Provocative abductions delay Sri Lankan
ceasefire talks
ஆத்திரமூட்டும் கடத்தலால் இலங்கை யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தாமதம்
By Sarath Kumara
11 February 2006
Back to screen
version
இலங்கையில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் தமிழர்
புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டமை, அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நடத்த உடன்பட்டிருந்த
பேச்சுவார்த்தைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தீவின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு
மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழமானது புலிகளின்
ஒரு கருவியாகும்.
தமது உறுப்பினர்கள் மட்டக்களப்பில் இருந்து வவுனியாவிற்கு பயணம் செய்துகொண்டிருந்த
போது பொலனறுவை மாவட்டத்தின் வெலிகந்தையில் வைத்து அதன் உறுப்பினர்களில் பத்து பேர் துணைப்படையால் கடத்திச்
செல்லப்பட்டதாக ஜனவரி 30 அன்று புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது. புனர்வாழ்வுக் கழகத்தின் அறிவித்தலின்படி,
இந்தக் கடத்தல் வெலிகந்த இராணுவ சோதனைச் சாவடியிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. ஐவர்
பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த நாள், பாலர் பாடசாலை கல்வி அபிவிருத்தி நிலையத்தில் இருந்து மேலும் நான்கு
ஊழியர்களும் அவர்களது சாரதியும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பிரதேசத்தில் கிளிநொச்சியில் இருந்து
மட்டக்களப்பிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளனர்.
இந்தக் கடத்தல்கள் புலிகளுக்கும் கொழும்பு அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியாக பதட்ட
நிலைமையை தோற்றுவித்தது. பல வாரங்களாக அதிகரித்துவந்த வன்முறைகளின் பின்னர், இரு சாராரும் தற்போது ஆட்டங்கண்டுப்
போயுள்ள யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் பேணுவது குறித்து ஜனவரி 25 அன்று ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் நடத்த
உடன்பட்டிருந்தனர். ஆயினும் திகதிகள் முழுமையாக அமையவில்லை.
பெப்பிரவரி 15 பேச்சுக்களை நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணையை புலிகள் நிராகரித்து
விட்டனர். புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர், இந்த கடத்தல்கள் "சமாதான முன்னெடுப்புகளுக்கான சூழ்நிலையில் பாதிப்பை
ஏற்படுத்தும்" என எச்சரித்ததோடு இந்தக் கடத்தலுக்கு இலங்கை இராணுவமோ அல்லது புலிகளில் இருந்து பிரிந்து சென்ற
கருணா குழுவோ பொறுப்பாளிகள் என குற்றஞ் சாட்டினார்.
கொழும்பு அரசாங்கம் ஆரம்பத்தில் இத்தகைய ஒரு கடத்தல் நடந்துள்ளதா என்பதையிட்டு
சந்தேகங்களை கிளப்ப முயற்சித்தது. தகவல்தொடர்பு திணைக்களம் வெலிகந்த இராணுவ சோதனை சாவடிக்கருகில்
எதுவும் நடந்திருக்கவில்லை என மறுத்து ஜனவரி 31 ஒரு அறிக்கையை வெளியிட்டது. இராணுவமும் எந்தவொரு
தலையீட்டையும் நிராகரித்தது.
எவ்வாறெனினும், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரான ஜெஃப்ரி லன்ஸ்ரிட்,
பேச்சுவார்த்தைகளை முன்தள்ளுவதில் வாஷிங்டனின் நெருக்மான தலையீட்டை சுட்டிக்காட்டும் வகையில் அதே தினம் ஒரு
அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளது பற்றி அக்கறை
காட்டியதோடு இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்துமாறும் கேட்டுக்கொண்டது. அமெரிக்க தூதரகமும் ஐ.நா
வதிவிட/மனிதபிமான சம இணைப்பாளர்கள் அலுவலகமும் கூட கடத்தப்பட்டவர்களின் உடனடியான விடுதலைக்கு அழைப்பு
விடுத்திருந்தது.
பெப்பிரவரி 1, பாலர் பாடசாலை ஆசிரியர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
அடுத்த நாள் அவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது, கொழும்பில் இருந்து குற்றப் புலனாய்வு
பிரிவினரின் வருகைக்காக காத்திருந்த பொலிஸார், அவர்கள் வரும்வரை இரவு பூராவும் அவர்களை அங்கேயே
வைத்திருந்ததன் மூலம் பதட்ட நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெப்பிரவரி 3, இன்னொரு ஆசிரியர் செல்வி.
எஸ். தோசினி விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் லன்ஸ்ரிட் உடைய ஆலோசனையில் கவனம்
செலுத்தினார். பெப்பிரவரி 2 நடந்த ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில், துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து
அமைச்சர் மங்கள சமரவீர இன்னமும் புனர்வாழ்வுக் கழகத்தின் முறைப்பாடுகள் பற்றி கேள்வியெழுப்பிய போதிலும்,
நான்கு சிரேஷ்ட அதிகாரிகள், 20 விசாரணையாளர்கள் மற்றும் அரச புலணாய்வு அலுவலர்கள் உட்பட இரு உப பொலிஸ்
மா அதிபர்களின் தலைமையிலான குழுவை கடத்தல்கள் பற்றி விசாரிப்பதற்காக அறிவித்தார்.
கடந்த வாரம் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ''நிலைமைகள்
தொடர்பான அறிக்கை'', இராணுவ உயர் தரப்பினர் புனர்வாழ்வுக் கழகத்தின் முறைப்பாடுகள் வலுவானவை
என்பதையிட்டு மிகவும் கவனமாக இருந்ததை உறுதிப்படுத்தியது. கடத்தப்பட்ட இரு ஆசிரியர்களும் விடுதலை
செய்யப்பட்டமையும் மற்றும் "அத்தோடு சம்பந்தப்பட்ட அபிவிருத்திகளும், கடத்தல் பற்றிய முறைப்பாடுகள்
நம்பகமானவை என அறிவிக்க அரச புலணாய்வுத் துறையை நெருக்கியதோடு விசாரணைகளுக்கு அதிகாரமளிக்கவும்
செய்துள்ளது," என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பத்தி எழுத்தாளரான இக்பால் அத்தாஸ், பாதுகாப்பு
மற்றும் புலணாய்வு ஸ்பாதனத்துடன் நெருக்கமான உறவு கொண்டவாராவார்.
ஐந்து புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களும், அதேபோல் ஏனைய பாலர் பாடசாலை
ஆசிரியரும் மற்றும் சாரதியும் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பெப்பிரவரி 6 அன்று புனர்வாழ்வுக் கழக
உறுப்பினர்கள் கடத்தப்பட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகளின் ஊழியர்களும் பங்குபற்றியிருந்தனர். அரசாங்க அலுவலகங்கள்,
வர்த்தக நிலையங்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. உத்தியோகபூர்வ
நடவடிக்கைகளின் அசமந்தப் போக்கால் அதிருப்திக்குள்ளான ஐந்து புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களின் பெற்றோர்கள்,
அரசாங்க சார்பு துணைப்படை முகாம்களை வெலிகந்த பிரதேசத்தில் தாங்களாகவே தேடத் தொடங்கியுள்ளனர்.
இராணுவமோ அல்லது அதனுடன் சேர்ந்து செயற்படும் கருணா பிரிவு போன்ற ஆயுதக்
குழுவோ இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தால், அது தற்போதைய வன்முறைகளுக்கும் தமக்கும் எந்தவொரு
தொடர்புமில்லை என தொடர்ந்தும் மறுத்துவரும் கொழும்பு அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும்.
கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவிற்கு ஆதரவளித்த சிங்களத்
தீவிரவாத கட்சிகளும் மற்றும் குழுக்களும், அதேபோல் பாதுகாப்புப் படையின் சில பிரிவுகளும் மற்றும் அவர்களோடு
தொடர்பு வைத்திருக்கும் துணைப்படைகளும் புலிகளுடனான பேச்சுக்களை எதிர்க்கின்றன. இந்த கடத்தல்கள் சமாதனப்
பேச்சுக்கள் எந்தவகையிலும் மீண்டும் தொடங்குவதை தடுப்பதை இலக்காகக் கொண்ட மிகவும் வெளிப்படையான ஆத்திரமூட்டல்களில்
ஒன்றாகும்.
ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கான உடன்பாடு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, இராணுவம்
வடக்கு மற்றும் கிழக்கில் "புலி சந்தேக நபர்களை சுற்றிவளைப்பதற்கான" தமது வெறுக்கத்தக்க சுற்றிவளைப்பு மற்றும்
தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்கின்றது. ஜனவரி 30 தமிழ் நாளிதழான தினக்குரல்,
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தெற்குப் பகுதி, கரவெட்டி பிரதேசம் மற்றும் மானிப்பாய்க்கு அருகில் உள்ள பிரதேசங்களில்
இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக செய்தி வெளியிட்டிருந்தது. கரவெட்டி பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த
புலிகளின் அலுவலகம் உடைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல்களுக்கு பிரதிபலிக்கும் விதத்தில், விடுதலைப் புலிகளின் முன்னணிப் படையான
மக்கள் படை, தனது தாக்குதல் மற்றும் கிழக்கில் துணைப்படைகள் மீதான தாக்குதல்களையும் மீண்டும் தொடங்கவுள்ளதாக
பெப்பிரவரி 3 ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த அமைப்பு, கடந்த இரு மாதங்களாக இராணுவத்தின்
மீது மேற்கொள்ளப்பட்ட சில குண்டுத் தாக்குதல்களை பொறுப்பேற்றது.
எவ்வாறெனினும், புலிகள் தனது படைகளை கட்டுப்படுத்துவதோடு பேச்சுவார்த்தை
மேசைக்கு செல்லவும் கோரும் உக்கிரமடைந்துவரும் சர்வதேச அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளது. கொழும்பு முன்வைத்த
திகதிகளை புலிகள் நிராகரித்த போது, பெப்பிரவரி 2 அன்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய
நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளும் புலிகளின் தலைமையை சந்திக்க
ஒதுக்கியிருந்த காலநேரத்தை விலக்கிக்கொண்டனர்.
பெப்பிரவரி 6 லண்டனில் நோர்வே அனுசரணையாளரான எரிக் சொல்ஹெயிம் உடனான
கலந்துரையாடலின் போது, புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம் இறுதியாக பெப்பிரவரி 22
மற்றும் 23 திகதிகளில் பேச்சுக்களை நடத்த உடன்பட்டார். இவ்வாறு திகதிகள் தீர்மானிக்கப்பட்டமை "உறுதியானது"
என பிரகடனம் செய்த சொல்ஹெயிம், "பேச்சுவார்த்தைகள் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக" மேலும்
தெரிவித்தார்.
2003 ஏப்பிரலில் இருந்து முதற் தடவையாக இந்த பேச்சுக்கள் இடம்பெறும் அதேவேளை,
அவை யுத்த நிறுத்த உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடலாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இரு சாராருமே எந்தவொரு
குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்பையும் செய்ய எதிர்பார்க்கவில்லை. புலிகள் மீது கடுமையான யுத்த நிறுத்த வழிமுறைகளை
திணிக்குமாறு கோரும் இராணுவம் மற்றும் சிங்களத் தீவிரவாதிகளின் அழுத்தத்தை இராஜபக்ஷ எதிர்கொள்கிறார். புலிகளின்
தலைமையோ கருணா குழு போன்ற துணைப்படைகளை நிராயுதபாணிகளாக்குமாறு அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும்
கோரிக்கை விடுக்கின்றது.
|