World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan foreign minister discusses war, not peace, in Washington

இலங்கை வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டனில் சமாதானத்தை அன்றி யுத்தத்தை பற்றியே கலந்துரையாடினார்

By K. Ratnayake
10 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை வெளிப்படையான உள்நாட்டு யுத்தத்திற்கு மீண்டும் துரிதமாக நழுவிச் செல்கின்ற நிலையில், வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டோலீஸா ரைஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு, நிதி மற்றும் திணைக்கள அலுவலர்களுடன் மூன்று நாள் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக கடந்த வாரம் வாஷிங்டனில் தங்கியிருந்தார்.

உத்தியோகபூர்வமாக இரு சாராரும் "சமாதானத்திற்கான" தமது விருப்பத்தை வலியுறுத்திக்கொண்டனர். ரைஸும் சமரவீரவும் "இலங்கை சமாதான முன்னெடுப்புகளின் தற்போதைய நிலைமை பற்றியும் மற்றும் யுத்த நிறுத்தத்தை பலப்படுத்துவது பற்றியுமே" கலந்துரையாடியதாக ரைஸின் பேச்சாளர் ஒருவர் பெருந்தன்மையான இராஜதந்திர மொழியில் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷ, "சமாதானத்திற்காக இன்னும் ஒரு மைல் மேலும் பயணிக்க இன்னமும் விருப்பங் கொண்டிருக்கின்றார்" என்பதை ரைஸுக்கு உறுதிப்படுத்தியதாக சமரவீர அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இவை எதனிலும் எவரும் ஏமாற வேண்டியதில்லை. நவம்பர் 17 ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷ சிங்களத் தீவிரவாதிகளின் பின்னணியுடன் குறுகிய வெற்றிபெற்றதை அடுத்து, தீவின் வடக்கு கிழக்கில் வன்முறைகளும் அதே போல் தமிழ் சிறுபான்மையினர் மீது பாதுகாப்புப் படையினரின் ஆத்திரமூட்டல்களும் நாடக பாணியில் அதிகரித்துள்ளன. இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் இராணுவ சிப்பாய்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலைகள் மற்றும் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

சமரவீர வாஷிங்டனில் இருந்த போது கூட, ஜனவரி 2 அன்று திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக கிழக்கு இலங்கையில் பரந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதற்கு ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகரால் அனுப்பிவைக்கப்பட்ட விசேட அதிரடிப்படை கொமாண்டோக்களே சாத்தியமான வகையில் பொறுப்பாளிகள் என்பதை கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியிருந்தது. இந்தப் பாதுகாப்பு ஆலோசகரான எச்.எம்.ஜி.பி. கொட்டகதெனிய, முன்னைய உப பொலிஸ் மா அதிபரும் சிங்களப் பேரினவாத ஜாதிக ஹெல உறுமயவின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமாவார்.

இலங்கை இராணுவம் நேரடியாகவோ அல்லது தங்களுடன் இணைந்து செயற்படும் துணைப்படைக் குழுக்கள் மூலம் மறைமுகமாகவோ தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொலை செய்வதில் தலையீடு செய்யவில்லை என பொருத்தமற்ற வகையில் நிராகரித்துள்ளது. ஆனால், புலிகளுக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தன்று படுகொலை செய்யப்பட்டது உட்பட ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் தாக்குதல்கள் தீவு பூராவும் இனவாத பதட்ட நிலைமைகளுக்கு தூபமிட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாக படையினர் மீது மறைந்திருந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வெள்ளியன்று கடற்படை கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டு 12 கடற்படையினர்கள் கொல்லப்பட்டமை இதன் புதிய கட்டமாகும். இராணுவத்தைப் போலவே புலிகளும் இத்தகைய தாக்குதல்களை பொறுப்பேற்க மறுக்கின்றனர்.

2003 ஏப்பிரலில் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததில் இருந்தே, கொழும்பு அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்களானதாகவே தென்படுகின்றன. நோர்வே அனுசரனையாளர்களின் முயற்சிகள் இருந்த போதிலும், என்ன கலந்துரையாடப்பட உள்ளது என்பது ஒரு புறம் இருக்க சந்திப்பை எங்கே நடத்துவது என்பதிலேயே உடன்பாடுகள் காணப்படவில்லை. இராஜபக்ஷ இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்திற்காக 2002 யுத்த நிறுத்தத்தை "பலப்படுத்த" பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமென கோருகின்றார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தமிழ் மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் வகையில் "ஒரு பொருத்தமான அரசியல் வரைவை" முன்வைக்குமாறும் அல்லது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்கொள்ள நேரும் எனவும் கடந்த நவம்பரில் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

சமரவீர இந்த சூழிநிலையில் ரைஸுடனும் மற்றும் ஏனைய அமெரிக்க அலுவலர்களுடனும் இராஜதந்திர நட்புகளை சாதாரணமாக பரிமாறிக்கொண்டிருப்பார் என்பது நம்பமுடியாததாகும். தீவு மீண்டும் யுத்தத்தை நோக்கி நழுவிக்கொண்டிருக்குமளவில், வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவின் அரசியல் மற்றும் சாத்தியமான இராணுவ ஆதரவிற்காகவும் ரைஸுக்கு சந்தேகத்திற்கிடமின்றி அழுத்தம் கொடுத்திருப்பார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை இலங்கை அரசாங்கம் மெளனமாக ஆதரிப்பதைப் போல், இலங்கையின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்திற்கு" அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும், இல்லையேல் நடைமுறையில் பங்குபெற வேண்டும் என கொழும்பில் உள்ள பேரினவாத ஊடகங்கள் மீண்டும் மீண்டும் கூறிய யோசனைகளை அவர் வலியுறுதியிருப்பார் என்பது சாத்தியமானதாகும்.

வலதுசாரி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு சமரவீர செவ்வி கொடுத்த போது, அமெரிக்கா செய்யவேண்டியது என்ன என்பது பற்றி நேரடியாகவே குறிப்பிட்டார். "தேனீரும் அனுதாபமும் மட்டும் போதாது. தாம் ஒரு விடுதலை இயக்கத்துடன் அன்றி, அல் கொய்தாவையும் விட ஆபத்தான ஒரு இரக்கமற்ற கொலை இயந்திரத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம் என்பதை அமெரிக்கா உணர்ந்துகொள்ள வேண்டும்," என அவர் அந்த செய்தித்தாளுக்குத் தெரிவித்தார். "புலிகள் நவீன பயங்கரவாதத்தின் ஒரு ஆற்றல் கொண்ட தந்தை" என அவர் பிரகடனம் செய்தார்.

வாஷிங்டன் ஏற்கனவே புலிகளை ஒரு "பயங்கரவாத அமைப்பாக" பிரகடனம் செய்துள்ளதோடு 2002 மற்றும் 2003 பேச்சுவார்த்தைகளின் போதும், புலிகள் உத்தியோகபூர்வமாக வன்முறைகளை கைவிட்டு நிராயுதபாணியாகும் வரை அதை இரத்துச் செய்யவும் மறுத்துவிட்டது. ஆயினும், சமரவீர புஷ் நிர்வாகத்தை ஒரு படி மேலே சென்று தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் நடவடிக்கைகளை தடை செய்யுமாறு நெருக்கினார். தமிழர் புணர்வாழ்வுக் கழகமானது 2004 டிசம்பரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் புலிகள் சார்பு நிவாரண அமைப்பாகும்.

ஒரு சிறிய தெற்காசிய நாட்டின் பிரதிநிதி என்ற முறையில், "தேனீர் மற்றும் அனுதாபத்திற்கும்" மேலதிகமாக எதையும் வலியுறுத்தும் நிலையில் சமரவீர இருக்கவில்லை. ஆயினும் அவர், செனட் வெளியுறுவுக் குழுத் தலைவர் ரிச்சர்ட் லுகர் மற்றும் ஏனைய காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட யாராவது செவிமடுக்கக் கூடியவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்தச் செய்தியை மீண்டும் தெரிவித்தார். "சமாதான முன்னெடுப்புகளை முன்நகர்த்த விரும்புவதால் அமெரிக்க காங்கிரஸ் தனது முழு ஆதரவையும்" இலங்கைக்கு வழங்கும் என வெளியுறவு அமைச்சருக்கு லுகர் உறுதியளித்தார்.

அமெரிக்க பிரதிபலிப்பு

புஷ் நிர்வாகத்தின் பிரதிபலிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியிலும், இராஜாங்கச் செயலாளர் ரைஸ், இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல் நிலைப்பாடு அல்லது இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கையுடனான இராஜதந்திர சொற்களில் கூட விமர்சிக்கவில்லை. இராஜபக்ஷவின் பங்காளிகளான சிங்களத் தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இனவாத ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தெளிவற்ற முறையில் கூட அவர் குறிப்பிடவில்லை.

அதற்குப் பதிலாக, இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரின் படி, ரைஸ் "அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி கவலை" தெரிவித்த பின்னர், "தமிழ் புலிகளின் ஆத்திரமூட்டல்களைக் கண்டு பொறுமை காப்பதற்காக இலங்கை அரசாங்கத்தை புகழ்ந்தார்." "பயங்கரவாதத்தை தோற்கடிக்கவும் சமாதானத்தை முன்னெடுக்கவும்" இலங்கையுடன் செயற்பட அமெரிக்கா விருப்பங்கொண்டுள்ளது" என அவர் பிரகடனம் செய்தார். அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் "புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான நடவடிக்கைகளுக்கு அனுசரனை செய்வது பற்றி பேசுவதற்காக" இலங்கைக்கு பயணிப்பார் என ரைஸ் அறிவித்தார்.

புஷ் நிர்வாகம் ஒரு தெளிவான சாய்ந்திருக்கும் திசையில் நகர்கின்றது. இலங்கை பாதுகாப்பு படைகள் தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறைகளில் ஈடுபடுகின்ற போதிலும், கொழும்பு அரசாங்கத்தின் "பொறுமைக்காக" அதை "புகழ்வதானது" இராஜபக்ஷ, இராணுவம் மற்றும் சிங்களத் தீவிரவாதிகளுக்கு மேலும் முன்செல்ல உற்சாகமளிக்கும். ரைஸுடைய குறிப்புகள், இதே போன்ற பக்கச் சார்பை வெளிப்படுத்திய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் கடந்த மாதம் சந்தித்தை அடுத்தே வெளிவந்துள்ளன. இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை, "தற்போதைய வனுமுறைகளுக்கு முடிவுகட்டுமாறு" புலிகளை வலியுறுத்தியதோடு அவ்வாறு செய்யவில்லையெனில் "கடுமையான விளைவுகளை" எதிர்நோக்க நேரும் எனவும் எச்சரித்தது.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் போல் இலங்கையில் "சமாதானத்தை" உருவாக்கும் எண்ணம் புஷ் நிர்வாகத்திற்கு கிடையாது. தீவில் 20 வருடகால கொடூரமான உள்நாடு யுத்தத்தைப் பற்றி அக்கறையெடுக்காத வாஷிங்டன், இப்போது இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்த மோதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அதற்கு முடிவுகட்ட விரும்புகிறது. இந்தியா அமெரிக்க கூட்டத்தாபனங்களுக்கு மலிவு உழைப்பு வளத்தை விரிவுபடுத்தி வருவது மட்டுமன்றி, தெற்காசியாவானது பிரதான வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

புஷ் நிர்வாகம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்து வருவதோடு, கடந்த வெள்ளியன்று ரைஸ் வெளியிட்ட குறிப்புகளிலும் இந்த உண்மை பிரதிபலித்தது. அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "எனது முன்னுரிமைப் பட்டியலில் முழு தெற்காசியப் பிராந்தியத்தையும் மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன். இந்தியாவுடனான உறவுகளை விரிவுபடுத்துவது மிக மிக முக்கியமானதாகும்," என்றார். இந்தாண்டு கடைப் பகுதியில் ஜனாதிபதி புஷ்ஷும் இந்தியாவிற்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கான அமெரிக்க ஆதரவானது எப்பொழுதும் அதனது இலக்குகளை அடைவதற்கான ஒரு தெளிவான சூழ்ச்சி முறையாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்க இராஜதந்திரிகள் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கு வலியுறுத்தும் அதே வேளை, கொழும்பின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான "ஒத்துழைப்பை" விரிவுபடுத்துவதற்கான அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகளின் உறுதியான முயற்சிகளும் காணப்படுகின்றன. 2004 சுனாமியை அடுத்து சந்தர்ப்பத்தை பற்றிக் கொண்ட பென்டகன், முதற் தடவையாக இலங்கைக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பி வைத்ததன் மூலம், எதிர்காலத்தில் தீவின் விவகாரங்களில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கான முன்னோடியை ஏற்படுத்திக் கொண்டது.

தற்போது அமெரிக்க இராணுவம் ஈராக் புதைசேற்றில் சிக்கியுள்ளதுடன், இலங்கையில் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் நுழையும் பலமான நிலையில் புஷ் நிர்வாகம் இல்லை. ஆயினும், தீவு மீண்டும் யுத்தத்தை நோக்கி சரிந்து செல்கின்ற நிலையில், அமெரிக்க அலுவலர்கள் தமது பிரதிபலிப்புகள் பற்றி தெளிவாகவே கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கை இராணுவத்தின் ஆத்திரமூட்டல்களை குருட்டுக் கண்களுடன் நோக்குவதோடு புலிகளைத் திட்டுவதன் மூலம், ஏற்கனவே வெடிக்கும் தறுவாயில் உள்ள நிலைமைக்கு ரைஸ் மேலும் எண்ணெய் ஊற்றுகின்றார்.

வாஷிங்டனில் காற்றடிக்கும் திசையைப் பொறுத்து இராஜபக்ஷ வேகமாக செயற்பட வேண்டும். கடந்த வாரக் கடைசியில், புலிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை குறிப்பிடும் வகையில் இறுக்குவதற்காக ஒரு கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை அவர் பற்றிக்கொண்டார். "எமது முடிவுகள் பயங்கரவாதிகளின் விருப்பத்திற்கு அமைய திருத்தப்பட முடியும் என யாரும் நினைத்தால் அது பெரும் பிழையாகும். நாங்கள் செவிடர்களோ அல்லது குருடர்களோ அல்ல என்பதை புலிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு சிந்திப்பார்களேயானால், அவர்களுக்கு அத்தகைய சிந்தனைகளை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது," என அவர் பிரகடனம் செய்தார்.

இது யுத்தத்திற்கான மொழியே அன்றி சமாதானத்திற்கானது அல்ல.

Top of page