World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka on the road back to civil war

இலங்கை மீண்டும் உள்நாட்டு யுத்தத்தின் பாதையில்

By K Ratnayake
5 January 2006

Back to screen version

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதத்திற்கும் குறைவான காலத்துள் இலங்கை உள்நாட்டு யுத்தத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கை பாதுகாப்பு படைகளின் பரந்த அடக்குமுறைகள், அதேபோல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய போன்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் பங்காளிகளின் சிங்களப் பேரினவாத ஆர்ப்பாட்டங்களுடன், அதிகரித்து வரும் வன்முறைகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

டிசம்பரில் மாத்திரம் சுமார் 90 உயிரிழப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்திருந்து மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் கொல்லப்பட்ட 46 இராணுவ சிப்பாய்கள், தெளிவுபடுத்தப்படாத சூழ்நிலைகளில் கொல்லப்பட்ட 10 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் தொடர்புபட்ட பல துணைப்படை உறுப்பினர்கள் அதே போல் பல அப்பாவிப் பொதுமக்களும் இதில் அடங்குவர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படும் உயிரிழப்புக்களுடன் ஜனவரி மாதத்தில் குன்றாது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த இரு ஆண்டுகள் பூராவும், விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான குழுவுக்கும் இடையில் கொலைகளும் பழிவாங்கல்களும் இடம்பெற்றுவந்துள்ள போதிலும், வன்முறைகள் பிரதானமாக கிழக்கு இலங்கையின் எல்லைக்குட்பட்டிருந்தன. தற்போது வன்முறைகள் வட இலங்கைக்கு, குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டிற்கு பரவியுள்ளதோடு ஒட்டுமொத்த யுத்தத்திற்கான முன்னோடி அறிகுறிகளாக விளங்குகின்றன.

யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ருப் ஹெளக்லன்ட், டிசம்பர் 29 அன்று எச்சரிக்கும் வகையில் பிரகடனம் செய்தார்: "சுருக்கமாக கூறினால், இந்த வன்முறைப் போக்கு தொடர அனுமதிக்கப்பட்டால், யுத்தம் வெகு தொலைவில் இருக்காது." அவர் வன்முறைகளை தீவிரப்படுத்துவதை நிறுத்துமாறு இரு சாராருக்கும் அழைப்பு விடுத்தார். இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு பலம் வாய்ந்த சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், பேச்சுக்கான அறிகுறிகளோ படுகொலைகளில் தணிவோ தென்படவில்லை.

இராணுவ மற்றும் கடற்படை சிப்பாய்களை கொலை செய்த அண்மையில் இடம்பெற்ற தொடர்ச்சியான மறைமுகத் தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகள் விடுதலைப் புலிகளா என்ற சிறிய சந்தேகம் உள்ளது. ஆனால் அதிகரித்துவரும் பதட்ட நிலைமைகளுக்கான பிரதான காரணி ஆயுதப் படைகளின் பங்களிப்பே ஆகும். ஆரம்பத்தில் இருந்தே 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தம், நோர்வே தலைமையிலான கண்காணிப்புக் குழு மற்றும் "சமாதான முன்னெடுப்புகளுக்கும்" எதிர்ப்புத் தெரிவித்த இராணுவ உயர்மட்டத்தின் சில பிரிவினர், 2003ல் சமாதான பேச்சுக்களில் குறுக்கிட்ட மற்றும் அதை தடுக்க உதவிய ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் கடல் மோதல்களை தூண்டுவதில் முன்நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்துகொண்டனர்.

இராஜபக்ஷ தெரிவானதை அடுத்து மேலும் மேலும் பலமடைந்த இராணுவம், தமிழ் மக்கள் அச்சுறுத்தவும் கிலியூட்டவும் தற்போதை அவசரகால நிலைமையின் கீழ் அதனது பரந்த நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றது. கடந்த மாதம் பூராவும் யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவமும் பொலிஸும் தொடர்ச்சியான பரந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், அப்பிரதேசத்தில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீதிகளுக்கு செல்ல அனுமதிப்பதில்லை என தெரிவிக்கின்றனர். இராணுவத்தின் வரம்புமீறல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இரு ஆர்ப்பாட்டங்கள் மீது சிப்பாய்களும் பொலிசாரும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

யாழ்ப்பாண குடாநாட்டில் கோப்பாய், இளவாலை பிரதேசங்களில் மிக அண்மையில் தேடுதல்கள் நடந்ததோடு கடந்த சனியன்று யாழ்ப்பாண நகரிலும் தேடுதல் நடத்தப்பட்டது. பல இளைஞர் யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு விடுதலை செய்யப்படுமுன் விசாரணை செய்யப்பட்டனர். திங்கழன்று, யாழ்ப்பாணத்தில் உள்ளூர் மக்களை அச்சுறுத்துவதற்காக படையினர் முகத்தை கருப்புத் துணியால் மூடிக் கட்டிக்கொண்டு ரோந்து சென்றனர்.

கடந்த சனிக்கிழமை, பாதுகாப்புப் படையினர் கொழும்பில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பிரமாண்டமான சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டிருந்தனர். இதில் 4,000 இராணுவ சிப்பாய்களும் பொலிசாரும் பங்குபற்றியிருந்தனர். சுமார் 1,000 பேர், பிரதானமாக இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு கடுமையாக விசாரிக்கப்பட்டனர். 53 பேர் அன்று முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு ஐவர் "விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" விவரிக்கிப்பட்டிருந்தனர். கொழும்பில் மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் கையாளப்பட்ட வழிமுறைகளை நினைவூட்டியது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகளில், விடுதலைப் புலிகளை தீவு பூராவும் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பதும் அடங்கும்.

எவ்வாறெனினும், இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள், இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் வெளிப்படையானதாகும். ஆயுதப் படைகள் கருணா குழு உட்பட விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல துணைப்படைகளுடன் கூட்டாக செயற்படுகின்றன. 2004ல் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த உடனேயே, கருணாவும் அவரது குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, இராணுவ இரகசிய வீடுகளில் தங்கவைக்கப்பட்டதோடு இராணுவ புலனாய்வாளர்களோடும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கில் விடுதலைப் புலிகளின் நிலைகளை பலவீனப்படுத்துவதன் பேரில், விடுதலைப் புலி உறுப்பினர்களை படுகொலை செய்வதற்கு இந்தக் குழுவுக்கு ஆயுதப்படைகள் சந்தேகத்திற்கிடமின்றி உதவின.

டிசம்பர் 24 அன்று, மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலய பூஜையின் போது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இராணுவம் தொடர்புபட்டிருக்கக் கூடும். கிழக்கு மண்ணின் சென்னன் படை என தன்னைக் கூறிக்கொள்ளும் இதற்கு முன்னர் அறிந்திராத குழு ஒன்று இந்தக் கொலையை பொறுப்பேற்றிருந்தது. "கிழக்கு மக்களையும் கிழக்கு மண்னையும் காட்டிக் கொடுத்ததற்காகவே" பரராஜசிங்கம் கொல்லப்பட்டதாக அந்தக் குழு பிரகடனம் செய்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் பரிந்துரையாளராக செயற்படுகின்றது.

இராணுவத்தின் கூட்டு நடவடிக்கைத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், "பரராஜசிங்கம் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிதாரிகளால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்," என பிரகடனப்படுத்தியிருந்தது. அரசாங்கத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு திணைக்களம் கூட இத்தகைய அறிவித்தலை விடுக்காததோடு விசாரணைக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாக அது அறிவித்தது. கடந்த வார இறுதியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில், இக்பால் அத்தாஸ் தனது "நிலவர அறிக்கையில்," இதில் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இராணுவத்துடனான நெருக்கமான தொடர்பு கொண்டவராக அறியப்பட்ட அவர், "இங்கு இரு அரசாங்கங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது," என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குறிப்பின் முன்னிலையில் இராணுவத்தின் கூற்று நகைப்புக்கிடமானதாகும். பரராஜசிங்கம் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளுக்கு சார்பானவராகும். அவரது பூதவுடல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அங்கு சமூகமளித்திருந்ததோடு பரராஜசிங்கத்திற்கு மாமனிதர் கெளரவமும் வழங்கினர். இராணுவம் மற்றும் கிழக்கில் உள்ள அதன் சொந்த ஆயுதப் பங்காளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதே விடுதலைப் புலிகள் மீது மொட்டையாக குற்றஞ்சாட்ட முயற்சித்ததன் தெளிவான குறிக்கோளாகும். பரராஜசிங்கத்தின் படுகொலை வடக்கு மற்றும் கிழக்கில் பதட்ட நிலைமைகளை மேலும் உக்கிரமடையச் செய்ததோடு, பிரதான நகரங்களில் பெரும் எதிர்ப்புக்களை தூண்டி விட்டது.

அதிகளவிலான படுகொலைகள்

படுகொலைகள் குறைவில்லாமல் தொடர்கின்றன. திங்களன்று கிழக்கு நகரான திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை மேலும் ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டது. இந்த ஐந்து மாணவர்களும் இராணுவத்தினர் மீது ஒரு கிரனேட்டை வீச முற்பட்டபோது அது தற்செயலாக வெடித்ததாலேயே உயிரிழந்தனர் என இராணுவம் போலியாக குற்றஞ்சாட்டியது. ஆயினும், மாணவர்கள் தடுத்துவைக்கப்பட்டே சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணையின் போது நேரில் கண்ட ஒரு சாட்சி நீதவான் முன்நிலையில் குறிப்பிட்டார். உடல்களில் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃவ்ஸ்டோடிர் இந்தக் கொலைகள் பற்றி விபரிக்கையில் "மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை ஒத்தது" எனத் தெரிவித்தார்.

செவ்வாயன்று, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஜெயந்தனும் இன்னுமொரு புலி உறுப்பினரும் கிளைமோர் வெடித்ததில் கொல்லப்பட்டனர். புலிகள் இந்தக் கொலைக்கு, யுத்த நிறுத்தத்திற்கு முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவி ஒரு முக்கிய தலைவர் உட்பட பல விடுதலைப் புலி அலுவலர்களை கொலை செய்த இராணுவத்தின் நெடுந்தூர விசேட பிரிவின் மீது குற்றஞ்சாட்டினர். இராணுவம் இந்தக் குற்றச்சாட்டை இன்னமும் மறுக்கவில்லை.

இராஜபக்ஷ ஜனாதிபதி ஆனவுடன் தன்னுடைய முதல் நடவடிக்கையாக, ஜெனரல் சரத் பொன்சேகாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தார். இராணுவக் கடும்போக்காளராக பெயர் பெற்ற பொன்சேகா, அரசாங்கம் புலிகள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்க விடுக்க காலதாமதம் செய்யவில்லை.

ஜனவரி முதலாம் திகதி சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய பேட்டியில், யுத்த நிறுத்தத்தை முழுவதும் திருப்பி எழுதுவதற்கு சமமான, மிகப் பெருந்தொகையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இராணுவம் விரும்புகிறது எனத் தெரிவித்தார். "விடுதலைப் புலிகள் தமக்குத் தேவையான வழியில் உடன்படிக்கையை எழுதி பெற்றுக்கொண்டுள்ளனர். அதில் கைச்சாத்திட்டதன் மூலம் நாம் பிழை செய்துவிட்டோம்," என அவர் முறைப்பாடு செய்தார். "அதற்கு பொருத்தமான சூழ்நிலை" இல்லை என கூறியதன் மூலம், விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளையும் கூட அவர் ஒதுக்கித் தள்ளினார்.

இராணுவமானது தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொண்டு ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக இயங்குவது வளர்ச்சி கண்டுவருவதற்கு பொன்சேகாவின் கருத்துக்கள் ஒரு மேலதிக அறிகுறியாகும். 20 வருடகால கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது, ஆயுதப் படைகள் தலைக்கு நூறாக பிராந்தியத்தின் ஒரு பெரும் இராணுவப் படையாக விரிவடைந்துள்ளன. சிங்கள பேரினவாதத்தால் ஆழமாக ஊக்குவிக்கப்பட்டுள்ள படைத்தரப்பு, விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு சமரசத்தையோ அல்லது தமிழ் சிறுபான்மையினருக்கான ஜனநாயக உரிமைகளில் சலுகைகள் வழங்குவதையோ எதிர்க்கின்றது. இராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் நிலையில், தம்மால் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் செயற்பட முடியும் என இராணுவ உயர்மட்டம் உணர்கின்றது.

இராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே, மீண்டும் சமாதானப் பேச்சுக்களுக்கு திரும்பக் கோரும் கணிசமானளவு அழுத்தங்களுக்கு உள்ளாகினார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உட்பட பெரும் வல்லரசுகள், இலங்கைக்கான நிதி உதவி பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளின் முன்னேற்றத்துடன் கட்டுண்டுள்ளதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் மிகவும் செயற்திறம் வாய்ந்த தலையீட்டையும் ஆதரவையும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் ஜனாதிபதியின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இராஜபக்ஷவுக்கு தனது பேரினவாத பங்காளிகளின் ஆதரவையும் பேணிக்கொள்ள வேண்டியுள்ளது. அவரது பலவீனமான சிறுபான்மை அரசாங்கம், சமாதான முன்னெடுப்புகளை கடுமையாக எதிர்க்கும் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற ஆதரவில் தங்கியிருக்கின்றது. இந்தக் கட்சிகளுடனான தேர்தல் உடன்படிக்கைகளின் ஒரு பாகமாக, சுனாமி நிவாரணங்களை கூட்டாக விநியோகிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு முடிவுகட்டவும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாயவு செய்வதை வலியுறுத்தவும் மற்றும் சமஷ்டி முறையின் அடிப்படையிலான எந்தவொரு சமாதான கொடுக்கல் வாங்கல்களையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் இராஜபக்ஷ உடன்பாடு கொண்டார். சமாதான முன்னெடுப்புகளில் நோர்வேயின் பங்களிப்புக்கும் முடிவுகட்ட ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் விரும்புகின்றன.

பெரும் வல்லரசுகளின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் அக்கறையின் பேரில், சமாதான முன்னெடுப்புகளுக்கான இராஜபக்ஷ வழங்கும் சலுகைகள் இன்றுவரை பெரும் ஒப்பனையாகவே இருந்து வந்துள்ளது. தான் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் காப்பதாகவும் மற்றும் நோர்வையே தொடர்ந்தும் மத்தியஸ்தம் வகிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் பிரகடனம் செய்துள்ளார். பேச்சுவார்த்தைகளை எங்கு நடத்துவது என்ற விடயத்திலேயே அதற்கான பிரேரணைகள் சேற்றுக்குள் மூழ்கிப் போயுள்ளன. இறுதியாக பேச்சுக்கள் இடம்பெற்றாலும், கலந்துரையாடப்பட்டது என்ன, காணப்பட்ட உடன்பாடுகள் என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்வது சிரமமானதாக இருக்கும்.

ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் கூட இராணுவத்துடன் சேர்ந்து பதட்ட நிலைமைகள் உக்கிரப்படுத்துகின்றன. அக்டோபர் 29 அன்று, ஒரு சிங்கள பேரினவாத கருவியான கிழக்கு மக்கள் அமைப்பால் திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆத்திரமூட்டல் ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி யின் பராளுமன்ற உறுப்பினர் ஜயன்த விஜேசேகரவும் பங்குபற்றியிருந்தார். அங்கு கோசமிடப்பட்ட சுலோகங்கள், "கண்காணிப்புக் குழு புலிகளுக்கு பக்கச் சார்பாக" இருப்பதாக கண்டனம் செய்ததோடு, "நாட்டைக் காட்டிக்கொடுத்த ஐ.தே.க உடன்படிக்கையை" --யுத்த நிறுத்த உடன்படிக்கை-- கிழித்தெறிய வேண்டும் எனவும் கோரின. அங்கு கூடியிருந்த மக்கள் முன் பேசிய விஜேசேகர, ஜனாதிபதி "புலிகளுக்கு" அடிபணியாததால் அவர்கள் "தேசாபிமானிகளை" கொல்கிறார்கள் என்றார்.

இனவாத அரசியல்

தீவு மீண்டும் யுத்தத்தை நோக்கி நகர்கிறது என்ற உண்மை, வெறுமனே இராஜபக்ஷ மீது மட்டுமன்றி முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றது. வெகுஜனங்களின் எந்தவொரு எரியும் சமூகத் தேவைகளையும் இட்டுநிரப்ப இலாயக்கற்றுள்ள அனைத்து பிரதான முதலாளித்துவக் கட்சிகளும், உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் தமது ஆட்சியை தூக்கி நிறுத்தவும் இனவாதப் பிளவுகளை கிளறிவிடுவதில் அணிதிரள்கின்றன. ஜனாதிபதித் தேர்தலானது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத் தவறியமை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் குறிப்பாக எண்ணெய் மற்றும் போக்குவரத்தில் விலை அதிகரிப்பு சம்பந்தமான பரந்த வெகுஜன அதிருப்தியை வெளிக்கொணர்ந்துள்ளது.

தனது பிரதான எதிரியான ரணில் விக்கிரமசிங்கவைப் போலவே, இராஜபக்ஷவும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படையாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளின் நீண்ட பட்டியலைக் கொண்டிருந்தார். இவற்றின் விளைவாக, அவர் தனது பேரினவாத பங்காளிகளின் உதவியுடன் இனவாத உணர்வுகளுக்கு எண்ணெய் வார்ப்பதோடு, அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டை யுத்தத்தின் பாதையில் இட்டுச் செல்கின்றார்.

தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் விடுதலைப் புலிகளும் இனவாதத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். 2002ல் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்லக் கோரிய பெரும் வல்லரசுகளின் நெருக்கவாரங்களுக்கு உள்ளான விடுதலைப் புலிகள், சமாதான முன்னெடுப்புகளின் மூலம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையிலேயே, விடுதலைப் புலிகள் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான தமிழ் அரசிற்கான தனது நீண்ட கால கோரிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டதோடு, ஒரு "புலி பொருளாதாரத்தை" ஸ்தாபிப்பதற்காக கொழும்பு அரசாங்கத்துடன் பங்காளியாக செயற்படுவதற்கு உடன்பட்டனர். புலி பொருளாதாரமானது உதாரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு மலிவு உழைப்புக் களமாகும்.

எவ்வாறெனினும், 2003 ஏப்பிரலில் சமாதானப் பேச்சுக்கள் முறிந்து போனதோடு இன்னமும் தள்ளுபடி செய்யப்பட்ட வண்ணமே உள்ளன. இராஜபக்ஷவைப் போலவே, விடுதலைப் புலிகளின் தலைமைத்துவமும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தவறியதாலும் மற்றும் ஜனநாயக விரோத வழிமுறையிலான ஆளுமையாலும் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்புக்கும் பகைமைக்கும் முகங்கொடுக்கின்றது. அது சிங்கள விரோத உணர்வுகளை கிளறுவதன் மூலமும் இராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதன் ஊடாக தன்னை தமிழ் மக்களின் பாதுகாவலனாக உருவாக்கிக் கொள்வதன் மூலமும் பிரதிபலிக்கின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக, கத்தோலிக்க தேவாலய தலைவர்களுடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வன், தமது தலைமைத்துவம் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை குறிகாட்டினார். "கடந்த மூன்று வருட சமாதான காலத்தில் வடகிழக்கில் வழமைநிலையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் ஒழுங்காக நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தியும் சோர்வுமடைந்துள்ளனர்," என அவர் பிரகடனம் செய்தார். ஆயினும், தமிழ்செல்வன் அறிந்துள்ளதைப்போல், அதிருப்தி வெறுமனே அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி விடுதலைப் புலிகள் மீதுமேயாகும்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் வேட்பாளர் விஜேடயஸும், மீண்டும் யுத்தத்தை நோக்கி சரிந்து செல்வது பற்றி மீண்டும் மீண்டும் எச்சரித்தனர். 20 வருடகால இரத்தக்களரி மோதலை ஒரு முற்போக்கான வழியில் தீர்ப்பதில் பிறப்பிலேயே இலாயக்கற்றுள்ள ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவிலிருந்தும் உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியில் பிளவுற வேண்டும் என டயஸ் வலியுறுத்தினார். யுத்தத்திற்கு தனது சொந்த வர்க்கத் தீர்வை அபிவிருத்தி செய்யவும், அனைவரது சமூகத் தேவைகளையும் மற்றும் ஜனநாக அபிலாஷைகளையும் அடைவதற்காக சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் கட்டியெழுப்பவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்சியெழுப்ப சோ.ச.க அழைப்புவிடுத்தது.

தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலுமான பரந்த சோசலிச மாற்றத்திற்கும் மற்றும் இலங்கையில் ஸ்ரீலங்கா ஈழம் சோசலிச குடியரசிற்காகவும் போராடுவதன் ஒரு பாகமாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்க சோ.ச.க போராடுகிறது. அனைத்து வகையிலுமான வேறுபாடுகளுக்கு முடிவுகட்டவும் மற்றும் அனைவரதும் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்கவும் ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்காக, வெளிப்படையாகவும் ஜனநாயக ரீதியிலும் தேர்வுசெய்யப்பட்ட ஒரு நேர்மையான அரசியலமைப்பு சபையை உருவாக்க சோ.ச.க அழைப்பு விடுக்கின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவது என்பது மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்குவதை தவிர்ப்பதற்கான ஒரு அத்தியாவசியமான விடயமாக உள்ளது என்பதை அண்மைக் கால சம்பவங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved