Sri Lankan government makes provocative
preparations for Geneva talks
இலங்கை அரசாங்கம் ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்காக ஆத்திரமூட்டல் தயாரிப்புகளை
மேற்கொள்கிறது
By Wije Dias
21 February 2006
Use this
version to print |
Send this link by email |
Email the author
இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும்
இடையிலான இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள்
சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக இடம்பெறுவதோடு, உக்கிரமான சர்வதேச அழுத்தம்
மற்றும் நீண்ட இராஜதந்திர சச்சரவுகளின் பின்னரே இந்த பேச்சுக்களுக்கான உடன்பாடு காணப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் 2002 பெப்பிரவரியில் கைச்சாத்திடப்பட்ட அதிகளவில்
ஆட்டங்கண்டு போயுள்ள யுத்தநிறுத்த உடன்படிக்கையை பற்றி கலந்துரையாடுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த
நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே குறிப்பிடத்தக்களவு வன்முறைகள்
அதிகரித்திருந்துடன், இராணுவ சிப்பாய்கள் மற்றும் இராணுவத்துடன் இணைந்த ஆயுததாரிகள், த.ஈ.வி.புலிகளின்
போராளிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட இருபகுதிகளிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த
வன்முறைகளால் உயிரிழந்துள்ளனர்.
த.ஈ.வி.புலிகளின் தலைவர்கள், யுத்தநிறுத்தம் "முழுமையாக அமுல்படுத்தப்படுவதை"
உறுதிப்படுத்தும் வழிவகைகளை காணுவதுடன் கலந்துரையாடல்கள் வரையறுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஆயினும், கொழும்பு ஊடகங்களின்படி, ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும்,
புலிகள் மீது புதிய கட்டுப்பாடுகளை திணிக்கும் மற்றும் இலங்கை இராணுவத்தின் கைகளை பலப்படுத்தும் ஒரு புதுப்பிக்கப்பட்ட
உடன்படிக்கையை முன்வைக்க ஆத்திரமூட்டும் வகையில் திட்டமிடுகின்றனர்.
பிரேரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கையின் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்காவிடினும்,
இதற்கான வரைவு தமிழர் விரோத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய
கட்டுசியுடனும் நெருக்கமான உறவுகொண்ட சட்டவல்லுனர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தில் உத்தியோகபூர்வமாக அங்கம் வகிக்காவிட்டாலும், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் ஜனாதிபதித்
தேர்தலுக்கு முன்னதாக இராஜபக்ஷவுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை கைச்சாத்திட்டுக்கொண்டதோடு சுதந்திர
முன்னணி அரசாங்கத்தற்கு பாராளுமன்ற ஆதரவையும் வழங்குகின்றன.
இராஜபக்ஷ, தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழர் விரோத இனவாதத்தை
வேண்டுமென்ற கிளறிவிட்ட ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் உதவியுடன் சற்றே வெற்றிபெற்றார்.
ஜே.வி.பி உடனான அவரது தேர்தல் உடன்படிக்கை, யுத்தநிறுத்த உடன்படிக்கை "நாட்டிற்கு பாதகமானதாக"
இருப்பதாக விவரிப்பதோடு அதை முற்றாக பரிசோதிக்குமாறு அழைப்புவிடுக்கும் ஒரு பிரிவை உள்ளடக்கிக்
கொண்டுள்ளது. இராணுவ உயர்மட்டத்தில் உள்ள பலரும் கூட, த.ஈ.வி.புலிகள் மீது கடுமையான யுத்த நிறுத்த
நிபந்தனைகளை விதிக்கும் உடன்படிக்கையை அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜெனீவாவிற்கான அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு, சுகாதார அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா தலைமையிலான நான்கு அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கியதாக உள்ளது. கடற்படைத்
தளபதி வசன்த கரன்னகொட, பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னான்டோ மற்றும் ஜனாதிபதியின் சகோதரரும்
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய இராஜபக்ஷ ஆகியோரும் இந்தக் குழுவில் அடங்குவர்.
புதிய யுத்தநிறுத்த உடன்படிக்கையை வரைவதில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும்
பிரசித்தி பெற்ற சட்டத்தரணி எச்.எல். டி சில்வாவை உள்ளடக்கியிருப்பதானது குறிப்பிடத்தக்க விடயமாகும். டி
சில்வா, 2004 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில்
அமைக்கப்பட்ட சுனாமிக்குப் பிந்திய நடவடிக்கை நிர்வாக அமைப்புக்கு எதிராக ஒரு உயர்நீதிமன்ற வழக்கை
தொடுப்பதற்காக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவாலும் பயன்படுத்தப்பட்டவராகும். ஜே.வி.பி யும்
ஜாதிக ஹெல உறுமயவும் புலிகளுடனான இந்த நிர்வாக அமைப்பை இலங்கை மக்களை காட்டிக் கொடுக்கும் செயல்
என கசப்புடன் எதிர்த்தன.
கடந்த வார கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி,
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையல் அமைக்கப்பட்டுள்ள ஒரு
"இயங்கு மையத்தில்" இருந்து தொலைத்தொடர்பின் ஊடாக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் ஜெனீவா
பேச்சுக்களில் தலையீடு செய்யவுள்ளன. இந்த மையம், சுவிட்ஸலாந்தில் சற்றோ டு போஸ் கோட்டையில் இருக்கும்
அரசாங்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு ஒரு நேரடியான இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், ஜே.வி.பி மற்றும்
ஜாதிக ஹெல உறுமய பிரதிநிதிகளுடன் இருக்கும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் பிரதானமாக மூடிய
கதவுகளுக்குப் பின்னால் நடக்கவுள்ள பேச்சுக்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வசதியை ஏற்படுத்தும்.
பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெலுறுமயவை
உள்ளடக்கிக்கொள்வதனாது நிலைமையை உயர்ந்தளவில் கொழுந்துவிட்டு எரியச் செய்யும். இரு கட்சிகளுமே
நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பதோடு புலிகளுக்கு எந்தவொரு சலுகை
வழங்கலையும் முழுத் தேசத்துரோகமாக கருதுகின்றன. ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பெளத்த பிக்குவுமான
எல்லாவல மேதானந்த, சமாதானப் பேச்சுக்கள் தோல்வியடைந்தால் அரசாங்கம் யுத்த்திற்குத் தயார் செய்ய
வேண்டும் என கடந்த வெள்ளியன்று பிரகடனம் செய்தார். "பிரபாகரன் (புலிகளின் தலைவர்) உயிரிழந்தால்,
இலங்கை சிறந்த நிலையில் இருக்கும். அவர் சமாதான முன்னெடுப்புகளை இடறிவிடும் ஒரு தடையாக உள்ளார்.
நாம் சமுதாயத்தின் மீதான அவரது தலையீட்டை இல்லாமல் செய்ய வேண்டும்," என அவர் ராய்ட்டர் செய்திச்
சேவைக்குத் தெரிவித்தார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யப்படக் கூடாது என்பதில் புலிகள்
கடுமையாக உள்ளனர். புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம் கடந்த வார சண்டே
லீடர் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: "நாம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவொரு பிழை
திருத்தத்தையோ அல்லது புதிதாக எதையும் சேர்ப்பதையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால்
உடன்படிக்கையின் பிரிவுகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்த வலியுறுத்துவோம்." புலிகள்
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் பலவிதமான துணைப்படை குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்றும்
இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை கலைக்க வேண்டும் எனவும் இலங்கை
அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
புலிகள் குறிப்பாக 2003இல் தம்மிடமிருந்து பிரிந்து சென்ற கருணா
என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான துணைப்படையின் நடவடிக்கைகளைப் பற்றி அக்கறை
செலுத்துகிறது. கருணா குழு தீவின் கிழக்குப்பகுதியில் இருந்து இயங்குவதோடு பல புலி உறுப்பினர்களையும்
ஆதரவாளர்களையும் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளது. அரசாங்கம் மறுப்புத் தெரிவித்த
போதிலும், புலிகள் மீதான தாக்குதல்களில் இராணுவத்தின் சில பிரிவினருக்கும் கருணா கும்பலுக்கும் இடையிலான
உறவுகள் பற்றிய ஆதாரங்கள் தொடர்ந்தும் வெளிவந்தவண்ணமுள்ளன. தற்போதைய யுத்த நிறுத்தத்தின் கீழ்,
அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களில் இயங்கும் எந்தவொரு குழுவையும்
நிராயுதபாணிகளாக்குவதற்கான பொறுப்பு வகிக்கின்றது.
பிரபாகரன், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்,
கொழும்பை சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட நெருக்குமாறு "சர்வதேச சமூகத்திற்கு" அழைப்பு விடுத்தார்.
அவர் நவம்பர் 27 ஆற்றும் வருடாந்த மாவீரர் தின உரையில், புதிய இராஜபக்ஷ அரசாங்கம் "ஒரு
பொறுப்புவாய்ந்த அரசியல் வேலைத்திட்டத்துடன் விரைவில் முன்வராவிடில்" புலிகள் "(தமிழ்) தாயகத்தில்
சுயநிர்ணய உரிமையை ஸ்தாபிக்கும் போராட்டத்தை" உக்கிரப்படுத்துவர் என எச்சரித்தார்.
எவ்வாறெனினும், கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் வன்முறைகள் கூர்மையாக
அதிகரித்து வந்த அளவில், பெரும் வல்லரசுகள், குறிப்பாக அமெரிக்கா, புலிகளை கண்டனம் செய்த அதே வேளை
இலங்கை அரசாங்கத்தின் "பொறுமைக்கு" பாராட்டுத் தெரிவித்ததன் மூலம் அரசாங்கத்தின் பக்கம்
சார்ந்திருந்தனர். ஜனவரி நடுப்பகுதியில், அமெரிக்க தூதர் ஜெஃப்ரி லன்ஸ்டட், புலிகள் பேச்சுவார்த்தை
மேசைக்கு திரும்பாவிடில், "ஒரு பலம் வாய்ந்த, மேலும் திறமைவாய்ந்த மற்றும் மேலும் உறுதியான இலங்கை
இராணுவத்தை" புலிகள் எதிர்கொள்வர் என எச்சரிக்கை செய்தார். அதைத் தொடர்ந்து கொழும்புக்கு விஜயம்
செய்த, அமெரிக்க இராஜாங்கச் செயாலளர்களில் ஒருவரான நிக்கலஸ் பேர்ன்ஸ், "நாட்டை யுத்தத்தில்
தொடர்ந்தும் வைத்துள்ள ஒரு வெறுக்கத்தக்க குழு" என புலிகளை வகைப்படுத்தினார்.
அமெரிக்கா ஒரு மறைமுகமான பாத்திரத்தை இட்டு நிருப்புவதாகத் தோன்றினாலும்,
ஜெனீவா பேச்சுக்களைத் தயார் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. அரசாங்கம் பிரதிநிதிகள் குழு,
அமெரிக்காவில் உள்ள Harvard Business
School இன் ஒரு பாகமாக 1979இல் அமைக்கப்பட்ட ஒரு
புத்திஜீவி குழுவான ஹவார்ட் பேச்சுவார்த்தைத் திட்டம் என்ற அமைப்பிடம் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு
குழுவிடம் இருந்து ஒரு ஆழமான பயிற்சியைப் பெற்றுள்ளது.
புஷ் நிர்வாகமானது, தெற்காசியாவில் அமெரிக்க மூலோபாய மற்றும்
பொருளாதார நலன்களுக்கு குறுக்கே நிற்கும் தீவின் 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை
மூலமான தீர்வுகான உத்தியோகபூர்வமாக நெருக்கி வருகின்றது. ஜனாதிபதி புஷ் குறிப்பாக இந்தியாவுடன்
நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக அடுத்த மாதம் இந்தப் பிராந்தியத்திற்கு விஜயம்
செய்யவுள்ளார். ஆயினும், தூதர் லன்ஸ்டட் வெளியிட்ட கருத்துக்கள், பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில்
புலிகளுக்கு எதிரான எந்தவொரு புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திலும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு ஆதரவு வழங்குவதைப்
பற்றி அமெரிக்கா சிந்தித்துக் கொண்டிருக்கின்றது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு இறுதி சமாதானத் தீர்விலும் புலிகளுக்கும் இராஜபக்ஷவிற்கும் இடையில்
ஆழமான வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். நவம்பர் தேர்தலின் போது, 2002 மற்றும் 2003ஆம்
ஆண்டுகளில் நடந்த முன்னைய பேச்சுவார்த்தைகளில் சமஷ்டித் தீர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது போல் அன்றி,
யுத்தத்திற்கான எந்தவொரு முடிவும் "ஒற்றை ஆட்சியையே" அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என
இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். கடந்த வாரம் ராய்ட்டருக்கு வழங்கி ஒரு செவ்வியில், ஜனாதிபதி பதட்ட
நிலைமைகளுக்கு மேலும் எண்ணெய் வார்க்கும் வகையில் பின்வருமாறு தெரிவித்தார்: "எமக்கு அதிகாரத்தைப்
பகிர்ந்துகொள்வதற்கு ஒரே ஒரு நாடே உள்ளது. ஒரு தனியான அரசு கிடையாது. அந்தக் கருத்து விலக்கிக்
கொள்ளப்பட வேண்டும்... அது முற்றிலும் பொருத்தமில்லாதது."
இதற்கு புலிகள் ஆத்திரத்துடன் பதில் அளித்திருந்தனர்: "ஒற்றை ஆட்சி அரசாங்கம்
என்பது, உண்மையான யதார்த்தத்திற்குள் பார்த்தால், சிங்கள பாராளுமன்றம், சிங்கள அரசியலமைப்பு, சிங்கள
நீதித்துறை, சிங்கள அதிகாரத்துவம் மற்றும் சிங்கள ஆயுதப்படைகள் நாட்டை ஆளுவதையே அர்த்தப்படுத்துகின்றது.
அது ஒற்றையாட்சி அரசியலமைப்பை மையமாகக் கொண்ட பொதுக் கருத்துக்கு இணங்கிப் போகாத மேலாதிக்கமாகும்.
இதில் தமிழ் மக்கள் கொடூரமான படுகொலைகளை தொடர்ந்தும் எதிர்கொள்வர்," என பிரகடனம் செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள கூட்டுத்தாபன தட்டுக்கள், வெளிநாட்டு முதலீட்டிற்கும் மற்றும்
தீவை பூகோள உற்பத்தி முன்னெடுப்புகளுடன் இணைக்கவும் ஒரு தடையாக உருவாகியுள்ள இந்த யுத்தத்திற்கு
முடிவுகட்ட விரும்புகின்றன. எதிர்பார்ப்புகள் உயர்ந்தளவினதாக இல்லாவிட்டாலும், கொழும்பு பங்குச் சந்தை பதட்டநிலையில்
உள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் பேச்சுக்கள் வெற்றியடைய வீடுகளில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுமாறு மக்களுக்கு
அழைப்பு விடுப்பதற்கும் அப்பால் இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் வேறு எதையும் செய்ய முடியவில்லை.
இதே போன்ற தோல்வி மனப்பாண்மையான பாங்கில், கடந்த வார சண்டே டைம்ஸ்
பத்திரிகை "ஜெனீவாவில் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்" என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் தலைப்பை
வரைந்திருந்தது. அப் பத்திரிகை இரு சாராருக்கும் இடையிலான பாரிய இடைவெளியையும்
பேச்சுக்களின் வரையைறையையும் சுட்டிக்காட்டிய பின்னர், "விவாத புள்ளிகளை சேகரிப்பதில் முன்கூட்டியே ஈடுபடுத்திக்கொள்ள
வேண்டாம்..." என இருசாருக்கும் அழைப்பு விடுத்துள்ளதோடு "ஜெனீவாவிலான சவால்கள் எவ்வெளவு கடினமாக
இப்பினும், படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். சமாதான முன்னெடுப்பின் தற்போதைய
கட்டத்தில் அவர்களால் (மக்களால்) எதிர்பார்க்கக் கூடியது வேறொன்றும் அல்ல," எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மட்டுப்படுத்தப்பட்ட குறிக்கோளும் கூட தடைகளால் நிரம்பியுள்ளது. வர்த்தகர்களில்
சிலதட்டினர் யுத்தத்திற்கு முடிவை எதிர்பார்க்கும் அதேவேளை, கொழும்பில் உள்ள ஆளும் தொழிலாள வர்க்கத்தை
பிளவுபடுத்தவும் தமது ஆட்சியை தூக்கி நிறுத்தவும் சுதந்திரமடைந்ததில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ள சிங்கள மேலாதிக்க
அரசியலில் இருந்து விடுபடுவதற்கு இயற்கையாகவே இலாயக்கற்றுள்து. இராஜபக்ஷவின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடும்
மற்றும் ஜெனீவா பேச்சுக்களுக்கான தாயாரிப்புகளில் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு முன்னணி பங்கு
வழங்கியமையும், இந்தப் பேச்சுவார்த்தைகள் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண்பதற்கு பதிலாக
யுத்தத்திற்கு முன்னோடியாக அமையக் கூடும் என்றே தோன்றுகிறது.
Top of
page
|