இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு சர்ச்சையில் தலையிடுகிறது
By Keith Jones
3 June 2006
Back to screen version
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United
Progressive Alliance) அரசாங்கத்தின் சாதி அடிப்படையிலான
இட ஒதுக்கீடுகளை (சட்டப்படி கட்டாயமான உடன்பாட்டு நடவடிக்கை) நாட்டின் முக்கியமான பல்கலைக்கழகங்கள் மற்றும்
உயர் தொழில்நுட்ப கல்விக்கூடங்களில் விரிவாக்கும் திட்டங்கள் பற்றி எழுந்துள்ள விவாதத்தில் நாட்டின் உச்ச நீதிமன்றம்
தலையிட்டு இப்பிரச்சினை "நீதித்துறை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளது.
அரசாங்கத் திட்டங்களின் சட்ட நெறியை சவாலுக்குட்படுத்தியுள்ள இரு "பொதுநல வழக்குகளில்"
எழுந்துள்ள பிரச்சினை பற்றி செவ்வாயன்று தீர்ப்புக் கூறிய, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய
குழு, மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் நடத்திவந்த வேலைநிறுத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று வாரகாலமாக நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் பல பெரிய நகர மையங்களில் மருத்துவ
வசதிகளை தீவிரமாகத் தடைக்குட்படுத்தி, இட ஒதுக்கீட்டு-எதிர்ப்பு போராட்டத்தின் மையப் புள்ளியாக குவிப்பு பெற்றது.
அரசாங்கத்தின் திட்டங்கள் அரசியலமைப்பு நெறிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றம்
பரிசீலனை செய்யும் உரிமையை கொண்டுள்ளது என்று குழு வலியுறுத்தியிருப்பது இன்னும் கூடுதலான பெரிய விளைவுகளை
கொடுக்கக் கூடியதாகும். நீதிபதிகள் அர்ஜித் பசயத் மற்றும் லோகேஸ்வர் சிங் பன்டா இருவரும் திட்டமிடப்பட்டுள்ள இட
ஒதுக்கீடு விரிவாக்கங்கள் கூடுதலான "சமூக அரசியல் சிக்கல்களை கொடுக்கக் கூடும் என்றும் இந்நீதிமன்றம் அதைத் தக்க
முறையில் ஆராயும்" என்றும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசாங்க நிதியத்தில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் நுழைவில் அரசாங்கமே
தோற்றுவித்துள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other
Backward Castes OBCs) என்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்ட
சாதித் தொகுப்பிற்கு, 27 சதவிகிதத்தை ஒதுக்கீடு செய்வதற்கு இன்றியமையாத காரணங்கள், அவற்றை நிர்ணயிக்கும்
அளவுகோல் ஆகியவற்றை பற்றி குழு தொடர்ச்சியான பல வினாக்களை எழுப்பி, அவற்றிற்கு விடையிறுக்குமாறு அரசாங்கத்திற்கு
உத்திரவு இட்டுள்ளது. இத்தீர்ப்பானது UPA
இட ஒதுக்கீட்டை இவ்வாறு, மாற்றி அமைப்பதற்கு அல்லது முற்றிலும் அதனை முறியடிப்பதற்கு அதனை நடைமுறைப்படுத்துவதை
காலம் தாழ்த்துவதற்கு நீதிமன்றம் ஆணையிடுவதற்கு கதவு திறந்துவிட்டுள்ளது.
பெருவணிகத்தின் புதிய தாராளக் கொள்கையின் செயற்பட்டியலை தொடர்ந்து
செயல்படுத்துவதற்கு, ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் மறைக்கும் வகையில் இட ஒதுக்கீட்டு பிரச்சினையை
காங்கிரஸ் தலைமையிலான UPA
அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. இந்த செயற்பட்டியல்தான் மிகக் கடுமையான வகையில் கிராமப் புற இந்தியாவில் சமூக
நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதுடன் நகர்ப்புற வேலையின்மை எண்ணிக்கையையும் பரந்த அளவில் அதிகரிக்கவும்
செய்துள்ளது.
கெளரவமான வகையில் பொது வசதிகளும் பயிற்சி பெற்ற ஊழியர்களும் இல்லாத நிலையில்,
இந்தியாவின் ஏழைகளுக்கு சாமர்த்தியமாக கல்வி, சுகாதார வசதிகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில்,
UPA அரசாங்கம்
பல்கலைக் கழக நுழைவிடங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு ஆண்டுக்கு 15,000 அல்லது அதற்குக் குறைவான
மிகச் சிறிய எண்ணிக்கையை ஒதுக்கும் அளவில், தான் ஏதோ சாதி ஒடுக்குமுறைக்கு வரலாற்றுச் சிறப்பு தரும் வகையில்
கடும் தாக்குதல் கொடுத்துள்ளதாகவும், சமூக சமத்துவத்திற்கு ஆதரவாக பெரும் சாதனை செய்துள்ளதாகவும்
கூறிக்கொள்கிறது.
பெருநிறுவனச் செய்தி ஊடகமும் பெருவணிகமும் தகுதியைக் காக்கிறோம் என்னும் பெயரில்
இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஊக்கம் கொடுப்பதும் சுய-சேவை சார்ந்தது என்பதில் எவ்விதத்திலும்
குறைந்தது அல்ல. பொதுவாக வளம்மிக்க, பாரம்பரிய உயர்சாதிக் குடும்பங்களிலிருந்து வரும், இந்திய
முதலாளித்துவத்தை பண்பிட்டுக்காட்டும் மகத்தான சமூக சமத்துவம் (இன்மை) பற்றி, மிகக் குறைவாகவும் தவறாகவும்
தொடுக்கப்பட்டாலும்கூட, அதனை கேள்விக்கு உட்படுத்துவதற்கு குரோதத்துடன் இருக்கும், எதிர்ப்புக்காட்டும்
மாணவர்களிடம் உயரடுக்கினர் உள்ளுணர்வு வகையில் பரிவு காட்டுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசாங்க நிதியத்தில் செயல்படும்
பல்கலைக்கழகங்களில் இந்த பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் இட ஒதுக்கீடு பற்றிய தற்போதைய பெரும் கூச்சலுக்கு
இடையே, பெருவணிக உயரடுக்கு, UPA
க்கு எதிராக, அது வணிகத்திலும் இட ஒதுக்கீட்டை விரிவாக்கும் திட்டத்தை கருநிலையில் கொண்டிருப்பதற்கு எதிராக
முன்கூட்டியே தனக்கு சாதகமாக ஆக்கும் தாக்குதலை நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தனியார் துறையில் இட
ஒதுக்கீடு என்பது ஒரு புதிய வேலையை கூடத் தோற்றுவிக்காது, இருக்கும் மிகக் குறைந்த வேலைகளையும் சாதி
அடிப்படையில் பகிர்ந்துகொடுக்கத்தான் பயன்படும். பெருவணிகத்தினரோ இது இன்னும் கூடுதலான கட்டுப்பாட்டு
செலவினங்களையும் கண்ணோட்டங்களையும் அர்த்தப்படுத்துவதாக கருதி, "பழைய மோசமான நேரு சோசலிசக்
காலத்திற்கு" திரும்பும் வகையில் நிர்வாகத்தின் தனியுரிமையை குறைக்க வகை செய்யுமோ என்று அஞ்சுகிறது.
இட ஒதுக்கீட்டு எதிர்ப்புக்களின் முன்னணியில் இருக்கும்
Youth for Equality -
சமத்துவத்திற்காக இளைஞர்களின் இயக்கம், என்னும் ஒரு இடைக்கால மாணவர் குழு
செய்துள்ளது போலவே பெருவணிகச் செய்தி ஊடகமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளது.
புதன்கிழமையன்று, வெளியிட்ட தலையங்கம் ஒன்றில்
Hindustan Times
அறிவித்ததாவது: "வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவ மாணவர்கள் ... உயர்
கல்விக்கூடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற பகுத்தறிவற்ற அரசாங்கக்
கொள்கையைத் தடுக்கும் வகையில், தீரமான பங்கைக் கொண்டுள்ளனர். பிரச்சினையின் அனைத்துக் கூறுபாடுகளையும்
ஆராய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது ஒரு வெற்றி; மாணவர்கள் அதை அப்படித்தான் காணவேண்டும்."
