World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government prepares to suppress the struggles of workers

இலங்கை அரசாங்கம் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கத் தயாராகின்றது

By W.A. Sunil
22 August 2006

Back to screen version

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் துரிதமடைந்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி இராஜபக்ஷ, தமது வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுப்பதற்கான தனது முயற்சிகளை உக்கிரப்படுத்தியுள்ளார்.

ஜூலை 27, கந்தேகமவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி பிரகடனம் செய்ததாவது: "நாட்டைப் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். நாட்டின் பாதுகாப்பை காட்டிக்கொடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவரும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்த்துக்கொள்ளத் தயாராக வேண்டும்." ஆகஸ்ட் 1, கொழும்பில் பேசிய அவர்: "மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கும் முன்னர் தமது பொறுப்புக்கள் மற்றும் தமது தாய்நாட்டைப் பற்றி நனவுடன் இருக்க வேண்டும்," என எச்சரித்தார்.

"பொறுப்பு", "தேசியப் பாதுகாப்பு" மற்றும் "தாய் நாட்டின் பாதுகாப்புக்காக" என்ற இத்தகைய வேண்டுகோள்களுக்கு ஒரு நிச்சயமான அரசியல் அர்த்தம் இருப்பதோடு இலங்கையில் இவற்றுக்கு ஒரு வரலாறும் உண்டு. நாட்டின் நீண்டகால மோதல்களின் போதும், கொழும்பில் உள்ள ஆளும் தட்டு, மோதல்களில் உயிரிழப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தின் சீரழிவின் மூலமாக யுத்தத்தின் செலவை உழைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளது.

ஆகஸ்ட் 13, இராஜபக்ஷ சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் அதன் தேசிய தொழிற்சங்க மையத்தினதும் ஆதரவை பட்டியலிடுவதற்காக ஒரு கூட்டத்தை நடத்தினார். ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உருப்பினர்களும் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுமான கே.டி. லால் காந்த, பியசிறி விஜேநாயக்க மற்றும் வசந்த சமரசிங்கவும் இராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் கூடியிருந்தனர்.

"நாட்டில் வளர்ச்சியடைந்துவரும் நிலைமைகளை கணக்கில் கொண்டு" கைத்தொழில் பிரச்சினைகள் தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலமாக அன்றி கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அனைத்து ஜே.வி.பி. தலைவர்களும் தயார் நிலையில் உடன்பட்டனர். 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்திற்கு முடிவுகட்ட வெளிப்படையாக பரிந்துரைக்கும் இந்தக் கட்சி, "அனைவரும் தாய்நாட்டுக்காக" என்ற தொனிப்பொருளின் கீழ் தீவு பூராவும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

இராஜபக்ஷ கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. யின் ஆதரவுடன் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார். அவர் தன்னை "சாதரண மனிதர்களில் ஒருவனாக" காட்டிக்கொண்டதோடு கணிசமான சம்பள உயர்வு மற்றும் வறியவர்களுக்கு உதவுவதற்கான சலுகைகள் உட்பட ஒரு நீண்ட தேர்தல் வாக்குறுதி பட்டியலையும் வெளியிட்டார். அவர் அதிகாரத்திற்கு வந்தவுடனேயே இந்த வாக்குறுதிகள் பொறிந்துபோயின. இராஜபக்ஷ அரசாங்கம், தனியார்மயமாக்கல், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட வெட்டுக்களின் ஊடாக வாழ்க்கைத் தரம் மீதான தக்குதல்களை தொடர்ந்தது.

இதன் விளைவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரிப்பது சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் சமூக அமைதியின்மையாகும். ஜூலை மாதம் வரையான ஏழு மாதங்களுக்குள், வாழ்க்கைச் செலவுப் புள்ளி 4,304 முதல் 4,672 வரை 368 புள்ளிகளால் உயர்ந்துள்ளது. மார்ச் மாதமளவில், சம்பள உயர்வு கோரி எதிர்ப்புப் பிரச்சாரமொன்றை முன்னெடுத்த அரசாங்க ஊழியர்கள், உழைக்கும் மக்களின் பரந்த தட்டினர் மத்தியில் ஆழமடைந்துவரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஜூலையில், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்த அதே வேளை, இலங்கைப் பெற்றோலியக் கூட்டத்தாபன ஊழியர்களும் தனியார் மயமாக்கல் திட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராயினர். வியாபார வட்டாரங்களின் கவலைக்கு பதிலளிப்பதன் பேரில், அரசாங்கம் பிரச்சாரங்களைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவையும் பெற்றுக்கொண்டது. துறைமுகத் தொழிலாளர்கள் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபட முடியாமல் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை நவம்பர் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்தவொரு சலுகையையும் வழங்கும் நிலையில் இராஜபக்ஷ இல்லை. சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும், சந்தை சீர்திருத்தங்களை துரிதப்படுத்துவதற்காக கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் அனைத்து கடனுதவிகளையும் நிறுத்தியுள்ளன. இதன் விளைவாக, அன்றாட செலவை அடைவதன் பேரில் உயர்ந்த வட்டி வீதத்துடன் சர்வதேச நிதிச் சந்தைகளில் கடன் வாங்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் நேற்றுத் தெரிவித்ததாவது: "2005ல் இருந்தே, உலக வங்கி போன்ற பன்னாட்டு கடனுதவியாளர்களிடம் குறைந்த வட்டித் திட்டத்திலான கடன்களைப் பெறுவதற்கான தகுதியை அடைவதில் இலங்கை சிரமத்தை சந்தித்துள்ளது. ஏனெனில், நாட்டின் வருமானத்திற்குரிய விவேகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளில் அதன் மக்ரோ பொருளாதார கொள்கைத் வரம்புத்திட்டம் (macro-economic policyis) பலவீனமாக இருப்பதால், வர்த்தகம் டொலர்களில் தங்கியிருக்கத் தள்ளப்பட்டுள்ளது."

நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளும் இராஜபக்ஷவின் முடிவு பொருளாதார நெருக்கடியை மட்டுமே குவியச் செய்யும். இராணுவச் செலவு தவிர்க்க முடியாமல் அதிகரிப்பது மட்டுமன்றி, மிகவும் அவசியமான வெளிநாட்டு முதலீட்டின் வீழ்ச்சிக்கும் இந்த மோதல் வழிவகுக்கும். மோதல்கள் இழுபடும் நிலையில், அது அதனது பலியை வியாபாரம் மற்றும் உட்கட்டுமானத்தில் எடுக்கும்.

துறைமுக மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஆர்ப்பாட்டங்களை கையாள்வது பற்றி விமர்சித்த பெரும் வர்த்தகர்கள், "தொழிற்சங்க அமைதியைப்" பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இலங்கை தேசியக் கைத்தொழில் சபை, "பொறுப்பற்ற மற்றும் சுயநல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு" எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறுக் கோரி ஜூலை 25 இராஜபக்ஷவிடம் கடதம் மூலம் கோரியிருந்தது.

ஜூலை 30 சண்டே ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஒரு ஆசிரியர் தலைப்பு, தொழிற்சங்கப் பிரச்சாரங்களை உடனடியாக நசுக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை விமர்சித்திருந்தது. "தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த ஆயுதத்தின் ஊடாக குறைந்தபட்சம் அவர்களுக்குத் தேவையானதன் ஒரு பகுதியையேனும் எடுத்துக்கொண்டதில் ஏற்கனவே முதலாவது இரத்தத்தை உறிஞ்சிவிட்டன. பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் துறைமுகத்தை ஏனையத் தொழிற்சங்கங்களும் உதாரணமாகக் கொள்ளும் முன்னர் வரையே அது காலம் பற்றிய பிரச்சினையாக மாத்திரம் இருக்கும்," என அது எச்சரித்துள்ளது.

கூட்டுத்தாபன கும்பல்கள், தொழிலாளர்களின் போராட்டத்தை கீழறுக்கவும் மற்றும் பலவீனப்படுத்தவும் நனவுடன் செயற்படும் தொழிற்சங்கத் தலைவர்களை கணக்கில் கொள்ள முடியும் என்பதில் விழிப்பாக உள்ளன. எவ்வாறெனினும், வெகுஜன எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் அடக்க தொழிற்சங்களால் இயலாமல் இருக்கலாம் என்பதே உண்மையான பீதியாகும். நீதிமன்றத்தின் தடையைப் பற்றி ஆகஸ்ட் 06 ராவய பத்திரிகையில் கருத்து வெளியிட்ட இலங்கை பொது ஊழியர் சங்கத் தலைவர் ஜயரட்ன மலியகொட எச்சரித்ததாவது: "வேலைநிறுத்தங்கள் இந்த முறையில் நசுக்கப்பட்டால் அவர்கள் கூர்மையாக வெடிப்பார்கள். அரசாங்கம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்."

மலியகொடவின் குறிப்புகள் மூண்டும் யுத்தத்திற்குத் திரும்புவதற்காக அடியில் நிலவும் முயற்சிகளையிட்டு அக்கறை செலுத்தியுள்ளன. உழைக்கும் மக்களின் அடிப்படை சமூகத் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை இட்டுநிரப்ப முடியாத இராஜபக்ஷ, ஆளும் வர்க்கம் ஒவ்வொரு நெருக்கடியின் போதும் பயன்படுத்திய அதே பிற்போக்கு சூழ்ச்சிகளையே நாடுகின்றார். அது தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனவாத சந்தேகத்தைக் கிளறுவதாகும். சிங்கள பெளத்த அரசை பாதுகாப்பதற்காக யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலம், அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்க யுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved