:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
Slovenia: Protests against government
reforms
ஸ்லோவேனியா: அரசாங்க சீர்திருத்தங்களுக்கு எதிராக கண்டனங்கள்
By Markus Salzmann
15 December 2005
Back to screen version
நாட்டின் சமூக பாதுகாப்பு முறையில் பாரியளவிற்கு வெட்டிற்கான அரசாங்க திட்டங்களுக்கு
எதிராக நவம்பர் 26இல் ஸ்லோவேனியாவின் தலைநகரான லுஜூப்ஜானாவின் தெருக்களில் கண்டனக்காரர்கள் பேரணி நடத்தினார்கள்.
இது 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துக் கொண்ட முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து அந்தக் குடியரசு
சுதந்திரம் பெற்றதற்கு பின்னரான மிகப் பெரிய பேரணியாகும்.
கண்டனங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் மிகக்குறைந்த அளவிற்கே மக்கள் பங்கெடுப்பார்கள்
என்று எதிர்பார்த்தனர். உறையும் காலநிலையிலும் இடைவிடாத பனிப்பொழிவிற்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நாடெங்கிலும் இருந்து தலைநகரில் திரண்டனர்.
பருவநிலை காரணமாக கண்டனக்காரர்களை ஏற்றிக் கொண்டு வந்த சில பஸ்கள் தாமதமாக வந்தன.
''சமூகநலன்புரி அரசு சலுகைகளை நிலை நாட்டுவதற்காக'' என்ற முழக்கத்தின் கீழ் அந்தப்
பேரணியை நடத்த தொழிற்சங்கங்கள் ஓய்வூதியம் பெறுவோருக்கான அமைப்புக்கள் மற்றும் மாணவர் குழுக்கள் அழைப்பு
விடுத்தன. இந்த கண்டனம், பிரதமர் ஜானேஸ் ஜான்ஷாவின் வலதுசாரி அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட பொருளாதார
சீர்திருத்தங்களுக்கு எதிரான நோக்கத்தை கொண்டிருந்தது.
சென்ற ஆண்டு அக்டோபரில் தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஸ்லோவேனியாவின்
ஜனநாயகக் கட்சி (SDS)
மக்கள் கட்சி (SLS)
மற்றும் புதிய ஸ்லோவேனிய கட்சி (NSI)
ஆகிய கட்சிகள் அடங்கிய ஒரு பழைமைவாத கூட்டணிக்கு ஜான்ஷா தலைமை ஏற்று வருகிறார். என்றாலும் இந்தக் கூட்டணி
நாடாளுமன்றத்தில் ஒரு பாதுகாப்பான பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை மற்றும் முந்தைய அரசாங்கத்திலும் இடம் பெற்றிருந்த
ஓய்வூதியக்காரர்கள் கட்சியான DeSus
இன் ஆதரவை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சீர்திருத்தங்கள் தொடர்பாக
DeSus இற்குள் வேறுபாடுகள் நிலவுகின்ற காரணத்தினால்
நாடாளுமன்றத்தில் எப்போதுமே சட்டத்தை இயற்றுவதில் அக்கட்சியை நம்பியிருக்க முடியாது. கடந்த காலத்தில்
அரசாங்கம் ஒரு பெரும்பான்மையை திரட்ட முடியாத நேரத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு
வெளியில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்லோவேனியன் தேசிய கட்சியுடன் (SNS)
இணைந்து மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு உதவினர். ஸ்லோவேனியன் தேசியக் கட்சி பகிரங்கமாக தேசியவாத
மற்றும் பாசிச நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2004 அக்டோபரில் நடைபெற்ற கடந்த தேர்தல்களில் அது பதிவான
வாக்குகளில் 6 சதவீதத்திற்கு மேல் பெற்று அதன் மூலம் நாடாளுமன்றத்தில் நுழைந்தது.
இந்தத் தேர்தல்களில் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்காரர்களான அன்ரன் ரோப்
தலைமையிலான மத்திய-இடதுசாரி அரசாங்கத்தை அதன் நவீன தாராளவாத கொள்கைகளுக்காக தண்டித்தனர். அந்தக்
கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும்
வடிவமைக்கப்பட்டதாகும். ராப்பின் ஆட்சியின் கீழ் கிழக்கு ஐரோப்பிய தரத்தில் கணிசமாக இருந்த சமூக பாதுகாப்பு
முறை மிகக் கடுமையாக வெட்டப்பட்டு மற்றும் பொது சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டன.
பதவியேற்றதும் ஜன்ஷா ஸ்லோவேனிய மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலை அதை விட
அதிகமாக செயல்படுத்த ஏற்பாடு செய்தார். அடுத்த ஆண்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவரது சீர்திருத்த திட்டங்களில்
70 நடவடிக்கைகள் நாட்டின் ''வர்த்தக சூழ்நிலைகளை'' மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த
சீர்திருத்தங்களின் மையமாக அமைந்திருப்பது ஒரே அளவிலான வருமானவரி (flat
income tax rate) விகிதத்தை 20 சதவீதம் அறிமுகப்படுத்துவதும்
சமூக சேவைகளை இல்லாதொழிப்பதுமாகும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர்களை பதவியிலிருந்து நீக்குவதும் எளிதாகி விடும்.
உணவு மற்றும் பயண உதவித்தொகை நீக்கப்படும். தற்போது 100 சதவீதமும் வழங்கப்பட்டு வரும் நோய்க்கால
விடுமுறைக்கு ஊதியத்தில் 70 சதவீதம் தான் கிடைக்கும். இலவச தொழிற்பயிற்சி கல்வியையும் அரசாங்கம் இல்லாததாக்க
விரும்புகிறது. மேல் கல்விக் கட்டணம் செலுத்துவதுடன் மாணவர்கள் பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் இழக்க
வேண்டியிருக்கும். சுகாதார சேவையும் தாக்குலில் உள்ளது அரசு மருத்துவமனைகள் மற்றம் கிளினிக்ஸ் தனியார்
மயமாக்கப்படுகின்றன மற்றும் பொது சுகாதார சேவையில் மேலும் வெட்டுக்களுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஒரே அளவிலான வரி குறைந்த வருமானம் பெறுகின்ற ஊழியர்களுக்கு பிரதானமாக
பாதிப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில் ஒரு சிறிய செல்வந்த தட்டினரின் பைகளில் கூடுதலாக வருமானம் பெருகும்.
இந்த நடவடிக்கையால் பொது மக்களில் பரந்த தட்டினர்கள் மிக வேகமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு விடுவர் என்று
ஸ்லோவேனிய தொழிற்சங்கங்கள் எச்சரித்து வருகின்றன.
சீர்திருத்தங்களால் 70% மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவிற்கு வீழ்ச்சியடையும்
என்று ஸ்லோவேனிய தொழிற்சங்க அமைப்பான ZSSS
தலைவர் டூஷான் செமோலிக் குறிப்பிட்டுள்ளார். ஏறத்தாழ
250,000
ஓய்வூதியக்காரர்கள் தற்போது மாதம் 420 அல்லது அதற்கும் குறைந்த யூரோக்களை வருமானமாக பெறுகின்ற தங்களது
நடப்பு வாழ்க்கைத் தரத்தை சமாளிப்பதற்கு மேலும் 200 யூரோக்கள் தேவைப்படும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன.
அண்மை ஆண்டுகளில் மின்சாரம், அஞ்சல், தொலைபேசி, மற்றும் அத்தியாவசியமான
மளிகைப் பொருட்களில் அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பின்னர் விலைவாசி
உச்சகட்டத்திற்கு மேல் சென்று விட்டது. அதே நேரத்தில் ஊதியம் மற்றும் சம்பளங்கள் முடங்கிக்கிடக்கின்றன.
சமூக சேவைகள் வெட்டு மற்றும் வரி விதிப்பு சீர்திருத்தங்களோடு அரசாங்கம்
மிச்சமிருக்கின்ற பொது சேவைகளை முழுமையாக தனியார்மயமாக்கி விடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு
வருகிறது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் பாதி பொது சேவைகளாலும் பெருநிறுவனங்களாலும்
கிடைக்கிறது. உலோகத் தொழில்துறை இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதானங்களில் முக்கியமான ஒன்றாகும்.
தொழிற்துறையில் பெரும்பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவருவதால்
ஒப்புநோக்கும்போது மக்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது மற்றும் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைவாக
காணப்பட்டது. என்றாலும் நாட்டின் ஆளும் செல்வந்தத் தட்டினர் தங்களது சொந்த செல்வம் குவிவதற்கு இது ஒரு ஏற்றுக்
கொள்ள முடியாத கட்டுப்பாடு என்று கருதினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் சீர்திருத்த அமைச்சகத்தின்
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோஸ் டாமிஜான் எந்த வகையான கட்டுப்பாடு நிலவினாலும் அது
பொருளாதாரத்திற்கு ''ஆரோக்கியமற்றது'' என்று வர்ணிக்கிறார் மற்றும் அடுத்த ஆண்டு ஒருதொகை
தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க ஆலோசனை கூறி வருகிறார். இதனுடைய முடிவு பெருமளவில் வேலையிழப்பிலும்
பெருமளவு ஊதிய வெட்டிலுமே போய் முடியும்.
பழைமைவாத அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைதிட்டத்தை மேற்கு ஐரோப்பிய அரசியல்
மற்றும் பொருளாதார வட்டாரங்கள் வரவேற்றுள்ளன. இந்த பால்கன் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்து
ஓராண்டிற்கு பின்னால் ஸ்லோவேனியா மீது பிரஸ்சல்ஸ் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை அதிகரித்து
வருகிறது. எஸ்தோனியா மற்றும் லுத்வேனியாவுடன் சேர்ந்த ஸ்லோவேனியா 2007ல் யூரோ நாணயத்தை
அறிமுகப்படுத்தவிருக்கிறது.
என்றாலும் 2004ல் இந்த நாட்டின் நாணயமான ரொலர் (tolar)
யூரோவுடன் பிணைக்கப்பட்டு ஐரோப்பிய நாணய மாற்று அமைப்பில் சேர்ந்த பின்னர் ஏற்கனவே பிரச்சனைகள்
தலைகாட்டியுள்ளன. யூரோவோடு ஒப்பிடும்போது உண்மையான ரொலரின் பெறுமதி காரணமாக வெளிநாட்டு வர்த்தகம்
கடுமையாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறை கணிசமான அளவிற்கு உயரும் நிலை உருவானது.
ஐரோப்பிய மத்திய வங்கி சென்ற ஆண்டு இறுதியில் வெளியிட்ட நாணய ஒருங்கிணைப்பு
அறிக்கை யூரோவை அறிமுகப்படுத்துவதற்கு ஸ்லோவேனியா இன்னும் பக்குவப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. பிரஸ்சல்ஸ்
வரவுசெலவுதிட்டத்தில் துண்டு விழும் தொகையை சரிகட்டுவதற்கு மேலும் செலவின வெட்டுக்களை கொண்டு வர வேண்டும்
என்றும் ஒரு ''மிதமான'' ஊதியக் கொள்கை வேண்டும் என்றும் சுகாதாரம் மற்றும் ஓய்வூதியத்தில் பொருளாதார
கட்டுமான அமைப்புக்களில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் (அதாவது தனியார் முதலீட்டை
அறிமுகப்படுத்தப்படவேண்டும்) கோரி வருகிறது. ஒரு தீவிரமான தாராளமயமாக்கலும் தொழிற்துறையை
தனியார்மயமாக்க வேண்டும் என்றும் அதேபோன்று விவசாய மானியங்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று அது மேலும்
கோரி வருகிறது.
இதர புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு அரசுகளும் கூட கணிசமான அழுத்தங்களை
கொடுத்து வருகின்றன. பால்டிக் அரசுகளில் செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியாவில் மேற்கு நாடுகளில் முதலீட்டை
ஈர்ப்பதற்காக அண்மை ஆண்டுகளில் அதேபோன்ற சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல நிறுவனங்கள்
ஸ்லோவேனியாவை விட்டு விட்டு இந்த நாடுகளில் முதலீடு செய்திருக்கின்றன அவை வரிகளை குறைத்திருக்கின்றன மற்றும்
தொழிலாளர்களுக்கான செலவினங்களை மலிவாக்கியிருக்கின்றன.
தாராளவாத ஜனநாயகவாதிகளும் சமூக ஜனநாயகவாதிகளும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி
வரிசையில் மிகப் பெருமளவில் இடம் பெற்றிருந்தாலும் அரசாங்கத்துடன் அவர்களுக்கு தந்திரோபாய வேறுபாடுகள் நிலவுகின்றன.
அதிகாரபூர்வமாக ஒரே அளவிலான வரியை அவர்கள் புறக்கணித்த போதிலும் தீவிரமான செலவின வெட்டு நடவடிக்கைகளை
ஆதரிக்கவே செய்கின்றன.
ஒரு சில குறுகியகால இடைவெளிகள் நீங்கலாக யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியின்
இளைஞர் அமைப்பிலிருந்து உருவான தாராளவாத ஜனநாயக கட்சி 1992 முதல் நாட்டை ஆண்டு வருகிறது. அவர்களது
ஆரம்பகட்ட திட்டமான தேசியவாத பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரிய ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின்
அழுத்தங்களுக்கு பெருமளவில் இலக்காகின. இந்த அழுத்தங்கள் ராப் கட்சி தலைமையையும் அரசாங்கத் தலைமையையும்,
அரசாங்கத் தலைமையையும் ஏற்ற பின்னர் ஒரு உயர்ந்த புள்ளியை எட்டியது மற்றும் வலதுசாரிப் பக்கம் தீவிர மாறியது
அதனால் ஜான்ஷாவின் கீழ் வலதுசாரி சக்திகள் வெற்றிபெறுவதற்கு வழி ஏற்பட்டது.
தொழிற்சங்கங்களும் கூட இந்தத் தாக்குதல்களை எதிர்க்கவில்லை. பல தொழிற்சங்கங்கள்
வலதுசாரி அரசாங்கத்திற்கு பின்னணியாக செயல்பட்டு அண்மையில் நடைபெற்ற பேரணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டது.
கண்டனப் பேரணிகளுக்கு அழைப்பு விடுத்த பல தொழிற்சங்க பிரதிநிதிகள் அடிப்படையிலேயே அரசாங்கத்தின்
நோக்கங்களோடு உடன்படுகின்றனர். பல தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசாங்கம் தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி
சீர்திருத்தங்களை இணைந்து செயல்படுத்த வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சீர்திருத்தங்களின்
தீவிரப்போக்கு அடிமட்டத்தில் ஒரு தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கிவிடுமானால் அது தொழிற்சங்கங்களின்
கட்டுப்பாட்டிலிருந்து மீறிச் சென்று விடுமென்று இப்பிரிவினர் அஞ்சுகின்றனர்.
சுதந்திரம் பெற்றது முதல் அரசியல்வாதிகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும்
தொழிற்சங்கங்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பு நிலவியது. நாட்டிலுள்ள தொழிலாளர்களில் பாதிப்பேர்
தொழிற்சங்கங்களில் இடம் பெற்றிருக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் தொழிற்சாலைகள் தனியார்மயமாக்கல்
நடவடிக்கைகளின் போது தொழிற்சங்கங்கள் தீர்க்கமான பங்களிப்பு செய்தன. ஸ்லோவேனியா பொருளாதாரம்
தனியாருக்கு திறந்துவிடப்பட்டபோது எழுந்த எல்லா வகையான எதிர்ப்புக்களையும் தொழிற்சங்கங்கள் ஒடுக்கின.
தொழிற்சங்க கூட்டமைப்பான ZSSS
தன்னை தனியார்மயமாக்கல் நடைமுறையில் ஒரு தீவிர பங்காளி என்று வர்ணித்துக்
கொண்டது. அந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையவதன் தீவிர சமூக விளைவுகளை கருதிப்பாராமல்
ஸ்லோவேனியாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் அதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லோவேனியாவை போல் இதர கிழக்கு ஐரோப்பிய அரசுகளிலும் வாழ்க்கைத் தரத்தின்
மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் கண்டனப் பேரணிகளுக்கு இட்டுச் செல்கின்றன. லுஜூபிஜானாவில் கண்டனப்
பேரணிகள் நடைபெற்ற அதே வாரக் கடைசியில் செக்-குடியரசின் தலைநகரான பிராக்கில் நிறுவனங்கள் ஊழியர்களை
எளிதாக வேலைநீக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக 25,000 மக்கள் திரண்டு கண்டனப் பேரணி நடத்தினர். |