:
இலங்கை
Sri Lankan court allows limited resettlement
of evicted villagers
இலங்கை நீதிமன்றம் அப்புறப்படுத்தப்பட்ட கிராமத்தவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட மீள் குடியேற்றத்திற்கு
அனுமதி வழங்கியது
By Vilani Peiris
9 June 2006
Back to screen version
இலங்கையில் உள்ள உயர் நீதிமன்றம், இரண்டு வருடங்களுக்கும் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட
அடிப்படை மனித உரிமைகள் மனுவிற்கு கடந்த மே 8 அன்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி யாழ்ப்பாணக் குடாநாட்டில்
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 7,456 தமிழ் குடும்பங்கள் தமது கிராமமான வலிகாமத்தில்
மீண்டும் குடியேற உள்ளனர். எவ்வாறெனினும் கிராமத்தவர்கள் மீது, எஞ்சியுள்ள சூழ்ந்துகொண்டுள்ள இராணுவத்தால் விழிப்புடன்
விசாரிக்கப்படும் மற்றும் கண்காணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் தொந்தரவான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு, தீவின் சிங்களப் பெரும்பான்மையின் அரசியல் ஆதிக்கத்தைப் பேணுவதற்கான
நாட்டின் 20 ஆண்டுகால யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் தலைவிதியை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது, இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் பிரமாண்டமான
பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றியமைத்த போது பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
1990ல் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 160 சதுர கிலோமீட்டர்கள் அல்லது
நிலப் பரப்பில் 18 வீதத்தை சுற்றிவளைத்து 15 உயர் பாதுகாப்பு வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி
20,000 விவசாய மற்றும் 8,000 மீனவக் குடும்பங்கள் உட்பட சுமார் 130,000 பேர் தமது வீடுகள் நிலங்களை
விட்டு வெளியேறத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மதிப்பீட்டின்படி 275 பாடசாலைகள், 300 வணக்கஸ்தலங்கள் மற்றும் 20
முக்கியமான வீதிகள் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின்படி, இந்தப் பிரதேசத்தில்
10,000 வீடுகளே உள்ளன. ஆனால் யாழ்ப்பாண பத்திரிகைகளோ 30,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்துகின்றன.
2002ல் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்று
கைச்சாத்திடப்பட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற போதிலும் அமுலில் உள்ளது.
நான்கு ஆண்டுகளின் பின்னரும் எந்தவொரு அகதிகளும் மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2002 மற்றும்
2003ல் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, ஆயுதப் படைகள் புலிகளை நிராயுதபாணிகளாக்காமல் உயர் பாதுகாப்பு
வலயங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் தமது சிப்பாய்களை ஆபத்திற்குள் தள்ளும் எனக் கூறி இந்த விவகாரத்தை
புலிகளுக்கு எதிரான ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்த முயற்சித்தது.
2004ல் புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
மாவை சேனாதிராஜாவும் மற்றும் ஒரு விவசாயியான காசிப்பிள்ளை யோகேஸ்வரனும் அடிப்படை உரிமை மீறல்
மனுவொன்றை தாக்கல் செய்தனர். இருவரும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பலாலிப் பிரதேசம் 1990ல் இராணுவத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டு கணிசமான பகுதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்ட போது அங்கிருந்து
இடம்பெயர்ந்தவர்களாவர்.
வழக்கு மிக நீண்டகாலம் இழுபட்டுச் சென்றதோடு பிரதிவாதிகளில் அதிகமானவர்கள்
பதவியில் இருந்தும் விலகிவிட்டனர். அவர்கள் முந்நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முந்நாள் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க, முந்நாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்ல மற்றும் முந்நாள் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி
பாரமி குலதுங்க ஆகியோரின் பெயர்களை மனுவில் சேர்ந்திருந்தனர். சட்டமா அதிபர் கே.சி. கமலசபேசன்
மாத்திரமே இன்னமும் பதவியில் இருக்கின்றார்.
பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த
மனுவை விசாரித்தது. மனுதாரர்கள் தமது கிராமத்தில் குடியிருப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள உரிமை
மறுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் சட்டவிரோதமான, நியாயமற்ற மற்றும் நிதியற்றதாகும் என
குற்றஞ்சாட்டியுள்ளனர். வலிகாமத்தில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்ப வழிசெய்ய வேண்டுமெனவும் நஷ்ட ஈடு வழங்கப்பட
வேண்டும் எனவும் அவர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள ஏனையவர்களும் இதே போன்ற
வழக்குகளை பதிவுசெய்துள்ளனர்.
சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரனின் வழக்கில் வாதாடிய சட்டத்தரணிகள், பலாலி
உயர் பாதுகாப்பு வலயத்தில் இந்த கிராமத்தை உள்ளடக்குவதற்கு எந்தவொரு சட்டத்தின் கீழும் அல்லது நடைமுறையில்
உள்ள அவசரகால சட்டவிதிகளின் கீழும் எந்த அடிப்படையும் கிடையாது எனத் தெரிவித்தனர். நீதிபதிகளோ அல்லது அரச
தரப்பு வழக்கறிஞர்களோ இந்த வாதத்தை எதிர்க்காததோடு கிராமத்தவர்களை பலாத்காரமாக வெளியேற்றியது
சட்டவிரோதமானது என்பதை விளைபயனுள்ள வகையில் ஏற்றுக்கொண்டனர்.
இலகுவாக தீர்மானிக்கக் கூடிய வழக்கு இது என ஒருவர் சித்திக்கலாம். எவ்வாறெனினும்,
மனுதாரர்களுக்குச் சார்பாக அரசியல்யாப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதை விட, உயர்
நீதிமன்றமானது வேறு எங்காவது நிலம் அல்லது ஏனைய நஷ் ஈடுகளை வழங்கும் இராணுவத்தின் "சமரச"
நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களைத் தூண்டுகிறது.
வழக்கின் ஒரு பாகமாக, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மார்ச் 20 அன்று மனுதாரர்களில்
எவரும் மாற்றீடுகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அவர் உயர்மட்டத்தில் உற்பத்தி செய்யக்கூடிய
விவசாய நிலத்திலும் மற்றும் இலாபகரமான மீன்பிடி பிரதேசத்திற்கு அருகிலுமே வலிகாமம் அமைந்துள்ளது என
சுட்டிக்காட்டினார். அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களில் 60 வீதமானவர்கள் விவசாயிகளும் 30 வீதமானவர்கள் மீனவர்களுமாவர்.
நாட்டின் பிரமாண்டமான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக
இடம்பெயர்ந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஜீவனோபாயத்தை இழந்துள்ளதோடு அரசால் வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட
நிவாரணப் பொருட்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றம் மே 8ம் திகதி "குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சட்ட விரோத நடவடிக்கை"
மனுதாரர்களை அவர்களது கிராமத்தில் மீளக்குடியேறச் செய்வதன் மூலம் தீர்க்கப்படும் என இறுதியாக பிரகடனம் செய்தது.
ஆயினும், அவ்வாறு செய்த போதிலும் மனுதாரர்களுக்கு நான்கு நிபந்தனைகளை விதித்தது. இராணுவம் கிராமத்தவர்களின்
அடையாளத்தையும் மற்றும் நிலத்திற்கான அவர்களது உரிமைகோரலையும் உறுதிப்படுத்துவதோடு அவர்களது விவசாய நடவடிக்கைகளிலும்
மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் ஒரு இரத்து அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
குறிப்பிடத்தக்க அடக்குமுறையான நிபந்தனை என்னவெனில், கிராமத்தவர்கள் "பிரஜைகள்
குழுவை அமைப்பதோடு எந்தவொரு ஆயுத அல்லது பயங்கரவாத நடவடிக்கையின் போதும் பாதுகாப்புப் படைகளுக்கு ஆபத்து
ஏற்படாதவாறு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்களை மீண்டும்
அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சாக்குப்போக்கை வழங்காதவாறு, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் துருப்புக்கள்
மீதான தாக்குதல்களைத் தடுக்கும் பொறுப்பு கிராமத்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள விரும்பும் 7,456 குடும்பங்களின் பட்டியல் ஒன்று
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அகதிகள் முகாம்களிலும் மற்றும் நலன்புரி நிலையங்களிலும் உள்ள இடம்பெயர்ந்த
குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி பிரேரிக்கப்பட்டுள்ள மீள் குடியேற்றத்திற்காக ஒரு பூர்வாங்க அறிக்கையை தயார் செய்து
ஜூலை 24 அன்று முன்வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க செயலாளருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்தின்
பின்னர் சில குடும்பங்கள் கடுமையான இராணுவ மேற்பார்வையின் கீழ் தமது கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளன.
எவ்வாறெனினும், வலிகாமம் கிராமத்தவர்கள் மிதக்கும் பனிக்கட்டியின் ஒரு முனை மட்டுமே.
நீதிமன்றத் தீர்ப்பின் குறுகிய பன்பானது, உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக தமது வீடுகளில் இருந்து வெளியேறத்
தள்ளப்பட்டுள்ள பத்தாயிரக்கணக்கான அகதிகள் இந்த வழக்கை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவதை சிரமமானதாக்கியுள்ளது.
அல்லது கடந்த இரு தசாப்தங்கள் பூராவும் வெளியேறத் தள்ளப்பட்ட அதிகளவிலான இடம்பெயர்ந்த நபர்களுக்கு ஏதாவதொரு
நிவாரணத்தையும் வழங்கவில்லை. மதிப்பீடுகள் அகதிகளின் எண்ணிக்கையை யாழ்ப்பாண குடாநாட்டில் 250,000 ஆகவும்
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களில் 500,000 ஆகவும் காட்டுகின்றன.
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் இருப்பதானது, தமிழ் சிறுபான்மையினருக்கு
எதிரான ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாக தீவின் யுத்தப் பிராந்தியத்தில் இலங்கை இராணுவம் செயற்படுவதை சித்திரமிட்டுக்
காட்டுகின்றது. |