World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fighting continues to escalate in Sri Lanka

இலங்கையில் மோதல்கள் தொடர்ந்தும் தீவிரமடைகின்றன

By Wije Dias
19 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கிழித்தெறியாத போதிலும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது.

வியாழன் காலை வடக்கு நகரான கெப்பிட்டிக்கொல்லாவைக்கு அருகில் 64 சிங்கள கிராமத்தவர்கள் கொல்லப்பட்டது முதல், நான்கு நாட்களாக வெளிப்படையான யுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கம் கெப்பிட்டிக்கொல்லாவ குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக புலிகள் மீது குற்றஞ்சாட்டியதோடு ஆயுதப் படைகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்டது. இரண்டு நாட்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மூதூருக்கு அருகில் உள்ள புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல்களும் ஆட்டிலரி குண்டுத் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

சனிக்கிழமை மன்னாருக்கு அருகில் வடமேற்கு கடற்பரப்பில் ஒரு பிரதான கடற் சமர் இடம்பெற்றது. இந்தச் சமரில் எட்டு புலிகளின் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் 25 முதல் 30 புலிப் போராளிகள் வரை கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறியது. 11 கடற்படை சிப்பாய்களுக்கு உயிரிழப்பை விளைவித்த இந்த மோதலை தூண்டியதற்காக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். கடும் மோதல் நடந்ததை புலிகள் ஒப்புக்கொண்ட போதிலும் தமது போராளிகளில் இருவரே கொல்லப்பட்டதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அருகில் உள்ள கடற்கரைப் பிரதேசமான பேசாலை கிராமத்தில், குறைந்தபட்சம் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு இராணுவம் பொறுப்பேற்க மறுத்த அதே வேளை, கிராமவாசிகள் இந்தப் படுகொலைகளுக்கு இராணுவம் மற்றும் கடற்படை சிப்பாய்கள் மீது குற்றம் சுமத்தினர். நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் தஞ்சமடைந்திருந்த ஒரு தேவாலயத்திற்குள் கிரனேட் ஒன்று வீசப்பட்டமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு கொடூரத் தாக்குதலாகும். இச்சம்பவத்தில் வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டதோடு குறைந்தபட்சம் 40 பேர் காயமடைந்தனர். கடற்கரையிலும் நான்கு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, இந்தத் தாக்குதலுக்கு புலிகளே பொறுப்பாளிகள் என குற்றஞ்சாட்டினார். எவ்வாறெனினும், சம்பவ இடத்திற்கு சென்றிருந்த ஆயர் ராயப்பு ஜோசப்: "நிலப்பரப்பில் மோதல்கள் எதுவும் நடக்கவில்லை; அங்கு புலி உறுப்பினர்கள் யாரும் கிடையாது" எனத் தெரிவித்தார். "சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மீனவர்கள் தங்களது அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவன்னம் இருப்பதானது" பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் அடையாள அட்டைகளைக் காட்டுமாறு கேட்டுள்ளனர் என்பதையே காட்டுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய கண்கண்ட சாட்சிகளும் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தினர். "நாங்கள் தேவாலயத்திற்குள் முடங்கிப் போயிருந்ததோடு வெளியில் இருந்து எங்களுக்கு கேட்டதெல்லாம் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மட்டுமே" என வி.பி. குரூஸ் என்பவர் கூறினார். அவரும் ஏனையவர்களும் அசோசியேடட் பிரஸ்ஸுடன் உரையாடிய போது, இராணுவமும் கடற்படையும் கலந்த அரசாங்கப் படைகள் தேவாலயத்திற்குள் கிரனேட்டை வீசியெறிந்ததாகத் தெரிவித்தனர். "அரசாங்கத்தைப் பொறுத்தளவில் நாங்கள் அனைவரும் எதிரிகள்" என குரூஸ் தெரிவித்தார். இன்னொரு கிராமத்தவரான மரியதாஸ் லோகு: "பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் இவ்வாறு செய்தால், நாங்கள் எங்கே போவது? எனக் கேட்டார்.

அதே தினம், கொழும்பில் உள்ள பாதுகாப்புப் படையினர், தாம் மூன்று புலிகளின் சுழி ஓடிகளையும் வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதோடு தலைநகரின் துறைமுகத்தில் உள்ள கடற்படைப் படகுகளை அல்லது கப்பல்களை தாக்கும் சதித்திட்டத்திற்கான தடயங்களையும் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர்.

ஞாயிறு அன்று, கருணா என்றழைக்கப்படும் வி. முரளிதரன் தலைமையில் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழு, கிழக்கு மாகாண மாவட்டமான அம்பாறையில் புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் குறைந்பட்சம் 50 முதல் 60 போராளிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அறிவித்தது. இராணுவத்திற்கும் தமக்கும் இடையில் எந்தவொரு உறவும் இல்லை என கருணா குழு மறுத்த போதிலும், யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு அதனை நிராகரித்துள்ளது.

2004ல் கருணா குழு உருவாக்கப்பட்டதில் இருந்து அக்குழு இராணுவப் புலனாய்வுத் துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதோடு, கிழக்கு மாவட்டங்களில் புலிகளுக்கு எதிராக ஒரு இரகசிய யுத்தத்தில் பல மாதங்களாக ஈடுபட்டு வருகின்றது. ஞாயிற்றுக் கிழமை நடந்த மோதலில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இந்தத் தாக்குதல் பற்றி ஒரு பேச்சாளர் ஊடகங்களுக்கு தற்பெருமையுடன் தெரிவித்தார். இது வெளிப்படையான யுத்த நடவடிக்கைகள் வெடித்துள்ளதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். இந்த சம்பவத்தில் தமது உறுப்பினர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என மறுத்த புலிகள், தாக்குதல்காரர்களை திரும்பி ஓடச் செய்ததாக வலியிறுத்திக் கூறினர்.

நேற்று நடந்த வேறொரு சம்பவத்தில், வடக்கு நகரமான வவுனியாவில் பொலிசார் ஒரு தன்னீர் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது அதற்குக் கீழ் ஒரு நிலக்கண்ணி வெடித்ததில் மூன்று பொலிசார் கொல்லப்பட்டனர்.

ஜூன் 8-9ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட பேச்சுக்கள் குழம்பியதை அடுத்தே வன்முறைகள் வெடித்துள்ளன. இரு தரப்பு பிரதிநிதிகளும் நோர்வேயை வந்தடைந்த போதிலும், சந்திப்பதற்காக அமரவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்படாததோடு இதன் விளைவாக சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதும் கவிழ்ந்தது. நோர்வே அரசாங்கம், போச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த உடனேயே, இரு தரப்பினரும் இன்னமும் யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்படுகின்றனரா எனவும், தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பாளர்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டுமா எனவும் கேட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிற்கும் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் கடிதம் எழுதியிருந்தது.

கெப்பிட்டிக்கொல்லாவ கொடூரத்தை யார் இழைத்திருந்தாலும், தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிச் செல்வதற்கு அரசியல் ரீதியில் கொழும்பு அரசாங்கமே பொறுப்பாளியாகும். கடந்த நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, இராஜபக்ஷவும் மற்றும் அவரது சிங்களப் பேரினவாத பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஜாதிக ஹெல உறுமயவும் எந்தவொரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையையும் தடுக்கும் நோக்கில் யுத்த நிறுத்தத்தில் பெரும் மாற்றங்களை செய்வது உட்பட ஒரு தொகை கோரிக்கைகளை புலிகள் மீது திணித்தனர்.

அதே சமயம், கருணா குழு போன்ற புலிகளுக்கு எதிரான பல துணைப்படைகள் இராணுவத்துடன் சேர்ந்து புலிகளின் பிரதிபலிப்புகளைத் தூண்டுவதை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான வன்முறைகளில் ஈடுபட்டன. புலிகளுக்கு சார்பான முன்னணி அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் ஏப்பிரல் 7 அன்று படுகொலை செய்யப்பட்டதில் இருந்தே புதிய சுற்று வன்முறைகள் அதிகரித்தன. இந்த உண்மை அண்மையில் வெளியான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. அது முதல் அன்றாட தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்கள் என்ற விதத்தில் இராணுவத்தினர், புலிப் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை புலிகள் செய்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ள போதிலும், புலிகளுக்கு எதிராக ஒட்டு மொத்த யுத்தத்தை நடத்தக் கோருவதற்காக இந்த சம்பவத்தை பற்றிக்கொண்டுள்ள இராணுவத்தின் சில பிரிவினர், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் அவர்களோடு சேர்ந்துகொண்டுள்ள தமிழ் துணைப்படைகளாலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் கொள்கையை நிறுத்தி, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் எதிர்த் தாக்குதலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்காக ஜே.வி.பி இந்த சம்பவத்தைப் பற்றிக்கொண்டது.

கடந்த வியாழன் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காக ஜனாதிபதி இராஜபக்ஷ கெப்பிட்டிக்கொல்லாவைக்கு சென்றபோது, குறிப்பிடத்தக்க வகையில் ஜே.வி.பி யின் சிரேஷ்ட உறுப்பினர்களான லால் காந்தவும், ரணவீர பத்திரனவும் ஏற்கனவே அந்த இடத்திற்கு சென்றிருந்தனர். பொலிசாரின்படி ஜே.வி.பி ஆதரவாளர்களால் தீமூட்டப்பட்ட ஒரு தொகை டயர்களை ஜனாதிபதி அவதானித்ததாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகைய சமிக்ஞைகள் கடந்த காலத்தில் தமிழர் விரோத படுகொலைகளை தொடங்குவதற்கான அறிகுறிகளாக இருந்து வந்துள்ளன. இராஜபக்ஷ சவால் செய்தபோது, ஜே.வி.பி தலைவர்கள் எந்தவொரு தலையீட்டையும் நிராகரித்தனர். இந்த விவகாரத்தை ஓரங்கட்டிய ஜனாதிபதி, அதற்குப் பதிலாக பொய் வதந்திகளைப் பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் பொலிஸ் பொறுப்பாளருக்கு அறிவுரை செய்தார்.

இந்த பரிமாற்றம் கொழும்பில் உள்ள உண்மையான அரசியல் உறவின் அறிகுறியாகும். இராஜபக்ஷவின் அரசாங்கம் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற ஆதரவிலேயே நேரடியாகத் தங்கியிருக்கின்றது. பெரும் வல்லரசுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி தான் ஒரு சமாதானத்தை விரும்பும் மனிதன் என சர்வதேச தளத்திற்கு காட்டிக்கொள்ளும் அதே வேளை, அவரது பங்காளிகள் தமிழர்களுக்கு எதிரான ஒரு கொலைகாரத்தனமான சூழ்நிலையை கிளறுவதோடு ஒட்டுமொத்த யுத்தத்தையும் கோருகின்றனர். உள்நாட்டு யுத்தமானது 1983ல் நடந்த திட்டமிடப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளைத் தொடர்ந்தே வெடித்ததோடு இந்தப் படுகொலைகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கெப்பிட்டிக்கொல்லாவையிலும் பேசாலையிலும் பொதுமக்கள் வேறுபாடின்றி கொல்லப்பட்டமையானது, மீண்டும் வெடிக்கவுள்ள யுத்தம் மிகவும் இரக்கமற்ற மிலேச்சத்தனமான நிலையை எடுக்கும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். கொழும்பு அரசாங்கம் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆயுதப்படைகளில் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள கொடூரமான அவசரகால அதிகாரங்களை பலப்படுத்தவும் குறிப்பாக ஊடகங்களை தணிக்கை செய்யவும் ஏதுவான விதத்தில் தேசப்பற்று சட்டம் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கின்றது. யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கில், பாதுகாப்புப் படைகள் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாக செயற்படுவதோடு முழு தமிழ் சிறுபான்மையினரையும் எதிரிகளாகக் கருதுவதுடன் திட்டமிட்ட அடக்குமுறைகளையும் தொந்தரவுகளையும் முன்னெடுக்கின்றது.

இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் வெறுமனே தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமன்றி தீவின் முழு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும். யுத்தத்திற்கான தயாரிப்புகள் அனைத்தும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைத் தர வீழ்ச்சி, வேலை இழப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு எதிராக எழும் வேலை நிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகளுக்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றன. வெகுஜனங்களின் சமூகத் தேவைகளையும் ஜனநாயக அபிலாஷைகளையும் இட்டுநிரப்ப இலாயக்கற்ற அரசாங்கம், முழு கொழும்பு அரசியல் நிறுவனத்தின் ஆதரவுடன், உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளவும் இனவாத பகைமையை கிளறுகின்றது.

See Also :

குண்டுத் தாக்குதல் 64 கிராமத்தவர்களை பலிகொண்டதோடு இலங்கையை யுத்தத்தை நோக்கி உந்துகிறது

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒஸ்லோ பேச்சுவார்த்தை குழம்பியது

இலங்கையில் யுத்த அபாயத்திற்கு ஒரு சோசலிச பதில்

Top of page