:
இலங்கை
Oppose Sri Lankan government's attack on
port workers struggle
துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலை
எதிர்
By Socialist Equality Party (Sri Lanka)
20 July 2006
Back to screen
version
கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டம் இரண்டாவது
வாரத்தை எட்டும் நிலையில் அவர்கள் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். அரசாங்கத்தின்
இலங்கை துறைமுக அதிகார சபை (இ.து.அ.ச.) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக
மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கட்டளையைப் பெற்றுக்கொண்டுள்ள அதே வேளை, துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும் பிரகடனம் செய்துள்ளார்.
மஹிந்த இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தால் ஜனநாயக உரிமைகள்
மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை சகலவிதமான உழைக்கும் மக்களும் எதிர்ப்பதோடு துறைமுகத்
தொழிலாளர்களையும் அவர்களது பிரச்சாரத்தையும் பாதுகாக்க அணிதிரள வேண்டும்.
சுமார் 14,000 கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்கள் ஜூலை 12 முதல் தமது அடிப்படை
சம்பளத்தில் ரூபா 3,000 (30 அமெ. டொலர்கள்) அதிகரிப்பும் வாழ்க்கைச் செலவுப் புள்ளியில் ரூபா 3.50
அதிகரிப்பும் மற்றும் குறைந்தபட்ச வருடாந்த சம்பள உயர்வாக 200 ரூபாவும் வழங்க வேண்டும் எனக் கோரி
மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கினார்கள். அவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பற்றாக்குறையான
சம்பள உயர்வை ஆரம்பத்தில் இருந்தே புறக்கணித்து வந்தார்கள். இது அவர்கள் கோரிய தொகையிலும் பார்க்க மிகக்
குறைந்ததாகும். தொழிலாளர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ஜூலை 17 கொழும்பில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தில்
இணைந்துகொண்டார்கள்.
நேற்று நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், தொழிலாளர்கள் மீண்டும் சேவைக்குத்
திரும்பினால் மட்டுமே தொழிற்சங்கங்களுடன் தான் கலந்துரையாடல் நடத்துவதாக சமரவீர பிரகடனம் செய்தார். அதிகம்
வினைத்திறமற்ற அச்சுறுத்தலொன்றை விடுத்த அவர், "இ.து.அ.ச. யை நாசமாக்க விரும்பாத ஊழியர்கள் மீண்டும்
வேலைக்குத் திரும்புமாறு தான் அழைப்புவிடுப்பதாக" தெரிவிக்குமளவுக்கு அவர் முன்சென்றார். "இ.து.அ.ச.
தொழிலாளர்கள் நாட்டில் அதிகம் சம்பளம் பெறுபவர்களாக இருப்பதால், தாம் கோருகின்ற சம்பள அதிகரிப்பை அவர்கள்
பெறுமாட்டார்கள்" என அவர் வலியுறுத்தினார். "தமது சொந்த நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் ஒரு சில தொழிற்சங்கங்கள்,
நேர்மையற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை அச்சுறுத்தி பணம்பறிக்க முயற்சிக்கின்றன," என அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட நீதிமன்றமானது தொழிற்சங்கங்களின் அழுத்தங்கள் மற்றும் பயமுறுத்தல்களின்
காரணமாக தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள் என்ற போலியான அடிப்படையில்
இ.து.அ.ச. விடுத்த வேண்டுகோளுக்கு கடந்த புதன் அன்று ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. யாதார்த்தம்
என்னவெனில், வாழ்க்கைத் தரம் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக இ.து.அ.ச.
தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பரந்த அதிருப்தியை களையச் செய்வதன் பேரிலேயே தொழிற்சங்கங்கள் இந்த
நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே, அதை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு வழியாக
ஜனாதிபதியுடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள தொழிற்சங்கங்கள் முயற்சித்து வருகின்றன. நீதிமன்ற தடை உத்தரவு
மற்றும் அரசாங்கம், பெரும் வர்த்தகர்கள் மற்றும் ஊடகங்களால் கடந்த வாரத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துறைமுகத்
தொழிலாளர் போராட்டத்தை நசுக்கும் பிரச்சாரத்திற்கு பிரதிபலிக்கும் வகையில், தாம் இன்னமும் நீதிமன்ற உத்தரவின்
பிரதியைப் பெறவில்லை என தொழிற்சங்கங்கள் சாதாரணமாக கூறிக்கொள்கின்றன. தொழிலாளர்கள் மெதுவாக வேலை
செய்யும் பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற அதே வேளை, தொழிற்சங்கத் தலைவர்கள் தமது
நிலைப்பாடு என்னவென்பதை தமது உறுப்பினர்களுக்கு இன்னமும் அறிவிக்கவில்லை. ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக
தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை கவிழ்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
உயர்ந்த சம்பளத்திற்கான கோரிக்கையானது பல மாதங்களாக துறைமுகத்
தொழிலாளர்கள் மீது வளர்ச்சிகண்டு வந்துள்ளது. உத்தியோகபூர்வ வாழ்க்கைச் செலவுச் சுட்டெண், இந்த ஆண்டு ஜனவரில்
4,304 புள்ளிகளில் இருந்து ஜூன் மாதமளவில் 4,730 வரை 426 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு துறையிலும்
உள்ள தொழிலாளர்கள் வாழ்க்கை கடினமாகி வருவதை அதிகளவில் உணர்கின்றனர்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்களின்
சம்பள உயர்வு கோரிக்கைக்கான வேலை நிறுத்தம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் தடுக்கப்பட்டது. தோட்டத்
தொழிலாளர்கள் உட்பட மிகக் குறைந்த சம்பளம் பெறும் தனியார் துறை ஊழியர்களும் போராடுவதற்கான தமது தயார்
நிலையை காட்டிய போதிலும், அவர்களும் இதே போல் தொழிற்சங்கங்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
பல மாதங்களாக தடுமாறிக்கொண்டிருந்த பின்னர், துறைமுக தொழிற்சங்கங்கள் தமது
உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்திற்கு அழைப்பு
விடுக்கத் தள்ளப்பட்டது. 17 தொழிற்சங்கங்களைக் கொண்ட இந்த முன்னணியில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த முற்போக்கு சுதந்திர ஊழியர் சங்கம், எதிர்க்
கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க) சார்ந்த தேசிய ஊழியர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
(ஜே.வி.பி) தொழிற்சங்கமான அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கமும் அடங்குகின்றன.
அரசாங்கத்துடன் எந்தவொரு நேரடி மோதலையும் தவிர்த்துக்கொள்வதன் பேரில்,
தொழிற் சங்கங்கத் தலைவர்கள் ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமல் தவிர்த்துக் கொண்டனர்.
திருகோணமலை மற்றும் காலி துறைமுகத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள் எனப் பிரகடனம்
செய்ததன் மூலம் அவர்களை இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்க இந்தத் தொழிற்சங்கங்கள்
மறுத்துவிட்டன. ஆயினும், இந்த மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரமானது இராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல்
மற்றும் பொருளாதார நெருக்கடியை ஆழமடையச் செய்துள்ளதன் மூலம் தொழிலாளர்களை அரசாங்கத்துடன் நேரடியாக
மோதலுக்கு இட்டுச் செல்கின்றது.
இ.து.அ.ச. அதிகாரிகள், தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக துறைமுகம் 100
மில்லியன் ரூபாய்களுக்கும் மேல் இழந்துகொண்டிருக்கின்றது என முறைப்பாடு செய்கின்றனர். அதற்கும் மேலதிகமாக,
சர்வதேச கப்பல் விதிமுறைகளின் கீழ், தமது வேலைகள் தாமதமாகும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் பலவித கப்பல்
சேவைகளுக்கும் 500 அமெரிக்க டொலர்கள் வரை செலுத்த வேண்டும். இலங்கை கப்பல் சேவை சபை விடுத்துள்ள
அறிக்கையில், பெரும் பாரந்தூக்கிகளின் மூலம் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 3 மற்றும் 5
வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பெரும் வர்த்தகர்கள் தமது நட்டங்களை மேற்கோள் காட்டி மெதுவாக வேலைசெய்யும்
பிரச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற அதே
வேளை, ஊடகங்களோ துறைமுக ஊழியர்கள் "பருத்த சம்பளத்தை" அனுபவிப்பதாக தொழிலாளர்கள் மீது
குற்றஞ்சாட்டுவதன் மூலம் தமது வர்க்கப் பகைமையை வெளிப்படுத்தியுள்ளன. இது இன்னுமொரு பொய்யாகும்.
சராசரியாக துறைமுக ஊழியர்கள் மாதத்திற்கு சுமார் 25,000 ரூபா (250 அமெ. டொலர்கள்) சம்பளமாகப்
பெறும் அதே வேளை, சிலர் மேலதிக நேரம் போன்ற கொடுப்பணவுகளுடன் சேர்த்து 30,000 (300 அமெ.
டொலர்கள்) பெறுகின்றனர். குறிப்பாக, தெளிவாக அதிகரித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் இலவசக்
கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையிலான அரசாங்கத்தின் வெட்டுக்களுக்கு மத்தியில் இது அற்பத் தொகையாகும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளையின்படி செயற்படும் இராஜபக்ஷ
அரசாங்கம், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதன் பேரில் எந்தவொரு சம்பள உயர்வையும் நிறுத்தவும்
மற்றும் எண்ணெய் போன்ற மாணியங்களை நிறுத்தவும் மற்றும் விலைவாசி "சந்தைச் சக்திகளால்" தீர்மாணிக்கப்பட
அணுமதிக்கவும் திட்டமிட்டுக்கொண்டுள்ளது. இதனால் துறைமுக ஊழியர்களின் போராட்டமானது அரசாங்க மற்றும் தனியார்
துறை தொழிலாளர்கள் ஒன்றிணைந்த ஒரு சம்பள உயர்வுப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் என்பதையிட்டு
அரசாங்கம் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது.
இந்தப் பிரச்சாரத்தை கவிழ்ப்பதன் பேரில், இதைக் கையாள்வதற்காக மூன்று
உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இராஜபக்ஷ உதவிக் கரம்
நீட்டியுள்ளார். இந்தக் குழுவானது விளையாட்டு மற்றும் கப்பல் சேவை அமைச்சின் செயலாளர் திலக் கொல்லுறே,
தொழில் அமைச்சின் செயலாளர் மஹிந்த மஹிஹாஹெவ மற்றும் இ.து.அ.ச. தலைவர் சாலிய விக்கிரமசூரிய ஆகிய
உயர்மட்ட அரச அதிகாரத்துவவாதிகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
இந்தக் குழு தொழிலாளர்களின் கோரிக்கையை இட்டுநிரப்பாது என்பதை அமைச்சர்
சமரவீரவின் அறிக்கை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முற்பகுதியில் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு
பிரச்சாரத்தை எதிர்கொண்ட போதும் இராஜபக்ஷ இதே ஏற்பாட்டையே முன்னெடுத்தார். பிரச்சினையைத் தீர்த்தல்
என்ற பெயரில், தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக அப்போது தொழிற்சங்கங்களுடன் இணைந்து
செயலாற்றிய ஒரு ஆணைக்குழுவை அவர் நியமித்தார்.
சூழ்ச்சிகரமான பிரச்சாரம்
துறைமுக ஊழியர்களுக்கு எதிரான அணிதிரள்வானது பலவித பேரினவாத குழுக்களையும்
உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இந்தப் பேரினவாத குழுக்கள், ஊடகங்களுடன் சேர்ந்து துறைமுகத் தொழிலாளர்கள்
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டின.
சிங்கள இனவாத நிலைப்பாட்டிற்கு பேர்போன த ஐலண்ட் பத்திரிகை, அண்மையில்
எழுதிய ஒரு ஆசிரியர் தலையங்கத்தில், "துறைமுகத்தின் உண்மையான அச்சுறுத்தலானது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது
சுழியோடிகளிடமிருந்து ஊற்றெடுக்கவில்லை, மாறாக தொழிற்சங்கவாதிகளின் உடையினுள்ள தகர்க்கும் சக்திகளில் இருந்தே
ஊற்றெடுக்கின்றது," எனத் தெரிவிக்கின்றது.
ஜே.வி.பி. முன்னணி வகிக்கும் சிங்களப் பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய
இயக்கத்தின் தலைவரும் பெளத்த பிக்குவுமான எல்லே குணவன்ச, துறைமுகத் தொழிலாளர்களைத் தாக்குவதற்காக ஜூலை
16 அரசாங்கத்திற்கு சொந்தமான ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவையில் தோன்றி, இந்தப் போராட்டம் "தேசிய
விரோத சக்திகளின்" "நாசவேலை" எனத் தெரிவித்ததோடு தொழிலாளர்களின் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டுமாறும் அழைப்பு
விடுத்தார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகை, "ஏற்றுமதியாளர்கள்
சங்கத்தின் பேச்சாளர் ஒருவர்," "இதுவே நடக்கவேண்டும் என பயங்கரவாதிகளும் எதிர்பார்க்கின்றனர்.
பொருளாதாரத்தை முடமாக்குவதற்காக துறைமுகத்தைத் தாக்க அவர்களும் முயற்சிக்கின்றார்கள். இப்போது எமது
சொந்த மக்களும் அதையே செய்கின்றார்கள்," எனத் தெரிவித்ததை மேற்கோள் காட்டியுள்ளது.
இந்தக் கருத்துக்கள் ஒரு எச்சரிக்கையை ஒலிக்கின்றன. துறைமுகத் தொழிலாளர்களுக்கு
எதிராக மட்டுமன்றி ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிரான ஒரு மூர்க்கமான தாக்குதலைத் தொடுப்பதற்கான
தயாரிப்புகளை தமது இனவாத பங்காளிகள் மற்றும் ஊடகங்களுடன் சேர்ந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளதை இது
சுட்டிக்காட்டுகிறது. இராணுவத்துடன் சேர்ந்து இந்த சக்திகளால் ஊக்குவிக்கப்படும் தமிழர் விரோத இனவாதம் மற்றும்
புதுப்பிக்கப்பட்ட யுத்த ஆத்திரமூட்டல்களும், தமிழ் வெகுஜனங்களுக்கு எதிரானவை மட்டுமன்றி இலங்கை பூராவும் உள்ள
சாதாரண உழைக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் நிலைமைகளை அழிப்பதையும் இலக்காக்க கொண்டுள்ளதையும் இவை வெளிப்படுத்துகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், இந்த சூழ்ச்சியான
பிரச்சாரத்திற்கும் மற்றும் தொழிலாளர்களை குறுகிய பிரிவு மற்றும் இனவாத ரீதியில் பிளவுபடுத்தி, ஏனைய அரசாங்க
மற்றும் தனியார்துறை தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்பும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கும் பதிலளிக்குமாறு
துறைமுகத் தொழிலாளர்களை ஊக்குவிப்பதோடு, உயர்ந்த ஊதியத்திற்காக, வாழ்க்கைத் தரம் மற்றும் தொழில் நிலைமைகள்,
ஜனநாயக உரிமைகள், ஒழுக்கமான சமூகநலன் சேவைகளைக் காக்கவும் மற்றும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு
எதிராகவும் ஒரு பொதுப் போராட்டத்தை அபிவிருத்தி செய்யுமாறு ஊக்குவிக்கின்றன. இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து
அபிவிருத்தி செய்வதற்காக வேலைநிறுத்தக் குழுக்களை கட்டியெழுப்புமாறு நாம் ஊக்குவிக்கின்றோம். மிக முக்கியமாக
உள்நாட்டு யுத்தத்தை புதுப்பிப்பதற்கு எதிர்க்குமாறும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்துத் துருப்புக்களையும் திருப்பியழைக்கக்
கோருமாறும் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் ஆளும் கும்பலினதும் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான ஒரே
வழியாக, ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ்
பேசும் தொழிலாளர்களின் ஐக்கியத்தை ஸ்தாபிக்குமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். |