WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Pentagon prepares for military strikes
against Iran
ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை பென்டகன் தயாரிக்கிறது
By Peter Symonds
14 February 2006
Back to screen version
ஈரானின் அணு வசதிகள் மீது விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா
திட்டம் வரைந்து வருகிறது என்பதை சென்ற வாரக் கடைசியில் பிரிட்டனிலுள்ள சன்டே டெலிகிராப் பத்திரிகை
வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை உறுதிப்படுத்துகிறது. நீண்ட தூரம் பறக்கின்ற
B2 குண்டுவீச்சு விமானங்கள்
ஒவ்வொன்றும் 20 தொன்கள் எடை கொண்ட, துல்லியமாக தாக்கும் குண்டுகளை அமெரிக்கத் தளங்களில் இருந்து ஏற்றிக்
கொண்டு, அதனைத் தாக்கக்கூடிய ''பெரும்பாலான சாத்தியக்கூறுகள்'' இருப்பதாக கருதப்படுகிறது.
''மத்திய கட்டளை மற்றும் மூலோபாய கட்டளைகளை (Central
Command and Strategic Command) திட்டமிடுபவர்கள், இலக்குகளை
அடையாளப்படுத்தி ஆயுதங்கள் ஏற்றுவதை மதிப்பீடு செய்து இந்த நடவடிக்கைக்கான தயாரிப்புக்களை உருவாக்கி வருகின்றனர்
என்பதை சன்டே டெலிகிராப் அறிந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டின் அலுவலகத்திற்கு
அறிக்கை அனுப்புகின்றனர். இஸ்லாமிய குடியரசின் அணு குண்டு பேராவல்களை தோற்கடிப்பதற்கு இராஜதந்திர நடவடிக்கைகள்
தவறுமானால், நடவடிக்கைக்கான திட்டங்களை அமெரிக்கா புதுப்பிக்கும்'' என்று அந்தக் கட்டுரை தெரிவித்தது.
டெஹ்ரான் தனது அணுத்திட்டங்களை மேற்கொள்ளாது தடுப்பதற்கு ''ஒரு கடைசி முயற்சியாக''
இந்தத் தாக்குதல்கள் அமையுமென்று அந்த பத்திரிகையிடம் பேசிய பென்டகனின் மூத்த ஆலோசகர் கூறியுள்ளார். ஆனால்,
இராணுவ திட்டமிடல் எளிய முறையில் வழக்கமாக நடைபெறுகின்ற ஒன்றல்ல என்பதை சுட்டிக்காட்டிய அவர், ''இது இராணுவ
படைப்பிரிவு மதிப்பீட்டு திட்ட அளவிற்கு மேற்பட்டதாகும். அண்மை மாதங்களில் இது அதிக அளவிற்கு பெரிய அவசர
நிலையை எடுத்துள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார்.
சன்டே டெலிகிராப் செய்தியை வெள்ளை மாளிகை மறுக்கவில்லை. இந்தத் தகவல்
வேண்டுமென்று கசியவிடப்பட்டிருக்கலாம் என்பதையே அது கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
ABC செய்தியில் அந்தக்
கட்டுரை பற்றி கேட்கப்பட்ட போது, அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிசா ரைஸ் பின்வருமாறு வலியுறுத்திக்
கூறினார்: ''ஜனாதிபதி தம்முன் உள்ள எந்த தேர்வுகளையும் தள்ளுபடி செய்து விடுவதில்லை.... ஆனால், ஒரு இராஜதந்திர
தீர்வுகள் உள்ளது. இப்போது நாங்கள் [ஐ.நா]
பாதுகாப்பு சபையில் உள்ளோம். பாதுகாப்பு சபை எடுக்கக்கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன... அவை ஈரான்
தொடர்பாக IAEA [சர்வதேச
அணு சக்தி அமைப்பு]
நிபந்தனைகளை செயல்படுத்த உதவுவதாக அமையும்.''
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT)
ஈரான் மீறி விட்டதாக குற்றம்சாட்டி ஐ.நா. பாதுகாப்பு சபை சாத்தியமான தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதற்கு
அறிக்கை தருவதென்று பிப்ரவரி 4 ல் IAEA
நிர்வாக கவுன்சில் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்தது. இருந்த போதிலும்
டெஹ்ரானுடன் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுமதிக்கின்ற வகையில், மார்ச் துவக்கம் வரை பாதுகாப்பு
சபையில் எந்த கலந்துரையாடல்களும் தாமதப்படுத்தப்பட்டது.
ஆத்திரமூட்டுகின்ற வகையில் பென்டகனால் கசியவிடப்பட்ட இந்த தகவலானது, ஈரானுடன்
மேலும் பதட்டங்களுக்கு தூபம் போடுவதாகவும் மற்றும் இந்த மோதல்களுக்கு ஒரு பேச்சுவார்த்தை மூலம் முற்றுப் புள்ளி
வைப்பது நடைபெறாமல் போகலாம் என்பது தான், இதன் உடனடி விளைவாக இருக்கும். ஈரான் ஆட்சி,
IAEA முடிவு சட்ட
விரோதமானது என்று முத்திரை குத்தி யுரேனியம் செறிவூட்ட ஆய்வை மீண்டும் துவக்கப் போவதாக அறிவித்தது. யுரேனிய
செறிவூட்டல் உட்பட அனைத்து அணுசக்தி எரிபொருள் சுழற்சியின் அம்சங்களையும் மேம்படுத்துவதில்
NPT ன் கீழ் அதற்கு உரிமை இருக்கிறதென்றும், மற்றும் அதன் அணுத்
திட்டங்கள் சமாதான நோக்கங்களுக்காகத் தான் என்றும் டெஹ்ரான் கூறுகிறது.
ஆனால், ரைசின் கருத்துக்கள் கோடிட்டுக் காட்டுவதைப் போல், சன்டே டைம்சில்
வந்துள்ள கட்டுரையின் நோக்கம், ஈரானைப் போன்று இதர ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களான -
பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை
டெஹ்ரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமானால், அவசியமானால் தன்னிச்சையாக வாஷிங்டன்
ஈரானை தாக்குவதற்கு தயாராக இருக்கிறது என்று அந்த நுழைபுலம் இல்லாத அறிவிப்பு கூறுகிறது.
ஈரானின் அணுத் திட்டங்கள் தொடர்பான கவலைகளால் ஊக்குவிக்கப்பட்டு வாஷிங்டன் இந்த
ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால், தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டி நாடுகளுக்கு எதிராக
வளம்மிக்க அந்தப் பிராந்தியத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்துவதை அது நோக்கமாகக்
கொண்டிருக்கிறது. டெஹ்ரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் அல்லது ஒரு இராணுவத் தாக்குதல் நேரடியாக
அமெரிக்காவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் 1979 ல் மன்னர் ஷா ரேசா பலவி (Shah
Reza Pahlavi) ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து வாஷிங்டன்
பொருளாதார முற்றுகையை ஈரான் மீது நிலை நாட்டி வருகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா மற்றும்
ஜப்பான் ஆகிய நாடுகள் ஈரானுடன் கணிசமான பொருளாதார உறவுகளை வளர்த்து வந்திருக்கின்றன. இதனால் அவை
அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.
எந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் அப்பாவி ஈரான் மக்களது படுகொலைக்கு
இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே கொந்தளிப்பில் உள்ள மத்திய கிழக்கை மேலும் ஸ்திரமற்றதாக்கிவிடும்.
பிரிட்டனை தளமாகக்கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான ஒக்ஸ்போர்ட் ஆய்வுக் குழு, நேற்று வெளியிட்ட தனது ஆய்வில் ஈரானின்
அணு வசதிகள் மீது நடத்தப்படும் தொடக்கக் கட்ட குண்டு வீச்சு அலையில் நூற்றுக் கணக்கான சிவிலியன்கள் கொல்லப்படுவார்கள்
என்று மதிப்பிட்டிருக்கிறது. பென்டகன் திட்டமிட்டு ''முடிந்தவரை தொழிற்நுட்ப திறமையுள்ள ஊழியர்களை கொல்வதை
நோக்கமாகக் கொண்டு குண்டு வீசும். எனவே, அது நீண்ட கால அடிப்படையில் ஈரானின் அணுக்கரு
வாய்ப்புக்களுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்'' என்று அது
மேலும் குறிப்பிட்டுள்ளது.
''ஈரான்: ஒரு போரின் விளைவுகள்'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த
அறிக்கை தெளிவானதொரு விவரத்தை விளக்கியிருக்கிறது. அது எந்த அமெரிக்கத் தாக்குதலும் ஈரானின் அணு சக்தி
நிலையங்களோடு நிற்காது. ஆனால், அந்தத் தாக்குதலில் வான் எல்லை, பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு
மையங்கள் உட்பட ஈரானின் எதிர் நடவடிக்கை வலிமையை பலவீனப்படுத்துகின்ற, இதர இராணுவ இலக்குகளையும் குறி
வைத்துத் தாக்குவதாக அமையும். முதல் அலை தாக்குதல்கள் ஆயிரக் கணக்கான ஈரானிய இராணுவ அலுவலர்களை
கொன்று விடும் என்று அது முன்கணிக்கிறது.
அத்துடன் அது முடிந்து விடுவதில்லை. ஈரான் அதன் அணு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப
முயலுமானால், அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படும். அதன் மூலம் ''ஒரு உயர்ந்த
ஆபத்தான, சுழற்சியான வன்முறை'' அந்தப் பிராந்தியம் முழுவதிலும் பரவி விடும். ஒரு அமெரிக்க இராணுவத்
தாக்குதலை எதிர்க்கின்ற, அந்த ஆய்வு விடுத்திருக்கின்ற எச்சரிக்கை பின்வருமாறு: ''ஒரு இடைவிடாத இராணுவ
மோதல்கள் ஈராக், இஸ்ரேல் மற்றும் லெபனான் அத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான், அவற்றுடன் மேற்கு வளைகுடா
அரசுகளும் சம்மந்தப்படுகின்ற சாத்தியக் கூறுகளும் உண்டு.''
இந்த விளைவுகள் அனைத்தும் பிரிட்டனின் சிந்தனை குழுக்களுக்கு தெளிவாக தெரிந்திருப்பதைப்
போன்று பென்டகனில் திட்டமிடுபவர்களுக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் ஈரான் மீது ஒரு இராணுவத்
தாக்குதலுக்கான திட்டம் கசியவிடப்படுவதை வாஷிங்டன் இன்னும் தடுத்து நிறுத்தவில்லை. அவை 2003 ல் அண்டை நாடான
ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பை போன்று கொடூரமாகவும் கிரிமினல் தன்மையோடும்
அமைந்துள்ளன. அத்தகையதொரு தாக்குதல் நிச்சயம் நடக்கும் என்று கூறிவிட முடியாது. ஆனால், இந்த சம்பவத்திற்கு
ஒரு நிச்சயமான அரசியல் தர்க்கவியல் உள்ளது.
டெஹ்ரானிலுள்ள மதவாத ஆட்சி தனது சொந்த பலவீனமான நிலையை முட்டுக்கொடுத்து
நிறுத்துவதற்காக தேசியவாத வெறியார்வத்தை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. அது பின்வாங்கும் என்பதற்கு எந்த
சமிக்கையையும் காட்டவில்லை. சனிக்கிழமையன்று டெஹ்ரானில் நடைபெற்ற ஒரு பெரிய பேரணியில் ஜனாதிபதி மகம்மது
அஹமதினேஜாத் கோடிட்டுக் காட்டியது என்னவென்றால், ஈரான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்தே தன்னை
முழுமையாக விலக்கி கொள்ளும் என்பதாகும். ரஷ்ய மண்ணில் கூட்டாக யுரேனிய செறிவூட்ட தொழிற்சாலையை அமைப்பது
என்ற ஒரு சமரச திட்டத்தை விவாதிப்பதற்கு மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை டெஹ்ரான் கால
வரையற்று தள்ளி வைக்கவும் செய்திருக்கிறது. இந்தப் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்வதற்கு ரஷ்யா
மேற்கொண்டுள்ள முயற்சிகளை அது சீர்குலைப்பதாக அமைந்திருக்கிறது.
இதன் ஒரு விளைவாக மார்ச் 6 ல் நடைபெறும்
IAEA நிர்வாக சபையின் அடுத்த கூட்டமானது, ஐ.நா. பாதுகாப்பு
சபைக்கு ஈரானை தீர்ப்புக்கு விடுவதாக அமையக் கூடும். இராணுவ நடவடிக்கை நிகழ்ச்சி நிரலில் இல்லாததால், ஐ.நா.
தண்டனை வழங்கும் பொருளாதார தடைகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது. சீனா, ரஷ்யா
மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் அதை தடுத்து நிறுத்த முயலும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், கடந்த
காலத்தில் நடந்ததைப் போன்று அமெரிக்காவுடன் ஒரு மோதல் போக்கை மேற்கொள்ளும் ஆபத்தான முடிவிற்கு அவை
வராமல் இருக்கக் கூடும். இதற்கு மாறாக, புஷ் நிர்வாகம் அச்சுறுத்துவதற்கு வெட்கப்படவில்லை. தேவைப்படுமானால்
தனது நோக்கங்களை வென்றெடுப்பதற்கு மிகக் கொடூரமான நடவடிக்கைகளையும் அது எடுக்கத் தயாராக உள்ளது.
வாஷிங்டனில் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்த பென்டகன் திட்டங்களை
தயாரித்து வருகிறது என்ற செய்தி ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்தவிதமான விமர்சன கருத்துக்களையும் தூண்டிவிடவில்லை.
அது, அதன் அனைத்து தேர்வுகளும் ----இராணுவத் தாக்குதல் உட்பட--- மேசையின் மேல் உள்ளது என்று புஷ் தெரிவித்த
நிலையை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதை கோடிட்டுக் காட்டுகிறது.
புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு, ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தீவிர வலதுசாரிகளிடமிருந்து
வந்திருக்கின்றது. நவீன- பழமைவாதிகள் என்றழைக்கப்படுகின்ற அவர்கள், ரைஸ்சின் இராஜதந்திர முயற்சிகளை புண்படுத்தும்
வகையில் தள்ளுபடி செய்தனர். ஈராக்கில் நடந்ததைப் போன்று ஈரானிலும் ''ஆட்சி மாற்றத்தை'' கொண்டு வருவதற்கு
ஒரு ஜனநாயக சிலுவைப் போரை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர்கள் விடுத்தனர்.
ஜனவரி 30 அன்று வாஷிங்டன் போஸ்டில் ''அந்த ஆட்சி முட்டாள்தனமானது''
என்ற தலைப்பில் போக்கிரித்தனமான பழைமைவாதி ரோபர்ட் காகன் ஒரு கருத்தை வெளியிட்டு, ஈரான் அணு வசதி நிலையங்கள்
மீது நடத்தப்படும் ஒரு விமானத் தாக்குதல் பயனற்றது என்று அதனை தள்ளுபடி செய்தார். ஈரானின் பதிலடி நடவடிக்கையின்
ஆபத்து பற்றி சுட்டிக் காட்டியுள்ள அவர், ''போரை தீவிரப்படுத்துவதை நாம் தயாரித்திருந்திராவிடில், இறுதியில்
ஆட்சியைக் கிழிறக்கும் கட்டத்தில் துவங்கிய பொழுதை விட படுமோசமான நிலையில் போய் முடிந்திருப்போம்'' என்று
அறிவித்தார்.
காகன் தந்துள்ள தீர்வின்படி, ஆட்சியை கவிழ்ப்பதற்கு மறைமுகமாக ஆதரவு தர வேண்டும்
என்பது - அமெரிக்க ஆதரவோடு உக்ரைனில், ஜோர்ஜியாவில் மற்றும் லெபனானில் நடைபெற்றது போன்ற வண்ணப் புரட்சிகள்
என்றழைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஈரானிலும் நடத்த வேண்டும் என்பதாகும். ஆனால் அவர், ''இந்த அல்லது அடுத்த
நிர்வாகம் அரசியல் மாற்றத்திற்காக காத்திருப்பது ஆபத்துக்கள் நிறைந்தது என்று முடிவு செய்யுமானால், அப்போது பதில்
என்னவாக இருக்க வேண்டும் என்றால், ஒரு படையெடுப்பு விமானப் படை மற்றும் ஏவுகணைத் தாக்குதலாக மட்டுமே அமையாமல்,
ஈரானின் அணுத் திட்டங்களுக்கும் அதன் ஆட்சிக்கும் முற்றுப் புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்'' என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் அமெரிக்க இராணுவம் புதை சேற்றை உருவாக்கிவிட்டதற்கு அப்பாலும், பக்கத்து
ஈரான் மீது மற்றொரு கொடூரமான இராணுவ அதிரடி நடவடிக்கையை தெளிவாக ஆதரிக்கின்ற நிலை அமெரிக்க அரசியல்
ஸ்தாபனத்தில் உள்ளது. ஆகவே, ஏற்கனவே தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதைத்தான் சன்டே டெலிகிராப்
கட்டுரை கோடிட்டுக் காட்டியுள்ளது. |