:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Europe's inability to counter US-Israeli war policy
அமெரிக்க-இஸ்ரேலிய போர்க் கொள்கையை எதிர்க்க முடியாத ஐரோப்பாவின் இயலாமை
By Ulrich Rippert
21 July 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கிற்கு எதிராக புஷ் அரசாங்கம் தன்னுடைய
போரை கட்டவிழ்த்தபோது, அத்தகைய முயற்சி இராணுவ, அரசியல் பேரழிவிற்கு வழிவகுக்கக்கூடும் என்று பல
ஐரோாப்பிய நாடுகளும் அதன் ஆபத்து பற்றி எச்சரித்திருந்தன. குறிப்பாக பேர்லின் மற்றும் பாரிசில் இருந்த முக்கிய
வட்டங்கள் பகிரங்கமாகவே மத்திய கிழக்கும் முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத்தீயாக பெருகும்
என்று எச்சரித்திருந்தன.
இன்று, மிகக் கொடூரமான முறையில் இந்தப் பயங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில்,
அத்தகைய கொள்கையை முன்னதாக குறைகூறியிருந்த ஐரோப்பிய சக்திகள் இப்பொழுது அமெரிக்காவும், இஸ்ரேலும்
நிகழ்த்தும் ஆக்கிரமிப்பு போருக்கு துணைநிற்க முடிவெடுத்துள்ளன. இதுதான் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த
G8
உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் முக்கியத்துவம் ஆகும். குறிப்பாக அங்கேலா மேர்க்கலின்
தலைமையில் இயங்கும் ஜேர்மனிய அரசாங்கம் இதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம்
வேண்டும், இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கள் தேவைதானா என்ற வினாவை பிரெஞ்சு ஜனாதிபதி எழுப்பிய போதிலும்கூட
உச்சி மாநாட்டில் ஜேர்மனிய அதிபர் ஜெருசலேமிற்கு முற்றிலும் விமர்சனமற்ற ஆதரவு கொடுக்கும் அமெரிக்க
திட்டத்திற்கு நிபந்தனையற்ற முறையில் துணை நின்றுள்ளார்.
உச்சி மாநாட்டிற்கு இரு நாடுகளுக்கு முன்பு, லெபனானுக்கு எதிராக தன்னுடைய
மிருகத்தனமான இராணுவத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியபோதும் மற்றும் உலகின் பார்வை முழுவதும்
நாட்டின் மிக முக்கியமான விமான நிலையத்தை தாக்கியதை நோக்கி பதிந்திருந்த நிலையில், அங்கேலா மேர்க்கல்
அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மனியில் தரையிறங்கியபோது பெரும் உவப்புடன் அவரை வரவேற்றார்.
இத்தகைய மாற்றத்தின் பின்னணியில் உள்ளது என்ன? மூன்று ஆண்டுகளுக்கு முன்பு
மேர்க்கலுக்கும் மற்ற முக்கிய கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU),
கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU)
உறுப்பினர்களும் புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவை தெளிவாகக்
கொடுத்திருந்தனர் என்று சுட்டிக்காட்டுவது போதுமானது அன்று. அரசியல் ஸ்தாபனத்தில் அத்தகைய பெரும்
மாற்றங்கள் தனி நபர்களினால் முடிவெடுக்கப்படுவதில்லை; அவற்றிற்கு ஆழ்ந்த புறநிலையான வேர்கள் உள்ளன.
நாளாந்தம் மக்களின் பரந்த பிரிவினருக்கு பயங்கரத்தை கொடுக்கும் ஈராக்கிய
யுத்தம் தற்பொழுது லெபனான் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் விரிவாக்கப்பட்டு, விரைவில் சிரியாவிற்கும் ஈரானுக்கும்
செல்லக் கூடியதாகவுள்ளது என்ற ஐரோப்பிய அரசியல் வட்டாரங்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனை ஒரு
வரலாற்றுத் திருப்பு முனையை பிரதிபலிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மற்றும்
நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டபூர்வ கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து தன்னுடைய சட்டவிரோத
போரை தொடங்கியது. ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், சர்வதேச சட்டம் ஆகியவற்றினால் தனக்குத் தடுப்பு
இல்லை என்பதை அமெரிக்கா அவ்வாறு செய்கையில் தெளிவாக்கியது; "வலிமையே சரியானது" என்ற கொள்கையின்
அடிப்படையில் அது கொண்டுள்ள இராணுவ வலிமையின் அடிப்படையில் அது அவ்வாறு ஒரு நிலையை உருவாக்கிக்
கொண்டது.
வேறுவிதமாகக் கூறினால், இரண்டாம் உலகப் போரினால் விட்டுச் செல்லப்பட்ட
இடிபாடுகள் மீது தோற்றுவிக்கப்பட்ட அரசியல் அமைப்புமுறை, ஒவ்வொரு நாடும் சர்வதேச விதிகள், சட்டங்கள்
ஆகியவற்றிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து இன்று இல்லாதுபோய்விட்டது. ஈராக்கிய போரும் லெபனான்,
பாலஸ்தீனிய பகுதிகளில் அதன் விரிவாக்கமும் ஏகாதிபத்திய அரசியல் மிக ஆக்கிரோஷமான, மிருகத்தனமான
வடிவத்திற்கு திரும்பிவிட்டதை பிரதிபலித்துக் காட்டுகின்றன.
இத்தகைய போக்கு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு ஒரு சங்கடத்தை
கொடுத்துள்ளது. போருக்கு அவை இராஜதந்திர முறையில் தீர்வைக் காண விரும்பியிருப்பர்; இன்னும் துல்லியமாக
கூறப்போனால் தங்கள் எரிபொருள் மற்றும் பூகோள மூலோபாய நலன்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்
கொள்ள விரும்பியிருப்பர்; ஆனால் இதைச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு தேவை; அதுவோ
அத்தகைய போக்கை சிறிதும் தொடர விரும்பவில்லை.
இத்தகைய முரண்பாடு இப்பொழுது பெருந்திகைப்பு கொடுக்கும் வடிவங்களை
எடுத்துள்ளது. ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களும், ஆசிரியர் குழுக்களும் பல உண்மைகளை நன்கு அறிந்துள்ளனர்:
முதலாவதாக, ஈராக்கிய போர் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கிற்கும் அப்பகுதி முழுவதற்கும்
பேரழிவுதரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன; இரண்டாவதாக, இப்போது லெபனானில் நடத்திக்
கொண்டிருக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கம் பென்டகனுடைய உடன்பாடு இல்லாமல் சிறிதும்
கற்பனைகூடச் செய்திருக்காது; மூன்றாவதாக, அமெரிக்க அரசாங்கம் ஈரானை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவரும் திட்டத்தை தொடர்ந்துள்ளது; தேவையானால் படைபலம் இதற்காக பயன்படுத்தப்படும்; அதாவது
காஸ்பியன் பகுதியில் எண்ணெய், எரிவாயு இருப்புக்களை தான் தடையற்ற முறையில் பெறவேண்டும் என்பதேயாகும்
அது. ஆயினும்கூட ஐரோப்பாவின் மத்தியில் தற்போது ஒலிக்கப்படும் முக்கிய கோரிக்கை அமெரிக்க அரசாங்கம்
மத்திய கிழக்கில் தன்னுடைய தலையீட்டை தீவிரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியவர்களில் முதலில் இருந்தவர்கள் ஒருவர் ஜேர்மனிய
அரசாங்கத்தின் ஜேர்மன்-அமெரிக்க உறவுகளை ஒருங்கிணைக்கும் பதவியில் இருக்கும் சமூக ஜனநாயக கட்சியை
சேர்ந்த கார்ஸ்டன் வொய்க்ட் ஆவார். இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் இருந்த சர்வதேச விமான நிலையத்தை
வாஷிங்டனுடனான ஆயுதங்களால், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட" ஆயுதங்களால் அழித்தபோது, அவர் ஜேர்மன்
வானொலியில் பின்வருமாறு தெரிவித்தார்: "முதலில் ஒன்று சரியாக உள்ளது என்பது அறியப்படவேண்டும், அதாவது,
மத்திய கிழக்குப் பகுதியில் கூடுதலாக அமெரிக்க துருப்புக்கள் இருக்க வேண்டுமே ஒழிய குறைவாக அல்ல. இதுதான்
அமெரிக்காவை பற்றிக் பொதுவாக குறைகூறுவோர் கூறுவதும்; ஏனெனில் அமெரிக்கா இல்லாவிட்டால் அங்குள்ள
நிலைமையை அமைதிப்படுத்த இயலாது."
ஈராக்கும் மத்திய கிழக்கு முழுதிலும் அமெரிக்க கொள்கையினால் விளைந்துள்ள
பேரழிவு விளைவுகள் --ஏற்கனவே சில ஐரோப்பிய அரசாங்கங்கள் இது பற்றி எச்சரித்துள்ளன-- ஐரோப்பிய
பூர்ஷ்வாசியின் பங்ககை வலிமைப்படுத்தியுள்ளது என்று நினைக்கக்கூடும். உண்மையில் இதற்கு மாறாகத்தான் நிலைமை
உள்ளது. தீப்பற்றும் நிலைமை உள்ள சூழ்நிலையிலும், மத்திய கிழக்கு முழுவதும் பெரும் இராணுவ நடவடிக்கை
கொழுந்துவிட்டு எரியக்கூடிய நிலையில், ஐரோப்பியர்கள் இப்பொழுது உலகின் முக்கிய தீவைப்பவர் தலையீடு செய்ய
வேண்டும் என்கின்றனர்.
வொய்க்ட்டை போலவே ஜேர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரியான ஜோஸ்கா
பிஷ்ஷரும் (பசுமைக் கட்சி), Die Zeit
ஏட்டில் ஒரு பேட்டியில் "அனைத்தும் அமெரிக்காவையும், அதனை தலைமையையும் பொறுத்துத்தான் உள்ளது. ஆனால்
அவர்கள் மட்டும் தனியே செயல்பட்டால் அவர்களுக்கு கூடுதலான சிரமம்தான்." என வாதித்திருந்தார்.
"ஈராக்கில் இத்தருணத்தில் வாஷிங்டன் முழுமையாக பிணைந்துள்ளது" எனவே அது ஏற்கனவே கூடுதலாக
செயல்பட்டுவருகிறது" என்ற எதிர்க்கருத்தை Die
Zeit கூறியதற்கு பிஷ்ஷர் "அமெரிக்கா
உறுதியுடன் செயல்படாவிட்டால் எந்தத் தீர்வையும் காண்பதற்கு இல்லை. அங்கு காணப்படும் அதிகார வெற்றிடம்
அமெரிக்காவிற்கும் மற்றும் நம் அனைவருக்குமே கணிசமான பிரச்சினைகளை கொடுத்துள்ளது. ஆனால் முக்கிய
பிரச்சினை ஈராக் அல்ல, ஈரான்தான்." எனக் கூறினார்.
புதனன்று கொடுத்த கருத்து ஒன்றில் பிரெஞ்சு நாளேடான
Le Monde
எழுதியதாவது: "அப்படியானால் என்ன செய்யப்பட
வேண்டும்? பாரியளவில் சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து
முயற்சிகளுமே அநேகமாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன -- அப்பகுதியில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய சமரசத்திற்கு,
அங்கு இராணுவம் நிறுத்தப்பட வேண்டிய தேவை உட்பட அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன."
உண்மை என்னவென்றால், அமெரிக்க தலைமையிலான இராணுவ நிலைப்பாடு என்பது
அப்பகுதியில் ஒரு பேரழிவைக் கொடுத்துள்ளது. ஐரோப்பியர்கள் ஒருகாலத்தில் கொண்டிருந்த எண்ணெய் ஊற்றித்
தீயைத் தடுக்கலாம் என்றிருந்த நம்பிக்கைகள் இப்பொழுது பேர்லினிலும், பாரிசிலும் உள்ள அதிகாரத்தில்
இருப்பவர்களுக்கு அமெரிக்க போர்க்கொள்கைகளை எதிர்க்கும் திறனை இழந்துவிட்டன என்பதை தெளிவாக
எடுத்துக்காட்டுகின்றது. ஒரே நேரத்தில் அவர்கள் புஷ் அரசாங்கத்தின் செயல்களை வியந்தும் மற்றும் புஷ்
அரசாங்கம் தன்னுடைய இலக்குகளை அப்பட்டமான வலிமையுடன் ஈவிரக்கமின்றி தொடர்வதால் மிரட்டப்பட்டும்
நிற்கின்றனர்.
பாக்தாத், பல்லுஜா, பஸ்ரா, இப்பொழுது பெய்ரூட், காசா என்று
மிருகத்தனமான முறையில் குண்டுவீச்சுப் பயங்கரங்கள் நடத்தியிருப்பது ---நாளை டமாஸ்கசும், தெஹ்ரானும்
பட்டியலில் சேர்க்கப்படலாம்--- என்பதே இத்தகைய கருத்திற்குக் காரணமாகும். ஐரோப்பா முழுவதும்
தன்னுடைய வலிமையை காட்டும் வகையில் சட்டவிரோதமான "பயங்கரவாதிகள்" எனப்பட்டோர் கடத்தப்பட்டது,
சித்திரவதை செய்வதற்கான சிறைகள் நிறுவப்பட்டது, எவ்வித சட்ட கட்டுப்பாட்டையும் இழிவுடன் நிராகரித்தது
போன்ற அனைத்தும் தங்கள் முத்திரையை பதித்துள்ளதுடன் மிகவும் பிற்போக்கான அரசியல் கூறுபாடுகளை
வலிமைப்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய அரசாங்கங்களை மிரட்டுவதற்கு அதிகம் ஒன்றும் தேவைப்படவில்லை.
இதைத்தவிர, 1957 வசந்த காலத்தில், ஐரோப்பிய ஒருங்கிணைப்பு வழிவகையை ஆரம்பித்த ரோமாபுரி
ஒப்பந்தம் (Treaty of Rome)
நடந்த அரை நூற்றாண்டு முடிவின் களிப்புக்கள் கொண்டாடப்படுவதற்கு முன்பு,
ஒரு பொது நாணயம் இருந்தாலும் ஐரோப்பிய ஒருமைப்பாடு நிறுத்தத்திற்கு வந்துள்ளது, மேலும் அது பெரும்
பின்னடைவைக்கூட பெறலாம் என்ற உணர்வு ஐரோப்பிய அரசியல் உயரடுக்கின் மத்தியில் பெருகியமுறையில்
ஏற்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய ஐரோப்பிய ஒன்றிணைப்பின் விரிவாக்கம் ஒரு தோல்வியடைந்துள்ளதுடன், தேசிய
தன்முனைப்புக்களும், முரண்பாடுகளும் ஐரோப்பா முழுவதும் வெடித்து வெளிப்பட்டுள்ளன.
ஐரோப்பா ரஷ்யாவுடன் கொண்டிருந்த உறவுகளும் மாறிவிட்டன. தன்னுடைய பங்கிற்கு
ஜேர்மனிய அரசாங்கம் மேற்கு, கிழக்கு இரண்டையும் இணைத்துச் செல்லும் சமச்சீர் உறவுகளை விரும்புகிறது.
மாஸ்கோவிடம் தன்னுடைய மிக அதிக மின்விசை தேவைக்கு நம்பியிருக்க வேண்டிய நிலையில் ஜேர்மனிக்கு இது
முக்கியமாகும். ஆனால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள அழுத்தங்கள் தீவிரமாகியுள்ளன; அதனால்
இப்படிப்பட்ட கடினமான கயிற்றில் நடக்கும் செயல்கள் இனி சாத்தியமில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்ய அரசாங்கம் பொரி்ஸ் யெல்ட்சின் கால அரசாங்கத்தில் இருந்து முற்றிலும்
வேறுபட்டது ஆகும். இவ்வாண்டு தொடக்கத்தில் உக்ரைனுக்கு எரிவாயுவை கிரெம்ளின் நிறுத்தியது பேர்லின் முழுவதும்
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மாஸ்கோவை கூடுதலாக நம்பியிருப்பதால் வரும் ஆபத்துக்கள் பற்றிய
எச்சரிக்கைகள் அதிகமாக ஒலித்தன; வாஷிங்டனுடன் தொடர்புகள் தீவிரமாயின.
ஐரோப்பிய அரசாங்கங்கள் வாஷிஙட்னில் உள்ள ஏகாதிபத்திய சக்திக்கு துணை
நிற்பதில் இன்னும் ஒரு கூடுதலான காரணியும் உள்ளது. ஐரோப்பாவில் பெருகிவரும் சமூக நெருக்கடியும்,
சமூகமோதல்களில் குறிப்பிடத்தக்க பெருக்கமும்தான் அவை. இன்னும் குறிப்பாக இது ஜேர்மனியில் உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே, ஜேர்மனியின் பெரும் கூட்டணி பிறவிக் கோளாறினால்
பாதிக்கப்பட்டுள்ளது. சமூக ஜனநாயக கட்சி(SPD),
பசுமைக் கட்சி(Green)
மற்றும் இடது கட்சி(Left Party)
என்று "இடதுகள்" என அழைக்கப்பட்டவை தேர்தலில் பழைமைவாத யூனியன் கட்சிகள் மற்றும் சுதந்திர சந்தைக்கு
வாதிட்ட FDP
ஐ விடக் கூடுதலான வாக்குகளை பெற்றது. ஆனால் சமூக ஜனநாயக கட்சி ஒரு பெரும் கூட்டணிக்குத் தயார் என்று
கூறிய வகையில்தான் மேர்க்கல் அதிபர் பதவியை பெற முடிந்தது.
புதிய ஜேர்மனிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், பிரான்சில் அரசாங்கம் வேலைப்பாதுகாப்புக்களை
அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதை எதிர்த்து, வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டன. மில்லியன் கணக்கான மக்களை
கொண்டிருந்த எதிர்ப்புக்களின் அழுத்தத்தை ஒட்டி, வில்ப்பன் அரசாங்கம் ஒரு தற்காலிக பின்வாங்குதலை மேற்கொள்ள
நேரிட்டது.
இந்தச் சூழ்நிலையில், மேர்க்கல் அரசாங்கம் இன்னும் எச்சரிக்கையுடன் தன்னுடைய
உள்நாட்டுக் கொள்கைகளை செயல்படுத்த தொடங்கியது; இதனால் அது பெருவணிகப் பிரிவுகளின் சீற்றத்தை தேடிக்
கொண்டது; அவை ஜேர்மனியின் பொதுநல அரசுக் கருத்துக்கள் அகற்றப்படும் வேகம் போதாது என்று கருதின.
பெரும்பாலான மக்கள் ஈராக்கிய போரை நிராகரித்தனர், மில்லியன் கணக்கில்
தெருக்களுக்கு வந்து அதற்கு எதிராக ஆர்ப்பரித்தனர் என்பதை ஆட்சி நன்கு அறிந்தபோதிலும் இப்பொழுது மத்திய
கிழக்கில் நடக்கும் போரில் போர் வெறியர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவு ஒரு
திருப்புமுனை ஆகும். வருங்காலத்தில், ஜேர்மன் அரசாங்கம் லெபனான், பாலஸ்தீனம் அல்லது ஈராக் மக்கள் பால்
கொண்டுள்ள இரக்கமற்ற தன்மையைத்தான் தனது சொந்த மக்களின் மீதும் காட்டத் தயாராக இருக்கும்.
இறுதி ஆய்வில், பாரிஸ் மற்றும் பேர்லினில் புதிய அரசியல் நோக்குநிலை என்பது
இந்த அரசாங்கங்களின் வர்க்கத் தன்மையில் இருந்துதான் எழுகிறது. "அமெரிக்க முதலாளித்துவத்தின்
கொள்ளைமுறை" என்று குறைகூறும் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய உயரடுக்கினரும் அதேபோன்ற
பொருளாதார, அரசியல் நலன்களைத்தான் தொடர்கின்றனர், மற்றும் உள்நாட்டிலும் வெளியிலும் வளர்ந்துவரும் பதட்டங்களின்
நிலைமைகளின் கீழ் அவை மிக வலிமையான ஏகாதிபத்திய சக்தியுடன் தங்களை அணிசேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.
இது பெரும் சக்திகளுக்கு இடையே வளர்ந்துவரும் பதட்டங்களை எந்தவழியிலும் தீர்க்கப்போவதில்லை,
மற்றும் அவற்றை தணிக்க சிறிதளவே செய்வன மாறாக, அது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான
வன்முறைத் தாக்குதலின் ஒரு புதிய கட்டத்தை மோசமான தாக்குதல்களில் ஒரு புதிய கட்டத்தை தொடக்கி
வைக்கும்.
See Also:
G8
அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன
Top of page |