World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிGerman Chancellor Merkel's state visit to Poland: you scratch my back, I'll scratch yours ஜேர்மனியின் அதிபர் மேர்க்கல் போலந்திற்கு அதிகாரபூர்வ விஜயம்: நீங்கள் எங்கள் முதுகைச் சொறியுங்கள், நாங்கள் உங்கள் முதுகைச் சொறிகிறோம் By Marius Heuser பாரிஸ், லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸிற்குச் சென்ற பின்னர் ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கல் டிசம்பர் 2 அன்று போலந்தின் தலைநகரான வார்சோவிற்கு தன்னுடைய அதிகாரபூர்வ முதல் தடவை பயணத்தை மேற்கொண்டார். சமீபத்திய ஆண்டுகளில் பேர்லினுக்கும் வார்சோவிற்கும் தொடர்ந்த நெருக்கடி இருந்த நிலையில், இந்த வருகை கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஈராக்கின் மீதான போருக்கு தன்னுடைய வெளிப்படையான ஆதரவை வார்சோ அரசாங்கம் கொடுத்து, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உதவும் வகையில், தன்னுடைய படைகளையும் கொடுத்திருந்ததில், அமெரிக்க சார்புடைய "புதிய ஐரோப்பாவின்" முதல்நிலையில் போலந்து நின்றது; இதன் விளைவாக ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த "பழைய ஐரோப்பாவின்" முக்கிய எதிர்ப்பு நாடாயிற்று. மாஸ்கோவுடன் "மூலோபாய கூட்டு" என்று மேர்க்கலுக்கு முன் பதவிக்கு இருந்த ஹேகார்ட் ஷ்ரோடர் ஆற்றலுடன் வளர்த்திருந்த தோழமை வார்சோவில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக வரலாற்றுரீயாக இருந்த நெருக்கடிகளையும் புதுப்பித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இறுதியாக பால்டிக் கடல் குழாய்த்திட்டம் ஒன்று அமைப்பதை போலந்து மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. இத்திட்டம் போலந்தை ஒதுக்கி வைத்து ஜேர்மனியை நேரடியாக ரஷ்ய இயற்கை எரிவாயு இணையத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்த்திட்டம் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் விநியோகங்களை நேரடியாக போலந்து பெறாமல் இருக்க முறியடிக்கும் ஏற்பாடு என்று கருதப்பட்டது. குறைந்தபட்சம் அது ரஷ்யாவிற்கு போலந்தினை கட்டுப்படுத்தும் அரசியல் செல்வாக்கை கொடுக்கும். அமெரிக்காவுடன் உறவுகளை முன்னேற்றுவிக்க தான் விரும்புவதாக மேர்க்கல் பலமுறையும் அறிவித்துள்ளார். அதேநேரம், தன்னுடைய ஆரம்ப உரையை பயன்படுத்தி ரஷ்யாவுடன் மூலோபாய கூட்டினை வளர்க்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார்; பால்டிக் கடல் குழாய்த்திட்டத்திற்கு போலந்தின் எதிர்ப்புக்களுக்கு ஜேர்மனி செவிமடுக்காது என்றும் உறுதியாகக் கூறியிருந்தார். போலந்தின் பாராளுமன்ற, ஜனநாயகத் தேர்தல்கள் இலையுதிர்கால தொடக்கத்தில் நடந்தபோது, சட்டம்-ஒழுங்கை வலியுறுத்தியிருந்த, மிகத் தீவிரமான தேசிய Law and Justice (Pis) கட்சி இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று, ஒரு கடும் ஜேர்மனிய-எதிர்ப்பு, ரஷ்ய-எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டது. இதற்கு முன்பு, 2003ம் ஆண்டு, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி Lech Kaczynski, "[பிரான்ஸ் நீஸ் நகரத்தில் ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடு இயற்றப்பட்டதை சுட்டிக்காட்டி] நீஸ் அல்லது மரணம் என்ற கோஷத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தார். போலந்து ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டு சர்வஜனவாக்கெடுப்பு சரிவதற்கு வகை செய்தது. வார்சோவின் மேயர் என்ற முறையில், இரண்டாம் உலகப் போரின்போது தலைநகர் நாசமுற்றதற்கு அவர் ஜேர்மனி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறினார் -- துல்லியமான மதிப்பீட்டு தொகையையும் கொடுத்தார். போர் முடிவடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்தது பற்றி மாஸ்கோவில் எடுக்கப்பட்ட முறையான விழாக்களில் போலந்து பங்கு பெறுவதற்கும் அவர் வெளிப்படையான எதிர்ப்புக்களை தெரிவித்தார்; அவருடைய கருத்தின்படி செம்படை போலந்தை விடுவித்தது என்று கூறுவதைவிட ஆக்கிரமித்தது என்பதே சரியாகும். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவர் ரஷ்யாவையும் ஜேர்மனியையும் போலந்தின் இரு முக்கிய அச்சுறுத்தல்கள் என்று குறிப்பிட்டார். மேர்க்கல் வார்சோவிற்கு விஜயம் செய்திருந்தபோது அத்தகைய நெருக்கடிகள் இருக்கவில்லை. மேர்க்கல் மற்றும் போலந்தின் தலைவர் PiS உறுப்பினரும் Hacyznski உடைய நம்பிக்கைக்குரிய சகாவுமான Kazimierz Marcinkiewicz ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருந்தது. போலந்தும் ஜேர்மனியும் நம்பிக்கையுடன் கூடிய ஒத்துழைப்பை பெறுவதற்கு வழிகாணல் வேண்டும் என்று மேர்க்கல் அறிவித்தார். "புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபின் விரைவிலேயே நாம் போலந்திற்கு வருகை புரிந்த காரணம், எமது நட்பு உறவுகளை தொடர வேண்டும், மற்றும் இயல்பாகவே அவற்றை முன்னேற்றுவிக்க வேண்டும் என்று விரும்புவதால்தான்" என்று அவர் கூறினார். தன்னுடைய பங்கிற்கு போலந்து பிரதம மந்திரி எப்படி இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை ஒரு மணிநேரக் கூட்டம் தொடக்கி வைத்துள்ளது என்பது பற்றிப் பேசினார். "அதிபர் அம்மையாரின் வார்சோ வருகை மிகவும் வெற்றிகரமாக உள்ளது" என்று குறிப்பிட்ட அவர் மேலும் கூறினார்: "பொருளாதாரப் பிரச்சினைகளில் பேச்சுவார்த்தைகளை அதிகமாகக் கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் உடன்பட்டோம்; அப்பொழுதுதான் இரு நாடுகளிலும் வளர்ச்சி விரைவுபடுத்தப்படமுடியும்". ஜனாதிபதி Lech Kaczynski உடன் மேர்க்கல் நடத்திய பேச்சுவார்த்தைகளும் பொதுவாக சமரசப் போக்கை கொண்டிருந்தன. ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்தில் பிரிட்டனுடன் ஏற்பட்டுள்ள பூசலில் தான் போலந்தை ஆதரிப்பதாக Marcinkiewicz இடம் மேர்க்கல் உறுதியளித்தார் மேலும் பிரச்சினைக்கு உரிய பால்டிக் கடல் குழாய்த்திட்டத்தை கண்காணிக்க, போலந்து போன்ற நாடுகளும் பயன்படும் வகையில் ஏற்பாடுகள் செய்வதற்கு ஒரு செயற்குழுவை நிறுவுவதாகவும் அவர் உறுதிமொழி கொடுத்தார். இத்தகைய இரண்டு அரசாங்கத் தலைவர்களுக்கு இடையே நிகழ்ந்த கூட்டத்தில் காணப்பட்ட நட்புறவு அடித்தளத்தில் இருந்த அழுத்தங்களை மறைக்க முற்றிலும் இயலவில்லை. போலந்திலும் ஜேர்மனியிலும் வந்துள்ள புதிய அரசாங்கங்களை பற்றித் தெளிவான கருத்தும் வெளிப்பட்டது. மக்களை திருப்தி செய்யும் வகையில் தேசியப்பற்றுடன் பேசினாலும்கூட, பேர்லினுடனும் பிரஸ்ஸல்ஸுடனும் உறவுகளை கெடுத்துக் கொள்ளுவதை தவிர்க்கத்தான் போலந்து அரசாங்கம் விழைகிறது. இந்த உத்திக்கான காரணத்தில் முக்கியமானது, வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத்திட்டத்தில் வரக்கூடிய பூசல்களில் அதற்கு ஜேர்மனியின் ஆதரவு தேவைப்படும்; பிரஸ்ஸில்ஸின் ஐரோப்பிய ஒன்றிய நிதிகளில் போலந்து ஏற்கனவே மிக அதிகமான நலன்களை பெறும் நிலையில் உள்ளது. ஜேர்மனி இத்தொகைகள் வழங்குவதில் மிகப்பெரிய இடத்தில் இருப்பதாலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சேர்ந்துள்ள புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கு நிதி உதவி குறைக்கப்பட வேண்டும் என்ற பிரிட்டிஷ் முயற்சிகளையும் எதிர்ப்பதாலும், இந்த நிலைமை உள்ளது. முந்தைய ஸ்ராலினிசத்திற்கு பிந்தைய ஜனநாயக இடது கூட்டணி (SDl) போலந்து அரசாங்கங்களும் தற்போதைய PiS தலைமையிலான அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் உலக சந்தையில் இணைவதற்கு போலந்தை முழு வீச்சில் தயார்படுத்தியுள்ளன. போலந்து தேசிய உணர்வை PiS தீவிரமாக ஆதரவு காட்டுவதற்கு காரணம் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே. அது ஒன்றும் ஜேர்மனிய, ஐரோப்பிய, சர்வதேச நிறுவனங்கள் வங்கிகள் போலந்துப் பொருளாதாரம், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான வகையில் இல்லை. மாறாக இந்த ஆதிக்கத்தின் பேரழிவுதரும் சமூக விளைவுகள் பற்றி எழுந்துள்ள அதிருப்தியை பிற்போக்கு திசைகளில் திருப்பி போலந்து தொழிலாளர்களை அவர்களுடைய சக ஜேர்மனிய, ரஷ்ய தொழிலாளர்களிடம் இருந்து பிரிப்பதற்கான முயற்சியேயாகும். இந்த வகையிலான தேசியம் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வ ஆசிர்வாதங்களையும் கொண்டுள்ளது; போலந்தின் அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும், அதாவது யூத எதிர்ப்பு, தங்கள் இனப் பாதுகாப்பு, சகிப்புத் தன்மையற்ற போக்கு ஆகியவற்றிற்கும் இதில் உடன்பாடுதான். தேர்தல் பிரச்சாரத்தில் ஜேர்மனிய எதிர்ப்புத் தன்மை இருந்தது பற்றி கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் மேர்க்கலும், Marcinkiewicz உம் இருந்தவேளை கேட்கப்பட்டபோது, பல்கலைக் கழகத்தில் ஜேர்மனிய உதவித்தொகையுடன் பயின்ற Marcinkiewicz, அப்படிப்பட்ட வகையில் தான் பிரச்சாரம் நடத்தவே இல்லை என்று கூறிவிட்டார். மேர்க்கலை பொறுத்தவரையில் இத்தகைய அடையாள வகையிலான தேசிய உணர்ச்சிப் பேச்சுக்களின் பொருள் பற்றி நன்றாகவே அவருக்குத் தெரியும். ஆயினும்கூட தீவிர வலதுசாரிகள் மற்றும் வெளிப்படையான யூத எதிர்ப்பு சக்திகளை அடித்தளமாக கொண்ட போலந்து அரசாங்கத்தின் பிற்போக்குத் தன்மை பற்றிய குறைகூறலை அவர் தவிர்த்தார். பாராளுமன்றத் தேர்தல்களில் இதுகாறும் இல்லாத அளவிற்கு 60 சதவிகித வாக்காளர்கள் வாக்குப்போடாததை அடுத்து PiS போடப்பட்ட வாக்குகளில் 27 சதவிகிதத்தைத்தான் பெற்றது; இதனால் அது நாட்டின் மொத்த வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கு ஆதரவைக் கொண்டுதான் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதன் பின்னர் இது ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க முற்பட்டது; போலந்து பாராளுமன்றமான Sejm இல், இதற்காக அதிவலதுசாரி கிராமிய கட்சியான Samoobrona (Self-Defence) சுய-பாதுகாப்புக் கட்சி மற்றும் திருச்சபை ஊழியர்கள்-தேசிய போலிஷ் குடும்ப பேரவை (LPR) ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது. மிகத் தீவிர வலதுசாரி Radio Maryja வில் இருந்து LPR வெளிப்பட்டுள்ளது; இதுதான் போலந்தில் தீவிரவாதத்தின் மையமாகவும் இப்பொழுது உள்ளது. கத்தோலிக்க திருச்சபை போலந்து அரசுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இது முன்வைத்துள்ளது மற்றும் ரஷ்யர்களையும், ஜேர்மானியர்களையும் பொறுத்தவரை யூதர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், கறுப்பர்கள் போன்று ஒரேவிதத்தில் நாட்டிற்கு விரோதத் தட்டாகத்தான் கருதுகிறது. All Polish Youth (Mlodziez Wszzechpolska) போன்ற பாசிச அமைப்புக்கள் LPR இன் நடைமுறையை ஒத்த வகையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில் உள்ள மற்ற பழைமைவாத கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, PiS மிகத் தீவிர வலதுசாரிக் கருத்துக்களுக்கு தன்னுடைய ஆதரவைக் கொடுத்துள்ளது. Election Movement Solidarity (AWS) என்னும் வலதுசாரிப் பிரிவில் இதன் தோற்றங்கள் இருந்தன; அது அரசாங்கத்தை 1997இல் இருந்து 2001 வரை அமைத்திருந்தது. ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவி, மீண்டும் மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அது விரும்புகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜனாதிபதியாக வரவிருந்த Nech Kaczynski மற்றும் அவருடைய இரட்டைச் சகோதரரும் PiS இன் தலைவருமான Jaruslav Kaczynski யும் நான்காம் குடியரசின் வருகை இறுதியில் "கம்யூனிசத்தை" கடந்துவிடும் என்ற பாராட்டி வரவேற்றனர். வார்சோ நகரத்தின் மேயராக இருந்தபோது ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தடைசெய்த வகையில் இதன் பொருள் என்ன என்பதை Lech புலப்படுத்தினார்; மேலும் போலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை புதிய நாஜிக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்ததையும் குறைகூறினார். இப்பொழுது PiS, LPR உடைய போக்கை போன்ற தன்மையை கொண்டுள்ளது என்பது ஜனநாயக உரிமைகளை அழித்தல் முன்னோக்கி வருகிறது என்பதற்கு தெளிவான அடையாளம் ஆகும். போலந்தின் உயர்தட்டினர் குறைந்த அளவில் மக்களுடைய ஆதரவைப் பெறும்போது, அதன் ஆட்சி கூடுதலான சர்வாதிகாரம், ஆக்கிரோஷம் நிறைந்ததாகிறது. "ஜனநாயகப் புரட்சி" என்று கூறப்பட்ட நிலை வந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனநாயகம் என்பது LPR ஒட்டுமொத்தமாக இழிந்த நிலையில் இருப்பதின் தன்மைக்கு வந்துவிட்டது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" பற்றிய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரம் ஒன்றை நிறுவம் கருத்தையும் புதிய அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளது; அதாவது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மன் நாடுகளில் வந்துள்ளது போல், இன்னும் கூடுதலான வகையில் ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படும். ஆஸ்திரியாவின் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் Jorg Haider இன் தீவிர வலதுசாரி Freedom Party (FP) 2000ம் ஆண்டில் ஆட்சியில் சேர அழைத்தபோது அப்பொழுதும் கூட ஒரு சர்வதேச எதிர்ப்பு இருந்தது. அந்தக்கால கட்டத்தில் 14 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஆஸ்திரியாவுடன் இருதரப்பு உறவுகளை தற்காலிகமாக நிறுத்தினர்; ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் தலைவரான Nicole Fontaine ஐரோப்பிய சமூகம் "இத்தகைய அவமதிக்கும், இன உணர்வு பெருகியுள்ள இனக் கருத்துக்களை உரைக்கும் Jorg Haider" இடம் இருந்து வெளிப்படையாக பிரிந்து நிற்க வேண்டும் என்று அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் வெளிநாட்டு மக்களிடம் காட்டும் விரோத கொள்கைப் பார்வையின் அடிப்படையில் அத்தகைய அறிக்கைகள் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை; அதேபோல்தான் பொருளாதாரத் தடைகளும் வெறும் அடையாளமான வகையில்தான் இருந்தன. ஆயினும்கூட, அவை ஐரோப்பிய அரசியல் ஆட்சி உயர்மட்டத்திற்குள்ளேயே Freedom Party ஆஸ்திரிய அரசாங்கத்தில் சேருவது அரசியலில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்தின் அக்கறையை ஓரளவிற்கு வெளிப்படுத்தன. ஆறே ஆண்டுகளுக்கு பின்னர், போலந்தில் Jorg Haider இன் Freedom Party ஐயும் விஞ்சக்கூடிய வலதுசாரி மக்கள் துதி பாடும், சர்வாதிகார சிந்தனை உடைய கட்சி ஒன்று நாட்டை ஆளுகிறது. இன்னும் கூடுதலான வலது சக்திகளை தளமாகக் கொண்டு இக்கட்சி இயங்கி வருகிறது; இதன் இழிவான தேர்தல் முடிவுகள் எத்தகைய ஜனநாயக சட்டபூர்வத்தன்மையையும் இதற்கு அளிக்கவில்லை. ஆயினும்கூட ஒரு ஐரோப்பிய அரசாங்கம் கூட இதை எதிர்த்துக் கூறவில்லை. ஐரோப்பிய சக தலைவர்களை போலவே, அங்கேலா மேர்க்கல் இந்த உண்மைகளை அசட்டை செய்வது ஐரோப்பிய அரசியலின் நிலைப்பாட்டை பற்றி நன்கு எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் சமூக அழுத்தங்கள் ஆபத்தான முறையில் பெருகி வருவதால், Haider இன் வழிவகைகள் அனைத்து இடங்களிலும் ஏற்கப்படுகின்றன. பிரான்சின் உள்துறை மந்திரி சார்க்கோசி புறநகரில் இருக்கும் எழுச்சி செய்யும் இளைஞர்களை "இழிந்தவர்கள்", "காலிக் கும்பல்" என்று அழைக்கிறார்; முன்னாள் ஜேர்மனிய வணிக, பொருளாதார மந்திரி கிளெமென்ட் வேலையில்லாமல் வாடுபவர்களை "ஒட்டுண்ணிகள்" என்று குறிப்பிடுகிறார். புதிய பயங்கரவாத சட்டங்களின் பெயரால் இங்கிலாந்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுகின்றன; மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலைமை பிரான்சில் பிரகடனப்படுத்தப்படுகிறது. நாட்டின் மிக உயர்ந்த நிறுவன அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஜேர்மனிய அரசியலமைப்பின் விதிகளை புறக்கணித்து ஒதுக்கிய வகையிலான அரசியல் சதிமுறையில்தான் மேர்க்கல் அதிபராக வரமுடிந்தது. |