் அரசியல் விவகாரங்களில் வரலாற்றுரீதியில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஏற்றிருந்த தலைநகரான கொழும்பின் மாநகர சபையிலேயே அனைவரது கவனமும் இருந்தது. மொத்தம் 12 கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட்டன. இதற்கு முன்னர் அறிந்திராத ஒரு சுயாதீனக் குழு ஐ.தே.க யின் ஆதரவுடன் சுதந்திர முன்னணியை படு தோல்வியடையச் செய்தது. சுதந்திர முன்னணி பெற்ற 57,158 வக்குகளுக்கு எதிராக இந்தக் குழு 82,580 வாக்குகளைப் பெற்றது. இராஜபக்ஷ கொழும்பை வெற்றிகொள்ளும் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தார். அவர் ஐ.தே.க ஆட்சிக்கு முடிவுகட்ட விரும்பியது மட்டுமன்றி, இனவாத வழிக்கு குறுக்காக தலைநகரில் உள்ள கணிசமானளவு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரிடமிருந்தும் வாக்குகளை வெல்லும் வல்லமை தனக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தவும் விரும்பினார். சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்க மேயர் பதவிக்கான வேட்பாளராக ஒரு நீண்டகால தீவிரவாத சந்தர்ப்பவாதியான வாசுதேவ நாணயக்காரவை இராஜபக்ஷ தேர்ந்தெடுத்தார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் (ஜ.இ.மு) தலைவரான நாணயக்கார, பெரும் வல்லரசுகள் மற்றும் வர்த்தகர்களின் ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்படும் சமாதான முன்னெடுப்பு எனப்படுவதை ஆதரிப்பவராகும். இராஜபக்ஷ யுத்தத்திற்கு எதிரான உணர்வுகளையும், அதே போல் குப்பைக்கூளம் சேகரிக்கும் சேவையிலான சீரழிவு சாட்சியாக இருக்கும் நகரின் உட்கட்டமைப்பு சீரழிவு சம்பந்தமான அதிருப்தியையும் சேகரித்துக்கொள்ள எதிர்பார்த்தார். இராஜபக்ஷவும் நாணயக்காரவும் கொழும்பை சில ஆண்டுகளுக்குள் நவீன நகரமாக மாற்றியமைக்க வாக்குறுதியளித்தனர். ஐ.தே.க பட்டியலை சில நுட்ப அடிப்படையில் நிராகரிப்பதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவு நாணயக்காரவின் வாய்ப்புகளை மேலும் பெரிதாக்கியது. எவ்வாறெனினும் இவற்றில் எதுவும் வாக்குகள் வீழ்ச்சிகண்ட சுதந்திர முன்னணிக்கு உதவவில்லை. ஐ.தே.க. ஆதரவிலான சுயாதீனக் குழு வென்ற 23 ஆசனங்களுடன் ஒப்பிடுகையில் சுதந்திர முன்னணி 14 ஆசனங்களில் மட்டுமே வென்றது. அடுத்தநாள் சிரச தொலைக்காட்சியில் தோன்றிய நாணயக்கார: "எங்களால் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்தும் வாக்குகளைப் பெறமுடியாமல் போனதோடு சிங்களவர் மத்தியிலும் வாக்குகளை அதிகரிக்க முடியாமல் போனது. இதற்கு யுத்தம் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற பிதியும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பின் சுமையுமே காரணமாகும்," என்றார். டெயிலி மிரர் பத்திரிகையின்படி, கடந்த வார தேர்தலில் நடந்த பரிசோதனையில் கட்சி கண்ட வீழ்ச்சி பற்றி இராஜபக்ஷ "கவலை" தெரிவித்தார். ஆனால், தனது "முதல் தோல்வியை" துடைத்துத் தள்ளியதோடு நாணயக்காரவின் கருத்துக்களையும் நிராகரித்த அவர், அதற்குப் பதிலாக தேர்தல் முடிவுகளுக்காக கட்சி அமைப்பாளர்களின் குறைந்த ஆதரவே காரணம் என குற்றஞ்சாட்டினார். கொழும்பு தேர்தல் முடிவுகளை ஒரு வெற்றி என ஐ.தே.க. கூறிக்கொண்டாலும், அதை வகைப்படுத்த முடியாததாகும். பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில் ஐ.தே.க. ஆதரவிலான சுயேட்சைக் குழு, 21 வீதமான வாக்குகளை மட்டுமே பெற்றது. இவற்றில் பெரும்பான்மையானவை ஐ.தே.க. விற்கான ஆதரவு அன்றி சுதந்திர முன்னணிக்கு எதிரான கண்டன வாக்குகளேயாகும். தமிழ் வர்த்தகரான இராஜேந்திரன் தலைமையிலான இந்த சுயேட்சைக் குழு, மேயரையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தாலும் 53 ஆசனங்களைக் கொண்ட சபையில் அதற்குப் பெரும்பான்மை கிடையாது. உண்மையில் யார் கொழும்பு மாநகர சபையின் உயர் பதவியைப் பெறுவார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. ஐ.தே.க. ஆதரவைப் பெறுவதற்கான கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பாகமாக, சுயேட்சைக் குழுவினர் சிறிது சிறிதாக தங்களது ஆசனங்கள் ஐ.தே.க. உறுப்பினர்களால் நிரப்பப்படுவதற்கு அனுமதிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஐ.தே.க.வின் நீண்டகால உறுப்பினரான சிரிசேன குரேயை மேயராக அந்தக் குழு நியமிக்கவுள்ளது. எவ்வாறெனினும், சுயேட்சைக் குழுவின் பல வேட்பாளர்கள் தம்மை இராஜினாமாச் செய்யவைப்பதற்கான ஐ.தே.க. யின் முயற்சிகளை எதிர்க்கின்றனர். நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்டதோடு முதல் சுற்று உள்ளூராட்சி சபைத் தேர்தலிகளிலும் படுதோல்வியடைந்த ஐ.தே.க, தனது அரசியல் நற்பேறு புதுப்பிக்கபடுவதற்கான ஆதாரம் என கொழும்பு தேர்தல் முடிவுகளை இறுகப் பற்றிக்கொண்டுள்ளது. அது கொழும்புக்கு அருகில் உள்ள ஒரு பிரதான நகர்ப்புறமான கம்பஹா நகரசபையையும் வெற்றிகொண்ட போதிலும், பிரதான தென்பகுதி நகரான காலியில் சுதந்திர முன்னணியிடம் தோல்விகண்டது. சுதந்திர முன்னணி மற்றும் ஐ.தே.க ஒவ்வொன்றும் கிராமப்புற பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் மூன்று சிறிய நகரசபைகளை வென்றுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், அரசாங்கத்தின் சிங்களப் பேரினவாத பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), எந்தவொரு சபையையும் வெல்லத் தவறியது. மார்ச் மாதம் நடந்த முதல் சுற்றில் அது ஒரு சபையையே கைப்பற்றியது. இனவாத அரசியல் மற்றும் கிராமப்புற மக்கள்வாதத்தின் கலவையை அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி, புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக ஆரவாரம் செய்கின்றது. கொழும்பில் ஜே.வி.பி.க்கான வாக்குகள் 2002 தேர்தலிலும் பார்க்க மூன்றில் ஒன்று என்ற அளவில் வீழ்ச்சிகண்டுள்ளது. அது கம்பஹாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில் 24 வீதத்தைப் பெற்ற போதிலும் ஜே.வி.பி.யின் தென்பகுதிக் கோட்டையாகக் கருதப்படும் காலியில் 6.6 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இராஜபக்ஷவின் இன்னுமொரு இனவாத பங்காளியான ஜாதிக ஹெல உறுமய மோசமான நிலையை எட்டியது. அது கொழும்பில் 3,281 வாக்குகளையும், கம்பஹாவில் 986 வாக்குகளையும் மற்றும் காலியில் 353 வாக்குகளையும் மட்டுமே பெற்றது. பெளத்த உயர் பீடம், இராணுவம் மற்றும் அரச இயந்திரத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமய, இதற்கு முன்னர் தலைநகரில் உயர்ந்த மட்டத்தில் வாக்குகளைப் பெற்ற அளவில், இம்முறை கொழும்பு தேர்தல் முடிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்பட்ட கம்பளை மற்றும் பாதஹேவாஹெட்ட போன்ற கிராமப்புற பிரதேசங்களில் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் ஜாதிக ஹெல உறுமயவிற்கு ஆதரவளித்ததால் அங்கு மட்டும் அது கணிசமான வாக்குகளைப் பெற்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், வாழ்க்கைத் தரம் மீதான சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் தற்போதைய தாக்குதல்கள் சம்பந்தமான ஆழமான அதிருப்தியையும் மற்றும் நாடு மீண்டும் உள்நாட்டு யுத்தத்தை நோக்கித் தள்ளப்படுவது சம்பந்தமான பீதியையும் ஒரு திரிபுபடுத்தப்பட்ட பாங்கில் வெளிப்படுத்தியுள்ளது. தனது கொள்கைகளைத் திருப்பிப் பார்ப்பதற்குப் பதிலாக, இராஜபக்ஷ ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் புலிகளுக்கு எதிரான உக்கிரமான நிலைப்பாட்டை பேணிக்காக்கின்றார். அவரது அரசாங்கம் நீண்ட விளைவுகளைக் கொண்ட தேசப்பற்று சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருப்பதோடு, இந்த சட்டம் கடுமையான ஊடக தணிக்கையையும் வலுக்கட்டாயமாக இராணுவத்திற்குச் ஆள்சேர்ப்பதையும் அமுல்படுத்தவுள்ளது. |