World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan housemaid tells of systematic abuse in Saudi Arabia

இலங்கை வீட்டுப்பணிப்பெண் சவுதி அரேபியாவில் திட்டமிட்ட துஷ்பிரயோகத்தை பற்றிப் பேசுகிறார்

By Kalpa Fernando
22 February 2006

Back to screen version

இலங்கையர்களில் இலட்சக்கணக்கானவர்கள் தமது பொருளாதாரத் தேவை மற்றும் வறுமையின் காரணமாக மத்திய கிழக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றார்கள். பலர் அடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்படுவதோடு உளவியல் ரீதியிலும் சரீர ரீதியிலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். தெளிவுபடுத்தப்படாத சூழ்நிலைகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆதாயம் தரும் வெளிநாட்டு நாணய செலாவணியை பாதுகாப்பதிலேயே அக்கறை செலுத்தும் இலங்கை அரசாங்கம், தனது பிரஜைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கொழும்பில் உள்ள தகவல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, வெளிநாட்டில் தொழில் புரியும் 1.5 மில்லியன் இலங்கையர்களில் 64.5 வீதமானவர்கள் பெண்களாவர். 1986ல் இந்த அளவு 33 வீதமாக, தற்போதுள்ள தொகையிலும் அரைவாசியாக இருந்தது. பெரும்பாலானவர்கள் வீட்டுப்பணிப்பெண்களாக அல்லது தரம் குறைந்த தொழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். உலக சோசலிச வலைத் தளம் அண்மையில் ஒரு வீட்டுப் பணிப்பெண்னை பேட்டிக்கண்ட போது, அவர் தனக்கு அனுபவிக்க நேர்ந்த பெரும் சுரண்டல் நிலைமையை தெளிவுபடுத்தினார்.

39 வயதான பத்மா, தனது மகனுக்கும் மகளுக்கும் நிதி உதவி செய்யும் எதிர்பார்ப்புடன் 2003 மே மாதம் சவுதி அரேபியா சென்றார். இதற்கு முன்னர் ஒரு தொழிற்சாலையில் சேவையாற்றிய அவர் திருமணத்தின் பின்னர் வேலையில் இருந்து விலகினார். இலங்கையை விட கணிசமானளவு அதிக சம்பளம் கிடைக்கும் மத்திய கிழக்கில் வேலைக்கு செல்ல அவர் தீர்மானித்தார். அவர் திரும்பும் போது துன்பகரமான அனுபவங்களுடன் திரும்பினார். அந்த அனுபவங்கள் பல ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

பத்மா தெளிவுபடுத்தியதாவது: "எனக்கு ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்வதற்காக எனக்கு தொழிலை ஏற்பாடு செய்த ஒரு உள்ளூர் தொழில் முகவரான ஃபாயிஸ் ட்வல் ஏஜண்டுக்கு 7,000 ரூபா (70 அமெரிக்க டொலர்கள்) செலுத்தினேன். அந்தத் தொகையை தேடிக்கொள்ளவும் மற்றும் பயணத்திற்கு அவசியமான பொருட்களை வாங்கவும் எனது வீட்டில் இருந்த தளபாடங்களையும் மின்சார உபகரணங்களையும் விற்றேன். மத்திய கிழக்கில் சம்பாதித்த பின்னர் அவற்றை மீண்டும் வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் தற்போது வெறுங்கையுடன் திரும்பியுள்ள நிலையில் போராடிக்கொண்டிருக்கின்றேன்.

"ஏஜன்சி எனக்கு மாதம் 450 ரியால் (120 அமெ. டொலர்) சம்பளம் தருவதாக வாக்குறுதியளித்தது. நான் பயணிப்பதற்கு முன்னதாக, அரசாங்க நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக என்னை பதிவு செய்துகொண்டேன்." 120 அமெரிக்க டொலர்கள் அல்லது 12,000 ரூபாய்கள் ஒரு தொழிற்சாலைத் தொழிலாளியின் சராசரி சம்பளத்தின் இரண்டு மடங்கிற்கு சமனாகும். இந்த தனியார் முகவர் சவுதி அரேபியாவில் உள்ள பத்மாவின் தொழில் வழங்குனர் ஊடாக மேலும் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டார்.

பத்மாவுடன் 123 வீட்டுப் பணிப்பெண்கள் கொண்ட ஒரு குழு சவுதி தலைநகரான ரியாத்தில் தரையிறங்கினர். ரியாத்தில் உள்ள ஃபாயிஸ் ட்ரவல் ஏஜன்ட் அவர்கள் அனைவரையும் முகவர் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர்கள் கடுமையாக நடத்தப்பட்டார்கள். களைப்பால் யாரும் தூங்கினால், அவர்களை எழுப்புவதற்காக அந்த முகவர் நிலைய அலுவலர் அவர்களை காலால் உதைப்பான். அவர்களை வேலைத் தளத்தில் ஒப்படைக்கும் வரை அனைவரும் விழித்திருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நாற்காலியில் அமர்ந்தவாறே மூன்று அல்லது நான்கு நாட்கள் பெண்கள் அங்கு காத்திருக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே பத்மா ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு மாற்றப்பட்டார். "என்னை முதலாவதாக ரியாத்தில் உள்ள ஒரு இராணுவ அலுவலரின் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஒரு குடும்பப் பெண் தனது கனவருடனும் மகனுடன் மட்டுமே நேரடியாக பேச முடியும். என்னால் அந்த மொழியை புரிந்துகொள்ள முடியாத நிலையில் இலங்கை சாரதி ஒருவரே எனக்கு மொழிபெயர்ப்புச் செய்தார். அவர் ஒரு சுவருக்கு பின்னால் இருந்தவாறு எஜமானின் கட்டளைகளை எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார்."

தனக்கு இளைமையான ஒருவரே வேண்டும் எனவும் பத்மா போன்ற நடுத்தர வயதானவர் அல்ல எனவும் அந்த அலுவலர் முறைப்பாடு செய்தார். அந்த அலுவலர் பெளத்தர்களுக்கு எதிரானவர் என்றும் எனவே தான் பெளத்த சமயத்தை சேர்ந்தவர் என்பதை சொல்லவேண்டாம் என்றும் அந்த சாரதி எச்சரிக்கை செய்தார். எவ்வாறெனினும் அது வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை.

நான்கு நாட்களின் பின்னர், திடீரென எந்தவொரு விளக்கமும் இன்றி தனது பொதிகளைக் கட்டுமாறு பத்மாவுக்கு கட்டளை வந்தது. அவர் வாகனத்தில் ஏற்றப்பட்டு மீண்டும் முகவர் நிலையத்தில் இறக்கப்பட்டார். அவருக்கு அங்கு சுதந்திரம் இருக்கவில்லை. தொழிலைப் பெற்றுக்கொள்ளும் போது அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் தமது கடவுச் சீட்டை தொழில் வழங்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்பந்தம் முடிவடையும் போது மட்டுமே அது திரும்பக் கிடைக்கும்.

"நான் முகவர் நிலையத்திற்கு திரும்பிய பின்னர் அவர்கள் மீண்டும் மீண்டும் எனது வயதை கேட்டனர். இலங்கை முகவர் எனது வயது பற்றி பொய் கூறியுள்ளார். நான் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு அழத் தொடங்கினேன்." என பத்மா தெரிவித்தார். முகவர் நிலைய உரிமையாளர் பத்மாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் அங்கும் மற்றும் முகவர் இல்லத்திலும் 16 நாட்கள் தொழில் இன்றி இருந்தார். இலங்கையில் உள்ள அவரது கணவர் மட்டும் பிள்ளைகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பக் கூட அவருக்கு வாய்ப்பிருக்கவில்லை.

"நான் முகவர் நிலையத்தில் இருந்தபோது தான் வேலை செய்த வீட்டில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக கூறி ஒரு இந்தோனேஷிய யுவதி அங்கு திரும்பியிருந்தார். அவளுக்கு அப்போது 20 வயது. எனக்கு முன்னாலேயே அந்த முகவர் நிலையை உரிமையாளர் அந்த யுவதியை கைகளாலும் கால்களாலும் தாக்கினார். நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். எமக்கிடையிலான மொழி பிரச்சினைக் காரணமாக எங்கள் இருவராலும் உரையாடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் என்னிடம் பணம் இல்லை என்பதை புரிந்துகொண்ட அவர் இலங்கைக்கு கடிதம் அனுப்புவதற்காக எனக்கு 10 ரியால்களைக் கொடுத்தார்," என பத்மா விளக்கினார்.

