World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australian government steps up campaign to oust East Timor's prime minister Mari Alkatiri கிழக்கு திமோரின் பிரதம மந்திரி மரி அல்காட்டிரியை வெளியேற்றுவதற்கான பிரச்சாரத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் முடுக்கி விடுகின்றது By Peter Symonds கன்பெராவினால் தன்னுடைய போட்டிநாடு போர்த்துகல் நாட்டிற்கு மிக நெருக்கமாக இருப்பவரும், தன்னுடைய வட்டார மேலாதிக்க விழைவுகளுக்கு ஒரு தடையாக இருப்பவருமாக கருதப்படும் கிழக்கு திமோரின் பிரதம மந்திரி மரி அல்காட்டிரியை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. முர்டோக்கின் Australian, Sydney Morning Herald முதல் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் (ABC) வரை, செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஆல்காட்டிரிதான் தாக்கும் படையை நிறுவியது, தனது எதிராளிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு எதிராக கொலைகள் உட்பட வன்முறைச் செயல்களை கட்டவிழ்த்துவிட்டதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற தொடர்ச்சியான குற்றச் சாட்டுக்களை பரப்பிவிடுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. ஆல்காட்டிரியின் எதிரிகள் புறத்தில் இருந்து வெளிவரும் இக்கூற்றுக்கள் அனைத்திற்கும் தக்க ஆதாரங்கள் இல்லை. ஆயினும்கூட இவை அனைத்தும் செய்தி ஊடகத்தால் ஏற்கத்தக்க நல்ல நாணயம் என்றுதான் அளிக்கப்பட்டு வருகின்றன. இக்குற்றச் சாட்டுக்களில் ஏதேனும் சிறிதளவாவது உண்மை உள்ளதா அல்லது இவை வெறும் பொய்யுரைகள்தானா என்பதை இக்கட்டத்தில் தீர்மானிக்க இயலாது. ஆனால் இந்த அவநம்பிக்கை மிகுந்த பிரச்சாரத்தின் நோக்கம் இன்னும் கூடுதலான வகையில் அல்காட்டிரியின் பெயரை இழிவுபடுத்தி அவரை அகற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்பது மட்டும் உறுதியாகும். தொடக்கத்தில் இருந்தே அல்காட்டிரியை அகற்றிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக்கியுள்ளது. மே 12ம் தேதி திமோர் கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய பின்னர், இவ்வரசாங்கம் மே 17-19ல் நடைபெற்ற ஆளும் பிரெட்டிலின் கட்சியின் மாநாட்டில் பிரதம மந்திரிக்கு வந்த எதிர்ப்பு அறைகூவலுக்கு தன்னுடைய ஆதரவைக் கொடுத்தது. ஆல்காட்டிரியை மாற்றும் முயற்சி தோல்வியடைந்த பின்னர், அவருடைய விரோதிகள், மற்றும் எதிர்ப்பு போர்வீரர்களால் தூண்டிவிடப்பட்ட வன்முறைகளை, ஒரு இராணுவ தலையீட்டை "வரவேற்க" டிலிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக சுரண்டிக் கொண்டது. கிழக்கு திமோரில் ஆஸ்திரேலிய படைகள் பெருமளவு குவியத் தொடங்கிய நிலையில், பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்திற்கு அடையாள ஊக்கம் கொடுத்தார். "நாட்டில் அரசாங்கம் நன்கு ஆட்சி நடத்தவில்லை" என்று தூண்டும் வகையில் மே 26 அன்று அவர் அறிக்கை விடுத்தார். அப்பொழுதில் இருந்து ஆல்காட்டிரி ஒரு ஒதுக்கப்பட்ட, ஆதரவற்ற, சர்வாதிகார மார்க்ஸ் என்று வெள்ளப்பெருக்கு போல் வர்ணனைகளும், அவர் பதவியை விட்டு விலக வேண்டும், தேவையானால் ஜனாதிபதி ஜனானா குசமோவினால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் இடம்பெற்றன. இவ்வாறு அழுத்தம் பெருகிய போதும்கூட, இதுவரை பதவியில் இருந்து விலகுவதற்கு ஆல்காட்டிரி மறுத்துவிட்டார்; மாறாக, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியின் உரிமைகள் தனக்கு உண்டு என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும் சட்ட நிபுணர்கள், அரசியலமைப்பின்படி பிரதம மந்திரியை பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி அகற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பு உரிமை இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்; பாராளுமன்றத்தில் ஆளும் பிரெட்லின் கட்சிதான் மிகப்பெரிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. அல்காட்டிரியை வெளிப்படையாகவும் அரசியல் அமைப்பிற்கு புறம்பாகவும் அகற்றினால் விளையக்கூடிய அரசியல் நிகழ்வுகளை பற்றி பகிரங்கமாக கவலை கொண்ட ஹோவர்ட்டின் அரசாங்கம், கடந்த வாரம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஜூன் 3ம் தேதி டிலிக்குப் பயணித்திருந்த ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் டெளனர் பிரதம மந்திரி பதவியில் இருந்து இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வெளிப்படையாகவேனும் முன்வைக்கவில்லை. சில நாட்களுக்குள் ஆல்காட்டிரியை பற்றிய குற்றச் சாட்டுக்கள் மிக விரைவில் வெளிக் கொண்டுவரப்பட்டன கடந்த புதன்கிழமையன்று, இத்தகைய பிரச்சாரத்தை மீண்டும் தொடக்கும் வகையில் நெருக்கடியை ஆல்காட்டிரி கையாண்டவிதம், எதிர்க்கட்சியின் கூற்றான ஏப்ரல் 28 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது உட்பட, விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று ஐ.நா. உயர் அதிகாரியான இயன் மார்ட்டின் கூறியுள்ளார். இக்குற்றச் சாட்டை மறுத்துள்ள அல்காட்டிரி ஐ.நா. விசாரணைக்கு உடன்பட்டுள்ளார். ஊதியம், பணி நிலைமைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 594 இராணுவவீரர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் குறைகளை சுரண்டிக்கொள்ளும் எதிர்க்கட்சி தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பை நடத்த முயலுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எழுச்சி செய்துள்ள "மனுக்கொடுத்துள்ள" இராணுவ வீரர்களின் தலைவரான லெப்டினன்ட் காஸ்டோவ் சால்சினா, Sydney Morning Herald க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டு இரகசியமாக புதைக்கப்பட்டற்கு ஆல்காட்டிரிதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த இடம் சரியாக எங்கு இருக்கிறது என்பது பற்றித் தெரிந்த சாட்சிகளை தான் கூறமுடியும் என்றாலும், பத்திரிகை நிருபரை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார். "முடியாது. நாங்கள் இன்னும் பயத்தில்தான் உள்ளோம்" என்று அவர் கூறினார். இன்னும் கூடுதலான தகவல்களை அளிக்க சால்சின்ஹாவினால் முடியவில்லை; ஆனால் பொருத்தமற்ற வகையில் கூறினார்: "சாதாரண குடிமக்களை சுட்டுக் கொல்ல ஆல்காட்டிரி உத்தரவிட்டார் என்பதற்கு என்னிடம் சான்றுகள் உள்ளன. நானே மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்தேன்." ஆனால் மிக அடிப்படை தேவை உண்மைகளான யார் கொல்லப்பட்டது, எப்பொழுது, எங்கு, எதற்காக என்பவை பற்றிய தகவல்கள் கொடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி இப்படி நடந்ததாக கூறப்படும் கொலைகளுக்கு உத்தரவு கொடுத்தார் என்பதற்கு நிரூபணம் கொடுப்பது ஒருபுறம் இருக்க, சால்சின்ஹா நேரடியாக பார்த்ததாக கூறும் மூன்று கொலைகளுடைய கதியும் இப்படித்தான். ஆனால் அரசியலில் தன்னுடைய நிலைப்பாடு என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக சால்சின்ஹா இருந்தார்; அதாவது அல்காட்டிரி இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பெரிதும் வலியுறுத்தினார். பிரதம மந்திரியை அரக்கன் போல் சித்தரித்துக் காட்டுவதை ABC தொடர்ந்து வருகிறது. அதே நாளில் "Four Courners" என்னும் நிகழ்ச்சியின் நிருபர் லிஸ் ஜாக்சன், ஆல்காட்டிரி மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி ரோஜெரியோ லோபடோவால் "அரசியல் எதிர்ப்பாளர்களை ஒழிக்க, மனுதாரர் குழு என அழைக்கப்படும் குழுவில் இருப்பவர்களை அகற்ற மற்றும் பிரெட்டிலின் விதிகளை மீறுபவர்களை" கொல்ல அமைக்கப்பட்டதாக கூறப்படும் மரணப்படையின் ஆயுதம் ஏந்திய குழுவின் உறுப்பினர்களை கண்டுபிடித்ததாக நிகழ்ச்சியில் நிருபர் காட்டினார். இவர் கூற்றுக்கு நிரூபணம் தருவது போல் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை அப்படையினர் உயர்த்தி காட்டினர். "இவர்களுக்கு பிரதம மந்திரியை அகற்றுவதில் அக்கறை உள்ளது" என்று ஜாக்சன் குறிப்பிட்டார். இக்குழுத் தலைவர் "ரைலோஸ்" டா கோன்சிகாவுடன் மரியோ காரஸ்கலோ என்ற வணிகருடைய பண்ணை தோட்டத்தில் மர்டக்கின் Australian உடைய நிருபரும் பேட்டி கண்டார்; இவ்வணிகர் முன்பு இந்தோனேசிய ஆட்சியில் கவர்னராக இருந்தவர்; கடுமையாக ஆல்காட்டிரியை எதிர்ப்பவர் ஆவார். கடந்த மாதம் பிரெட்டிலின் மாநாடு நடப்பதற்கு சற்று முன்னதாக இப்படை அமைக்கப்பட்டதாக டா கோன்சிகா கூறினார். அம்மாநாட்டில் பங்கு கொண்டு அல்காட்டிரிக்கு எதிராக வாக்களித்த பிரெட்டிலின் உறுப்பினர் லூகாஸ் சோரஸ் தான் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில், பாதுகாப்பு படைகள் பிளவுற்றும், ஆஸ்திரேலிய போர்க்கப்பல்கள் கிழக்கு திமோரை நோக்கி வந்திருந்த நிலையிலும் பிரெட்டிலின் மாநாடு நடைபெற்றது. பிரதம மந்திரி உண்மையாகவே "ஒரு இரகசிய பாலின்டில் பாதுகாப்புப் படையை" அமைத்திருந்தால் தன்னுடைய விசுவாசங்களை மாற்றிக் கொள்ளுவதற்கு தக்க விளக்கம் கொடுக்க முடியாத டா கான்சிகா போன்ற உறுதித் தன்மையற்ற நபரை அவர் அதற்குத் தலைமை தாங்க நியமித்திருக்க மாட்டார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தான் "உயிரையும்விடத் தயாராக இருப்பதாக" Australian செய்தித் தாளிடம் டா கான்சிகா தெரிவித்தார். இவருடைய கதையும் மிக எளிதான வகையில் அவ்விலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அல்காட்டிரி மறுத்தாலும், அவருக்கு எதிரான பிரச்சாரம் நிற்கவில்லை. சனிக்கிழமையன்று ABC எதிர்க் கட்சியான தொழிற்கட்சியின் துணைத் தலைவரான ஏஞ்சலா பிரீட்டாசை பேட்டி கண்டது; ஆல்காட்டிரிதான் டிலியில் கட்சி ஆதரவாளர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். ஞாயிறன்று அரசாங்கம் தன்னை படுகொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சி ஜனாநாயகக் கட்சியின் தலைவர் பெர்டான்டோ டி அரெளஜா தெரிவித்து, டிலியை விட்டு ஓடிவிட்டார் என்றும் ABC கூறியது ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் எதுவும் செய்தித்தாள் நடுநிலை என்பது பற்றிச் சிறிதளவு பாசாங்குத்தனம் கூட காட்டவில்லை. டிலியில் இருக்கும் பெரும் பதட்ட நிலையில், பத்திரிக்கையாளர்கள் அரசாங்க எதிர்ப்பு கொண்டுள்ள குண்டர்களுடைய நடவடிக்கைகள், எழுச்சித் தலைவர்கள், போலீசார், மற்றும் எதிர்க் கட்சிக்காரர்களுடனான அவர்கள் தொடர்பு ஆகியவை பற்றி எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. எழுச்சி "தலைவரான" மேஜர் ஆல்பிரெடோ ரெய்னடோ உடைய நடவடிக்கைகள் பற்றியும் தீவிரமான விசாரணைகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது; இவர்தான் ஆஸ்திரேலிய படைகள் தரையிறங்குவதற்கு போலிக் காரணமாக இருந்த ஆயுதமேந்திய பூசல்களை தூண்டிவிட்டவர்; அதுதான் வன்முறைக்கு வழிவகுத்தது. எதிர்பார்த்தது போலவே, ஹோவர்ட் அரசாங்கம் இக்குற்றச் சாட்டுக்களை காரணம் காட்டி ஆல்காட்டிரியின்மீது அழுத்தம் கொடுப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் டெளனர் "இந்த தீவிர, வியத்தகு குற்றச்சாட்டுக்கள்" பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்; இதற்குத் தேவையானால் சர்வதேச உதவியும் அளிக்கப்படும் என்றார். கிழக்கு திமோரின் வெளியுறவு மந்திரியான ஜோஸ் ராமோஸ் ஹோர்டா, கான்பெராவிற்கு நெருக்கமானவர், "பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணை" ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று முறையிட்டார்; அதே நேரத்தில் தேவையானால் ஆட்காட்டிரியின் பதவியை தான் ஏற்கத்தயாராக இருப்பதையும் மறுபடி உறுதிபடுத்தினார். சனிக்கிழமையன்று Sydney Morning Herald ல் வெளிவந்த குற்றச்சாட்டு குறிப்பிடத் தக்க வகையில் இருந்தது. கிழக்கு திமோரில் உளவுத்துறை அமைப்பை நிறுவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய இராணுவ துணைக் கேர்னலான பாப் லெளரி, தன்னுடைய அரசியல் எதிரிகள்மீது எப்படி உளவுத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அல்காட்டிரி கூறியதாகத் தெரிவித்தார். இவ்வார தொடக்கத்தில், இந்த அவதூறு பிரச்சாரத்தின் நோக்கம் பற்றிய இரகசியத்தை லெளரி வெளியிட்டார். ஜூன் 6ம் தேதி Australian இல் வெளிவந்த கருத்தில் அவர் அல்கட்டிரி எப்படி பதவியைவிட்டு அகற்றப்படலாம் என்ற பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். பிரதம மந்திரியை பணிநீக்கம் செய்யும் அரசியலமைப்பு அதிகாரத்தை குசாமோவ் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டபின், அமைப்பு அளவில் விரைவான தேர்தல்களுக்கும் இடமில்லை என்று கூறியபின், இருப்பதிலேயே சிறந்த தீர்வு அல்காட்டிரி "கெளரவமாக வெளியேறுவதற்கான" வகையில் செயற்பாடுகள் வேண்டும் என்றார். இதில் வெளிப்படையான பிரச்சினை என்னவென்றால் பிரதம மந்திரி கெளரவமாகவோ, வேறுவிதமாக பதவியை விட்டு விலகுவதாக இல்லை என்பதுதான். "அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அல்காட்டிரியை நம்பவைப்பதற்கு பின்னணி அரசியல், ராஜீய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; நேரடியாக அவருடைய ஆட்சிக்கு எதிரான தாக்குதல் கூடாது." என்று லெளரி ஆலோசனை தெரிவித்துள்ளார். சில நாட்களுள் "இன்னும் நேரடியான தாக்குதல்" என்ற வகையில் சில நாட்களூக்குள் அதிக குற்றச்சாட்டுக்கள், ஒரு போலீஸ் விசாரணை, சட்டபூர்வ குற்றச் சாட்டு முன்வைக்கப்படல் ஆகியவை வரக்கூடும். நீடித்து செல்லும் சட்ட வழிவகையில் திருப்தியடையாத எதிர்க்கட்சி அரசியல்வாதியான மானுவெல் டில்ம் மற்றும் எழுச்சி தலைவர் ரெய்னடோ இருவரும் நேற்று, அரசியலமைப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்து, ஆல்காட்டிரி அரசாங்கத்தை குசாமோவ் நீக்குவதற்கும் ஒரு தேசிய கூட்டணி ஒற்றுமையை நிறுவுவதற்கும் ஆலோசனை கூறுவதற்கு ஒரு "அறிவாளிகளின் மாநாடு" கூட்டப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் மெளபிசேயில் திருச்சபை கூட்டம் ஒன்றில் பங்கு பெற்றனர்; இவர்களுக்கு பாதுகாப்பாக ஆஸ்திரேலிய SAS வீரர்களும் கிளர்ச்சி இராணுவ வீரர்களும் இருந்தனர்; அரசாங்க ஆதரவு படையினர் போல் இவர்கள் ஆயுதம் பறிமுதல் செய்யப்படவில்லை. ஜனநாயக நெறிகாட்டி வழிகளை அப்பட்டமாக புறக்கணிக்கும் வகையில், நாட்டின் அரசியலமைப்பு "உண்மையோடு இயைந்து இல்லை" என்று டில்மன் கூறினார். ஜனாதிபதி அரசியலமைப்பு தவறானது என்று அறிவிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். நெருக்கடியைத் தீர்ப்பதில் "அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை" என்று ரெய்னடோ குற்றம் சாட்டினார்; குசாமோவிற்கு "உதவி தேவை" என்றும் அவர் கூறினார். எந்த பொது அறிக்கையையும் இன்னும் குசாமோ வெளியிடவில்லை என்றாலும், கிழக்கு திமோரில் உள்ள ஆஸ்திரேலிய இராணுவத் தளபதியான மிக் ஸ்லேடர் ரெய்னோடோ தலைமையில் இயங்கும் குழு உட்பட மூன்று எழுச்சிப் படைகளை சமாளித்து எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். அல்காட்டிரி, ஹோர்டா, குசாமோ அல்லது எந்த கிழக்கு திமோரிய தலைமைக்கும் உலக சோசலிச வலைத் தளம் ஆதரவை கொடுக்கவில்லை; இவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து நிற்பது ஒன்றும் தீவிலுள்ள வறிய மக்களிடன் நலன்களை பாதுகாக்க போவதில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் ஹோவர்ட் அரசாங்கத்தின் அரசியல் குண்டர்கள்தாம்; ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுத்திருந்த இந்த குண்டர்கள் பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நவ காலனித்துவ செல்வாக்கு மண்டலம் ஏற்படுத்தப்படுவதற்கு எதையும் செய்ய துணிந்தவர்கள் ஆவர். |