சமீபத்திய ஆண்டுகளில் உச்சநீதி மன்றம் தொழிலாளர்கள் உரிமைகளை ஆக்கிரோஷத்துடன்
தாக்கியுள்ளது. ஓர் இகழ்வுற்ற 2003 தீர்ப்பின்படி, அரசாங்கப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தத்தைத்
தமிழ்நாடு மாநில அரசாங்கம் அடக்குவதற்கு எடுத்துக்கொண்ட மிருகத்தனமான நடவடிக்கைகள் அரசியலமைப்பு நெறிக்கு
உட்பட்டவை என்று அது நிலைநிறுத்தியது. இதன்பின் பொதுத்துறை தொழிலாளர்களும், மற்ற தொழிலாளர்களும்கூட,
அரசியலமைப்பின்படி வேலநிறுத்தம் செய்யும் உரிமையை இயல்பாகப் பெற்றிருக்கவில்லை என்றும் பிரகடனப்படுத்தியது.
அதற்கு மாறுபட்ட வகையில், இந்த வழக்கில் நீதிமன்றம் மருத்துவப் பிரிவினருக்கு
எதிராக அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
"இந்தக் கொள்கையை ஏற்றால் அது நாட்டைச் சாதி அடிப்படையில் பிரிக்கும்" என்ற
வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு பரிவுணர்வு காட்டும் வகையில் நீதிபதிகள் பசாயட்டும் பன்டாவும், "இந்நீதிமன்றம்
இப்பிரச்சினையைப் பின்னர் ஆராயும்" என்று கூறியுள்ளனர்.
எந்த அடிப்படையில் OBC
உறுப்பினர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது, அந்த அளவுகோலுக்கான பகுத்தறிவார்ந்த வாதம் யாது என்பதை
விளக்குமாறு நீதிபதிகள் அரசாங்கத்திற்கு உத்தரவு இட்டுள்ளனர். (அரசாங்க விசாரணைகளின்படி எந்தக் குழுக்கள் "பிற
பின்தங்கிய வகுப்புக்களில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பலவிதமான சாதி அடிப்படையிலான வரையறைகள்
வந்துள்ளன; இத்துடன் அரசாங்கமே மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் சாதியை எடுக்கவில்லை என்ற உண்மை இந்திய
மக்கட்தொகையில் எத்தனை சதவிகிதத்தினர் OBC
யினர் என்று கட்டாயமாக வகைப்படுத்தப்பட முடியும் என்பது பற்றி 30ல் இருந்து 52 சதவிகிதம் வரை மாறுபட்ட
மதிப்பீடுகள் வந்துள்ளன.)
பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு பல்கலைக் கழகங்களில் 27.5 சதவிகிதம்
ஒதுக்கப்படும் என்று கூறுவதற்கான காரணத்தை விளக்குமாறும் நீதிபதிகள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்;
மேலும் இந்த இட ஒதுக்கீட்டுத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதை விளக்குமாறும் கேட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொடுக்கும் நிதியில் நடக்கும் கல்வி நிறுவனங்களில், புதிய
OBC
ஒதுக்கீட்டை ஒட்டி உண்மையான பொது அல்லது இட ஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்றும்
வியத்தகு அளவில் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது. ஆனால்
பல்கலைக்கழக நிர்வாகிகளும் மற்றவர்களும் அத்தகைய விரிவாக்கம் தேவைப்படும் புதிய வசதிகள், ஆசிரியர்களைக்
கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அரசாங்கம் நிர்ணயித்துள்ள ஓராண்டு காலத்திற்குள் முறையாக செயல்படுத்தப்பட
முடியாது என்று குறை கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றக் குழு இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க அரசாங்கத்திற்கு 8 வார கால
அவகாசம் கொடுத்துள்ளது; அரசாங்கத்தின் விடைகளுக்குப் பதிலளிக்க பொதுநல வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு 6 வார
கால அவகாசமும் கொடுத்துள்ளது. இக்காலத்தில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவோ,
எதிராகவோ அநேகமாகத் தொடரக்கூடும்.
உச்சநீதிமன்றத்தின் தலையீடு இந்திய ஆளும் உயரடுக்கு இட ஒதுக்கீட்டு பிரச்சினையில்
எப்படித் தீவிரமாக பிளவுற்றுள்ளது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அரசியல் ஸ்தாபனத்தின் பெரும்பான்மையினர் மத்திய அரசாங்க நிதியம் பெறும் கல்வி
நிறுவனங்களில் OBC
க்கு இட ஒதுக்கீடு செய்வதற்கு ஆதரவை தெரிவித்துள்ளன. உத்தியோகரீதியிலான எதிர்க்கட்சியான, இந்து ஐக்கியத்தின்
பேரில் சாதியத்திற்கு எதிர்ப்பாளராக காட்டிக்கொள்ளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP)
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதன் பங்காளர்களுடன் சேர்ந்து (UPA)
மேற்கொண்டுள்ள ஆரம்ப முயற்சிக்கு தொடக்கத்தில் ஒப்புதல்
கொடுத்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் பிளவுகள் வெளிவந்துள்ளன; சில முக்கியமான
BJP அரசியல்வாதிகள்
இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்துள்ளனர்; தங்களை
OBC தலைவர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் மற்ற சில
BJP
தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் இன்னும் கூடுதலான வகையில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காததற்காகக் கட்சித்
தலைமையிடத்தை குறை கூறியுள்ளனர்.
இதற்கு மாறுபட்ட வகையில், பெருநிறுவன செய்தி ஊடக, வணிகக் குழுக்கள் இட ஒதுக்கீடு
எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுவான ஆதரவைக் கொடுத்து, மே மாதம் முழுவதும் உள்நாட்டுச் செய்திகளில் இதுதான்
முக்கியமானதாகவும், பெரும் முடிவைக் கொடுக்கும் நிகழ்வாகவும் எடுத்துக் காட்டியுள்ளன. இவ்விடங்களில் இருந்து
பெருகிவரும் குரல்கள் இட ஒதுக்கீடு பற்றிய கருத்தை ஒட்டிய பிரச்சினைகளையே வினாவிற்கு உட்படுத்துகின்றன.
1989 ம் ஆண்டுதான், ஒரு பெரிய
அரசியல் பிரச்சினையாக OBC
இட ஒதுக்கீடு வெளிப்பட்டுள்ளபோது, பாராளுமன்றம், உயர் கல்வி மற்றும் அரசாங்க வேலைகள் ஆகியவற்றில்
தலித்துக்கள் (முன்னாள் தீண்டத்தகாதவர்கள்) மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு என்பது பிரிட்டிஷ் பேரரசில்
இருந்து இந்தியா சுதந்திரமானதாக ஆன உடனேயே நாட்டுக் கொள்கையாயிற்று.
இட ஒதுக்கீடுகள், தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரில் பெரும்பாலானவர்களை மிக வறிய
நிலையில் இருந்து உயர்த்தும் முயற்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் முதலாளித்துவ ஆட்சிக்கு இது முக்கிய
தூணாகப் பயன்பட்டு, ஒரு சிறிய தலித், பழங்குடி குட்டி முதலாளித்துவ அடுக்கை வளர்த்துள்ளது; இப்பிரிவு இந்திய
அரசிற்கு விசுவாசமானதாக இருப்பதுடன், இத்தகைய அடையாள அரசியலை வளர்க்கும் அதன் திட்டத்திற்கும் விசுவாசமாக
உள்ளது.
தற்போதைய இட ஒதுக்கீட்டு கருத்து வேறுபாடுகள் கூர்மையான சமூக நெருக்கடியின் ஒரு
வெளிப்பாடே ஆகும். பெருவணிகத்தின் சமூக ரீதியாக கெடுநோக்கு கொண்ட புதிய தாராளவாத செயற்பட்டியலை
தொடர்வதற்கு ஒரு ஜனரஞ்சக மூடுதிரையை வழங்குவதற்கு - இந்திய அரசியலின் நீண்டகால கடைச்சரக்கான - சாதிக்கு
முறையீடுகள் விடுப்பதை பயன்படுத்தும் அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சி மீதாக ஆளும் உயரடுக்கு கடுமையாக
பிளவுபட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் ஆகியவை, "இந்தியா
ஒளிர்கிறது" என்ற கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, வேலைகள், பொருளாதாரப் பாதுகாப்பு பற்றி மத்தியதரவர்க்கத்தின்
மிக அதிக சலுகை பெற்ற பிரிவினரிடையேகூட பெரும் கவலையைக் கொடுத்துள்ளன என்பதற்கு நிரூபணமாக உள்ளன.
இதைத் தவிர, தொழிலாள வர்க்கத்திற்கு வழிகாட்டுவதாக கூறிக் கொள்ளும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையில் இருக்கும் இடது முன்னணியோ புஷ் நிர்வாகத்துடன் மூலோபாய முறையில்
பங்காளியாக இருக்கும் கொள்கையை பின்பற்றும், புதிய தாராள கொள்கைகளை நிறுவுவதாயினும்கூட, காங்கிரஸ் தலைமையிலான
UPA அரசாங்கத்திற்கு
ஆதரவை கொடுப்பதன் மூலம் அதை பதவியில் தொடர வைத்துள்ளதன் காரணமாக, மகத்தான வேலையின்மை, சமூக
இழப்புக்கள் பற்றி தங்கள் சீற்றத்தையும் எதிர்ப்பையும் முறையான வகையில் தெரிவிக்க இயலாத நிலையில் பல நூறு மில்லியன்
மக்கள் உள்ளனர். இக்கொள்கையை ஏற்கும் வகையில்தான் UPA
அரசாங்கத்தின் இட ஒதுக்கீடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டங்களுக்கு இடது முன்னணியின் ஆதரவு உள்ளது.
ஒரு சமீபத்திய கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியுள்ளது
போல், இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் இட ஒதுக்கீடு விவாதத்தின் முழு கட்டமைப்பையும் நிராகரிக்க வேண்டும்.
"இந்திய உழைப்பாளிகள் தொகுப்பின் வெகுஜன சமூக அதிருப்தியை திசை திருப்பும் வகையில்
ஆளும் உயரடுக்கினர் கல்விக் கூடங்கள், வேலைகள் ஆகியவற்றில் பகிர்ந்து அளிப்பதில் குவிப்புக் காட்டுவதற்கு ஸ்ராலினிஸ்டுகள்
உதவும் வகையில் செயல்படுக்கூடிய பெரும் ஆபத்து உள்ளது; உண்மையில் இது முதலாளித்துவத்தினால் விளையும் வறுமையை
சாதிமுறைப்படி பகிர்ந்து கொடுப்பதற்குத்தான் ஒப்பாகும். இத்தகைய அரசியல் பெருவணிகம் மற்றும் முதலாளித்துவ சமூக
ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தாமல் செய்துவிடும்; அதையொட்டி முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய புதிய தாராளக்
கொள்கையை செயல்படுத்த முன்னேறும் என்பதோடு BJP
மற்றும் பிற தீவிர வலதுசாரி சக்திகள் தங்களை கிராமப்புற, நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினருக்கு அவர்களுடைய காப்பாளர்கள்
என்று தவறாக காட்டிக் கொள்ளுவதற்கான வழிவகையும் ஏற்படும்."
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் உண்மையான போராட்டம் என்பது சாதி, மத, இன
வேறுபாடு இல்லாத வகையில், UPA
அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கு இவற்றிற்கு எதிராகவும், வேலைகள், கல்வி வாய்ப்புக்கள், தரமான
பொது நலப் பணிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவுகளையும் திரட்டி
செயல்படும் தொழிலாளர் தலைமையிலான இயக்கத்தால்தான் முடியும்.
|