World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிMunich Security Conference: Imperialists close ranks முனீச் பாதுகாப்பு மாநாடு: ஏகாதிபத்தியவாதிகள் வேறுபாடுகளை களைதல் By Peter Schwarz ஈராக்கில் அமெரிக்க இராணுவம் புதைசேற்றுக்குள் அமிழ்ந்திருக்கும் பின்னணியில், ஈரானுடனும் பூசல்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஏனைய ஐரோப்பிய சக்திகளும் தங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை களைந்து கொள்ளுகின்றனர். கடந்த வார இறுதியில் பவேரியத் தலைநகரில் நடைபெற்ற இந்த ஆண்டு முனீச் பாதுகாப்பு மாநாட்டில் இது வெளிப்படையாக தெரிந்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மிக உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், காபினெட் மந்திரிகள், அரசியல் வாதிகள், இராணுவ வல்லுனர்கள், செய்தியாளர்கள் என்று அனைவருக்கும் இராணுவ, புவியியல் மூலோபாய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வாய்ப்புக்களை கொடுத்து வந்துள்ளது. இம்மாநாடு NATO உறுப்பு நாடுகளிலிருந்து வரும் பேராளர்களால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தாலும், மற்ற நாடுகளில் இருந்து விருந்தினர்களும் அழைக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட், அப்பொழுது ஜேர்மன் வெளியுறவு மந்திரியாக இருந்த பசுமைக் கட்சியைச் சேர்ந்த Joscha Fischer இருவரும் ஆரம்பிக்கக் கூடிய சிலையில் இருந்த ஈராக் யுத்தம் தொடர்பாக பொதுவிடப் பூசல்களில் ஈடுபட்ட காட்சியாக அம்மாநாடு இருந்தது. இப்பொழுதோ, அட்லாண்டிக் கடந்த சுமுக உறவுகள் அதிகமாக உள்ளன. மாநாட்டு நடவடிக்கைகளின் இத்தன்மைக்கு, மாநாட்டை தொடங்கி வைத்த ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல் (Christian Democratic Union -CDU), ஏற்பாடு செய்தார். விவாதத்திற்குரிய பிரச்சினைகளான, ஈராக் போர் தொடக்கப்பட்டதற்கான காரணம், குவாணடனாமோ அமெரிக்கத் தடுப்பு முகாம் அல்லது சட்டவிரோதமாக கைதிகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டமை போன்றவற்றை மேர்க்கல் தவிர்த்தார். மாறாக, அட்லாண்டிக் கடந்த பங்காண்மை மீது அவர் பெரும் புகழாரத்தை சூட்டினார். புஷ் நிர்வாகம் தயாரித்ததோ என்று சொல்லக்கூடிய வகையில் இருந்த பேச்சில், அதிபர், "பனிப்போர்க்காலத்தில் இருந்த இருபுறத்து ஒழுங்கான அச்சுறுத்தல்கள் இப்பொழுது புதியவகையில் ஒழுங்கற்ற அச்சுறுத்தலினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது" என்று அறிவித்தார். "நாடுகளின் நிலைப்பாடு அரிக்கப்பட்டுள்ளமை, பயங்கரவாதம், பேரழிவு ஆயுதங்கள் நம்பிக்கை தன்மையற்ற ஆட்சிகளின் பொறுப்பில் இருப்பது" ஆகியவற்றையும் அவ்வம்மையார் மேற்கோளிட்டார். மேர்க்கல் தொடர்ந்தார்: "இந்த நிலைமையைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டும்... இவ்விதத்தில் ஒன்றுபட்ட ஜேர்மனி பொறுப்பை எடுத்துக் கொள்ளத் தயாராக உள்ளது, உண்மையில் கூடுதலான பொறுப்பை, NATO வரம்புகளுக்கும் அப்பால், சுதந்திரம், ஜனநாயகம், உறுதித்தன்மை, உலக சமாதானம் ஆகியவற்றிற்காக எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன்." அவர் உரையைக் கேட்கும் அமெரிக்கர்கள் வெளிப்படையாக மகிழும் வகையில், NATO இப்பணியில் ஒரு "முதன்மைத் தன்மையை"க் கொண்டுள்து என்றும் அவர் வலியுறுத்தினார். "இதற்கு தேவையான அரசியல் கலந்துரையாடல்கள் செய்யப்பட வேண்டும்; அதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது" அதிலும் குறிப்பாக, "மந்திய கிழக்கு, ஈரான்" ஆகியவற்றில் உள்ள நிலைமை விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான "அரசியல் உறுதி" ஏற்கப்படவேண்டும் என்று கூறிய அவர், "நடவடிக்கை எடுப்பதற்கும், நமக்குச் சரியான இராணுவத் திறன்கள் வேண்டும்" என்று அறிவித்தார். பழமைவாத CDU, கிறஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூகஜனநாயகக் கட்சி (SPD), ஆகியவை அடங்கிய அவருடைய அரசாங்கம், சர்வதேச சட்டத்தின்படி ஐ.நா. விற்குத்தான் இராணுவ நடவடிக்கை பற்றி முடிவெடுக்க அதிகாரம் உண்டு என்று கூறிய அதன் முந்தைய SPD, பசுமைக் கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டதாக மேர்க்கல் தெளிவுறுத்தினார். தவிர்க்க இயலாத போர்களை கொள்ளலாம் என்று ஈராக்கின்மீதான போரை நியாயப்படுத்திய, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தை பற்றி அவர் நேரடியாக கூறிப்பிட்டார். ஐரோப்பிய பாதுகாப்பு மூலோபாயத்துடன், NATO வின் மூலோபாய கருத்தாய்வுடனும், அமெரிக்க கொள்கை, "எமது பொதுப் பாதுகாப்பு செயற்பட்டியலின் வடிவமைப்பு பற்றித் தீவிரமான உரையாடல்களை நடத்துவதற்கு தக்க அஸ்திவாரங்களை" கொடுத்துள்ளது என்று அவர் கூறினார். மூன்று உத்திகளுக்கும் இடையே இருக்கும் "குறிப்பிடத்தக்க அளவிலான" ஒற்றுமை பற்றியும் மேர்க்கல் வலியுறுத்தினார். "ஒரே திசையில் செயற்பாடுகள் இயக்கம் பெற்றுள்ளது கவனத்தை ஈர்க்கும் வகையில்" இருப்பதாக அவர் அறிவித்தார். செய்தி ஊடக வர்ணனையாளர்கள், மேர்க்கலின் உரையை அமெரிக்காவை நோக்கிய மாற்றத்தை காட்டுகிறது என்று ஒருமனதாக மதிப்பிட்டுள்ளார்கள். "மாநாட்டிற்கு வந்திருந்த அமெரிக்க அரசியல் வாதிகள், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே, ஜேர்மன் அரசாங்கத்தின் தலைவர் பற்றி மகிழ்ச்சி அடைந்தனர்; நடைமுறைவாதம் மற்றும் நம்பகத்தன்மைக்கான நம்பிக்கைகளை இவர் மீது அடிப்படையாக கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்" என்று Frankfurter Allgemeine Zeitung எழுதியுள்ளது. "முனீச் 2006 ஒரு புதிய ஒத்துழைப்பின் தொடக்கமாக ஆகக் கூடும்." வாராந்திர ஏடான Die Zeit தெரிவித்த கருத்தாவது: "இவருக்கு முந்தைய அதிபர் இருந்ததற்கு மாறாக, இவர் புதிய உலக ஒழுங்கில் கூட்டாட்சிக் குடியரசு எங்கு உள்ளது என்பது பற்றி ஐயத்திற்கிடமின்றி கூறியுள்ளார். அது மேற்கில்தான் உள்ளது. NATO வைப் பற்றிய பொதுக் கருத்துக்களுடன் மேர்க்கல் நின்றுவிடவில்லை. தெஹ்ரானை குறிப்பாக அச்சுறுத்திய வகையில், ஈரானுக்கு எதிரான தற்போதைய பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான நிலைப்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டார்.அதனுடைய அணுவாயுத திட்டத்தை மீண்டும் ஆரம்பித்த வகையில், ஈரான் "முற்றிலும் அறிந்தும், வேண்டுமென்றே வரம்பை மீறியுள்ளது" என்று அவர் கூறினார். ஜேர்மனிய நாஜி ஆட்சியுடன் மறைமுக ஒப்புமை ஒன்றையும் அவர் குறிப்பிட்டார். "இஸ்ரேல் தகுதி பற்றி வினா எழுப்பும் ஒரு ஜனாதிபதி, பாரிய யூதப் படுகொலையை மறுக்கும் ஒரு ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் ஜேர்மனி சகிப்புத் தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நாங்கள் எங்களுடைய கடந்தகால படிப்பினையை கற்றுக் கொண்டுள்ளோம்." இந்தக் கருத்தை நிபந்தனையுடன் கூடிய அச்சுறுத்தல் என்று செய்தித்தாள் Die Welt மதிப்பிட்டு எழுதியுள்ளதாவது: "இத்தகைய சிந்தனை வழியின் முடிவு, மேர்க்கல் கூறியவாறு 'சமாதானப்படுத்துதலை' நிராகரிப்போம் என்பது இராணுவ வழியில் தலையிடுவதற்கு தயாராக உள்ளோம் என்றுதான் தர்க்கரீதியில் பொருள் தரும்." செய்தித்தாள் மேலும் கூறியது: "ஈரானிய அணுக்கரு ஆற்றல் திட்டத்தை பொறுத்தவரையில், 1930களில் அடோல்ப் ஹிட்லர் பின்பற்றிய வழியில் செல்லவிரும்புவோர் அவர்களுடைய சொற்களை செயலாக்கிக் காட்டவேண்டும் என்ற தேவையை கொண்டுள்ளது." அச்செய்தித்தாள் முடிவுரையாக கூறியது: "மேர்க்கலுடைய உரை மற்றும் அதற்குப் பதில், ஜேர்மனி, அமெரிக்காவின் பக்கத்தில் நெருக்கமாக இருப்பதாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகத்தான் தோன்றுகிறது; அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் பின்னர் வெளிப்படையாக இதைப் பற்றி குறிப்பிட்டு இராணுவத் தலையீட்டிற்கான வாய்ப்பு பற்றியும் குறிப்பிட்டார். FAZ உம் இதேபோன்ற முடிவிற்குத்தான் வந்தது: "முனீச்சில் அதிபர், ஈரான் பற்றியும் அதன் ஜனாதிபதி இஸ்ரேலிய எதிர்ப்பு முழக்கங்களையும் பற்றி தெளிவாகக் கூறியுள்ள சொற்கள் அமெரிக்கர்களிடையே இம்முறை ஜேர்மானியர்கள் தங்கள் புறத்தில் இராணுவ நடவடிக்கை என்று இல்லாவிட்டாலும், வலுவான ஆதரவை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது."ரஷ்யாவுடனான வருங்கால உறவுகள் ஈரானைப் பொறுத்து அது எப்படி நடந்து கொள்ளும் என்பதை ஒட்டி இருக்கும் என்றும் மேர்க்கல் குறிப்பிட்டார். சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் மாஸ்கோவுடனான நெருக்கமான நட்பை, வாஷிங்டனுடன் சமநிலை காண்பதற்காக விரும்பியிருந்தார்; மேர்க்கலோ இப்பொழுது ஈரான் பிரச்சினையில் ரஷ்யாவின் நிலைப்பாடு வருங்கால உறவுகள் பற்றி முக்கியமான கணிப்புக் கொள்ளுவதற்கு உதவும் என்று கூறிவிட்டார். "ஜேர்மனி, ரஷ்யா இரண்டிற்கும் இடையேயான மூலோபாய பங்காண்மை ஈரான் பூசல் பற்றிய தீர்மானத்தின் அடிப்படையில்தான் நிரூபிக்கப்படும்." என்று வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின்மீது என்னும் கூடுதலான அழுத்தத்தை அமெரிக்க பிரதிநிதிகள் கொடுத்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Robert Zoellick மாஸ்கோ தன்னுடைய அண்டை நாடுகளை கட்டுப்படுத்த முற்படுகிறது என்று குற்றம் சாட்டினார்; அந்நாடுகளை 19ம் நூற்றாண்டுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அது பார்ப்பதாகவும் அவர் கூறினார். குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ஜோன் மக்கையின், இக்கோடையில் சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெற இருக்கும் அடுத்த G-8 கூட்டத்தை தேவையானால் புறக்கணிக்கலாம் என்றும் கூறினார். ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான பூசல்கள் ஐரோப்பிய சக்திகள் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் களையப்படுதல் என்பது முனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் வந்துள்ளபோதிலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் போர் பற்றி எழுந்த பூசல்களின் மையத்தானத்தில் இருந்த முரண்பாடுகளை குறைத்துவிடவில்லை. பேர்லினும் பாரிசும் குறிப்பாக ஈராக் போர் பற்றிய ஆட்சேபனைகளை எழுப்பின; அவை அமெரிக்கப் படையெடுப்பின் இலக்குகளுக்கு தளமாக இருந்த புதிய காலனித்துவ குறிக்கோள்களின் தன்மையை எதிர்க்கவில்லை. மாறாக, ஜேர்மனியும், பிரான்சும் வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா புதிய சந்தைகளை காணவும் ஆற்றல் வளங்களை அடைவதற்கும் காட்டும் வேகத்தினால் அங்கு நிரந்தரமாக இராணுவத்தை கொண்டுவந்து பகுதியின் உறுதிப்பாட்டை சீர்குலைத்தால் அவற்றின் ஏகாதிபத்திய நலன்கள் என்ன ஆகும் என்பது பற்றித்தான் இருந்தது. ஆனால் போர் தொடக்கப்பெற்ற பின்னர், இரண்டு நாடுகளும் அமெரிக்க இராணுவத்தின் வெற்றி கிட்டப்பட வேண்டும் என்ற முறையில்தான் நடந்து கொண்டன. இராணுவத் தளவாடங்கள் இயக்கப்படுவதற்கு தங்களால் ஆன உதவியை இவை செய்தன; ஆப்கானிஸ்தானில் கடுமையாக போரிட்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கு பதிலாக தங்கள் படைகளை அனுப்பி வைத்தன; மேலும் தங்கள் உளவுத் துறை பிரிவுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை கொள்ளவும் வகை செய்திருந்தன. வாஷிங்டன் புறம் நகர்வதைக் காட்டிய வகையில், மேர்க்கல் ஈராக்கில் அமெரிக்க இராணுவம் காணும் சங்கடத்தை, மத்திய கிழக்கு முழுவதும் பரந்த அளவில் மக்கள் அமெரிக்கர் மீது அதிருப்தி அடைந்துள்ளமை பெருகியதையும் எதிர்கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுகிறார். இவருடைய புதிய போக்கிற்கு SPD உடைய தயக்கமற்ற ஆதரவு கிடைத்துள்ளது; அக்கட்சிதான் ஜேர்மனியின் பெரும் கூட்டணியில் வெளியுறவு அமைச்சரகத்தின் பொறுப்பை கொண்டுள்து. பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக்கும் ஈரானுக்கு எதிரான அணியில் சேர்ந்துள்ளதுடன், அண்மையில் அணுவாயுதத் தாக்குதல்களை நடத்துவோம் என்றும் தெஹ்ரானை எச்சரித்துள்ளார். இதுகாறும் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அகமதிநெஜட் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் ஹமாஸ் என்று முக்கிய இஸ்லாமிய பிற்போக்குச் சக்திகள்தான் மக்கள் அதிருப்தியின் பெருகிய தன்மையினால் பயனடைந்துள்ளன. இப்போக்குகள் உள்ளூரில் இருக்கும் ஆளும் வர்க்க மேற்தட்டுக்களின் ஒரு பிரிவைப் பிரதிபலிக்கின்றன; இரண்டுமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீவிரப் போராட்டத்தை நடத்த விருப்பத்தையோ, தயார் நிலையையோ காட்டவில்லை. இருந்தபோதிலும்கூட, பெரிய சக்திகள் மத்திய கிழக்கில் பெருகிவரும் உறுதியற்ற தன்மையை தங்கள் நலன்களுக்கான அச்சுறுத்தல் என்று காண்பதோடு அதற்கு எதிராக வன்முறையிலான எதிர் நடவடிக்கைகளுக்கும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி வெறுப்புக்களை இவை களைந்துள்மை, 1900ம் ஆண்டு போட்டியிட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய வல்லரசுகள் சீனாவில் பாக்சர் கிளர்ச்சியை (Boxer Rebellion) அடக்க ஒன்றாகச் சேர்ந்ததை நினைவுறுத்துகிறது. பிரிட்டிஷ் பேரரசின் செல்வாக்கு உச்சக் கட்டத்தை எய்தியிருந்தது; அனைத்துப் புறங்களில் இருந்தும் பிரிட்டன் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தது. ரஷ்யா, ஜப்பான், ஜேர்மனி ஆகியவை சீனாவிற்குள் நுழைந்து அந்த மகத்தான நிலப்பகுதியில் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளாக ஒரு பகுதியை கொள்ள விரும்பின. ஆனால் காலனித்துவ அடிமைத்தனத்தை எதிர்த்து விரட்ட எழுந்த தேசிய இயக்கம் ஏற்பட்ட அளவில், போட்டியிட்டுக்கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து எதிர்ப்பை குருதியில் மூழ்கடிக்கத் தயங்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் டெனிஷ் நாட்டு செய்தித்தாளன Jyllands-Posten ல் முகம்மது நபியின் கேலிச் சித்திரப் படங்கள் வெளியிடப்பட்டதும், அவை பின்னர் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டதும் கவனிக்கப்பட வேண்டும். ஈரான் மற்றும் பிற முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக ஒரு புதிய ஏகாதிபத்திய தாக்குதலுக்கு கருத்தியல் தளம் ஒன்றை நிறுவி, வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துவதுதான் இச்சித்திரங்கள் வெளியிடப்பட்டதன் நோக்கமாகும். ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய கூற்றானது அப்பட்டமான பொய் என்று அம்பலமான பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்கத் தலைமையிலான "ஜனநாயகம்" அறிமுகப்படுத்தப்படுதல் ஒரு நயமற்ற பிரச்சாரம் என்றும் அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு புதிய இராணுவ வகையிலான தாக்குதல், "பண்பாடுகளின் மோதல்கள்" என்ற பெயரில் திட்டமிடப்படுகின்றது. வலதுசாரி Jyllands-Posten புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போராட்டத்தைத்தான் வரலாறாகக் கொண்டுள்ளது; மேலும் அந்நியநாட்டார்மீதான வெறியில் அரசியல் முன்னேற்றத்தை டெனிஷ் மக்கள் கட்சி காண்பதற்கும் துணைபுரிந்து வந்திருக்கிறது. Fogh Rasmussen தலைமையில் வலதுசாரி அரசாங்கம் தேர்தலில் வெற்றியைக் கண்டதிலும் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. கடுமையான எதிர்ப்பை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அந்நாளேடு கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் முகம்மது நபிகளை இழிவுபடுத்துதல் என்பது பெரும் தாக்குதலாக கருதப்படுகிறது; அத்தகைய தூண்டுதலுக்கு கணிசமான எதிர்ப்பு இருக்கும் என்பது தெளிவு. வன்முறை உட்பட இந்த ஆர்ப்பாட்டங்கள், இஸ்லாத்தின் பொறுமையின்மைக்கு உதாரணம் என்றும் மேற்கு, இஸ்லாமிய பண்பாடுகளின் இயைந்துபோகாத் தன்மைக்கு நிரூபணம் என்றும் இப்பொழுது ஏராளமான இடது-தாராளவாத செய்தித்தாட்கள் உட்பட, செய்தி ஊடகத்தால் பயன்படுத்தப்படுகின்றன. "பேச்சுரிமை" என்ற பெயரில் இதே செய்தி ஊடகங்கள் ஈராக்கிய போர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை ஆதரித்தன; இப்பொழுது ஈரானுக்கு எதிராக போர் முரசைக் கொட்டுகின்றன. Suddeutsche Zeitung ல் வந்துள்ள கருத்து ஒன்று, இப்பிரச்சாரமானது முனீச்சில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே இருந்த வேறுபாடுகள் களையப்படுவதற்கு உதவின என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது. Suddeutsche Zeitung எழுதியது: "இஸ்லாமியரின் சீற்றம், மேற்கு நாடுகளின் உலகத்தை நிரூபிக்கும் வகையில் ஒற்றுமைப்படுத்தியது: தான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நியாயமான முறையில் அது நினைக்கிறது. இந்தப் புதிய ஒத்திசைவின் வெளிப்படையான சான்றாக திகழும் வாய்ப்பை மூனிச் பாதுகாப்பு மாநாடு அளித்தது. அட்லாண்டிக் கடந்த பாதுகாப்பு வலைப்பின்னல் தன்னை வலுப்படுத்திக் கொள்ளுவதுடன் நிற்கவில்லை; ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது: அதையொட்டி தன்னுடைய பார்வையை சரி செய்து கொள்ளுகிறது... இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றுவித்துள்ள அச்சுறுத்தல் ஒரு புதிய ஒருமுகப்போக்கை விரைவுபடுத்தியுள்ளது. |