Sri Lankan peace talks stagger on to
another round
இலங்கை சமாதானப் பேச்சு இன்னொரு சுற்றுக்கு தள்ளாடி நகர்கிறது
By Wije Dias
25 February 2006
Use this
version to print |
Send this link by email |
Email the author
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சுமார் மூன்று
வருடங்களின் பின்னர் முதற்தடவையாக வியாழனன்று ஜெனீவாவில் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் நிலையான
உடன்பாடுகள் எதுவுமின்றி முடிவடைந்தது. ஒரு சுருக்கமான உத்தியோகபூர்வ அறிக்கை, இரு சாராரும் 2002ல்
கைச்சாத்திடப்பட்ட தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையை தூக்கி நிறுத்த இணங்கியதாகவும் மீண்டும் ஏப்பிரல்
19-21 திகதிகளில் சந்திக்கவுள்ளதாகவும் பிரகடனம் செய்தது.
நோர்வே அனுசரனையாளர் குழுவின் தலைவரான எரிக் சொல்ஹெயிம் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில்: "இது என்னுடைய எதிர்பார்ப்பிற்கும் மேலானது. நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது"
என்றார். ஆனால் அத்தகைய முடிவை "எதிர்பாப்பிற்கும் மேலானது" என சொல்ஹெயிம் வரவேற்பதானது மூடிய
கதவுகளுக்குள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தளவு கசப்பானதாக இருந்தது என்பதற்கான அறிகுறியாகும்.
இரு சாராரும் மீண்டும் சந்திக்க உடன்படுவதோடு யுத்த நிறுத்த உடன்படிக்கையை தூக்கி நிறுத்துவதில் தோல்வி
காண்பார்களானால், வன்முறைகளின் அதிகரிப்பும் நாடு மீண்டும் ஒட்டுமொத்த யுத்தத்திற்குள் மூழ்குவதுமே மாற்றீடாக
அமையும்.
நவம்பர் நடுப்பகுதியில் மஹிந்த இராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியானதில் இருந்து கடந்த
மூன்று மாத காலங்களாக, மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளால் இராணுவ சிப்பாய்கள்,
புலி போராளிகள் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புபட்ட துணைப்படை
குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலம்வாய்ந்த சர்வதேச
அழுத்தங்களின் கீழ், இரு சாராரும் தீவின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் புதுப்பிப்பதில் இருந்து
பின்வாங்கியதோடு நீண்ட பித்தலாட்டங்களின் பின்னர் ஜெனீவாவில் நடந்த பேச்சுக்களுக்கு உடன்பட்டனர்.
பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னர் வெற்றி கிடைத்துவிட்டதாக இருசாராரும் கூறிக்கொள்கின்றனர்.
தனது ஊடக மாநாட்டின் போது, அரசாங்கப் பேச்சாளர் ரோஹித போகொல்லாகம, "கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை
நிறுத்த புலிகளை உடன்பட வைப்பதில்" தனது குழு வெற்றி கண்டதாக பிரகடனம் செய்தார். புலிகளின் பிரதான
பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம், அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்படவும் மற்றும் இராணுவ
கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கும் துணைப்படைக் குழுக்களை நிராயுதபாணியாக்கவும் உடன்பட்டுள்ள காரணத்தால்
பேச்சுக்கள் "வெற்றிகரமானதாக" இருந்தது என சுட்டிக்காட்டினார்.
உண்மையில், பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தற்கும் புலிகளுக்கும் இடையிலான பரந்த
பிளவை குறுக்குவதற்கு எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. அவை அவர்களது ஆரம்ப அறிக்கையிலேயே சாட்சி பகர்ந்தன.
அவர்கள் பேச்சுக்களின் பின்னர் ஊடகங்களுக்கு முன்னால் ஒன்றாகத் தோன்ற மறுத்தமையே மூடிய கதவுகளுக்கு
பின்னால் நிலையான உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை ஒட்டு
மொத்தமாக மீளாய்வு செய்ய விரும்புவதாக தெளிவுபடுத்தியிருந்தது. இராஜபக்ஷ கடந்த நவம்பர் ஜனாதிபதி
தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்கள தீவிரவாதக்
கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். தமது ஆதரவிற்கு பரிசாக இலங்கை இராணுவத்தின் நிலையை
பலப்படுத்துவதன் பேரில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் நிலையான மாற்றங்களை செய்வது உட்பட புலிகளுக்கு
எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தி வந்தன.
கடந்த வாரம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் திருத்தப்பட்ட ஆவணம் ஒன்றை
அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் அந்த ஆவணத்தை ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது ஆத்திரமூட்டும் வகையில்
முன்வைக்க திட்டமிட்டிருப்பதகாவும் கொழும்பு ஊடகங்கள் அறிவித்திருந்தன. புலிகள் நடைமுறையில் இருக்கும் யுத்த
நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது பற்றி மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும் என
மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தனர்.
அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான நிமல் சிறிபால டி சில்வாவின்
ஆரம்ப உரையானது யுத்த நிறுத்த உடன்படிக்கை திருத்தப்பட வேண்டும் என சமரசமற்று பிரகடனம் செய்தது.
அவர் உரையை ஆரம்பிக்கும் போதே, நடைமுறையில் உள்ள உடன்படிக்கை "எமது அரசியலமைப்புக்கும்
சட்டத்திற்கும் முரண்பாடானது. மேலும் அது இலங்கை குடியரசின் இறைமைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும்
கேடு விளைவிக்க கூடியதாக உள்ளது." அதை ஏற்றுக்கொண்ட பின்னர் "மக்களுக்கான நிச்சயமான பயன்கள்"
மோதல் நிறுத்தத்தில் இருந்தே பெருக்கெடுத்தது என வலியுறுத்திய அவர்: "உடன்படிக்கையில் இருந்து தோன்றியுள்ள
நிச்சயம் ஆபத்தான ஒழுங்கின்மைகளை திருத்தியமைக்குமாறு நாம் பிரேரிக்கின்றோம்" என பிரகடனம் செய்தார்.
தொடர்ந்து புலிகளின் தொடர்ச்சியான யுத்த நிறுத்த மீறல்களை கண்டனம் செய்வதன்
மூலம் டி சில்வா முன் சென்றார். அவற்றில் பல முற்றிலும் உறுதிப்படுத்தப்படாதவை. இந்த உரை எந்தவொரு
முறையான பேச்சுவார்த்தைக்கும் களம் அமைப்பதற்குப் பதிலாக இலங்கையில் உள்ள அரசாங்கத்தின் இனவாத
பங்காளிகளுக்கு அழைப்பு விடுப்பதையே அதிகம் எதிர்பார்த்தது. கொழும்பில் ஜே.வி.பி தலைவர்களான
சோமவன்ச அமரசிங்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வாசஸ்தலத்தில்
அமைக்கப்பட்டுள்ள "நடவடிக்கை மையத்தில்" இருந்த வாறு பேச்சுவார்த்தைகளை தொலைத்தொடர்பு மூலம்
அவதானித்துக்கொண்டிருந்த அளவில் இராஜபக்ஷ அவர்களுடன் நெருக்கமான ஆலோசனையில் இருந்தார்.
புலிகள் யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி தமது இராணுவத்தை பலப்படுத்துவதகாவும்,
ஒரு தொகை யுத்தநிறுத்த மீறல் வன்முறைகளுக்கு பொறுப்பாளி எனவும், சிறுவர்களை படையில் சேர்ப்பதகாவும்,
சதிக் கொலைகள் மற்றும் படுகொலைகளை செய்வதாகவும் --முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன்
கதிர்காமர் கொலை உட்பட-- முஸ்லிம்களின் உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம்
செய்வதகாவும் டி சில்வா குற்றஞ்சாட்டினார். அவர், இராணுவம் துணைப்படைகளுடன் தொடர்பு வைத்துள்ளது என்ற
புலிகளின் குற்றச்சாட்டை நிராகரித்ததோடு "ஜனாதிபதி இராஜபக்ஷ எமது நாட்டின் அனைத்து தரப்பினருக்கும்
வேறுபாடின்றி சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்க உறுதிகொண்டுள்ளார்" என சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புவைத்துள்ள துணைப்படை
குழுக்களை போலவே, புலிகளும் துஷ்பிரயகோங்கள் மற்றும் படுகொலைகளுக்கு பொறுப்பாளிகள் என்பதில் எவ்வித
சந்தேகமும் கிடையாது. ஆனால் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் உச்சரிப்பதானது
எந்தவொரு அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கும் வழியமைப்பதை விட வேண்டுமென்றே புலிகளை பகைத்துக்கொள்வதை
குறிக்கோளாகக் கொண்டதாகும். கடந்த மூன்று மாதங்களுக்குள் இலங்கை பாதுகாப்புப் படைகள், சுற்றிவளைப்பு
தேடுதல்களில் நூற்றுக்கணக்கான தமிழர்களை தடுத்துவைத்தல் மற்றும் கண்டனப் பேரணிகள் மீது துப்பாக்கிப்
பிரயோகம் செய்தல் போன்று ஜனநாயக உரிமைகளை படுமோசமாக துஷ்பிரயோகம் செய்வதில் ஈடுபட்டமை
வெளிப்படையானதாகும்.
பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாத அதேவேளை, டி
சில்வாவின் உரை பேச்சுக்களை பொறிவின் விளிம்பிற்கே இட்டுச் சென்றுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாலசிங்கம், யுத்த நிறுத்த உடன்படிக்கையை மாற்றியமைப்பது
தொடர்பாக அரசாங்கம் வலியுறுத்துமானால் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிடுவார்கள்
என அச்சுறுத்தியதாக தெரிவித்தார். "அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்ய அல்லது
திருத்தக் கோரியதால் எங்களால் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. நாம் உறுதியாக
முடியாது என்றோம்," என அவர் கூறினார்.
தான் எதிர்தரப்பிற்கு தெரிவித்ததாக பாலசிங்கம் கூறியதாவது: "யுத்த நிறுத்த உடன்படிக்கையின்
பெறுமதியை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால் நாங்கள் வெளியேறுவோம்." அந்த சந்தர்ப்பத்தில், அரசாங்க
பிரதிநிதிகள் விளிம்பில் இருந்து மீண்டும் பின் தள்ளப்பட்டதோடு ஆதரவுமளித்தனர். மாற்று யுத்த நிறுத்த உடன்படிக்கை
முன்வைக்கப்படாததோடு நடைமுறையில் உள்ள ஆவணத்தை அமுல்படுத்துவதை உறுதிப்படுத்துவதை நிலையான கலந்துரையாடல்
குறிக்கோளாகக் கொண்டது.
பாலசிங்கத்தின் ஆரம்ப உரை முக்கிய புள்ளியை கொண்டிருந்தது. அவர் புலிகளுக்கு
விரோதமான துணைப்படைகளின் ஆயுதங்களை களைதல், சாதாரண பொது மக்களை துன்புறுத்துதல், மீன்பிடி
கட்டுப்பாடுகளை தளர்த்தல் மற்றும் வணக்கஸ்தலங்கள், பாடசாலை கட்டிடங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில்
இருந்து துருப்புக்களை வெளியேற்றுதல் உட்பட 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அரசாங்கத்தால்
அமுல்படுத்தப்படாத ஒரு தொகை பிரிவுகளை மேற்கோள் காட்டினார்.
2003 ஏப்பிரலில் முன்னைய பேச்சுக்கள் முறிவடைந்ததில் இருந்து பாலசிங்கம்
சுட்டிக்காட்டினார்: "எங்களது காரியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டு நிலமையை
கவிழ்ப்பதை குறியாக கொண்ட மோசமான யுத்தத்தின் வடிவில் தமிழ் துணைப்படைகளின் வன்முறைகள்
உக்கிரமடைந்தன. இது தமிழ் ஆயுதக் குழுக்களுடன் இலங்கை ஆயுதப் படைகள் செயல்முறையில் இணைந்திருந்த ஒரு
நிழல் யுத்தமாகும்." இத்தகைய அரசாங்க சார்பு ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பாக இலங்கை
இராணுவ புலனாய்வுத் துறையுடனான அவர்களின் நெருக்கமான உறவையும் பற்றி ஒரு "விரிவான அறிக்கையை" அவர்
முன்வைத்தார். "ஆயுதம் ஏந்திய தமிழ் துணைப்படை குழுக்களின் இருப்பானது மறுக்கமுடியாத காரணியாகும்," என
அவர் பிரகடனம் செய்தார்.
பாடசாலைகள், பொது அலுவலகங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களில் இருந்து இராணுவம்
வெளியேறத் தவறியுள்ளதோடு யாழ்ப்பாண குடாநாட்டில் பிரமாண்டமான பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயமாக
தொடர்ந்தும் பேணி வருகின்றது. இதனால் தமது வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் நிலங்களில் இருந்து வெளியேறிய
பத்தாயிரக் கணக்கான மக்களால் மீண்டும் திரும்ப முடியாமல் உள்ளது எனவும் பாலசிங்கம் சுட்டிக்காட்டினார். "உயர்
பாதுகாப்பு வலையங்களில் மனித விலை" என்ற தலைப்பில் அவர் முன்வைத்த ஆவணம், "யாழ்ப்பாணத்தில் 28,830
வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு 13,000 ஏக்கர்
வளமான விவசாய நிலங்களை அவர்களால் அணுக முடியாமல் உள்ளது. உயர் பாதுகாப்பு வலையங்களின் உருவாக்கமானது
20,000 குடும்பங்களை வறுமைக்குள் தள்ளியுள்ளதோடு அவர்கள் ஒரு தசாப்த காலமாக அகதி முகாம்களிலும் நலன்புரி
நிலையங்களிலும் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்," என வெளிப்படுத்தியுள்ளது.
பாலசிங்கத்தின் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையானது, புலிகள்
அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளால் ஒரு மூலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்ற உண்மையை
பிரதிபலிக்கின்றது. 2002ல் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டதோடு ஒரு தனியான தமிழ் நாட்டிற்கான தமது
கோரிக்கையையும் கைவிட்டுள்ள புலிகளின் தலைமை, சிங்கள மற்றும் தமிழ் ஆளும் உயர் தட்டுகளுக்கு தொழிலாள
வர்க்கத்தை கூட்டாக சுரண்ட வாய்ப்பளிக்கும் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை கொழும்புடன்
ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றது. அதற்கு மாறாக, 2003ல் பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்து போனதோடு
புலிகள் சமாதானக் கொடுக்கல் வாங்கல் அற்ற மற்றும் யுத்தம் இல்லாத போதிலும் இராணுவத்தின்
தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு அரசியல் சூனியப் பிரதேசத்திற்குள் விடப்பட்டிருந்தனர்.
சரிந்துகொண்டிருக்கும் சமூக நிலைமைகள் மற்றும் புலிகளின் வரி விதிப்புகளின் காரணமாக
அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றனர். தாம் தமிழ் மக்களின்
"ஏக பிரதிநிதிகள்" என்ற வெற்றுக் கூற்றை பேணிக்கொள்வதற்காக எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமாக
நசுக்குவதன் மூலம் புலிகள் பிரதிபலிக்கின்றனர். கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனத்தை போலவே, புலிகளும்
தமது சமூக அடித்தளத்தை தக்கவைத்துக்கொள்வதன் பேரில் வேண்டுமென்றே இனவாதத்தை கிளறி விடுகின்றனர். இதன்
விளைவாக புலிகளுக்கும் அரசாங்கத்துடன் இணைந்த குழுக்களுக்கும் இடையிலான தாக்குதல்களும் பழிவாங்கல்களும் மாறிமாறி
அதிகரித்துக்கொண்டிருப்பதோடு நாடு மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்குவதற்கான அச்சுறுத்தல் இருந்துகொண்டுள்ளது.
ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவுகள், இலங்கையிலும் சர்வதேச
ரீதியிலும் இறுதியில் நல்லவை வெற்றிபெறும் என்ற போலியான நம்பிக்கையை மட்டுமே ஏற்படுத்துவதாகவே உள்ளது.
சுவிஸ் இராஜதந்திரிகள் பேச்சுக்களை வரவேற்றுள்ளதோடு இன்னுமொரு சுற்று பேச்சுவார்த்தையையும்
எதிர்பார்த்துள்ளனர். இந்தச் செய்தியால் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ள கொழும்பு பங்குச் சந்தை,
பொருளாதார ரீதியில் நாசத்தை ஏற்படுத்தும் யுத்ததிற்கு முடிவுகட்ட விரும்பும் வியாபார வட்டாரங்களின்
எதிர்பார்ப்பை பிரதிபலித்துள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தேவா ரொட்ரிகோ, யுத்த
நிறுத்தத்தை பற்றிக்கொண்டு மேலும் "மிகவும் சாதகமான" பேச்சுக்களை நடத்தக் கூடிய முடிவு என
விவரித்துள்ளார்.
"முடிவுகள் திருப்தியானவை" என தலைப்பிடப்பட்டுள்ள இன்றைய டெயிலி மிரர்
பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்: "ஜெனீவா பேச்சுக்களில் கண்ட வெற்றி பற்றிய செய்தியை இந்த
நாட்டு மக்கள் பெற்றுள்ளமையானது ஒரு நிவாரணம் கிடைத்துள்ளதற்கான சாத்தியமான அறிகுறியாகும்," என
பிரகனம் செய்துள்ளது. முதல் நாள் பேச்சுக்கள் முறிவடைவதற்கான விளிம்புக்கே சென்றதை பற்றி மறைமுகமாக குறிப்பிடும்
அந்த அறிக்கை: "எவ்வாறெனினும் உளநோய் மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளை போல் அறிவுறுத்தல்களை
விடுத்த மனக்குறைகளை, பகிரங்கமாக கபடமின்றி வெளிப்படுத்திய பின்னரும், ஒரு கொந்தளிப்புக்கும் குறைவான
நிலைமைக்கு பேச்சுக்களை திருப்பிவிடுவதில் பேச்சுவார்த்தையாளர்கள் வெற்றி கண்டமை அதிஷ்டவசமானதாகும்,"
என அது தொடர்ந்தும் குறிப்பிடுகிறது.
எவ்வாறெனினும் சாதாரண இலங்கையர்கள் கொண்டாடுவதற்கு இதில் ஒன்றும் கிடையாது.
முடிவில் அதிகாரப்பரவலாக்கல் எனக் குறிப்பிடப்படும் இலக்கை அடைந்தாலும் கூட, தமிழ், சிங்கள அல்லது முஸ்லிம்
உழைக்கும் மக்கள் கொண்டிருக்கக்கூடிய தரமான வாழ்க்கை நிலமைகள் மற்றும் ஜனதாயக உரிமைகளுக்கான அபிலாஷைகளில்
எதுவும் நிறைவேற்றப்படப் போவதில்லை. இத்தகைய தீர்வுகள் நெருக்கடிகளால் நிறைந்தது என்பதை ஜெனீவா
பேச்சுக்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
கடந்த அரை நூற்றாண்டாக, இலங்கை முதலாளித்துவமானது தனது ஆட்சிக்கு முண்டு
கொடுப்பதன் பேரில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக சிங்கள மேலாதிக்கத்தில் தங்கியிருக்கின்றது.
தசாப்த கால பாரபட்சங்களால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் ஆத்திரத்தில் இருந்து வெளித்தோன்றிய
புலிகளும் எந்தவொரு பதிலீட்டையும் வழங்கவில்லை. இருசாராரும் எந்தவொரு அதிகாரப்பரவலாக்கலையும் விட
யுத்தத்தை தோற்றுவிக்க கூடிய இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளனர்.
இந்த வாரம், ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை,
தீவில் மேலும் படுகொலைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தின் தலையீட்டுடன் ஒரு காவலரண்
மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமது உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக புலிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என இராணுவம் முழுமையாக மறுத்ததோடு அதற்கு மாறாக அதே
மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் நபரை படுகொலை செய்ததாக புலிகளை குற்றஞ்சாட்டியது.
கொழும்பில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு பகுதி
ஆய்வாளர்: "குறைந்தபட்சம் ஏப்பிரல் 19 வரையாவது யுத்தப் பிசாசு தொலைவுக்கு சென்றுள்ளது போல் தெரிகிறது.
ஆனால் ஒருவருக்கொருவர் புன்னகைக்கும் அதே வேளை, இரு சாராரும் யுத்தத்திற்கான தயாரிப்புகளை
தொடர்ந்தும் மேற்கொள்வார்கள்," என குறிப்பிட்டுள்ளார்.
See Also :
Top of
page |