WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
நேபாளம்
Indian government steps into Nepalese political
crisis
நேபாள அரசியல் நெருக்கடியில் இந்திய அரசாங்கம் நுழைகிறது
By W.A. Sunil
20 December 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலர் ஷ்யாம் சரணால் காத்மாண்டுவிற்கு மேற்கொள்ளப்பட்ட
விஜயமானது நேபாளத்திலுள்ள அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் இந்திய நலன்களில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு
பற்றிய புது டெல்லியின் பெருகிய அக்கறையை விளக்கமாக தெரியும்படி செய்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை
மீட்பதற்கும், மாவோயிச கெரில்லாக்களுடன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை
தொடக்குவதற்கும் அரசர் ஞானேந்திரா மீது சரண் அழுத்தம் கொடுத்தார்.
பெயரளவிற்கு இருந்த அரசாங்கத்தை பதவிநீக்கம் செய்து மற்றும் நெருக்கடி
நிலைமையை பிரகடனம் செய்து ஞானேந்திரா ஒருதலைப்பட்சமாக பெப்ரவரி மாதம் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார்.
அனைத்து அரசியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் அவர் தடை செய்து, பத்திரிகையின்மீது கடுமையான தணிக்கையை
அமுல்படுத்தி அனைத்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் சுற்றி வளைத்தார். நாடாளுமன்றம் ஏற்கனவே
கலைக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிகளின் இயலாமை
அரசர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சாக்குப்போக்காக காட்டப்பட்டது. ஆனால் அடக்குமுறைகள்
இருந்தபோதிலும்கூட, பெப்ரவரி மாதத்தில் இருந்து பூசல்கள் தீவிரமாகியுள்ளன. ஜனநாயக நெறி இல்லாதது பற்றி
எதிர்ப்புக்கள் அங்கு வளர்ந்து வருகின்றன.
நேபாள நாட்டு உள்வெடிப்பின் அரசியல் ஆபத்தால் கவலை கொண்டு இந்தியா, அமெரிக்கா
மற்றும் பிரிட்டன் ஆகியவை நாடாளுமன்ற ஆட்சி முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தன.
நேபாள அரச இராணுவத்திற்கு (RNA)
ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து வரும் மூன்று நாடுகளும் தங்கள் இராணுவ உதவியை நிறுத்தியுள்ளன.
ஆனால் ஞானேந்திராவோ சீனாவையும், பாகிஸ்தானையும் உதவிக்கு அணுகியுள்ளார்.
4.2 மில்லியன் சுற்றுக்கள் வெடிமருந்துப்பொருள், 80,000 கையெறிகுண்டுகள், 12,000 தானியங்கித் துப்பாக்கிகள்
உட்பட 18 வண்டிகள் நிறைய இராணுவத் தளவாடங்களை சீனா அளித்துள்ளதாக தெரிகிறது. சரண் வருகைக்கு
பின்னர், RNA
தலமைத் தளபதி ப்யார் ஜங் தப்பா பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பை சந்திப்பதற்காக இஸ்லாமாபாத்திற்கு
சென்றுள்ளார்.
தன்னுடைய கொல்லைப்புறமாகக் கருதியுள்ள இடத்தில் சீனாவும், வட்டாரப் போட்டி
நாடும் ஆன பாகிஸ்தானும் சம்பந்தப்படல் பற்றி புது டெல்லி ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளது. ஏப்ரலில் இந்திய
செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும், ஞானேந்திரா தன்னுடைய நிலைப்பாட்டை சற்று தளர்த்திக் கொள்ள
ஊக்குவிக்கவும் நேபாள இராணுவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இராணுவ உதவி வழங்குவதை இந்தியா
ஏற்கனவே மீணடும் தொடங்கியிருந்தது.
கடந்த வாரம் தன்னுடைய நான்கு நாட்கள் விஜயத்தில் சரன், அரசர், இராணுவ
தளபதிகள் மற்றும் நேபாளி காங்கிரஸ், நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி-ஒன்றிணைந்த மார்க்சிச லெனினிச (NCP-UML)
கட்சி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்தார். பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் செய்தி ஊடகத்திற்கு அவர்
கூறியதாவது: "என்னுடைய சந்திப்புக்கள் அனைத்திலும் சமாதானம், உறுதித்தன்மை, நேபாளத்தின் பொருளாதார
மீட்பு ஆகியவை அதன் நலன் மட்டுமின்றி இந்தியாவின் நலனும் ஆகும் என்று தெரிவித்துள்ளேன்."
ஆனால் அரசரிடம் தான் பேசியதின் பொருளுரை பற்றி சரண் செய்தி எதுவும் கூறாது
அடக்கிக்கொண்டார், ஆனால் ஐயத்திற்கு இடமின்றி அவர் அரசர் தன்னுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்ளுவதை
ஊக்கப்படுத்த அச்சுறுத்தல்களையும் தூண்டுதல்களையும் கலந்து பயன்படுத்தினார். "சமரச வழிவகையை ஊட்டி
வளர்க்கும்பொருட்டு சர்வதேச சமூகம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது" என்று குறிப்பிட்ட பின்னர், "சீனா
மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று
கூறி, பெய்ஜிங்கை பற்றியும் குறிப்பாக தெரிவித்தார்.
நேபாளத்தில் இந்தியா தலையீடு செய்வது 1950ல் இருந்தே உண்டு. சீனா
திபெத்தை இணைத்துக் கொண்டவுடன், சமாதான மற்றும் நட்புறவு உடன்படிக்கை ஒன்றை நேபாளத்துடன்
கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா நேபாளத்தின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்தது. பின்னர் பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் இந்தியா வழியே போக்குவரத்து என பல உடன்பாடுகள் அடையப்பட்டன.
1988ம் ஆண்டு பெய்ஜிங்கில் இருந்து காட்மாண்டு ஆயுதங்களை வாங்கியபோது, புது
டெல்லி நிலத்தால் சூழப்பட்டுள்ள நேபாளத்தின்மீது போக்குவரத்து தடையை சுமத்தியதன் மூலம், ஆழ்ந்த
பொருளாதார, அரசியல் நெருக்கடியை தூண்டிவிட்டது. 1989ம் ஆண்டு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே
பொருட்களும் மக்களும் செல்லும் 15 வழித்தடங்களில் இரண்டைத்தவிர மற்றவை மூடப்பட்டுவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள உறவுகள்
இறுக்கத்திலிருந்து தளர்வடைந்திருக்கும் அதேவேளை, புது டெல்லி அதன் வட எல்லையில் உள்ள, மிக முக்கியமான
இடைத்தடை அரசாக கருதும் நேபாள நாட்டில் பெய்ஜிங் காலூன்றுவதை அனுமதிப்பதாக இல்லை. மேலும்,
சீனாவிற்கு எதிர் வலுவாக இந்தியாவை கருதி அதனுடன் உறவுகளை நெருக்கமாக பிணைத்து வருகின்ற அமெரிக்காவும்
நேபாளத்தில் சீனாவின் எவ்வித செல்வாக்கிற்கும் எதிராக கவலை கொண்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் கடந்த மாதம் வந்த தலையங்கம் ஒன்று ஆளும்
வட்டங்களில் உள்ள பீதியை வெளிப்படுத்தியுள்ளது: "சீனர்கள் காத்மாண்டுவிற்கு ஆயுதம் அளிப்பது என்பது
நேபாளத்தில் ஜனநாயகத்தையும், உறுதித்தன்மையையும் வளர்க்க இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒரு
தந்திரோபாய அச்சுறுத்தலை காட்டிலும் மேலானதை கொண்டுள்ளது. துணைக் கண்டத்தில் டெல்லியின் தலைமை
நிலைக்கு இது தற்போதைய உண்மையான ஆபத்து ஆகும்." சீனாவை "செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்ள
முற்றிலும் குவிப்புக்காட்டும் ஒரு அரசியல் கட்டுப்பாடில்லா சக்தி" என்று முத்திரையிட்டு தலையங்கம் எச்சரித்தது:
"அரசர் ஞானேந்திராவின் சீன துருப்புச்சீட்டை இந்தியா விரைவில் வெல்லாவிட்டால், இப்பிராந்தியத்தில் அதன்
செல்வாக்கு விரைவில் குறைந்துவிடும்."
1980களின் இறுதியில் போலவே, இந்தியா நேபாளத்தை இந்தியாவினூடாக
போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அச்சுறுத்தலை ஆயுதம் சுழற்றிக் காட்டியுள்ளது. 2007 வரை போக்குவரத்து
உடன்பாடு நடைமுறையில் இருந்தாலும், புது டெல்லி அது "மறுபரிசீலனைக்கு" உட்படலாம் என்று வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய பேச்சு வார்த்தை சுற்றுக்கள் டிசம்பர் முற்பகுதியில் நடைபெற்றன.
நேபாள அரசியலில் புது டெல்லி ஒரு நேரடிப் பங்கையும் கொண்டுள்ளது.
முடியாட்சிககு எதிராக கூட்டுப் போராட்டம் நடத்துவதற்கு நவம்பர் மாதக் கடைசியில் ஏழு எதிர்க்கட்சிகள்
தாங்கள் ஒரு 12-அம்ச உடன்பாட்டை மாவோயிச நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் (NCP-M)
ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தன. முக்கிய வேறுபாடுகளை இந்த உடன்பாடு தீர்க்காமல் விட்டாலும்,
இராணுவத்திலும், அரச அதிகாரத்துவத்திலும் முக்கியமாக தங்கியுள்ள அரசரை இது மேலும் தனிமைப்படுத்தியுள்ளது.
இந்த உடன்பாடு புது டெல்லியில் நவம்பர் 17 அன்று கட்சிகளுக்கு இடையே நிகழ்ந்த
உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவு ஆகும். இப்பேச்சு வார்த்தைகளுக்கு அதிகாரபூர்வமாக ஆதரவு
கொடுக்கப்பட்டது என்பதை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது, ஏனெனில் வாஷிங்டன் வெளிப்படையாக அத்தகைய
உடன்பாட்டிற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆனால் குறைந்த பட்சம் புதுடெல்லி உட்குறிப்பாகவேனும் இக்கூட்டம்
நடத்தப்படுவதற்கு மறைமுக அனுமதி தந்தது என்பது தெளிவு. பத்திரமாக வரலாம் என்ற உத்தரவாதம் புது
டெல்லியால் கொடுக்கப்படாவிட்டால், மாவோயிச தலைவர் பிரச்சண்டா இந்தியாவில் நுழையும் ஆபத்தை
எதிர்கொண்டிருக்க மாட்டார்.
அத்தகைய கூட்டம் நடைபெறுவதற்கு இந்தியாவின் விருப்பமே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
1996ம் ஆணடு மாவோயிச எழுச்சி முதலில் தொடங்கியதில் இருந்தே, அது வெற்றி பெற்றால் அதேபோன்ற எழுச்சிகள்
இந்தியாவிலும் ஏற்படுவதற்கு அது ஊக்கமளிக்கும் என அஞ்சி, நேபாள இராணுவம் அதை நசுக்குவதற்கான முயற்சிகளை
புது டெல்லி ஆதரித்துள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (NCP-M)
இந்தியாவின் சில பகுதிகளில் செயல்பட்டு வரும் மாவோயிச ஆயுதமேந்திய குழுக்களுடன் தொடர்பை வைத்துள்ளது.
12-அம்ச உடன்பாட்டின் ஒரு பகுதியாக பிரச்சண்டா முதல் தடவகையாக "ஒரு
போட்டித்தன்மை உடைய பல கட்சி ஆட்சி முறையை" ஏற்பதாக கூறியுள்ளது, அதையொட்டி அது அரசியல் பிரதான
நீரோட்டத்தில் இணைய முடியும் என்பதோடு பின்னர் "ஐ.நா. அல்லது வேறு ஏதேனும் நம்பத்தகுந்த சர்வதேச மேற்பார்வையின்கீழ்"
இறுதியில் ஆயுதங்களை களையமுடியும். முன்பு இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடாலை கைவிட்டுவிட்டதோ
எனத் தோன்றும் வகையில், அவர் "சமாதான சகவாழ்வு என்ற கொள்கையின் படி அனைத்து நாடுகளுடனும்
நட்புறவை கொள்ளுவதற்கு" அவர் உடன்படுவதாகவும் அறிவித்தார்.
மாவோயிச தலைமை அத்தகைய உடன்பாட்டில் கையெழுத்திட விருப்பம் காட்டியமை,
தற்காலிமாக ஐ.நா.வால் வரவேற்கப்பட்டுள்ளது, அவர்களின் சொந்த அணிக்குள் இருக்கும் நெருக்கடியை
சுட்டிக்காட்டுகிறது. கடந்த மாதம் பிரஸ்ஸல்சை தளமாகக் கொண்ட
International Crisis Group-
ஆல் தயாரிக்கப்பட்ட நீண்ட அறிக்கை ஒன்று, NCP-N
தன்னுடைய கிராமப் பகுதிகளில் இருக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவை நகரங்களிலும் முக்கிய பேரூர்களிலும் வளர்ப்பதில்
தோல்வியுற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வாய்ப்பை தன்னுடைய நோக்கங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும்
முயற்சியில் இந்தியா உள்ளது என்பது தெளிவு.
இந்தியா, சீனா மற்ற நாடுகள் இப்படி திரைக்குப் பின் நடத்தும் சூழ்ச்சிகளில்,
ஒவ்வொன்றும் தத்தம் நிலைப்பாட்டை மூலோபாய முக்கியத்துவமுடைய இந்த நாட்டில் முன்னெடுக்க முயல்வது, பதட்டங்களை
உக்கிரப்படுத்தத்தான் உதவியுள்ளது. அரசர் ஞானேந்திராவும் அவருடைய இராணுவமும் மாவோயிஸ்டுகளுடன்
கொண்டுள்ள உடன்பாட்டை கண்டித்துள்ளதோடு சமரசத்திற்கு வருவதாகவும் இல்லை. கடந்த வாரம் 12 குடிமக்கள்
வெறிபிடித்த ஒரு இராணுவ வீரரால் கொலையுண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான
மக்கள் காட்மாண்டுவில் நிகழ்ந்த மூன்று எதிர்ப்பு பேரணிகளில் பங்கேற்றனர்.
Top of page
|