:
இலங்கை
Another bogus peace move by Sri Lanka's
president
இலங்கை ஜனாதிபதியின் இன்னுமொரு போலி சமாதான நடவடிக்கை
By Wije Dias
22 July 2006
Back to screen
version
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஒரு பிரதான உரை, இலங்கை அரசாங்கத்திற்கு
நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்ட உண்மையான பிரேரணைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கம்
இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியல் யாப்பு மீளமைப்பு பொதி ஒன்றை வரைவதில் அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு உதவுவதற்காக
தாம் நியமித்த 15 "அனுபவசாலிகளின்" ஆலோசனைக் குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றிய இராஜபக்ஷ,
எந்தவொரு உறுதியான பிரேரணையையும் அல்லது இந்த ஆய்வை முடிப்பதற்கு ஒரு கால எல்லையையும் பற்றி சமிக்ஞை செய்வதைக்
கூட தவிர்த்துக் கொண்டார்.
15 உறுப்பினர்களைக் கொண்ட சபையின் உள்ளமைப்பு முழு நடவடிக்கையினதும் போலியான
பண்பை கோடிட்டுக் காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக செயலாற்றும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கு தேர்தல்
தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சி, அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, இராஜபக்ஷவால் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட 12 "அனுபவசாலிகளின்
ஆலோசனைக் குழு ஒரே ஒரு தமிழரையே உள்ளடக்கியிருந்த அதே வேளை, சிங்களப் பேரினவாதத்திற்குப் பேர்போன
ஒரு சட்டத்தரணியான எச்.எல்.டி. சில்வா இதற்குத் தலைமை வகிக்கின்றார். இவர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு
எதிராகவும், புலிகளுடன் எந்தவொரு அதிகாரப் பரவாலாக்கல் பற்றியும் பேசக்கூடாது என வாதிட்டவராவார். கடைசி
நிமிடத்தில் குழுவின் படு மோசமான சமமின்மையை மூடி மறைப்பதற்காக மேலும் மூன்று தமிழர்கள் சேர்க்கப்பட்டனர்.
2002ல் ஆட்சியில் இருக்கும் போது புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை
கைச்சாத்திட்ட தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), தமது பாராளுமன்ற
உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் இழுப்பதற்காக இராஜபக்ஷவால் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் உட்பட
இலாபகரமான வருமானங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்தக்
கூட்டத்தை பகிஷ்கரித்தது.
சுமார் முக்கால் மணிநேரம் தொடர்ந்த அவரது உரையில் "தமிழ்" என்ற சொல்லை ஒரு
முறை கூட அவர் உச்சரிக்கவில்லை என்பது ஆச்சரியமானதாக இருக்கலாம். புலிகள் தமிழ் தலைவர்களைக் கொல்வதாக
அவர் குற்றஞ்சாட்டியபோது மட்டுமே அந்த சொல் வெளிவந்தது.
அவரது உரை முழுவதிலும், தமிழ் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் எந்தவொரு ஜனநாயக
சலுகையையும் கடுமையாக எதிர்க்கும் சிங்களத் தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல
உறுமய உடனான தமது பாராளுமன்ற கூட்டணியை மூடி மறைப்பதற்காக "தேசியப் பிரச்சினை" மற்றும் "அனைவரும் எமது
மக்கள்" என்ற சொற்பதங்களை பயன்படுத்தினார். இந்த இரு கட்சிகளும் இராஜபக்ஷ அரசாங்கத்தை, கடந்த எட்டு
மாதகாலம் அவரது ஆட்சி பூராவும் உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கும் திசையை நோக்கி தள்ளிச் செல்வதில் ஒரு
சுழற்சிமுறை பாத்திரத்தை இட்டுநிரப்பியுள்ளன.
தனது கூட்டணிப் பங்காளிகளின் வழியை எதிரொலித்த இராஜபக்ஷ, உள்நாட்டு
யுத்தத்திற்கான குற்றத்தை புலிகள் மீது சுமத்தினார். "புலிகளால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட இரு தசாப்த
காலத்திற்கும் மேலான யுத்தத்தில் துன்பம் அனுபவித்தவர்களுக்கு, அவர்களது வாழ்க்கை குறிக்கோள்களை நோக்கி
முன்னேறுவதற்கான இயலுமையை வழங்கக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளில் பங்குபற்றக்கூடிய ஒரு பாதுகாப்பான,
ஸ்திரமான மற்றும் அர்த்தமுள்ள சூழலை நாம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வறியவர்களுக்கு உருவாக்க வேண்டும்" என
அவர் பிரகடனம் செய்தார்.
மனித உரிமைகளைக் காப்பதில் வீரர் எனத் தன்னைக் காட்டிக்கொள்ளவும் இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அவர், "பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் மனித உரிமைகளின் தரம்
சீரழிக்கப்படுவதை எம்மால் புறக்கணிக்க முடியாது." "புலிகளுக்கு முரண்பாடான நோக்கைக் கொண்டிருந்த ஒரே
குற்றத்திற்காக தமிழ் அரசியல் மற்றும் ஏனைய தலைவர்களும் முறைகேடான முறையில் கொல்லப்படுவதில் இருந்து
எழுந்துள்ள இத்தகைய பிரச்சினைகள் (மனித உரிமைகள்) பற்றிய எமது வலியுறுத்தல்களுக்கு நியாயப்பூர்வமான காரணம்
உள்ளது," என அவர் கூறினார்.
1970ல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் மற்றும்
கடந்த அரசாங்கத்தில் பிரதமராகவும் சேவை செய்துள்ள இராஜபக்ஷ, "ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எமது
தேசியப் பிரச்சினை தீர்ப்பதற்கான ஆரம்பிப்புகளை எடுத்துள்ளன. இவற்றில் போதுமான வெற்றிகள் இல்லாவிட்டாலும்
நாம் தீர்த்துக்கொள்ள வேண்டிய பலவீனங்களை சுட்டிக்காட்டுகின்றன.... எமது அனைத்து மக்களின் சார்பாகவும்,
இந்தப் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், என்னால் முடிந்தளவு முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும்
சமாதானத்திற்காக முயற்சிப்பது எனது கடப்பாடும் கடமையுமாகும் என நான் கருதுகிறேன்," எனக் குறிப்பிடுகின்றார்.
இந்த வாக்குறுதிகளின் போலித்தன்மையானது இராஜபக்ஷ வடக்கு கிழக்கில் அபிவிருத்தி
வேலைகளுக்காக வெறும் 1.25 பில்லியன் ரூபாய்களை மட்டும் ஒதுக்க விரும்பியிருப்பதில் இருந்து கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ளது. இது 2003ல் நடந்த டோக்கியோ மாநாட்டில் சமாதானத்திற்கான பங்கீடாக நிதி வழங்கும்
நாடுகளால் வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிதித் தொகையில் கால் பங்கேயாகும். யுத்தத்தால் சீரழிந்த வடக்கு
மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் முகங்கொடுத்த அழிவுகள், 2004ல் கிழக்குக் கடற்கரையை மிக மோசமாகத் தாக்கிய
சுனாமியினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளால் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள நிலையில், இராஜபக்ஷ ஒதுக்கியுள்ள நிதியானது
அந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களை அவமானப்படுத்துவதைத் தவிர வேறொன்றும் அல்ல.
எவ்வாறெனினும், உடன்பாடு ஒன்று அடையப்பட்டால் அதில் இலகுவாகக் கிடைக்கும் இலாபம்
கறக்கும் வாய்ப்புகளைப் பற்றி பேசுவதில் ஜனாதிபதி அக்கறைகொண்டிருந்தார். "துரிதமான அபிவிருத்தியானது, மீள்
கட்டுமான முயற்சிகளுக்கான குறிப்பிடப்பட்ட சர்வதேச சமூகத்தின் விருப்பத்தையும் மற்றும் இந்தப் பிரதேசத்தில் (வடக்கு
கிழக்கில்) முதலீடு செய்வதற்கான உள்ளூர் தொழிலதிபர்களின் விருப்பத்தையும் குறுகிய காலத்திற்குள் முழுவதுமாக
அடைவதை சாத்தியமாக்கும்," என அவர் தெரிவித்தார்.
பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் இலங்கை பெரும் வர்த்தகர்களின் பிரிவினர், அதே
போல் சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் சில பெரும் வல்லரசுகளின் பக்கம் தங்கியிருக்கும் எதிர்பார்ப்பில்,
"இந்த முன்னெடுப்புகளில் புலிகளையும் ஈடுபடுமாறு" அவர்களுக்கு அழைப்பு விடுப்பதையும் தனது உரையில் இராஜபக்ஷ
சேர்த்துக்கொண்டார். ஆனால் இந்த மட்டுப்படுத்தப்பட்ட நகர்வும் கூட உடனடியாக அவரது பாராளுமன்ற பங்காளியான
ஜே.வி.பி. யின் எதிர்ப்புப் பிரதிபலிப்பை வெளிப்படுத்தியது.
ஜே.வி.பி. யின் முன்னணி அமைப்பான தேசப்பற்று தேசிய இயக்கம் (தே.ப.தே.இ.)
நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், ஜே.வி.பி. யின் பிரச்சார செயலாளரான விமல் வீரவன்ச தெரிவித்ததாவது:
"மோசடியான சமாதானப் பேச்சுக்களை நடத்தி நேரத்தை வீணடிப்பதானது மரண வீட்டில் சீட்டு விளையாடுவது
போன்றதும் அர்த்தமற்றதுமாகும். மக்களை அணிதிரட்டி, முடிவுவரையான போராட்டத்தில் பயங்கரவாதத்தை
தோற்கடிப்பதைத் தவிர வேறு மாற்றீடு கிடையாது.''
தே.ப.தே.இ. தலைவர் குனதாச அமரசேகர மாநாடில் உரையாற்றிய போது,
நாட்டில் நிலவுவது இனப் பிரச்சினையோ அல்லது யுத்தமோ அல்ல மாறாக பயங்கரவாதம் மட்டுமேயாகும் எனத்
தெரிவித்ததோடு, "பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக நாடு பூராவும் ஒரு யுத்த மனநிலையை உருவாக்க
வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயினும் இராஜபக்ஷவின் ஆரம்பிப்புகளை சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்களும்
வரவேற்றுள்ளன. அசோசியேடட் பிரஸ் பதிவுசெய்துள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: "நவம்பர் தேர்தலில்
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 23 வருடகால தமிழ் ஊடுருவலை கையாள்வதற்காக இராஜபக்ஷவால்
மேற்கொள்ளப்பட்டுள்ள திடமான முதலாவது உறுதியான நடவடிக்கை இதுவாகும்."
கொழும்பு அரசாங்கத்திற்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகை ஜூலை
12 வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில், "பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்பதற்கான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின்
முயற்சிகளில், இந்த நாட்டில் சமாதானத்தை விரும்பும் பிரிவினர் தயாராகவும் உண்மையாகவும் அவரைச் சூழ உள்ளனர்.
பிரதியுபகாரமாக எதையும் எதிர்பார்க்காமல் இலங்கையின் செல்வச் செழிப்பையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்த்து ஜனாதிபதியின்
சமாதானத்தை உருவாக்கும் முயசிகளில் பொதுமக்கள் அவரைச் சூழ ஒன்று கூடினால், தீவிரவாத கருத்துக்கள் மற்றும் சமாதானத்திற்கான
தடைகளும் வெற்றிகரமாக தீர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை," என பிரகடனம் செய்துள்ளது.
ஐ.தே.க இந்தப் பிரச்சாரத்தின் அழுத்தத்தை உணர்ந்து தனது எதிர்ப்பைக் கைவிட்டு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணைய தீர்மானித்தை அடுத்து, ஜூலை 13 டெயிலி மிரர் பத்திரிகை குறிப்பிட்டதாவது:
"விவேகமுள்ள ஆலோசனைகள் இறுதியாக மேலோங்கியுள்ளதோடு எதிர்காலத்தில் நடக்கவுள்ள அனைத்துக் கட்சி
மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஐ.தே.க தீர்மானித்தமையானது உற்சாகமூட்டுவதாக உள்ளது."
அரசியலமைப்பு பொதியை வரைவதற்கும் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை
முன்னெடுக்கவும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் அடுத்த கட்ட யுத்தத்திற்கான மூடிமறைப்பே என்ற
உண்மையின் மூலம் உருவாகியுள்ள ஐயுறவுவாதத்தின் முன்னால், இந்தப் புதிய பயிற்சியை விற்றுக்கொள்ள அரசாங்கமும்
ஊடகங்களும் கடுமையாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் ஒரு முறை ஒட்டுமொத்த யுத்தத்திற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அரசாங்கம் இராணுவத்தை பெருப்பிக்க ஆள்சேர்ப்பு நடவடிக்கையை உக்கிரப்படுத்தியுள்ளதுடன் ஆயுதப் படைகளுக்கு மிகவும்
தரம்வாய்ந்த புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டுள்ளது. "ஜனாதிபதி ஆலோசனை குழுவுக்கும் மற்றும்
அனைத்துக் கட்சி மாநாட்டிற்கும் எந்தவொரு வற்புறுத்தலையும் கொடுக்க விரும்பாததால்" அரசியலமைப்பு
சீர்திருத்தத்தை வரைய ஒரு கால வரையறையை விதிக்க அவர் விரும்பவில்லை என அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை
பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அதே சமயம், டெயிலி மிரர் பத்திரிகையானது "ஆலோசனைக் குழுவில்"
சிங்களப் பேரினவாதிகளின் மேலாதிக்கத்தை விவேகமுள்ளதாக்கும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மையில் வெளியான
ஆசிரியர் தலையங்கத்தின்படி: "இந்த அனுபவசாலிகளின் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தேசியப் பிரச்சினை
பற்றிய நோக்கில் வேறுபாடுகளைக் கொண்டவர்களாக இருந்த போதிலும், அவர்கள் தற்போதைய நிலையின்
முக்கியத்துவம் பற்றி மிகவும் விழிப்புடன் உள்ள பொறுப்புவாய்ந்த பிரஜைகளாக இந்தப் பிரச்சினையில் ஒரு உடன்பாட்டை
எட்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும்."
உண்மையில், இந்த "ஆலோசனைக் குழுவை" சிருஷ்டித்தமையானது இந்த முழு
செயற்பாடுகளினதும் மோசடியான பண்பையும் மற்றும் மோதலுக்கான அடிப்படை காரணமாக உள்ள சிங்களப்
பேரினவாதம் இலங்கை அரசியல் ஸ்தாபனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதையும் அம்பலப்படுத்துகின்றது.
|