World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்குUS bullies IAEA into reporting Iran to the UN Security Council ஐ.நா பாதுகாப்பு சபைக்கு ஈரான்பற்றி முறையீடு செய்யுமாறு IAEA வை அமெரிக்கா மிரட்டுகிறது By Peter Symonds ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைக்கும் எதிர்கால இராணுவ நடவடிக்கைக்கும் அடிப்படையை அமைக்கின்ற ஒரு முடிவில், சர்வதேச அணு சக்தி அமைப்பின் (International Atomic Energy Agency - IAEA) நிர்வாக அவையானது, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சனிக்கிழமையன்று டெஹ்ரான் பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு முறையிடுவதற்கு வாக்களித்தது. அதன் அணுக்கரு ஆற்றல் திட்டங்கள் குறித்து தண்டனை நடவடிக்கைக்காக ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் குறிப்புரைக்கப்படுவதற்கு 2003 முதல் வற்புறுத்தி வருகின்ற புஷ் நிர்வாகம் இதுபற்றி வாக்கெடுப்பு நடந்ததும் உடனடியாகப் பாராட்டியது. ''உலகம் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்காது....என்ற ஒரு தெளிவான செய்தி'' அந்த முடிவு என்று ஜனாதிபதி புஷ் அறிவித்தார். ''பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உலகின் முன்னணி அரசு'' என்று ஈரானை முத்திரை குத்துவதன் மூலம், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்டு ரம்ஸ்ஸ்பீல்டு திட்டமிட்டே பதட்டங்களை கிளறி விடுகின்ற வகையில், ஜேர்மனியில் அதே தொனியில் பேசினார். ''உலகம் விரும்பவில்லை மற்றும் ஒரு அணுக்குரு ஆற்றல் கொண்ட ஈரானை தடுப்பதற்கு ஒன்றினைந்து பணியாற்றியாக வேண்டும்'' என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்கா தலைமையில் சட்டவிரோதமாக ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டதை, உலகம் முழுவதிலும் பத்து மில்லியன் கணக்கான மக்கள் எதிர்த்தனர். மற்றும் தொடர்ந்தும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை வாஷிங்டன் கையில் எடுத்துக் கொண்டு ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் பற்றி அச்சுறுத்தி, முடிந்தால் இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட விருக்கிறதே என்று சந்தேகத்திற்கிடமின்றி பயத்துடன் மீண்டும் ஒரு முறை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சனிக்கிழமையன்று வியன்னாவில் நடைபெற்ற IAEA கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை ஜேர்மனியுடன் சேர்ந்து முடிவு எடுத்தன. தனது யுரேனிய செறிவூட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி, IAEA சோதனைகளுக்கு முழுமையாக ஈரான் ஒத்துழைக்கத் தவறுமானால் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ''அறிக்கை தர வேண்டும்'' என்ற தீர்மானத்தை ஆதரிப்பது என்று அந்த கூட்டத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஈரானின் அணுத் திட்டங்கள் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு விவாதம் நடத்தப்படுவதை ரஷ்யா மற்றும் சீனா முதல் தடவையாக கூட்டத்தில் ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கவையாகும். அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுக் கருத்து எதுவும் உருவாகவில்லை என்றாலும் மாஸ்கோவும் பெய்ஜிங்கும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டன. இதில் அமெரிக்கா காட்டிய ஒரே சலுகை என்னவென்றால், ஈரான் பற்றிய சம்பிரதாய ஐ.நா. விவாதத்தை ஒரு மாதம் தள்ளி வைப்பது என்பது தான். அதன் மூலம் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு டெஹ்ரானை மிரட்டவோ அல்லது சரிக்கட்டவோ முயலுவதற்கு அந்த இரு நாடுகளுக்கும் சிறிது கால அவகாசம் தரப்பட்டது. ஈராக் போன்று, ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் போர்வெறி நிலைக்கு அதன் அணு ஆயுதத் திட்டம் என்று குற்றம்சாட்டப்பட்டுவருவது முதன்மையானதல்ல. வளம்-நிறைந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கின்ற அதன் அபிலாஷைகளினால் வழிநடத்தப்பட்டவையாக புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு சபை ஈரான் மீது பொருளாதார தடைகளை திணிக்குமானால், அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படாத ஒரே பெரிய வல்லரசு குறிப்பிட்டத்தக்க வகையில் அமெரிக்கா தான். அது 1979 ல் ஷா ரேசா பலவி (Shah Reza Pahlavi) பதவியிலிருந்து வீழ்ந்தது முதல் அந்த நாட்டில் ஒரு பொருளாதார முற்றுகையை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐராப்பிய ஒன்றியம்-3 ---பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்--- வாஷிங்டனுக்கும் மற்றும் டெஹ்ரானுக்கும் இடையிலான ஒரு வழியை முன்னெடுப்பதற்கு முயன்று வருகின்றன. ஈரானுக்கு பொருளாதார தொழிற்நுட்ப மற்றும் பாதுகாப்பு அனுகூலங்களை வழங்குகின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு கைமாறாக, ஈரான் அதன் யுரேனிய செறிவூட்ட திட்டங்களை கைவிட வேண்டுமென அவை ஊக்குவித்து வருகின்றன. சென்ற ஆண்டு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்ட நிலையில், ஐரோப்பிய வல்லரசுகள் வாஷிங்டனுடன் ஒரு உள்ளார்ந்த மோதலுக்கும், ஈரானில் அவற்றின் கணிசமான பொருளாதார நலன்களுக்கும் இடையில் ஏதாவது ஒரு தரப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகி அமெரிக்காவிற்கு பின்னணியில் அணி வகுக்க வேண்டிய நிலை அவற்றிக்கு ஏற்பட்டுள்ளன. எவ்வளவு தான் தயக்கமிருந்தாலும், இப்போது ரஷ்யாவும் சீனாவும் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அணு உலைகளை கட்டுவதில் ஒப்பந்தங்களையும் பெருமளவில் ஆயுதங்களை விற்பதிலும் மாஸ்கோ இழப்பை சந்திக்க வேண்டும். பெய்ஜிங் ஈரானின் எண்ணெய் தொழிற்துறையில் பெருமளவிற்கு முதலீடு செய்திருக்கிறது. ஈரானிலிருந்து அதன் எண்ணெய் தேவைகளில் 14 சதவீதம் பெறுகிறது. மற்றும் மிக விரைவில் ஈரானின் மிகப் பெரிய வர்த்தக பங்காண்மையாக பெய்ஜிங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் ஒரு நாடும் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், ஐ.நா பாதுகாப்பு சபை, ஈரானில் தலையிடுவதற்கு வாக்களித்திருப்பது அத்தகைய தண்டனை நடவடிக்கைகள் வருவதை தவிர்க்க முடியாத வகையில் ஒரு அடி நெருக்கமாக கொண்டுவந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் சீனாவை தனது வழிக்கு கொண்டுவர அழுத்தம் கொடுத்து IAEA நிர்வாகக் குழுவிலுள்ள 35 உறுப்பினர்களில் ஒரு பெரும்பான்மையை பெறுவது வாஷிங்டனுக்கு நேரடியாக நடைபெறக் கூடிய ஒன்று. அந்த அவசரக் கூட்டம் சென்ற வியாழனன்று துவங்கியது. ஆனால், வாக்கெடுப்பு சனிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் இறுதிப் பெரும்பான்மை முடிந்த வரை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் - அதில் 27 நாடுகள் ஆதரவாகவும் மூன்று நாடுகள் இடம் பெறா நிலையும் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற அமெரிக்காவின் நெருக்கமான கூட்டணியினர்களை கணக்கிட முடியும் என்றாலும் இதர நாடுகளை மிரட்டி பணிய வைக்க வேண்டும். திரைக்குப் பின்னால் நடைபெற்ற அற்பத்தனமான வாதாட்டத்தில், ஈரான் மீது தெரிவிக்கப்படும் சர்வதேச கண்டனங்களை சுற்றிலும் சிடுமூஞ்சித்தனம் மற்றும் பாசங்குத்தனம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியா அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட மறுத்துள்ளதுடன், அணு ஆயுதங்களை குவித்திருக்கிறது. அப்படியிருந்தும் இரு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி ஒத்துழைப்பை உயர்த்துவதற்காக புது டில்லியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வாஷிங்டன் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவை இந்தியா ஆதரிக்காவிட்டால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ''செத்து விடும்'' என்று சென்ற மாதம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக புது டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதர் டேவிட் மல்போர்டு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அவருடைய கருத்து அமெரிக்காவிடமிருந்து சம்பிரதாய முறையில் திரும்பப் பெற்றாலும், அக் கருத்து இந்தியாவில் ஒரு கண்டன சூறாவளியை கட்டவிழ்த்துவிட்ட அதேநேரத்தில் பின்னணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அது சந்தேகத்திற்கு இடமின்றி எதிரொலித்தது. எப்படியிருந்தபோதிலும் இந்தியா கடமை தவறாது பெரும்பான்மையோடு சேர்ந்து வாக்களித்தது. அமெரிக்காவின் இரட்டை வேடத்திற்கு மற்றொரு தெளிவாகத் தெரிகின்ற எடுத்துக்காட்டு வாஷிங்டனின் நெருக்கமான நேச நாடான இஸ்ரேல் சம்மந்தப்பட்டதாகும். அது இந்தியாவை போன்று NPT-ல் கையெழுத்திட மறுத்துள்ளதுடன், அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. ஆனால், சர்வதேச பிரச்சாரக் கண்டனங்கள் எதையும் அது எதிர்கொள்ளவில்லை. எகிப்து மற்றும் அணி சேரா நாடுகள் இயக்கம் என்றழைக்கப்படுவதன் இதர உறுப்பினர்கள் IAEA கூட்டத்தில் தயக்கத்தோடு விடுத்த வேண்டுகோளின் இறுதித் தீர்மானத்தில் ''அணு ஆயுதமற்ற மத்திய கிழக்கு'' என்ற வாசகம் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒரு அழைப்பு விடுத்தன. ''பேரழிவுகரமான ஆயுதங்கள் இல்லாத ஒரு மத்திய கிழக்கு'' என்ற ஒரு குறைந்த நேரடி குறிப்பிற்கு இறுதியாக அமெரிக்கா இணங்கிய பொழுது எகிப்தும் வாஷிங்டனுடன் சேர்ந்து வாக்களித்தது. ஏமன், இலங்கை மற்றும் கானா போன்ற சிறிய நாடுகள் வாக்களிப்பதற்கு உறுதி செய்து தருவதற்கு அச்சுறுத்தல்கள் அல்லது ஆசை காட்டும் போக்கு கடைபிடிக்கப்பட்டது என்பதை மட்டுமே அனுமானிக்க முடியும். கியூபா, சிரியா மற்றும் வெனிசூலா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. அவை உடனடியாக அமெரிக்க அரசுத் துறை துணைச் செயலாளர் நிக்கோலஸ் பேர்ன்சினால் ''மூன்று நாடுகளின் கும்பல்'' என்று முத்திரை குத்தப்பட்டன. இப்படி அவர்கள் வாக்களித்ததற்காகவும் மற்றும் அவர்களது இதர ''குற்றங்கள்'' தொடர்பாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வருவது தொடர்பாகவும், எதிர்காலத்தில் அவர்கள்மீது பழி வாங்கும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா கருதி வருகிறது என்பதும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். தீர்மானத்திற்கு கண்டனம் ஈரான் உடனடியாக IAEA யின் வாக்கெடுப்பை கண்டித்தது. ஈரான் தூதுக்குழுவின் தலைவரான ஜவாத் வைடி ''அந்தத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது. ஏனென்றால் அது எந்த சட்டப்பூர்வ அல்லது தொழில்நுட்ப அடிப்படைகளிலும் அமைந்த தீர்மானம் அல்ல'' என்று அறிவித்தார். அதன் அணுத் திட்டங்கள் சமாதான நோக்கங்களுக்காகத் தான் என்றும் மற்றும் அதன் யுரேனிய செறிவூட்ட ஆய்வு அணு ஆற்றலுக்காக அதன் அபிலாசை திட்டமான எரி சக்தியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் திரும்பத் திரும்ப டெஹ்ரான் அறிவித்துள்ளது. அணு உலை சுழற்சியின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதற்கு NPT ன் கீழ் தங்களுக்கு சட்டப்பூர்வமான உரிமையுண்டு என்று ஈரான் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஈரான் அதிபர் மஹமொத் அஹமதினேஜாத் நாட்டின் அணுக் கமிஷன், அதன் யுரேனிய செறிவூட்டத் திட்டத்தை மீண்டும் துவக்குமாறு கட்டளையிட்டார். மற்றும் அதன் அணு வசதிகளை திடீரென்று IAEA சோதனை இடுவதற்கு இனி ஈரான் ஒத்துழைக்காது என்றும் அவர் அறிவித்தார். சென்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிருபர்கள் மாநாட்டில் ஒரு சில அணு வல்லரசுகள் ''தங்களது மேலாதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்து கொண்டு, மத்திய காலத்து உறவுகள் இன்னும் செல்லுபடியாகும் என்று கருதிக் கொண்டு, தங்களது கொள்கைகளை வலியுறுத்திக் கட்டளையிடுவதற்கு'' முயன்று வருவதை அவர் கண்டித்தார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்திற்கும் அஹமதினேஜாத்தின் தேசியவாத வாய்வீச்சிற்கும் எந்த விதமான சம்மந்தமும் கிடையாது. மாறாக, டெஹ்ரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி உள்நாட்டில் ஆழமாகிக் கொண்டு வருகின்ற சமூக நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில், பெரிய வல்லரசுகளுடன் அதிக சாதகமான பொருளாதார மற்றும் மூலோபாய உறவைப் பேணுவதற்காக, அதற்கு நெருக்கடி கொடுக்கின்ற வகையில், தேசபக்தி ஆவேசத்தை கிளறிவிட்டு தனக்கொரு ஆதரவு தளத்தை பலப்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது. ஈரானின் அணுத் திட்டங்கள் தொடர்பான உண்மையான நிலை தெளிவாக இல்லை என்றாலும், ஈரான் ஒரு பிராந்திய வல்லரசு மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு அரண் என்ற நிலைப்பாட்டை உயர்த்துவதற்கு அணு ஆயுதங்களை ஈரான் பெற வேண்டும் என்று ஆளும் மதவாத பிரிவுகள் கோரி வருகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. உலக சோசலிச வலைத் தளம் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆத்திரமூட்டலை எதிர்த்து நிற்கின்ற நேரத்தில், அந்த நாட்டின் பிற்போக்கு மத அடிப்படையிலான ஆட்சியை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. அல்லது அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அதன் முயற்சி எதையும் ஆதரிக்கவில்லை. இது தடுப்பு அரணாக பயன்படுவதற்கு பதிலாக, ஒரு சில சாதாரண அணு ஆயுதங்கள் வாஷிங்டனின் ஒரு இராணுவத் தாக்குதலை மேலும் தூண்டி விடுகின்ற செயலாக அமைந்து விடும். ''எல்லா வாய்ப்புக்களும் தனது மேஜையில் இருப்பதாக'' புஷ் நிர்வாகம் திரும்பத் திரும்ப கூறி வருகிறது. மற்றும் அதன் நெருக்கமான நட்பு நாடான இஸ்ரேல் ஈரானின் அணு வசதிகளை சிதைத்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் இடைக்கால பிரதமர் ஏகுட் ஓல்மர்ட் IAEA வாக்கெடுப்பிற்கு பதிலளிக்கின்ற வகையில், ஈரான் தனது யுரேனிய செறிவூட்டல் திட்டத்தை மீண்டும் துவக்கியிருப்பதற்கு ''அதிக விலை'' தர வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தும் எச்சரிக்கையை விடுத்தார். ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிப்பதன் மூலம் ஏகாதிபத்திய வலியத்தாக்கும் ஆபத்தை எதிர்த்துப் போரிட முடியாது. மற்றும் மில்லியன் கணக்கான அப்பாவி உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டுவதற்கான அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போரிட்டுவிட முடியாது. அத்தகைய அச்சுறுத்தல்கள் வாஷிங்டனின் கையில் நேரடியாக சிக்கிக் கொள்கின்ற ஆயுதங்களாகும். மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை போருக்கும் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கும் எதிராக சோசலிச கொள்கைகள் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கான அரசியல் போராட்டத்தின் அவசியத்தை நேரடியாக வெட்டி முறிப்பதாக அமைந்து விடும். சனிக்கிழமையன்று நடைபெற்ற IAEA வாக்கெடுப்பின் மூலம் அடுத்த மாதம் உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதார தடைகளை திணிக்கும் என்று பொருள் அல்ல. ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகள் ஈரானிலும் மற்றும் விரிவான அடிப்படையில் மத்திய கிழக்கிலும் தங்களது பொருளாதார நிலைக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மோதலை தவிர்ப்பதில் கவலையுடன் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஒரு வழியாக மாஸ்கோ, ரஷ்ய மண்ணில் ஈரான் தொடர்பு கொள்கின்ற வகையில் ஒரு கூட்டு யுரேனிய செறிவூட்ட வசதியை நிறுவ முன் வந்திருக்கிறது. ஆனால், IAEA வாக்கெடுப்பை தொடர்ந்து டெஹ்ரான் அந்த ஒரு முன் மொழிவை தள்ளுபடி செய்து விட்டது. ஒரு தற்காலிக சமரசத்திற்கு சாத்தியம் உண்டு என்றாலும், ஈரான் ஆட்சி தான் தூண்டி விட்டுக் கொண்டுள்ள தேசியவாத வலதுசாரி பிரிவுகளிலிருந்து, எந்த வகையில் பின்வாங்கினாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. லண்டனை தளமாகக்கொண்ட பைனான்சியல் டைம்ஸ் இன்று எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில், மோதல் போக்கை தவிர்ப்பதற்கும் மற்றும் ஐரோப்பா, தனது எதிர்கால பொருளாதார வாய்ப்புக்களை ஈரானில் மீட்டெடுப்பதற்கும் வாய்ப்புக்கள் குறைவு என்று கருத்துத் தெரிவித்துள்ளது. ''ஈரானுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில் மோதல் இல்லாமல் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்பதற்கு ஐந்தில் ஒன்று என்ற அளவிற்கு மேல் வாய்ப்புக்கள் இல்லை'' என்று இப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளதுடன், பின் வாங்காத நிலை ஈரானுக்கு ஏற்படலாம் என்பதை அது மேலும் சுட்டிக் காட்டி பின்வருமாறு கூறியுள்ளது: ''ஆளுகின்ற முல்லாக்கள் பரவலாக அவர்களது மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஈரான் முழுவதிலும் உள்ள அரசியல் சாயல்களைக் கொண்ட அனைவரும், தொழில் நுட்ப அடிப்படையிலும் தடுப்பு நடவடிக்கை என்ற முறையிலும் தங்களது நாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க உரிமையுண்டு என்றும், நாட்டை ஒன்று திரட்டுவதற்கு அணு சக்தி பற்றிய கருத்து வேறுபாடு இறைவனாக பார்த்து அனுப்பிய ஒரு பிரச்சனை என்றும் கருதுகின்றனர்.'' மேலும் இப்பத்திரிகை, கூட்டு யுரேனிய செறிவூட்ட வசதி தொடர்பான ரஷ்யாவின் முன் மொழிவை ஈரான் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு மங்கிய நம்பிக்கை இருப்பதாக கூறியிருக்கிறது. ''முழுமையான ஒளிவு மறைவற்ற அணு சக்தி திட்டத்திற்கு கைமாறாக ஈரான் அமெரிக்காவிடமிருந்து ஒரு வகை பாதுகாப்பு உத்தரவாதத்தை (எடுத்துக்காட்டாக ஆக்கிரமிப்பதில்லை என்பதை) எதிர்பார்க்க முடியும். மற்றும் சவூதி அரேபியா தலைமையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா அரசுகள் இணைந்த பிராந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சர்வதேச உறுதி மொழியை ஈரான் எதிர்பார்க்கக்கூடும்'' என்று அது எழுதியிருக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஈரான் பின்வாங்கி மற்றும் அதன் மத்திய கிழக்கின் பாரம்பரிய போட்டி நாடுகளான சவூதி அரேபியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்போடு, அதற்கெல்லாம் மேலாக புஷ் நிர்வாகம் பெருந்தன்மையோடு ஈரானுக்கு நிபந்தனையற்ற பாதுகாப்பு உறுதி மொழியை தந்து மற்றும் டெஹ்ரானை ஒரு பிராந்திய வல்லரசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த தலையங்கம் முடிவு கூறியிருப்பதை போல்: ''ஆனால் அது ஒரு மிகவும் மங்கலான வாய்ப்பு ஆகும்.'' |