இறுதியாக அந்த முகவர் நிலையத்தால் இன்னுமொரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டது. "எனது புதிய குடும்பத் தலைவி ஒரு வைத்தியர். அந்த இடத்தில் எனக்கு ஒழுங்காக சாப்பாடு கூட கிடைக்கவில்லை. நான்கு நாட்களின் பின்னர் எனது வேண்டுகோளின்படி அந்த வைத்தியர் என்னை முகவர் இல்லத்தில் மீண்டும் கொண்டு சேர்த்தார்," என பத்மா தெரிவித்தார். அவர் இன்னுமொரு இடத்திற்கு ஐந்து மாதத்திற்கு வேலைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு அங்கு மாதச் சம்பளத்தைக் கூட கொடுக்கவில்லை.

"அந்த வீட்டில் 16 பிள்ளைகள் உட்பட 28 பேர் இருந்தார்கள். நான் விடியற் காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணிவரை வேலை செய்தேன். முதலில் வீட்டில் இருந்த கடுமையான வேலைகள் அனைத்தையும் தனியாகவே செய்யத் தள்ளப்பட்டேன். சில நாட்களின் பின்னர் இன்னுமொரு இலங்கை யுவதி என்னுடன் இணைந்தாள். சில நாட்கள் நாம் இருவரும் 30 பாரமான பொருட்களை கழுவவேண்டியிருந்தது. நாங்கள் வீட்டை துப்புரவு செய்ய வேண்டும், தரைவிரிப்புகளையும் மலசல கூடத்தையும் கழுவவேண்டும். அத்துடன் சமயலறை வேலைகளுக்கும் உதவ வேண்டும். நான் எந்தவொரு சம்பளமும் இன்றி வேலை செய்ததோடு அதற்காக எதையும் செய்ய முடியாமல் போனது."

தனக்கே தெரியாமல் இன்னுமொரு தொழில் நிறுவனமான நஷனல் ரெக்ருட்டிங் ஒஃவீஸுக்கு ஒரு அடிமைபோல் பத்மா விற்கப்பட்டிருந்தார். அந்த புதிய முகவர் நிலையம் அவரை ரியாத்தில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசீம் பிரதேசத்திற்கு அனுப்பியது. அவருக்கு ரியாத்திற்கு மட்டுமே விசா இருந்ததால் வேறு எங்கும் செல்ல முடியாமல் போனது.

"காசீம் வீடு ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது நல்லதாக இருந்தது" என பத்மா குறிப்பிட்டார். அவரது புதிய தொழில் வழங்குனர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். அவர் அங்கு சுமார் ஒன்றரை வருடங்களாக சேவையாற்றியதோடு குறிப்பிடப்பட்ட மாத சம்பளமும் கிடைத்தது. ஆனால் அந்த வீட்டு உரிமையாளரின் தாயார் 1,200 அமெரிக்க டொலர்களை அல்லது 10 மாத சம்பளத்திற்கு சமமான தொகையை கடனாகப் பெற்றுக்கொண்டார். அவர் திருப்பிக் கொடுக்கவேயில்லை.

பத்மாவின் விசா 2005 மே மாதத்துடன் முடிவடைந்ததால் முகவர் நிலையத்திற்கு சென்றார். அவர் இலங்கைக்கு திரும்ப எதிர்பார்த்த போதிலும், அவருக்கு அறிவிக்காமலேயே முகவர்கள் அவரது விசாவை ஆறு மாதத்திற்குப் புதுப்பித்தனர். மேலும் நான்கு மாதங்களுக்கு அவர் முகவர் நிலைய உரிமையாளரின் உறவினர் வீட்டில் பணிபுரியத் தள்ளப்பட்டார்.

நான்கு நாட்களின் பின்னர் முகவர் நிலைய உரிமையாளர், ஸமிரா மொஹமட் என்ற இன்னுமொரு முகவர் நிலையத்திற்கு மாற்றுவதற்கு முன்னதாக தனது சொந்த வீட்டுக்கு பத்மாவை அழைத்துச் சென்றார். அவர் அங்கு தங்கியிருந்தபோது அவரது பொதிகளை முன்னைய உரிமையாளர் வைத்துக்கொண்டார். அவர் அதைத் திறந்து பார்த்தபோது இரு தங்க மோதிரங்களும் ஒரு சங்கிலியும் காணாமல் போயிருந்தது. அவர் இந்த திருட்டைப் பற்றி புதிய முகவரிடம் அறிவித்திருந்த போதிலும் எதுவும் நடக்கவில்லை.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் எந்தவொரு உதவியும் பத்மாவுக்கு கிடைக்கவில்லை. அவர் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது தூதரகத்தில் உள்ள அலுவலர்கள் அவரை அங்கு வருமாறு அழைத்தனர். "நான் வீட்டிலிருந்து வெளியேறினால் குடும்பத் தலைவி நான் பணத்தை திருடியதாக பொலிசுக்கு முறைப்பாடு செய்யக் கூடும் மற்றும் நான் கைதுசெய்யப்படக் கூடும் என நான் அவர்களுக்கு தெரிவித்தேன். நான் இருந்த இடத்திற்கு வந்து நான் இருக்கும் சூழ்நிலையை பார்க்குமாறு அவர்களுக்கு வலியுறுத்தினேன்," என பத்மா குறிப்பிட்டார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

தமது பிரஜைகள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதிலும் அரசாங்கம் அவர்களை பாதுகாக்க தவறியதையிட்டு பத்மா அதிகம் ஆத்திரமடைந்திருந்தார். "எங்களது அரசாங்கம் மட்டுமல்ல. தமது அரசாங்கத்தால் கைவிடப்பட்ட இந்திய, இந்தோனேஷிய, பிலிப்பைன்ஸ், பங்களாதேச மற்றும் பாகிஸ்தான் பெண் தொழிலாளர்களும் உள்ளனர். நாம் அனைவரும் ஒரே விதமான பிரச்சினையையே எதிர்கொண்டுள்ளோம். இந்தத் துஷ்பிரயோகங்களை நிறுத்த அரசாங்கங்கள் பொறுப்பேற்பதில்லை. எஜமானர்கள் வீட்டுப் பணிப்பெண்களை அடிப்பார்கள் சில சமயம் சுடுவார்கள். பல இடங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை, சாப்பாடு கூட கொடுப்பதில்லை. வீட்டுப் பணிப்பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை."

இறுதியாக பத்மா இலங்கைக்கு திரும்பினார். திரும்பும் வழியில் ரியாத் விமான நிலையத்தில் அவர் இரு இந்தியப் பெண்களை சந்தித்தார். அவர்கள் இருவரும் பத்மா எதிர்கொண்டதைப் போன்ற நிலைமைகளையே எதிர்கொண்டிருந்தனர். அவர்கள் சவுதி அரேபியாவில் எட்டு மாதங்கள் தொழில் செய்த போதிலும் அவர்களுக்கு சம்பளமோ போதுமான உணவோ அல்லது உடுத்துவதற்கு உடையோ கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

பத்மா இலங்கையை வந்தடைந்த போது அவர் மிகவும் மனவேதனையடைந்திருந்தார். அவர் இன்னமும் அவருக்கு கொடுக்கப்படாத சம்பளத்தைப் பெற போராடிக்கொண்டிருப்பதோடு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணையகம் மற்றும் ஏனைய அரசாங்க அலுவலர்களிடமிருந்து சிறிய உதவிகளைப் பெற்றுள்ளார். அவரது அனுபவங்கள் ஆயிரக்கணக்கான இலங்கை ஒப்பந்தத் தொழிலாளர்களின் துன்பத்தை ஏதாவதொரு வழியில் தணிப்பதற்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இலாயக்கற்றிருப்பதையே வெளிக்காட்டுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தொழில் உறவு அமைச்சர் அதாவுத செனவிரட்ன: "நான் அனைவருக்கும் சொல்கிறேன், இது ஒரு மிகப்பெரும் மனிதநேய பிரச்சினையாக இருப்பதால் இந்த துஷ்பிரயோகங்களைத் தவிர்க்க எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நாங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை, நாங்கள் மனிதர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கிறோம்," என்றார். எவ்வாறெனினும் அவர் உருப்படியான பிரேரணைகளை முன்வைக்கவில்லை.

அரசாங்கமானது, குறைந்த தரத்தில் ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான நிலைமைகளையும் மற்றும் சம்பளத்தையும் கொடுக்குமாறு மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழில் வழங்குனர்களுக்கு வலியுறுத்துவதை விட, 2004ம் ஆண்டில் இலங்கைக்கு 1.6 பில்லியன் அளவிலான பணத்தை அனுப்பிய நவீன கால அடிமை வர்த்தகத்தை விரிவுபடுத்துவதிலேயே அதிகம் ஆர்வமாக உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved