World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Rice's Middle East tour: "Diplomacy" in furtherance of war

ரைசின் மத்திய கிழக்குப் பயணம்: போரை துரிதப்படுத்துவதில் "இராஜதந்திரம்"

By Chris Marsden
24 July 2006

Back to screen version

லெபனானிலும், காசாவிலும் ஏற்பட்டுள்ள பூசல் பற்றி விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் டெல் அவிவிற்கு வருகை புரிவதற்கு ஒரு நாள் முன்னதாக, புஷ் நிர்வாகம் இஸ்ரேல் நிர்வாகம் கோரியுள்ள செயற்கைக்கோள் மற்றும் லேசர் மூலம் வழிகாட்டப்படும் குண்டுகளை அந்நாட்டிற்கு அளிக்க பெரும் பரபரப்புடன் செயல்பட்டு வருவதாக நியூயோர்க் டைம்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வாஷிங்டனின் "இராஜதந்திரம்" பற்றியதை, அதாவது மத்திய கிழக்கின் மீதான தன் சொந்த மேலாதிக்கத்தை ஆயுதங்களின் பலத்தால் உறுதிப்படுத்துவதற்கு தன்னுடைய இஸ்ரேலிய வாடிக்கை அரசுக்கு அதன் அமெரிக்க சக்தியை அளித்துள்ளது என்ற உண்மையை சுருங்கக் கூறுகிறது..

டைம்ஸின் கருத்தின்படி, ஜூலை 12 அன்று இஸ்ரேல் லெபனானை விமான, கடல்வழித் தாக்குதல்கள் மூலம் நொருக்கத் தொடங்கிய "நேரத்தை ஒட்டி" இஸ்ரேலிய வேண்டுகோள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இஸ்ரேலிய ஆதரவு செய்தித்தாள் அதிகாரபூர்வமாக தாக்குதல்கள் நடந்ததற்கு முன்னரா அல்லது பின்பா இத்தகைய கோரிக்கை எழுப்பப்பட்டது என்று கூறவில்லை; ஏனெனில் ஹெஸ்புல்லா இரு இஸ்ரேலிய சிப்பாய்களை சிறைபிடித்ததையொட்டி எடுத்த தற்காப்பு நடவடிக்கைதான் இப்போர் என்ற போலி நிலைப்பாட்டை இது தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விரைவில் அனுப்பப்படுவது பற்றிய டைம்ஸின் அறிக்கை பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பின்வருமாறு கூறினார்: "இதைப்பற்றி எவ்விதக் கருத்துக்களையும் நாங்கள் கூறப்போவதில்லை."

எந்தக் கருத்தும் தேவையும் இல்லை. ஆயுதங்கள் அனுப்பப்பட்டது என்பது இன்னும் கூடுதலான முறையில் பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் வாஷிங்டனுக்காக, அதன் நேரடி ஆலோசனையின் பேரில் நடத்தப்படுகிறது என்பதற்கான சான்றாகும்.

2005ம் ஆண்டில் டெல் அவிவ் கேட்ட 100GBU-28 கள், 2,269 கிலோகிராம் எடையுடைய லேசர் வழிப்படுத்தும் "நிலவறைகளை அழிக்கும்" ("Bunker-buster") குண்டுகள் வாங்குவதற்கான 1 பில்லியன் டாலர் ஆயுதப்பொதி அங்கீகரிக்கப்பட்டது. எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படுகின்றன என்பது பற்றி எவருக்கும் தெரியாது; ஆனால் சில ஆய்வாளர்கள் லெபனான் மீதான குண்டுவீச்சுக்கள் இன்னும் சிறிது காலத்திற்கு தொடரும் என்பதைத்தான் இது சுட்டிக்காட்டியுள்ளது என்று குறிப்பிடுகின்றனர். லெபனான் மட்டும்தான் இலக்காக இருக்கும் என்ற உறுதியும் இல்லை.

கடந்த ஆண்டு ஆயுத பேரம் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடப்பட்ட பின் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷரோன் நிலவறைத் தகர்ப்புக்கள் ஈரானிய அணுசக்தி உலைகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு நோக்கங்கொண்டவை என்று பகிரங்க மறுப்பை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த குண்டுகள் அமெரிக்கா அளித்திருக்கும் F-15 போர் ஜெட்டுக்களில் பொருத்தப்படும்; ஈரானைத் தாக்குதல் பகுதிக்குள் கொண்டுவந்துவிடும் திறன் இவற்றிற்கு உண்டு. அத்தகைய நடவடிக்கையை கொள்கை அளவில் தான் ஆதரிக்கும் ஏன்பதை ஏற்கனவே வாஷிங்டன் குறிப்பாக கூறியுள்ளது; ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை; ஏனெனில் தெஹ்ரானுக்கு எதிராக ஐரோப்பிய சக்திகளுடைய ஆதரவையும் வென்றெடுக்கவேண்டும் என்று அது முயன்று கொண்டிருந்தது.

ஈரான் பற்றி ஜனாதிபதி புஷ்ஷுடன் விவாதங்களை நடத்திய பின்னர், CNN இடம் ஷரோன், அணுவாயுத கட்டுமானத்தில் ஏற்படும் "தொழில்நுட்பச் சிக்கல்களை" ஈரான் தீர்க்க முடியும் என்றால், "இனி சமரசத்திற்கு இடமில்லாத நிலைதான்" ஏற்படும் என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அளவு ஆயுதத் தளவாடங்களில் நிலவறைத் தகர்ப்பு குண்டுகள் ஒரு பகுதியே ஆகும். ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் $2 பில்லியனுக்கும் மேலாக நிதியை பெறுகிறது; இதில் மூன்றில் இரு பங்கு இராணுவ உதவியாகும். இதன் விமானப் படையில் F-16 பால்கன் போர் விமானங்கள், F-15 ஈகிள் விமானங்கள், AH 64 Apache தாக்கும் ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்காவில் உற்பத்தியாகும் விமானங்கள் உள்ளன.

வெள்ளிக் கிழமையன்று நாடாளுமன்றத்தில் பென்டகன் இஸ்ரேலுக்கு JP 8 க்கு 210 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய விமான எரிபொருளை விற்பதற்கு திட்டம் கொண்டுள்ளது என்றும் இதனால் அங்குள்ள விமானங்கள் "அப்பகுதியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் காக்கமுடியும்" என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு ரைஸ் வருவதற்கு முன்பு, புஷ் நிர்வாகம் லெபனான்மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தான் தடையேதும் கூறாது என்று தெரிவித்ததுடன், சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பலமுறை அச்சுறுத்தல்களையும் வெளியிட்டது. சனிக்கிழமை அன்று வானொலியில் நிகழ்த்திய உரை ஒன்றில் ரைசின் பயணத்தை பற்றி முன்னோட்டமாகக கருத்துத் தெரிவிக்கையில், "தாக்குதல்களை நடத்தியுள்ள பயங்கரவாத குழு மற்றும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ள நாடுகளை எதிர்கொள்ளுதல் என்பதுதான் நெருக்கடியை தீர்க்கும் வகை என்பதை இந்த அம்மையார் தெளிவுபடுத்துவார்" என்று புஷ் கூறினார்.

இதற்கு முந்தைய தினம், போர் நிறுத்தத்திற்கான அழைப்புக்களை மறுபடியும் ரைஸ் நிராகரித்தார்; லெபனானில் குடிமக்கள் இலக்குகள் மற்றும் உள்கட்டுமானத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பது "இதுகாறும் உள்ள நிலைக்கே அது மீண்டும் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தினால் அது தவறான உறுதிமொழி" என்று குறிப்பிட்டார். "தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும்,ஹெஸ்பொல்லாதான் பிரச்சினைக்கு மூலகாரணம் என்பதையும் சிரியா அறியும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இப்பூசலை பற்றி இழிந்த அறிக்கைகளில் ஒன்றாக அவர் "ஒரு புதிய மத்திய கிழக்கு பிறப்பதற்கான பிரசவ வேதனை" தற்போதைய நிலை என்று விளக்கினார். இந்தக் கருத்து பொருள் பொதிந்தது. புஷ் நிர்வாகம்தான் லெபனான்மீதான தாக்குதலுக்கு உந்துசக்தி கொடுக்கிறது என்றும், அப்பகுதி முழுவதும் மறு ஒழுங்கு செய்யப்படுவதற்கான நடவடிக்கையின் ஆரம்பந்தான் இது என்பதையும் இது தெளிவாக்குகிறது.

காசாவையும் லெபனானையும் தாக்குவதற்கு இஸ்ரேலிய கடிமா-தொழிற்கட்சி கூட்டரசாங்கத்திற்கு சொந்தக் காரணங்களும் உள்ளன. ஜெருசலேத்தின் முழுப்பகுதி, மேற்கு கரையின் பெரும்பகுதி ஆகியவற்றையும் இணைத்த பெரிய இஸ்ரேல் திட்டத்திற்கு அரபு மக்களிடைய உள்ள எதிர்ப்புக்கள் அனைத்தையும் இது நசுக்க விரும்புகிறது. ஆனால் அது ஒரு சுதந்திரமான செயல்பாட்டாளர் அல்ல மற்றும் அமெரிக்காவின் நேரடித் தலையீடு உள்பட வாஷிங்டனின் முழு அரசியல், இராணுவ மற்றும் நிதி ஆதரவு இல்லாமல், அதன் இலக்குகளை அடைய முடியாது.

லெபனானின் இன்னும் கூடுதலான சக்தி வாய்ந்த அண்டை நாடான சிரியாவை தொடாமல் விட்டுக்கொண்டு, லெபனானை இஸ்ரேல் தொடர்ந்து தாக்க முடியாது. இதையும்விட முக்கியமானது என்னவென்றால் வாஷிங்டனுக்காக இந்த பிராந்திய போலீஸ்காரன் பாத்திரத்தை அது எடுத்துக்கொள்ளலானது இறுதியில் ஈரானை இராணுவமுறையில் தோற்கடிக்க வேண்டும் என்று கோருகிறது, இதைத்தான் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் மே மாதம் இஸ்ரேலின் "இருப்பு தொடர்பான அச்சுறுத்தல்" என்று விவரித்தார்.

இஸ்ரேல் ஒரு உதாசீனமான முறையில் தன்னுடைய சிப்பாய்கள் பிடிக்கப்பட்ட நிகழ்வை பயன்படுத்திக் கொண்டு, முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை, புஷ் நிர்வாகத்தை கலந்தாலோசித்து நடத்தியிருப்பதாகத்தான் வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிளில் ஜூலை 21 வந்த கட்டுரை பற்றி உலக சோசலிச வலைத் தளம் முன்னரே கவனத்தை வெளியிட்டிருந்தது. அதில், "கடந்த வாரம் ஹெஸ்பொல்லா போராளிகள் ஆத்திரமூட்டியதற்கு விடையிறுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவத்தின், விமான, தரைப்படை மற்றும் கடற்படை தாக்குதல்கள் வெளிவந்துள்ளது. இது ஓராண்டிற்கு முன் உறுதியாக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுவது போல் உள்ளது" என்று கூறப்பட்டிருந்தது. கிரானிக்கிள் மேலும் எழுதியதாவது: "ஓராண்டிற்கு முன், ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி, பவர் பாயின்ட் (PowerPoint) முன்வைப்புக்களின் மூலம், வெளியே கூறக்கூடாது என்ற எச்சரிக்கையில், அமெரிக்க மற்றும் பிற தூதர்கள், செய்தியாளர்கள், சிந்தனைக் குழாம்களுக்கு தற்போதைய செயற்பாட்டின் முழு விவரங்களையும் காண்பித்தார்."

ஜருசலேம் போஸ்ட் ஏட்டில் டேவிட் ஹோரோவிட்சஸ் எழுதிய கட்டுரை இன்னும் கூடுதலான வகையில் லெபனான்மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது என்பதற்கு சான்றுகளை வழங்கியது. "கடந்த ஒன்பது நாட்களாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் போர்த் திட்டம் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன், ஏறத்தாழ புதிய கடிமா தலைமையிலான அரசாங்கம் உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இறுதி வடிவம் பெற்றது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூலை 23 ஹாரெட்ஸில் வந்த "கொள்கை நிலை மாற்றத்தை ஏற்படுத்துதல்/ஒரு புதிய செயற்பட்டியல், ஒரு புதிய ஒழுங்கு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் அலுப் பென் என்பவர் குறிப்பிடுகிறார்; "கடந்த வார இறுதியில் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் மொசாத்தின் தலைவர் மெய்ர் டாகனை வாஷிங்டனுக்கு, ஈரானிய அணுவாயுத அச்சுறுத்தலை நிறுத்துவது பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அனுப்பி வைத்தார். லெபனானில் போர்கள் முடிந்த ஒருவித ஒழுங்கு வடக்கில் ஏற்படுத்தப்பட்ட பின், ஓல்மெர்ட் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் பயணம்செய்து புதிய செயற்பட்டியல் பற்றி விவாதிப்பார்."

மத்திய கிழக்கிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் மேற்கொண்டுள்ள பயணம், சியோனிச நாட்டின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் லெபனிய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தூதரக நெறி மற்றும் அரசியல் நெறித் திரைகளை கொடுக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு, அது தொடருமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. பிரதம மந்திரி ஓல்மெர்ட் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசுடன் ஜெருசலேத்தில் இறங்கி விவாதங்களை மேற்கொண்டபின்னர், ரைஸ் ரோமிற்கும் மலேசியாவிற்கும் சென்றுவிட்டு ஜூலை 30 அன்றுதான் இஸ்ரேலுக்குத் திரும்புகிறார். அதுவரை இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து நடத்துவதற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் ஹாரேட்சிடம் கூறினர்.

லெபனானை மெய்நடப்பில் இஸ்ரேலின் பாதுகாப்பிலுள்ள நாடாக குறைப்பதற்கும் சிரியா, ஈரான் இரண்டையும் தனிமைப்படுத்துவதற்குமான அமெரிக்க இஸ்ரேலிய திட்டங்களுக்கு ஏனைய முக்கிய வல்லரசுகள், அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளின் உடன்பாட்டை உறுதிப்படுத்த ரைஸ் நோக்கம் கொண்டுள்ளார்.

ரைஸ் புறப்படும் முன், அவரும் புஷ்ஷும், மற்றும் துணை ஜனாதிபதி செனி, மற்ற நிர்வாக உயரதிகாரிகள் அனைவரும் வாஷிங்டனில் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி இளவரசர் செளத் அல்-பைசல், சவுதி தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இளவரசர் பண்டர் இபின் சுல்த்தான் மற்றும் வாஷிங்டனில் சவுதி தூதராக இருக்கும் இளவரசர் துர்க்கி இபின் பைசல் ஆகியோருடன் விவாதங்களை நடத்தினர். தற்போதைய ஹெஸ்பொல்லா பூசலில் இந்த அரசாங்கம் அமெரிக்கா பக்கம் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிரியா மற்றும் ஈரான் மீது வரவிருக்கும் தாக்குதல்களிலும் அத்தகைய ஆதரவைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோமில் ரைஸ் "லெபனான் உட் குழு" உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்; இதில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், ஐ.நா, உலக வங்கி மற்றும் பிரதம மந்திரி பெளவட் சினியோரா தலைமையில் லெபனிய அரசாங்கம் ஆகியவை அடங்கியுள்ளன. சவுதி அரேபியாவை போலவே எகிப்தும் ஜோர்டானும் வாஷிங்டனுடைய மத்திய கிழக்கு கொள்கையை தாங்கள் ஏற்பதாக தெளிவுபடுத்தியுள்ளன.

ஒவ்வொரு நாளும் இராணுவ அச்சுறுத்தல் வரும் என்ற மிரட்டல்களை தொடுத்தாலும், சிரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் விரும்பம் கூட ரைசுக்கு கிடையாது. ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான ஜோன் போல்ட்டன் நேற்று Fox News ஆல் பேட்டி காணப்பட்டபோது, சிரிய துணை வெளியுறவு அமைச்சர் பைசல் மேக்டாட் அன்று காலை வெளியிட்டிருந்த அறிக்கை பற்றி கேட்கப்பட்டார். "மரியாதை, ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுதல்" என்ற அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று மெக்டாட் கூறியிருந்தார்.

இந்த சிரியாவின் அழைப்பு போல்டன், "சிரியாவிற்கு ஒன்றும் தாங்கள் செய்ய வேண்டியது பற்றி பேச்சு வார்த்தைகள் தேவையில்லை... ஈரானுடன் சிரியாவும்தான் உண்மையில் பிரச்சினையின் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்.

வாஷிங்டனால் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, லெபனான்மீது மிக அதிகமான அழிவை கொடுக்க இஸ்ரேல் முயன்று வருகிறது. லெபனான் மீது 3,000 தடவைக்கும் மேலாக பறந்து குண்டு மழை பொழிந்த இஸ்ரேலிய விமானங்கள் அந்நாட்டின் உள்கட்டுமானத்தை தகர்த்துவிட்டன. ஜூல் 21ம் தேதி, இஸ்ரேலிய இராணுவம் 3,000 இருப்புத் துருப்புக்களை அழைத்து லெபனிய எல்லைக்கு அருகே வரவிருக்கும் போர்களில், தெற்கு லெபனானில் தரைப்படை தாக்குதல் நடத்துவதற்கு அவற்றை குவித்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய விமானப் படை 120 இலக்குகளுக்கும் மேலாக தாக்கியுள்ளது; இதில் பெய்ரூட்டில் உள்ள அல் மனர் தொலைக்காட்சி நிலையமும் அடங்கும்; அழிவைப் பற்றி வெளியுலகிற்கு காட்ட முடியாமல் செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இஸ்ரேல் எல்லையிலுள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இடமளித்து வரும் சிடன் என்னும் துறைமுக நகரமும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது; எல்லைக்கு அருகில் இருக்கும் அல்மனாரா என்னும் இடத்தில் உள்ள ஆலை ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் இறந்து போனார். டைர் என்னும் துறைமுக நகருக்கருகில் ஒரு கிராமம் தாக்கப்பட்ட போது ஒரு சிறுவன் இறந்து போனான்; தப்பி ஒடிக்கொண்டிருந்த மக்கள் டைர் மினி பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ஏவுகணை தாக்கியதால் மூன்று பேர் இறந்து போயினர்.

மிக மோசமான அழிவுத் தரங்களின் துன்பங்களை லெபனான் ஏற்கனவே பெற்றுள்ளது. ஐ.நா. கொடுத்துள்ள மதிப்பீட்டின்படி, மொத்த மக்கட் தொகையில் 15 சதவிகிதத்திற்கும் மேலாக 600,000 லெபனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளரான ஜோன் எகிலாந்தின் மதிப்பீட்டின்படி, குறைந்தது 365 பேராவது கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர்.

பெய்ரூட்டில் பயணித்துக் கொண்டிருந்தபோது, லெபனிய மக்களுக்கு அவசரமாக தேவையான பாதுகாப்பை அளிக்காததற்காக இஸ்ரேலே எகிலாந்து கண்டித்தார். உடனடியாக $100 மில்லியன் உதவித் தொகையாக, பேரழிவை தவிர்ப்பதற்கு வேண்டும் என்றும் முறையிட்டார். "பெய்ரூட் பகுதியை பற்றிக் குறிப்பாக கவலைப்படுகிறோம்; அதேபோல் நாட்டின் தெற்குப் பகுதி பற்றியும் கவலைப் படுகிறோம்" என்று அவர் கூறினார். "போதிய மருத்துவ வசதியை பெறாமல் காயமுற்றவர்கள் தவிக்கின்றனர். பாதுகாப்பான குடிநீர் கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். முதலிலும், முக்கியமானதுமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்..." என்ற அவர் குறிப்பிட்டார்.

தரைமட்டமாகியிருந்த கட்டிடங்களை பார்வையிட்ட அவர் இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்; "இது பெரும் கொடூரம். இவை வீடுகளின் வரிசைகளாக இருந்தது என்று எனக்கு தெரியவில்லை. மனிதாபிமான சட்டத்தை இது மீறுவதாகும். இது மிகப் பெரியது, பரந்தது; நான் கற்பனையும் செய்திருக்க முடியாதது."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved