World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

The gas conflict between Russia and Ukraine

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையே எரிவாயு மோதல்

By Peter Schwarz
5 January 2006

Back to screen version

இந்த வாரம் மூன்று நாட்கள் உக்ரேனுக்கு ரஷ்யாவின் எரிவாயு வழங்குவது நிறுத்தப்பட்டது முன்னாள் சோவியத் ஒன்றியத்தை தொடர்ந்து வந்த இரண்டு அரசுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நீறுபூத்த நெருப்பாக இருந்த மோதல் உச்சிக்கு வந்திருக்கிறது.

ஆயிரம் கன மீட்டர் (tcm) எரிவாயுவிற்கு 230 டாலர்கள் என்று காஸ்பிரோமினால் கோரப்பட்ட விலையை வழங்க மறுத்த பின்னர் உக்ரைனுக்கு எரிவாயு அளிப்பினை ஜனவரி 1-ல் ரஷ்ய அரசு நிறுவனமான காஸ்பிரோம் நிறுத்தியது. அதுவரை உக்ரைன் ரஷ்யாவின் எரிவாயுவை ஒரு tcm-ற்கு 50 டாலர் சிறப்பு விலையில் பெற்று வந்தது-----இது உலக விலையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் சற்று அதிகமானதாகும்.

புதன் கிழமை காலை காஸ்பிரோம் உக்ரைனிய எரிவாயு நிறுவனமான நாப்டோகாசுடன் ஒரு பேரம் செய்து கொள்ள உடன்பட்டது. ரோசுகிரனேகிரோவின் (காஸ்பிரோம் மற்றும் ஆஸ்திரிய வங்கியின் ஒரு துணைநிறுவனம்) மூன்றாம் தரப்பு வழியாய் உலக சந்தை விலையான 230 டாலர்களில் உக்ரைனுக்கு எரிவாயுவை காஸ்பிரோம் எதிர்காலத்தில் விற்கும், அது உக்ரைனுக்கு tcm-மிற்கு 95 டாலர்களுக்கு வழங்குவதற்கு உறுதி செய்து தரும். இந்த விலை வேறுபாடு மத்திய ஆசியாவிலிருந்து கிடைக்கின்ற மலிவு விலை எரிவாயுவை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையை கொண்டு ரோசுகிரனேகிரோவினால் ஈடுகட்டப்படும்.

சென்ற ஆண்டு உக்ரைன் தனது எரிவாயு தேவையில் கால் பகுதியை ரஷ்ய வளங்களிலிருந்து பெற்றது 50சதவீதம் துர்க்மேனிஸ்தானிலிருந்தும் மீதி தனது சொந்த உற்பத்தி நிலையங்களிலிருந்தும் பெற்றது. ஆயினும் கடைசி பேரத்தின்படி, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு அளவு தற்போது 23 பில்லியன் அளவிலிருந்து 17 பில்லியன் கன மீட்டர்களாக குறையும்.

அதே நேரத்தில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவின் ஏற்றுமதிக்கான மிகவும் முக்கியமான வழி உக்ரைன் வழியாக குறுக்காக செல்கிறது. ஒரே மாற்று குழாய்வழிப்பாதை பேலாரஸ் மற்றும் போலந்து வழியாகச் செல்கிறது. அண்மையில் உடன்பாடு காணப்பட்ட, பால்டிக் கடல்வழியாக ரஷ்யாவை நேரடியாக ஜேர்மனியுடன் இணைக்கின்ற குழாய் வழிப்பாதை 2010 வரை பூர்த்தியடையாது.

ரஷ்யாவிற்கும்-உக்ரைனுக்கும் இடையில் நடைபெற்ற எரிவாயு மோதல், ரஷ்ய எரிவாயு கிணறுகளிலிருந்து தங்களது மொத்த இறக்குமதிகளில் 66 சதவீதத்தை பெற்று வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குரிய எரிவாயு அளிப்பீட்டை சிறிதளவு பாதித்தது. ஜேர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு இருப்புக்களை வைத்திருக்கின்றன அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிக நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தனது இயற்கை எரிவாயு தேவைகளில் 42 சதவீதத்தையும் எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தையும் ரஷ்யாவிலிருந்து பெற்று வரும் போலந்து இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருப்புக்களை வைத்திருக்கிறது.

திரைமறைவில், ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசாங்கங்கள் ஒரு உடன்படிக்கைக்கு வர சக்திவாய்ந்த நெருக்குதலை கொடுக்க முயற்சித்தது. ஆஸ்திரிய தொடர்புகள் உள்ள ஒரு நிறுவனம் தலையிட்டிருப்பது (ஆஸ்திரியா இப்போதுதான் EU-வின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறது) ஐரோப்பிய ஒன்றியம் கடைசியாக உருவாக்கப்பட்டுள்ள பேரத்தில் ஒரு கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் ரஷ்யாவின் எரிவாயுவிற்கு உடன்பாடு காணப்பட்டுள்ள புதிய விலைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. எதிர் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் எல்லை வழியாக வரும் எரிவாயுவிற்கு 1.09 டாலருக்கு பதிலாக இனி உக்ரைனுக்கு 1.60 டாலர்கள் செலுத்த வேண்டும்.

மூன்று நாட்கள் நடைபெற்ற தகராறின்பொழுது மாஸ்கோவிற்கும் கீவிற்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்தன. சட்டவிரோதமாக ஏராளமான அளவில் எரிவாயுவை உக்ரைன் தூம்புக்குழாய் வழியாக (siphoning) ஒதுக்கிக்கொள்வதாக காஸ்பிரோம் குற்றம் சாட்டியது. ஜனவரி 1ம் தேதி மட்டுமே 25 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 100 மில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு அனுமதி எதுவும் பெறாமல் வேறு இடத்திற்கு திருப்பி விடப்பட்டது. ``நாங்கள் ஒரு மறுப்பதற்கு இயலாத திருட்டு வழக்கு சம்மந்தமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்`` என்று காஸ்பிரோம் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் மெட்வேதேவ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தட்பவெப்ப நிலையின் கீழ் ''ரஷ்யாவின் எரிவாயுவை ஒரு போக்குவரத்து கட்டணத்தில் பயன்படுத்தப் போவதாக'' அது அச்சுறுத்திய அதேவேளை, இந்த கண்டனத்தை உக்ரேன் அரசாங்கம் சரிசமமான விறு விறுப்போடு புறக்கணித்தது.

ரஷ்யாவின் எல்லை வழியாக துர்க்மேனிஸ்தான் குழாய் இணைப்பிலிருந்து உக்ரைன் எரிவாயு அளிப்பு செல்வதை தடுக்கப் போவதாக காஸ்பிரோம் அறிவித்தது. உக்ரைன் ஊடகங்களை பொறுத்தவரை இந்தத் தகராறில் கிரம்ளின் அரசியல் நோக்கங்களை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டின மற்றும் சென்ற ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்ட விக்டர் ஜானுகோவிச்சின் முகாமை ஆதரிக்க முயன்று வருவதாகவும் குறிப்பிட்டன, அவர் மார்ச் மாதம் நாடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடவிருக்கிறார். அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனின் தொழிற்துறையை திவாலில் தள்ள நோக்கம் கொண்டிருப்பதாகவும் முக்கிய தொழில்களையும் உக்ரேனிய எண்ணெய்க்குழாய் பாதையையும் தனக்கு சாதகமான விலைகளில் வாங்கிக் கொள்ள நோக்கம் கொண்டிருப்பதாகவும் செய்தி ஊடகங்கள் அறிவித்தன.

உக்ரைனின் செபாஸ்டோபோல் துறைமுகத்தில் அவற்றின் தளமான ரஷ்ய கருங்கடல் கப்பற்படையை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் உக்ரைன் நிர்வாகம் எழுப்பியுள்ளது அந்த நகர்வு சந்தேகத்திற்கு இடமின்றி மாஸ்கோவிலிருந்து கடுமையான எதிர்ப்பை தூண்டிவிடும். எரிவாயு மோதல்களின் சச்சரவுகள் தீவிரமடையுமானால் ரஷ்ய புலம்பெயர்ந்தோர் ஒரு உயர் விகிதத்தில் வாழ்கின்ற மற்றும் ரஷ்யாவுடன் வலுவான பொருளாதார தொடர்புகளை வைத்திருக்கும் கிழக்கு உக்ரைனுக்கும் மேற்கு உக்ரைனுக்கும் இடையில் விரோதப்போக்கு மீண்டும் எரியூட்டச்செய்வதாக அமையும்.

மோதல்களின் அடிப்படைக்காரணங்கள்

தற்போதைய ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படக் கூடியது. ஆனால் அவ்வளவு காலத்திற்கு அது நீடிக்குமா என்பது அதிக சந்தேகத்திற்குரியது. வளர்ந்து வருகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்களின் ஒரு அறிகுறிதான் தான் எரிவாயு மோதல்.

இந்த மோதலின் அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்வதற்கு 15 ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டியது அவசியமாகும். அந்த நேரத்தில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் பேலாரஸ் ஜனாதிபதிகள் சோவியத் ஒன்றியத்தை கலைப்பது மற்றும் சுதந்திர அரசுகளின் ஒரு சமுதாயத்தை மீண்டும் உருவாக்குவது என்று மின்ஸ்க்கில் முடிவு செய்தனர். இந்த நடவடிக்கையை போரிஸ் எல்சின், லியோனிட் கிராவ்சக் மற்றும் ஸ்டானிஸ்லாவ் சுசேவிச் ஆகியோர் எந்தவிதமான ஜனநாயக அங்கீகாரமும் இல்லாமலும் பொருளாதார மற்றும் அரசியல் விளைபயன்களை பற்றிய எந்தவிதமான விவாதமும் இல்லாமலும் எடுத்தனர். அவர்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலிருந்து பெரும்பாலும் உருவாகிய ஒரு சிறிய ஆளும் தட்டினரின் நலனுக்காக செயல்பட்டனர் மற்றும் அது அடுத்து வந்த ஆண்டுகளின் பொழுது தான் பெரும் செல்வம் திரட்டுவதற்கு சோவியத் அரசு சொத்துடமையை சூறையாடத் தொடங்கியது.

அரசு சொத்துடமையை தனியார் உடைமையாக்குவதற்கும் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் திரும்ப இணைப்பதற்கும் சோவியத் ஒன்றியத்தால் ஸ்தாபிக்கப்பட்ட முற்போக்கான பொருளாதார மற்றும் சமூக சாதனைகளின் வழியில் உள்ள அனைத்தும் சிதைக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் விட்டன. ரஷ்யா மற்றும் உக்ரைனை பொறுத்தவரை சோவியத் ஒன்றியம் சிதைய தொடங்கியதற்கு முன்னரே நீண்டகாலமாக இருந்த சிக்கலான பொருளாதார உறவுகள் நொருங்கி விட்டன இதன் விளைபயன்கள் பொது மக்களுக்கு பேரழிவுகரமாக இருந்தன.

பால்கன்களை போல் அங்கு யூகோஸ்லாவியா சிதைக்கப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டு இனவாத மோதல்கள் ஊக்குவிக்கப்பட்டன ரஷ்யாவிலும் உக்ரேனிலும் மீண்டும் உருவாகிய புதிய ஆளும் செல்வந்தத் தட்டினர் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களிலிருந்து திசை திருப்புதலை உருவாக்குவதற்காக தேசியவாதத்தை ஏற்பாடு செய்தனர். இதனுடைய விளைவாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவுகள் கணிசமான அளவிற்கு மோசமடைந்தன.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர் இநத் உறவுகளில் தீவிரமான பதட்டங்கள் ஏற்பட்டன. ரஷ்யாவின் கருங்கடல் கப்பற்படை மற்றும் கிரிமியாவின் தேசிய அந்தஸ்து தொடர்பான கருத்து வேறுபாடு 1997-ல் தான் தீர்த்து வைக்கப்பட்டது. ரஷ்யாவின் எரிவாயு அளிப்பீடுகள் தொடர்பாக திரும்பத் திரும்ப தகராறுகளும் நிலவின. வழங்கப்படாத பாக்கிகள் தொடர்பாக 1990-களில் பல சந்தர்ப்பங்களில் குழாய் இணைப்புக்களில் சப்ளை நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் பல உக்ரேனிய ஒருசிலராட்சியாளர்கள் சட்டவிரோதமாக குழாய் இணைப்பில் துளையிட்டு எரிவாயுவை பெருமளவில் விற்றும் அவர்கள் பிருமாண்டமான அளவில் செல்வத்தை குவித்தனர். இத்தகைய கொள்ளை இலாபக்காரர்களில் ஒருவரான ஜூலியா திமோசென்கோ உக்ரைனின் ``ஆரஞ்சு புரட்சி`` என்றழைக்கப்படுவதன் ஒரு தலைவர், எரிவாயு மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் மில்லியன் கணக்கில் சம்பாதித்திருந்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கணிசமான ஆதரவுடன் ``ஆரஞ்சு புரட்சி'' இறுதியாக உக்ரைன் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது அது தனது எதிர்காலம் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து முறித்துக்கொள்வதிலும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி திரும்புதலிலும் தனது எதிர்காலத்தைக் கண்டது.

இதற்கிடையில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் சுற்றி வளைக்கப்பட்டதிருந்து அதிகரிக்கும் அழுத்தத்தின் கீழ் வந்திருக்கிறது. உக்ரைனுக்கு அதே பாணியில் சென்ற ஆண்டு ஜோர்ஜியாவில் ஒரு அமெரிக்க-சார்பு அரசாங்கமும் பதவிக்கு வந்தது. முன்னாள் வார்சோ ஒப்பந்த அரசுகளில் மிகப் பெரும்பாலானவை ஏற்கனவே நேட்டோவுடன் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டன, அதே நேரத்தில் மத்திய ஆசியாவில் தளங்களை ஸ்தாபிப்பதற்கு அமெரிக்கா ஆப்கனிஸ்தானுக்கு எதிராக நடத்திய போரை பயன்படுத்திக்கொண்டது. பாக்கூ-சேஹன் குாழய் வழிப்பாதை திறக்கப்பட்டதை தொடர்ந்து காஸ்பியன் பிராந்தியத்திலிருந்து எரிசக்தி ஏற்றுமதி தொடர்பாக ரஷ்யா தனது ஏகபோகத்தை இழந்துவிட்டது.

இப்படி சுற்றி வளைக்கப்பட்டதை எதிர்ப்பதற்கு ஜனாதிபதி புட்டின் தலைமையிலான ரஷ்ய ஆளும் செல்வந்த தட்டினர் நாட்டின் எரிசக்தி வளங்களை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முயன்று வருகின்றனர். உக்ரைனுடன் மூன்று பால்டிக் அரசுகளும் மற்றும் மோல்டாவியா, ஜோர்ஜியா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா குடியரசுகளும் ஜனவரியிலிருந்து எரிவாயுவிற்கு கூடுதல் விலைகளை தரவிருக்கின்றன --- உக்ரைன் மீது சுமத்தப்பட்டதைவிட இந்த விலை உயர்வு கடுமை குறைவானதுதான். மோல்டாவியாவிற்கும் அதேபோல் உக்ரைனுக்கும் எரிவாயு அளிப்புகள் துண்டிக்கப்பட்டன.

பேலாரஸ் மட்டுமே இதில் விதிவிலக்கு அது ரஷ்யாவோடு நெருக்கமான நேச நாடு மற்றும் அது தொடர்ந்து குறைந்த விலையான 48 டாலருக்கு சப்ளையை பெற்று வருகிறது. என்றாலும், இதற்கு கைமாறாக, அந்தக் குடியரசு தனது ஒட்டுமொத்த குழாய் வழிப்பாதை வலைபின்னல் முழுவதையும் காஸ்பிரோம் பொறுப்பில் ஒப்படைக்க சம்மதிக்க வேண்டி வந்தது.

தாம் கோரும் விலை உயர்வு பாதிக்கப்பட்ட அரசாங்கங்களின் சுதந்திர சந்தை பொருளாதாரக் கொள்கைகளுடன் முற்றிலும் பொருத்தமுடையது என்று கிரெம்ளினும் காஸ்பிரோமும் எடுத்துக்காட்ட வேண்டும். உலக வர்த்தக அமைப்பில் (WTO) உறுப்பினராவதற்கு ஒரு உலக சந்தை மட்டத்திற்கு எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்று நிபந்தனையை WTO விதித்துள்ளது, எந்த சிறப்பு விலைகளும் போட்டியிடும் கொள்கைகளை மீறுவதாக ஆகும் என்று கருதுகிறது. என்றாலும், அது, ஒரு படிப்படியான உயர்வை ஆதரிக்கிறது. "இந்த நாடுகள் மத்திய காலத்தில் உயர்ந்து வரும் எரிசக்தி சந்தை விலைகளை செலுத்தியாகவேண்டும், அப்போதுதான் அவர்களது பொருளாதாரங்கள் திறமையான வழியில் செல்கின்றன என்பதை எடுத்துக்காட்ட முடியும்" என்று WTO இயக்குனர் பாஸ்கல் லாமி குறிப்பிட்டார்.

எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மூலோபாய முக்கியத்துவம்

பூமியில் கிடைக்கும் புதைபடிவ எரிசக்திகளின் வளங்கள் குறைந்து கொண்டிருப்பதாலும் மற்றும் இந்தியா மற்றும் சீனா போன்ற மிக விரைவாக தொழில்துறைமயமாகிவரும் நாடுகளில் எரிபொருள் தேவைகள் அதிகரித்துவருவதாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளின் பிரச்சனை இருபத்தோராம் நூற்றாண்டின் ஒரே மூலோபாய பிரச்சனையாக அதிகரித்தளவில் வளர்ச்சியுற்று வருகிறது. வளைகுடாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மற்றும் ஈராக்கிற்கு எதிரான அண்மைய போரைத் தொடர்ந்தும் அதன் பக்கத்து அரசுகளான சவுதி அரேபியா, ஈரான் மற்றும் வளைகுடா சிற்றரசு நாடுகள் உலகின் மிகப்பெருமளவிலான எண்ணெய் இருப்புக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் வரும் தசாப்தங்களில் எரிசக்தி அளிப்புகளை அணுகிப் பெறுவதை உத்திரவாதப்படுத்தல் அனைத்து தொழிற்துறை நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஒரு முன்னுரிமையாகிவிட்டது.

எரிசக்தி இருப்புக்களுக்கான போராட்டம் எதிர்கால மோதலுக்கான மூலவாய்ப்பை கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் தேவையும் மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்டது போன்ற போர்களின் தாக்கங்களும் எண்ணெய் விலையை உச்சாணிக் கொம்பிற்கு உயர்த்தியுள்ளன மற்றும் நிபுணர்கள் இந்த விலைகளின் அளவு குறையாது என்பதில் உடன்பட்டிருக்கின்றனர். எதிர்கால மோதல்கள் விலைகளை மேலும் உயர்த்துவதுடன் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரங்களை அவர்களது எரிபொருள் உற்பத்தியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெட்டுவதுடன் அவைகள் நீடித்திருப்பதையை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவிடும். உலக அளவில் பார்த்தால் இன்றைய தினம் எரிசக்தி அளிப்புகளை பெறுவது ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் கச்சாப்பொருள்களையும் நிலக்கரியையும் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டத்தின் ஒரு சிறப்புத் தன்மையை போன்ற நிலையை பெற்றுள்ளது----அந்த ஒரு மோதல் தான் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு கருவியாய் அமைந்திருந்தது.

இதற்கெல்லாம் மேலாக ஐரோப்பா----- மற்றும் குறிப்பாக ஜேர்மனி---- ஒரு பலவீனமான நிலையில் உள்ளது. ஐரோப்பிய அரசுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உள் நாட்டில் எரிசக்தி இருப்புக்களை வைத்திருக்கின்றன வடக்கு கடல் எண்ணெய் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு எரிசக்தி சேர்மஇருப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டுவருகின்றன. 2000-ல் ஐரோப்பிய OECD நாடுகள் தங்களுக்கு தேவையான எரிவாயு அளிப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலானதை வெளி நாடுகளிலிருந்து பெற்றன. சர்வதேச எரிசக்தி அமைப்பின் படி இந்த புள்ளி விவரம் 2030ம் வருடத்தில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்காக உயரும். எண்ணெய்யை பொறுத்தவரை இந்த நிலவரம் மேலும் அதிகரிக்கும். அதே காலகட்டத்தில் ஐரோப்பிய OECD நாடுகளின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி 48 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று முன்கணிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள் ஏற்கனவே தங்களது எண்ணெய் தேவைகளில் 70 சதவீதத்தையும் இயற்கை எரிவாயுத் தேவையில் 40 சதவீதத்தையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய OECD-களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு நார்வேயின் அந்தஸ்திலிருந்து தோன்றுகிறது. அது உலகின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று ஆனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் கிடையாது.

ஐரோப்பாவின் எதிர்கால எரிசக்தி அளிப்பில் ரஷ்யா ஒரு தீவிரமான முக்கிய பங்கை வகிக்க இருக்கிறது. அதனிடம் உலகின் இயற்கை எரிவாயு இருப்புக்களில் கால் பங்கிற்கு மேற்பட்டவை இருக்கின்றன மற்றும் ஏறத்தாழ 6 சதவீத எண்ணெய் சேர்மஇருப்புக்களை பெற்றிருக்கிறது. இது தவிர உலகின் நிலக்கரி அளிப்புக்களில் ஏறத்தாழ கால் பங்கு அவற்றிடம் உள்ளது.

ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையிலான ஜேர்மனியின் முன்னாள் அரசாங்கம் ரஷ்யாவுடன் தனக்கிருந்த மிக வலுவான தொடர்புகளை அடிப்படையாக கொண்டு தனது எரிசக்தி கொள்கையை வகுத்தது மற்றும் ஷ்ரோடர் புட்டினுடன் தனிப்பட்ட முறையில் நட்புறவை வளர்த்தார். செச்சென்யாவிற்கு எதிராக கிரம்ளின் போரில் ஷ்ரோடர் எந்தவிதமான விமர்சனத்தையும் தவிர்த்தார், புட்டினை ஒரு "குற்றம் காணமுடியாத ஜனநாயகவாதி" என்று புகழ்ந்துரைத்தார் மற்றும் "ஆரஞ்சு புரட்சி" தொடர்பாக நடுநிலைப் போக்கை தொடர்ந்து நீடித்தார்.

ஜேர்மனியின் அதிபர் பதவியை விடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஷ்ரோடர் பால்டிக் கடல் குழாய்வழிப் பாதையை கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஜேர்மனிக்கு எரிவாயு அளிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. அதற்குப் பின்னர் இருந்து, மற்றும் புட்டினிடமிருந்து ஒரு அழைப்பை தொடர்ந்து, ஷ்ரோடர் அந்த குழாய் வழிப்பாதையை கட்டி இயக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு (Consortium) நிர்வாகத் தலைவராக ஷ்ரோடர் பொறுப்பேற்கவிருக்கிறார்.

காஸ்பிரோம் எரிவாயு விலைகளை உயர்த்தியதை தொடர்ந்து, ஜேர்மன் ஊடகங்களில் ஷ்ரோடரின் போக்கு வலுவான விமர்சனங்களுக்கு உள்ளானது. ரஷ்யா (சாத்தியமானால் மற்றொரு அரசாங்கத்தின் கீழ்) ஐரோப்பாவிற்கும் ஜேர்மனிக்கும் எரிவாயு விலையையும் அளிப்புகளையும் அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தும் அல்லது பிராந்தியத்தின் ஸ்திரமற்ற நிலையில் ஜேர்மனி பெருமளவிற்கு சிக்கிக் கொள்ளும் என்று அது அஞ்சுகிறது.

"முதலில் உக்ரைன் அதற்கு அடுத்து நாம்?" என்ற தலைப்பில் வாரப் பத்திரிகை Die Zeit விடுத்திருக்கும் எச்சரிக்கை: கிழக்கு ஐரோப்பாவை நோக்கி மட்டும் அவற்றின் கவனத்தை காஸ்பிரோம் திருப்பவில்லை. ஒரு புத்திசாலித்தனமான தொலைநோக்கு விரிவாக்க மூலோபாயத்தின் மூலம் ரஷ்யாவின் அரசு கம்பெனி மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் நேரடியாக நுழைந்து ஸ்தாபித்துக்கொள்கிறது. வடகடல் எண்ணெய் இருப்புக்கள் தீர்ந்து போகும்போது நீண்டகால குறிக்கோளான விலைக் கட்டுப்பாட்டை உக்ரைன் பாணியில் கொண்டுவரும்".

ஒரு தடுப்பு நடவடிக்கையாக அந்த செய்திப் பத்திரிகை அதிகரித்தவிதத்தில் திசைதிருப்பியது: "வடக்கு ஆபிரிக்காவிலும் மற்றும் காஸ்பியன் பிராந்தியத்திலும் உள்ள எரிவாயு சேர்ம இருப்புக்கள் ஐரோப்பா தொடும் தூரத்தில் இருப்பதுடன் ---குறிப்பாக செலவினங்களை பொறுத்தவரை சைபீரியாவின் எரிவாயு கிணறுகளைவிட அருகாமையில் உள்ளன. ஜேர்மனியில் எரிவாயுவை திரவமாக்கும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்துவதற்கு கனிந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் கப்பல்கள் வழியாக இயற்கை எரிவாயுவை ஜேர்மனி இறக்குமதி செய்யவும் முடியும். ரஷ்யாவிற்கு வெளியில் ஜேர்மனிக்காக புதிய இயற்கை எரிவாயு வளங்களை மேம்படுத்த வேண்டியது தற்போது புதிய மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும்."

இதே பாணியில் Frankfurter Allgemeine பத்திரிகை வாதிடுகிறது: "ஊகித்தறியக்கூடிய எதிர்காலத்தில் மேற்கு நாடுகளின் எரிசக்தி அளிப்பிற்கான பெரிய ஆபத்து வளங்களின் குறைவிலிருந்து வருவது அல்ல, மாறாக அது அடிக்கடி பெருமளவிற்கு அரசியலில் மிகவும் நம்பகத் தன்மை இல்லாத ஒரு சில அரசுகளின் கைகளில் செறிவாகயிருப்பதால் ஆகும்."

எரிசக்தி அளிப்புகளிலிருந்து அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு: ``ஐரோப்பா தனது எரிசக்தி வாங்கலை கட்டாயம் பன்முகப்படுத்த தொடங்க வேண்டும். காஸ்பியன் பிராந்தியத்தை அல்லது வளைகுடா அரசுகளை தரைமார்க்கமாகவும் அடைய முடியும் அது திரவ எரிவாயுவை அனுப்புவதில் அதிக அனுபவம் பெற்றிருக்கின்றன, அவை புதிய அளிப்பிற்கு பொருத்தமாக இருக்கும்.

ஆயினும், அத்தகைய ஆலோசனையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. Die Zeit மற்றும் FAZ-னால் சுட்டிக்காட்டியுள்ள பிராந்தியங்களிலும் மற்றும் வடக்கு ஆபிரிக்கா, காஸ்பியன் கடல் மற்றும் வளைகுடா அரசுகள் அரசியல் ரீதியாக ஸ்திரமற்றவை என்பது மட்டுமல்லாமல் - பிரான்ஸ், பிரிட்டன், சீனா மற்றும் அவற்றிற்கெல்லாம் மேலாக அமெரிக்கா முதலிய பல்வேறு போட்டியாளர் நாடுகளினாலும் உயர்ந்தளவில் முயற்சி செய்யப்படுகின்றன.

எண்ணெய் எரிவாயு அளிப்பு தொடர்பான பேரங்கள் ஏற்கனவே சர்வதேச வன்முறை மோதல்களுக்கு ஆளாகியுள்ளது. சீனாவின் எரிபொருள் நுகர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அண்மையில் ஈரானிலிருந்து திரவ எரிவாயு அளிப்பிற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தப் பேரம் 25 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு செயல்படும் மற்றும் அதன் மொத்த மதிப்பு 70 முதல் 100 பில்லியன் டாலர்கள். இதற்குக் கைமாறாக சீனா, ஈரானின் எரிவாயு கிணறுகளில் கணிசமான தொகைகளை முதலீடு செய்ய விரும்புகிறது. இந்தியாவும் 40 பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட மதிப்புள்ள எரிசக்தி அளிப்பிற்கான ஒரு பேரத்திற்கு ஈரானுடன் கையெழுத்திட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து கணிசமான எதிர்ப்பை இந்த இரண்டு ஒப்பந்தங்களும் சந்தித்து வருகிறது, அது ஈரானை தனிமைப்படுத்த பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது மற்றும் பொருளாதாரத்தடை நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது.

எரிசக்தியை பெறுவதற்கான போராட்டம் பழைய நிலைபெற்று விட்ட ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் மற்றும் புதிதாக உருவாகிக் கொண்டுள்ள தொழிற்துறை நாடுகளுக்கும் இடையில் வன்முறை மோதல்களுக்கான ஒரு அரங்காக ஆகிவருகிறது.  


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved