World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைUS ambassador to Sri Lanka threatens the LTTEஇலங்கைக்கான அமெரிக்க தூதர் தமிழிழ விடுதலைப் புலிகளை அச்சுறுத்துகிறார் By K. Ratnayake அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி லன்ஸ்டட், செவ்வாய் கிழமையன்று இலங்கையிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையில் ஆற்றிய உரையில், தமிழிழ விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் செல்லவேண்டும் அல்லது அமெரிக்க ஆதரவுடன் வலுப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று ஒரு பகிரங்கமான எச்சரிக்கை விடுத்தார். இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையிலான ஒரு அறிவிக்கப்படாத போருக்கு சமமான அளவு மோதல் நடைபெற்று வருகின்ற தீவில், பதட்ட நிலைமை துரிதமாக தீவிரமடைந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே லன்ஸ்டட்டின் கருத்துக்கள் வந்திருக்கின்றன. இரு தரப்புகளுமே வகுப்புவாத பதட்டங்களை திட்டமிட்டு உக்கிரமடையச்செய்வதோடு ஆத்திரமூட்டும் தாக்குதல்களையும் கொலைகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இரு பகுதியினரும் தொடர்ச்சியான படுகொலைகளுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றனர். ஒரு பகிரங்க போரின் போது வாஷிங்டன் எந்த பக்கம் நிற்கும் என்பதை ஏற்கனவே அது சமிக்கை காட்டிவிட்டது. லன்ஸ்டெட் உரையாற்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவை வாஷிங்டனில் சந்தித்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டோலிசா ரைஸ், "புலிகளின் ஆத்திரமூட்டல்களை எதிர்கொண்ட நிலையிலும்" ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் "கட்டுப்பாட்டை" கடைப்பிடிப்பதற்காக பாராட்டினார். பயங்கரவாதத்தை முறியடிப்பதில் "இலங்கையுடன் வாஷிங்டன் பணியாற்றுவதாக" அவர் அறிவித்தார். 2003 முதல் நிறுத்தப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடக்குவதகாக புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை அமெரிக்காவும் இதர வல்லரசுகளும் தொடரும் என விளக்கியதன் மூலம் லன்ஸ்டட் தனது கருத்துக்களை கூற ஆரம்பித்தார். "சொல்லிலும் செயலிலும் பயங்கரவாதத்தை துறந்து, மீண்டும் சமாதான மேசைக்கு வந்து இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்தால் மாத்திரமே, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் புலிகளுக்கு பாத்திரமாற்ற முடியும்" என்று அவர் அறிவித்தார். ஆனால், "நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம், நாங்கள் அமைதியை ஆதரிக்கிறோம்" என்று லன்ஸ்டட் கூறிய அதேவேளை, "ஆயினும் புலிகள் சமாதானத்தை கைவிட முடிவு செய்வார்களானால், அவர்கள் ஒரு வலுவான, மிக வல்லமையுள்ள அதிக உறுதி கொண்ட இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வர். மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவதால் ஏற்படும் பாதிப்பு உயர்ந்ததாக இருக்கும் என்பதை நாம் தெளிவாக அறிவிக்கின்றோம், எனவும் அவர் எச்சரித்தார். லன்ஸ்டட் அந்த விடயத்தை சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கும் வகையில் மேலும் தெரிவித்ததாவது: "பயங்கரவாத-எதிர்ப்பு முன்முயற்சிகளில் உதவ முயற்சிப்பது மற்றும் சட்டவிரோத நிதி சேர்ப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது உட்பட எமது இராணுவப் பயிற்சி மற்றும் உதவித் திட்டங்களின் ஊடாக, தனது மக்களை காக்கவும் அதன் நலன்களை பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்தின் இயலுமையை பெருக்குவதில் நாங்கள் உதவி வருகின்றோம்." "அமெரிக்க தூதர் அத்தகைய கடுமையான மொழியை வர்த்தக செல்வந்த தட்டினர்களின் கூட்டத்தில் ஏன் பயன்படுத்துகிறார் என்று இப்போது நீங்கள் கேட்கக் கூடும்.'' "வர்த்தக சமூகம் சமாதான முன்னெடுப்பை புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்." என்று லன்ஸ்டட் பெருநிறுவன தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார். குறைந்தபட்சம் அதிகாரபூர்வமாக வாஷிங்டன் தொடர்ந்தும் பெயரளவிலான சமாதான முன்னெடுப்பை ஆதரிக்கிறது. அமெரிக்கா ஏனைய வல்லரசுகளுடன் சேர்ந்து, இந்திய துணைக்கண்டத்தில் தனது பெருகிவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முறித்துவிட அச்சுறுத்திக்கொண்டுள்ள 20 ஆண்டுகால கொடூரமான போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் பேரில் ஒரு சமாதான கொடுக்கல் வாங்கலை ஏற்படுத்த அழுத்தம் கொடுத்து வருகின்றது. கொழும்பிலுள்ள பெருநிறுவன செல்வந்தத்தட்டினரும், இந்தத் தீவை குறிப்பாக இந்தியாவிற்கும் இந்த பிராந்தியத்திற்குமான ஒரு மூதலீட்டு நுழைவாயிலாக்கும் தமது அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த மோதலுக்கு முடிவுகட்ட அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆயினும், அரசியல் ரீதியில், கொழும்பு ஆளும் தட்டினர், தாம் பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தூண்டிவிட்டு சுரண்டிக்கொண்ட சிங்கள பேரினவாதத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயல்பாகவே வல்லமையற்றவர்கள் என்று நிரூபித்துவிட்டனர். மஹிந்த இராஜபக்ஷ ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில், சென்ற நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் புலிகளுக்கு எதிராக ஒரு மிகவும் கடுமையான நிலைப்பாட்டை பிரேரிப்பதன் மூலம் ஒரு குறுகிய வெற்றியை பெற்றார். இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ள புலிகளும் அதே பாணியில் பதிலளித்தனர். அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் "சமாதானத்தை விரும்புவதாக" பேசிக்கொண்டிருக்கும் அதே வேளை, வாஷிங்டன் நிகழக்கூடிய ஒரு போருக்கு தயார் செய்து கொண்டிருக்கின்றது. லன்ஸ்டெட் கொழும்பு வர்த்தக தட்டினர் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான ஜேம்ஸ் எஃப். ஒக்ஸ்லேவும் மற்றும் அமெரிக்க அரசியல் விவகார செயலாளர் ஈவன்ஸ் வில்லியம்சும், வடபகுதி நகரான யாழ்பாணத்தில் இலங்கை இராணுவப் படைகளின் தேவைகள் குறித்தும் மற்றும் இராணுவ நிலவரம் குறித்தும் விசாரித்துக்கொண்டிருந்ததாக வார இதழான ராவய வெளியிட்டுள்ள ஒரு செய்தி சுட்டிக்காட்டியிருந்தது. இரு அமெரிக்க அதிகாரிகளும் யாழ்பாண தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியுடன் கலந்துரையாடலை நடத்தினர். கொழும்பில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் கொண்டு வருகின்றன. இரண்டு பெரிய கட்சிகளான இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க) மற்றும் எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க) புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரை" ஆதரிப்பதோடு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புக்களை மறைமுகமாக ஆதரிக்கின்றன. பென்டகனை பொறுத்தவரை, இலங்கைத் தீவானது மத்திய கிழக்கிற்கும் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான இந்து மகாசமுத்திரத்தின் கடற்படை பாதைகளில் ஒரு முக்கியமான மூலோபாய நிலையில் அமைந்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்க யுத்தக் கப்பல்களும் விமானங்களும் இலங்கையில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும், ஒரு நீண்ட விளைவுகளை கொண்ட, நுழைவு உரிமை மற்றும் பரஸ்பர பழுதுபார்க்கல் சேவை உடன்படிக்கை (Access and Cross Servicing Agreement --ACSA) குறித்து ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்துடன் 2002 ஜூனில் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. 2004 டிசம்பர் சுனாமியை தொடர்ந்து, போர்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையினரையும் இந்தத் தீவுக்கு அனுப்பி வைத்த அமெரிக்க இராணுவம், "மனிதநேய உதவி" என்ற பெயரால் எதிர்கால அமெரிக்க தலையீட்டிற்கு ஒரு முன்மாதிரியை அமைத்தது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை ஆயுதப் படைகளுக்கான பயிற்சி திட்டத்தில் அமெரிக்க இராணுவம் சந்தடியில்லாமல் ஈடுபட்டது என்பதை லன்ஸ்டட் சுட்டிக் காட்டியிருக்கிறார். 2004-ல் நெருக்கமான உறவுகள் கூட உருவாக்கப்பட்டன. இலங்கையில் சமாதான ஆதரவு நடவடிக்கைகான பயிற்சி மையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டதுடன் இலங்கையிலும் இதர பிராந்திய நாடுகளிலும் ''அமைதி காக்கும்'' படைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் பசிபிக் படைப்பிரிவால் அது பயன்படுத்தப்பட்டது. 2004 அக்டோபரில், சிறிய கரிபியன் தீவான ஹைட்டியில் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பிரதமர் கெரார்டு லாட்டர்டூ உடைய அரசாங்கத்தை தூக்கி நிறுத்துவதன் பேரில், அங்கு பெயரளவிலான அமைதி காக்கும் படையை அதிகரிக்கச் செய்வதற்காக இலங்கை 700 துருப்புக்களை அனுப்பிவைத்தது. இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை கோடிட்டுக் காட்டியிருப்பதன் மூலம், லன்ஸ்டட்டின் கருத்துக்கள் புலிகள் மீது தங்களது கடுமையான நிலைப்பாட்டை தீவிரப்படுத்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும், அதன் சிங்கள பேரினவாத பங்காளிகளுக்கும் மற்றும் இராணுவத்திற்கும் உற்சாகமளிப்பதை மட்டுமே செய்யும். வியாழனன்று வலதுசாரி ஐலண்ட் செய்தி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் அமெரிக்க தூதரின் கருத்துக்களை வரவேற்றமையானது, அந்த செய்தியை கொழும்பு ஆளும் வட்டாரங்கள் புரிந்துகொண்டுள்ளதையே தெளிவுபடுத்துகிறது. "தவறு செய்யும் குழந்தையை ஒருவர் திருத்தும் போது, மிக மென்மையாகவும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என ஆரம்பிக்கும் அந்த தலையங்கம், "ஆனால் வளர்ந்துவிட்ட மனிதர்கள் கட்டுப்பாடற்ற பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதை சமாளிக்கும்போது மென்மையான அணுகுமுறை பயன்படாது. அவர்களை அணுகும்போது, அவர்கள் நன்றாக புரிந்து கொள்கிற மொழியைத்தான் பயன்படுத்த வேண்டும். இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லன்ஸ்டட் புலிகள் எங்கே நிற்க வேண்டும் என்பதை மிக நுனுக்கமாக அறிவித்திருக்கிறார். அவரது செய்தி உரத்த சிந்தனை கொண்ட தெளிவான ஒன்று: 'போருக்கு திரும்பினால் அதன் பாதிப்பு மிகக்கடுமையானதாக இருக்கும்'', என குறிப்பிட்டுள்து. கொழும்பு ஆளும் தட்டின் சில பிரிவுகள் மத்தியிலான விரக்திகளை எதிரொலிக்கின்ற வகையில், பெரிய வல்லரசுகள் வாஷிங்டனின் "பயங்கரவாதத்தின் மீதான போரை'' ஆதரித்த போதிலும் கொழும்பை ஆதரிக்க தவறிவிட்டன என திரும்பத் திரும்ப ஐலண்ட் பத்திரிகை விமர்சித்தது. அது ''சமாதான ஆதரவை நாடுபவர்களையும்'' மற்றும் "புலிகளை சமாதானப்படுத்துபவர்களையும்" வழக்கமாக கண்டிக்கிறது. நிரூபித்துவிட்ட உணர்வின் மகிழ்ச்சி கூச்சலுடன் அந்த தலையங்கம் இவ்வாறு முடித்துள்ளது: "அமெரிக்க எச்சரிக்கைக்கு மூன்று பாராட்டுகள் மற்றும் திரு. லன்ஸ்டெட்டிற்கு மறியாதை". "அமைதியும் வளமும்: 2006ல் இலங்கையில் அமெரிக்க கொள்கை குறிக்கோள்கள்"
என்பதே லன்ஸ்டெட் உரைக்கான தலைப்பாகும். ''சமாதானத்தின்'' பெயரால் வெளிப்படையாக போர்
முன்னேற்பாடுகளே அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. |