World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government drafts new Patriotic Act in preparation for war

இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கான தயாரிப்பில் புதிய தேசப்பற்று சட்டத்தை இயற்றுகிறது

By Nanda Wickremasinghe and K. Ratnayake
25 May 2006

Back to screen version

இலங்கை அரசாங்கம், கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்தல், ஊடக தணிக்கையை தீவிரப்படுத்தல் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக பரந்த அதிகாரங்களை கொண்ட சட்டத்தை உருவாக்க திட்டமிடுவதானது, அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுக்க தயாராகிக்கொண்டிருப்பதற்கான தெளிவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

இனவாத பீதியையும் ஆர்வத்தையும் கிளறி விட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது பேரனவாத பங்காளிகளும் முயற்சித்த போதிலும், ஏற்கனவே 1983ல் இருந்து 65,000 உயிர்களுக்கும் மேல் பலிகொண்ட இந்த மோதலுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைக்கவில்லை. புதிய சட்டம் உழைக்கும் மக்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும்: இளைஞர்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்ப்பது, எந்தவொரு ஊடக விமர்சனத்தையும் நசுக்குதல் மற்றும் பொதுமக்களின் ஆழமான வெறுப்புக்குள்ளான யுத்தம் சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதும் இதில் அடங்கும்.

சட்ட வரைவு பற்றிய விபரங்கள் இன்னமும் வெளிவந்திராத போதிலும், புதய சட்டங்களின் பண்பு ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குள் இந்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியின் செயலாளர் டலஸ் அலகப்பெரும, உலக சோசலிச வலைத் தளத்திற்கு உறுதிப்படுத்தினார். வெகுஜனங்களின் பிரதிபலிப்பை பற்றி தெளிவான நுன்ணுணர்வுடன் இருந்த அவர், சட்டத்தின் உள்ளடக்கம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிக்கொண்டார்.

மே 13 வெளியான Colombo Page இணைய தள செய்தியின்படி, இந்த புதிய மசோதா சேதப்பற்று சட்டம் என அழைக்கப்படும். இது 2001 செப்டெம்பர் 11க்குப் பின்னர் புஷ் நிர்வாகத்தால் இயற்றப்பட்ட நெடுங்கால விளைவுகளை கொண்ட ஜனநாயக விரோத சட்டத்தை நினைவில் நிறுத்துகிறது. யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கில் நிலைநிறுத்துவதன் பேரில் துருப்புக்களை தொடர்ந்தும் விடுவிப்பதற்காக தெற்கில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த சிவிலியன் படைகளுக்கு ஆரம்பத்தில் 3,000 துருப்புக்கள் சேர்க்கப்படவுள்ளதாக இந்த இணைய தளம் ஜனாதிபதி செயலகத்தில் பெயர் குறிப்பிடப்படாத தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த சட்டமானது மிக நீண்ட விளைவுகளை கொண்ட உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். சட்டவாக்கல் திணைக்களத்தில் உள்ள ஒரு அலுவலரை மேற்கோள் காட்டி, சிங்கள வார இதழான ராவய வெளியிட்டிருந்த செய்தியானது 18-50 வயதுவரையானவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் விதிகளும் இந்த மசோதாவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது. இதன் குறிக்கோள் பற்றிய விபரங்களை அந்த செய்தி வழங்காத அதேவேளை, இது ஒரு ஒட்டுமொத்த கட்டாய படை சேர்ப்பை நோக்கிய தெளிவான முன்நடவடிக்கையாகும்.

இந்தப் புதிய சட்டமானது வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்க வழிவகுப்பதன் பேரில் தற்போதைய சட்டத்தை பலப்படுத்தும் என Colombo Page கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. 1985ல் அமுலுக்கு வந்த படைக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இராணுவ பற்றாக்குறையை நிரப்பும் சட்டத்தின் கீழ், "பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை பிரஜையையும் இராணுவத்தில் சேர்ப்பதற்கும்" மற்றும் "தேசிய சேவை கட்டளையின்" கீழ் அவர்களை துணை இராணுவ படைகளில் சேர்க்கவும் ஒரு தகுதியுள்ள அதிகாரியை நியமிக்கும் பரந்த அதிகாரங்களை ஜனாதிபதி கொண்டுள்ளார்.

ஆயுதப் படைகளையும் மற்றும் பொலிசையும் "பெருக்குவதன்" பேரில் பல்வேறு துணைப்படைகளில் சேவையாற்ற ஏற்கனவே கட்டாய ஆள்சேர்ப்புக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது. "யுத்த காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்புக்காக" அல்லது "எந்தவொரு கிளர்ச்சிக்காரரையும் அல்லது கிளர்ச்சியையும் அல்லது மக்களை சட்டம் மீறப்படுவதை நசுக்க அல்லது தவிர்க்கவும்" இத்தகைய படைகளை அணிதிரட்ட முடியும். 1985 சட்டமானது உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்து வந்த நிலைமையின் மத்தியிலும் மற்றும் வாழ்க்கைத் தரம், தொழில் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பு குவிந்துவந்த நிலைமையின் மத்தியிலுமே வரையப்பட்டது.

ஆனால் இத்தகைய நகர்வுகள் வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டக்கூடும் என்ற பீதியால், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவால் கட்டாயமாக இராணுவத்திற்கு சேர்க்கும் நடவடிக்கையை அமுல்படுத்த முடியாமல் போனது. அரசாங்கம் இதுவரையும் இராணுவப் பிரிவுகளையும் மற்றும் பலவித துணைப் படைப் பிரிவுகளையும் நிரப்புவதற்காக வறுமைக்குள் அகப்பட்டுள்ள இளைஞர்களின் பொருளாதார நிலைமையை பயன்படுத்திக்கொள்வதிலேயே தங்கியிருக்கின்றது. ஒரு துணைப் பொலிஸ் படையான ஊர்காவற்படையும் வேலையற்ற இளைஞர்களை "தொண்டர்களாக" இணைத்துக்கொண்டதன் மூலமே ஸ்தாபிக்கப்பட்டது. இராணுவ பற்றாக்குறையை நிரப்புவதற்கான துணைப்படை பிரிவுகளை அமைக்கும் விடயமும் இந்த முறையிலேயே எழுப்பப்பட்டது.

எவ்வாறெனினும் 2002 யுத்த நிறுத்தத்திற்கு முன்னதாக, இலங்கை இராணுவம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு இராணுவத் தளத்தை இழந்தது உட்பட ஒரு தொகை தோல்விகளை கண்டது. இராணுவத்தை விட்டோடியவர்களின் வீதம் அதிகரித்ததோடு தேவையான தொகையை இட்டுநிரப்புவதற்காக ஆள் சேர்ப்பதிலும் சிரமங்களை எதிர்கொண்டது. ஒட்டு மொத்தத்தில் கடந்த இரு தசாப்த கால யுத்தத்தில் சுமார் 50,000 பேர் இராணுவத்தை கைவிட்டு ஓடியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1983ல் இருந்து, பிராந்தியத்தில் மிகப் பெரிய இராணுவ இயந்திரமாக உருவாவதன் பேரில், தலைக்கு ஒன்று என்றளவில் ஆயுதப் படைகள் மிகப் பரந்தளவில் விரிவாக்கப்பட்டது. தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை அனைத்தும் சேர்த்து சுமார் 157,000 படையினர் உள்ளனர். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஒரு புதிய யுத்தத்திற்கு தயார் செய்துகொண்டிருக்கின்ற அளவில், வறுமை நிலையை பயன்படுத்தி தவிர்க்க முடியாத இழப்புக்களை மீண்டும் நிரப்ப முடியாது என்பதையிட்டு அது தெளிவாகவே அக்கறை கொண்டுள்ளது.

மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவது சம்பந்தமாக பரந்த பீதியும் எதிர்ப்பும் நிலவுகிறது. இந்த ஆண்டு முற்பகுதியில் மாற்றீடு கொள்கைக்கான நிலையம் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, சிங்களவர்களில் 95 வீதமானவர்களும், முஸ்லிம்களில் 84.7 சதவீதமானவர்களும் மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் தமிழர்களில் 90.6 வீதமானவர்களும் யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என நம்புகின்றனர்.

ஏற்கனவே இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் மே 11 அன்று கடலில் நேருக்கு நேர் நடந்த மோதலில் இரு பக்கத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதே சமயம், ஆத்திரமூட்டும் விதத்தில் இராணுவமும் மற்றும் அதோடு இணைந்து செயற்படும் தமிழ் துணைப்படைக் குழுக்களும் புலி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் படுகொலை செய்துகொண்டிருக்கின்ற நிலையில் ஒரு இரகசிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருப்பதோடு இது பதில் தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல பொது மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மோதல்கள் தீவிரமடையும் அதேவேளை, யுத்தத்திற்கான எதிர்ப்பும் தீவிரமடைகிறது. ஜனாதிபதி இராஜபக்ஷ தனது தேசப்பற்று சட்டத்தை இயற்றுவது இளைஞர்களை இராணுவத்திற்குள் உள்ளடக்குவதற்காக மட்டுமல்ல, யுத்தத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனத்தையும் நசுக்குவதற்கும் ஆகும். இந்தப் புதிய சட்டமானது "பயங்கரவாதம் பற்றிய விசாரணைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும்" எந்தவொரு செய்தியையும் தடுப்பது உட்பட, ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால அதிகாரங்களை மேலும் பலப்படுத்தவுள்ளதாக பத்திரிகைகளுக்கு கசிந்துள்ள விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மீண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகளை முடக்குவதற்கு அரசாங்கத்திற்குள்ள இயலுமையை இந்த சட்டம் மேலும் பலப்படுத்தும்.

தயாராகிக்கொண்டிருப்பது என்னவென்பது, யுத்தத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்யும் இராஜபக்ஷவின் சிங்களப் பேரினவாத பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் விடுக்கின்ற அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மே 7 அன்று, இராணுவத்தின் நடவடிக்கைகளை அறிக்கை செய்வது பற்றி ஊடகங்களைத் தாக்கி பாராளுமன்றத்தில் ஒரு விசேட அறிக்கையை விடுத்த ஜே.வி.பி யின் பாராளுமன்ற குழு தலைவர் விமல் வீரவன்ச, தனது கட்சி "ஊடக சுதந்திரத்தை விட தாய்நாட்டை மதிக்கின்றது" எனப் பிரகடனம் செய்தார். தனது கட்சியின் கடந்த கால ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சை கைவிட்ட வீரவன்ச, புஷ் நிர்வாகத்தின் தேசப்பற்று சட்டம் இலங்கைக்கு பொருத்தமானது என புகழ்ந்தார். "அந்த நாடு கூட (அமெரிக்கா)... அதனது தேசிய குறிக்கோள்களின் அடிப்படையில் ஏனைய அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது," என அவர் உளறினார்.

இந்த மாதம் புதிய சட்டம் பற்றி வெளிவந்த செய்திகளை அடுத்து, ஜாதிக ஹெல உறுமய செயலாளர் ஒமல்பே சோபித, Irida Lakbima பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்கள் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புக்களின் விமர்சனங்களை நிராகரித்து தனது தேசப்பற்று சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்றார். ஊடகங்களை இலக்குவைத்து அவர் பிரகடனம் செய்ததாவது: "ஊடக சுதந்திரம் மற்றும் மக்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்ளும் உரிமையை விட நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமையை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது."

கடந்த ஆண்டு யுத்த எதிர்ப்பு திரைப்படங்களுக்கு எதிராக தனது சொந்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்த இராணுவ உயர் மட்டத்தினர், படையினரின் மன உறுதியை கீழறுப்பதாக இயக்குனர்களை கண்டனம் செய்தனர். பல திரைப்பட இயக்குனர்களை சந்தித்த ரியர் அட்மிரால் சரத் வீரசேகர, ஆயுதப் படைகளின் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்னாயக்க மற்றும் சிரேஷ்ட விமானப்படை அலுவலரும், "இராணுவத்திற்கு சார்பான திரைப்படங்களை" தயாரிக்குமாறு அவர்களுக்கு கூறியதோடு "யுத்தம் வெடித்தால் அவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரும்" எனவும் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தனர்.

"பயங்கரவாதத்திற்கு" எதிராக அல்லாத ஆனால் யுத்தத்திற்கு எதிரான எதிர்ப்புக்கும் மற்றும் மிகப் பொதுவில் உழைக்கும் மக்களுக்கும் எதிரான இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கம் கட்டாயம் எதிர்க்க வேண்டும். யுத்தத்திற்கான ஆர்ப்பாட்டமானது, நாட்டின் ஆழமடைந்துவரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதில் இலங்கையின் ஆளும் கும்பல் தோல்வி கண்டதன் உற்பத்தியேயாகும். ஜனத்தொகையில் பெருபான்மையானவர்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வழங்கமுடியாத இராஜபக்ஷ அரசாங்கம், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தை இன மற்றும் மத வழியில் பிளவுபடுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை இனவாத பீதியையும் பகைமையையும் கிளறுகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved