World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Solomon Islands: Australia's neo-colonial "model" for East Timor? சாலமன் தீவுகள்: கிழக்கு திமோருக்கான ஆஸ்திரேலியாவின் நவ காலனி ஆதிக்க "முன்மாதிரி"? By Mike Head கடந்த 6 வாரங்களில் ஆசியா-பசிபிக் நாடுகளில் தோன்றிய கடுமையான கலவரத்தை ஒடுக்குவதற்காகவும், ஆஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர அக்கறைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவும், ஆஸ்திரேலிய துருப்புக்களும், போலீசாரும் இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, சாலமன் தீவுகளில்-RAMSI-நடைபெற்று வருகின்ற மண்டல உதவி குழுவின், நடவடிக்கைகளுக்கு முட்டுக்கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் சென்ற மாதம் அனுப்பப்பட்டனர், அதைத் தொடர்ந்து சென்ற வாரம் கிழக்கு திமோரில் இராணுவத் தலையீடு நடைபெற்றது. இந்த நடவடிக்கைகள் பெயரளவிற்கு "பன்னாட்டு" நடவடிக்கை என்றும் "அழைப்புகளின்" விளைவாக நடைபெற்றவை என்றும் கூறப்பட்டாலும் இந்த இரண்டு தலையீடுகளிலும் ஆஸ்திரேலியாவின் படைகள் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன, இரண்டு உள்நாட்டு அரசுகளும் பொருளாதார அல்லது இராணுவ அடிப்படையில் குறைவான வாய்ப்புக்களை கொண்டிருப்பதால் ஆஸ்திரேலியாவின் படைகள் வருவதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. திமோருக்கு படைகள் அனுப்பப்பட்டு சிறிது நாட்களுக்குள், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜோன் ஹோவர்ட் அந்த சிறிய முன்னாள் போர்ச்சுகல் காலனியான கிழக்கு திமோரில், RAMSI பாணியில் நீண்டகாலத்திற்கு, நீடித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை தள்ளுபடி செய்துவிடவில்லை, மறுக்கவில்லை, RAMSI சாலமன் தீவுகளின் நிர்வாகத்தை ஏறத்தாழ கைப்பற்றிவிட்டது. அவரது கருத்துக்கள், குறிப்பாக கவனிக்கத்தக்கவை, ஏனென்றால் அண்மை சம்பவங்களுக்கு சற்றுமுன்னர், RAMSI நடவடிக்கைகள், ஆஸ்திரேலியா மற்றும் இதர மேற்கு நாடுகளின் மூலோபாய மற்றும் வெளியுறவு கொள்கை வட்டாரங்களில் ஒரு புதுவகை நவ காலனி ஆதிக்க தலையீட்டிற்கான ஒரு "புதுமையை" புகுத்தும் முன்னோடி நடவடிக்கை என்று பாராட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெருநிறுவன நிபுணர் குழுவான லோவி சர்வதேச கொள்கைக்கழகம், RAMSI நடவடிக்கைகளில் "சர்வதேச அக்கறை வளர்ந்து வருவது" குறித்து பெருமையடித்துக் கொண்டது. அந்த அறிக்கையில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் இராணுவத் தலையீடு பற்றிய சிறப்பு சஞ்சிகையான சர்வதேச அமைதிகாத்தல் (International Peacekeeping) என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளது, அந்தக் கட்டுரை RAMSI-யை ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் உள்விவகாரங்களில் தகராறுக்கு இடமின்றி தலையிடுவதற்கான நுழைவுவாயிலை அமைப்பதில் ஒரு புதிய வழியை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஒரு பெரிய மனிதநேய அடிப்படையிலான நெருக்கடி தோன்றுவதற்கு மாறாக, அந்த குறிப்பிட்ட நாட்டில் ஊழலும் நிர்வாக கோளாறுகளும், மறைமுக குற்றங்களின் அளவும் அதிகரிக்குமானால் சர்வதேச அமைதியை நிலைநாட்டும் இராணுவத் தலையீடுகளை மேற்கொள்ளலாம் என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. இதை வேறுவார்த்தைகளில் சொல்வது என்றால், RAMSI "மனிதநேயம்" என்ற பெயரில் தலையிடுவதற்கு ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளது -அந்த முன்மாதிரி 1999-ல் சேர்பியாவிற்கு எதிராக NATO மேற்கொண்ட போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது மற்றும் அதே ஆண்டு ஆஸ்திரேலியா தலைமையில் கிழக்கு திமோர் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நியாயப்படுத்துவதாக அமைந்திருந்தது. "தோல்வியுற்ற" அரசுகள் அல்லது "தோல்வியுறும்" அரசுகள் என்ற பதாகையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. "இந்த வகையில் அரசுகள் தங்களை 'தோல்வியுற்ற' அல்லது 'சிதைந்துவிட்ட' அரசுகள் என்று பெயரிடப்படுவதை ஏற்பதற்கு தயக்கத்துடன் இருப்பதால் 'உறுதியின்மையை எதிர்கொண்டுள்ள நாடுகள்' என்ற சொல்லை தேடி பயன்படுத்த வேண்டியிருக்கிறது" என்று லோவி அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. எந்த முத்திரையின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இவை உள்ளூர் மக்களின் நலன்புரி அரசு சலுகைகளை காப்பதற்கோ அல்லது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ எந்த வகையிலும் சம்மந்தப்பட்டவையல்ல. அதற்கு மாறாக, பெருகிக் கொண்டு வரும் வறுமை சமூக நெருக்கடி மற்றும் கடன் சுமையை ஒரு சாக்குப் போக்காக கொண்டு வல்லரசுகள் தங்களது பரவலான பூகோள மூலோபாய, அக்கறைகளை நிலைநாட்டுவதற்கும் போட்டி வல்லரசுகளின் செல்வாக்கை சமாளிப்பதற்கும் சூறையாடும் பொருளாதார செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றன. AMSI முன்மாதிரிRAMSI முன்மாதிரியின்படி அதிகாரபூர்வமாக சாலமன் தீவுகள் ஒரு இறையாண்மை பெற்ற நாடாகவே உள்ளது. RAMSI-ன் விளம்பர வெளியீட்டின்படி: "RAMSI அரசாங்கத்தை கட்டுப்படுத்தவில்லை அல்லது சாலமன் தீவுகளின் சார்பில் தேசிய முடிவுகள் எதையும் செய்யவில்லை. நாடாளுமன்றம், அரசாங்கம், மற்றும் பொதுச்சேவை அதிகாரிகள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்பானவர்கள் மற்றும் அவர்கள் சாலமன் தீவுகளின் மக்களுக்கு பதில் சொல்பவர்களாக உள்ளனர்."இதை நெருக்கமாக ஆராய்ந்தால் நிலவரம் மாறுபட்டு உள்ளது என்பதை காட்டுகிறது. எந்த அடிப்படையில் பார்த்தாலும், RAMSI சாலமன் தீவுகளை நிர்வகித்து வருகிறது, அதன் அதிகாரிகள் எல்லா முக்கிய அரசு அதிகாரங்களையும், தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்-நிதியமைச்சகம், போலீஸ்படை, நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் RAMSI அதிகாரிகள் கையில் உள்ளது. அரை மில்லியன் மக்களை கண்காணிப்பதற்காக, RAMSI இராணுவமும் போலீசாரும் எல்லா மாநிலங்களிலும் உள்ளனர், ஹோனியாராவிற்கு வெளியில் 17 போலீஸ் புறக்காவல் நிலையங்கள் உள்ளன. அது, ரோயல் சாலமன் தீவுகள் போலீசிற்கு (RSIP-க்கு) பயிற்சிகளை தருகிறது மற்றும் மேற்பார்வையிடுகிறது, RSIP-ன் தலைமை கமிஷனர் முன்மொழியப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் அதிகாரி ஆவார். அதே போன்று RAMSI-ன் சிறைத்துறை பிரிவு சாலமன் தீவுகளுக்கான சிறைத்துறை கமிஷனரையும் மத்திய சிறைச்சாலைக்கான பொது மேலாளரையும் மற்றும் 40-க்கும் மேற்பட்ட சிறைகாவல் கண்காணிப்பாளர்களையும், உதவியாளர்களையும் வழங்கியுள்ளது. RAMSI- ன் சட்டப்பிரிவு அந்தத் தீவுகளின் சட்ட நடைமுறை கட்டுக்கோப்பையே, நடத்தி வருகிறது. அதில் 20 வழக்குரைஞர்களும் இதர சட்ட ஊழியர்களும் அடங்கியுள்ளனர். இவர்களில் சொலிசிட்டர் ஜெனரலும் (நாட்டின் சட்டத்துறை தலைவர்), (சட்டங்களை வரைவதில் பொறுப்பாயிருக்கும்) துணை சட்ட எழுத்தாளரும், பொதுமக்கள், குற்றம் சாட்டப்படுகின்றபோது அவர்களுக்கு சட்ட உதவி தருகின்ற ஒரு வழக்குரைஞரும் 7 உதவியாளர்களும், 2 உயர்நீதிமன்ற நீதிபதிகளும், இரண்டு மூத்த மாஜிஸ்ட்ரேட்டுகளும், 4 மூத்த பிராசிகியூட்டர்களும் மற்றும் 4 போலீஸ் பிராசிகியூட்டர்களும், RAMSI-யினால் நியமிக்கப்பட்டவர்கள்.RAMSI நியமித்த அதிகாரிகள் அரசாங்கத்துறைகளின் சீனியர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட 60 அதிகாரிகளில் நிதியமைச்சகத்தில் அதிகமானவர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அக்கவுண்ட் & ஜெனரல் திட்டநிதி ஒதுக்கீடுகளை, இரத்து செய்வதற்கு அதிகாரம் படைத்தவர், 17 "ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்கள்" பட்ஜெட்டை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் மற்றும் அவர்கள் வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் எழுதுபவர்கள் ஆவர். இவர்கள் அத்தனை பேரும் RAMSI நியமித்த அதிகாரிகள். ஒரு பொருளாதார சீர்திருத்த பிரிவு, வர்த்தக சூழ்நிலைகளை மேம்படுத்தவும் முதலீடுகளை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், "ஒருங்கிணைத்து, உந்துதல" நடவடிக்கைகளை எடுக்கிறது.RAMSI- ன் பொருளாதார செயல் திட்டம் நாட்டின் நிதிநிலையை தீவிரமாக சீரமைப்பதை நோக்கமாக கொண்டது. ஆஸ்திரேலியாவின் வெளிவிவகாரங்கள் அமைச்சர் அலெக்ஸாண்டர் டவுனர் 2004-ல் தொடக்கிய திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கை, "சாலமன் தீவுகள்: ஒரு தீவு பொருளாதாரத்தை சீரமைப்பது" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருப்பது, தொலைபேசி தகவல் தொடர்புகள், மின்சாரம் தண்ணீர் வழங்குவது ஆகிய அடிப்படை சேவைகளை தனியார் உடைமை ஆக்க கேட்டு கொள்கிறது, அத்துடன் இனவாத அடிப்படையில் அமைந்துள்ள நிலம், மனை, வாரங்களை இரத்து செய்யவும் கோருகிறது. அத்துடன் சிக்கலான முதலீட்டு நெறிமுறைகளை நீக்கவும் யோசனை கூறியுள்ளது. மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தையும், வாழ்க்கைத்தரத்தையும், குறைக்கின்ற வகையில் தொழிலாளர் சந்தை நெறிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது."பொருளாதார சீர்திருத்தத்திற்கு" மேலாக RAMSI வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் முன்னுரிமைகளில் ஆஸ்திரேலியர்களுக்கு சொந்தமான கோல்டு ரிட்ஜ் சுரங்கத்தையும், சாலமன் தீவுகள் தோட்ட நிறுவனத்தையும், மீண்டும் புத்துயிரூட்ட உதவுவதாக குறிப்பிட்டிருக்கிறது, "அரசிற்கு சொந்தமான தொழிற்சாலைகள், நிதியாதார அடிப்படையில் கட்டுபடியாகின்ற அளவிற்கு மேம்படுத்த வேண்டும் என்றும் இறக்குமதி தீர்வைகளை நீக்கிவிட வேண்டும் என்றும், வர்த்தக நிறுவனங்களின் செலவுகளை அதிகரிக்கும் நெறிமுறை சுமைகளை" குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொள்கைகளின் முதலாவது பயன்களில் ஆஸ்திரேலிய நிறுவனமான ASG நிறுவனத்திற்கு தாராளமாக, வரி மற்றும் தீர்வை விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் தனது சுரங்கத்தை மீண்டும் சீரமைத்து நடத்துவதற்கான உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ASG பேச்சாளர் இந்த மாதம் ராய்ட்டர்சிற்கு அளித்த பேட்டியில் ஆண்டிற்கு, 600 மில்லியன் SB டாலர்கள் (78 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதில் 3 சதவீதம் மட்டுமே அரசாங்கமும், உள்ளூர் நில உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்வர் என தெரிவித்தார். ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இந்த திடீர் அதிரடி வருமானத்தினால் பயனடையும் என்றாலும், RAMSI-ன் பொருளாதார திட்டத்தினால் பெரும்பாலான சாலமன் தீவு மக்களுக்கு சீரழிவு விளைவுகள் ஏற்படும், அவர்கள் கிராமம் மற்றும் இனவாத உறவுகளையும், உறவினர்களது ஆதரவையும் மற்றும் வாழ்ந்தால் போதும் என்ற விவசாயத்தையும் நம்பியிருக்கின்றனர். இந்த ஆண்டு ஏறத்தாழ 250 மில்லியன் டாலர்களுக்கான பட்ஜெட்டில் RAMSI சமுதாய திட்டங்களுக்கு, சொற்ப தொகையைத்தான் தந்திருக்கிறது, 2004-05-ல் கல்வி மற்றும் பயிற்சிக்காக 1.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன, 2001-2010 வரை அடிப்படை சுகாதார சேவைகளுக்காக 27.2 மில்லியன் டாலர்களும், சமுதாய ஆதரவு திட்டங்களுக்காக, 2005-2010 வரை 32 மில்லியன் டாலர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்கள், NGO-கள் 2004 முதல் 2007 வரை 5 மில்லியன் டாலர்கள் உதவி தருவார்கள் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீடுகள், திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு சந்தை பொருளாதாரம் உருவாக்கப்படுவதன் மூலம் அத்தியாவசிய சமூக வசதிகளும் சேவைகளும் வழங்கப்படும் என்று RAMSI வலியுறுத்திக் கூறியுள்ளது. RAMSI-ன் வலைத்தளம் தந்துள்ள தகவலின்படி "அதிகமான மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தங்களது வரிகளையும் தீர்வைகளையும் சுங்கத்தீர்வைகளையும், உரிமக் கட்டணங்களையும், அதிக அளவில் செலுத்தும் போதுதான் அரசாங்கத்திற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் அதை கொண்டு சாலமன் தீவுகளின் மக்களுக்கு சிறந்த பள்ளிகள், மருந்தகங்கள், மருத்துவர்களை தர முடியும். சாலைகள் பாலங்கள், முதலியவற்றை செப்பனிட முடியும்." கடந்த 3 ஆண்டுகளாக, நடைபெற்று வருகின்ற ஆக்கிரமிப்பு சமூக நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு பதிலாக, சாதாரண மக்களுக்கும் RAMSI-யுடன் சம்மந்தப்பட்ட செல்வந்தத்தட்டினருக்கும் இடையில் நிலவுகின்ற இடைவெளியை ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. உதவி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தந்துள்ள மதிப்பீட்டின்படி உலகில் சாலமன் தீவு மக்கள்தான் படுமோசமான வறுமையில் உள்ளனர், மற்றும் உலகிலேயே மிகப்பெருமளவில் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பள்ளி மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் குறைந்தவர்கள் ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்வதில்லை. படிப்பறிவு உள்ளவர்கள் என்ற கணக்கில் 22 சதவீதம் பேர் தான் வருகின்றனர். பிறக்கின்ற 1000 குழந்தைகளில் 38 குழந்கைள், ஓராண்டை கடப்பதற்குள் மடிந்து வருகிறார்கள், இதற்கு முக்கிய காரணம், நோய்களை தடுப்பதற்கான வசதிகள் எதுவும் இல்லாததுதான். சாலமன் தீவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நண்பர்களுக்கு உதவுவது என்று மிகுந்த ஆணவப்போக்கோடு பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் எப்போதுமே அது அந்த மக்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. மாறாக தெற்கு பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலியாவின் மேலாதிக்கத்தை மேலும் பரவலாக்குவதை உறுதிப்படுத்துவதன் பகுதி ஆக இருந்தது. RAMSI எதிர்கால இராணுவத் தலையீடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையப்போகிறது என்பதை லோவி கழக அறிக்கை பகிரங்கமாக காட்டுகிறது. 1975 வரை பாப்புவா நியூகினியை ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் ஆட்சி செய்து வந்தது. இப்போது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது காலனி ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட தொடங்கியுள்ளது, கிழக்கு திமோரிலிருந்து சாலமன் தீவுகள் வரை மற்றும் அதற்கு அப்பாலும் ஆஸ்திரேலியா தனது காலனி ஆதிக்க நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்புகிறது. |