:
இலங்கை
Bomb blast kills 64 villagers and catapults
Sri Lanka toward war
குண்டுத் தாக்குதல் 64 கிராமத்தவர்களை பலிகொண்டதோடு இலங்கையை யுத்தத்தை நோக்கி
உந்துகிறது
By K. Ratnayake
17 June 2006
Back to screen version
வியாழக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலக்கண்ணி ஒன்று வெடித்ததில் இலங்கையின் வட மத்திய
மாகாணத்தில் உள்ள கெப்பிட்டிக்கொல்லாவ நகருக்குச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த 64 பயணிகள்
கொல்லப்பட்டதோடு குறைந்தபட்சம் 80 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குற்றவியல் நடவடிக்கையானது 2002 யுத்த
நிறுத்த உடன்படிக்கையில் எஞ்சியுள்ளதையும் அழிப்பதையும் மற்றும் தீவை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளுவதையும்
இலக்காகக் கொண்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஆத்திரமூட்டலாகும். இந்தத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும்,
இனவாத பகைமையை எரியச் செய்தமைக்கும் மற்றும் இத்தகைய கொடுமை இடம்பெறக்கூடிய வகையிலான அரசியல்
சூழ்நிலையை உருவாக்கியமைக்கும் கொழும்பு அரசாங்கமும் அதன் பேரினவாத பங்காளிகளுமே பொறுப்பாளிகள் என்பதில்
சந்தேகம் கிடையாது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள விவசாயிகளும் அவர்களது
குடும்பத்தவர்களுமாவர். இவர்கள் அயல் கிராமங்களில் இருந்து நகருக்கு பயணித்துக்கொண்டிருந்தார்கள். உயிரிழந்தவர்களில்
15 பேர் சிறுவர்களாவர். கொழும்பில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பிரதேசமானது, கணிசமான
பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மாகாணத்தில் யுத்தப் பிராந்தியத்தியத்தின் எல்லையிலேயே
அமைந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக புலிகள் மீது குற்றஞ்சாட்டியதோடு
புலிகளின் கட்டுப்பாட்டிலான பிராந்தியத்தில் ஒரு தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களையும் ஆட்டிலரித்
தாக்குதல்களையும் தொடுப்பதற்கான முன்நிபந்தனையாக பயன்படுத்திக்கொண்டது. பதில் தாக்குதல்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட
எச்சரிக்கை நடவடிக்கை என இராணுவம் கூறிக்கொள்கின்ற அதேவேளை, இந்தத் தாக்குதல்கள் நிலக்கண்ணி வெடித்த மூன்று
மணித்தியாலங்களுக்குள் தொடங்கியதோடு நேற்றும் தொடர்ந்தன.
வடக்கு மாகாணத்தில், புலிகளின் அரசியல் தலைமையகம் உள்ள கிளிநொச்சியை அண்டிய
பகுதிகள் மீதும் மற்றும் புலிகளின் பிரதான தளம் உள்ள முல்லைத்தீவின் மீதும் விமானப்படையின் யுத்த விமானங்கள்
குண்டுகளை பொழிந்தன. முல்லைத் தீவுக்கு அருகில் 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட அகதிகள் முகாம் அமைந்துள்ள
செல்வபுரத்தை இலக்குவைத்து இராணுவம் தாக்கியதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் முத்தூரில்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ரொக்கட் தாக்குதல்களை இராணுவம் முன்னெடுத்தது. சேதம் பற்றி அறிவிக்கப்படாத
போதிலும் பல கிராமங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்த யுத்தம் மிகவும் நெருக்கமாக உள்ளது என்பதை இரு தரப்பினரும்
அறிந்துகொண்டுள்ளனர். புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலிதேவன் வெள்ளியன்று எச்சரிக்கை
செய்ததாவது: "விமானத் தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் தாங்கள் யுத்தத்திற்குத் தயார் என்பதை இலங்கை
அரசாங்கம் காட்டுகிறது என நான் நினைக்கிறேன்... எமது தலைமையகம் நிலைமையை அவதானித்து வருவதோடு எமது
மத்திய தலைமையகம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்." ஆனால் பதிலுக்கு இராணுவம் தனது "எச்சரிக்கை"
தாக்குதல்களை நிறுத்தும் என பிரகடனம் செய்யவில்லை.
தற்போதைய நிலையில் கெப்பிட்டிக்கொல்லாவ கொடூரத்தை நிகழ்த்தியவர் யார் என்பது
தெளிவில்லை. இரு தரப்பினரும் அடுத்தவரை குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை
கண்காணிப்புக் குழு, "இந்தக் கொடூராமன நடவடிக்கைக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையிட்டு அல்லது
மனிதத்துவத்திற்கு அத்தகைய அச்சுறுத்தலை விடுப்பதன் குறிக்கோள் என்ன என்பதையிட்டு தன்னால் முடிவுக்குவர
முடியவில்லை," என நேற்று பிரகடனம் செய்துள்ளது.
இந்தக் குண்டுத் தாக்குதலை விமர்சித்து வியாழனன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த
புலிகள், இதில் எந்தவொரு சம்பந்தத்தையும் நிராகரித்ததுடன் தமிழ் பொதுமக்களையும் படுகொலை செய்யும் "ஆயுத
குழுக்கள்" மீதும் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஐரோப்பாவில் இருந்து புலிகளின் பிரதிநிதிகள் திரும்பிய உடனேயே
கெப்பிட்டிக்கொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது, இதற்கான பொறுப்பை புலிகள் மீது
சுமத்துவதையே ஒரே இலக்காகக் கொண்ட கண்டனத்திற்குரிய கொலைகார நடவடிக்கையாகும்," என அது பிரகடனம்
செய்தது.
எவ்வாறெனினும், சாத்தியமான விதத்தில் இந்தத் தாக்குதலை புலிகளும் மேற்கொண்டிருக்க
முடியும். பொதுமக்களை இலக்குவைப்பதை "எந்தவொரு சூழ்நிலையின் கீழும் நியாயப்படுத்த முடியாது" என்ற புலிகளின்
பிரகடனம் முற்றிலும் பாசாங்கானதாகும். வேண்டுமென்றே இனவாத பிளவுகளை கிளறுவதற்கும் மற்றும் தமிழ் வெகுஜனங்கள்
மீது தமது பிடியை தொடர்ந்தும் வைத்திருக்கவும் சிங்கள மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட
தாக்குதல்களின் பட்டியலுக்கு புலிகளே பொறுப்பாகும்.
அதேசமயம், இராணுவம், அதோடு இணைந்து செயலாற்றும் தமிழ் துணைப்படைகள் அல்லது
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளிலும் உள்ள
சக்திகள் இந்த குண்டுவெடிப்பை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன. இந்த சிங்களப் பேரினவாத கட்சிகள் 2002
யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக எதிர்ப்பவையாகும். பல மாதங்களாக கருணா குழு போன்ற ஆயுதக்
கும்பல்கள், புலிகளின் பிரதிபலிப்பை தூண்டுவதை குறிக்கோளாகக் கொண்டு, இராணுவத்துடன் சேர்ந்து புலிகளின்
அலுவலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளையும்
நடத்திவருகின்றன.
யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்தே அதற்கு எதிராக
இராணுவத்தில் சில பிரிவினரும் மற்றும் சிங்கள தீவரவாத குழுக்களும் ஆர்ப்பாட்டம் செய்துவந்துள்ளன. அண்மையில்
வன்முறைகள் அதிகரித்தமையை கடந்த ஆகஸ்ட் 12 அன்று வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை
செய்யப்பட்டதில் இருந்து விவரிக்க முடியும். அந்தப் படுகொலைக்கும் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதோடு யுத்த
சார்பு மனநிலையை தூண்டுவதற்காக ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் இராணுவமும் அதை சுரண்டிக்கொண்டன.
இதுவரையும் புலிகளுக்கு எதிராக முடிவான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படாததோடு, கெப்பிட்டிக்கொல்லாவ
தாக்குதலை போன்று அரசியல் இலாபத்தை அறுவடை செய்பவர்களே கதிர்காமர் படுகொலையையும் ஒழுங்கு
செய்திருப்பர் என்பது முற்றிலும் சாத்தியமானதாகும்.
கதிர்காமரின் படுகொலைக்கு பின்னர், உடனடியாக புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு
அழைப்புவிடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷ ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன்
குறுகிய வெற்றியைப் பெற்றார். அவர்களின் ஆதரவுக்கு பிரதியுபகரமாக, இராஜபக்ஷ யுத்த நிறுத்த உடன்படிக்கையை
மீளாய்வு செய்வது மற்றும் ஆயுதப் படைகளை விரிவுபடுத்துவது உட்பட ஏற்கனவே ஆட்டங்கண்டுப் போயுள்ள
யுத்தநிறுத்தத்தை கீழறுப்பதை இலக்காகக் கொண்ட விளைபயனுள்ள ஒரு தொகை கோரிக்கைகளுக்கு உடன்பட்டார்.
இராஜபக்ஷ ஜனாதிபதியானமை, புலிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக வடக்கு கிழக்கில் இரகசிய
தாக்குதல்களை அதிகரிப்பதற்கான பச்சை விளக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வியாழக்கிழமை கெப்பிட்டிக்கொல்லாவ ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட
இராஜபக்ஷ, "அமைதியையும் கட்டுப்பாட்டையும்" கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் புலிகள் மீது
அதிகம் அழுத்தத்தை திணிக்குமாறு பெரும் வல்லரசுகளிடம் கேட்டுக்கொண்டதோடு எரிந்து விழும்பாணியில் பிரகடனம்
செய்ததாவது: இந்த சம்பவம் எவ்வளவு மிலேச்சத்தனமாக இருந்த போதிலும் நாம் சமாதான முன்னெடுப்புகள்
குழம்புவதற்கு இடங்கொடுக்க மாட்டோம்." உண்மையில், சர்வதேச ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் அவரது
அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சியின் ஒரு பாகமாக இராஜபக்ஷ தன்னை "ஒரு சமாதான விரும்பியாக"
காட்டிக்கொள்ளும் அதேவேளை, பதவிக்கு வந்தது முதலே அவர் நாட்டை யுத்தத்திற்கான பாதையில் வழிநடத்தியுள்ளார்.
பெப்பிரவரியில் சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மீண்டும்
தொடங்குவதற்கான முயற்சியாக ஜெனீவாவில் நடந்த பேச்சுக்கள், புலிகளை பலவீனப்படுத்துவதற்காக 2002 யுத்த
நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை செய்யவேண்டும் என அரசாங்கப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதையடுத்து கவிழும்
நிலைக்கு வந்தது. சந்திப்பின் ஆரம்பத்திலேயே, அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் இருந்துகொண்டு
புலிகளுக்கு எதிராக செயற்படும் தமிழ் துணைப்படைகளின் ஆயுதங்களை களையும் அரசாங்கத்தின் வாக்குறுதியை அது
அமுல்படுத்த தவறிவிட்டது. இதன் விளைவாக தற்காலிகமாக தணிந்திருந்த வன்முறைகள் மீண்டும் வெடித்தன. ஜெனீவாவில்
ஏப்பிரலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்னுமொரு சுற்றுப் பேச்சுக்கள் கைவிடப்பட்டதோடு ஜூன் 8-9ம் திகதிகளில்
பேச்சுவார்த்தைகளுக்காக ஒஸ்லோ சென்றிருந்த பிரதிநிதிகளால் சந்திக்கவே முடியாமல் போனது.
குறிப்பிடத்தக்க விதத்தில், கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலின் "தரக்குறியீடுகள் அனைத்தும்
தமிழீழ விடுதலைப் புலிகளையே காட்டுகிறது" என உடனடியாக பிரகடனம் செய்த புஷ் நிர்வாகம், புலிகள்
"பயங்கரவாதத்தை கைவிட்டு இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளுக்கு செல்ல வேண்டும்" என
கோரிக்கைவிடுத்தது. நடுநிலை என்ற எந்தவொரு போலி நடிப்பையும் அதிகளவில் கைவிட்டுள்ள வாஷிங்டன், புலிகளை
சர்வதேச ரீதயில் தனிமைப்படுத்த செயற்படுவதன் மூலம், புலிகளுக்கு எதிராக மிகவும் காத்திரமான நிலைப்பாட்டை
எடுக்க இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அதேபோல் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் உட்சாமூட்டுகிறது.
இராஜபக்ஷ பத்திரிகைகளுக்கு "கட்டுப்பாடு" மற்றும் "சமாதானம்" ஆகிய ஒழுக்க
பண்புகளை பற்றி அறிவுரை கூறும் அதேவேளை, அவரது பாராளுமன்ற பங்காளிகள் யுத்தத்திற்காக ஆரவாரம்
செய்கின்றார்கள். ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவில் தனது சிறுபான்மை அரசாங்கம் தங்கியிருக்கின்ற
நிலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய அவர்களது பிரச்சாரத்திற்கு எதிராக ஜனாதிபதி அவர்களை விமர்சிக்காமலோ அல்லது
கண்டிக்காமலோ இருப்பது ஆச்சரியத்திற்குரியதல்ல.
கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை அடுத்து, ஜே.வி.பி. யின் அரசியல் குழு புலிகளுக்கு
எதிராக ஒரு முழுமையான எதிர்த் தாக்குதலுக்கு பகிரங்கமாக வக்காலத்துவாங்கி அறிக்கையொன்றை வெளியிட்டது. "புலி
பயங்கரவாதிகளின் கடுமையான தாக்குதல்களுக்கு எதிராக புலிகளின் முகாம்களை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை
முன்னெடுப்பது மட்டும் போதாது. இப்போது தேவையானது என்னவெனில், மட்டுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு அன்றி,
பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிப்பதற்காக மேலிருந்து கீழ் வரை தயாரிக்கப்பட்ட, ஒரு திட்டமிடப்பட்ட
செயற்திறம்கொண்ட நிகழ்ச்சிநிரலாகும்."
"போலி (சமாதான) பேச்சுவார்த்தை மேசைகளில் மூட எதிர்பார்ப்புகளை கைவிட்டு
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என அந்த அறிக்கை அரசாங்கத்தை
கோருகின்றது. அது வடக்கு கிழக்கில் தனியான நிர்வாகப் பிரிவை ஏற்படுத்த அழைப்பு விடுப்பதோடு "புலி
பயங்கரவாதிகளின் செல்வாக்கில் இருந்து (கிழக்கை) மீட்பதற்கான" ஒரு முதற் சுற்று இராணுவ நடவடிக்கைக்கும்
அழைப்புவிடுக்கின்றது.
ஜே.வி.பி புலிகளையும் மற்றும் "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புலிகளை
ஆதரிக்கும் ஏனைய அமைப்புகளையும்" தடை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றது. இந்த நகர்வு புலிகளுக்கு சார்பான
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவை சட்டவிரோதமாக்குவதாகவும், அதேபோல் தமிழ் சிறுபான்மையினருக்கும்
மற்றும் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்க்கும் எவருக்கும் எதிராக ஒடுக்குமுறை, அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை
முன்னெடுப்பதற்கான ஒரு உக்கிரமான பிரச்சாரத்திற்கு அடித்தளம் அமைப்பதாகவும் இருக்கும்.
ஜாதிக ஹெல உறுமயவின் அறிக்கை அதை விட கொடுமையானதாகும். அது பயங்கரவாத்ததிற்கு
எதிராக போராடுவதற்காக தேசிய ஒருமைப்பாட்டுக்கு அழைப்புவிடுப்பதோடு மக்களின் முதுகுக்குப் பின்னால் "சமாதானத்திற்கு
அழைப்பு விடுத்து இந்த பயங்கரவாத குழுவோடு" பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டாம் எனவும் அரசாங்கத்தைக்
கோருகின்றது. அரசாங்கம் "நாட்டை காட்டிக்கொடுத்தால்" மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தங்களை
பாதுகாக்க செயற்படுவார்கள் என ஜாதக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. இந்தக் கருத்துக்கள் யுத்தத்தை தோற்றுவித்த
1983 படுகொலைகளின் வழியில், ஒரு வேண்டுமென்றே தமிழர் விரோத படுகொலைகளை திட்டமிடுவதற்கான வெளிப்படையான
மறைமுக அச்சுறுத்தலாகும்.
இலங்கை மீண்டும் உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் நிற்பதானது, வெறுமனே அரசாங்கத்தினது
மட்டுமன்றி முழு அரசியல் ஸ்தாபனத்தினதும் குற்றமாகும். உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மையினருடைய சமூகத்
தேவைகளையும் ஜனநாயக அபிலாஷைகளையும் திருப்திப்படுத்த இயற்கையாகவே இலாயக்கற்றுள்ள இலங்கை ஆளும் கும்பலின்
கட்சிகள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் தமது சொந்த அரசியல் ஆளுமையை நிலை நிறுத்தவும் கீழ்த்தரமான
இனவாத நஞ்சை மீண்டும் மீண்டும் நாடுகின்றன. விலைவாசி ஏற்றம் மற்றும் வாழ்க்கைத்தர சீரழிவின் காரணமாக அதிகரித்துவரும்
வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், மீண்டும் நாட்டை பேரழிவுகரமான
யுத்தத்திற்குள் தள்ள தயாராகிக்கொண்டிருக்கின்றது.
இந்த அச்சுறுத்தும் பேரழிவு, தொழிலாள வர்க்கத்தின் அவசர தலையீட்டுக்கு
அழைப்புவிடுக்கின்றது. தீவின் 20 ஆண்டுகால இரத்தக்களரி மோதலுக்கு ஒரு முற்போக்கான தீர்வை வழங்கக்கூடிய ஒரே
சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) சிங்கள, தமிழ் மற்றும்
முஸ்லிம் தொழிலாளர்களை எல்லாவிதத்திலான இனவாதத்தையும் வகுப்புவாதத்தையும் நிராகரிக்குமாறு அழைப்பு
விடுப்பதோடு சமாதானம், ஜனநாயக உரிமைகள் மற்றும் கெளரவமான வாழ்க்கை தரத்திற்கும் அனைத்து உழைக்கும்
மக்களின் தேவைகளை அடைவதற்காகவும் ஒரு சுயாதீனமான சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கை அடிப்படையாகக்
கொண்ட ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்பப் போராடுமாறும் அழைப்புவிடுக்கின்றது.
நாம் சோ.ச.க. பொதுச் செயாலளர் விஜே டயஸ் மார்ச் 11 அன்று வெளியிட்ட
"இலங்கையில் யுத்த ஆபத்திற்கு ஒரு சோசலிச பதிலீடு" என்ற தலைப்பிலான அறிக்கையை கவனமாக படிக்குமாறு
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிக்கை, வடக்கு மற்றும்
கிழக்கில் இருந்து அனைத்து இலங்கை துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோருகிறது.
அது தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் ஐக்கிய சோசலிச குடியரசுகளை ஸ்தாபிப்பதற்கான பரந்த
போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசை ஸ்தாபிப்பதற்கான
போராட்டத்திற்கான ஒரு வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கு விவரிக்கின்றது. |