World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan government negotiates with JVP ally on program for all-out war இலங்கை அரசாங்கம் முழு அளவிலான யுத்த திட்டம் பற்றி ஜே.வி.பி பங்காளியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது By K. Ratnayake இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த மாதம் பூராவும் இடம்பெற்றுவரும் பகிரங்க மோதல்களுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) தனது ஆளும் கூட்டணியில் இணைத்துக்கொள்வது பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். இந்த உடன்படிக்கை இன்னமும் அடையப்படாத போதிலும், இத்தகையக் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன என்ற உண்மை, அரசாங்கம் புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த யுத்தத்திற்கும் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான கொடூரமான தாக்குதலைத் தொடுக்கவும் தயாராகின்றது என்பதன் அறிகுறியேயாகும். சிங்களப் பேரினவாதம் மற்றும் மக்கள் வாத வாய்வீச்சுக்களினதும் கலவையை அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி, கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்தது. அதன் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கிவரும் ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் இருப்புக்குத் தீர்க்கமானதாக இருந்து வருகின்றது. 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்துதல், இராணுவத்தை பெருக்குதல் மற்றும் சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதில் இருந்து தூர விலகுதல் போன்று புலிகளுக்கு எதிரான மிகக் கடுமையான நிலைப்பாடுகளே ஜே.வி.பி. வழங்கும் ஆதரவுக்கான விலையாகும். தற்போதைய கலந்துரையாடல்களின் போது, ஆளும் கூட்டணியில் இணைவதற்கான அடிப்படைகளாக, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான (ஸ்ரீ.ல.சு.க.) "பொது வேலைத் திட்டத்தில்" ஜே.வி.பி. 20 அம்சங்களைப் பிரேரித்துள்ளது. இந்தப் பொது வேலைத்திட்டமானது "சமாதான முன்னெடுப்புகளை" முற்றாக மறுப்பது மற்றும் புலிகளை இராணுவ ரீதியில் அழிக்கும் ஒரு பகிரங்க யுத்தத்தை பிரகடனம் செய்வதற்கு சமமானதாகும். அதில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள்: * பொது வேலைத்திட்டம் கைச்சாத்தானவுடன் உடனடியாக 2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறுதல். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் புலிகளுக்கு பல சலுகைகளை வழங்க உடன்பட்டதில் இருந்தே ஜே.வி.பி. அதைப்பற்றி விமர்சித்து வருவதுடன் இடைவிடாது அதைக் கீழறுக்க முயற்சித்து வந்துள்ளது.* உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஒரு வாரத்திற்குள் சமாதான முன்னெடுப்பின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வேயை வெளியேற்றுதல். ஜே.வி.பி, நோர்வே அனுசரணையாளர்களையும் மற்றும் தற்போதைய யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் ஸ்கன்டினேவிய நாடுகளின் தலைமையிலான இலங்கைக் கண்காணிப்புக் குழுவையும் "புலிகளுக்கு சார்பானவர்கள்" என மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி வந்துள்ளது. * தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் அரசாங்கத்தின் ஆளுமையை அமுல்படுத்த உடனடியாக, சாத்தியமானால் ஆயுதப் படைகளை நிலை நிறுத்துவதன் ஊடாக நடவடிக்கை எடுத்தல். * வடகிழக்கு மாகாணத்தை இரு வேறுபட்ட மாகாணங்களாக பிரித்தல். இந்த மாகாணங்கள் முதல் தடவையாக சமாதான பேச்சுக்களை நடத்த மேற்கொண்ட முயற்சியின் போது, 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்டன. 2002 யுத்த நிறுத்தத்தை அடுத்து, சமஷ்டி இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பிடத்தக்களவில் அதிகாரத்தைப் பரவலாக்குவதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் பேரில், புலிகள் தமது தனித் தமிழீழ அரசிற்கான கோரிக்கையை கைவிட்டனர். வடக்கு கிழக்கை பிரிப்பதானது மேலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளை விளைபயனுள்ள விதத்தில் நாசம் செய்யும். புலிகளுடனான பேச்சுக்களுக்கு ஜே.வி.பி. முன்வைத்த பிரேரணைகள் நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்கொண்டுள்ள எந்தவொரு துன்பத்தையும் தீர்க்கத் தவறிவிட்டது. அது எந்தவொரு வேறுபாடுகளும் இல்லை எனவும் அல்லது இது யுத்தம் வெடித்ததன் காரணத்தாலேயே என்றும் கூறி சாதாரணமாக மறுத்துவிட்டது. ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கடந்த மாதம் நடத்திய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், இங்கு இனப் பிரச்சினை கிடையாது, "பயங்கரவாதப் பிரச்சினை" மட்டுமே இருக்கிறது என்றார். தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியிலான "நிர்வாகப் பிரச்சினைகளைத்" தீர்ப்பதற்கான ஜே.வி.பி. யின் திட்டமானது கிராம மட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதத்தில் ஆட்சி உரிமையை பரவலாக்குவதாகும் -- இந்தப் பிரேரணை புலிகளால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது ஜே.வி.பி. க்கு தெரியும். இராஜபக்ஷ நவம்பரில் இருந்து ஜே.வி.பி. யின் திட்டத்தின் சில குறிப்பிடத்தக்க பகுதிகளை அமுல்படுத்தி வந்துள்ளார். பல மாதங்களாக புலிகளை கீழறுப்பதையும் மற்றும் பழிவாங்கல் தாக்குதல்களை தூண்டுவதையும் இலக்காகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமும் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளும் ஒரு மூடி மறைக்கப்பட்ட யுத்தத்தை நடத்தி வந்துள்ளன. அரசாங்கம் நோர்வேயையும் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பாளர்களையும் பக்கச் சார்பானவர்கள் என குற்றஞ்சாட்டியுள்ளதுடன் பெப்பிரவரியில் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் 2002 யுத்த நிறுத்தத்தை திருத்தக் கோரியமை, ஏறத்தாழ பேச்சுவார்த்தை குழம்பிப் போகும் நிலைக்கே வழிவகுத்தது. ஜூலை 26, வாய்க்காலின் பக்கமாக உள்ள விவசாயிகளுக்கு நீர்வழங்கும் சாக்குப் போக்கில் புலிகளின் பிராந்தியத்தில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக ஒரு பெரும் எதிர்த் தாக்குதலை நடத்த ஜனாதிபதி கட்டளையிட்டார். இந்த நடவடிக்கை 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக மீறியதுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஏனைய பாகங்களிலும் மோதல்களை துரிதமாகத் தூண்டியது. இராணுவம் புலிகளின் பிரதான நிலைகள் மற்றும் முகாம்கள் மீது விமானத் தாக்குதல்களை நடத்த இந்த சந்தர்ப்பத்தை பற்றிக்கொண்டது. வடக்கு கிழக்கில் யுத்த பிராந்தியத்திற்கு பயணிப்பதற்காக அரசாங்கம் ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவிற்கு ஹெலிகொப்டர் வசதிகளை வழங்கிய நிலையில் ஜே.வி.