World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The political issues behind the Iranian nuclear confrontation

ஈரானிய அணுக்கரு ஆற்றல் மோதலுக்கு பின்னணியாக உள்ள அரசியல் பிரச்சனைகள்

By the Editorial Board
21 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

தெஹ்ரானின் அணுக்கரு ஆற்றல் திட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கும் மற்றும் பெரிய வல்லரசுகளுக்கும் இடையே பெருகிவரும் மோதல் போக்கானது முக்கியமான அரசியல் பிரச்சனைகளை எழுப்புகிறது.

மீண்டும் ஒருமுறை புஷ் நிர்வாகம் இராணுவ மோதலுக்கான வழியை முரட்டுத்தனத்துடன் மேற்கொண்டிருக்கிறது. திரும்பவும் ஐரோப்பிய வல்லரசுகளும், ரஷ்யா மற்றும் சீனாவும் வாஷிங்டனது கோரிக்கைகளுக்கும் ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு அமெரிக்காவை சமாதானப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொருளாதார தடைகள்பற்றி தற்போது விவாதிக்கப்பட்டு வந்தாலும் வெள்ளை மாளிகை திரும்பத் திரும்ப ஒரு இராணுவ தாக்குதல் உட்பட "அனைத்து விருப்ப தேர்வுகளும்", "மேஜை மீது" இருக்கின்றன என்று தெளிவுபடுத்தியுள்ளது.

EU-3 --பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி-- தண்டனை அளிக்கும் பொருளாதார தடைகளுக்காக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈரானை குறிப்பிடுவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) ஒரு அவசர கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது. ரஷ்யாவும் சீனாவும் இறுதியாக இன்னும் அதற்கு உடன்படவில்லை. என்றாலும், திங்களன்று லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஈரான் தனது யுரேனிய செறிவூட்ட நடவடிக்கைகளை ''முழுமையாக நிறுத்திவிட்டு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்'' என்று ஐந்து நாடுகளும் அமெரிக்காவின் கருத்தை ஏற்றுக்கொண்டன, அதன்மூலம் தெஹ்ரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு சாக்குப்போக்கு வழங்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்களில் முடிவற்ற வகையில் திரும்பத் திரும்ப கூறப்பட்டு வரும், ஈரானுக்கு எதிரான ஐ.நா நடவடிக்கைகளுக்கான முழு அறிவார்ந்த விளக்கமும், சிடுமூஞ்சித்தனமும் பாசாங்கும் நிறைந்த துர்நாற்றமாகும். ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அனைத்துமே -----அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திடன் படி (NPT) அதில் கையெழுத்திட்டுள்ள இந்த நாடுகள் தங்களின் பெருமளவிலான அணு ஆயுத குவியல்களை ஒழித்துக் கட்டிவிட ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டன.

இந்த அணு ஆயுதக் குவியல்களில் கருணை அடிப்படை எதுவுல்லை. மாறாக அவற்றின் நோக்கம் சிறிய பலவீனமான அரசுகளுக்கு எதிராக, சென்ற வியாழனன்று பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கின் எரியூட்டும் கருத்துகளில் தெளிவுபடுத்தி இருப்பதைப்போல், அந்த நாடுகளை மிரட்டவும், அச்சுறுத்தவும் மற்றும் இறுதியாக அவற்றிற்கு எதிராக சண்டையிட ஆயத்தமாகவும் உள்ளன. பிரிட்டானியிலுள்ள ஒரு அணு நீர் மூழ்கிக்கப்பல் தளத்தில் உரையாற்றிய சிராக் முக்கியமான பிரான்சின் நலன்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாத தாக்குதலை உசுப்பி விடும் எந்த அரசிற்கும் எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த பிரான்ஸ் தயங்காது என்று எச்சரித்தார். "நமது மூலோபாய [அணுக்கரு ஆற்றல்] படைகளின் நீக்குப் போக்கு மற்றும் எதிர்விளைவிற்குரிய தன்மை, அதிகார மையங்களின் மேல் நேரடியாகவே தூண்டுதலுக்கு ஏற்ப செயலாற்ற நம்மை அனுமதிக்கும்" என்று அவர் அறிவித்தார்.

ஈரானுக்கு, ஒரு வெளிப்படையாக தெரியும் இரட்டை அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது, அது அதன் அணுக்கரு ஆற்றல் திட்டங்கள் தொடர்பாக, பொருளாதார தடைகள் மற்றும் இராணுவ தாக்குதல்கள் குறித்து அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது அதே நேரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான --இஸ்ரேல், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான்-- ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. பிரேசில் போன்ற இதர நாடுகள் யுரேனிய செறிவூட்ட தொழிற்கூடங்களை கட்டியெழுப்பிவிட்டன அல்லது தற்போது கட்டிக் கொண்டிருக்கின்றன அது NPT-ன் கீழ் தடை செய்யப்படவில்லை.

வளம் மிக்க பிராந்தியத்தில் தனக்கு கட்டுப்பாடு எதுவுமில்லாத மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற தனது அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு, ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக கூறி அதைப் பயன்படுத்திக் கொண்டதை போல், புஷ் நிர்வாகம் ஈரானின் "அணு அச்சுறுத்தலை" பயன்படுத்தி வருகிறது. ஈரான் உலகின் மூன்றாவது அதிக எண்ணெய் இருப்பையும் மற்றும் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்பையும் வைத்திருப்பதுடன் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் முக்கியத்துவம் பெருகி வரும் இந்திய உபகண்டம் ஆகியவற்றிற்கு இடையில் ஒரு முக்கிய மூலோபாய இடத்தில் உள்ளது. ஈரான் ஆட்சி தனது எல்லா அணுக்கரு ஆற்றல் திட்டங்களையும் கை விட்டு மற்றும் தனது அணுக்கரு ஆற்றல் வசதிகள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விடும் என்றாலும் வாஷிங்டன் தனது ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்காக ஏதாவதொரு சாக்குப் போக்கைக் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கும், அவை அமெரிக்காவின் ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டி நாடுகள் தொடர்பாக இந்த பிராந்தியத்தில் அமெரிக்க ஏறுமுகத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாகக்கொண்டது.

ஆயினும், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளை எதிர்த்து வருகின்ற உலக சோசலிச வலைத் தளம் தெஹ்ரானிலுள்ள பிற்போக்குத்தனமான மதவாத ஆட்சிக்கு எந்த அரசியல் ஆதரவையும் தரவில்லை அல்லது அணு ஆயுதங்களை பெறுவதற்கு அவற்றின் பங்கு தொடர்பான எந்த முயற்சியையும் ஆதரிக்கவில்லை. 1979-ல் ஷா ராஜா பல்லவி ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமிய குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது, அது முதலாளித்துவத்தின் அதிருப்தி பிரிவுகளின் நலன்களை பிரதிபலித்ததே தவிர வெறுக்கப்பட்ட சர்வாதிகாரத்தை கீழிறக்கிய உழைக்கும் மக்களது நலன்களை பிரதிபலிக்கவில்லை. கொடூரமான ஒடுக்குமுறை மூலமாகவும் எல்லாவற்றுக்கும மேலாக தொழிலாள வர்க்கம் எந்த சுயாதீனமான இயக்கத்தையும் மேற்கொள்வதற்கு எதிராக வழிநடத்தப்பட்டு, மத போதகர்கள் அடங்கிய அரசியல் அதிகார தரகர்கள் மூன்று தசாப்தங்களாக தங்களது ஆட்சியை நிலைநாட்டி வந்துள்ளனர்.

கடைசியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கின்ற வகையில், ஜனாதிபதி மஹ்மொத் அஹமதினேஜோத் தனது அரசாங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபையை மீறும், மற்றும் யூரேனிய செறிவூட்டல் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று அறிவித்துள்ளார். சென்ற வாரக் கடைசியில் ஒரு பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் அவர் "மிரட்டல்காரர்களின்" ''மத்தியகாலத்து போக்கு'' என்று அழைத்து, கண்டனம் செய்தார் மற்றும் "நீங்கள் வருந்துகின்ற காலம் ஒன்று வரக்கூடும் அப்போது நீங்கள் வருந்துவதால் பலன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை" என உறுதியற்ற அச்சுறுத்தல்களையும் விடுத்தார். வானுயர உயர்ந்து கொண்டே போகின்ற எண்ணெய் விலை உயர்வுகளால் வருகின்ற ஆபத்தை மறைமுகமாக குறிப்பிடுகையில் அவர் அறிவித்தார்: "அவர்கள் எங்களை எதிர்நோக்குவதும் எங்களோடு பேரம் பேசுவதும் மிகக் கடுமையான மற்றும் சட்டவிரோதமான மொழியில் அமைந்திருக்கிறது, ஆனால் இறுதியில் அவர்கள் எங்களுக்கு தேவைப்படுவதை விட நாங்கள் அவர்களுக்கு அதிகம் தேவைப்படுவோம்".

அஹமதினா ஜாத்தின் வாய்வீச்சு வீரத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு உண்மையான போராட்டம் என்று எவரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த மட்டுப்படுத்தப்பட்ட சவாலின் நோக்கம் பெரிய வல்லரசுகள் ஈரானின் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிக அணுகூலமான உறவுகளை தருவதற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கும் ஒரு பிராந்திய வல்லரசாக ஈரானின் நிலைப்பாட்டை ஊக்குவிப்பதற்கும்தான். தனது அணுக்கரு ஆற்றல் திட்டங்களில் சலுகைகளுக்கு கைமாறாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்கு ஒரு சம்பிரதாய உடன்படிக்கை செய்துகொள்வதற்காக டெஹ்ரான் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் இடையே சூழ்ச்சி திட்டத்தை கையாள்வதற்கு அணுக்கரு ஆற்றல் பிரச்சனையை பயன்படுத்த முயன்று வருகிறது.

அஹமதினேஜாத், இஸ்ரேலை ஆதரிக்கும் "போர் குற்றவாளிகள்" பற்றியும் மற்றும் "பிற நாடுகளில் தங்களுக்கே பாதுகாப்பு தேடிக் கொள்வதற்காக போர்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள்" பற்றியும் மறைமுகமாக குறிப்பிட்டார். ஆனால் புஷ் நிர்வாகத்திற்கு எதிரான அதன் அனைத்து பாவனைகளுக்கும் பின்னால் ஆப்கனிஸ்தானிலும் மற்றும் ஈராக்கிலும் அமெரிக்காவின் போர் குற்றங்களுக்கு ஈரான் ஆட்சி உடந்தையாக செயல்படுகிறது. அதன் சம்பிரதாய எதிர்ப்பு இருப்பினும் ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பிற்கு தெஹ்ரான் ஒத்துழைத்தது தனது பிராந்திய போட்டி நாடு தோல்வியடைவதன் மூலம் தனது சொந்த நிலைப்பாடு வலுவடையும் என்று கணக்கிட்டது. ஈராக்கிலேயே ஈரானிய ஆட்சியுடன் நெருக்கமாக இணைந்துள்ள ஈராக்கின் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சில் (SCIRI) பகிரங்கமாக படையெடுப்பை ஆதரித்தது மற்றும் அமெரிக்க பொம்மை ஆட்சியில் தற்போது ஒரு மையப் பகுதியாக இடம் பெற்றுள்ளது.

சென்ற வாரக் கடைசியில் "எங்களது குறிக்கோள் அணுக்கரு ஆற்றல் தொழில்நுட்பத்தை சமாதான வழியில் பயன்படுத்துவது" என்று அஹமதினேஜோத் மொட்டையாக அறிவித்தார் மற்றும் ஈரான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் அணு உலை சுழற்சியின் எல்லா அம்சங்களையும் வளர்த்தெடுப்பதற்கு ஈரானுக்கு உரிமைகள் உண்டு என மீண்டும் வலியுறுத்தினார். என்றாலும் அவரது பகிரங்கமான அறிக்கைகள் எதுவாக இருந்தாலும் மதகுருமார் ஆட்சியின் மிகத் தீவிரமான வலதுசாரி சக்திகளோடு ஜனாதிபதி தொடர்புடையவராக இருக்கிறார், அவர்கள் அணு மின்சார தொழிற்சாலைகள் மட்டுமின்றி அணு ஆயுதங்களையும் ஈரான் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தெற்கு ஆசியாவில் இந்திய அரசாங்கம் எப்படி செய்ய முயற்சிக்கின்றதோ அதேபோன்று மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய வல்லரசாக ஈரானை உருவாக்குவதற்கு வழிவகையாக அணு ஆயுதங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்து பார்க்கப்படுகிறது.

1998 அணு வெடிப்பு சோதனைகளுக்கு பின்னர் புது தில்லியுடன் அமெரிக்கா எப்படி சமரசத்திற்கு வந்ததோ அதே அடிப்படையில் ஈரானிலும் அணு ஆயுதங்கள் இருக்குமானால் அமெரிக்கா சமரசத்திற்கு வர கட்டாயப்படுத்தப்படலாம் என்று ஈரான் ஆட்சியில் உள்ளவர்கள் சரியாக அல்லது தவறாக கணக்கிடுகிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது. என்றாலும், வெகு சில அறை குறையான அணு ஆயுதங்கள் ஈரான் கைவசம் வருவதால் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அது கடுமையாக தடுத்து நிறுத்திவிட முடியாது. உண்மையிலேயே ஈரான் ஒரு அணு ஆயுதத்தை தயாரித்து மற்றும் சோதனை செய்து விடுமானால் அமெரிக்காவும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் ஒட்டு மொத்தமாக ஒரு இராணுவ தாக்குதலின் ஆபத்தை அதிகரிக்க செய்ய மட்டுமே கூடும் அதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படும்.

ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை பெறுவதாலும் மற்றும் இஸ்ரேல் அல்லது தென் கொரியா அல்லது பிற நாடுகளில் மில்லியன் கணக்கான அப்பாவி உழைக்கும் மக்களை எரித்து சாம்பலாக்கும் இரத்தக்களரி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றால் ஏகாதிபத்திய போர் ஆபத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட முடியாது. அத்தகைய அச்சுறுத்தல்கள் நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளுக்கு உரித்தாகிவிடும். அஹமதினேஜோத் வெளியிட்ட பகிரங்க செமிட்டிச-எதிர்ப்பு அறிக்கை, நாஜிக்களின் படுகொலைகளை மறுத்தமை மற்றும் இஸ்ரேல் அரசையே "உலக வரைபடத்திலிருந்து ஒழித்துக்கட்டுவது" என்பது போன்ற அறிக்கைகளால் உருவான ஆத்திரத்தை வாஷிங்டன் தனக்கு சாதகமாக சுரண்டிக்கொண்டு தற்போது ஈரானுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது.

அஹமதினேஜாத்தின் தேசியவாத மற்றும் இனவெறுப்புக்கு விடுக்கும் பிற்போக்குதனமான வேண்டுகோளானது, அமெரிக்க இராணுவவாதம் வெடித்துக் கிளம்புதலை எதிர்கொண்டு போராடும் ஒரே நடைமுறைக்குரிய மற்றும் முற்போக்கு மூலோபாயத்தை -ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய ஒடுக்கு முறைக்கும் போருக்கும் எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் ஆன ஒரு விரிவான பூகோள தாக்குதல் வளர்ச்சியுறுவதை- குறுக்காக வெட்டி முறிப்பவையாகும். ஈரானிலுள்ள உழைக்கும் மக்களின் இயல்பான கூட்டணியினர் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும் அத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேசரீதியாக உள்ள தொழிலாளர்களே தவிர அஹமதினாஜாத் போன்ற தேசியவாத வாய்ச்வீச்சாளர்களோ அல்லது ஈரான் முதலாளித்துவ வர்க்கத்தின் வேறு எந்த பிரிவினரோ அல்ல.

சென்ற ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அஹமதினேஜோத் வியப்பளிக்கும் வகையில் வெற்றி பெற்றதே ஈரானில் ஆழமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் உருவானதாகும். அதற்கு உழைக்கும் மக்களின் முதுகுகளில் அதிக சுமையை ஏற்றுவதைத் தவிர முதலாளித்துவ வர்க்கத்தின் எந்த பிரிவும் (கன்னையும்) எந்தத் தீர்வையும் தரவில்லை. மிகப் பெரும்பாலான மக்களை பலியிட்டு ஒரு சிலருக்கே பெரும் செல்வத்தை கொண்டு வந்த ஊழல் மிக்க மதகுருமார் ஆட்சியுடன் அதிகரித்துவரும் விரக்தியில் உள்ள இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவரது ஜனரஞ்சக கோரிக்கையான "ஈரானின் எண்ணெய் செல்வத்தை மக்களிடமே தந்து விட வேண்டும்" என்ற பிரச்சாரம் அவர்களது உணர்வை தட்டி எழுப்பியது.

இதற்கெல்லாம் மேலாக 1997-ல் பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி முஹமது கட்டாமியின் தலைமையிலான சீர்திருத்தவாதிகள் என்றழைக்கப்பட்டவர்களின் அரசியல் திவால் தன்மையை அஹமதினேஜோத்தின் வெற்றி பிரதிபலிக்கிறது. கட்டாமி வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதற்கும் உறுதியளித்தார் ஆனால் அவர் அந்த இரண்டையுமே செய்யவில்லை. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களது ஒவ்வொரு கணிசமான இயக்கத்திற்கு உடனடியாக பதிலளிக்கின்ற வகையில் பழைமைவாத கடுமையான நிலைப்பாடு உள்ளவர்களோடு இணைந்து கொண்டு எதிர்ப்பை ஒடுக்கி வந்தார். அதே நேரத்தில் ஈரானிய பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்து விட முயன்றார் மற்றும் அந்த நோக்கத்தோடு பக்கத்து நாடுகளான ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்கின் மீது வாஷிங்டன் படையெடுத்து வந்த நேரத்திலும் கூட, மற்றும் ஈரானுக்கு எதிராகவே இராணுவ தலையீடு பற்றி அச்சுறுத்தலை விடுத்துக் கொண்டிருந்த நேரத்திலேயே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் தனது உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முயன்றார்.

அஹமதினேஜோத் "சீர்திருத்தக்காரர்கள்" மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாலும் மில்லியன் கணக்கான ஈரானியரை எதிர் கொண்டுள்ள பொருளாதார மற்றும் சமுதாய பேரழிவிற்கு தீர்வு எதுவும் அவரிடம் இல்லை. ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இருந்தும் மற்றும் தற்போது எண்ணெய் விலை மிக உயர்வாக உள்ள நிலையிலும் ஈரான் பொருளாதாரம் மிக உயர்ந்த பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, முதலீடு இல்லை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சிதைந்து கிடக்கின்றன. தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனம் செய்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி நாட்டின் சிதைந்து கிடக்கும் உள் கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் எண்ணெய் தொழிலுக்கு 70 பில்லியனுக்கு மேற்பட்ட டாலர்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றது.

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகளை விதிக்குமானால் அவை நாட்டின் ஆழமான சமூக நெருக்கடியை தீவிரமாக்கும். ஈரான் மக்களில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் 20 வயதிற்கும் குறைந்த இளைஞர்கள் மற்றும் 70 சதவீதம் பேர் 30 வயதிற்கும் குறைந்தவர்கள். அதிகாரபூர்வமான வேலையில்லாதோர் விகிதம் 16 சதவீதம் ஆனால் இதர மதிப்பீடுகள் அதை இரட்டிப்பாக கணக்கிட்டுள்ளன. ஆண்டிற்கு புதிதாக வேலை தேடிவருகின்ற 10 லட்சம் பேரில் பாதிப் பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. 2004-ல் அரசாங்கம் நடத்திய ஒரு ஆய்வின் படி 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்கள் வேலை தேடி வருகின்ற எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே 52 சதவீத அளவிற்கு உச்சாணிக் கொம்பிற்கு சென்று விட்டது.

ஈரானின் ஆளும் வர்க்கம் அஹமதினேஜோத்தை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்ற உண்மையானது, நாடு அரசியல் முட்டுக்கட்ைைட நிலைக்கு வந்த விட்டதை காட்டுகின்ற ஒரு சமிக்கையாகும். ஈரானிய வெகுஜனங்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்நாட்டில் சமூக நெருக்கடியை தீர்த்து வைக்கவும் வெளிநாடுகளில் ஏகாதிபத்தியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தந்திரோபாயங்களின் தோல்வியிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு பேரினவாதத்தையும் செமிட்டிச எதிர்ப்பையும் தூண்டிவிடுவதற்கு ஒரு ஜனரஞ்சக வாய்வீச்சின் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய அவசர கால நிலையை பயன்படுத்தி இப்போது கிடைக்கின்ற கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளையும் ஒழித்துக் கட்டி பல்வேறு சிறுபான்மையினர் உட்பட எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு இந்த அவசர நிலை பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடும் அதன் நட்பு நாடுகளோடும் மோதல் போக்கு ஆழமாகின்ற போது தெஹ்ரானிலுள்ள ஆட்சி, அணு ஆயுதங்களை குவிப்பது தயாரிப்பது மற்றும் சோதனை இடுவது ஆகிய வழிவகையை தவிர வேறு மாற்றீடு இல்லை என்ற முடிவிற்கு வரக்கூடும். புஷ் நிர்வாகம் முன்கூட்டி தாக்கும் போர் என்ற தத்துவத்தை உருவாக்கி அதை மூர்க்கத்தனமாகவும், வேகமாகவும், விளைவுகளை பற்றி கவலைப்படாமலும் சர்வதேச சட்டத்தை துச்சமாக மதித்து செயல்பட்டு கொண்டிருப்பதால் உண்மையான ஆபத்துக்கள் அதிகம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. தெஹ்ரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்பத்திக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டு வருகின்ற நேரத்திலேயே அமெரிக்கா அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை பகிரங்கமாக (NPT) மீறி ஈரானிலுள்ள பூமிக்கடியில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளை போன்ற அமைப்புக்களை துல்லியமாக சிதைத்து நொருக்குகின்ற ''பதுங்கு குழி வெடிப்பு அணு ஆயுதங்களின்'' புதிய தலைமுறை ஆயுதங்களை அமெரிக்கா தயாரித்து கொண்டிருக்கிறது.

எப்படியிருந்தபோதும் தொழிலாள வர்க்கம் ஈரானில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டத்திற்கு எந்த ஆதரவும் தரக்கூடாது. ஈரான் நாட்டையும் மற்றும் இஸ்லாமிய புரட்சி என்றழைக்கப்படுவதையும் நியாயப்படுத்துகின்ற வகையில் ஒரு வெறி கொண்ட தேசியவாத பிரச்சாரத்தின் மூலம் அந்த நடவடிக்கையை தவிர்க்க முடியாத அளவிற்கு நியாயப்படுத்துவார்கள். அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பதிலாக அமையாது. ஆனால் அது மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் ஒரு அணு ஆயுத படுகொலையை ஏற்படுத்திவிடும். அணு ஆயுத போர் ஆபத்திற்கும், சூறையாடும் ஏகாதிபத்திய கொள்கைகளுக்கும் ஒரே இன்றைய நடப்பிற்கு ஏற்ற மாற்றீடு புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் வேலைத்திட்டமாகும்.

ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ரீதியான சுயாதீனமான இயக்கத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவையாகும், அது போர் மற்றும் சமூக சமத்துவமின்மைகளின் அடிப்படை காரணங்களை, முதலாளித்துவத்தையும் காலாவதியாகிவிட்ட தேசிய அரசு முறையையும் எதிர்த்து போராடுவதாக அமைய வேண்டும். அனைத்துவகையான தேசியவாதம், இனவாதம் மற்றும் பேரினவாதங்களுக்கு எதிர்ப்பில், விரல் விட்டு எண்ணத்தக்கவர்களின் இலாப நோக்கங்களுக்காக அல்லாமல், மனித இனம் ஒட்டுமொத்தத்தின் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சோசலிச வழிகளில் பொருளாதார முறையை மீளக்கட்டியமைப்பதற்கு தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களை கட்டாயம் ஒன்றிணைக்க வேண்டும். இது தான் உலக சோசலிச வலைத் தளத்தாலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அதன் பகுதிகளாலும் ஆதரிக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டமுமாகும்.

Top of page