:
இலங்கை
Oslo talks between Sri Lankan government and LTTE
collapse
இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒஸ்லோ பேச்சுவார்த்தை
குழம்பியது
By K. Ratnayake
13 June 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கும் இடையில் ஒஸ்லோவில் கடந்த
வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே முறிந்துபோனது. நோர்வே தலைநகரை
வந்தடைந்த இரு பிரதிநிதிகள் குழுவினரும் ஜூன் 8-9ம் திகதிகளில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக
ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் அமரவில்லை.
நோர்வே இராஜதந்திரிகள் புலிகள் மீது குற்றஞ்சாட்டிய போதிலும், பேச்சுக்கள் முறிவடைந்தமையானது
கடந்த நவம்பரில் இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த இராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டது முதல் தீவின் வடக்கிலும் கிழக்கிலும்
அதிகரித்துவந்த வன்முறைகளின் உற்பத்தியேயாகும். 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழிந்துபோயுள்ளதோடு பெரும்
வல்லரசுகளின் அனுசரணையிலான பேச்சுவார்த்தைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ள அதேவேளை, இலங்கை மீண்டும்
ஒரு முறை ஒட்டுமொத்த யுத்தத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றது.
சமாதான முன்னெடுப்புகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வே, யுத்த
நிறுத்தத்தை கண்காணிக்கும் இலங்கை கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட
காரணத்தை பற்றி பேசுவதற்காக வேண்டுகோள் விடுத்திருந்தது. கடந்த மே மாதம் இலங்கை கடற்படை படகு
மீது புலிகள் தொடுத்த தாக்குதலால் படகில் இருந்த கண்காணிப்புக் குழு அலுவலர்களின் உயிர் ஆபத்துக்குள்ளானதோடு
இலங்கை இராணுவம் தமது நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கின்றது என்றும் நோர்வே அலுவலர்கள் முறைப்பாடு
செய்துள்ளனர்.
இந்தக் கூட்டம் பரந்த பேச்சுவார்த்தைகளை ஸ்தாபிப்பதற்கான முயற்சிக்கு
வழியமைப்பதையும் குறிக்கோளாக கொண்டிருந்தது. மூன்று வருடங்களின் பின்னர் கடந்த பெப்பிரவரி 22-23ம்
திகதிகளில் முதலாவது உயர் மட்ட பேச்சுவார்த்த ஒன்று இடம்பெற்ற போதிலும் 2002 யுத்த நிறுத்தத்திற்கு
கட்டுப்படுவதை உறுதிப்படுத்துவதை தவிர வேறு எந்த விடயத்திலும் உடன்பாடு காணத் தவறினர். ஏப்பிரலில் மேலும்
ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதுவும் தீவின் யுத்தப் பிரதேசங்களில்
அதிகரித்து வந்த வன்முறைகளுக்கு மத்தியில் தாமதமாகி பின்னர் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது.
இரு குறிக்கோள்களும் முழுமையாக தோல்வியடைந்தன. தமிழ் துணைப்படைகளால்
புலிகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும்
கண்காணிப்புக் குழுவின் அம்பலப்படுத்தும் அறிக்கை பேச்சுவாத்தைக்கு முன்னதாகவோ அல்லது பேச்சுவார்த்தையின்
போதோ வெளியிடப்பட்டால் முழுமையாக பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை பிரதிநிதிகள்
அச்சுறுத்தினர். துணைப்படைகளுடனோ அல்லது புலி அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது
அவர்கள் தொடுக்கும் தாக்குதல்களுடனோ இராணுவத்திற்கு தொடர்பில்லை என்ற கந்தலாகிப்போன ஊகிப்பு
விளையாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க இராஜபக்ஷவின் அரசாங்கம் முயற்சித்தது.
புலிகளின் பிரிநிதிகள் குழுவின் தலைவர் சு.ப. தமிழ்செல்வன், இலங்கை சமாதான
செயலகத்தின் தலைவர் பாலித கோஹனவின் தலைமையிலான அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவில் அமைச்சரவை
அமைச்சர்கள் இல்லாததை எதிர்த்தார். இராஜதந்திரம் சார்ந்த மரபு ஒழுங்குமுறையின் அடிப்படியில், ஒரு முன்னணி
பிரதிநிதி அல்லாத புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலிதேவனை புலிகளின் குழுவுக்கு தலைமை
வகிக்க அவர் பிரேரித்தார். இது பற்றி அறிவிக்கப்பட்ட பின்னர், "பொதிகளைக் கட்டிக்கொண்டு விரைவில் திரும்பி
வாருங்கள்" என இராஜபக்ஷ, கோஹனவுக்கு கட்டளையிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜபக்ஷவின் பிரதிபலிப்பு ஆச்சிரியத்திற்குரியதல்ல. அவரது ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி சிறுபான்மை அரசாங்கமானது யுத்தத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்கள பேரினவாதக் கட்சிகளின் பாராளுமன்ற ஆதரவிலேயே
தங்கியிருக்கின்றது. ஜே.வி.பி ஒஸ்லோ பேச்சுக்களை எதிர்த்ததோடு, புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக கூறி
நோர்வே அரசாங்கத்தையும் மற்றும் காண்காணிப்புக் குழுவையும் கடுமையாக எதிர்க்கின்றது. ஜே.வி.பி
பாராளுமன்றக் குழு தலைவர் விமல்வீரவன்ச கடந்த வெள்ளிக்கிழமை பிரகடனம் செய்ததாவது: "இலங்கையை
இழிவுபடுத்துவதற்காகவே நோர்வீஜியர்கள் ஒஸ்லோவிற்கு அழைத்தார்கள்."
சமாதானப் பேச்சுக்கள் தற்போது ஆபத்துக்குள்ளாகியுள்ளன. இந்தப் பேச்சுக்களுக்கு
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியமானது புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ் மே 29 அன்று புலிகளை ஒரு பயங்கரவாத
இயக்கமாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் தமது ஆதரவாளர்கள்
மத்தியில் நிதி திரட்டுவதிலும் அரசியல் ஆதரவைப் பெறுவதிலும் கடுமையாக தங்கியிருந்த புலிகளுக்கு இந்த தடை ஒரு
பலத்த அடியாகும்.
ஐரோப்பிய ஒன்றிய தடையானது "நடுநிலைமை பற்றிய கடுமையான அச்சத்தை"
உருவாக்கியுள்ளது என பிரகடனம் செய்த புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து
தெரிவுசெய்யப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு பிரதிநிதிகளை பதிலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது.
ஸ்கன்டினேவியாவை அடித்தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவில் சுவீடன், டென்மார்க் மற்றும் ஃபின்லன்ட் ஆகிய
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த மூன்று நாடுகளும் பங்குபற்றுவதோடு அதன் 57 பிரதிநிதிகளில் 37 பேரை
பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவர்களை மாற்றுவதற்குறிய நிலைமையில் தாம் இல்லை என் நோர்வே பிரகடனம்
செய்துள்ளது.
பேச்சுக்கள் முறிந்தவுடன் சர்வதேச முன்னேற்றத்திற்கான நோர்வே அமைச்சர் எரிக்
சொல்ஹெயிம் பிரகடனம் செய்ததாவது: "மோசமடைந்துவரும் நிலைமைக்கு இரு சாராரும் பொறுப்பேற்க
வேண்டும். அவர்கள் எமது ஆலோசனைகளுக்கு முரண்பாடான விதத்தில் நடந்துகொள்கின்றனர். தற்போதைய
நிலைமையில் நோர்வேயால் ஆரம்பித்துவைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடையாது." ஐரோப்பிய ஒன்றிய
தடையை சுட்டிக்காட்டி அவர் குறிப்பிட்டதாவது: "ஒஸ்லோ கூட்டத்திற்கு முன்னதாக புலிகளின் நிலைமையை
நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு விவகாரம் இருந்துகொண்டுள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது."
"முன்னெப்போதும் இல்லாத நகர்வை" விபரிப்பது என்னவென்றால், நோர்வே
புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் மற்றும் இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கும் "ஐந்து தீர்க்கமான
கேள்விகளுக்கு ஜூன் 20 திகதிக்குள் எழுத்து மூலம் பதிலளிக்குமாறு" கோரி கடிதங்களை அனுப்பியிருந்தது. இரு
சாராரும் இன்னமும் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுகின்றனரா, கண்காணிப்புக் குழுவின் பணிகள்
தொடர்வதை அவை விரும்புகின்றனரா, அவர்கள் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கத்
தயாரா என்ற கேள்விகள் அதில் அடங்கியுள்ளன. இந்தக் கேள்விகள் அனைத்தும் யுத்தநிறுத்தம் முழுமையாக
முறிந்துவிழும் நிலைமைக்கு வந்துள்ளது என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறது.
யுத்ததை நோக்கிய சரிவு
யுத்தத்தை நோக்கி மீண்டும் இழுபட்டுச் செல்வதற்கு இலங்கை அரசாங்கமே பிரதான
பொறுப்பாளியாகும். இராஜபக்ஷ நவம்பர் தேர்தலில் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடனேயே
ஜனாதிபதி தேர்தலில் குறுகிய வெற்றியை பெற்றார். இரு பங்காளிகளும் உத்தியோபூர்வ தேர்தல்
உடன்படிக்கையில், இராணுவத்தின் கைகளை பலப்படுத்தும் விதத்தில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு
செய்தல், அனுசரணையாளர் நிலையில் இருந்து நோர்வேயை அகற்றுதல் மற்றும் எந்தவொரு
பேச்சுவார்த்தைக்குமான அடிப்படையாக "ஒற்றை ஆட்சியை" மீள் உறுதிசெய்வது உட்பட புலிகளுக்கு எதிரான
காத்திரமான நிலைப்பாட்டை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. இந்த இறுதி நிபந்தனை, தீவின் வடக்கு மற்றும்
கிழக்கிற்கு குறிப்பிடத்தக்க வகையில் அதிகாரத்தை பரவலாக்குவதை உள்ளடக்கிக்கொண்டுள்ள பேச்சுக்கான முன்னைய
அடிப்படையை விளைபயனுள்ள வகையில் கீழறுப்பதாகும்.
இராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து, ஆயுதப் படைகளின் மெளன ஆதரவுடன்
அரசாங்கத்துக்கு சார்பான தமிழ் துணைப்படைகள் புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் ஆத்திரமூட்டல்
தாக்குதல்களை முன்னெடுத்தன. டிசம்பரில் புலிகளுக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம்
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்டமையானது புலிகளின் பழிவாங்கல் தாக்குதல்களை தோற்றுவித்தது. அதிகரித்துவந்த
வன்முறைகள் பெப்பிரவரியில் ஜெனீவா பேச்சுக்களின் பின்னர் சற்று தணிந்த போதிலும், பரராஜசிங்கத்திற்கு பதிலாக
பதவியேற்கவிருந்த புலிகளுக்கு சார்பான அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் ஏப்பிரல் 7 அன்று படுகொலை செய்யப்பட்டதை
அடுத்து விரைவில் கலைந்துபோனது.
பெப்பிரவரி பேச்சுவார்த்தையில் இருந்து கடந்த வாரம் வரையான கலப்பகுதியை
உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவின் அறிக்கை 330 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இவர்களில் 88
பேர் பாதுகாப்பு படையினரும், 19 பேர் புலி உறுப்பினர்களும் மற்றும் 223 பேர் பொதுமக்களுமாவர்.
"புலிகளுக்கும் மற்றும் துணைப்படைகளுடன் சேர்த்து இராணுவத்திற்கும் இடையில் "குறைந்த வேகத்தில் நடைபெறும்
யுத்தம்" என கண்காணிப்புக் குழு கூறும் யுத்தத்தில் கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை சுமார் 680 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை இரு சாராரும் யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக
குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் விக்னேஸவரன் ஆத்திரமூட்டும் வகையில் கொலைசெய்யப்பட்டமை ஒரு திருப்புமுனையாகும்
என அது அடையாளம் கண்டுள்ளது. நிலைமை "மிகவும் பதட்டமானதாக" உருவெடுத்ததோடு இந்தக் கொலை
அரசாங்கப் படைகள் மீதான "தாக்குதல்களை மீண்டும் தூண்டியது" என அது சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை
புலிகளுக்கு எதிரான ஆயுதப் படைகள் அரசாங்க கட்டுப்பாட்டிலான பிராந்தியத்தில் இருந்து புலிகள் மீது தாக்குதல்
தொடுத்த சம்பவங்களை மேற்கோள் காட்டியுள்ளதோடு இத்தகைய துணைப் படைகளை நிராயுதபாணியாக்கும்
யுத்தநிறுத்த உடன்படிக்கையின் வேண்டுகோளை இராணுவம் முன்னெடுக்க தவறிவிட்டதாகவும் முடிவுக்கு வந்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்த பின்னர், புலிகள் ஒரு "ஒஸ்லோ பிரகடனத்தை"
உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. இது துன்பகரமான அனுபவங்களின் பட்டியலை வெளியிட்டதோடு முழு சமாதான
முன்னெடுப்புகளில் இருந்தும் வெளியேறுவது போன்ற பிரகடனமாக வாசிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க விதத்தில், "தமிழர்
தாயகத்தின் 70 வீதத்திற்கும் அதிகாமனவர்களை ஆளுமை செய்யும்" மற்றும் தனது சொந்த சட்டங்கள், சுயாதீனமான
நீதித்துறை, பொலிஸ் படை மற்றும் முழு நிர்வாக இயந்திரத்தையும்" கொண்ட "மெய்யான தமிழீழ அரசின்" பெயரிலேயே
எழுதப்பட்டிருந்தது. அதன் முடிவில், "சுயநிர்ணய உரிமைக்கான தமது உரிமையை யதார்த்தபூர்வமாக்குவதை அடிப்படையாக
கொண்ட தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் தனது கொள்கையை" மீள் உறுதி செய்தது.
புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின்" பட்டியிலில் தாமும்
சேர்கக்ப்படுவோம் என்ற கவலையின்றியே புலிகள் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடனான முதற் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தமது நீண்டகால
கோரிக்கையான தனித் தமிழீழ அரசை கைவிட்டதோடு கொழும்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை
ஏற்படுத்திக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தது. இந்த ஒழுங்கு வடக்கு மற்றும் கிழக்கை வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்புக் களமாக, "புலி பொருளாதார" மையமாக மாற்றுவதாக இருந்தது.
அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும், இலங்கை மக்கள் மீதான அக்கறையினால்
அன்றி, இந்த மோதல்கள் பொருளாதார ரீதியிலும் மற்றும் மூலோபாய அடிப்படையிலும் மேலும் மேலும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகிவரும் ஒரு பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை
கொண்டிருந்தனாலேயே சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை ஆதரித்தன. இதற்கு சமாதான
கொடுக்கல் வாங்கல்களின் மூலம் முடிவுகட்டுவதில் தோல்விகண்ட புஷ் நிர்வாகம், மிகவும் கடுமையான
நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டுள்ளது. அது புலிகளை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்த எதிர்பார்ப்பதோடு
மீண்டும் யுத்தம் வெடித்தால் இலங்கை இராணுவத்திற்கு உதவுவதாகவும் அச்சுறுத்துகிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பல வருடங்களின் பின்னர், தாம்
"பயங்கரவாத" அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதை காணும் புலிகள், அதிகாரப்பரவலாக்கல் மூலம்
அரசாங்கத்தால் முக்கியமாக எதுவும் வழங்கப்படாததையும் கண்டுள்ளனர். அடுத்தடுத்து வரும் இராணுவ
ஆத்திரமூட்டல்களையும் யுத்த தயாரிப்புகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் தமிழீழத்திற்கான தனது கோரிக்கையை
புலிகள் எச்சரிக்கையுடன் மீள் உறுதிசெய்வது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும். புலிகள் யுத்த நிறுத்தத்தில் இருந்து
விலகத் தயாராகின்றார்களா என சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் கேள்வியெழுப்பிய போது,
கண்காணிப்புக் குழுவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை விலக்கும் கோரிக்கைக்கு "நோர்வேயின் பதிலை
எதிர்பார்த்திருக்கின்றோம்" என சனிக்கிழமை பேச்சாளர் தாயா மாஸ்டர் தெரிவித்தார். இன்றியமையாத
பிரச்சினைகளை அனுகுவதற்காக இராஜபக்ஷவிற்கு புலிகள் வழங்கியுள்ள சந்தர்ப்பமாக அவர் ஒஸ்லோ பிரகடனத்தை
விபரித்தார்.
இலங்கை அரசாங்கம் தெளிவாகவே ஒட்டு மொத்த யுத்தத்திற்கு தயாராகின்றது.
ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லியில் வெளியான அண்மைய அறிக்கையின்படி, இலங்கை பாகி்ஸ்தானிடம் கேட்டுள்ள 60 மில்லியன்
டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்கள வழங்குவதற்கு "அதிக முன்னுரிமை" வழங்குமாறு கோரியுள்ளது.
போர் டாங்கிகளை திருத்துவது, பீரங்கிகளை எதிர்த்து தாக்கும் ஏவுகணை அமைப்பு மற்றும் அடுத்தடுத்து ஏவும்
ஆயுதங்களும் இதில் அடங்கும். கடந்த மாதம் யுத்தநிறுத்தத்தை மீறி எண்ணெய் மற்றும் உறுக்கு மற்றும் சீமெந்து
போன்ற கட்டிப் பொருட்களை வடக்குக்கு கொண்டு செல்ல அரசாங்கம் தடை ஆணை பிறப்பித்தது. ஒஸ்லோ
பேச்சுக்களுக்கு சற்று முன்னதாக இந்தப் பிரச்சினை சர்ச்சைகுரியதாக உருவெடுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதை
அடுத்து "போதிய" எண்ணெய் அனுப்பிவைக்க இராஜபக்ஷ கட்டளையிட்டார்.
இராஜபக்ஷ நோர்வேயின் கடிதத்திற்கு இன்னமும் பதிலளிக்காத போதிலும், அது கேள்விகளுக்கு
எதிரானதாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதோடு இதன் மூலம் அணுசரனையாளராக கண்காணிப்புக்
குழுவும் நோர்வேயும் பங்களிப்புக்கு முடிவுகட்டப்படுவதை துரிதப்படுத்தும். டெயிலி மிரர் பத்திரிகைக்கு
கருத்துத் தெரிவித்த அராசங்கப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, கடிதத்தில் வெளிப்படையாக தெரியும்
ஒரு பிழையை ஜனாதிபதி சுட்டிக்காட்ட தயாராகிக்கொண்டிருக்கின்றார். அது அரசாங்கத்திற்கும் ஒரு பயங்கரவாத
அமைப்பிற்கும் சம அந்து வழங்குவதை பற்றியதாகும் என்றார். எவ்வாறெனினும் இந்த விவாதத்தின் தர்க்கமானது,
அது சம்பந்தமான தெளிவான அறிகுறிகளுடன் ஒரு "பயங்கரவாத" அமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது
என்பதாகும்.
இலங்கை அராசங்கம் ஏற்கனவே 65,000 உயிர்களை பலிகொண்ட யுத்தத்திற்கு
மீண்டும் திரும்புகிறது என்ற உண்மை, இராஜப்கஷ அரசாங்கத்திற்கு மட்டுமன்றி முழு ஆளும் கும்பல் மீதும் சுமத்தப்படும்
குற்றச்சாட்டாகும். 1948ல் சுதந்திரமடைந்ததில் இருந்தே, தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் மற்றும் தனது
அரசியல் அடித்தளத்திற்கு முண்டுகொடுக்கவும் தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிடுவதில் தங்கியிருந்தமையானது
1983ல் யுத்தம் வெடிப்பதற்கு தவிர்க்க முடியாத வகையில் வழிவகுத்தது. உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகள்
மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்க இயற்கையிலேயே இலாயக்கற்றுள்ள ஆளும் தட்டு, உயிரிழப்புக்களையும்
பேரழிவுகளையும் தவிர வேறெதையும் பெற்றுத்தராத உடன்பிறப்புக்களை கொலைசெய்யும் யுத்ததிற்குள் மீண்டும்
தீவை இழுத்துத் தள்ள தயாராகிக்கொண்டிருக்கின்றது.
Top of
page |