World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
கிழக்கு தீமோர் கிழக்கு திமோரின் தீவிரக் குற்றங்கள் பிரிவு சூறையாடல் 6 June 2006 மே 30ம் தேதியன்று கிழக்கு திமோரின் முக்கிய குற்றப்பிரிவில் நிகழ்ந்த சூறையாடலை அடுத்து கிழக்கு திமோரில் இருந்த ஒரு முன்னாள் ஐ.நா. அதிகாரியால், உலக சோசலிச வலைத் தளத்திற்கு மே 31ம் தேதியன்று கீழுள்ள கட்டுரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு 1999ம் ஆண்டு இந்தோனேசிய இராணுவம் மற்றும் இந்தோனேசிய ஆதரவு போராளிகளால் ஐ.நா.ஆதரவின் கீழான சுதந்திரம் பற்றிய பொதுவாக்கெடுப்பிற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த வன்முறைச் செயல்களை பற்றி, ஐ.நாவினால் விசாரணை நடத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டது. தேசிய இறைமையின் மேன்மையில் நம்பிக்கை வைத்து அதை மதிக்கும் நமக்கு இப்பொழுது கிழக்கு திமோர் பெருந்துயர் கொடுக்கும் வரலாறு ஆகும். நவகாலனித்துவ முறையை அப்பட்டமாக கொண்ட வகையில், 1,300 ஆஸ்திரேலிய துருப்புக்கள் 500 துணைப் படைவீரர்களுடன் தலைநகர் திலியின்மீது உள்நாட்டுப்போரை தடுக்கிறோம், திமோரிய மக்களுக்கு உதவி செய்கிறோம் என்ற போலிப் பெயரில் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை காப்பதையும் தங்களுக்கு இணங்கி, வளைந்து கொடுக்கும் ஆட்சியை நிறுவுவதையும் இத்தலையீடு குறிக்கோள்களாக கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய துருப்புக்கள் ஏற்கனவே வேரூன்றிய நிலையில் நிலைமை ஒன்றும் அதிகமாக சமாதானமடைந்துவிட்டதாக தோன்றவில்லை. கடந்த வாரம் 27 திமோரியர்கள் இறந்துள்ளனர்; கிட்டத்தட்ட 100 பேர் காயமுற்றனர். டிலித் தெருக்களில் ஆம்புலன்ஸ் வண்டிகள் சடலங்களை எடுத்துச் சென்றதாக நேற்று தகவல்கள் வந்துள்ளன; ஆனால் இன்னும் எவ்வளவு பேர் மடிந்துள்ளனர் அல்லது காயமுற்றுள்ளனர் என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இறப்புக்கள், காயங்கள் ஒருபுறம் இருக்க, கொள்ளைகள் மற்றும் தீயூட்டுதல் போன்ற நிகழ்வுகள் கடந்த இரண்டு நாட்களாக டிலியில் தொடர்ந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனிதாபிமானச் செயல்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் (UNOCHA - United Nations Office for the Coordination of Humanitarian Affairs), தன்னுடைய Relief Web மூலம் டிலியில் முன்பு இருந்த 150,000 மக்கட்தொகையில் இருந்து இப்பொழுது 65,000 மக்கள் இடம் மாறிவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடும் என்றும் அது அஞ்சுகிறது. பெரும்பாலான பிற நாட்டினர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்; ஆனால் உள்ளூர் மக்கள் மிகக் கடுமையான முறையில் உணவிற்கும் குடிநீருக்கும், சுகாதார வசதிகளுக்கும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்; இந்த நெருக்கடிக்காலத்தில் இச்சாதாரண வசதிகள் ஏதோ ஆடம்பரங்கள் என்பது போல் நினைக்கப்படுகின்றன. "ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவில் இருந்து 1,300 வெளிநாட்டு துருப்புக்களுக்கும் மேலாக குவிந்துள்ள போதிலும்கூட, உதவிக்கு வந்துள்ள ஊழியர்கள் பாதுகாப்பின்மை பற்றி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளனர். தலைநகரில் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டு அச்சுறுத்தும் குண்டர் கூட்டங்களை கட்டுப்படுத்த படைகளால் முடியவில்லை எனத் தோன்றுகிறது." என CNN தகவல் தருகிறது. மற்றொரு கட்டுரையில் Jakarta Post அளிக்கும் தகவலாவது: "ஆயுதமேந்திய குண்டர் கூட்டங்கள் வீடுகளை எரித்து, அரசாங்க அலுவலகங்களை கொள்ளை அடிக்கின்றனர்; இதில் நாட்டு தலைமை அரசாங்க வக்கீலுடைய அலுவலகமும் அடங்கும்; இங்கு அவர்கள் தீவிரக் குற்றங்கள் பிரிவு துறைக்குள் எதிர்ப்புக்களை தகர்த்து உள்ளே நுழைந்துள்ளனர். கிழக்கு திமோர் குருதி சிந்திய வகையில் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்திய நேரத்தில் 1999ம் ஆண்டு படுகொலைகள் நிகழ்த்திய முன்னாள் தளபதி வீரன்டோ உட்பட பல முக்கிய இந்தோனேசிய குற்றவாளிகள் பற்றிய கோப்புக்கள் அனைத்தும் திருடப்பட்டுவிட்டன என்று தலைமை வழக்கறிஞர் Longuinhos Monteiro கூறியுள்ளார்." மே30ம் தேதி BBC க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தலைமை அரசாங்க வழக்கறிஞர் லான்கினோஸ் மோன்டெய்ரோ பலமுறை தன்னுடைய அலுவலகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்றும் குற்றப் பிரிவில் காப்பில் இருந்து ஆவணங்களில் 15 சதவிகிதம் திருடப்பட்டுவிட்டன என்றார். Australian NEWS.com.au கூறுவதாவது: "ஐ.நா.வின் பாதுகாப்புக் காவலர்கள் கொள்ளை துவங்கியவுடன் ஓடிவிட்டனர். தலைமை அரசாங்க வழக்கறிஞர் லான்கினோஸ் மோன்டெய்ரோ குறைந்தது 12 சதவிகித கோப்புக்களாவது திருடப்பட்டுவிட்டன என்பதை உறுதிபடுத்தியுள்ளார். எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தலைமை வழக்கறிஞருடைய அலுவலகம் மற்றும் இப்பொழுது செயல்படாமல் இருக்கும் தீவிரக் குற்றங்கள் பிரிவு அலுவலகம் ஆகியவை கொள்ளயடிக்கப்பட்டுள்ளன என்பது உறுதி. வாதத்திற்காக ஒருவர் கேட்கக்கூடும்: இப்பொழுது செயல்படாத தீவிரக் குற்றங்கள் பிரிவின் அலுவலகத்தில் உள்ள சான்று ஆவணங்களில், அதவும் குறிப்பாக தளபதி வீரன்டோ வழக்கு பற்றிய கோப்புக்களில், எதற்காக ஒரு குண்டர் கூட்டம் அக்கறை காட்ட வேண்டும்? திமோர்-லெஸ்டேயில் (கிழக்கு திமோரில்) இருக்கும் சாதாரண குடிமக்கள் இதற்கு விடைகாண குழம்புவர் என்றுதான் நான் நினைக்கிறேன். கிழக்கு திமோரில் ஐக்கிய நாடுகள்மன்றத்தின் இடைக்கால அதிகாரம், ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1272 ஐ அடுத்து (Serious Crimes Unit (SCU)) அதீவிரக் குற்றங்கள் பிரிவை நிறுவியது. மேலும் தீவிரக் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த டிலி மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதிகள் குழு ஒன்றை UNTAET நிறுவியது. இந்நீதிமன்றங்களை நிறுவி செயல்படுமாறு செய்வதற்கு, பல மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய நாடுகள் மன்றம் செலவழித்தது. சுதந்திரமடைந்த கிழக்கு திமோரில், அதன் ஜனநாயகக் குடியரசு அரசியலமைப்பின்கீழ் நிறுவப்பட்ட பொது தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் ஒரு பிரிவாக தீவிரக் குற்றங்கள் பிரிவு இயங்கியது. இப்பிரிவு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின்மீது குவிப்புக் காட்டியது; இது ஜனவரி 1ல் இருந்து அக்டோபர் 25, 1999 வரையிலான காலத்தில் மிகப் பரந்த முறையில் சாதாரணக் குடிமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் தனிப்பட்ட குற்றங்களான கொலை, கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் பல குற்றங்கள் பற்றிக் குவிப்புக் காட்டியது. சற்றே சந்தேக குணம் படைத்ததால், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மற்றும் அவருடைய மேலாளர் ஜனாதிபதி க்சனனா குஸ்மாவோ மற்றும் SRGS Hasegawa (கிழக்குத் திமோரில் ஐ.நா.பிரதிநதி) ஆகியோர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு விடை தேட முயற்சிக்கிறேன். அனைத்து இருப்புக்களும், குறிப்பாக 1,300 முழு ஆயுதங்கள் ஏந்திய ஆஸ்திரேலிய துருப்புக்களும் உள்ளூர், சர்வதேச போலீசும், இப்பொழுது செயல்படாமல் இருக்கும் தீவிர குற்றங்கள் பிரிவின் உடைமைகளை பாதுகாப்பதற்கு அவர்களிடம் உள்ளன. மேலும் டிலியில் நடக்கும் குழப்பத்தின் வடிவமைப்பு பற்றியும் அவர்களுக்கு நன்கு தெரியும். இந்தப் புதிரை அவிழ்ப்பது இந்த நேரத்தில் கடினமாக இருக்கக் கூடும். ஆனால் ஆவணங்களை கொள்ளையடித்து அழிக்கவேண்டும் என்ற சதிக்கு பின்னால் உள்ள காரணிகள் பற்றிக் கண்டறிய கீழேயுள்ள குறிப்புக்கள் உதவக்கூடும். *டிலியை தளமாக கொண்ட தலைமைக்கு, குறிப்பாக ஜனாதிபதி ஜானனா குஸ்மாவோவிற்கு தளபதி வீரன்டோ உட்பட மிக உயர்ந்த இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுவதைவிட, தன்னுடைய சமரச முயற்சியின் வலியுறுத்தல் இந்தோனேசியாவிடம் இருந்து கூடுதலான பரிவுணர்வை பெறும் என்பது நன்கு தெரியும். அதே நேரத்தில் இவர் கிழக்கு திமோரின் உள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியர்களை அழைத்ததால் ஏற்பட்டுள்ள இந்தோனேசிய அரசாங்கத்தின் சீற்றத்தை குறைப்பதற்கு இது ஒரு உத்தியாக அவருக்கு அமையும். * குடியரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து ஜனாதிபதி க்சானனா குஸ்மோவிற்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ள லான்குனோஸ் மோன்டெய்ராவிற்கு தன்னுடைய பொறுப்புக்களை தள்ளிவிட்டு ஒரு புதிய, தூய நிலையை தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பை இந்நிகழ்ச்சி அளிக்கும். சர்வதேச சமூகம் இன்னும் கூடுதலான விசாரணை வேண்டும் என்று ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால், திமோர்-லெஸ்டே ஒரு பாதுகாப்பான இடம் இல்லை என்று அடையாளம் காட்டப்படும். தீவிர குற்றங்கள் பிரிவின் பணிகளை நிறைவேற்றுவதில் ஒருகாலத்தில் பெரும் ஆர்வம் காட்டிய லான்குனோஸ் மோன்டெய்ரா, பின்னர் ஜனாதிபதி குஸ்மாவோவின் அழுத்தத்திற்கு உட்பட்டு தளபதி வீரன்டோவிற்கு எதிரான குற்றச் சாட்டை திரும்ப பெற்றுக் கொள்ளுவதற்கு நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை தொடக்கினார். இவ்விதத்தில் பிரிவின் முயற்சிகளை அவர் கீழறுத்தார். ஆயினும் கூட சிறப்பு நீதிபதிகள் குழு இந்த திரும்பப் பெறும் முயற்சிக்கு இணங்கவில்லை. *ஜனாதிபதி குஸ்மோவோவின் முயற்சி மற்றும் சமரசத்திற்கான ஆர்வம் CVAR மூலம் இருந்தபோதிலும்கூட, வட்டார, மூலோபாய நலன்களும் இதில் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆஸ்திரேலியாவின் முழு ஆதரவுடன் அமெரிக்கா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் நீதி வேண்டும் என்ற போலிக்காரணம் காட்டி இந்தோனேசியாமீது அழுத்தத்தை செலுத்த விரும்பியது. ஐ.நா.வின் தீவிரக் குற்றங்கள் பிரிவு அதற்கு ஏற்ற வகையில் இருந்த அரங்கு ஆகும். ஆனால் திமோரின் கொள்கை இந்தோனேசியாபால் மாற்றம் கண்டவுடன், அமெரிக்கா மற்றும் அதன் சர்வதேச நட்பு நாடுகளுக்கும் கிழக்கு திமோர் அல்லது அதற்கு வெளியே ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற தேவை உணரப்பட்டது. கொள்ளை நிகழ்ந்த சம்பவம் இன்னும் கூடுதலான முறையில் அத்தகைய முயற்சிகளை நியாயப்படுத்தி, சர்வதேச நீதிமன்றம் நிறுவ வழிவகை செய்யலாம். SCU வின் ஆவணங்களும் சொத்துக்களும் வெறும் வரவு செலவுக் கணக்குகள் அல்ல. மாறாக, முழு விசாரணை விவரங்கள், சான்றுகளின் பட்டியல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், குற்றச் சாட்டுக்கள், கைது வாரண்டுகள், நீதிமன்ற நடவடிக்கைக் குறிப்புக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கள் என்று அவை இருக்கின்றன. என்னை மிகவும் உளைச்சலுக்கு உட்படுத்தியுள்ள விஷயம் என்னவென்றால் இந்த முறையில் இரகசிய தன்மை மற்றும் நம்பகத்தன்மை முற்றிலும் சிதைவுற்றுள்ளது. திமோர்-லெஸ்டேயில் மட்டுமின்றி உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் பாதிப்பாளர்களும் சாட்சிகளும் இந்த வெட்கம் கெட்டசெயலை பயன்படுத்தி கொண்டு ஒத்துழைக்க மறுக்க நேரிடலாம் என்பதுதான். மற்றொரு அடித்தளத்தில் உள்ள உட்குறிப்பு, உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அட்டூழியங்களை செய்தவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இப்பொழுது சாட்சிகளை அடையாளம் காண முடியும் என்பதோடு அவர்களுடைய வாக்குமூலங்களையும் படிக்க முடியும். அவர்கள் பழிவாங்க முற்பட்டால் இன்னும் கூடுதலான இரத்தப்பெருக்குத்தான் ஏற்படும். மேலும் குற்றம் புரிந்தவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள், இப்பொழுது பெரும்பாலும் இந்தோனேசியாவில் இருப்பவர்கள், தங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை ஆபத்திற்கு உட்படுத்திவிடவும் முடியும். அப்படியானால், இக்கொள்கை என்பது ஊடுருவல் வகையை சேர்ந்ததுதான். திமோர் நாட்டின் உறுதிப்பாடு சீர்குலைந்தால் அதன் பொறுப்பை இந்தோனேசியாமீது மாற்றிவிடும் வாய்ப்பை ஆஸ்திரேலியா இழந்துவிடாது. ஏனெனில் டிலிக்கும் ஜாகர்த்தாவிற்கும் இடையே இருக்கும் உறவில் சற்று கசப்புத்தன்மை ஏற்படுதவதை அது பெரிதும் விரும்பும். திமோரிய மற்றும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகள், வளங்களை நாசப்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்ச வெறுப்பு மற்றும் அடிப்படைச் செயல்பாடு நிகழ்ந்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சமூகம் ஜனாதிபதி க்சானனா குஸ்மாவோ மற்றும் SRSG ஹசேகவா இருவரும் ஈடுகட்ட முடியாத இவ்விழப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையை விரைவில் எழுப்பக் கூடும். எனவே நிகழ்வைப் பற்றி விசாரித்து கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை விரைவில் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்று துணிவுடன் நான் கருத்துரைக்கிறேன். |