பி. இந்த யுத்தத்தில் நெருக்கமாக ஒத்துழைத்தது. அவர் துருப்புக்கள் மற்றும் சிங்கள கிராமத்தவர்களின் மத்தியில் யுத்தத்திற்கு ஆதரவைத் கிளறும் எதிர்பார்ப்பில் பல இராணுவ முகாம்களுக்கும் மற்றும் கிராமங்களுக்கும் சென்று வந்தார். எவ்வாறெனினும், இராஜபக்ஷ ஜே.வி.பி.யின் திட்டத்தை வெளிப்படையாக அணைத்துக்கொள்ளத் தயங்கி வருகின்றார். ஜே.வி.பி. அரசாங்கத்திற்குள் நுழைவது சம்பந்தமான பேச்சுக்கள் ஜூலை முற்பகுதியில் இருந்தே இழுபட்டு வருகின்றன. அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை இரத்து செய்ய அல்லது உத்தியோபூர்வ அனுசரணையாளரான நோர்வேயை விலக்க விரையாது எனக் கூறியதன் மூலம் ஜே.வி.பி.யின் கோரிக்கைகளுக்கு கடந்த வாரம் ஜனாதிபதி பதிலளித்தார். வடக்கு கிழக்கை பிரிப்பது பற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி. வழக்கு பதிவு செய்துள்ளதால், "அது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய விவகாரமாக உள்ளது," என சுட்டிக்காட்டினார். ஜே.வி.பி. யை அருகில் வைத்துக்கொள்ள இராஜபக்ஷ விரும்புகிறார். சிங்கள பேரினவாதத்தில் மூழ்கிப் போயுள்ள ஸ்ரீ.ல.சு.க, புலிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்காதமைக்காக விரைவில் விமர்சனத்திற்குள்ளாகக் கூடும். அதே சமயம், புலிகளுக்கு எதிராக ஒரு பகிரங்க யுத்தத்தை பிரகடனம் செய்ய அரசாங்கம் தயங்குகிறது. இராஜபக்ஷ பெரும் வல்லரசுகளது ஆதரவையும் மற்றும் உள்நாட்டிலான ஆதரவையும் பேணிக்கொள்வதன் பேரில் தன்னை ஒரு சமாதான விரும்பியாக தொடர்ந்தும் காட்டிக்கொள்கின்றார். யுத்த எதிர்ப்பு இயக்கங்கள் பற்றாக்குறையாக இருந்த போதிலும், ஏற்கனவே 65,000 உயிர்களுக்கும் மேல் பலிகொண்டுள்ள இரு தாசப்த கால உள்நாட்டு யுத்தம் மீண்டும் வெடிப்பதையிட்டு ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் பீதியடைந்துள்ளதுடன், யுத்தத்திற்கு எதிரானவர்களாகவும் உள்ளனர். சமூக அமைதியின்மை யுத்தத்திற்கு ஜே.வி.பி.யின் ஆதரவைப் போலவே, நாட்டின் சமூக நெருக்கடியால் எழும் வெகுஜன எதிர்ப்பை நசுக்கவும் ஜே.வி.பி. யின் ஆதரவு இராஜபக்ஷவிற்குத் தேவை. தனியார்மயமாக்கல், வேலை இழப்பு மற்றும் விலைவாசி ஏற்றம் சம்பந்தமாக தொழிலாளர்கள் அதே போல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும் அமைதியின்மை வளர்ச்சிகண்டு வருகின்றது. அதிகரித்துவரும் யுத்தச் செலவு தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்கள் மீது பாரமாக விழுவதோடு சமூக வெடிப்பிற்கான வாய்ப்பையும் தோற்றுவிக்கும். அரசாங்கம் இத்தகைய இயக்கங்களைத் தடுப்பதற்காக குறிப்பாக கிராமப்புற ஏழைகள் மத்தியில் ஜே.வி.பி.யின் செல்வாக்கைப் பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. 1960களில் கொரில்லா இயக்கத்தை தமது பிறப்பிடமாகக் கொண்டுள்ள ஜே.வி.பி., இன்னமும் "சோசலிஸ்டுக்கள்" என பல சந்தர்ப்பங்களில் காட்டிக்கொள்வதோடு "ஏகாதிபத்திய" தலையீட்டையும் கிளர்ச்சியுடன் கண்டனம் செய்கின்றது. அதன் 20 அம்ச வேலைத் திட்டத்தின் முன்னுரை, "வெளிநாட்டு எதிரிகளுக்கும்" மற்றும் அவர்களது உள்ளூர் இணைப்பாளர்களுக்கும் எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. புலிகளுக்கு சம அந்தஸ்த்து கொடுப்பதில் "சமாதான முன்னெடுப்புகளை" அது எதிர்ப்பதோடு ஒரு இறைமை படைத்த நாட்டுக்கு ஆணையிடும் பதங்களைப் பயன்படுத்துவதாகவும் நாட்டை ஒரு காலனியாக நடத்துவதாகவும் நோர்வேயையும் அது கண்டனம் செய்கின்றது. நோர்வேயைக் கண்டனம் செய்யும் அதேவேளை, புஷ் நிர்வாகம் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவளிப்பதால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றவியல் நடவடிக்கைகளையிட்டு ஜே.வி.பி. மெளனம் காக்கின்றது. ஜே.வி.பி. யின் வேலைத் திட்டத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிலைப்பாடு என்னவெனில், புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக அனைத்து சமூகப் பிரச்சினைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அதன் சந்தேகமற்ற அழைப்பாகும். அது "பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இலக்கை உணர்ந்து கொள்வதன் பேரில்" ஊழியர்களுக்கும் வேலைகொள்வோருக்கும் இடையில் "கைத்தொழில் அமைதிக்கு" அழைப்பு விடுக்கின்றது. ஜே.வி.பி. தலைவர்கள், "தாயகத்தைக் காத்தல்" என்ற தமது பேரினவாதப் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக பல வேலைநிறுத்தங்களை ஏற்கனவே எதிர்த்துள்ளனர். லக்பிம பத்திரிகையில் ஆகஸ்ட் 20 வெளியான ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவின் ஒரு பேட்டியில்: "இன்று எமது நாட்டில் உள்ள மத்திய பிரச்சினை பயங்கரவாதமாகும். இதன் காரணமாக பெருந்தொகையான இரண்டாந்தரப் பிரச்சினைகள் மறைத்து வைக்கப்படவேண்டும்... நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக்கொண்டிருப்பதால் மக்கள் கடுமையான நெருக்கடிக்குள் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்... எவ்வாறெனினும், இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் விஞ்சி, பயங்கரவாதப் பிரச்சினை முன்னணிக்கு வந்துள்ளது," என்றார். பெரும் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கும் வீரவன்ச, யுத்தம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஊக்கத்தைக் கெடுக்காது என விவாதிக்கின்றார். "அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்த கடுமையான நிலைப்பாட்டில் செயற்படுவதை பூகோள முதலீட்டாளர்களால் காண முடியும் எனின், அதுவும் கூட முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ஒரு காரணமாக இருக்கும்," என அவர் பிரகடனம் செய்தார். வேலை நிறுத்த நடவடிக்கைகளுக்கு எதிரான ஜே.வி.பி.யின் எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களின் பாகமும் பகுதியுமாகும். தாய் நாட்டைப் பாதுகாத்தல் என்ற பெயரில், ஜே.வி.பி. கடுமையான ஊடக தணிக்கைகளுக்கு ஆதரவளிப்பதோடு யுத்தத்தை விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் எவருக்கும் எதிராக தேசத்துரோகி பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றது. இராஜபக்ஷ ஆடிக்கொண்டிருக்கும் ஆளும் கூட்டணியை தூக்கி நிறுத்துவதன் பேரில் வெறுமனே ஜே.வி.பி. யுடன் மட்டுமன்றி ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கொடுக்கல் வாங்கலை எதிர்பார்க்கின்றார். கடந்த வாரம், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை அடித்தளமாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணியும் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையை வழங்கியுள்ளன. ஜனாதிபதி பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐ.தே.க) ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் அழைப்பு விடுத்துள்ளார். எவ்வாறெனினும், அது இறுதியாக அமைச்சரவையில் இணைந்துகொண்டாலும் அல்லது இணையா விட்டாலும், ஜே.வி.பி. கடந்த பத்து மாதங்களாக செய்தது போல், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை அமைப்பதில் ஒரு பிரதான தலையீட்டை தொடர்ந்தும் மேற்கொள்ளும். |