WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
European media publish anti-Muslim cartoons: An ugly and calculated
provocation
ஐரோப்பிய செய்தி ஊடகம் முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச் சித்திரங்களை வெளியிடுகிறது: ஒரு
இழிந்த மற்றும் முன்னேற்பாட்டுடன் செய்யப்பட்ட ஆத்திரமூட்டலாகும்
By the Editorial Board
4 February 2006
Back to screen
version
தீர்க்கதரிசி முகம்மது நபிகளை ஒரு பயங்கரவாதி, கொலைகாரர் என்று சித்திரித்துக்
காட்டும் மாசுபடுத்தும் கேலிச்சித்திரங்களை ஐரோப்பிய செய்தித் தாட்கள் தொடர்ந்து வெளியிடுவதை உலக சோசலிச
வலைத் தளம் எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடமில்லாத வகையில் கண்டிக்கின்றது. இத்தகைய பண்பற்ற கேலிச்சித்திரங்கள்
முஸ்லிம் உணர்வுகளை அவமதித்து ஆத்திரமூட்டும் நோக்கத்ததை கொண்டிருப்பதுடன், ஒரு அரசியல் ஆத்திரமூட்டலும் ஆகும்.
ஜேர்மனிய, இத்தாலிய பாசிசத்துடன் வரலாற்று தொர்புடைய ஒரு வலதுசாரி டென்மார்க் செய்தித்தாளில் இவை முதலில்
வெளியிடப்பட்டமை முஸ்லிம்-எதிர்ப்பையும் குடியேற்ற-எதிர்ப்பு உணர்விற்கும் எரியூட்டும் நோக்கத்திலாகும்.
ஆரம்பத்தில் கேலிச்சித்திரங்களை வெளியிட்ட செய்தித்தாளுக்கு வலதுசாரி டென்மார்க் அரசாங்கம்
கொடுத்த ஆதரவும், பின்னர் நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்ஸ்ர்லாந்து,
ஐஸ்லாந்து மற்றும் ஹங்கரியில் பழைமைவாத, தாராளவாத பத்திரிகைகள் அனைத்தும் அச்சித்திரங்களை மறுபதிப்பு செய்ததற்கும்
செய்தி ஊடகத்தின் சுதந்திரம் அல்லது மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
அப்படிப்பட்ட கூற்றுக்கள் அத்தகைய ஜனநாயக கோட்பாடுகளை அவமதிப்பு செய்வதாகும்.
மாறாக, இப்படிப்பட்ட குறுகிய நோக்கமுடைய அழுக்கை பகிரங்கப்படுத்தியமை, ஐரோப்பிய
ஆளும் தட்டினர் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனித்துவ தலையீடுகளுக்கு
நேரடி ஆதரவு கொடுத்து பின்னே நிற்கும் மாற்றத்துடன்தான் பிணைந்துள்ளது. ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் படுகொலைகள்,
பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான புதிய அச்சுறுத்தல்கள், இன்னும் கூடுதலான வகையில் ஈரானுக்கு எதிராக
பொருளாதாரத் தடைகளும் பின்னர் வரவிருக்கக்கூடிய இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கான தயாரிப்புக்களுக்கும் இடையே இது
நிகழ்ந்துள்ளது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல.
மேலும் இச்செயல், பெருகி வரும் முஸ்லீம் மக்கட்தொகையை அரக்கத்தன்மையுடையது
போல் காட்டுதல், அதை ஒதுக்கிவைத்தல், தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளுள் பெருகி வரும் சமூக ஏழ்மைக்கு
அதை போலிக்காரணமாக பயன்படுத்துதல் என்ற, பெயரளவிலான "இடது" கட்சிகளின் உதவியுடன் ஆதரவளிவிக்கப்பட்டு
வலதுசாரி அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் கொள்கைகளின் திட்டமிட்ட தொடர்ச்சியும்,
தீவிரப்படுத்தப்படுதலும்தான்.
பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பெயரில், ஐரோப்பா முழுவதும் உள்ள
அரசாங்ஙக்கள் முதலில் முஸ்லிம் மக்களையும் மற்றும் ஏனைய குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறை
நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் முழு தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக
உரிமைகளை அழிப்பதற்கான அடித்தளத்தையும் அவை தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த போலீஸ் அரசாங்கம்
போன்ற தயாரிப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றிற்கு எதிரான
தாக்குதலுடன் கைகோர்த்து நிற்பதுடன் இன்னும் கூடுதலான வகையில் உயர்மட்டத்தில் இருக்கும் செல்வம் கொழித்த,
சலுகைகள் நிறைந்த சிறுபான்மையினர் முன்னொருபோதுமில்லாத செல்வக்குவிப்பு அடைவதற்கும் வகை செய்கின்றன.
மேற்குநாட்டு மதசார்பற்ற மதிப்பீடுகளை கிழக்கின் இருண்ட கூட்டத்திற்கு எதிராக
காப்பாற்றுவதாக கூறும் செய்தி ஊடகங்கள் இத்தகைய இனவெறிச் சித்திரங்களை அவர்கள் முகத்தில் வீசியெறியும்
நிலையைக் கண்டு உலகம் முழுவதிலும் இருக்கும் முஸ்லீம்கள் தங்களுடைய சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ள உலகம் முழுவதிலும்
உள்ள முஸ்லீம்கள் கொண்டுள்ள நேர்மையான சீற்றத்திற்கு பரிவுகாட்டுவதற்கு ஒருவரும் இஸ்லாம் மதத்தை அல்லது வேறு
எந்த மதத்தையும் ஆதரவளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
வெள்ளிக்கிழமையன்று, கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டதற்கு எதிராக மத்திய கிழக்கு,
வட ஆபிரிக்கா, ஆசியாவில் எதிர்ப்புக்கள் வெளிவந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் ஈராக்கிலும், பல்லாயிரக்கணக்கான
மக்கள் மேற்குக் கரை மற்றும் காசாப் பகுதியிலும், 50,000 மக்கள் சூடானின் தலைநகரான கார்டூமில் 50,000
பேரும் இவற்றை எதிர்த்து ஆர்ப்பரித்தனர். பிரித்தானியாவிலும், துருக்கியிலும் கூட முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இப்பொழுது வந்துள்ள மோதல்களுக்கு இட்டுச்சென்ற முந்தைய நிகழ்வுகள் இந்த
கேலிச்சித்திர வெளியீடுகள் அரசியல் ஆத்திரமூட்டல் என்பதை தெளிவாக்குகின்றன. டென்மார்க் நாளேடான
Jyllands-Posten
செப்டம்பர் 30 அன்று முகம்மது நபிகள் பற்றி 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது; இவ்வேடு பிரதம மந்திரி
Anders Fogh Ramussen
இன் தலைமையில் இருக்கும் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறது; இந்த அரசு தன்னுடைய கூட்டணியில்
குடியேற்ற எதிர்ப்பு வெறி, முஸ்லிம்-எதிர்ப்பு வெறி உடைய கட்சியையும் கொண்டுள்ளது.
1920களிலும் 1930களிலும்,
Jyllands-Posten
அதன் இத்தாலிய பாசிசம், ஜேர்மனிய நாஜிச
சர்வாதிகாரங்களுடன் கொண்டிருந்த பிணைப்பினால் இகழ்வுற்றிருந்தது. 1933ம் ஆண்டு டென்மார்க்கில் சர்வாதிகாரம்
புகுத்தப்பட வேண்டும் என்று இது வாதிட்டிருந்தது.
கடந்த செப்டர்பர் மாதம், இந்நாளேடு தீர்க்கதரிசி முகம்மது நபிகளின் உருவத்தை
வரைவதற்கு 40 கேலிச்சித்திரக்காரர்களை கேட்டுக் கொண்டது; இஸ்லாமிய சட்டத்தின்படி இது சமயநெறிக்கு
புறம்பானதும் தடுக்கப்பட்டதும் ஆகும். இந்தச் செயலின் ஆத்திரமூட்டல் மற்றும் எரியுட்டும் நோக்கத்தை தெளிவாக
எடுத்துக் கூறுகையில் ஆசிரியர் குழுத் தலைவர் கூறியது: "இதன் நோக்கம் மக்கள் தங்களையே தணிக்கைக்கு உட்படுத்திக்
கொள்வார்களா என்பதை ஆராய்வதே; வேறு விடயங்களில் முஸ்லீம் பிரச்சினைகள் வரும்போது என்ன நடக்கிறது என்பதை
நாம் கண்டுளோம்." என்றார்.
இதன் பின்னர் பன்னிரெண்டு ஓவியங்களை செய்தித்தாள் வெளியிட்டது. இவற்றில் ஒன்று
தீர்க்கதரிசி முகம்மது நபிகள் புகைக்குண்டு வடிவில் உள்ள தலைப்பாகையை அணிந்து கொண்டிருப்பது போல் காட்டியது;
மற்றொன்று நபிகள் சுவர்க்கத்தில் ஒரு மேகத்தில் அமர்ந்து தற்கொலை படை குண்டுவீச்சாளர்களிடம் அவர்களுக்கு
வெகுமதி கொடுப்பதற்கு அவரிடம் கன்னிப்பெண்கள் குறைந்துவிட்டதாக கூறுகிறார்; மூன்றாவது கேலிச்சித்திரம் நபிகள்
உரக்கச் சிரித்துக் கொண்டு ஒரு கையில் கத்தியுடனும், சுற்றிலும் பர்தா அணிந்த மகளிர் இருப்பதையும் சித்திரித்துள்ளது.
அக்டோபர் மாதம், இக்கேலிச் சித்திரங்கள் பற்றி தங்கள் எதிர்ப்புக்களை விவாதிக்க ஒரு
கூட்டம் தேவை என்று கூறிய பெரும்பாலான முஸ்லீம்களை கொண்ட 11 நாடுகளுடைய தூதர்களை பிரதம மந்திரி
Rasmussen
சந்திக்க மறுத்துவிட்டார். வரவிருக்கும் நிகழ்வுகளுக்குக் கட்டியம் கூறுவது போல், செய்தி ஊடக உரிமையில்
கேலிச்சித்திரங்கள் முறையானவை என்று அறிவித்து, இதில் விவாதத்திற்கு ஏதும் இல்லை என்பதை உட்குறிப்பாகத்
தெரிவித்தார்.
இந்த அவமதிப்பு, ஜனவரி மாதம் ஒரு நோர்வே நாட்டு சஞ்சிகை ஓவியங்களை
வெளியிட்டதில் கூடுதலாயிற்று. டென்மார்க் முஸ்லிம் குழுக்கள், மற்ற முஸ்லீம் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை
டென்மார்க் தொடர்ந்து பொருட்படுத்தவில்லை; ஜனவரி இறுதியில் சவுதி அரேபிய மற்றும் சிரியாவின் தூதர்கள்
டென்மார்க்கிலிருந்து திரும்பப் பெறும் வரையும் மற்றும் சவுதி அரேபியா டென்மார்க் பொருட்களை
புறக்கணிக்கப்போவதாக அறிவிக்கும் வரை இது நீடித்தது.
புறக்கணிப்பு விரிவடைய தொடங்கியதும், ஐரோப்பாவிலேயே இரண்டாம் பெரிய பால்
பொருட்கள் உற்பத்தி நிறுவனமான டென்மார்க்கின் Arla
Foods, அதன் மத்திய கிழக்கு விற்பனை முற்றிலும் வற்றிவிட்டது என்று
கூறிய பிறகுதான் டென்மார்க் அரசாங்கமும்,
Jyllands-Posten வெளியீடும் மன்னிப்பு அறிக்கைகளை
வெளியிட்டன; அதே நேரத்தில் கேலிச்சித்திரங்கள் வெளியிடும் முடிவையும் ஆதரித்தன.
இந்த வாரம் கொதித்துக் கொண்டிருக்கும் பூசல் பிரெஞ்சு செய்தித்தாள்
France Soir
கேலிச்சித்திரங்களை மறுபதிப்பு செய்து வெளியிட்ட வகையில் வெடிப்பைக் கண்டது. வியாழனன்று ஓவியங்களை அச்சிட்டு
வெளியிட்டதை நியாப்படுத்தும் வகையில் ஒரு தலையங்கத்தில் செய்தித்தாளின் ஆசிரியர் "இந்த மதவெறி
பிற்போக்குவாதிகளிடம் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகள் போதும்." என எழுதினார்.
பிரான்சில் தாராளவாத
Liberation உட்பட மற்ற செய்தித்தாட்களும்
இந்நிலைப்பாட்டை பின்பற்றின. தன்னுடைய பங்கிற்கு Le
Monde நபிகள் போல் இருந்த ஒரு நபரின் ஒவியம்
சொற்றொடர்களை கொண்டு வரையப்பட்டது; அதில் "நான் முகம்மதை ஓவியமாக வரையக்கூடாது" என்று
எழுதப்பட்டிருந்தது.
ஜேர்மனிய செய்தி ஏடுகளான
Die Welt, Die Tageszeitung, Tagesspiegel,
Berliner Zeitung, டச்சு நாட்டு ஏடுகள்
Volksrant, NRC Handelsblad, Elsevier,
இத்தாலியின்
La Stampa, Corriere della Sera, ஸ்பெயின்
நாட்டு El Periodico
மற்றும் பெல்ஜியத்தில் இருந்து இரண்டு டச்சு மொழி ஏடுகள் ஆகியவை கடந்த சில நாட்களில் அந்த ஓவியங்கள் சிலவற்றை
அல்லது அனைத்தையும் பிரசுரித்தவையாகும்.
பிரிட்டனில், BBC, ITV
மற்றும் Channel 4
ஆகியவை அனைத்தும் சில கேலிச்சித்திரங்களை தங்கள் செய்தி ஒளிபரப்பில் காட்டின.
இப்படி வெள்ளப்பெருக்கென இனவெறி நிறைந்த கேலிச்சித்திரங்கள் வந்ததின் பின்னணியில்
உள்ள அரசியல் சக்திகள் பற்றிய குறிப்பு டச்சுப் பாராளுமன்றத்தின் உறுப்பினரான
Geert Wilders
என்பவர் கூறிய திட்டத்தில் வெளியாகிறது; இவர் மகளிர் பர்தாக்கள் அணிவதைத் தடை செய்வதற்கு ஒரு புதிய சட்டம்
கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தன்னுடைய வலைத் தளத்தில் இக்கேலிச் சித்திரங்களை "டென்மார்க்
கேலிச்சித்திரக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தடையற்ற பேச்சுரிமைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும்
வெளியிடப்போவதாக" கூறியுள்ளார்.
டச்சு அரசாங்கம் மற்றும் ஓவியங்களை வெளியிட்ட செய்தி ஊடக வெளியீடுகளுக்கு,
ஆதரவாக ஐரோப்பிய அரசியல்வாதிகளிலும் அரசாங்க அதிகாரிகளினதும் பக்கத்தில் இருந்து களத்தில் இறங்கியவர்களில்
பிரான்சின் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியும் உள்ளார். முற்றிலும் பண்பாடற்ற இந்த மனிதர், கடந்த ஆண்டு
பிரான்சின் பெரும்பாலான முஸ்லிம் குடியேற்ற மக்கள் நிறைந்த புறநகர்ப்பகுதிகளில் போலீசிற்கு எதிரான கலகங்களை
தூண்டிவிட உதவியவர், அப்பொழுது அம்மக்களை "இழிவானவர்கள்", "அழுக்கிக்கிடப்பவர்கள்" என்று குறிப்பிட்டவர்,
இப்பொழுது முஸ்லீம்கள்மீது மற்றொரு தாக்குதல் நடத்துவது செய்தி ஊடகத்தின் சுதந்திரம் என்னும் பொறுப்பை ஏற்றுப்
பேசியுள்ளார்.
இத்தகைய ஜனநாயக விரோதப் போக்குடைய தாக்குதலுக்கு, ஜனநாயகப் போர்வை
கொடுக்கும் அபத்தமான முயற்சி சார்கோசியின் செயலால் முன்னுதாரணமாக நிற்கிறது; இவர்தான் பிரான்சில்
நிலவியிருந்த குடிஉரிமைகளை இல்லாதொழிப்பதற்கான அவசரகால பிரகடனத்திற்கு காரணமாவார். சார்க்கோசி மற்றும்
ஜனாதிபதி ஜாக் ஷிராக்கின் பிரெஞ்சு அரசாங்கம் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்
Lutte Ouvriere (தொழிலாளர்
போராட்டகட்சி) ஆதரவுடன் பொதுப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் தலை முக்காடு அணிந்து வருவதை தடைசெய்ய சட்டம்
கொண்டுவந்த வகையில், முஸ்லீம்கள் மீதான தாக்குதலை முன்னோடியாக கொண்டுவந்தது. இந்த பொதுவான சமய
உரிமையை வெளிப்படையாக தாக்குதல், மற்றும் குறிப்பாக முஸ்லிம்களுடைய உரிமைகளை தாக்குதல் என்பது
மதச்சார்பற்ற தன்மை மற்றும் பிரெஞ்சு குடியரசின் "அறிவு ஒளி சான்ற தன்மையின்" பெறுமதிகளை காப்பதற்கு என்றும்
அறிவிக்கப்பட்டது.
மதசார்பற்ற தன்மை மற்றும் செய்தி ஊடகத்தின் சுதந்திரம் என்பதில் உண்மையான
பொருளுரை கடந்த ஆண்டு கலகங்களுக்கு பின்னர் சார்க்கோசி கொண்டுவந்த சட்டத்தின் மூலம் ஏராளமான பிரெஞ்சு
முஸ்லிம்கள் முதல் அலையாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வகையில் புலனாயிற்று. குற்றம் சாட்டப்பட்ட
--தண்டிக்கப்பட்ட அல்ல--- அனைத்து வெளிநாட்டினரும் கட்டாய வெளியேற்றத்திற்குட்பட வேண்டும் என்று இச்சட்டம்
வகைசெய்துள்து. கலவரங்களின்போது சார்க்கோசியின் கலகப் பிரிவு போலீசாரால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது
செய்யப்பட்டனர்; இப்பொழுது அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேபோல் அங்கெலா மேர்க்கலின் தலைமையில் உள்ள புதிய பெரும் கூட்டணி அரசாங்கம்
ஜேர்மனிய மண்ணில் இருந்து வெளிநாட்டினரை வெளியே அனுப்பும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை கண்காணிக்க இன்னும் கூடுதலான படைகள்
அனுப்பப்படும் என்று நெதர்லாந்து அறிவித்துள்ளது. முஸ்லீம் எதிர்ப்பு தாக்கதலுக்கு பின்னணியில் இருக்கும் வெளியுறவுக்
கொள்கையின் நலன்களை சுட்டிக்காட்டுகிறது.
வெள்ளிக் கிழமையன்று அமெரிக்க வெளியுறவுத்துறை கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுவதை
எதிர்த்து ஓர் அறிக்கையை அளித்துள்ளது. "முஸ்லீம்களின் நம்பிக்கைக்கு விரோதமான வகையில்தான் இக்கேலிச்சித்திரங்கள்
உள்ளன" என்று கூறிய அத்துறையின் செய்தித் தொடர்பாளர் "செய்தி ஊடகம் மற்றும் பேச்சு, எழுத்து உரிமைகள் நாம்
முழுவதும் ஏற்கிறோம்; ஆனால் அத்துடன் செய்தி ஊடக பொறுப்பும் சேர்ந்திருக்க வேண்டும். மத, இன வெறுப்பு
உணர்வுகளை இவ்விதத்தில் தூண்டிவிடுதல் ஏற்கத்தக்கது அல்ல." என மேலும் கூறினார்.
இத்தகைய தலையீடு, அமெரிக்க செய்தி ஊடகத்தை நெரிக்க பலமுறை முயற்சி செய்து,
அமெரிக்காவிற்குள் முஸ்லீம்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தி வரும் ஓர் அரசாங்கத்தில் இருந்து வருவது, முற்றிலும்
பாசாங்குத்தனமானது ஆகும். 9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், புஷ் நிர்வாகம் உலகம் முழுவதும் இருக்கும்
முஸ்லிம்கள்மீதான தாக்குதலுக்கு தலைமை வகித்துள்ளது; இதற்கு "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது போலிக்காரணமாக
பயன்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் நம்பிக்கைபால் வாஷிங்டன் கொண்டுள்ள "மரியாதை" ஈராக்கில் அபு கிரையேப்
சிறைசாலையில் இழிவான முறையில் கைதிகள் நடத்தப்பட்ட விதத்தில் உலகம் முழுவதும் நன்கு அம்பலமாயிற்று; அங்கு இராணுவ,
உளவுத்துறை அதிகாரிகள் முஸ்லீம் நம்பிக்கைகள், உண்வுகள் ஆகியவற்றை இழிவுபடுத்தும் உத்திகளைத்தான் கையாண்டனர்.
வாஷிங்டனுடைய ஏகாதிபத்திய நடவடிக்கைகள், ஈராக், ஈரான் மற்ற இடங்களில்
ஆத்திரமூட்டலினால் பாதிப்பை அடையுமோ என்ற உடனடி அக்கறைதான் பெருமளவு இந்தக் கேலிச்சித்திரங்கள் வெளியீடு
பற்றிய அதிகாரபூர்வ அமெரிக்க பிரதிபலிப்பின் உந்துதலுக்குக் காரணமாகும்.
இக்கேலிச்சித்திரங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் சில அவை ஏளனம் செய்வதற்கு
உதாரணம் என்று கூறுகின்றனர்; மிக இழிந்த, வெறியுணர்வு கூடிய தன்மைக்கு நயமற்ற அழைப்பு விடுப்பது உண்மையான
சமூக, கலாச்சார விமர்சனத்துடன் ஒப்பிடக்கூடியது என்பதே இவர்களது வாதம். உண்மையில், ஐரோப்பிய
செய்தித்தாட்களில் வெளிவந்த ஓவியங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட்ட படங்கள் நாஜிக்கள்
காலத்தில் இழிவாக வந்த செமிடிய எதிர்ப்பு வகையைத்தான் வெளிப்படுத்தினவே அன்றி, ஏளனத்தன்மையை அல்ல.
இத்தகைய வெளியீடுகள் மத நம்பிக்கைக்கு எதிரான மதசார்பற்ற தன்மையின்
போராட்டத்துடன் தொடர்பு உடையது என்று கூறுவது அபத்தமானதாகும். மதம் பற்றிய உண்மையான விமர்சனம் மிக
உயர்ந்த அறிவார்ந்த மட்டத்தில், அறிவியல் மற்றும் பகுத்தறிவுடன் தொடர்பாகத்தான் நடத்தப்படமுடியுமே அன்றி,
அறியாமை, அச்சம் இவற்றிற்கு அழைப்பு விடுவதன் மூலம் முடியாது.
தற்போதைய நிகழ்வு அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஜனநாயகச் சிதைவு
ஏற்பட்டுள்ளதன் காணக்கூடிய தன்மையினால் தொழிலாளவர்க்கத்தை எதிர்கொள்ளக் கூடிய பாரிய ஆபத்துக்களை
புலப்படுத்தியுள்ளது. முஸ்லீம்-எதிர்ப்பு நாட்டுவெறி, மற்றும் அனைத்துவிதமான வகுப்புவாத, தேசிய நச்சு என்பது
தீர்க்கமுடியாத நெருக்கடிச் சகதியில் ஆழ்ந்துள்ள ஒரு சமூக முறையின் வெளிப்பாடு ஆகும்; அது பெரும்பாலான
மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத சமூக அமைப்புமுறையாகும்.
இத்தகைய பின்தங்கிய, பிற்போக்கான அரசியலுக்கு ஒரே மாற்று மருந்து அனைத்து
நாடுகள், மதங்கள், தேசியங்களில் இருக்கும் தொழிலாளர்கள் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை வளர்ப்பது ஆகும்; அது
போரை எதிர்ப்பதோடு, முதலாளித்துவ ஆட்சி, மற்றும் அது காக்க விரும்பும் முறையிலுள்ள உயரடுக்குகளின் உரிமைகளுக்கு
எதிராக, ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு கட்டமைக்கப்பட வேண்டும். அத்தகைய போரட்டத்தை
கொண்டுவருவதற்கான திட்டம் சோசலிச சர்வதேச நெறிகளில் அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
|