WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Appeasement 2006: Europe capitulates to American-Israeli aggression
2006ம் ஆண்டு திருப்திப்படுத்துதல்: அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஐரோப்பா
நிபந்தனையற்ற சரண் அடைதல்
Statement of the Editorial Board
27 July 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இக்கட்டுரை பதிவிறக்கம் செய்து வியோகிப்பதற்கு
PDF வடிவிலும்
இருக்கிறது.
லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை அடுத்து எழுந்த நெருக்கடி பற்றி விவாதிக்க
புதனன்று ரோம் நகரில் நடந்த சர்வதேச மாநாடு, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடாமலேயே முடிவுற்றது.
பல செய்தி நிறுவனங்களின் தகவல்படி, ஏற்கனவே 500 குடிமக்களின் இறப்பிற்கும் நாட்டில் உள்கட்டுமானத்தின்
பெரும்பகுதி அழிவதற்கும் காரணமாக இருந்த இஸ்ரேலிய தாக்குதல் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும்
மொழி எதுவும் மாநாட்டு அறிக்கையில் இடம்பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நடைமுறையில் தன்னந்தனியாக உறுதியாக நின்றார்
இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூன் கூறுவதாவது: ஐரோப்பிய மற்றும் அரேபிய
அரசாங்கங்களும், ஐ.நா. தலைமைச் செயலாளர் கோபி அன்னன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்
கொள்கை தலைவர் ஜேவியர் சோலனா ஆகியோரும் உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்று கடுமையாக
வாதிட்டனர்; ஆனால் கொண்டலீசா ரைஸ் மிகுந்த உறுதிப்பாட்டை காட்டிய அளவில், அவர்கள் கருத்து எடுபடவில்லை.
போரை நிறுத்த அழைப்புவிடுமுன் 'நீடித்த சமாதானத்திற்கான' உடன்பாடு பூசலிடுவோரிடைய நிலவ வேண்டும்
என்ற தனது நிலைப்பாட்டில் அவர் ஆணித்தரமாக இருந்தார்.
லெபனிய பிரதம மந்திரி பெளவட் சினியோரா இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்;
மூத்த தூதர்கள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, கனடா, ரஷ்யா, துருக்கி, லெபனான்,
செளதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னன் ஆகியோர்
உடனடியாக அனைத்து விரோத நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று உணர்ச்சியோடும், பெரும்
ஆர்வத்துடனும் உரையாற்றினர்.
சினியோரா கேட்டார்: "மற்ற இடங்களில் இருக்கும் குடிமக்களுடைய உயிர்களைவிட
லெபனானில் மனித உயிரின் மதிப்பு குறைவா? நாங்கள் மதிப்புக் குறைந்த கடவுளின் குழந்தைகளா? லெபனிய
இரத்தத் துளி ஒன்றைவிட ஒரு இஸ்ரேலிய கண்ணீர்த்துளி கூடுதலான மதிப்பு வாய்ந்ததா?"
இஸ்ரேலினால் தன்னுடைய நாடு "சிதற அடிக்கப்பட்டு வருகிறது" என்று கூறிய அவர்
இஸ்ரேலுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக சபதம் எடுத்துக் கொண்டார்; இதன்
உட்குறிப்பு இஸ்ரேல் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளது என்றும் "இஸ்ரேல் எங்கள் மீது சுமத்தியுள்ள
காட்டுமிராண்டித்தனமான அழிவிற்காக" தான் போர் இழப்பீட்டுத் தொகை கேட்பதாகவும் கூறினார். ரோமானிய
வரலாற்றாளர் டாசிடஸ் கருத்து ஒன்றை மேற்கோளிட்டு தன் உரையை முடித்தார்; இஸ்ரேல் லெபனானுக்கு இன்று
என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அது விளக்குவதாகவும் கூறினார். "அவர்கள் பெரும் அழிவை தோற்றுவித்து,
அதைச் சமாதானம் என்று கூறுகின்றனர்"
செய்தி ஊடக தகவல்படி, சினியோராவின் கருத்துக்களுக்கு அரங்கில் உணரத்தக்க
வகையில் உணர்ச்சிப் பெருக்கு இருந்ததாக ராஜிய வல்லநர்கள் தெரிவித்தனர். ஆனால் ரைஸுக்கு எவ்வித
பாதிப்பும் இல்லை. கூட்டம் முடிந்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், "மிகவும் உணர்ச்சிகரமான
உரையை" பற்றி போகிறபோக்கில் அவர் குறிப்பிட்டாலும், லெபனிய நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள்
ஆகியவற்றை இஸ்ரேல் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்பதற்கு எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியதுடன், தெற்கு
லெபனானில் எந்த சர்வதேச படையின் நோக்கமும் ஹெஸ்பொல்லாவை ஆயுதங்களை களையச் செய்வதாக
இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் சட்டமற்ற தன்மை மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் இயலாத்தன்மை
இரண்டையும் ரோம் மாநாடு நிரூபித்தது. கூட்ட அரங்கில் இருந்து ஒவ்வொருவருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் லெபனானில்
என்ன செய்ய உள்ளன என்பது நன்கு தெரியும். முதல் நாள்தான், இஸ்ரேல் நீண்டகாலமாக உள்ள, நன்கு அறியப்பட்ட,
எல்லையில் இருந்த ஐ.நா. கூடம் ஒன்றின்மீது தொலைதூர ஏவுகணை ஒன்றைக் கொண்டு துல்லியமாக தகர்த்து
நான்கு ஐ.நா. கண்காணிப்பாளர்களை கொன்றிருந்தது.
இம்மாநாட்டில் ரைஸின் பங்கு இஸ்ரேல் இப்போரை நடத்துகிறது, ஆனால்
அமெரிக்காதான் திரைக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் இயக்கும் சக்தி என்பதை தெள்ளத் தெளிவாக்கியது.
ஆயினும்கூட பங்கு பெற்றவர்களில் ஒருவர் கூட ரைஸை எதிர்த்து நிற்பதற்கு கொள்கை
அடிப்படையையோ துணிவையோ கொண்டிருக்கவில்லை. போர்நிறுத்தம் பற்றி ஏன் தீர்மானம் இல்லை? அமெரிக்கா
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும், அமெரிக்க வாக்கு ஒன்றுதான் முக்கியம் என்ற கருத்து நிலவியதாலும் அப்படிப்பட்ட
முடிவு.
முழு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் மற்றும் ஐ.நா.வும் கூட, மீண்டும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தம்முடைய இயலாமையை நிரூபணம் செய்தன. வணிகம், அதாவது
பணத்தைப் பற்றிய பேரம் என்றால் ஐரோப்பா அமெரிக்காவை மீறுவதற்குத் தயாராக உள்ளது; ஆனால்
மகத்தான மற்றும் வரலாற்றுக் குற்றங்களை எதிர்கொள்ளும்போது ஐரோப்பா முற்றிலும் கோழைத்தன
நிலைப்பாட்டைத்தான் காட்டுகிறது. உண்மையில் இக்குற்றங்களுக்கு அதுவும் உடந்தையாகும்.
இது உத்தியோகபூர்வ அரசியல் நிறமாலையின் அனைத்து பக்கங்கள் மற்றும்
சாயல்கள், அதாவது "இடது" என அழைக்கப்படும் அரசாங்கங்கள், கட்சிகள் ஆகியவற்றிற்கும் அவற்றின் வலது
எதிரணி அமைப்புக்கள் விஷயத்திலும் உண்மை ஆகும். எனவேதான் தன்னுடைய கூட்டணியில் இத்தாலிய கம்யூனிஸ்ட்
கட்சியில் இருந்து சிதைந்த Communist
Refoundation மற்றும் இடது ஜனநாயகக் கட்சி என்ற
இரண்டையும் கொண்டுள்ள ரோமனோ பிரோடியின் மத்திய - இடது இத்தாலிய அரசாங்கம், இக்கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்ய ஒத்துக் கொண்டது. இக்கூட்டமே வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்க-இஸ்ரேலிய
போர் கொள்கைக்கு அங்கீகார முத்திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மூத்த கம்யூனிஸ்ட் கட்சி
தலைவரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான மாசிமோ டி அலேமா, அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சரிடம் குறிப்பிடத் தக்கவகையில் பெரும் பணிவை காட்டினார்.
தன்னுடைய ஐ.நா. கண்காணிப்பாளர்களை வேண்டுமென்ற இலக்கு வைத்ததாக
முதல்நாள்தான் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியிருந்த கோபி அன்னன், ரைஸுக்கு அருகில் அமர்ந்து கொண்டு
இஸ்ரேலின் பெயரளவு, சற்றும் ஏற்கத்தகாத மன்னிப்பை ஏற்ற காட்சியும் அரங்கேறியது.
அமெரிக்க ஆதரவுடன் லெபனான் மீது நடத்தப்படும் மிருகத்தனமான போர், மற்ற
பெரும் சக்திகள் அதை எதிர்ப்பதற்கு தங்கள் விருப்பமின்மை அல்லது இயலாமையையை காட்டியுள்ளதுடன், இரண்டாம்
உலகப் போருக்கு பின்னர் சர்வதேச சட்டத்தின் வடிவமைப்பில் இது முறிவு என்ற ஒரு மைல் கல்லைக் குறிக்கிறது.
தடையற்ற ஏகாதிபத்திய சட்ட ஒழுங்கற்ற தன்மை மற்றும் வன்முறையை பண்பிட்டுக்காட்டும் 1930கள் எப்படி,
இறுதியில் 20ம் நூற்றாண்டின் இரண்டாம் உலகப் போரில் உச்சக் கட்டத்தை அடைந்ததோ, அதேபோன்ற
தரச்சரிவைத்தான் மீண்டும் உலகம் இப்பொழுது காண்கிறது.
ரோம் மாநாட்டில் சினியோரா பயனற்ற முறையில் முறையிட்டது கிட்டத்தட்ட 70
ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்று நடந்த நிகழ்ச்சியைத்தான் நினைவுறுத்தியது: ஜூன் 1936ல் எத்தியோப்பியாவின்
பேரரசர் ஹெயில் செலாசி அனைத்து நாடுகளின் கழகத்தில் (League
of Nations) நடத்திய உரைதான் அது. தன்னுடைய நாட்டை
பாசிச இத்தாலி தாக்கி குருதிப் படையெடுப்பு நடத்திக் கொண்டிருப்பதற்கு உலக அமைப்பு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்று முறையிட்டார்; ஆனால் அனைத்து நாடுகளின் கழகம் ஏதும் செய்யவில்லை.
அக்காலக்கட்டத்தில் ஆசியாவில் ஜப்பானும், ஐரோப்பாவில் ஜேர்மனியும் தத்தம் பிராந்திய
ஆதிக்கத்திற்காக கொண்டிருந்த உந்துதல் உலகப் பேரழிவிற்கு முனைப்பு கொடுத்திருந்தது; இன்று முதன்மை ஆக்கிரமிப்பாளர்
என்ற பங்கு அமெரிக்காவினால் கொள்ளப்பட்டுள்ளது; தன்னுடைய மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நிறுவ வேண்டும்
என்ற முயற்சியில் இது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவை மறு ஒழுங்கமைக்கப்பட
வேண்டும் என்பது வாஷிங்டனுக்கு இந்த உலக மேலாதிக்கத்திற்கான நாடலின் முக்கிய கூறுபாடாக உள்ளது. இஸ்ரேல்
தன் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கு முயல்வதை அமெரிக்க ஆளும் உயரடுக்கினர் தம் பெருமிதமான, ஆனால் மனச்சிதைவுற்ற
இலக்கு அடையப்படுவதற்கு பெரிதும் பயன்படுத்தப்படலாம் என்று கருதுகின்றனர்.
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து பல தசாப்தங்களிலும், பிரதான வல்லரசுகள்
1930களில் எழுந்த ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தது -நாஜிக்கள் சர்வதேச
சட்டத்தை இழிவான வகையில் வன்முறை கொண்டு தாக்கியதை அவை எதிர்கொள்ள மறுத்தது போன்றவை- "திருப்திப்படுத்தும்
முயற்சி" என்று கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அதே வேகத்துடன் அதே வடிவமைப்புத்தான் அமெரிக்காவை
ஐரோப்பா திருப்திப்படுத்துதல் என்ற வகையில் மீண்டும் வெளிவந்துள்ளது.
ரோம் மாநாட்டின் விளைவு, ஹெஸ்பொல்லாவை இராணுவமுறையில் தகர்ப்பதின்
அடிப்படையில் லெபனான் நெருக்கடியை அமெரிக்கா தீர்க்க முற்படுகிறது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது. லெபனானில் அந்நாட்டில் நிலவும் அமெரிக்க ஆதிக்கத்திற்கான மக்கள் எதிர்ப்பு அனைத்தையும்
தகர்க்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நீண்ட காலமாக தயாரிக்கப்பட்ட
திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. மேலும் லெபனானை இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உட்பட்ட நாடாக அதன் மூலம்
மாற்றிவிடலாம் என்ற கருத்தும் உள்ளது.
ஹெஸ்பொல்லாவை நசுக்குவது என்பது, சிரியா, ஈரானையும் இணைத்து நசுக்க
வேண்டியதாகிறது என்று வாஷிங்டனால் கருதப்படுவது, முறையே, இந்த இரு ஆட்சிகளையும் அகற்ற வேண்டும் என்ற
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்கிற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது; ஏனெனில் அவை எண்ணெய் வளம்
கொழிக்கும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு தடைகளாகக் கருதப்படுவதால்
ஆகும்.
ஹெஸ்பொல்லா ஜூலை 12 அன்று எல்லையில் தாக்குதல் நடத்தி இரு இஸ்ரேலிய
சிப்பாய்களை கைப்பற்றிச் சென்றது இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு ஒரு போலிக்
காரணமாயிற்று.
இந்த உண்மைகள் முறையாகவும் வேண்டுமேன்றேயும் செய்தி ஊடக மின்னல் தாக்குதல்
பிரச்சாரத்தால் மறைக்கப்பட்டுள்ளன; அவை உண்மையை தலைகீழாக மாற்றும் நோக்கத்தை கொண்டு,
ஆக்கிரமிப்பாளர்களை பாதிக்கப்பட்டவர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களை போர்வெறியர்கள் என்றும்
காட்டுகின்றன. வார்த்தைகள் அவற்றின் உண்மையான பொருளிலிருந்து எடுக்கப்பட்டு, தகவல் அளிப்பதற்கு பதிலாக,
குழப்பம் விளைவிக்கவும் மறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்விதத்தில், வாஷிங்டன் மற்றும் ஜெருசலத்தின் போர் நோக்கங்களுக்கு
உடன்படுமாறு ஹெஸ்போல்லாவையும் லெபனானையும் கோரி இறுதி எச்சரிக்கைகள் விடுக்கும் அமெரிக்க
அரசாங்கத்தின் கொள்கைக்கு "தூதரக நெறி" என்று பெயரிடப்படுகிறது. அவை அதை ஏற்காவிட்டால் பேரழிவிற்கு
உட்படுத்தப்படும் என்ற அச்சுறுத்தலும் வந்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு ரைசின் பயணம்
போரை இன்னும் நீட்டிக்க வேண்டும், இஸ்ரேலுக்கு இன்னும் கால அவகாசம் கொடுத்து லெபனிய எதிர்ப்பை
தீர்த்துக் கட்ட வேண்டும், அதேபோல் பாலஸ்தீனியர்கள் காசாப்பகுதியில் எதிர்ப்புக் காட்டுவதையும் அகற்ற
வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருப்பதுடன், இது "சமாதானப்" பணி என்றும் கூறப்படுகிறது.
"பயங்கரவாதம்" என்று எங்கும் பரவி நிற்கும் சொற்றொடர் அமெரிக்க,
இஸ்ரேலிய ஆதிக்கத்தை எதிர்க்கும் அனைவருக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. லெபனிய மக்களை தன்னுடைய
இராணுவ தாக்குதலால் அச்சுறுத்திக் கொண்டிருப்பதை தவிர இஸ்ரேல் வேறு எதைச் செய்து கொண்டிருக்கிறது?
"பயங்கரவாதம்" என்ற சொல் இப்பொழுது அரசியல் கவிழ்ப்புக்கு அல்லது
இராணுவத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கருதும் எந்த இலக்கிற்கும் எதிராக
கூறப்படுகிறது. இந்த முத்திரை குத்தப்பட்டவுடன், அந்த நாடு அல்லது குழுவின் வரலாறு, கொள்கைகள், சமூக
அமைப்பு பற்றிய விவாதங்கள் அனைத்தும் நெறியற்றவை என்றும் முத்திரையிடப்பட்டு விடுகின்றன. இலக்கு
வைக்கப்பட்ட அந்த நாடு அல்லது அமைப்பு "நல்ல நாடுகள், அமைப்புக்களுள்" ஒன்றாக இருந்து நீண்டகாலம்
ஆகாதிருந்தும் கூட, அதன்மீது அமெரிக்க அரசாங்கம் அதன் சமீபத்திய "பயங்கரவாத அச்சுறுத்தல்" என்ற
அரக்கத்தன முத்திரையை இடுவதற்கு முதுகெலும்பற்ற, வளைந்து கொடுக்கும் செய்தி ஊடகத்தை எப்பொழுதும்
நம்பலாம்.
ஓசாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவின் கடுமையான அரசியல் விரோதியாக
ஹெஸ்போல்லா உள்ளது என்ற உண்மை கூட மறைக்கப்பட்டுள்ள விதம், தற்போதைய பிரச்சினையில் இந்த
அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் பிரச்சார முயற்சியின் அபத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இவை அனைத்துமே அமெரிக்க மக்கள் சட்ட நெறியற்ற குருதித்தன்மை ததும்பிய
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை உணராமல் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது; அக்கொள்கைதான்
அமெரிக்காவில் முழு அமைப்புமுறையினாலும், குடியரசுக் கட்சியை போலவே ஜனநாயகக் கட்சியாலும்
ஆதரிக்கப்படுகிறது. அமெரிக்க, இஸ்ரேலிய வன்முறை, அவர்களுடைய ஆக்கிரமிப்பின் திமிர்த்தனம் ஆகியவற்றின் முழு
அளவையும் புரிந்து கொள்ளுவது மக்களின் பரந்த பிரிவினருக்கு கடினமாகும்.
பல தசாப்தங்களாக அமெரிக்கா, சர்வதேச சட்டத்தின் காப்பாளர் என்று
தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில், அது பொதுவாக பிராந்திய
பூசல்களில் போர்நிறுத்தங்களுக்குத்தான் ஆதரவைக் கொடுக்கும்; அதுதான் அரசியல் உடன்பாடுகளை
பேச்சுவார்த்தைகள் மூலம் பெறுவதற்கு முன்னிபந்தனை என்று அது கருதியது.
அக்காலக்கட்டம் இப்பொழுது முற்றுப்பெற்று விட்டது. அமெரிக்கா முக்கிய பங்கை
கொண்டிருக்கும் ஏகாதிபத்திய விழைவுகளின் தடையற்ற முனைப்புத்தான் பெருகிய வகையில் ஆதிக்கத்தை
கொண்டிருக்கிறது. இதுதான் புஷ் நிர்வாகத்தின் முன்னரே தாக்கித்தனதாக்கும் போர்க் கொள்கையின் முக்கியத்துவம்
ஆகும். லெபனானில் தற்பொழுது நிகழும் படுகொலைகள் நிரூபிப்பதைப்போல், அமெரிக்க ஆளும் உயரடுக்கினருக்கு
போர் என்பது வெளியுறவுக் கொள்கையின் நெறியான கருவி என்று மட்டும் இல்லாமல், அதன் நலன்களை
உறுதிப்படுத்தும் விரும்பத்தக்க வழிவகையாகவும் போய்விட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களுடைய தற்போதைய தாக்குதலில் எதிர்கொள்ளும்
பிரச்சினை லெபனானில் எதிர்ப்பின் ஆழத்தைப் பற்றி அவை குறைமதிப்பீடு செய்திருந்ததுதான். அமெரிக்காவிடமிருந்து
பெரும் ஆயுதக் குவிப்பை பெற்றிருந்த இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் தரைப்படை நடவடிக்கைகளில்
கணிசமான இறப்புக்களை கண்டது; அங்கு ஹெஸ்பொல்லாவிடம் இருந்து உறுதியான, கட்டுப்பாடு நிறைந்த எதிரித்
தன்மையை இது எதிர்கொண்டுள்ளது; மேலும் ஹெஸ்பொால்லா வெகுஜன ஆதரவையும் பெற்றுள்ளது.
ஒரு குறுகிய குருதி சிந்தும் போர் என்ற அமெரிக்க இஸ்ரேலிய திட்டங்கள் காற்றில்
கரைந்துவிட்டன. ஆனால் அமெரிக்காவின் உந்துதலில் இஸ்ரேல் இன்னும் மகத்தான முறையில் லெபனானில் வன்முறையை
தீவிரப்படுத்தும் செயலில் இறங்கும் என்பது உறுதி. இதைத்தான் ஐ.நா.காண்காணிப்பு கூடத்தை இஸ்ரேல்
வேண்டுமென்றே குண்டுவீச்சிற்கு உட்படுத்தியது அடையாளம் காட்டுகிறது.
அமெரிக்காவோ இஸ்ரேலோ இராணுவ புதைசேற்றை தாங்கிக்கொள்ள முடியாது
என்பது இஸ்ரேலிய வெல்ல இயலாத்தன்மை என்ற கட்டுக்கதையை தகர்க்கிறது. அத்தகைய போக்கு ஈராக்,
ஆப்கானிஸ்தான், மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசிய பகுதி முழுவதிலும் மக்கள் எதிர்ப்பிற்கு ஊக்கத்தை
அளிக்கும்; அதையொட்டி இஸ்ரேலின் வட்டார மேலாதிக்கம் ஐயத்திற்கு உட்படும் என்று மட்டுமில்லாமல்
ஜோர்டான், செளதி அரேபிய, எகிப்து ஆகியவற்றில் உள்ள அரேபிய முதலாளித்துவ ஆட்சிகள் நிலைப்பதும்
ஆபத்திற்கு உட்பட்டுவிடும்; இவை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டின் நட்பு நாடுகளாகும்.
இஸ்ரேலுக்குள்ளேயும் கூட இது குறைந்த வெடிப்புத்தன்மை நிறைந்த விளைவை
கொண்டிருக்காது. அரேபியர்கள் ஒரேசமயத்தில் எங்கும் தோன்றுவர் என்று கூறப்படுவதுடன் அடிமைப்படுத்தும்
அச்சுறுத்தலை கொண்டுள்ளனர் என்று உழைக்கும் மக்கட்திரளை இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கு கூறி வந்துள்ள முயற்சியானது,
இப்பொழுது இஸ்ரேலிய இராணுவம் ஒன்றுதான் அவர்களுடைய பாதுகாப்பிற்கு உறுதி என்று சித்தரிக்கப்படுவதால்
புகழ்ந்தேற்றப்படுகிறது. அந்த தோற்றத்தில் ஏதேனும் விரிசல் ஏற்படுமாயின், உலகிலேயே மிகவும் பொருளாதார
ரீதியாக துருவமுனைப்பட்டுள்ள சமூகங்களில் ஒன்றின் மேற்புறத்திற்கு சற்று கீழே கொதித்துக் கொண்டிருக்கும் சமூக
நெருக்கடிகளுக்கு ஒரு வடிகால் ஏற்பட்டுவிடும்.
இஸ்ரேலுக்குள்ளேயே தற்போதைய போருக்கு எதிர்ப்புக்கள் பெருகும் அடையாளங்கள்
ஏற்கனவே காணப்படுவதோடு, இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் சிவிலிய இறப்புக்களின் கூடுதலான எண்ணிக்கையில்
மட்டுமில்லாமல் இஸ்ரேலிய தொழிலாளர்கள், இளைஞர்கள் பெரிய அளவில் நடக்கும் பேரழிவு, பெருங்குழப்பம்
மற்றும் இறப்பு ஆகியவை தங்கள் பெயரால் லெபனிய மக்கள்மீது நடத்தப்படுகிறது என்பதை உணரும்போது, இன்னும்
கூடுலாகும்.
ஏதேனும் ஒரிரு ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு முறையிடும் வகையிலோ, எந்த
நாட்டின் பூர்ஷ்வாவுடன் இணைவதாலோ போரின் பேரழிவு தவிர்க்கப்பட முடியாது என்பதுதான் 1930 களின்
மாபெரும் துன்பியலான படிப்பினை ஆகும்; இராணுவ வாதத்திற்கும் அதை ஊட்டி வளர்க்கும் முதலாளித்துவ அமைப்பு
முறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் புரட்சிகரமான வகையில் திரட்டப்படுவதின் மூலம்தான் அது தவிர்க்கப்பட
முடியும்.
மற்றொரு பூகோள பேரழிவை தடுக்கக்கூடிய ஒரேயொரு சக்தி சர்வதேச
தொழிலாள வர்க்கமே. இன்று மீண்டும் இந்தப் படிப்பினைதான் முன்னிற்க வேண்டும்; இதுதான் தொழிலாள வர்க்கத்திற்காக
ஒரு புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதற்கு அடித்தளமாக அமையும்.
See Also:
ரைசின் மத்திய கிழக்குப் பயணம் :
போரை துரிதப்படுத்துவதில் "இராஜதந்திரம்"
லெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான
ஆதரவு
லெபனானில் போரும்
நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு
லெபனானுக்கு எதிரான
அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்
G8
அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன
இஸ்ரேல்
தாக்குதலுக்கு உடந்தையாக உள்ள அரேபிய தலைவர்களை எதிர்ப்புக்கள் கண்டனத்திற்கு உட்படுத்துகின்றன
Top of page |