World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : கிழக்கு தீமோர் Australian government presses ahead with plans to dominate East Timor கிழக்கு திமோரில் ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்க நடவடிக்கைகள் By Peter Symonds கிழக்கு திமோரில் ஆக்கிரமிப்பை நிறுவிய பின்னர், நடக்கும் அரசியல் போரின் பல முனைகளிலும் பங்கு பெற்று தீவின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை உறுதி செய்யும் முயற்சிகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் ஆஸ்திரேலிய இராஜதந்திரிகள் எந்தப் புதிய ஐ.நா.திட்டத்தையும் கன்பரா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்வகையில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இத்தாக்குதலின் ஒருபகுதியாக, போட்டிநாடான போர்த்துக்கல்லுக்கு மிகவும் நெருக்கமான, மற்றும் ஆஸ்திரேலிய நலன்களுக்கு பெரும் தடை என்று கருதப்படும் பிரதம மந்திரி மாரி ஆல்கதிரிக்கு எதிராக இடைவிடா பிரச்சாரத்தை ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் மேற்கொண்டுள்ளது மேர்டொக்கின் ஆஸ்திரேலியன்' ஏடு மிகவும் வெளிப்படையாக இச்செயற்திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது. சனிக்கிழமையன்று வெளிவந்த கட்டுரை ஒன்றில் வெளியுறவு ஆசிரியர் கிரெக் ஷெரிடன், மற்ற நாடுகள் கிழக்குத் திமோரில் மீண்டும் போலீஸ் படையை நிறுவுவதற்கு நிதியம் தர வேண்டும் என்றும் கான்பரா முற்றுமுழுதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டுள்ளார். "கிழக்கு திமோர் மற்றும் அதன் வருங்கால கண்காணிப்பு தேவைகளை பற்றி இப்பொழுது ஐ.நா. பரிசீலித்துவருகிறது. இந்த வடிவமைப்பில் தன்னுடைய உரிமையை பற்றிச் சரியாக கொள்ளுவதுதான் ஆஸ்திரேலிய இராஜதந்திரத்தின் தற்பொழுதைய பணி ஆகும்." என்று அவர் எழுதியுள்ளார். போலீஸ் பயிற்சியை பொறுத்தவரையில், "ஆஸ்திரேலிய தனியே இவ்வேலையை முடிக்கவேண்டியது" மிக முக்கியமானது என்று ஷெரிடன் அறிவித்துள்ளார். "திமோரில் உள்ள ஐ.நா குழப்பத்திற்கும் செயலின்மைக்கும் ஒரு வழிதான். அதிலும் குறிப்பாக போர்த்துக்கீசிய செல்வாக்கு வளர்வதற்கு ஒரு பாதையாக உள்ளது; இது தீய விளைவைத்தான் கொடுக்கும்". இம்மாத தொடக்கத்தில் "கிழக்கு தீமோரில் ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர விரோதி" என்று போர்த்துக்கல்லை ஷெரிடன் முத்திரையிட்டு, அதனுடனான செல்வாக்கிற்கு திறவுகோலாக இருப்பவர் ஆல்கதிரிதான்" என்றும் எழுதினார். இந்த அளவிற்கு ஹோவர்ட் அரசாங்கம் வெளிப்படையாக பேச முடியாது; ஆனால் வாஷிங்டனுடைய ஆதரவுடன் கிழக்குத் திமோரில் எந்த ஐ.நா. நடவடிக்கைகளுக்கும் தான் தலைமை ஏற்பதை உறுதி செய்யும் வகையில் இராஜதந்திர முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய உந்துதலும் அவநம்பிக்கைத்தன்மை உடையதுதான்; ஏனெனில் நாட்டில் ஐ.நா தலையீடு நீடித்திருக்க வேண்டும் என்ற ஐ.நா. சபை, கிழக்கு திமோர் மற்றும் போர்த்துக்கல் ஆகியவை விடுத்துள்ள அழைப்பை அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து எதிர்த்துள்ளன. மே மாத தொடக்கத்தில்கூட கான்பராவும் வாஷிங்டனும் ஐ.நா பணி நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை கடுமையாக எதிர்த்தன. ஐ.நா.சபை தலைமைச் செயலாளர் கோபி அன்னன் கடந்த வாரம் தற்பொழுதைய ஆஸ்திரேலிய தலைமையிலான இராணுவப் படைகளில் இருந்து பொதுவான சமாதான நடவடிக்கைகைளை பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்வைத்த திட்டத்தை ஆஸ்திரேலிய தூதர் ரோபர்ட் ஹில் எதிர்த்தபோது ஐ.நா. பாதுகாப்பு சபையில் கருத்துவேறுபாடுகள் வெளிப்படையாக வெளிவந்தன. சாலமன் தீவுகளில் ஆஸ்திரேலிய தலைமையிலான ஆக்கிரமிப்பு திட்டத்தின் மாதிரியில், இங்கும் தனது பரந்த இராணுவ கட்டுப்பாட்டை வைத்திருக்க பல நாடுகளின் போலீஸ் படைக்கு தலைமை தாங்குவதும் மற்றும் முக்கியமான பதவிகளில் ஆஸ்திரேலிய அதிகாரிகளை இருத்துவேண்டும் என்பதே ஹோவாட் அரசாங்கத்தின் திட்டமாகும். கிழக்கு திமோரின் போலீஸ் படைக்கு ஓர் வெளிநாட்டவர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வாதிடும் ஹில் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கூட்டமைப்பின் போலீஸ் ஆணையர் மிக் பாமருக்கு இப்பதவி கொடுக்கப்படலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார். கிழக்கு திமோருக்கு போலீஸ் படைகளை அனுப்பியுள்ள போர்த்துக்கல்லும், மலேசியாவும் ஐ.நா. முழுமையாக இராணுவப் போலீஸ் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கோபி அன்னன் கூறியுள்ள கருத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன. போர்த்துக்கல்லின் தூதரான Joao Salgueiro பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் "கிழக்கு திமோர் ஐ.நாவின் மகவு ஆகும். எனவே ஐ.நாவின் பரந்த, பாரபட்சமற்ற தன்மை அதற்குத் தேவைப்படுகிறது; ஐ.நா.தான் மீண்டும் தலைமை பங்கை எடுக்க வேண்டும்." என கூறியுள்ளார். போர்த்துக்கேய மொழி பேசும் நாடுகளின் சமூகத்தின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் ஞாயிறன்று நடந்தது; அதில் கிழக்கு திமோருக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிலைமையை மதிப்பீடு செய்யவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. போர்த்துக்கல்லின் வெளியுறவு மந்திரி டயோகோ பிரீடிஸ் அறிவித்ததாவது: "கிழக்கு திமோர் ஒன்றும் தோல்வியடைந்த நாடல்ல. அனைத்து உறுப்பினர்களும் தீவிரமாகப் பங்கு பெறும் ஐ.நா. படை ஒன்றை அனுப்பவேண்டிய தேவையை நாம் அனைவரும் பாதுகாக்கவேண்டும்." கடந்த வாரம் கிழக்குத் திமோரில் போர்த்துக்கல்லின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்த ஐரோப்பிய ஆணைக்குழு ஆல்கதிரியின் அரசாங்கத்துடன் 18 மில்லியன் யூரோக்கள் நிதியளிக்கும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டது; இதன்படி "நிறுவன அமைப்புக்கள் கட்டுமானம் மற்றும் வறுமை ஒழித்தல்" ஆகியவை முக்கியத்துவம் பெறும். நேற்று அமெரிக்கத் தூதர் ஜோன் போல்டன் இராஜதந்திர அரங்கில் நுழைந்து கான்பரா கட்டுப்பாட்டை தொடர்வதற்கு ஆதரவைக்கொடுத்தார். கிழக்குத் திமோரில் "எப்பொழுதும் ஐ.நா.இருக்க வேணடும்" என்ற கருத்தை எதிர்த்த அவர், "அங்கு சென்றிருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியர்களுக்கு ஆதரவு கொடுப்பது மிகவும் தேவையானது" என்று வாதிட்டார். சாலமன் தீவுகளில் தலையீடு செய்தது ஒரு வழிகாட்டி நெறி என்றால், ஹோவர்ட் அரசாங்கம் கிழக்கு திமோரில் சில மாதங்கள் என்று இல்லாமல் சில ஆண்டுகள் தொடர்ந்திருக்கவே விரும்புகிறது. இத்தகைய இராஜதந்திர பலப்பரீட்சை ஏகாதிபத்தியங்களுக்கு இடையே கிழக்குத் திமோரில் மட்டுமல்லாமல் சர்வதேசரீதியாக உள்ள போட்டிகள் தீவிரப்படுவதை பிரதிபலிக்கின்றன. இதில் அபாயத்தில் உள்ளது, திமோர் கடல் பகுதியில் உள்ள எண்ணெய், எரிவாயு இருப்புக்கள், மற்றும் முக்கிய கடற்படைகளின் பாதையின் இருபக்கத்திலும் அது தென்கிழக்கு ஆசியாவில் கொண்டுள்ள மூலோபாய நிலைமீதான கட்டுப்பாடு ஆகியவைதான். கிழக்கு திமோர் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே இருந்து உட்பிளவு பூசல்களை சுரண்டும் வகையில் ஹோவர்ட் அரசாங்கம் 1,300 ஆஸ்திரேலிய துருப்புக்களை தீவிற்கு மே 24 அன்று அனுப்பத் தொடங்கியது. கிழக்கு தீமோரில் வறுமையில் வாடும் மக்களின் நிலையை பற்றிய கவலை போட்டியிடும் சக்திகளிடையே இல்லை எனலாம்; வறிய மக்கள் பலரும் அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளனர். அல்கதிரிக்கு எதிரான பிரச்சாரம் ஐ.நாவில் இருக்கும் பிளவுகள் கிழக்கு திமோரில் உள்ள பிரிவுப் போராட்டங்களிலும் இணையான முறையில் காணப்படுகின்றன; ஆஸ்திரேலியாவின் நண்பர்களான ஜனாதிபதி ஜானானா குஸ்மாவோ மறறும் வெளியுறவு மந்திரி ஜோஸே ராமோஸ் ஹோர்டா இருவரும் ஆல்கதிரியை அகற்றுவதற்கான பகிரங்க பிரச்சாரம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத்தின் நம்பிக்கைத் தீர்மானம் இல்லாமல் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது; பாராளுமன்றத்திலோ ஆல்கதிரியின் பிரெடிலின் கட்சி பெரும்பான்மையாக கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் ஆல்கதிரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை இருக்கிறதா என்று தோண்டித் துருவிப் பார்க்கிறது; அந்நிலையில் அவர் கட்டாயமாக பதவியில் இருந்து விலக நேரிடும். இப்பிரச்சாரத்தின் சமீபத்திய தாக்குதல் நேற்று இரவு ஆஸ்திரேலிய ஒலிபரப்பும் நிறுவனத்தின் "Four Corners" நிகழ்ச்சியில் வெளிவந்தது. மிக வெட்கம் கெட்டதனமாக இருந்த பிரச்சார நிகழ்ச்சியில், ABC இன் நிருபர் லிஸ் ஜாக்சன், முன்னாள் உள்துறை மந்திரி Rogerio Lobato உடன் சேர்ந்து கொண்டு ஆல்கதிரி தன்னுடைய அரசியல் எதிரிகளை கொலை செய்வதற்காக ஒரு படையை அமைக்க முன்னாள் பிரேடிலின் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தார் என்று நிரூபிக்க முற்பட்டார். ஆல்கடிரி பற்றியும் எவ்விதக் குற்றமும் தான் இழைக்க வில்லை என்னும் அவருடைய கூற்றை பெரும் இகழ்வுடன் வெளிப்படையாக கருதும் ஜாக்சன் எந்தவிதச் சவாலுக்கும் உட்படாத வகையில் பலவற்றை ஒட்டுப்போட்ட வர்ணனைகள், ஆவணங்களை ஆகியவற்றை அளித்தார்; இவை அனைத்தும் இவ்வம்மையாருக்கு பிரதம மந்திரியின் அரசியல் விரோதிகளால் அளிக்கப்பட்டவை ஆகும்; இவை அனைத்துமே உள்ளடக்கத்தில் இருந்து முற்றிலும் மாற்றிய தன்மை படைத்தவை ஆகும். மேற்கூறப்படும் குற்றச்செயல்கள், 600 எதிரான படையினர் ஒரு பகுதி பொலிசாருடன் இணைந்து ஆல்கதிரி பதவி விலகவில்லையானால் ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பிக்கப்போவதாக அச்சுறுத்தியதின் மத்தியில் இந்த ஆரம்ப பிரிவு மோதல்கள் நடைபெறுவது ஞாபகமூட்டப்பட வேண்டும். இது முற்றிலும் உண்மையானாலும் கூட ஆல்கதிரியும், லொபாட்டோவும் எதிராளிகளைப்போலவே தமது ஆதரவாளர்களை ஆயுதபாணியாக்குவதை சகல ஆதாரங்களும் காட்டுகின்றன. ABC நிகழ்ச்சியின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை, ஆல்கதிரி ''பொதுமக்களை ஆயுதபாணியாக்குவது'' சட்டத்திற்குமாறானது என ஜாக்சன் வலியுறுத்தும் முட்டாள்த்தனமான கருத்துடன் மட்டுப்படுத்திக்கொள்வதுடன், ஜாக்சன் ''ஆல்கதிரிக்கு எதிரான போராட்டத்தின் வீரர்கள்'' என வர்ணம்பூசுபவர்கள் உண்மையான சட்டரீதியான வரைமுறைகளில் வன்முறை மற்றும் காட்டிக்கொடுப்பு குற்றம்புரிந்தவர்கள் என்பதை மறைக்கின்றது. ஹோர்ட்டாவை புகழ்வாய்ந்த எதிர்கால பிரதம மந்திரி என்று காட்டும் முயற்சிகளில் "Four Corners" நிகழ்ச்சி நினைத்தைவிடக் கூடுதலாகவே வெளிப்படுத்தியுள்ளது. தன்னை, அனைத்துப் பிரிவுகளையும் ஒன்றுபடுத்தும் முயற்சியுடையவராக, எல்லா அரசியல் உட்பூசல்களுக்கும் மேலாக நிற்பவராகக் காட்டிக் கொள்ளும் ஹோர்ட்டா முயன்றுள்ளார். ஆனால் ஜூன் 6ம் தேதி டிலி எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சற்று முன்னதாக, எழுச்சித் தலைவர்களுடன் கிளேனோவில் அவருடைய சந்திப்பை காட்டிய ABC, ஹோர்ட்டா ஆல்கதிரி எதிர்ப்புப் படைகளுடன் வெளிப்படையாக உறவு கொண்டிருப்பதைத்தான் புலப்படுத்துகிறது. இச் செயலைப் பற்றி வினாவப்பட்டபோது, நாணம் சிறிதும் இன்றி ஹோர்ட்டா "பெளகா இன்னும் பல இடங்கள் என்று, எல்லா இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்; நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுடைய பரிவு உணர்வு, ஆதரவு, நன்மதிப்பு ஆகியவற்றை நான் பெற்றுள்ளேன். இவர்கள் அவநம்பிக்கையுடன் ஒரு தலைமையை எதிர்நோக்கியுள்ள நிலையில், தாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய பிரதம மந்திரிக்காக காத்திருக்கும் நிலையில் அந்த அன்பு என்னை திணறச் செய்துள்ளது." என அறிவித்தார். இத்தகைய மகத்தான ஆதரவை அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தல்களில் சோதனைக்கு உட்படுத்த ஹோர்ட்டாவோ அவருடைய ஆஸ்திரேலிய ஆதரவாளர்களோ தயாராக இல்லை: "வெளிப்படையாக, இதில் பிரச்சினை என்னவென்றால், இன்னும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அல்லது ஒன்பது மாதங்களுக்கு இந்தப் பிரதம மந்திரி இராஜிநாமா செய்வாரா என்ற அழுத்தத்தை நாடு தொடர்ந்து கொள்ளலாமா?" என்று ஹோர்ட்டா கேட்டார். "இன்னும் தொடர்ந்த வகையில் அரசாங்கம் நம்பகத்தன்மை இழந்துகொண்டிருப்பதையும், நாட்டைப் பற்றிய மட்டமான கருத்தையும் நாம் அனுமதிக்கலாமா? 'என்னுடைய கட்சியின் நலனுக்காக நான் பதவி விலகுகிறேன். என்னுடைய கட்சிக்கும், ஏன் நாட்டிற்கும் கூட நான் ஒரு சுமையாகி விட்டேன்.' என்று பிரதம மந்திரி கூறுவாரா?" என அவர் கேட்டார். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றிய அச்சுறுத்துல் அந்த முடிவை ஆல்கதிரி எடுக்க வேண்டும் என்பதைத்தான் வடிவமைப்பாக வெளிப்படையாக கொண்டுள்ளது." மெல்போர்னை தளமாக கொண்டுள்ள Age நாளேடு திங்கட்கிழமையன்று ஜனாதிபதி குஸ்மாவோ தன்னுடைய அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி ABC, மற்ற ஆஸ்திரேலிய ஊடகத்தினால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எனக் கூறப்படுதல் பற்றி நீதி விசாரணை நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டது. குஸ்மாவோவிற்கு சான்றுகளுடன் கூடிய அறிக்கை ஒன்றை அளிப்பதற்காக பிரெட்லின் தாக்குதல் படைத் தலைவர் எனக் கூறப்படும் வின்சென்ட் "ரைலோஸ்" டு கான்சியோவைக் காண இருக்கும் கருத்து தனக்கு இருப்பதாக ஹோர்ட்டா கூறியுள்ளார். "ஜனாதிபதி ஒன்றும் அசட்டையாக இல்லை; அதற்கு மாறாகத்தான் உள்ளார். குற்றச்சாட்டுக்கள் பற்றி கவனமாகத்தான் ஆராய்கிறார்... கிடைக்கும் தகவல்களையெல்லாம் திரட்டுவதுடன், உரிய நேரத்தில் தேவையானால் நடவடிக்கை எடுப்பார்." என்று ஹோர்ட்டா விளக்கினார். இந்த இழிவான அரசில் தந்திர உத்திகள் அனைத்தும் 2002ல் கிழக்கு திமோரிய மக்களுக்கு ஒரு முற்போக்கான பாதை என்று பிரகடனப்படுத்தப்பட்ட சுதந்திரம் என்று அழைக்கப்பட்டதின் அபத்தத்தை தெளிவாகக்காட்டுகின்றன. உலகந்தழுவிய உற்பத்தி முறையுடைய இச்சகாப்தத்தில், இந்த சிறு அரைத்தீவு உலக, பிராந்திய சக்திகள் அல்லது சர்வதேச நிதிமூலதனத்தின் அமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றில் இருந்தும் ஒருபோதும் சுயாதீனமாக இருக்கப் போவதில்லை. சமாதானத்தையும் செல்வக்கொழிப்பையும் அனுபவிப்பதில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு திமோர் ஏகாதிபத்திய போட்டியாளர்கள் மோதும் மற்றொரு அரங்காகப் போய்விட்டது; இதில் உள்ளூர் சிறு தன்னலக் குழுக்கள் போட்டியிடும் சக்திகளின் ஆதரவைப் பெற்று தமது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள செயலாற்றுகின்றன. கிழக்கு திமோரில் பூசலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு பதிலாக, தன்னுடைய ஆதரவாளர்களை பதவியில் இருத்தும் முயற்சியில் கான்பரா ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய தலையீடு மற்றொரு உள்நாட்டுப்போருக்குத்தான் தளத்தை அமைத்துள்ளது. |