World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: anger mounts against Musharraf in wake of US air strike

பாக்கிஸ்தான்: அமெரிக்க விமானத் தாக்குதலைத் தொடர்ந்து முஷ்ராபிற்கு எதிராக பெருகிவரும் ஆத்திரம்

By James Cogan
19 January 2006

Back to screen version

தாமதோலா எல்லைப் பகுதி கிராமத்தில் அமெரிக்க விமானத்தாக்குதலில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக பாக்கிஸ்தானில் ஏற்பட்ட கடும் சினமானது, வாஷிங்டனின் எதிர்ச்செயலால் மேலும் மோசமடைந்துள்ளது.

பாக்கிஸ்தானில் பரவலாக நடைபெற்று வரும் கண்டனங்களை புஷ் நிர்வாகம் துச்சமாக மதித்துள்ளதோடு, அந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. ஒரு சம்பிரதாய மன்னிப்பிற்கான பாக்கிஸ்தானின் உயர் மட்ட கோரிக்கைகளைக் கூட வெள்ளை மாளிகை புறக்கணித்துவிட்டது. அதே நேரத்தில் பாக்கிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறுவதற்கும் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற பெயரால் அதன் எல்லைக்குள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அமெரிக்கா சுய-பிரகடன உரிமை இருப்பதாக கூறுவதை, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்றனர்.

ஜனவரி 13 அதிகாலையில் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு அப்பால் பாக்கிஸ்தான் எல்லைக்குள் இருக்கின்ற தாமதோலாவில் உள்ள மூன்று வீடுகளில், 10 ஹெல்பயர் ராக்கெட்டுக்களை அமெரிக்க விமானம் வீசி தாக்கியது. அல்-கொய்தாவின் முக்கிய பேச்சாளரான ஐமன் அல்-ஜவாஹிரி முஸ்லீம்களின் ஈத் திருவிழா முடிவில் நடைபெறும் விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த கிராமத்தில் இருக்கக் கூடும் என்ற தகவல் கிடைத்ததை ஒட்டி இத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுபற்றி அமெரிக்காவிற்கு கிடைத்த தகவல் தவறானது என்று பாக்கிஸ்தான் புலனாய்வு வட்டாரங்களும் அரசியல்வாதிகளும் அறிவித்துள்ளனர். BBC தந்துள்ள தகவலின்படி, அழிக்கப்பட்ட வீடுகள் உள்ளூர் நகை வியாபாரிகளுக்கு சொந்தமானது. பழங்குடி சமுதாயத்தில் ஒரு குறைந்த அந்தஸ்த்து தொழிலைக் கொண்ட இது போன்ற வீடுகளில் மூத்த அல்-கொய்தா தலைவர்கள் விருந்தினர்களாக எதிர்பார்க்க இயலாததாகும். இந்த ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்குவர்.

இதுபற்றி முரண்பாடான செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இஸ்லாமிய போராளிகளின் ஒரு சிறிய குழு அந்த கிராமத்திற்கு வந்திருக்கக் கூடும் என்று தெரிய வருகிறது. பாக்கிஸ்தானின் எல்லைப் பிராந்தியங்களில், உள்ளூர் பஸ்தூன் மக்கள் தெற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள பழங்குடியினர்களோடு ஒரு பொதுவான கலாச்சார மற்றும் மொழியை பகிர்ந்து கொள்கின்றனர். 1980களில் சோவியத் ஆக்கிரமிப்பின் போது CIA ஆதரவு ஆப்கான் கொரில்லாக்கள் நடந்து கொண்ட அதே வழியை போன்று - 2001 நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏராளமான அல்-கொய்தா உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தாலிபான் ஆட்சியின் ஆதரவாளர்கள் பாக்கிஸ்தானின் எல்லைப் பகுதிகளிலுள்ள மலைப்பாங்கான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக நம்பப்படுகிறது.

தாமதோலாவில் யார் இருந்தார்கள் என்பதை கருதிப் பார்க்காவிட்டாலும், பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் தெளிவானது. இது குறுகிய கால அரசியல் நோக்கத்தை கொண்டது. பாக்கிஸ்தான், அமெரிக்க இராணுவத்திற்கு தனது எல்லைக்குள் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு எப்போதுமே முறையான அனுமதி வழங்கியதில்லை. தனது எல்லையைக் கடந்து ''தேடுதல் வேட்டையை'' நடத்துவதற்கோ அல்லது சென்ற வாரம் நடந்தது போன்று படுகொலை முயற்சியை மேற்கொள்வதற்கோ அது அனுமதி வழங்கவில்லை. ஜவாஹிரி மீதான தாக்குதல் வெற்றி பெற்றிருக்குமானால், புஷ் நிர்வாகத்தை சூழ்ந்து கொண்டுள்ள ஊழல் மோசடிகள், ஈராக் புதைசேற்றில் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவரம் சீர்குலைந்து கொண்டிருப்பதிலிருந்து அமெரிக்க மக்களது கவனத்தை திசை திருப்புவதற்கு, நிர்வாகம் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.

செப்டம்பரில் நடைபெற்ற தேசிய தேர்தல்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான வன்முறை குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் 25 தற்கொலை குண்டுத் தாக்குதல்களும் டசின் கணக்கான மேதல்களும் நடைபெற்றுள்ளன. இந்த வாரம் ஒரு தற்கொலை குண்டுதாரி, வாகனங்களில் நடத்திய தாக்குதலில் ஒரு கனடா ராஜதந்திரி கொல்லப்பட்டார் மற்றும் மூன்று கனடா படையினர்கள் காயமடைந்தனர்.

பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள ஸ்பின் போல்டாக்கில், ஜனவரி 16 ல் நடைபெற்ற ஒரு மற்போர் போட்டியில் மோட்டார் சயிக்கிளில் வந்த ஒருவர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 50 பேர் காயமடைந்தனர் மற்றும் கொல்லப்பட்டனர். இந்த கண்மூடித்தனமான குண்டு வெடிப்பிற்கான பொறுப்பை தாலிபான் மறுத்து வந்தாலும் முல்லா தாதுஉல்லாவின் ஒரு பேச்சாளர் செவ்வாயன்று ''தற்கொலை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தாலிபான் முஜாஹிதீன்கள் நூற்றுக் கணக்கில் தயாராக எல்லா நகரங்களிலும்'' இருப்பதாக குறிப்பிட்டார். பாக்கிஸ்தானில் இருக்கும் முகாம்களிலிருந்து, நாட்டிற்கு தற்கொலை குண்டுதாரிகள் வந்து கொண்டிருப்பதாக புஷ் நிர்வாகம் மற்றும் ஆப்கனிஸ்தான் அரசாங்கம் ஆகிய இரண்டும் குற்றம் சாட்டியுள்ளன.

பாக்கிஸ்தான் பிரதமரும் மற்றும் பாக்கிஸ்தானின் அமெரிக்கத் தூதரும் தந்துள்ள தகவலின்படி, தாமதோலா மீதான தாக்குதலின் தகவல் இஸ்லாமாபாத்திற்கு வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது. என்றாலும் பெயர் குறிப்பிட விரும்பாத பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, வாஷிங்டன் போஸ்ட் அவ்வாறு வழங்கப்பட்டதாக கூறியுள்ளது. இந்த அமெரிக்கத் தாக்குதல், இந்த ஆண்டு பாக்கிஸ்தானின் இறையாண்மையை இரண்டாவதாக தடவையாக மீறியுள்ளது. ஜனவரி 8 ல் ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள மற்றொரு பஸ்தூன் பிராந்தியமான, வடக்கு வஷீரிஸ்தானில் ஒரு மதகுரு வீட்டில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதால் குறைந்தபட்சம் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க-எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருப்பதும், வெள்ளை மாளிகையும் பென்டகனும் அப்பட்டமாக அதனை அலட்சியப்படுத்தி செயல்படுவதும், அமெரிக்க-சார்பு ஜனாதிபதி பர்வீஸ் முஷ்ராபின் ஆட்சிக்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மக்கள் மீது பரந்த ரீதியான அனுதாபம் பாக்கிஸ்தான் முழுவதிலும் உள்ளது. மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முஷ்ராப் ஒத்துழைத்து வருவதன் மீது விரோதப்போக்கும் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், பாரம்பரியமாக தன்னாட்சி உரிமை நிலவுகின்ற எல்லைப் பிராந்தியங்களில் ஆப்கானிஸ்தானிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் போராளிகள் நடமாடுவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் 70,000 பாக்கிஸ்தான் துருப்புக்களை அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, வாரக் கடைசியில் பாக்கிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களில் அமெரிக்க-எதிர்ப்பு மற்றும் அரசாங்க-எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. திங்களன்று கராச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ''அமெரிக்கா ஒழிக'' என்றும் ''முஷ்ராப் ஒரு துரோகி'' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

''தனது மக்களை காப்பாற்றத் தவறிய'' அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான இஸ்லாமிய கூட்டணி---முதாஹிதா மஜிலிசி-அமல் (Muttahida Majlis-i-Amal - MMA) கோரிக்கை விடுத்தது. நம்பிக்கையில்லாத தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் முஷ்ராபின் சொந்தக் கூட்டணி உறுப்பினர்கள் MMA-வுடன் சேர்ந்து கொண்டு விமானத் தாக்குதலை ஆவேசமாக கண்டித்தனர்.

அமெரிக்காவிலுள்ள பாக்கிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க வேண்டும், அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று MMA ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதாக டான் செய்தி பத்திரிகை தகவல் தந்துள்ளது. வாஷிங்டன் மறுத்துவிடுமானால் அந்த விவகாரத்தை முஷ்ராப் ஆட்சி ஐ.நா.விற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. அடுத்த நாள் பாக்கிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ் மேற்கொள்ளும் வாஷிங்டன் விஜயத்தின் போது இந்த விவகாரத்தை அவர் எழுப்புவார் என்று அரசாங்கம் கோடிட்டுக் காட்டினாலும், MMA தலைவர் குவாசி ஹூசேன் அஹம்மது அந்த பயணத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரினார். மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் முஷ்ராப் ''நெருப்போடு விளையாடுகிறார்'' என்றும் அவர் அறிவித்தார்.

விமானத் தாக்குதலை அடக்கமாக கண்டித்ததன் மூலம் முஷ்ராப்பும் அவரது அரசாங்கமும் பொது மக்களது ஆத்திரத்தை உக்கிரமடையச் செய்தனர். ''ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம்'' என்று அசிஸ் குறிப்பிட்டார். அதே நேரத்தில் எல்லைப் பகுதி பழங்குடி மக்கள் ''வெளிநாட்டு பயங்கரவாதிகளை'' ஆதரிப்பதாக அவர் கண்டித்ததோடு, தமது அரசாங்கம் தொடர்ந்தும் வாஷிங்டனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் என்று மறு உறுதியளித்தார். முஷ்ராப் விமானத்தாக்குதலை பகிரங்கமாக கண்டிக்கவில்லை. அவர் செவ்வாயன்று மாலை 90 நிமிடங்கள் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, அந்தத் தாக்குதல் பற்றி குறிப்பிடக் கூட இல்லை. இந்த உண்மை அமெரிக்க பத்திரிகைகளில் கூட வியப்பளிக்கும் கருத்துக்களை தூண்டிவிட்டிருக்கிறது.

முஷ்ராப் எதிர் கொண்டுள்ள முக்கிய அச்சுறுத்தல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தால் அல்ல. மாறாக, பலூசிஸ்தானின் தென்மேற்கு எல்லைப் புற பிராந்தியத்தில் பலோச் இன பிரிவினைவாதிகளோடு பெருகிக் கொண்டு வரும் ஒரு மோதலோடு சேர்ந்து பஸ்தூன் எல்லைப் புற பழங்குடியினரோடு வெளிப்படையான யுத்தம் வெடிக்கின்ற சாத்தியக் கூறை அவர் எதிர் கொண்டுள்ளார்.

10,000 திற்கு மேற்பட்ட பழங்குடியினர்களில் பலர் ஆயுதங்களுடன் சனிக்கிழமையன்று தாமதோலா அருகில் கூடினர். மற்றும் உள்ளூர் தலைவர்கள் அந்தப் பகுதியிலிருந்து பாக்கிஸ்தான் துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்தனர். ஜனவரி 7 ல் அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு வசீரிஸ்தானில் படுவேகமாக வன்முறைகள் ஏற்கனவே பெருகியுள்ளன. தனது பாதுகாப்புப் படைகளை பின்வாங்கிக்கொள்ள அரசாங்கம் மறுத்து விட்டதால், போராளிகளுக்கும் துருப்புக்களும் இடையில் நடைபெற்ற மோதல்களில் 43 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

புஷ் நிர்வாகம் கட்டளையிட்டு ஜனவரி 13ல் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் எந்த அல்-கொய்தா தலைவரையும் கொன்று விடவில்லை. மாறாக, அது பாக்கிஸ்தானுக்குள் மிகக் கடுமையான எதிர்ப்பை கிளறிவிட்டிருக்கிறது. அது அமெரிக்காவின் கூட்டாளியான முஷ்ராபின் அரசியலை ஒழித்துக் கட்டுவதாக அமையும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved