World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Police threaten Socialist Equality Party petitioners in Illinois சோசலிச சமத்துவக் கட்சியின் மனுதாரர்களை இல்லிநோயில் போலீசார் அச்சுறுத்துகின்றனர் By the editorial board சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான Joe Parnarauskis ஐ இல்லிநோய் 52 வது தொகுதியில் மாநில செனட் மன்ற வாக்குச்சீட்டுல் பதிவு செய்வதற்காக வேட்பு மனுக்கள் கொடுக்கவேண்டிய ஜூன் 26 காலக் கெடு அருகில் வந்து கொண்டிருக்கும் நிலையில், உள்ளூர் அதிகாரிகள் கையெழுத்துக்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத வகையில் SEP க்கு எதிராக தடுப்பு, தடை முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த வாரம் பொது நூலகங்களுக்கு வெளியே உள்ள நடைபாதைகளில் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று SEP ஆதரவாளர்கள் தடைசெய்யப்பட்டனர். இல்லிநோய் வளாகத்திற்கு அருகே உள்ள புறநகரான அர்பனாவில் பொதுத் தெருக்களில் மனுக்களில் கையெழுத்து வாங்க முற்பட்ட பொழுதும் அவர்கள் போலீசாரால் தொல்லைக்காளாக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர். பர்னராஸ்கிசின் பிரச்சாரத்திற்கான ஆதரவாளர்கள், இல்லிநோய் மாநிலம் நிர்ணயித்துள்ள குறைந்த எண்ணிக்கை தேவையான 2,985க்கும் மேலாக, ஏற்கனவே 3,500 கையெழுத்துக்களை சேகரித்துள்ளனர். ஆனால் ஜூன் 26ம் தேதிக்குள் 5,000 கையெழுத்துக்களை சேகரிக்க விரும்புகின்றனர்; பதிவு செய்யப்பட்டுள்ள செல்லத்தக்க கையெழுத்துக்களை மாநில ஜனநாயகக் கட்சி குறிப்பாகவும் ஒருதலைப்பட்சமாகவும் சவாலுக்கு உட்படுத்த விரும்பும் நிலையில், பாதுகாப்பிற்காக கூடுதலான கையெழுத்துக்களை சேகரிக்கவேண்டும் என்பதுதான் நோக்கமாகும். உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விரும்பவர்கள் அனைவரும் சாம்பெயின் மற்றும் அர்பனா நகர மேயர்களின் அலுவலகங்களுக்கு முதல் திருத்த உரிமைகளை மீறும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பர்னாரோஸ்கிசின் பிரச்சாரம் அரசியல் குறுக்கீடு, அச்சுறுத்தல் இன்றி தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மின்னஞ்சல்கள் அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்படுகிறார்கள். தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடையே பரந்த அளவில் ஆதரவை ஏற்படுத்தியுள்ள SEP பிரச்சாரத்தை தடுக்கும் அதிகாரிகளின் முயற்சிகள், பர்னாராஸ்கிஸ் வாக்குச்சீட்டில் சேர்க்கப்பட்டால் அவருடைய வேட்பாளர் நிலையானது ஈராக்கியப் போருக்கு மற்றும் வாழ்க்கை தரங்கள், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போருக்கு அது ஒரு குவிப்பு முனையாக அமையக்கூடும் என்ற அரசியல் நடைமுறையின் பயத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியின் அலுவலர்கள் வாக்குப் பதிவில் இருந்து SEP வேட்பாளர் ரொம் மக்கமானை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வி அடைந்தனர்; அவரோ சாம்பெயன்-அர்பனா தொகுதியில் இருந்து தேவைக்கும் மிக அதிகமான நெறியான கையெழுத்துக்களை சமர்ப்பித்திருந்தார். நூற்றுக்கணக்கான சட்ட நெறிக்குட்பட்டு சேகரிக்கப்பட்டிருந்த கையெழுத்துக்கள் ஒருதலைப்பட்ச, அற்ப எதிர்ப்புக்களின் அடிப்படையில் அப்பொழுது மாநிலத்திலுள்ள ஜனநாயகக் கட்சியில் அரசியல் அதிகாரம் மிகவும் பெற்றுள்ள, மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவரான மைக் மாடிகனுடைய அலுவலகத்தில் இருந்து SEP மனுக்களின் மீதாக சவால் செய்யப்பட்டன. SEP சட்டபூர்வ நடவடிக்கையை தொடங்கி, நூற்றுக்கணக்கான உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் சாம்பெயின் தொகுதி எழுத்தர் அலுவலகத்திற்கு மக்காமன் வாக்குப் பதிவுச் சீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரி மின்னஞ்சல்களை அறுப்பிய பின் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் சவாலை நிறுத்திக் கொண்டனர். மக்காமன் தேர்தலில் 1,466 வாக்குகளை அல்லது 3.5 சதவிகிதத்தைப் பெற்றார்.இப்பொழுது Joe Parnarauskis ஐ வாக்குச் சீட்டில் பதிவு செய்யும் முயற்சிகள் தீவிரமாகியுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள் மீண்டும் ஜனநாயக உரிமைகள், வாக்களிக்கும் உரிமைகள் ஆகியவற்றை மிதிக்கும் வகையிலும், தொழிலாளர்கள் இரு போர் ஆர்வம் உடைய, பெருவணிகத்திற்கு ஆதரவாக உள்ள ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பதிலாக ஒரு சோசலிச வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும் உரிமையில் இருந்து தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன கடந்த வாரம் SEP இன் பிரச்சாரகர்கள் சாம்பெயின் மற்றும் அர்பனா நகரங்களில் பொது நூலகங்களுக்கு வெளியேயும் நடைபாதைகளிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என உத்திரவு இடப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் உள்ள பொது நூலக நிர்வாகம் தங்களுடைய கடும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு போலியான, அற்பத்தனமான விளக்கங்களை கொடுத்தனர். இதன்பின்னர், சனிக்கிழமை ஜூன் 17ம் தேதி மாலை, ஒரு முக்கிய தெருவில் மனுக்களை சுற்றறிக்கைக்கு விட்டுக்கொண்டிருந்த SEP பிரச்சாரத் தொண்டர் ஒருவர் சாம்பெயின் போலீஸ் அதிகாரியினால் தடுத்து நிறுத்தப்பட்டார். SEP பிரச்சாரகருடைய வாகனம் ஒட்டும் உரிமம் மற்றும் சமூகப் பாதுகாப்பு எண் ஆகியவற்றை அதிகாரி கோரினார். இதைத்தவிர அவைபற்றிய தகவலை அவர் பிரச்சாரகருடைய உடல் அடையாளங்களுடன் போலீஸ் தலைமை அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தினார். மனுக்கொடுப்பது பற்றி தனக்கு ஏதேனும் புகார் வந்தால் பிரச்சாரகரை கட்டாயமாக வெளியேறுமாறு உத்திரவிட நேரிடும் என்றும் இப்பெண் போலீஸ் அதிகாரி பலமுறையும் கூறினார். பிரச்சாரகர் எதிர்ப்புக்களை தெரிவித்தபோது, பலமுறை அவ்வதிகாரி "என்னுடன் வாதம் வேண்டாம்" என்று கூறினார். இதற்கிடையில், சாம்பெயின் மற்றும் அர்பனா மேயர்கள் SEP பிரச்சாரகர்கள் நூலகங்களுக்கு வெளியே உள்ள நகராட்சி நடைமேடைகளில் கையெழுத்துக்கள் வாங்குவதை தடுப்பது தெளிவாக அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அரசாங்க வக்கீலான ஆண்ட்ரூ ஸ்பைகலுக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் விடையிறுக்கவில்லை. தடையை தக்க வைத்துக்கொள்ளவும் மூன்றாம் கட்சி மனுதாரர்கள் வாக்குப்பதிவிற்கான தேதி கெடுக்கள் முடியும் வரை நேரத்தை கடத்தலாம் என்ற நோக்கத்தில் நகர அதிகாரிகள் ஈடுபட்டிருக்கக்கூடும். ஜூன் 16 வெள்ளியன்று உலக சோசலிச வலைத் தள நிருபர் இரு மேயர்களின் அலுவலகங்களுடனும் தொடர்பு கொண்டார். அர்பான மேயர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த லோரல் பிரஸ்ஸிக் கருத்தின்படி "மோதல்கொள்ளும் சட்ட முன்னோடிகளை" ஆராயும் வரை பொது நூலகத்திற்கு வெளியே மனு சேகரிக்க வேண்டும் என்ற SEP கோரிக்கை பற்றி நகரத்தின் சட்ட அலுவலகம் கருத்துத் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார். பொது நூலகத்தின் மீது தன்னுடைய அலுவலகத்திற்கு எக்கட்டுப்பாடும் கிடையாது என்றும் இப்பெண்மணி கூறினார்; உண்மை என்னவென்றால் இவர்தான் நகரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். நூலக அதிகாரிகளின் நடவடிக்கைகள் மூலம் எழுந்துள்ள ஆழ்ந்த ஜனநாயக உரிமைப் பிரச்சினைகள் பற்றி மேயர் எந்த விவாதத்தையும் தவிர்த்து விட்டார். வலியுறுத்தப்பட்டபோது, பிரஸ்ஸிங் ஆரம்பத்தில் பர்னாராஸ்கிசிற்கு பொது நூலகங்களுக்கு வெளியே மனு சேகரிக்கும் "உரிமைகள் உள்ளன" என்று நினைத்ததாக கூறிய அவர் பின்னர் "நூலகத்தின் நிலை" பற்றியும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று கூறினார். உள்ளூர் வணிகர்களை அணுகி SEP அவர்களுடைய அனுமதியுடன் வாக்குச் சீட்டுப் பதிவிற்கான மனு கையெழுத்துக்களை நாடலாம் என்றும் அல்லது பிரச்சாரம் வீட்டிற்கு வீடு சென்று நடத்தப்படலாம் என்றும் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், பிரஸ்ஸிங்குடைய கருத்தில் பொது இடங்களில் -- குறைந்த பட்சம் சோசலிஸ்டுக்களுக்கேனும் -- மனுக் கையெழுத்துக்களை சேகரிக்கும் உறுதியளிக்கபப்பட்ட உரிமைகள் இல்லை என்பது இப்பெண்மணியின் கருத்து போலும். தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டபோது, சாம்பெயின் மேயரான குடியரசுக் கட்சியினரான ஜேரி ஷ்வீகர்ட் அடுத்த வாரம் வரை பொது நூலகத்திற்கு வெளியே மனுக்களில் கையெழுத்து சேகரிக்கும் விவகாரம் பற்றிய சட்ட பூர்வ இறுதி முடிவு எடுக்கப்பட முடியாது என்று கூறினார். மூன்றாம் கட்சி வேட்பாளர்களுக்காக மனுச்சேகரித்தலை -- இவ்வழக்கம் இல்லிநோய் மாநிலத்தில் சட்டபூர்வமாக இருப்பதுடன் முதல் திருத்தம், மாநில உள்ளூர், கூட்டாட்சி தேர்தல்களில் உறுதியளிக்கப்பட்டுள்ளது-- தவறான பொருட்களை விற்பதுடன் சமன்படுத்தி பேசினார். சாம்பெயின் மற்றும் அர்பனாவில் SEP பிரச்சாரத்தை ஒடுக்கும் முயற்சிகள் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது இரண்டு பெரிய கட்சிகளும் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சியேயாகும். ஒரு பொது நூலகத்திற்கு, அல்லது பொது பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகேயுள்ள நகரத் தெருவில், வெளியே அரசியல் உரையாடலில் ஈடுபடுதல் சட்டத்திற்குட்பட்டது இல்லை என்றால், பேச்சு சுதந்திரம், அரசியல் கருத்து வெளியிடும் சுதந்திரம் என்ற சொற்களுக்கு பொருள் இல்லை. ஈராக்கிலும் மற்ற இடங்களிலும் ஜனநாயகத்தை காக்கிறேன் என்று அவநம்பிக்கையான முறையில் கூறிக் கொள்ளும்போது, இரு கட்சிகளும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் அமெரிக்காவிற்குள்ளேயே தடையற்ற பேச்சுரிமை அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை முறையாக ஒடுக்கி வருகின்றன. SEP க்கு தடைகள் கொடுத்து, Joe Parnarauskis க்கு வாக்குப் பதிவுச் சீட்டில் இடம் கொடுக்காமல் அகற்றும் முயற்சிகள் அரசியல் நடைமுறையின் முழு நம்பகத்தன்மையையும் --இரு கட்சி முறை, செய்தி ஊடகம், அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத்தின் செயற்பாடு ஆகியவற்றை-- வினாவிற்கு உட்படுத்தும் நிலையைத்தான் தோற்றுவித்துள்ளன. ஈராக் போரை முடிவிற்குக் கொண்டுவருதல், செல்வந்தர், பெரும் செல்வந்தர் ஆகியோரிடம் இருந்து தொழிலாளர்களுக்கு செல்வத்தை மறுபங்கீடு செய்தல், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்றுள்ள தொழிலாள வர்க்கத்தின் மிக முக்கியமான தேவைகளுக்கு SEP இன் பிரச்சாரம் குரல் கொடுக்கிறது; இவ்வேலைத்திட்டம்தான் இரண்டு முக்கிய கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிரான அரசியல் வேலைத்திட்டம் ஆகும்.WSWS வாசகர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் காக்க விழைபவர்கள் அனைவருக்கும் SEP ஐ காத்திடவும் சாம்பெயின், அர்பனாவில் அதன் பிரச்சாரகர்களை காத்திடவும், உள்ளூர், மாநில அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்று மிகப் பரந்த, தீவிர முயற்சிகளில் ஈடுபடுமாறு அழைப்பை அவசரமாக வெளியிடுகிறோம். அதே நேரத்தில் எமது ஆதரவாளர்களை ஜூன் 26க்குள் எம்முடைய மனுக் கொடுக்கும் முயற்சியை கொண்ட உந்துதலில் சேருமாறும் அழைப்பு விடுக்கிறோம்.சாம்பெயின் மற்றும் அர்பனா மேயர்களின் அலுவலகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை அனுப்பி வையுங்கள். சாம்பெயின் மேயர் Jerry Schweighart க்கு jerryschweighart@ci.champaign.il.us. முகவரியிலும், அர்பனா மேயர் Laurel Prussing கிற்கு llprussing@city.urbana.il.us. என்ற முகவரியிலும் மின்னஞ்சல்களை அனுப்புங்கள். அனைத்து மின்னஞ்சல் பிரதிகளையும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். |