World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel: Shimon Peres joins Sharon's new party

இஸ்ரேல்: ஷரோனின் புதிய கட்சியில் சேர்ந்த சிமோன் பெரஸ்

By Rick Kelly
16 December 2005

Back to screen version

முன்னாள் இஸ்ரேலின் தொழிற்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான சிமோன் பெரஸ் பிரதமர் ஏரியல் ஷரோனுடன் டிசம்பர் 4ல் கூட்டாக ஒரு பத்திரிகை மாநாடு ஒன்றை நடத்தினார். அதில், அவர் தொழிற்கட்சியிலிருந்து விலகி ஷரோனின் புதிய கதீமா (முன்னேற்றக்) கட்சியுடன் சேருவதாக அறிவித்தார். ஏற்கனவே இரண்டு தொழிற்கட்சி மந்திரிசபை அமைச்சர்களான ஹைம் ரமோன் மற்றும் டாலியா இட்சிக் ஆகியோர் கட்சி மாறியதை தொடர்ந்து பெரஸ் மாறியுள்ளார்.

''நான் ஒரு மகத்தான மற்றும் முக்கியமான பங்குதாரராக ஒன்று சேர்கிறேன் மற்றும் மிகவும் நனவுபூர்வமாகவும் நன்றிக்கடன் மற்றும் சலுகைகளுக்கான ஒரு உட்பொருளற்று நான் இதைச் செய்கிறேன். [நாம்] நிறுத்தி விடாமல் சமாதான முன்னெடுப்புகளை நீடிக்க வேண்டியது அவசியமாகும்.... நமது முயற்சியின் வேகத்தை நாம் நீடித்தாக வேண்டும் மற்றும் எமது கண்ணோட்டத்தை இந்த மகத்தான மற்றும் உண்மையான பங்குதாரருடனும் இதரதரப்புடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று பெரஸ் அறிவித்தார்.

பெரஸ் சமாதானத்தில் உறுதி கொண்டிருப்பதாக அறிவித்திருப்பது ஒரு மோசடியாகும். கதீமா கட்சி தனது பணிக்காலம் முழுவதிலும் இஸ்ரேலை விஸ்தரிப்பதற்கும் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் செலவிட்ட ஷரோனின் அரசியல் வாகனமாகும்.

தொழிற்கட்சி, சியோனிசத்தின் மூத்த அரசியல்வாதி போர்க்குற்றவாளி ஷரோனுடன் அரசியலில் ஐக்கியப்பட்டிருப்பது இஸ்ரேல் அரசின் மகத்தான நெருக்கடியின் தீவிர வெளிப்பாட்டை காட்டுவதாகும். அதிகாரபூர்வமான இஸ்ரேல் அரசியலில் பாரம்பரிய ''இடது'' மற்றும் ''வலது''சாரி அரசியலுக்கு இனி உண்மையான முக்கியத்துவம் எதுவுமில்லை. அல்லது அந்த நாட்டில் ஒரு உண்மையான எதிர்க்கட்சி இல்லை. ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனங்களும் கிழக்கு ஜெரூஸலம் மற்றும் மேற்குக்கரையின் பெரும்பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான ஷரோனின் மூலோபாயத்தோடு ஐக்கியப்பட்டு நிற்கிறது.

2001ல் பிரதமராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் ஷரோனுக்கு பின்னால் நிரந்தரமாக தொழிற்கட்சி அணிவகுத்து நிற்கிறது. லிக்குட் கட்சியின் ''தேசிய ஐக்கிய'' அரசாங்கத்தில் ஒரு இளைய பங்குதாரர் என்ற முறையில் தொழிற்கட்சி சென்ற ஆண்டு காசாவிலிருந்து ஒருதலைப்பட்சமாக குடியிருப்புக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு தொழிற்கட்சி ஒரு இடதுசாரி முகமூடியாக செயல்பட்டது.

ஷரோன் இஸ்ரேலிலுள்ள தனது ஆதரவாளர்களிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பது என்னவென்றால் காசாவிலிருந்து தந்திரோபாய அடிப்படையில் 9,000 குடியிருப்பவர்களை விலக்கிக் கொள்வது சமாதான உடன்படிக்கையில் எந்த வகையிலும் சம்மந்தப்பட்டதல்ல என்றும் மாறாக கிழக்கு ஜெரூசலத்திலும் மேற்குக் கரையிலும் உள்ள பாலஸ்தீனிய நிலங்களை நிரந்தரமாக இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்காக அமெரிக்காவின் ஆதரவை வென்றெடுப்பதுதான் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். இதில் தொழிற்கட்சியின் பங்கு புஷ் நிர்வாகம் ஆதரிக்கின்ற கட்டுக்கதையை வளர்ப்பதாக அமைந்திருந்தது. அது என்னவென்றால் காசாவிலிருந்து ''தன்னிச்சையாக வெளியேற்றுவதன்'' மூலம் இஸ்ரேல் தனது இராணுவ கட்டுப்பாட்டை கைவிடுகிறது மற்றும் எந்த நேரத்திலும் அதை மாற்றிக் கொள்ளலாம்-----இது ஒரு பெரிய இஸ்ரேலிய சலுகை மற்றும் பாலஸ்தீனியர்களுடன் ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கையை நோக்கி ஒரு அடியெடுத்து வைப்பது என்று விவரிக்கப்பட்டது.

ஷரோனின் கட்சிக்கு உள்ளே இருந்து கொண்டு இதே போன்றதொரு பங்கை செய்ய முடியும் என்று பெரஸ் கருதுகிறார். ஆனால் அவர் செல்வாக்கை இழந்துவிட்ட ஒரு பிரமுகர். இஸ்ரேலுக்குள் ஷரோனுக்கு இந்த நோபல் சமாதான பரிசை வென்றெடுத்தவரின் மதிப்பு மிகக் குறைவானது. அவர் ஆழமாக பொது மக்களிடையே வெறுக்கப்பட்டு வருகிறார்----ஓஸ்லோ உடன்படிக்கையோடு சம்மந்தப்பட்டிருந்ததற்காக வலதுசாரிகள் அவரை வெறுக்கின்றனர் மற்றும் அவரது தொழிற்கட்சி ஆதரவாளர்கள் அவரை ஒரு சந்தர்ப்பவாதி என்று எள்ளி நகையாடுகின்றனர். தேர்தல்களில் அவர் ஒரு வேட்பாளராக நிற்கவில்லை. இஸ்ரேல் ஊடக செய்திகளின்படி கதீமாவின் தேர்தல் பிரசாரத்தில் அவர் எந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்யப் போவதில்லை.

பெரஸின் மத்திய பங்கு சர்வதேச அரங்கில் தான் நடைபெறும். அடுத்த மார்ச் மாதம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலில் கதீமாக வெற்றி பெறுமானால் ஷரோன், பெரஸை தமது ''சமாதான விவகாரங்களுக்கான அமைச்சராக'' நியமிப்பார்.

''பெரஸ் பிரதமரின் மிக முக்கியமான உடமையாகும். ஷரோனுக்கு அவருடன் ஒரு புகைப்படம் நியூயார்க் டைம்சிலோ அல்லது லு மொன்டிலோ பிரசுரிக்கப்படுவது ஜெரூஸலம் மற்றும் டிமோனாவில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான வாக்குகளை விட அதிகமான மதிப்பு கொண்டது'' என்று Haaretz பத்திரிகையின் இராஜதந்திர விவகாரங்களில் ஆய்வாளர் அக்கிவா எல்டார் எழுதியிருக்கிறார்.

ஷரோன் மீண்டும் பாலஸ்தீனியர்கள் மீது தமது தாக்குதல்களை முடுக்கி விடுகின்ற நேரத்தில் ''பெரஸ் தனது 'சமாதான குழுவை ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வார் மற்றும் எல்லாம் சரியாக இருக்கிறது என்று உலகிற்கு காட்டுவார்'' என்று எல்டார் தொடர்ந்தார்.

மறு-முத்திரையிடப்பட்ட லிக்குட்டை ஷரோன் கட்டியெழுப்புகிறார்

சர்வதேச ஊடகங்கள் கதீமா பற்றி இடைவிடாது ஒரு ''மத்தியவாத'' கட்சி என்று குறிப்பிட்டு வந்தாலும் அடிப்படையிலேயே அது மறு முத்திரையிடப்பட்ட லிக்குட்தான். ஷரோன் குடியேறுவோர் இயக்கத்தின் பாசிச மற்றும் மீட்பாளர்கள் அணியினரில் இருந்து பிரிக்கப்பட்டு அவற்றை கட்சியிலிருந்த ஷரோனின் எதிரிகள் பிரதானமாக பென்ஜமீன் நேட்டன்யாஹூ ஆகியோர் அவரது தலைமையை கீழறுப்பதற்காக சுரண்டிக்கொண்டனர். தீவிர வலதுசாரிகளுக்கு ஷரோன் நடைமுறைரீதியாக இஸ்ரேலின் எல்லைகளை மேற்குக் கரையில் விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை நிரந்தரமாக இஸ்ரேலோடு சேர்த்துக் கொள்வது கூட தீவிர வலதுசாரிகளுக்கு போதுமானவையாக இல்லை. ஒரே ஒரு குடியிருப்பை கைவிடுவது கூட காட்டிக் கொடுப்பது என்று கருதுகின்றனர். ஆனால் இது ஷரோனின் நோக்கங்களையோ அல்லது அவரது புதிய கட்சியையோ எந்த வகையிலும் பிற்போக்குதனத்திலிருந்து உருவாக்க முடியவில்லை.

கதீமாவின் அரசியல் போக்கை, அண்மையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் போதியளவிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

டிசம்பர் 5ல் வெளியிடப்பட்ட Newsweek வார இதழ் ஷரோனின் அரசியலில் மூலோபாயாளர்களில் ஒருவரான கல்மான் கேயர் கூறியதை குறிப்பிட்டிருக்கிறது. ''ஷரோன் காசாவில் ஒரு பாலஸ்தீனிய அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சமாதானத்திற்கு மாற்றீடாக மேற்குக் கரையின் 90 சதவீத இடங்கள் ஜெரூசலத்தில் ஒரு சமசரத்திற்கும் வர வேண்டும்.''

பிரதமர் உடனடியாக அந்த செய்தியை மறுத்த ஒரு அறிக்கை வெளியிட்டார். ''எனது நிலைப்பாடுகளுக்கும் கருத்துக்களுக்கும் முற்றிலும் முரண்பட்டதாக கல்மான் கேயர் கூறியதாக சொல்லப்படும் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. உண்மையில் இந்த கருத்துக்கள் கூறப்பட்டிருக்குமானால் கண்டிப்பாக அது கேயரின் முயற்சியாகத்தான் இருக்கும். மற்றும் அவை அர்த்தமற்ற மற்றும் அபத்தமானவை. ஒட்டு மொத்த ஜெரூசலமும் இஸ்ரேலின் நிரந்தர தலைநகராக இருக்க வேண்டும்'' என்று ஷரோன் வற்புறுத்தியுள்ளார்.

லிக்குட் கட்சியில் இடம் பெற்றிருந்த பல முன்னணி பிரமுகர்கள் கதீமா கட்சிக்கு தாவியிருக்கின்றனர். லிக்குட் தலைவர் சாச்சி ஹனேக்பி, டிசம்பர் 7ல் தான் கதீமாவில் சேர்வதாக அறிவித்தார். லிக்குட் கட்சிக்குள்ளேயே ஒரு பரந்த இஸ்ரேலை மிகத் தீவிரமாக நீண்டகாலமாக முன்மொழிந்து வந்தவர் ஹெனக்பீ. 1982ல் தீவிர தேசியவாத மாணவர்களுக்கு தலைமை வகித்து சினாய் தீபகற்பத்திலிருந்து இஸ்ரேல் விலக்கிக் கொள்ளப்படுவதற்கு எதிராக கண்டனப் பேரணிகளுக்கு தலைமை வகித்ததன் மூலம் அரசியலில் முன்னணிக்கு வந்தார். மிக அண்மைக் காலத்தில் ஹெனக்பீ இந்த ஆண்டு ஆரம்பத்தில் காசாவிலிருந்து குடியிருப்புக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முன்னணியில் நின்றார். குடியிருப்புக்கள் வெளியேற்றப்படும் திட்டத்திற்கு இப்போது அவர் ஆதரவாக வென்றெடுக்கப்பட்டுவிட்டாலும் கதீமாவில் வலதுசாரி செயல்வீரராக தாம் செயல்படுப் போவதாக குறிப்பிட்டார்.

கதீமாவிற்கு அவரது ஆதரவை அறிவித்த அதே நாளில் ஹனேக்பீ மீது ஊழல் குற்றச்சாட்டிற்காக அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கப்போவதாக போலீசார் அறிவித்தனர். 2001 முதல் 2003 வரை அவர் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி வந்த நேரத்தில் அவர் டசின் கணக்கான அமைச்சரவை வேலைகளை தனது எடுபிடிகளுக்கு வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஷரோனுக்கு கவலையில்லை. பிரதமருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் ஜெரூசலம் போஸ்டிற்கு தந்துள்ள விளக்கத்தைப் போல்: ''போலீசார் முடிவில் துரதிருஷ்டவசமாக திருப்பம் ஏற்பட்டுள்ள நேரத்தை கருதிப்பார்க்கும் போது உடனடியாக சில வாக்குகளை நாம் இழக்கக்கூடும் ஆனால் நீண்ட கால அடிப்படையில் நாம் அதனால் பயனடைவோம். ஏனெனில் சாச்சி இறுதியாக லிக்குட் கொள்கை உறுதி கொண்டவர் என்று கருதப்படுகிறார் மற்றும் கதீமா போன்ற ஒரு மத்தியவாத கட்சியில் குடியிருப்புக்கள் நீக்கப்படுவதை எதிர்த்த முன்னணி தலைவர் இடம் பெற்றிருப்பது முக்கியமாகும்.

ஆக ''மத்திய வாதம்'' என்று கூறப்படுவது இரண்டுவகையான விரிவுபடுத்தும் இராணுவ கொள்கையை உள்ளடக்கியதாகும். லிக்குட் கட்சி குடியிருப்போரை மட்டுமே அரவணைத்துக் கொண்டதையும் மற்றும் காசா குடியேற்றம் நீக்குவது தொடர்பான அதிதீவிர-மரபுவழியை நிலைப்பாட்டையும் எதிர்த்தது.

டிசம்பர் 11ல் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஷால் மொபாசும் ஷரோனின் வேண்டுகோளை ஏற்று லிக்குட் கட்சியிலிருந்து விலகி கதீமாவில் சேர்வதாக அறிவித்தார். 2002ல் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலின் இராணுவத் தளபதியாக பாலஸ்தீனிய இண்டிபாடா எழுச்சியை எதிர்த்து போரிடும் பொறுப்பில் இருந்தார். 2002 மார்ச்சில் ஜெனீன் அகதிகள் முகாம் அழிக்கப்பட்டது மற்றும் யாசீர் அராபத்தின் ராமல்லா தலைமை அலுவலகங்கள் சிதைக்கப்பட்டது உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணிறந்த தாக்குதல்களுக்கு அவர் கட்டளையிட்டார்.

பாலஸ்தீனிய தீவிரவாதிகளை குறி வைத்து பல்வேறு படுகொலைகள் செய்யப்பட்டது உட்பட பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இன்றைய இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் மொபஸ் ஒருங்கிணைப்பு செய்து வருகிறார். ஷரோனின் புதிய கட்சியில் சேர்வதற்கு ஒரு வாரத்திற்குள் அவர் இஸ்ரேல் சட்டமா அதிபர் தற்கொலை குண்டு வெடிப்பாளர் சம்மந்தப்பட்ட அவர்களது குடும்ப வீடுகளை இஸ்ரேல் இராணுவம் அழிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார் அந்த நடைமுறை சென்ற பெப்ரவரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எடியோத் அக்ரோநோத் செய்தி பத்திரிகை டிசம்பர் 14 இல் தந்துள்ள தகவலின்படி அவர் லிக்குட் கட்சியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மேற்குக் கரையில் 290 புதிய குடியிருப்பு வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தார்.

''கதீமாவுடன் சேராமல் இந்த நாட்டின் சம்பவங்களில் செல்வாக்கை ஏற்படுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை'' என்று மொபஸ் விளக்கினார். ஒரு புதிய கதீமா அரசாங்கத்தில் இந்த முன்னாள் இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை தருவதாக ஷரோன் உறுதியளித்திருக்கிறார். அதன் மூலம் இண்டிபாடா தொடங்கியது முதல் காசாவிலும் மேற்கு கரையிலும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்வதற்கு உறுதியளித்துள்ளார். ஹெனக்பீயை எதிரொலிக்கின்ற வகையில் மொபாஸ் தன்னை கதீமாவின் ''வலதுசாரி போக்கிற்கு'' சேவகம் செய்ய அவர் எண்ணம் கொண்டிருப்பதாக அறிவித்தார்.

ஷரோனின் ''பாதுகாப்பு'' நடவடிக்கைகளை ஆதரிக்கும் பெரஸ்

ஷரோனுக்கு பின்னால் நிலவுகின்ற ஒற்றுமைக் காட்சி அவரது கட்சியில் சேர்ந்துள்ளவர்களோடு மட்டுமே நிற்கவில்லை. பாலஸ்தீனிய மக்கள் மீது அவர் நடத்துகின்ற தாக்குதல்களுக்கு அசையாது தொழிற்கட்சி தந்து வருவதூடாக அவர் முயற்சிகள் சாத்தியமாயின. பெரஸ்சிற்கு பதிலாக அமீர் பிரேட்ஸ் தொழிற்கட்சி தலைவராக பதவியேற்றிருப்பது ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் தோன்றும் அனைத்து பாலஸ்தீனிய கிளர்ச்சியையும் ஒடுக்குவதற்கு கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொழிற்கட்சி தந்து வருகின்ற ஆதரவை எந்த வகையிலும் மாற்றுவதாக இல்லை.

நவம்பர் 9ல் தொழிற்கட்சி தலைமையை வென்றெடுத்த பிரேட்ஸ் தமது கட்சியை ''தேசிய ஐக்கிய'' கூட்டணியிலிருந்து விலக்கிக் கொண்டார். தொழிற்கட்சி ஷரோனிடம் சரணாகதி அடைவது இஸ்ரேலின் தொழிலாள வர்க்கத்தின் கண்ணோட்டத்தில் முழுமையான இழிவை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால் பிரேட்ஸ் இடதுசாரி மக்களைக் கவரும் வேலைதிட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக உறுதி மொழியளித்துடன் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமுல்படுத்தப்பட்ட ஆழமான சமூக செலவின வெட்டுக்களை இரத்துச் செய்வதாகவும் உறுதியளித்து பிரச்சாரம் செய்து வந்தார். என்றாலும் புதிய தொழிற்கட்சித் தலைவர் ஷரோனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவர் மேற்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக செயல்திட்டங்களில் காணப்படும் படுமோசமான அத்துமீறல்களை ஆட்சேபிப்பதோடு நின்று விடுகிறது. பரவலாக பிரேட்ஸ் ஒரு ''சமாதானம்'' என்று முன்னெடுத்து வைக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் எந்த அம்சத்தையும் ஆட்சேபிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். தொழிற்கட்சி தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து பேசும்போது அவர் கூறினார்: ''உங்களுக்கு [ஷரோன்] நாட்டின் பாதுகாப்பை எப்படி கண்காணிப்பது என்பது தெரியும், ஆனால் எங்களுக்கு உங்களை விட மக்களை எப்படி பாதுகாப்பது என்பது தெரியும், எப்படி ஒவ்வொரு குழந்தையையும் பராமரிப்பது, எப்படி புதிய புலம்பெயர்ந்தோர் மாடி குடியிருப்புக்களில் வீடுகளை வாங்க உறுதி செய்வது என்பது எங்களுக்கு தெரியும்.'' என்றார்.

டிசம்பர் 5ல் வடக்கு இஸ்ரேலில் நடைபெற்ற ஒரு தற்கொலை குண்டு வெடிப்பு பற்றி குறிப்பிட்ட பிரேட்ஸ் ''பயங்கரவாதத்ற்கு எதிராக தேவைப்படும் எந்த வழியையும் பயன்படுத்தி சமரசத்திற்கு இடமில்லாமல் இஸ்ரேல் ஒரு போரை நடத்த வேண்டும்.'' என்று அறிவித்தார்.

''சமாதான மக்கள் என்ற முறையில் பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதில் நமக்கு கூடுதல் உரிமைகள் உண்டு. பயங்கரவாதத்திற்கு எதிராக தேவையான எந்த வழிமுறையையும் பயன்படுத்துவதை எவரும் தடுத்து விட முடியாது'' என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் இராணுவ ஜெனரல்கள் கப்பற்படை தலைவர்கள் போலீஸ் தலைமை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய அவர் புதிதாக அமைத்த பாதுகாப்பு குழு கூட்டத்தை தொடர்ந்து அவர் மேலே கண்ட கருத்துகளை வெளியிட்டார்.

பிரேட்ஸ் போர் வெறியோடு இருப்பதாக காட்டிக் கொள்வது தொழிற்கட்சியின் ''பழைய காவலர்களை'' சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியாகும். மூத்த தொழிற்கட்சி பிரமுகர்கள் முன்னாள் பிரதமர் ஏகுட் பராக் தலைமையில் பிரேட்ஸ் தொழிற்கட்சித் தலைமையை தமது தொழிற்சங்க ஆதரவாளர்களை கொண்டு நிரப்பியிருப்பதாக குற்றம் சாட்டினர் மற்றும் பெரஸ், கதீமா கட்சிக்கு தாவியதற்கு அவர் மீது பழி போட்டனர். வலதுசாரி பொருளாதார திட்டத்திற்கு மற்றும் இஸ்ரேல் முதலாளித்துவம் கோருகின்ற மேற்குக்கரை நிலத்தை அபகரிப்பதிலும் பாரக்கும் பெரஸுசும் முக்கியமாக வேலியின் இரு பக்கங்களிலும் இருந்து தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved