:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Hillary Clinton celebrates Israeli war crimes
இஸ்ரேலிய போர்க் குற்றங்களுக்கு ஹில்லாரி கிளின்டன் பாராட்டு
By Bill Van Auken, Socialist Equality Party candidate
for US Senate from New York
19 July 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
நியூயோர்க்கின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர் ஹில்லாரி கிளின்டன், திங்கட்
கிழமையன்று சியோனிச அமைப்புக்கள் அனைத்தும் மான்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடத்திய அணிவகுப்பு
ஒன்றில் நிகழ்த்திய உரை, படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு விழா எடுத்தது போல் தோன்றியது.
நவம்பர் மாதம் கிளின்டனுக்கு அளிக்கப்படும் வாக்கு ஒவ்வொன்றும் ஈராக்கில் அமெரிக்கப்
போர் தொடர்வதற்கான வாக்கு என்று மட்டுமின்றி, அப்பகுதி முழுவதும் படுகொலைகள் விரிவாக்கப்பட்டு, தீவிரமாக்கப்படுவதற்குமான
வாக்கு என்பதை ஐயத்திற்கு இடமின்றி இவ்வம்மையாருடைய கருத்துக்கள் விளக்கின.
இஸ்ரேலிய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், மற்றும் பீரங்கிப்படைகள் லெபனானின்
பாலங்கள், நெடுஞ்சாலைகள், விசை உற்பத்தி நிலையங்கள், வசிக்கும் இல்லங்கள் ஆகியவற்றை இடிபாடுகளாக மாற்றிக்
கொண்டிருக்கும் சூழ்நிலையில், நூற்றுக்கணக்கான குடிமக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனிய,
லெபனிய மக்களுக்கு எதிரான நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதலுக்கு அவரது ஆதரவை தெளிவாக்குவது
மட்டுமின்றி, இன்னும் தீவிரமான வகையில் சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக முழு அளவிலான போர் நிகழ்த்தப்படுவதை
ஆதரிக்கவும் தயார் செய்துள்ளார் என்பதையும் தெளிவாக்கினார்.
"ஹமாஸ், ஹெஸ்பொல்லா, சிரியர்கள் மற்றும் ஈரானியர்கள், வாழ்வும் சுதந்திரமும்
வேண்டாம், மரணமும் ஆதிக்கமும் வேண்டும் என்று விரும்புவர்கள் அனைவருக்கும் செய்தி அனுப்பும் (இஸ்ரேலின்) முயற்சிகளை
நாங்கள் ஆதரிப்போம்" என்று அவர் கூட்டத்திற்கு தெரிவித்தார்.
"செய்தி அனுப்புதல்" என்பது ஒரு தீங்கற்ற சொற்றொடராக, பெரும் மக்கள் படுகொலை
மற்றும் அரச பயங்கரவாதத்தை விளக்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் எவ்வாறு அனுப்பப்படுகிறது?
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ளுவதற்கு வடக்கே தப்பி
ஓடிவிட வேண்டும் என்று கிராமப்புற மக்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை போட்டது. அவர்கள் அதற்கு
ஏற்ப ஓடிக் கொண்டிருக்கையில், போர் விமானப் பிரிவு ஒன்று அகதிகள் கூட்டம் ஒன்றைத் தாக்கியதில்
பெரும்பாலான சிறுவர்கள் உட்பட 18 பேர் கருகிப் போயினர். இதன் பின்னர் மற்ற விமானங்கள் முக்கிய சாலைகள்,
மற்றும் லிடனி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பாலங்கள் ஆகியவற்றையும் அழித்தன; இதன் விளைவாக பல
அகதிகளும் தங்கள் வண்டிகளை கைவிட்டுவிட்டு நடந்து செல்லும் வகையில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
வீடுகள், பள்ளிகள், ஏன் மருத்துவ மனைகளும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் கூட இஸ்ரேலிய
குண்டுவீச்சுக்கள், ஏவுகணைகளால் இலக்காக கொள்ளப்பட்டன. ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்ரேலிய விமானத்
தாக்குதல் ஒன்று டைர் என்னும் இடத்தில் இருந்த ஜெபல் அமெல் மருத்துவமனையின் ஒரு பகுதி முழுவதையும்
தகர்த்ததில், ஒன்பது பேர் அடங்கிய குடும்பம் ஒன்று மடிந்தது; தங்கள் இல்லத்தில் இதற்கு முன் நடந்த
குண்டுவீச்சில் இருந்து தப்பும் வகையில் பாதுகாப்பிற்காக அக்குடும்பம் அங்கு வந்திருந்தது.
நூற்றுக் கணக்கான லெபனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இவர்களில் அநேகமாக
பெரும்பான்மையினர் மகளிரும், குழந்தைகளும் ஆகும். இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் குண்டுவீச்சுக்களினால் தங்கள்
உறுப்புக்களை இழந்துள்ளனர்; பல நூறாயிரக்கணக்கான மக்கள் தப்பியோட வற்புறுத்தப்பட்டுள்ளனர்; அவர்கள்
பெருகிய முறையில் பேரழிவு தரக்கூடிய மனிதாபிமான சார்புடைய நெருக்கடியை எதிர்கொள்ளுகின்றனர். "இன
துடைத்தழிப்பு" என்ற இந்தப் பெரும் செயலில் தொடர்புடைய நிகழ்வுகள் தெற்கு லெபனானில் இருந்து முழு ஷியைட்
மக்கட் தொகுப்பையும் விரட்டிவிடும் நோக்கத்தை கொண்டதாகும்.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் அதே நேரத்தில் அதேபோன்ற "தகவலை"
காசாவிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது; அங்கு குண்டு வீச்சுக்களும், பீரங்கித் தாக்குதல்களும் நூற்றுக்கணக்கான
சாதாரண மக்களை கொன்றதுடன், நூற்றுக்கணக்கானவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது; நெரிசல் மிகுந்த
பாலஸ்தீனிய பகுதிகள் பலவற்றையும் தரைமட்டமாக்கிவிட்டது. இஸ்ரேலியர் மேற்கொண்டுள்ள முற்றுகையினால்
மின்சக்தி, நீர் ஆகியவை மக்களுக்கு நிறுத்தப்பட்டுவிட்டதுடன், லெபனானை போலவே வெளியுலகிற்கும் இதற்கும்
எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
இரண்டு பகுதிகளிலும், இஸ்ரேல் மிகப் பெரிய அளவில் மிருகத்தனமான கூட்டு
தண்டனைகளை குடிமக்களுக்கு எதிராக நடத்திக் கொண்டு வருகிறது; இது சர்வதேச சட்டத்தின் கறாரான
அர்த்தத்தில் முற்றிலும் எதிரான போர்க்குற்றங்கள் ஆகும். இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் வெளிப்படையாக
தங்களுடைய நோக்கம் காசாவை மீண்டும் "கற்காலத்திற்கு" விரட்டிவிடுதல் என்றும், லெபனானின் வாழ்வில்
"கடிகாரத்தை 20 ஆண்டுகள் பின்னே கொண்டு வைத்துவிடுவதாக", அதாவது அந்நாட்டில் நிகழ்ந்த மிருகத்தனமான
உள்நாட்டுப் போர்க் காலத்திற்கு அனுப்பி வைப்பதும்தான் என்று கூறியுள்ளனர்.
"இஸ்ரேலுக்கு துணையாக இருப்போம்; ஏனெனில் இஸ்ரேல் அமெரிக்க மதிப்புக்களுக்கு
துணையாகவும் இஸ்ரேலிய மதிப்புக்களை நிலைநிறுத்தவும் உள்ளது" என்று நியூயோர்க் ஜனநாயகக் கட்சித் தலைவர்
நியூ யோர்க் நகர அணிவகுப்பில் அறிவித்தார்.
கிளின்டனுடைய கருத்துக்கள் அமெரிக்க மக்களுக்கு எதிரான உரிமையியல் குற்றமாகும்.
ஆகாயத்தில் இருந்து நிரபராதியான குந்தைகள்மீது குண்டுவீசி உயிர்ப்பலி வாங்குவது என்பது, முழு மக்கள்
தொகையையும் அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்வது என்பது, பெரும்பான்மை மக்களான அமெரிக்க
தொழிலாளர்களின் மதிப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யாது; மாறாக அத்தகைய கருத்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும்
உள்ள ஆளும் உயரடுக்கின் சிதைந்த, குற்றம் நிறைந்த வழிவகைகளை பிரதிபலிப்பது ஆகும்; அவைதான் தங்களுடைய
ஏகாதிபத்திய ஆணைகளை மத்திய கிழக்கு முழுவதும் தேவைப்படும் எவ்வகையிலும் திணிக்க வேண்டும் என்ற உறுதியைக்
கொண்டுள்ளன.
கிளின்டன் காக்க நினைக்கும் "மதிப்புக்கள்" எவருடையவை என்பது, ஐ.நா.வில்
குண்டுவீச்சிற்கு ஆதரவு தெரிவித்த அணியில் அவர் தோன்றிய பின்னர், அவருடைய அடுத்த பொதுக் கூட்டத்தில்,
பில்லியனர் பதிப்பாளரான ரூபர்ட் மர்டோக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கெளரவ விருந்தனராக
பிரச்சாரத்திற்காக நிதி திரட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டபோது நிரூபணம் ஆயிற்று. மர்டோக்கின் வலதுசாரி
செய்தி ஊடக சாம்ராஜ்ஜியத்தில் Fox News, New
York Post என்னும் அமெரிக்க தீவிர வலதின் சார்பாக
கருத்துக்கள் கூறும் இழி பதிப்புக்கள் உள்டங்கும்.
உண்மை என்னவென்றால், அரசியல் வாதிகளும் நடைமுறையும், செய்தி ஊடகமும்
அமெரிக்க மக்களுக்கு முறையான வகையில் மத்திய கிழக்கில் பெருகி வரும் போர்களை பற்றி பொய்களை கூறி
வருகின்றன; இந்த ஒரு பக்க ஆக்கிரோஷ போரை, அதுவும் பாதுகாப்பற்ற மக்கள்மீது நடத்தப்படும் போரை,
முறையான "தற்காப்பு" செயல், சட்ட நெறிக்கு உட்பட்டது என்று கூறுகின்றன. எந்தப் பெரிய செய்தித்தாளும்
அல்லது ஒளிபரப்பு வலைப்பின்னலும் லெபனான் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பெரும் கொடூரங்களை
பற்றித் தெளிவான தகவல்களை கொடுக்கவில்லை.
இஸ்ரேல் ஒரு நிரபராதியான பாதிப்பிற்குட்பட்ட நாடு என்ற கருத்து பொதுவாக
நிலவி வரும் வரை, லெபனிய இறப்புக்கள் --- அனைத்தும் சாதாரண மக்களுடைய மரணங்கள் ஆகும். இது
இஸ்ரேலில் இறந்தவர்களைவிட கூடுதலாக உள்ளது; இதில் பாதிப் பேர் இராணுவத்தினர்; அப்படியும் இந்த விகிதம்
10க்கு 1 என்ற கணக்கில் உள்ளது என்பதை பலரும் அறிவதில்லை..
இஸ்ரேலின் கூற்று, நியூ யோர்க் அணிவகுப்பில் கிளின்டனால் எதிரொலிக்கப்பட்டதில்
உள்ள கூற்று, இத்தகைய இராணுவத் தாக்குதல்கள் மூன்று இஸ்ரேலிய இராணுவத்தினர் - ஒருவர் காஜாவிலும்,
இருவர் தெற்கு லெபனோனிலும் பிடிக்கப்பட்டதற்கு பதிலடி என்பது அபத்தமானது. இந்த நடவடிக்கைகள் நீண்ட
காலமாகவே திட்டமிடப்பட்டவை; சிறைபிடிக்கப்பட்டவர்கள் என்பது ஒரு போலிக்காரணமாக இப்பொழுது
பயன்படுத்தப்படுகிறது; அவ்வீரர்களின் குடும்பங்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தை அவர்களுடைய விடுதலைக்கு
பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு கூறியுள்ளனர்.
கிளின்டனுடைய கீழ்த்தரமான ஒப்புமை
சியோனிச அணிவகுப்பில் பெரும் கைதட்டலைப் பெற்ற கீழ்த்தரக் கருத்துக்கள் வகையில்
கிளின்டன் கூறியதாவது: "பயங்கரவாத தீவிரவாதிகள் மெக்சிகன் அல்லது கனேடிய எல்லையில் இருந்து ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தினால், நாம் வெறுமனே இருப்போமா அல்லது அமெரிக்காவை தீவிரவாதிகளின் தாக்குதல்களில்
இருந்து காத்துக் கொள்ளுவோமா?"
இந்த ஒப்புமை நிகழாத் தன்மையுடையது; அவர் தொடர்ந்திருக்க வேண்டும்:
"மொன்ட்ரியாலில் உள்ள வீட்டுக் கட்டிடங்களை தகர்த்திருக்க மாட்டோமா, டொரன்டோ சர்வதேச விமான
நிலையத்தை அழித்திருக்கமாட்டோமா, கனேடிய குடும்பங்கள் பலவற்றையும் முற்றிலுமாக அவர்கள் இல்லங்களிலும்,
நெடுஞ்சாலைகளிலும் எரித்திருக்க மாட்டோமா, தெற்கு ஓன்டேரியா மக்கள் அனைவரையும் அகதிகளாக ஆக்கி
இருக்க மாட்டோமா?"
மற்றொரு எல்லையை பற்றி ஒப்புமை, இன்னும் தெளிவான வகையில் இஸ்ரேலின்
விடையிறுப்பு பற்றி விகதத்திற்கு ஒவ்வாத பரந்த வகையில் துல்லியமாகக் கூறக் கூடியது, கீழ்க்கண்ட வகையில்
இருந்திருக்கும்: "வலதுசாரி மினிட்மென் குழு எல்லையைக் கடக்க விரும்பும் புலம்பெயர்வோர் மீது துப்பாக்கிச் சூடு
நிகழ்த்துவதாக கற்பனை செய்யுங்கள்; மெக்சிகோ அரசாங்கம் இதற்கு விடையிறுக்கும் வகையில் பெரும் விமானத்
தாக்குதல்களை சான் டியாகோ, டல்லஸ் மற்றும் ஹூஸ்டனில் நிகழ்த்தி, நியூ யோர்க்கின்
JFK விமான
நிலையத்தை தாக்கி நூறாயிரக்கணக்கான மக்கள் வடக்கே ஓடும்படி செய்தால் எப்படி இருந்திருக்கும்?"
மெக்சிகோவுடன் இத்தகைய அதன் வடக்கு அண்டை நாட்டுக்கு விடையிறுக்கும் இராணுவ
வழிவகை இல்லை என்பது உண்மை; அதேபோலத்தான் காசாவில் இருக்கும் பாலஸ்தீனியர்கள்
IDF படைகள்
அவர்கள் பகுதிகளில் ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்தி சாதாரண மக்களை கொன்று, கடத்தி, இஸ்ரேலின்
சிறை முறையில் விசாரணை இன்றி, குற்றம் சாட்டப்படாமல் தள்ளப்படும்போது, பதிலடி கொடுக்க முடியவில்லை.
அப்படித்தான் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலியப் படைகள் எல்லை கடந்து தங்களைத் தாக்கும்போது லெபனானுக்கும்
பதிலடி கொடுக்கும் திறன் இல்லை. இத்தகைய தன்னிலை அறநெறியிலான இராணுவ நடவடிக்கைகள் அப்பகுதியில்
இருக்கும் சக்திவாய்ந்த வன்முறை நாடுகளால் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவால் மட்டுமே செய்ய முடியும்
போலும்.
ஹில்லாரி கிளின்டன் பேசிய அதே மேடையில் இருந்து உரையாற்றிய இஸ்ரேலின்
ஐ.நா.விற்கான தூதர் டான் கில்லர்மேன் இந்த வன்முறைக் கும்பலின் கருத்தைத்தான் கூறினார். ஐ.நா.
கட்டிடத்தின் பால் பார்வையை பதித்து அவர் உரத்த குரலில் கூவினார்: "இந்த வேலையை நாங்கள்
முடிப்போம்!: இதன் பின்னர் சில ஐரோப்பிய நாடுகளின் தயக்கமான குறைகூறல்களை பற்றிப் பேசிய அவர்
குறிப்பிட்டார்: "அளவுக்கு ஒவ்வாத முறையில் வலிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம் எனக் கூறும் நாடுகளிடம்,
நான் கூறவேண்டியது இதுதான்; நாங்கள் அப்படித்தான் செய்கிறோம் என நீங்கள் கூறுவது சரியே!".
இத்தகைய முறையில் உலக மக்கள் கருத்திற்கு அசட்டை காட்டுவதும், மிருகத்தனமான
சக்தியை பயன்படுத்துவதில் களிப்படைவதும்தான் இஸ்ரேலின் அடையாளங்களாக உள்ளது. தொடர்ச்சியான அமெரிக்க
அரசாங்கங்கள், பெருவணிகங்கள், கிளின்டன் போன்ற அரசியல் வாதிகள் நிபந்தனையற்ற முறையில் ஆதரவு
கொடுப்பதும்தான் அவற்றின் பின்னே உள்ள தன்மையாகும்.
எந்த அமெரிக்க அரசியல்வாதியையும் விட இஸ்ரேலிய உரிமையின் நிலைப்பாட்டிற்கு
ஆதரவு கொடுப்பதில் பெரும் அடிமைத் தன்மையை ஹில்லாரி கொண்டுள்ளார் எனக் கூறலாம். கூட்டாட்சித் தேர்தல்
குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 2005-06 பிரச்சார சுற்றில், பிரச்சார நிதியை அதிகம்
பெற்றவர்களில் இவர்தான் முதலிடத்தை கொண்டுள்ளார்; மற்ற ஜனநாயக, குடியரசுக் கட்சியினரைவிட
இவருக்குத்தான் அதிக நிதியம் வசூலாகியுள்ளது.
கடந்த ஆண்டு, ஒரு புகைப்பட வாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு இவர் பயணித்திருந்தார்;
இன ஒதுக்கல் பாணியில் சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது; பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேல் கவர்ந்து கொண்டு
ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுடைய வேலைகள், பள்ளிகள், விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் செய்திருந்தது.
இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த கிளின்டன் "இது ஒன்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரானது" அன்று,
"பயங்கரவாதிகளுக்கு எதிரானதுதான்" என்று முழங்கினார்.
புஷ் நிர்வாகத்தை அதன் ஈரான் கொள்கைக்காக வலதில் இருந்து தாக்கும் வகையில்
இவ்வம்மையார் சிறப்பு பெற்றுள்ளார்; இவருடைய நிலைப்பாடு
American Israel Public Affairs Committee
(AIPAC) உடைய கருத்துக்களை எதிரொலிப்பதாக உள்ளது;
அவ்வமைப்பு ஈரானியர்களுக்கு எதிராக அமெரிக்கா போரிட வலியுறுத்துகிறது.
ஆனால் கிளின்டனுடைய கொள்கைகள் பிரத்தியேகத் தன்மை உடையவை அல்ல. இரு
பெரிய கட்சிகளுமே லெபனிய, பாலஸ்தீனிய மக்களின் கஷ்டங்களை பற்றிப் பொருட்படுத்துவதில்லை; அதே
நேரத்தில் அவை லெபனான், காசாப் பகுதிகளில் ஆக்கிரோஷப் போரை இஸ்ரேல் நடத்துவது ஒரு உரிமைதான்
என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க காங்கிரசின் இருபிரிவுகளும் இன்னும் வெளிப்படையாக
இந்நிலைப்பாட்டை காட்டும் வகையில் தீர்மானங்களை கொண்டுவர உள்ளன.
புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினர் போலவே, கிளின்டனும் ஜனநாயகக் கட்சியினரும்
திட்டமிட்ட, இரக்கமற்ற முடிவு ஒன்றைக் கொண்டுவந்து லெபனானையும் காசாவையும் தீக்கிரையாக்குவதை
அனுமதிக்கவும், இஸ்ரேல் தன்னுடைய இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னால் போர் நிறுத்தம்
கொண்டுவரப்படுவதற்கான தீவிர முயற்சிகளை எதிர்ப்பதிலும் ஆர்வம் கொண்டுள்னர்.
செனட் மன்றத்திற்கான தேர்தலில் ஹில்லாரி கிளின்டனை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்
என்னும் முறையில், இஸ்ரேலிய இராணுவவாதம் மற்றும் விரிவாக்க முறை ஆகியவற்றை நான் உறுதியுடன் எதிர்க்கிறேன்.
இஸ்ரேலிய இராணுவ இயந்திரத்திற்குக் கொடுக்கப்படும் அமெரிக்க உதவி அனைத்தையும் உடனடியாக நிறுத்த
வேண்டும் என்று நான் அழைப்பு விடுகிறேன். தற்பொழுது ஆண்டு ஒன்றுக்கு $3 பில்லியன் தொகையை இஸ்ரேல் பெற்று
வருகிறது. இது கிட்டத்தட்ட வாஷிங்டனின் மொத்த வெளியுதவிச் செலவுகளில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்; இந்த
நாடோ உலகின் மக்கட்தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட மகத்தான அமெரிக்க உதவிச் செலவு இஸ்ரேலுக்குப் பெரும் ஆயுதங்கள்
கொடுப்பதற்காக நடப்பது ஈராக்கில் நடக்கும் சட்டவிரோதப் போர், ஆக்கிரமிப்பு ஆகியவை கொண்டுள்ள
நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது. இது ஒன்றும் "ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கோ" "பயங்கரவாதத்தை
தோற்கடிப்பதற்கோ" நடக்கவில்லை; மாறாக மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை அடைவதற்கும், அங்கு
உள்ள மூலோபாய எண்ணெய் இருப்புக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அப்பகுதி முழுவதும் அமெரிக்க
பொருளாதார, இராணுவ சக்தியை இயக்குவதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது.
ஈராக்கில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடக்க கிளின்டன் கொடுக்கும் ஆதரவிற்கு
எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து அமெரிக்கப் படைகளும் அந்நாட்டில் இருந்து நிபந்தனையற்ற
முறையில் திரும்பப் பெறவேண்டும் என்று கோருகிறது. அதேபோல் அமெரிக்க மக்களை இப்போரில் பொய்களின்
அடிப்படையில் இழுத்தவர்கள் அதற்கு அரசியல் அளவிலும் குற்றவியல் அளவிலும் பொறுப்பேற்க வைக்க வேண்டும்
என்றும் இது அழைப்பு விடுகிறது.
ஈராக்கில் நடக்கும் போரை நிறுத்துவதற்கான போராட்டமோ, லெபனான், பாலஸ்தீனிய
பகுதிகளில் இஸ்ரேலிய ஆக்கிராஷத்திற்கு எதிரான போராட்டமோ, ஐ.நா. அல்லது "சர்வதேச சமூகத்திற்கு"
அழைப்புக்களை விடுவதில் மூலம் நிறைவேற்றப்பட முடியாது. அவை இரண்டுமே அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவவாதத்தின்
வெடிப்பிற்கு முன் தங்கள் இயலாத்தன்மையைத்தான் நிரூபித்துள்ளன.
மாறாக, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டங்கள் தொழிலாளர்களின்
சுயாதீனமான அரசியல் திரட்டின் மூலம்தான் அடையப்பட முடியும். அமெரிக்க மக்கள் தொடர்ந்து ஈராக்கிய
போருக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டியுள்ள போதிலும்கூட, அமெரிக்கப் படைகள் திருப்பப் பெறவேண்டும் என்ற
கோரிக்கைக்கு இரு பெரும் கட்சிகளில் ஒன்றில் கூட குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லை. முன்னேற்றுதற்கான வழியில்
இருப்பது ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடும், தொழிலாள வர்க்கத்திற்காக
புதிய அரசியல் கட்சியைக் கட்டமைக்க வேண்டும் என்ற நிலையும்தான்.
அதே நேரத்தில், போருக்கு எதிரான போராட்டத்திற்கு, ஏகாதிபத்தியத்திடம்
இருந்தும் உள்ளூர் ஆளும் வர்க்கங்களின் -- அரபு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சியோனிஸ்டுகள் இருதிறத்தாரும்
உட்பட-- அவர்களின் ஆதிக்கத்தில் இருந்தும் அப்பிராந்தியத்தை விடுவிக்கும் போராட்டத்தில் இஸ்ரேல் மற்றும் அரபுநாடுகளில்
இருக்கும் யூத மற்றும் அரபுத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் உள்பட, சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான போராட்டம் தேவைப்படுகிறது.
இந்த இலக்குகளை மேம்படுத்தும் வகையில்தான் சோசலிச சமத்துவக் கட்சி 2006
தேர்தல்களில் தலையீடு செய்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவவாதம் பெருகுவதை, மற்றும்
இன்னும் பரந்த முறையில் போர் வெடிக்கும் அச்சுறுத்தலை எதிர்ப்பவர்கள் அனைவரையும்
எங்களுடைய பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்குமாறும்
SEP
வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் இடம்பெற உதவுமாறு நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
Top of page |