World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Hamas victory in Palestinian election

பாலஸ்தீனிய தேர்தலில் ஹமாஸ் வெற்றி

By Rick Kelly
27 January 2006

Back to screen version

பாலஸ்தீனிய சட்டசபை கவுன்சிலுக்கு புதன் கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. 95 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கான 132 தொகுதிகளில் 76 ஐ ஹமாஸ் கைப்பற்றும் என்று திட்டமிடப்படுகிறது.

பாலஸ்தீனிய நிர்வாகத்தின் (Palestinian Authority - PA) முன்னணி கன்னையான ஃபதாவும் (Fatah) மற்றும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கமும் (PLO) 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. ஹமாஸின் வெற்றி இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அதிருப்தியடையச் செய்திருக்கிறது. இஸ்லாமியவாதிகளுக்கு மிக வலுவான தேர்தல் வாக்குகள் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கருத்துக்கணிப்புக்களும் மற்றும் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்புக்களும் ஒரு குறுகியளவில் ஃபதா வெற்றிபெறலாம் என்று கணித்திருந்தன.

தேர்தல் முடிவு பாரிய சர்வதேச மற்றும் பிராந்திய விளைபயன்களை கொண்டதாகும். ஹமாஸ் இயக்கத்தின் வெற்றி புஷ் நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்தது. அது ஃபதாவின் வெற்றிக்கு ஒவ்வொரு முயற்சியையும் முன்னின்று செயல்படுத்தியது. வாஷிங்டன் போஸ்ட் சென்ற வாரம் வெளியிட்டிருந்த செய்தியின்படி, பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில் ஃபதாவிற்கு அமெரிக்கா ரகசியமாக 2 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

புஷ்ஷூம் மற்றும் அரசுத்துறை செயலாளர் கொண்டலிசா ரைசும் சம்பிரதாய ரீதியாக தேர்தல்களை வரவேற்றனர். அவர்கள் பாலஸ்தீனிய மக்கள், PA விற்கு ''ஒரு விழிப்புணர்வு அழைப்பை'' மற்றும் ''மாற்றத்திற்கான தங்களது விருப்பத்தை தெரிவித்ததை'' பாராட்டினாலும் நிர்வாகம் இந்த தேர்தல் முடிவை சட்ட விரோதமானது என்று கருதுவதாக தெளிவுபடுத்தியுள்ளது. ''பாலஸ்தீனிய மக்களை நிர்வகிக்க விரும்புகிற எவரும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுத்தான் செயல்படுத்த முடியும் என்ற நிலையில், அவர்கள் இரண்டு- அரசு தீர்வில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாகவும், இஸ்ரேல் வாழும் உரிமைகளை படைத்தது என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்'' என்று ரைஸ் அறிவித்தார்.

ஹமாஸ் நிறுவப்பட்ட சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நிலைபாட்டை பின்பற்றி வருகிறது. அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருப்பது என்னவென்றால், ஹமாஸ் தலைமையிலான ஒரு அரசாங்கத்துடன் வாஷிங்டன் எந்தப் பேரங்களுக்கான முன்நிபந்தனைகளையும் வைத்துக் கொள்வதற்கு, அந்த அமைப்பு இஸ்ரேலை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற அதன் அழைப்பை தள்ளுபடி செய்யவேண்டும் மற்றும் அது வன்முறையை துறந்து விட வேண்டும் என்பதாகும்.

இந்தத் தேர்தலுக்கு வாஷிங்டனுடைய விடையளித்தல், மீண்டும் ஒரு முறை அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுக்களான அதன் ஈராக் போரும் மற்றும் அதன் இஸ்ரேல் ஆதரவு போக்கும் மத்திய கிழக்கிற்கு ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியின் அங்கம் தான் என்ற கபடத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அமெரிக்கா தனக்கு அரசியல்ரீதியாக நட்பில்லாதவர்கள் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்தை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்களானால், அந்த தேர்தல் முடிவுகளை வாஷிங்டன் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

பாலஸ்தீனிய வாக்குப்பதிவு இஸ்ரேலுக்குள் ஒரு அரசியல் சூறாவளியை தூண்டியுள்ளது. ஆற்றலையிழந்திருக்கின்ற ஏரியல் ஷரோனுக்கு பதிலாக பிரதமராக பணியாற்றி வருகின்ற ஏகுட் ஓல்மட்டிற்கு எதிரான வலதுசாரி அணியைச் சார்ந்தவர்கள் ஹமாஸ் வெற்றியிலிருந்து அரசியல் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றனர். லிக்குட் தலைவரான பெஞ்சமின் நேட்டன்யாஹூ, அரசாங்கம் ஒரு பயங்கரவாத "ஹமாஸ்தான்" (Hamastan) உருவாக அனுமதித்து விட்டதாகவும், இந்த நிலவரத்திற்கு காசாவிலிருந்து அது வாபஸ் பெற்றுக்கொண்டதுதான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

வியாழனன்று ஓல்மர்ட் மூன்று மணி நேர அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் ஷின் பெட் (Shin Bet) தலைவர், இராணுவம் மற்றும் புலனாய்வு சேவைகளில் பணியாற்றும் மூத்த படைத் தளபதிகளும் உள்ளடங்கியிருந்தனர். ''ஹமாஸ் பங்கெடுத்துக் கொள்கின்ற ஒரு அரசாங்கம் அமையுமானால் உலகமும், இஸ்ரேலும் அதை புறக்கணிக்கும். மற்றும் அதை பொருத்தமற்றதாக உருவகப்படுத்திக்காட்டும்'' என்று அந்த கலைந்துரையாடல்களுக்கு பின்னர் ஓல்மர்ட் அறிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் சிறிது நேரத்தில் ஹமாஸ் மற்றும் ஃபதா ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்கள் வெடித்தன. ரமல்லா நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மேல் ஹமாஸ் தொண்டர்கள் தங்கள் பச்சைக்கொடியை ஏற்றிய பின்னர், இரண்டு கன்னைகளின் ஆதரவாளர்களும் சிறிது நேரம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். காசா மற்றும் மேற்குக் கரை முழுவதிலும் இஸ்லாமிஸ்டுக்கள் ஹமாசின் இராணுவப் பிரிவான குவாசம் பிரிகேட் உறுப்பினர்களுடன், மேற்குக் கரை நகரான நெப்லசிலும் தங்கள் ஆயுதங்களுடன் வெளிப்படையாக அணிவகுத்து சென்றனர்.

பாலஸ்தீனிய சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற தேர்தல் முறையில் (split electoral system), பாதிப் பேர் உள்ளூர் தொகுதிகள் அடிப்படையில் நியமன முறையிலும் மற்றும் இதர பாதிப்பேர் தேசிய பட்டியல் அடிப்படையில் சரிசம விகித வாக்களிப்பு முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நியூயோர்க் டைம்ஸ் தகவலின்படி, தேசியப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 66 தொகுதிகளில் 30 தையும், உள்ளூர் தொகுதிகள் நியமன முறையில் ஒதுக்கப்பட்டுள்ள 66 தொகுதிகளில் 46 யும் ஹமாஸ் வென்றெடுத்தது. அதே நேரத்தில் ஃபதா தேசியப்பட்டியலில் 27 உறுப்பினர்களையும் மற்றும் உள்ளூர் தொகுதிகள் அடிப்படையில் 16 தொகுதிகளையும் பெற்றிருக்கிறது.

தனது பாரம்பரிய கோட்டையான காசாவில் ஹமாஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. அது மேற்குக் கரையிலும், ஹெப்ரோனில் உள்ள ஒன்பது தொகுதிகளையும் மற்றும் ரமல்லாவில் ஐந்தில் நான்கையும் வென்று பெருமளவில் வெற்றி பெற்றது. மற்றும் நெப்லஸ், ஜெனின், கால்கிலா மற்றும் துல்காமிலும் பெரும்பான்மையை அது கைப்பற்றியது. கிழக்கு ஜெரூஸலத்தில் அது போட்டியிடுவதற்கு இஸ்ரேல் தடை விதித்திருந்தாலும், அந்த நகரத்திலுள்ள ஆறு தொகுதிகளில் நான்கில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இதர இரண்டு தொகுதிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். வாக்களிக்க தகுதியுள்ள 1.3 மில்லியன் வாக்காளர்களில் 78 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

ஹமாஸ் தலைமையிலான ஒரு அரசாங்கத்திற்கு நிதியுதவிகளை வெட்டி விடுவதாக தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பாவும் விடுத்திருந்த அச்சுறுத்தலை செயல்படுத்துவார்களா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அத்தகையதொரு முயற்சி எதிர்பாராத அனுமானிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி நடைபெற்று விடுமானால் தற்போது அந்த நிதியை நம்பியிருக்கும் பாலஸ்தீன நிர்வாகத்தை மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளை சீர்குலைத்து விடுகின்ற நிலை ஏற்படக் கூடும். அவை இரண்டும் வெளிநாட்டு நிதியை சார்ந்திருக்கின்றன. வாக்குப் பதிவை கண்காணித்த சர்வதேச குழுவைச் சார்ந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பாவும் அனைத்து நிதியளிப்பையும் நிறுத்தி விட வேண்டாம் என்று எச்சரித்து, பாலஸ்தீனிய அரசாங்கம் அடுத்த மாத இறுதி வாக்கில் பணத்தட்டுப்பாட்டிற்கு உள்ளாகும் என்று குறிப்பிட்டார்.

பெரிய வல்லரசுகளுடன் சமரசம் செய்து கொள்வதற்காக, தனது ஆதரவு பெற்று வென்ற மூன்று சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவரை ஹமாஸ் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அதற்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.

ஃபதாவின் தேர்தல் படுதோல்வி, மறைந்த யாசீர் அரஃபாத்தினால் நிறுவப்பட்ட பாலஸ்தீனிய தேசியவாத இயக்கம் பாலஸ்தீன மக்களிடையே எந்த அளவிற்கு இழிவாக கருதப்பட்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு தேசியவாத முன்னோக்கு அடிப்படையிலான, ஃபதா தலைமையிலான PLO வின் வேலைத்திட்டம், அந்த பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மற்றும் சியோனிஸ்ட் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பதற்கு இலாயக்கல்ல என்பது இந்த தோல்விக்கு அடிப்படையாக உள்ளது.

சமூக நிலைமைகள் மோசமடைந்து வருவதாலும், மூர்க்கமாக அதிகாரப்பூர்வமான ஊழல்கள் மலிந்துவிட்டதாலும், பாலஸ்தீனிய நிர்வாகம் உருவாக்கப்பட்ட பின்னர் ஃபதா மீதான பொதுமக்களுடைய மாயை பெருமளவில் விலகியிருக்கிறது. மேற்குக் கரை மற்றும் காசாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதாரண பாலஸ்தீன மக்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பரந்த வறுமையும், வேலையில்லாத நிலைமையும் மிகவும் பாதிக்கின்றன. ஒரு நாளைக்கு 2.20 டாலர் என்ற அதிகாரப்பூர்வமான வறுமைகோட்டின் கீழ் சுமார் 65 சதவீதமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 2004 உலக வங்கி அறிக்கை ஒன்று பொருளாதார நிலையை ''நவீன வரலாற்றில் மிகவும் மோசமான பொருளாதார மந்தநிலை'' என்று வர்ணித்தது. காசாவில் 60 முதல் 70 சதவீதம் பேரும் மேற்குக் கரைப் பகுதிகளில் 30 முதல் 40 சதவீதம் பேரும் வேலையில்லாதிருக்கின்றனர்.

ஃபதாவின் எதேச்சதிகார நடைமுறைகளால் பொதுமக்களது எதிர்ப்பு மேலும் தூண்டிவிடப்பட்டுள்ளது. பாலஸ்தீன நிர்வாகத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பகுதி பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில், நபர் வாரி விகிதத்தில் மிக அதிகமான போலீஸ்காரர்கள் காசாவிலும் மேற்குக் கரையிலும் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஹமாஸ் தனது இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியலை அமுக்கி வாசித்ததோடு, அதற்கு பதிலாக ஃபதாவின் ஊழல் மற்றும் அதன் இயலாத தன்மை குறித்து ஏறத்தாழ குவிமையப்படுத்தியிருந்தது. அந்த அமைப்பு தனது தேசிய தேர்தல் பட்டியலை ''மாற்றம் மற்றும் சீர்திருத்தம்'' என்ற பதாகையின் கீழ் வெளியிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகள், கல்வி மற்றும் உணவு வழங்குவதில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய அறக்கட்டளைகளில் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களை ஹமாஸ் வேட்பாளர்களாக நிறுத்தியது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் மற்றும் நேர்முக பேட்டிகள் எடுத்துக் காட்டியது என்னவென்றால், பாலஸ்தீனிய இஸ்லாமிய உணர்வுகளின் எந்த எழுச்சிக்கும் மேலாக, ஃபதா மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே ஹமாசிற்கு ஆதரவு அதிகம் கிடைத்தது என்பதாகும்.

தோல்வியடைந்த ஃபதாவின் முன்னோக்கிற்கு மாற்றீடாக உண்மையில் ஹமாசின் மதவாத - வகுப்புவாத அரசியல் எதையும் வழங்கவில்லை. அதன் இஸ்ரேல்-எதிர்ப்பு வாய்வீச்சு ஒரு பக்கம் இருந்தாலும், பாலஸ்தீனிய செல்வந்த தட்டினரில் யாருக்காக அது பேசுகிறதோ அந்த பிரிவுகளின் நலன்களுக்காக மேற்கத்திய ஏகாதிபத்தியத்தோடு ஒரு சமரசத்திற்கு இறுதியாக ஹமாஸ் முயன்று வருகிறது.

வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தாங்கள் இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தின் அம்சங்களை அறிமுகப்படுத்த கருதியிருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் கோடிட்டுக்காட்டினர். பாலஸ்தீனிய கிறிஸ்தவ சிறுபான்மையினர் அத்தகைய நகர்வுகள் குறித்து ஆழமாக கவலையடைந்திருப்பதோடு, அவர்களில் பலர் புலம் பெயர்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே, பிரதமர் அஹமது கூரி தலைமையிலான பாலஸ்தீன நிர்வாக மந்திரி சபை தனது பதவி விலகலை அறிவித்தது. அதற்குப் பின்னர் ஹமாசின் மிக மூத்த இரண்டு தலைவர்களான இஸ்மாயில் ஹனீயே மற்றும் காலித் மசால் இருவரும் PA ஜனாதிபதி முஹம்மது அப்பாசிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரு கூட்டணி அரசாங்க பேரத்திற்கு முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ''நாங்கள் சாதிக்கக் கூடிய அரசியல் பங்குதாரர் முறை எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பது குறித்து அவரை சந்தித்து ஆலோசனை நடத்த விரும்புகிறோம்'' என்று ஹனியே அறிவித்தார். இந்த தொடக்கப் பேச்சுகளுக்கு அப்பாலும், ஃபாத்தாவின் மத்திய குழு ஹமாஸ் தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு எதிராக வாக்களித்தது.

இதற்கு முன்னர் அப்பாஸ் சமிக்கை காட்டியதைப் போல், ஹமாஸ் தேர்தலில் வென்றாலும் பதவி விலக வேண்டாம் என்று அமெரிக்கா அப்பாஸை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. அதற்கு பின்னர் பாலஸ்தீன நிர்வாக ஜனாதிபதியாக, அப்பாஸ் பதவியில் நீடிப்பதாக கோடிட்டுக் காட்டியதுடன், இஸ்ரேலுடன் எதிர்காலத்தில் நடத்தும் எந்த பேச்சுவார்த்தையும் PA க்கு மாறாக PLO மூலம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஹமாசை விட்டு விட்டு தன்னால் பேச்சு நடத்த இயலும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved