World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Terrorist atrocity in Mumbai மும்பையில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் By the Editorial Board இந்தியாவின் பெரும் மக்கட்திரள் நிறைந்த, நிதிய மையமான மும்பையில் நேற்று ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நிகழ்ந்த குண்டுவீச்சுத் தாக்குதலை உலக சோசலிச வலைத் தளம் கண்டனத்திற்கு உட்படுத்துகிறது. குறுகிய கால அவகாசத்தில் செவ்வாய் மாலை கூட்டம் அதிகமுள்ள நேரத்தில் 7 பயணிகள் வண்டிகள் அல்லது அவற்றுக்கு அருகே அடுத்தடுத்து எட்டு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 179 பேராவது மடிந்ததுடன், 400 பேர் காயமும் அடைந்தனர். மிக அதிகமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வண்ணம் குண்டுகளின் நேரமும் கணிக்கப்பட்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை ஏராளமான மக்கள் நிரம்பி வழிந்திருந்த இரயில் பெட்டிகளை சிதற அடித்து, குருதியையும், உடல் கூறுகளையும் அனைத்துத் திசைகளிலும் பரவச் செய்தன. மிக அதிகமான தலை, மார்புப் பகுதி காயங்கள், குண்டுகள் சாமான்கள் வைக்கும் பிரிவுகளில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை காட்டுவதாக போலீஸ் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், காயமுற்ற பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடுதலாகப் போகக்கூடும். மிக அதிகமான மழை, பீதியில் உறைந்த பயணிகள் தாங்கள் வீடுகளுக்குச் செல்ல முயலுவதால் ஏற்பட்டுள்ள தெருக்களின் நெரிசல் மற்றும் குலைந்துபோய்விட்ட தொலைபேசி வலைப்பின்னல்கள் அனைத்தும் குண்டுவெடிப்புக்களினால் நிலவிய பெருங்குழப்பத்திற்கு வழிவகுத்ததுடன், மீட்புப் பணிகளையும் பாதித்தன. இதன் பின்னர் நிகழ்ந்தவை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன" என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது; "நொருக்கப்பட்ட இரயில் வண்டிகளின் சிதைவுகளின் தோற்றங்கள் காட்டப்பட்டன; கிழிக்கப்பட்டுவிட்ட உடல் உறுப்புக்கள், காயமுற்ற பயணிகள், குருதி பெருகி நிற்கும் முகங்கள் காட்டப்பட்டன." என்னதான் வெளிப்படையான வேறு நோக்கங்களை குண்டுவைத்தவர்கள் கொண்டிருந்தாலும், பயணிகள் மற்றும் இரயிலில் செல்பவர்களை வேண்டுமென்றே திட்டமிட்டுப் படுகொலை செய்வது என்பது ஒரு கொடூரமான குற்றம் ஆகும் மற்றும் இது இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் அரசியல் பிற்போக்குத் தனத்திற்குத்தான் உதவும். எதிர்பார்த்தபடி புஷ் நிர்வாகம் மும்பை நிகழ்வுகளை பயன்படுத்தி, அதன் "பயங்கரவாத்தின் மீதான போரை" வளர்த்தெடுக்க - எண்ணெய் வளம் மிகுந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் மூலோபாய ஆதிக்கத்தை செலுத்துவதை நிலைநிறுத்த இராணுவத்தை பயன்படுத்துதல், மற்றும் ஜனநாயக உரிமைகளை உள்நாட்டில் தாக்குதல், ஆகியவற்றை நிலைநாட்டுவதில் உதவுகின்ற ஒரு சாக்குப்போக்கை வளர்ப்பதற்கு பற்றிக் கொள்கிறது. "பயங்கரவாதத்தின் மீதான போரில் இந்தியாவிற்கு துணை நிற்போம்" என்று வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அறிவித்தார். இந்திய அரசாங்கம் மிக உயர்ந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து இந்திய நகரங்களிலும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படைகளை உத்தரவிட்டுள்ளது. செய்தி ஊடகத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில், பிரதம மந்திரி மன்மோகன் சிங், அரசு அதிகாரிகள் "பயங்கரவாதிகளின் தீய திட்டங்களை தோற்கடிக்க உழைப்பர், அவர்களை வெற்றிபெற அனுமதிக்க மாட்டார்கள்" என்று சபதம் எடுத்துக் கொண்டார். புதன் கிழமை (இந்திய நேரம்) அதிகாலை வரை, எந்தக் குழுவும் செவ்வாயன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் இந்திய செய்தி ஊடகங்கள் பெயரிடாத உயர்மட்ட அராசங்க ஆதாரங்கள் குண்டுவெடிப்புக்கள் "தெளிவான முறையில்" முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு கஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை எதிர்க்கும் லஷ்கர்-இ-தொய்பா (தூயவரின் படை) என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் வேலைதான் என்று தெரிவித்துள்ளன. இந்த ஆதாரங்களின் கருத்தின்படி, குண்டுவெடிப்புக்கள் இந்தியாவிற்குள் வகுப்புவாத வன்முறையை தூண்டும் நோக்கத்தை கொண்டுள்ளன என்றும் முஸ்லீம் சிறுபான்மைக்கு எதிராக இந்துக்கள் நடத்தக்கூடிய பதிலடி காஷ்மீரில் உள்ள இந்திய எதிர்ப்பு எழுச்சியின் நலன்களுக்கு உகந்ததாகப் போகும் என்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கங்கொண்டதாகும். லக்ஷர்-இ-தொய்பா மற்றும் பிற இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் கஷ்மீர் மீது இந்தியா கொண்டுள்ள கட்டுப்பாட்டை எதிர்ப்பதுடன் பலமுறையும் சாதாரண மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வகுப்புவாதக் கொடுமைகளை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு செவ்வாயன்று, ஜம்மு கஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் சுற்றுலாப்பயணிகளை இலக்கு கொண்டு மூன்று கையெறி குண்டுகளால் நடத்திய தாக்குதலில், எட்டு பேர் கொல்லப்பட்டதுடன் 35 பேர் காயமும் அடைந்தனர் ஆனால் லஷ்கர் -இ - தொய்பா (LeT) மும்பையில் ஒருங்கிணைக்கப்பட்டு நிகழ்ந்த குண்டுவீச்சுக்களை செய்திருந்தால் இது ஒரு நவீன தொழில்நுட்ப தரத்தின் புதிய மட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஸ்ரீநகர் அல்லது மும்பையில் நேற்றைய நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களில் அதற்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்துவிட்டார். இந்து பத்திரிக்கையின்படி, லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதியான டாக்டர் அப்துல்லா இரு தாக்குதல்களையும் "மனிதத்தன்மையற்ற காட்டிமிராண்டித்தனம்" என்று ஸ்ரீ நகரில் உள்ள பல செய்தி ஊடக நிறுவனங்களுக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். "LeT ஐ இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு குற்றம் சாட்டுதல் என்பது இந்தியப் பாதுகாப்பு முகவாண்மைகள் ஜம்மு, கஷ்மீரில் நடக்கும் சுதந்திரப் போரட்டத்தை இழிவுபடுத்தும் முயற்சியாகும்" என்று கஜ்நாவி கூறினார். அதன் தன்மையை ஒட்டியே பயங்கரவாதச் செயல்கள் எங்கு பயங்கரவாத சதி முடிகிறது, உளவுத்துறை அமைப்புக்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் வலதுசாரித் தூண்டுதல்கள் தொடங்குகின்றன என்பதை நிர்ணயிக்க முடியாமல் செய்துவிடுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் காஷ்மீரில் கிளர்ச்சியையும் நாட்டின் மற்ற பகுதிகளில் பிரிவினைவாத போராட்டங்களையும் ஈவிரக்கமற்ற அடக்குமுறை மூலம் கடுமையாக நசுக்க முற்பட்டுள்ளன. சித்திரவதை, கொலை, ஊடுருவல், தூண்டுதல் ஆகியன வழக்கமான பெருந்திரளான கைதுகள் மூலம் "பயங்கரவாதிகளை" தாக்குதலுக்கு உட்படுத்துவதை நோக்கமாக கொண்டனவாகும். மும்பையில் நேற்று நடந்த கொடூரம் இந்திய உளவுத் துறை அமைப்புக்களினால் ஏற்பாடு அல்லது முகவர்களின் தூண்டுதலினால் நடத்தப்பெற்றிருக்கலாம் என்ற ஊகமும் தவிர்க்கப்பட முடியாது; ஒருவேளை பாதுகாப்புப் படைகளின் கூறுகள், மக்கள் கூடுதலான அரசு அடக்குமுறைகளை ஏற்கும் வகையில் பீதியடையும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற அனுமதித்திருக்கக்கூடும். மும்பை குண்டுவெடிப்புக்கள் இந்துத்துவ மேலாதிக்கவாத வெறியர்கள் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையை நடத்தத் தூண்டும் வகையில் செய்திருக்கவும் கூடும். இந்தியாவின் உள்துறை மந்திரியான சிவராஜ் பாட்டீல் ஒரு தாக்குதல் வரவிருப்பதாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை வந்ததாகவும், ஆனால் அதன் "இடம், நேரம்" ஆகியவை குறிக்கப்படவில்லை என்றும் கூறினார். டிசம்பர் 2001ல் அப்பொழுது பாரதீய ஜனதாக் கட்சி (BJP) யின் தலைமையில் இருந்த இந்திய அரசாங்கம், இந்தியப் பாராளுமன்றத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்தி LeT மீது குற்றம் சாட்டி பொடா, பயங்கரவாதத்தடுப்பு சட்டம் என்பதை கொண்டுவந்து, நீண்ட நாள் விரோதியான பாகிஸ்தானை LeT க்கு ஆதரவு கொடுப்பதாகக் குற்றம் சாட்டி போர் நிகழும் என்ற எச்சரிக்கையையும் கொடுத்தது. பாகிஸ்தானை அதிக சலுகைகள் கொடுக்க நிர்பந்திக்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக மில்லியன் இராணுவத்தினரை யுத்த வடிவில் நிறுத்தி வைத்திருந்தது. மே 2004 தேர்தல்களுக்கு பின்னர், BJP தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு பதிலாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி பொடா சட்டத்தை அகற்றியது; ஆனால் அதில் இருந்த பல ஜனநாயக விரோத விதிகள் அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தில் சேர்க்கப்பட்டன. டிசம்பர் 2001 BJP அரசாங்கம் விடையிறுத்தற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், குறைந்தபட்சம் இதுவரையிலேனும், மும்பை அல்லது ஸ்ரீ நகர் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளதாகக் குற்றச் சாட்டுக்களை எழுப்பவில்லை. தன்னுடைய பங்கிற்கு இஸ்லாமாபாத் மும்பைமீது நடந்த குண்டுவீச்சுக்களை விரைவிலேயே கண்டித்தது BJP நட்புக் கட்சியும் ஹிந்து மேலாதிக்க சக ஆதரவுக் கட்சியும் மும்பையின் மாநகராட்சி அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதுமான சிவசேனை மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக உள்ளது; நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் அது காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மாநில அரசாங்கம் குடிமக்களை காக்கத் தவறிவிட்டதால் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரியுள்ளது.சிவசேனை கட்சியின் தலைவர் பால் தாக்கரே குண்டுவெடிப்புக்கள் காங்கிரஸ் பாகிஸ்தானுடன் நல்ல உறவுகளைக் கொள்ளவேண்டும் என்று தொடருவதால் எற்பட்ட விளைவு என்று குறைகூறியுள்ளார். "மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பேருந்து சேவைகளை இயக்கப் பாடுபடுகிறது; இஸ்லாமாபாத் தன்னுடைய பங்கிற்கு பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது" என்று தாக்கரே டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்தார். "மக்களுடைய பொறுமை மிகவும் நைந்து இழையாகி விட்டது. பயங்கரவாதிகள் உறுதியுடன் அடக்கப்படாவிட்டால், காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி மத்தியில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் வெடிக்கும் " என்றார் அவர். காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் பயங்கரவாதத்தின் மீது "மென்மையாக" இருந்து வருகிறது என்று பல மாதங்களாக பிஜேபி குற்றம்சாட்டி வருவதுடன், பொடா சட்டம் முழுமையாக மீண்டும் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கிளர்ச்சி நடத்திவருகிறது. |