World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

War now, peace later: Israel's doves line up behind war

போர் இப்பொழுது, சமாதானம் பின்னர்: இஸ்ரேலின் புறாக்கள் போருக்கு ஆதரவு கொடுத்து நிற்கின்றனர்

பகுதி 1 | பகுதி 2

By Jean Shaoul
14 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இது இஸ்ரேலின் "சமாதனம் இப்பொழுது" இயக்கம், லெபனான் மற்றும் காசாவில் ஓல்மெர்ட் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு போர்களை பற்றிக் கொண்டுள்ள அணுகுமுறை பற்றிய இரு-பகுதிக் கட்டுரையின் இரண்டாம் பகுதியாகும்.

இப்பொழுது சமாதானம் மற்றும் பிற தாராள அமைதிக் குழுக்கள் சியோனிச விரிவாக்கத்திற்கு கொடுக்கும் ஆதரவு, பாலஸ்தீனியர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட வேண்டும், இன்னும் பிற மத, இன வழிவகைகளில் யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு முதலாளித்துவ அரசு நெறிப்படுத்துவதை அவர்கள் ஏற்பதில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளிவருவதாகும்.

எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் 1977ம் ஆண்டு ஜெருசலேத்திற்கு விஜயம் செய்தபின்னர் சமாதானம் இப்பொழுது இயக்கம் வளர்ச்சியுற்றது. 1967 போரில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் சியோனிச குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்படுவதை எதிர்த்ததுடன், 1978ம் ஆண்டு மெனச்செம் பெகின் தலைமையில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருந்த லிக்குட் அரசாங்கம் லெபனான் மீது படையெடுத்ததையும் கண்டித்தது. ஆனால் சமாதானம் இப்பொழுதின் தலைமையும், அது முன்வைத்த முன்னோக்கும் இஸ்ரேலிய மக்கள் நீண்டகாலமாக பாலஸ்தீனியர்களுடன் கொண்டிருந்த பூசல்கள் மற்றும் இஸ்ரேலின் அரேபிய அண்டை நாடுகளுடனான பூசல்களில் ஒரு சமாதானத்தை கொண்டிருக்கும் விருப்பத்தை மட்டும் வெளிக்கூறவில்லை.

சியோனிச ஆளும் உயரடுக்கிற்குள்ளேயே இஸ்ரேலிய அரசின் பாதுகாப்பு, அது தப்பியிருக்க வேண்டியற்கான நீண்ட காலத் திட்டம் ஆகியவற்றை பற்றி அக்கறை கொண்டிருந்த ஒரு அரசியல் போக்கைத்தான் வெளிப்படுத்தியது. எப்பொழுதும் போரில் ஈடுபட்டிருக்கும் பெரிய இஸ்ரேலை விட, சமாதானமாக அண்டை நாடுகளுடன் உறவு கொண்டிருக்கும் ஒரு சிறிய இஸ்ரேலை அது விரும்பியது. வேறு எந்தவிதமான கொள்கையும் "எமது கொள்கையில் உள்ள நியாயத்தை சந்தேகங்களுக்கு உட்படுத்திவிடும்" என்று அது கூறியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரேல் நீண்டகாலம் நிலைத்திருப்பது என்பதற்கு ஒரூ முதலாளித்துவ அரசுடன் தொழிலாள வர்க்கம் தொடர்ந்து பிணைந்திருப்பது தேவை என்றும், இந்த அடையாளத்தேவை பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனியர்களை இஸ்ரேல் அடக்கி வைத்திருப்பதற்கு உள்நாட்டில் பெருகிய எதிர்ப்பு என்பதனால் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியது. "இஸ்ரேலிய இராணுவத்தின் உண்மையான வலிமை அரசின் கொள்கைகளுடன் குடிமக்கள் பிணைந்திருந்த வீரர்களின் கொள்கையில் இருந்து வளர்ச்சியுற்றது" என்று இப்பொழுது சமாதானம் வாதிட்டது.

இவ்வியக்கத்தின் தலைவர்கள் இஸ்ரேல் அரசை ஒட்டி ஒரு பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டுவிட்டால் பூசலுக்கு ஒரு தேசியவாத தீர்வு ஏற்பட்டு விடும் என்ற கருத்தை முன்வைத்தனர். சாராம்சத்தில் இஸ்ரேலிய படைகள் என்று இல்லாமல் பாலஸ்தீனிய படைகள் இஸ்ரேலின் சார்பில் எல்லைகளை பாதுகாக்கும் என்பது கருத்தாகும்.

1992ம் ஆண்டு, மெரெட்ஸ் கட்சி -- உண்மையில் சமாதானம் இப்பொழுதின் அரசியல் பிரிவு -- பாலஸ்தீனிய அரசின் எல்லைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படலாம் என்றும், 1967 போருக்கு முன்னால் இருந்த எல்லைகளை ஒட்டி இருக்க வேண்டிய தேவையில்லை என்றும், பிரிக்கப்படாத ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக இருக்கலாம் என்று முடிவெடுக்கப்படலாம் என்றும் திட்டமிட்டன.

இந்த இரு-அரசுகள் தீர்வின் தர்க்கம் ஒவ்வொரு நாடும் இனவழியில் ஒருமை தன்மை கொண்டிருக்கும் என்றும் இஸ்ரேலில் சிறிய எண்ணிக்கையில்தான் பாலஸ்தீனியர்கள் இருப்பார்கள் என்றும் பாலஸ்தீனிய ஆட்சியின் கீழும் மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் இஸ்ரேலியர்கள் இருப்பார்கள் என்பதில் அடங்கியிருந்தது. எல்லை கடந்து இஸ்ரேலில் இருந்து பொருட்கள் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படலாம், ஆனால் மக்கள் செல்லக்கூடாது என்று கூறப்பட்டது.

இஸ்ரேலிய பாதுகாப்பிற்கும், இஸ்ரேலிய தொழிலாளர்களின் ஊதியங்களுக்கும் பாலஸ்தீனிய தொழிலாளர்கள் ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கருதிய மெரெட்ஸ், எல்லைகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு "சட்ட விரோதமாக தொழிலாளர்கள் எல்லை கடப்பது தவிர்க்கப்பட வேண்டும்" என்றும் கருதப்பட்டது. கட்சியின் அரங்கு கூறியது: "இரண்டு மக்களுக்கும் இடையே தெளிவான பிரிவினை என்பது ஒரு பாதுகாப்பு நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய சமானத்தை நிலைநிறுத்தல் என்ற இரண்டையும் காப்பதற்கு உகந்தது."

சமாதானம் இப்பொழுது "அமைதிக்காக நிலம்" என்று குவிப்புக் காட்டிய முறையில், இஸ்ரேல் மக்களில் பெரும்பாலானவர்கள், குறிப்பாய் மத்திய கிழக்கு, வட அமெரிக்க பூர்வீகம் (செபர்டி யூதர்கள்) மற்றும் அரேபிய இஸ்ரேலியர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக நலன்களை அசட்டை செய்தது; அவர்கள்தான் மோசமான வேலைகளையும், வீடுகளையும் கொண்டிருந்தனர்.

இக்குடியிருப்புக்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வரிசெலுத்துபவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தினாலும், இஸ்ரேலிய தொழிலாளர்கள் எதிர்கொண்ட சரியும் சமூக நிலைகள் குடியேற்ற கொள்கையின் நேரடி விளைவு என்பதை விளக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. இஸ்ரேலில் வர்க்கப் பூசல்களை ஏற்படுத்தும் எந்த நேரடி நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இத்தலைவர்கள் உறுதியாக இருந்தனர். மத்திய கிழக்கின் பொருளாதார சக்தியாக வளரவேண்டும் என்ற செயற்பட்டியலை சிறப்பாக செயல்படுத்துவதற்கு பாலஸ்தீனியர்களுடன் ஓரளவு இயைந்து நடக்க வேண்டும் என்ற இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளின் ஆதரவை பெறுவதற்கு இவர்களுடைய பிரச்சாரம் இயக்கப்பட்டது.

இதன் விளைவாக, இஸ்ரேலின் சமாதான இயக்கம் இஸ்ரேலிய யூதர்கள் மற்றும் அரேபிய குடிமக்கள் மற்றும் இஸ்ரேலின் எல்லைக்கு புறத்தே உள்ள பாலஸ்தீனியர்கள் ஆகியோரின் முறையான ஜனநாயக, சமூக விழைவுகளை வெளிப்படுத்தும் ஒரு முன்னோக்கை எடுத்துரைப்பதற்கு இயல்பிலேயே திறனற்றுப் போயிற்று.

சமாதனத்திற்கு இது கொண்டிருந்த ஆர்வம் இஸ்ரேல் மற்றும் அதன் பொருளாதார தேவைகளை காப்பதற்காக கொண்டிருந்த அக்கறைக்கு தாழ்த்தப்பட்டது. கணிசமான அளவிற்கு, அதன் வலதுசாரியுடனான கருத்து வேறுபாடுகள் இஸ்ரேலின் தேசிய நலன்களை எத்தகைய சிறந்த முறையில் காப்பது என்ற அக்கறைகளை பற்றிய தந்திரோபாயமாகத்தான் இருந்தன.

இறுதியில், இப்பொழுது சமாதானத்தின் திட்டம் இஸ்ரேலிய முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரபூர்வ கொள்கையாயிற்று. 1993ம் ஆண்டு வெள்ளை மாளிகை புல் தோட்டத்தில் தொழிற்கட்சி அரசாங்கம் பெரும் புகழை கொண்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பென்யமின் நேதன்யாகுவின் தலைமையின் கீழ் இருந்த தொழிற்கட்சி அரசாங்கங்கள், குறுகிய காலமிருந்த ஏரியல் ஷரோனின் தலைமையின்கீழ் இருந்த தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பின்வந்தது உட்பட மற்றும் தற்போதைய கடிமா தலைமையிலான கூட்டணி அனைத்தும் ஒரு பாலஸ்தீனிய அமைப்பு வேண்டும், ஆனால் இஸ்ரேலினால் ஒருதலைப்பட்சமான முறையில் அதன் எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தன.

பின்னர் வந்த ஓஸ்லோ பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக வலதுசாரி சியோனிஸ்டுகளை திருப்திப்படுத்தும் தேவையினால் ஏமாற்றத்திற்கு உட்பட்டன; பிந்தையவர்கள் குடியிருப்புக்களை திருப்பிக் கொடுத்துவிடுவது என்பதை வெறுக்கத்தக்கதாக கருதினர்; அவர்களுடைய கோரிக்கைகள் ஆக்கிரோஷமுடையவையாகவும் போயின.

பாலஸ்தீனிய நாட்டின் எல்லைகளை பற்றிய நிலை குறுகியதாக போன அளவில், தன்னுடைய இருப்புக்கள் மீது பாலஸ்தீனிய அதிகாரம் கொண்டிருந்த கட்டுப்பாடும் குறைந்த தன்மையுடையதாயிற்று. அதே நேரத்தில், இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனியர் மீதான உத்தேச அரசுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினை பெருகிய முறையில் அங்கு வாழும் மக்களுக்கு பொருளாதார இடர்பாடுகளையும், சமூக இழப்புக்களையும் அரசியல் அடக்குமுறைகளையும் கொண்டுவந்தது; ஆனால் மிகச் சிறிய எண்ணிக்கையிலான பாலஸ்தீனிய குடும்பங்கள் பெரும் செல்வக் கொழிப்பை குவித்தன.

இஸ்ரேல் கொடுப்பது அல்லது கொடுக்கக் கூடியது எதுவுமே பாலஸ்தீனியர்களுடைய துன்பங்களை துடைக்கும் நிலையை ஏற்படுத்த முடியாது. எனவே செப்டம்பர் 2000த் தில் Temple Mount/Haram A-Sharif ல் நிகழ்த்திய தூண்டுதல் வகையிலான செயல் யாசர் அராஃபத்தினால் கட்டுப்படுத்த முடியாத சமூக தீக்கொழுந்தை எரியூட்டியது.

தன்னுடைய செயற்பட்டியலின் கடுமையான தர்க்கத்திலேயே அகப்பட்டுக் கொண்ட இப்பொழுது சமாதான இயக்கம் சிதைவடைந்தது. அதன் வாக்கு வங்கி சரிவுற்றது; அதன் தலைவர்களிடம் இருந்து கருத்துக்கள் ஏதும் வெளிவரவில்லை. அவர்களில் பலரும் திறனாய்வற்ற முறையில் பேச்சுவார்த்தைகளின் சரிவிற்கு அராஃபத்தான் காரணம் என்ற வலது சாரியினரின் குற்றச்சாட்டை எதிரொலித்ததுடன், தொழிற்கட்சி இன்னும் கூடுதலான வலதுசாரிக் கட்சிகளின் கருத்துக்களில் இருந்து வேறுபடுத்திப்பார்க்க முடியாத தன்மையை கொண்டதாகவும் ஆயினர்.

யூதர்களும் பாலஸ்தீனியர்களும் "ஒன்றாக, ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ முடியாது; ஏனெனில் அவர்கள் ஒரே பிரிவைச் சார்ந்தவர்கள் அல்லர். பிரிவினையை குறிக்கும் வகையில் நாட்டின் ஒரு பகுதியை மக்கள் தொகை அடிப்படையை ஓரளவு கொண்டு எங்கேனும் எல்லையைக் குறித்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று அமாஸ் ஓஸ் அறிவித்தார். இதன்படி அவர் ஷரோனுடைய இழிவுற்ற பாதுகாப்புச் சுவர் மற்றும் ஒருதலைப்பட்ச பிரிவினை என்ற கொள்கைகளுக்கு முன்னிழலிட்ட வகையில் இருந்தார்.

ஷரோனின் ஒருதலைப்பட்ட குடியேற்றங்களை தகர்த்தல், காசாப்பகுதியில் இராணுவ அமைப்புக்களை தகர்த்தல் ஆகியவற்றை செய்து, ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றிற்கு தாழ்ந்து நடக்கும் செய்தி ஊடகங்கள் இந்தப் பெரும் குற்றவாளியை சமாதானம் விரும்புவர் என்று புகழாரம் சூட்டியதை, ஓஸ்லோ ஒப்பந்தத்தை உருவாக்கிய ஷிமோன் பெரஸும், யோசி பெய்லினும்கூட வரவேற்றார்கள். சமாதானம் இப்பொழுது அமைப்பின் முன்னனி ஆதரவாளர்களுள் ஒருவர் கூட இப்பொழுது இந்தப் பண்பிடலை ஒரு மோசடி என கண்டிக்கவில்லை.

யூதர்களும் அரேபியர்களும் ஒன்றாக வாழமுடியாது என்ற சியோனிசத்தின் கடுமையான உறுதிப்பாட்டை ஏற்றதில் தங்கள் தளத்தைக் கொண்டுள்ளதில், இப்பொழுது சமாதானத்தின் திவால்தன்மை நன்கு வெளியாகியுள்ளது. சியோனிஸ்டுகள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்களை இனவழித் தூய்மை முறையில் கொன்றுவிட்டதையும், அங்கேயே தங்கிவிட்டவர்கள்மீது முறையாக பிரிவினை காட்டுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசை நிறுவியுள்ளனர்.

மொத்த மக்கட்தொகையில் 20 சதவிகிதம் உள்ள இஸ்ரேலிய அரேபியர்கள் இன்னும் கூடுதலான வேலையின்மையில் வாடுகின்றனர்; இன்னும் கூடுதலான முறையில், இரு மடங்கில் வறியவர்களாக இருப்பதுடன் மிகக் குறைந்த ஊதியத்தைத்தான் பெறுகின்றனர்; வீடுகள், வாடகைகள், வீட்டுக் கடன்கள் போன்ற நலன்கள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. யூதரல்லாத மக்கள் அடிப்படையில் நிலம் வாங்கும் உரிமையை இழந்துள்ளனர்; இதனால் 1948ல் இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டதில் இருந்து அரேபியர் வசிக்கும் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை. இதேபோல் இஸ்ரேலிய யூதர்கள் பெறும் கல்வி, சுகாதரம் மற்ற வசதிகளும் இவர்களுக்கு கிடையாது.

மிகச் சிறிய குடும்பங்கள் டெல் அவிவில் பங்குச் சந்தையில் ஆதிக்கம் கொண்டுள்ள அடிப்படையை கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை இப்பொழுது சமாதானம் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது; இந்த முறை செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரிதாக கொண்டிருக்கும் பிளவைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சியோனிசத்தை ஏற்ற வகையில் சமாதான இயக்கம் இன்னும் கூடுதலான ஆக்கிரோஷத்தை உடைய, ஷரோனின் தலைமையில் ஆதிக்கத்தை செலுத்திய, சியோனிச முன்னோக்கிற்கு அறைகூவல் விட இயலாத நிலையில் இருந்தது. இரு சியோனிச போக்குகளுமே குடியுரிமை கொடுக்கப்பட்டுவிட்டால், பாலஸ்தீனியர்கள், மத அடையாளத்தின் மூலம் ஒரு பெரும்பான்மையை பெற்றுவிட்டால், தங்களுடைய "நிலைப்பாட்டிற்கு ஆபத்து" என்பதை நன்கு உணர்ந்தன. எனவே சமாதான முகாம் சக்திகளும் அதுகாறும் பெரும் வலது சாய்வை கொண்டிருந்த இஸ்ரேல் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டன.

கிட்டத்தட்ட இஸ்ரேல் நிறுவப்பட்ட 60 ஆண்டுகளுக்கு பின்னர், பிற்போக்குத்தன்மை வாய்ந்த தேசிய அரசு என்பது மற்றொரு மக்களை இடம் பெயரவைத்தல், போரின் மூலம் அந்நிலையை தக்கவைத்தல் இவற்றை கையாண்ட முதலாளித்துவ அரசாங்கம் என்ற வகையில் அடையப்பட்டுள்ளது. சியோனிச முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து இணைந்து நிற்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை ஒப்பந்தக்காரர் என்றும் முறையில் இஸ்ரேலின் பங்கு இன்னும் பெருகிய முறையில் இராணுவ செலவுகளை செய்தல், அண்டை நாட்டாரின்மீது தாக்குதல்கள் நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டு பெருகிய முறையில் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு உந்துதல் கொடுக்கும் வகையில் உள்ளது.

ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம்

போரை எதிர்க்கும் இஸ்ரேலியர்களுக்கு முன்னேற்றப்பாதை என்பதற்கு முதலிலும் முக்கியமானதுமாக சியோனிசத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அத்தகைய போராட்டத்துடன் இயைந்து இருக்க முடியாது என்பது உணர்தல் ஆகும்.

யூதத் தொழிலாளர்களை மேலே முன்னேறவிடாமல் முட்டுச்சந்துக்குள் சியோனிசம் இட்டுச்சென்றிருப்பது தேசிய முன்னோக்கு அடிப்படையில் அனைத்து இயக்கங்களும் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் எந்த அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்க்கத்தவறியதன் ஒரு வெளிப்பாடாகும். அரேபிய நாடுகளுக்கும் இது பொருந்தும்; அங்கும் ஆளும் தன்னலச் சிறுகுழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூகப் போராட்டங்களை திசை திருப்பும்பொருட்டு தேசிய உணர்வுகளையும் இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான கசப்பு உணர்வையும் பயன்படுத்துகின்றன.

மீண்டும் மீண்டும் வரலாற்று அனுபவம், பால்கன்கள், அயர்லாந்து, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலேயே, இன வழி, தேசிய வழி, மத விரோத உணர்வுகள் ஒரு முதலாளித்துவ கட்டமைப்புக்களின் கீழ் சுமத்தப்படும் உடன்பாடுகளின் மூலம் கடக்கப்பட முடியாது என்பதை நிரூபணம் செய்துள்ளன. இத்தகைய பிளவுகள் ஒடுக்கப்பட்ட ஏகாதிபத்திய ஆதிக்கம், இலாப முறை இவற்றிற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் அனைத்து அரேபியர் மற்றும் யூதர் போன்ற, அனைத்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்டத்தின் மூலம்தான் கடக்கப்பட முடியும்.

மத்திய கிழக்கில் முதல் உலகப் போருக்கு பின்னர் மக்களையும் பொருளாதாரங்களையும் பிரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட செயற்கை எல்லைகளை அகற்றி, மேலும் இப்பகுதியில் உள்ள பரந்த இயற்கை மற்றும் மனித வளங்களை முழு மக்கட்தொகையினரின் நலன்களுக்கும் பயன்படும் வகையில் அறிவார்ந்த மற்றும் மனிதாபிமான முறையில் திரட்டுகின்ற அடிப்படையில், மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான சோசலிசப் போராட்டம் ஒன்றுதான் உண்மையான ஜனநாயக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அத்தகைய முறையில்தான் இப்பிராந்தியமானது போர்களில் இருந்தும் வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் உள்ளுர் ஆளும் வர்க்கங்களின் இலாப உந்துதலினால் எரியூட்டப்படும் அடக்குமுறை ஆகியவற்றில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். இதன் பொருள், எல்லாவற்றிற்கும் மேலாக அரேபிய, யூதத் தொழிலாளர்கள் முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து பிரதிநிதிகளிடமும் இருந்து அரசியல் சுயாதீனத்தை நிறுவுதல் ஆகும்.

முற்றும்